அப்டன் சிங்க்ளர் எழுதிய 'காங்கிரீட் காடு'
நாவல் அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அப்டன் சிங்க்ளர் தனது இளம் வயதிலேயே சோஷலிச தத்துவத்தைக் கற்றறிருந்ததால் அதைத் தனது
எழுத்துகளின் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப் பெரிதும் விழைந்தார். அவர் பத்திரிகையாளராகவும்
வேலை பார்த்தவர். இந்த நாவல் ஒரு பத்திரிகையில் தொடராக வந்தது. இது பெரும் அதிர்ச்சியையும்
பாதிப்பையும் வாசகர்களிடையே ஏற்படுத்தியது. இந்த நாவலைப் படித்த அமெரிக்க அதிபர் தியோடர்
ரூஸ்வெல்ட் அப்டன் சிங்க்ளர் 'சேற்றைவாரி இறைப்பவர்' என்று விமர்சித்தார். ஆனாலும்
இந்த நாவல் பெரும் வெற்றி பெற்றது. சோஷலிசத்தையும் புலம் பெயர்ந்தவர்கள் பற்றியும்
முதலாளித்துவத்தின் கோர முகத்தையும் இந்த நாவலில் பின்னிப் பிணைந்து எழுதியிருக்கிறார்
அப்டன் சிங்க்ளர். இந்த நாவலை எழுத சிகாகோவிலுள்ள பேக்கிங்டவுன் என்ற இடத்தில் இருக்கும்
இந்தத் தொழிற்சாலைகளில் சில வாரங்கள் அப்டன் சிங்க்ளர் வேலை பார்த்து அந்த இறைச்சிக்
கூடங்களின் நிலையையும் தொழிலாளர்களின் சிரமங்களையும் அனுபவித்து வந்தார். மாடுகளை,
பன்றிகளை வதைப்பதையும் கொடுமைப்படுத்துவதையும் மனிதர்கள் அதனால் படும் சிரமங்களையும்
இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது. சமூக மதிப்பிடுகளும் உறவு நிலைகளும் இதன் காரணமாகச்
சிதறிப் போவதையும் நாவல் எடுத்துக் காட்டுகிறது. சோஷலிசத்தை நோக்கி மக்களின் சிந்தனையை
நகர்த்தியதில் இந்த நாவலுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
கதைச் சுருக்கம்
யுர்ஜிஸ் ரெட்கஸ் என்ற லித்துவேனிய அகதி
ஓனா என்ற அதே நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். சிகாகோவில்
இறைச்சி பதனிடுதல் தொழிற்சாலையில் அபாயகரமான, கடுமையான, சுகாதாரக் கேடுள்ள வேலையில்
சேர்கிறான். வீடு வாங்கி பல கொடுமைகளைச் சந்திக்கிறான். வேலை போகிறது. குடும்பத்தில்
அனைவரும் வேலைக்குப் போகிறார்கள். தள்ளாத வயதில் அவனுடைய அப்பாவும் வேலை செய்து அங்கிருக்கும்
சூழல் காரணமாக இறந்து போகிறார். யுர்ஜிஸின் மனைவி ஓனா அவளுடைய முதலாளியால் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறாள். அதைத் தட்டிக்கேட்ட அவளது கணவன் கைது செய்யப்படுகிறான்.
அவனுடைய குடும்பம் சின்னாபின்னமாகிறது. அவனுடைய உறவுப் பெண் மரியா பாலியல் தொழிலாளியாகிறாள்.
அவனுடைய முதல் மகன் இறந்து போகிறான். பிச்சைக்காரனாகி, திருடனாகி, வேலை இல்லாமல் அலையும்
போது ஒரு சோஷலிச அரசியல் கூட்டத்தில் கலந்துகொள்கிறான். அங்கு அவனுடைய துன்பங்கள் போல
இருப்பனவற்றைப் பேசக் கேட்டு அந்தக் கொள்கையால் ஈர்க்கப்படுகிறான். ஒரு சோஷலிசவாதியின்
விடுதியில் வேலைக்குச் சேர்ந்த பின் தன்னுடைய குடும்பத்துடன் சேர்கிறான். மக்கள் அனைவரும்
சோஷலிசவாதிகளானால் சிகாகோ அவர்களுடையதாகும் என்ற கோஷத்தைக் கேட்கிறான்.
சோஷலிசமும் முதலாளித்துவமும்
'காங்கிரீட் காடு' நாவலின் முதன்மையான நோக்கம்
முதலாளித்துவத்தின் தீமைகளை விளக்குவதாகும். முதலாளித்துவம் மனிதநேயமற்ற, அழிவு நிறைந்த,
நியாயமற்ற, கொடூரமான, வன்முறையாக உள்ளது என்கிறது நாவல். உழைக்கும் வர்க்கத்தின் மீது
முதலாளித்துவத்தின் கொடுமைகளை யுர்ஜிஸ் பாத்திரமும் அவனது குடும்பமும் அடையும் சீரழிவுகள்
மூலம் இந்த நாவல் எடுத்துக் காட்டுகிறது. இந்த நாவல் நுட்பமான உணர்வுகளைச் சொல்வதை
விட வெளிப்படையான முதலாளித்துவத்தின் விளைவுகளைச் சொல்வதில் அதிகக் கவனம் எடுக்கிறது.
புலம் பெயர்தலின் வலி
அமெரிக்கக் கனவைக் கொண்டு பல நாடுகளிலிருந்து
அகதிகளாகத் தஞ்சம் புகுந்து பணம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களுக்கு அது
வலி தரும் அனுபவமாக மாறுவதை இந்த நாவல் பதியச் செய்கிறது. அமெரிக்காவின் மதிப்பீடுகளற்ற
சமூகம், உணர்ச்சிகளின் சுரண்டல் போன்றவை பிற மொழி, இன மக்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை
என்பதை இந்த நாவல் சுட்டிக் காட்டுகிறது.
குறியீடும் பரிணாமமும்
இந்த நாவல் 'காடு' என்பதன் குறியீடு. காட்டில்
கொடுமையான மிருகங்கள் இருக்கலாம். பலவீனத்தின் மீது வன்முறை செலுத்தப்படலாம். இந்த
நாவல் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைக் குறியீடாகக் காட்டுகிறது எனலாம்.
வலிமையானது வாழும் என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப, பொருளாதாரத்தில், வலிமையில் நலிந்து போனவர்கள்
மேலும் சீரழிகிறார்கள். ஆனால் சரியான பாதை, தூண்டல் கிடைத்தால் நலிவடைந்த எந்த ஓர்
உயிரும் மீண்டுவிடும் என்பதை இந்த நாவல் காட்டுகிறது.
அதீத கற்பனையும் எதார்த்தமும்
இந்த நாவலில் இறைச்சிக்காகக் கொல்லப்படும்
விலங்குகளைப் பற்றிய வர்ணனை கொடூரமாக இருக்கிறது. அது ஓர் அதி கற்பனை போல் உள்ளது.
ஆனால் ஓர் எதார்த்தத்தை வர்ணிக்கையில் ஓரளவு மிகுகற்பனையும் இருந்தால்தான் அது வாசகருக்குள்
எழுதப்பட்ட நோக்கத்தின் விளைவை உருவாக்கும். அதனால் இந்த அதீத கற்பனைக்கூட இந்த நாவலுக்கு
அதிகமான வாசகர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. கொடூரமான சித்திரிப்புள்ள இலக்கியங்களின்
வரிசையில் இந்த நாவலில் வரும் விலங்குகளைக் கொல்லும் வர்ணனையும் உள்ளது.
நல்லதும் அல்லதும்
'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல்
ஓம்புமின்' என்ற புறநானுற்று வரிக்கு ஏற்ப சமூகத்தின் இயைபு இல்லாமல் போவதை இந்த நாவல்
விளக்கியிருக்கிறது. இந்த நாவலில் நல்லதுXஅல்லது, நன்மைXதீமை என்ற இருமை எதிர்வுகளுக்குள்
நாவல் பின்னப்பட்டிருக்கிறது. சோஷலிசம்Xமுதலாளித்துவம் என்ற நன்மை, தீமை இருமையைக்
குறிப்பனவாக உள்ளன.
அமெரிக்காவும் சோஷலிசமும்
அமெரிக்காவில் முதலாளித்துவம் கொண்டாடப்படுவதை
எதிர்க்கவும் அமெரிக்க சமூகத்தின் ஊதிப் பெருக்கப்பட்ட நுகர்வுக் கலாச்சாரத்தைத் தடுக்கவும்
இலக்கியத்தின் வழி கோட்பாட்டை வலியுறுத்துவது என்ற உத்தி நாடப்பட்டிருக்கிறது. முதலாளித்துவம்
சிதைக்கும் குடும்பம், மனம், உடல் என்ற அனைத்து அம்சங்களும் சமூகத்தின் மனச்சிதைவாக
வெளிப்படும் என்பதை இந்த நாவல் சில பாத்திரங்களின் வழி காட்டியிருக்கிறது.
இந்த நாவல் இறைச்சி பதனிடும் தொழிலில் இருக்கும்
அபாயங்களைப் பற்றியதாக முதலில் அறியப்பட்டுவிட்டாலும் அதன் பிறகான வாசிப்பு இதனை சோஷலிச
கோட்பாட்டுக்கு உதாரணமாக அமைந்த நாவல் என்பது தெளிவாக்கப்பட்டது. அப்டன் சிங்க்ளர்
எழுதிய இந்தச் செம்பனுவல் உழைக்கும் வர்க்கத்தின் துன்பங்களை, துயரங்களை, துக்கங்களை
வெளிப்படையாக எழுதி வெற்றி பெற்ற ஒன்று. இந்த நாவலின் பாத்திரங்கள் பல உழைக்கும் வர்க்கத்தினரின்
குறியீடுகளாக அமைந்திருக்கின்றன. இந்த நாவல் தமிழில் திரு.சுப்பாராவ் அவர்களால் செழுமையாக
மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு கனமான, காத்திரமான வாசிப்புக்குத் தேர்ந்த ஒன்றாக
அமைந்திருக்கிறது. மலிவான விலையில் சிறந்த பதிப்பாக பாரதி புத்தகலாயம் வெளியிட்டிருக்கிறது.
'காங்கிரீட் காடு'-அப்டன் சிங்க்ளர், தமிழில்
சுப்பாராவ், :பாரதி புத்தகாலயம், சென்னை. விலை ரூ.280.