Thursday 14 April 2022

புலிக்குகை நாயனமும் அமைப்பியல் விடுகதையும் கோணங்கியின் 'புலிக்குகை நாயனம் சிறுகதையை முன்வைத்து...'





 

காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நாயன இசையைப் பற்றிய கதை என்பது முதல் வரியிலேயே தெரிகிறது.

தவளை காற்றை உள்ளிழுக்கையில் ஊதும் செவுள் போல் நாயனத்தை ஊதுகையில் நுரையீரல் காற்று தொண்டையைப் பெருக்குகிறது.

அருணாச்சலத்தின் இசையும் அருணகிரிநாதரின் திருப்புகழின் தமிழும் இணையாக இருக்கின்றன.

ராஜரத்தினத்திடம் பயின்ற அருணாசலம் குருவை மிஞ்சிய சீடனாக இருந்தது பற்றியச் செய்தியும் கதையாகிறது. குரு ராஜரத்தினத்திடம் கற்ற பாடம் தேனீயிடமிருந்து தேனி கற்றது போன்றது. தேனீயின் ரீங்காரம் போன்ற இசையின் ஒலிப்பு இணைவைக்கப்படுகிறது.

கம்பீர இசையும் புலியின் வீரமும் இணையானவை.

நாயனம் வாசிப்பதில் புலிக்கு இணையான வீரமும் இசையின் வெளிப்பாட்டில் மயங்கிவிட்ட இயல் புலியும் இங்கு திரிகின்றன.

வயலின் இசையில் யானையின் ஆற்றல் வெளிப்பட்டது. குடைவரைக் கழுகு மலைக் கோயிலின் யானை போன்றது அது. வயலின் மரத்தில் மறைந்தது மாமத யானை. அந்த இசையைக் கேட்டு புலி எழுந்து நாயனத்தை எடுத்தது. கோயிலில் யானையின் அதிசயத்தைப் பார்த்து வியந்த மக்கள் புலியின் பாய்ச்சலைக் கண்டு மயங்கிவிடுகின்றனர்.

ஆனால் புலியின் கம்பீரம் நிலைக்கவில்லை. காரணம் சினிமாவின் மீதான மோகத்தில் புலி சினிமாவில் கர்ஜிக்க முயல்கிறது. காருக்குறிச்சி அருணாச்சலம் தன் இசையை சினிமாவில் முடக்கப் பார்த்ததால் வீழ்ச்சி உருவாகிறது.

சினிமா மோகம் இசையை முடக்கியது. கம்பீர புலி சர்க்கஸ் புலியானது. உண்மையில் அது காகிதப் புலியாக இருப்பதைத்தான் கதை சொல்கிறது.

கிராமபோன் ரெக்கார்டுகளில் மட்டும் இசை சுற்றிவந்தது. உறைந்து போன இசையாக அது மட்கிப் போனது.

அது காருக்குறிச்சி, அருணாச்சலம் என்ற இரு பிளவை உருவாக்கிவிட்டது.

செண்பகவல்லி என்ற பெண்ணின் மோகத்தில் மூழ்கிய பின் அருணாச்சலத்திடமிருந்து புலி விடைபெற்று குகைக்குள் சென்றுவிடுகிறது.

முத்துக்கனகவல்லியின் உறவும் சேர்கிறது.

கருணாமிர்த சாகரத்தின் இசை ஆய்வும் கணக்கீடும் ஒத்திசைவான ஒலியின் இலக்கணமாக அருணாச்சலத்திடம் படிகிறது. காருக்குறிச்சியிலிருந்து கோவில்பட்டிக்கு இடம்பெயர்ந்த காருக்குறிச்சியின் இசை திசை மாறுகிறது.

மீண்டும் புலி குகையிலிருந்து வெளிப்பட்டு உச்சத்தை அடைய எத்தனிக்கையில் அருணாச்சலம் மர்மமான முறையில் இறப்பதாக கதை சொல்கிறது.

இயல் புலிxஇசைப் புலி, புலிக்குகைxநாயனத்தின் விரிந்த வாய், கம்பீரப் புலிxகாகிதப் புலி அல்லது சர்க்கஸ் புலி, கிராமபோனில் நாய்xஅடைபட்ட புலி(இசை), செண்பகவல்லி என்ற பெண் பாத்திரம்xசெண்பக ஆறு, பெண்xகுகை, காருக்குறிச்சிxஅருணாச்சலம் என்ற பல இணைகள் இந்தக் கதைக்குள் இருக்கின்றன. இந்த இணைகளின் மூலமாகத்தான் கதையின் அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. வரலாறுxகதை என்ற இணைதான் இந்தப் புனைவைப் புரிந்துகொள்ள உதவும் கண்ணியாக இருக்கிறது.

1.காருக்குறிச்சி என்ற பெயரே இசையின் உச்சமாக இருப்பது

2.அருணாச்சலமாக அறியப்படுகையில் சினிமாவின் கவர்ச்சி என்ற தீமை வந்து இணைந்துகொள்வது

3.இசையை உறையச் செய்யும் கிராமபோன்

4.செண்பகவல்லி, முத்துக்கனகவல்லி என்ற பெண்களின் தொடர்பு

5.கம்பீர இசையின் மறைவு-சர்க்கஸ்புலியின் தோற்றம்

6.புலிக்குகையிலிருந்து பாய்ந்து வந்த இசை

7.காருக்குறிச்சியின் மரணம்

இந்த வகையான அமைப்புகள் இந்தக் கதையைச் செலுத்தியிருக்கின்றன. அமைப்பியலின் கதை வடிவத்தைக் கூறு போடும் ஆய்வு இந்தக் கதைக்குப் பொருந்தியிருக்கிறது. இந்தக் கதை ஒரு வரலாற்று நிகழ்வு. அல்லது வரலாற்றைப் புனைவாக எழுதுதலாக இருப்பது. கதையும் வரலாறும் முயக்கமுறும் இடத்தில் புனைவு பிறந்திருக்கிறது. கதைக்குள் இழுக்கப்பட்ட வரலாறு அல்லது வரலாற்றுக்குள் ஓடிய கதை என்று பிரிவை அறியாமல் செய்யும் கதை வடிவம் இது. இந்த வகையான கதை வடிவத்தின் கரு, இயல் உலகின் காருக்குறிச்சி அருணாச்சலத்திற்கும் கதையின் பாத்திரத்திற்கும் இருக்கும் உறவும் நெருக்கமும் வாசிப்பின் அறிதலில் இருக்கும் கதையிலிருந்து சாத்தியமாகிறது.

நாட்டுப்புற இயலை ஆய்வு செய்த விளாடிமிர் பிராப் ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள்தான் நாட்டுப்புற இயல் கதைகள் இருப்பதைப் பற்றிச் சொல்கிறார்.

அதில் ஒரு வகைமைக்குள்தான் இந்தப் புலிகுகை நாயனம் கதையும் வருகிறது.

அதாவது ஒரு நாயகன் தனது போராட்டத்தில் உச்சத்தை அடைந்து வீழ்வது என்பதான வகைமை மாதிரியில் இந்தக் கதையை வைத்துப் பார்க்க முடிகிறது.

அருணாச்சலம் என்ற இயல் உலக நாயன வாசிப்பு இசைக் கலைஞர் இந்தக் கதைக்குள் ஒரு சாகச நாயகனுக்குரிய பண்புகளைப் பெறுவதும் அந்த சாகசங்கள் வரலாற்றின் சாகசங்களாக மாறி நிற்பதையும் இயல் வரலாற்றையும் கதை வரலாற்றையும் பிரிப்பதில் ஏற்படும் மயக்கம்தான் வாசிப்பின் வினையாக இருப்பதையும் இதில் காணமுடிகிறது.

வாசகரை இந்தக் கதை வரலாற்றை அறிய விரும்பும் நிலைப்பாட்டில் வைத்துக் கொண்டு கதையாக வரலாற்றை மாற்றிவிடுகிறது. அது போன்ற நிலைப்பாட்டை எடுக்கும் மாதிரி வாசகருக்குக் கதைக்குள் வந்த வரலாறும் இயல் வரலாறும் மாறிமாறி தரும் பிம்பங்கள் ஏற்படுத்தும் இணையான மகிழ்வுதான் கதைக்கான வாசிப்பு இன்பத்தைத் தொடர வைக்கிறது.

காருக்குறிச்சி அருணாச்சலம் என்ற நாயன இசைக்கலைஞரின் வரலாறு என்பது தமிழ்க் கலாச்சார இசை சங்கேதம் என்ற ஒட்டுமொத்த ஆளுகைக்குள் வந்த ஒரு புள்ளியாக இருந்தாலும் அதைக் கட்டுடைத்து காண்பது மட்டுமே வாசகரின் முயற்சியில் முதன்மையானதாக மாறிவிடுகிறது.

இந்த வடிவத்தின் மூலம் காருக்குறிச்சி அருணாச்சலம் வரலாறு, ஒரு நாட்டுப்புறக் கதை வடிவத்தை எடுக்கிறது. இந்த வகையான கதை வடிவங்கள் குறித்த அமைப்பியல் ஆய்வு மூலம் அந்தக் கதையின் கண்ணிகள் ஆற்றும் புனைவுப் பாங்கை அறியமுடிகிறது. இந்தக் கதையிலும் அந்த வகையான கண்ணிகள் இருப்பதையும் அவை மூலம் இயல் வரலாற்றிற்கு நிகரான சங்கிலிகளை இணைப்பதையும் பிரித்தறிய வேண்டியுள்ளது. கோணங்கியின் கதைகளில் இது போன்ற வரலாற்று இணைப்பை ஏற்படுத்திய கூடிய கதைகள் அமைப்பின் நாண்களைக் கொண்டு எழுதப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

வரலாற்றை அழித்தெழுதுதல் அல்லது புனைவின் வினையாக வரலாற்றை மாற்றுதல் என்பதாக இந்தச் செயல்பாடு மாறியிருக்கிறது. கடந்த காலத்தைக் கதையாக்குதல் என்றாலும் கதைக்குள் அது நிகழ்வின் எல்லைக்குள் இருக்கிறது. தமிழின் நாயன இசை என்ற செவியின் கேட்டல் புலன் கொண்ட பரிணாம வளர்ச்சி ஒரு கட்டத்தில் கண்ட உச்சமும் வீழ்ச்சியும் ஒரு சிறிய புனைவின் சேர்க்கையில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளதாக இந்தக் கதையை வாசித்துவிடலாம்.

மேலும் இது ஒரு நேரடியான நடப்பியல் கதை அல்ல. எதார்த்த வரலாற்றை மாயக்கதைக்குள் புனைந்த கதை. எதார்த்தத்தில் உள்ள வரலாறும் கதைக்குள் உலவும் மாயமும் இணையான இரு உலகங்களை உருவாக்குகின்றன. அது இரண்டும் பிரதிபலிப்பு என்ற நேர்க்கோட்டில் சந்திக்கவில்லை. வாசிப்பின் உதவிக்காக இயல் வரலாறு அருகாமைக்குள் கொண்டு வரப்படுகிறது. அல்லது இயல் வரலாறு என்ற பின்னணியிலிருந்து கதையை வாசிக்கும் போது பொருளைப் புனைந்து கொள்வதற்கான சுதந்திரம் வாய்க்கிறது. அல்லது இயல் வரலாற்றுடன் கதை வரலாறு கொண்டிருக்கும் உறவாக கற்பிதம் செய்துகொள்ளும் முடிச்சில் புனைவும் வாசிப்பும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்துக் கொள்கின்றன.

உண்மைக்கான தேடலை வாசிப்பு தொடுத்துக் கொள்கையில் புனைவின் மாயம் சேகரிக்கும் வரலாறு பொருளார்ந்த சாரத்தை உருவாக்குகிறது. புலியாகவும் மனிதனாகவும் நாயகனாகவும் கலைஞனாகவும் பல பாத்திரங்களை வரலாற்றிலும் கதையிலும் மாறி மாறி எடுக்கும் ஒரு நபராக வாசிப்பு தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. புலிக்கான வீரத்தை இசையிலும் மனிதனுக்கான சாகசத்தை புகழிலும் நாயகனுக்கான சரித்திரத்தை வரலாற்றிலும் வைத்துக் கட்டுகிறது கதை. அதை நிழலிலிருந்து பிரியாத உரு போல வரலாற்றிலிருந்து பிரியாத கதையாக எண்ணி வாசிப்பு உயிர்ப்பு பெற்றுவிடுகிறது.

வரலாற்றை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட புனைவு ஒரு பெரும் வரலாற்று ஆவணமாகவும் கலாச்சாரக் குறியீடாகவும் சங்கேதப்படுத்தப்படுகிறது. அதனைக் கட்டுடைப்பதும் மீண்டும் வரலாறாக ஒருங்கே சேர்ப்பதும் பின்நவீனத்துவ வாசிப்பு தந்த விமர்சன முறைமை.

வரலாற்றைக் கதையாக்குகையில் மீண்டும் மீண்டும் புனைவு பெறுவதாக சரித்திரம் மாறுகிறது. கதையின் நிகழ்வு மூலம் வரலாறு புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வரலாற்றின் நிகழ்வுகளை கதை மூலம் மாற்றி அமைக்கவும் மறு உற்பத்தி செய்யவும் ஏதுவாகிறது. வரலாறு ஒரு பிரதியாகி கதையின் புனைவில் நிகழ்கிறது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நபர் கதையின் பாத்திரத்திற்குள் நுழைந்து உச்சத்தை அடைவதும் வீழ்வதும் மீண்டும் இயல் உலகத்தின் சரித்திரமாவதும் கதைக்குள் நிகழும் வரலாற்று அற்புதமாக இருக்கிறது.

 

  

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...