Saturday 25 June 2022

ஓரான் பாமுக்கின் ‘கருப்புப் புத்தகம்’: இருமையின் உருவாக்கம் சித்தரித்த எல்லை

 



  • "கருப்புப் புத்தகம்" ஓரான் பாமுக்கின் குறிப்பிடத்தக்க நாவல். கலாச்சாரப் பொதுப்போக்குகளுக்கு எதிரான உணர்வும் துருக்கியின் பழமைக்கான அடையாளத்தைத் தேடுவதில் இருக்கும் கையறு நிலையும் கட்டின்மையின் சாரத்திலிருந்து முன்வைக்கப்படும் விடுதலையும் நுண்பாசிச அரசியிலிலிருந்து கிளர்ந்தெழும் செயல்பாட்டு அறமும் என இந்த நாவலின் ஓட்டம் ஓர் அதிர்வைப் பதியவைக்கிறது. எதிர்ப்புணர்வுக்கான எல்லையாக்கமாக அதிகார அரசியலிலிருந்து மதக் கட்டுப்பாட்டின் இறுக்கம் வரை உள்ளப் புள்ளிகளை இந்த நாவல் தொட்டுக் காட்டுகிறது. இரு அடையாளங்கள் உருமாறி ஒற்றை அடையாளமாகவும் இரட்டை அடையாளங்களாகவும் நிலைப்பதும் கலப்பதும் பிரிவதும் கூடுவதும் கிளைப்பதும் பிணைவதும் என துருக்கிய அடையாள வேற்றுமை அரசியலின் சிதைவுக்கு எதிர்வினையாற்றுவதாக இந்த நாவல் உள்ளது. புகைந்து கொண்டிருக்கும் போரின், இணக்கமின்மையின், மோதலின் ஒழுங்கிற்கான பார்வையாகக் குலைவின் வழியான கட்டின்மையை முன்னெடுத்து விடுதலையை விதைக்கிறது இந்த நாவல். நுண்பாசிச அரசியல் தளம் கோரும் செயல்பாட்டு உணர்வுக்குள் ஆட்டுவிக்கப்படுவது அறத்தின் பாற் நிறைந்த பற்றாக இருப்பதை வெளிப்படுத்துகிறது ஓரான் பாமுக்கின் ‘கருப்புப் புத்தகம்’ நாவல்.

எல்லையாக்கத்தில் கிளரும் எதிர்ப்பு

     கருப்புப் புத்தகத்தில் இரு கதாநாயகர்கள் நாவலின் இரு திரிகளை இழுத்துச் செல்கிறார்கள். ஒருவன் செலால். மற்றொருவன் காலிப். செலால் எழுத்தாக, குரலாக, மறைந்திருக்கும் பாத்திரம். காலிப் அவனைத் தேடி அவனாக மாறும் பாத்திரம். செலால் நாளிதழ் ஒன்றில் தினம் எழுதும் கட்டுரைகள் பெரும் எதிர்பார்ப்பையும் விளைவுகளையும் ஏற்படுத்துபவை. அந்தப் பாத்திரம் எழுதும் பொருள்தான் துருக்கிய சமூகத்தின் எதிர்ப்புக்குரிய காரணிகளை அடுக்குகிறது. உலகமயமாக்கலில் பழமையை இழக்கும் இஸ்தான்புல்லின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த நினைவிலிருந்து எதிர்ப்புணர்வின் சாரம் தொடங்கப்படுகிறது. துருக்கிய தேசம் என்ற வரையறைக்குள் இருத்தலில் மூச்சுத் திணறும் அந்தச் சமூகம் உலகமயமாக்கலை உள்வாங்கி ஐரோப்பியமயமாவதற்குத் தகுந்த எதிர்ப்புணர்வைக் காட்டுவது அடுத்த படிநிலையாகிறது. உலகமயமாக்கல் ஏற்படுத்திய விழைவு புதிய மோஸ்தர்களை எல்லாத் துறைகளிலும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பது. அதனால் பயன்பாட்டில் இருப்பவற்றைக் காணாமல் அடிப்பது. இதனால் ஐரோப்பிய நிழலின் அடியில் பயனில் இருக்கும் பொருட்களின் வகைமை மாறிக் கொண்டே இருக்கிறது. அல்லாதீனின் கடை மட்டும் இதற்கு சாட்சியாக இருப்பது குறித்து செலால் எழுதும் கட்டுரை வழியாக இந்த நாவல் எதிர்ப்புணர்வின் எல்லையாக்கத்தைப் புதிதாக வரைகிறது. அல்லாதீனின் கடை புதுமைக்கான சுரங்கமாக, ஐரோப்பாவின் புது வடிவத்தை உடனடியாக நுகர்வதற்கான சந்தையாக இருக்க அதற்கு நேர்மாறான துருக்கியின் பழமையை அந்த நாட்டு குடிமகன்களின் நினைவு பொதிந்திருக்கும் சுரங்கமாக ஓர் இருண்ட பள்ளத்தைக் காட்டுகிறது இந்த நாவல். இருண்ட பள்ளம் போல் கடந்த காலத்தை எல்லையாக்கி உழல்ந்து கொண்டிராமல் புதிய மோஸ்தர்களை மட்டுமே நோக்கி நகர்ந்து பழமையை விட்டொழிப்பதும் அல்லாமல் நடுநிலைப் பாதையை, அதன் மதிப்பை அலசி ஆய்ந்து தேர்ந்தெடுப்பதைக் கோருகிறது இந்த நாவலின் எதிர்ப்புணர்வு அரசியல். துருக்கியின் பழைய எல்லையிலிருந்து  விடுவித்துக் கொண்டு புதிய எல்லையாக்கமாக ஐரோப்பாவை வரையறுத்துவிட்டு தடுமாறுவதைத்தான் நாவல் ஒலிக்கும் எதிர்ப்புணர்வுக் குரலாகக் கேட்க முடிகிறது. அந்த எதிர்ப்புணர்வு நாவலுக்குள்ளும் மிதந்து நிற்கிறது. கடந்த காலம் எப்போதும் தூக்கமின்மையைக் கொடுக்கும் என்பதாகவும் கடந்த காலத்தை நேசித்து எதிர்காலத்தை அதனூடாக ஏற்பதில்தான் நிம்மதிகிட்டும் என்பதாக அந்த எதிர்ப்புணர்வுக் குரல் ஒரு தீர்வையும் தருகிறது. இந்த எதிர்ப்புணர்வைப் பெற பல முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள் என செலால் பாத்திரம் போல் நாளிதழ்களில் கட்டுரை எழுதும் மூவரையும் அறிமுகப்படுத்தி எதிர்வினையாற்றுவதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது நாவல். துருக்கியின் பழமையை நினைவில் நிறுத்துவதும் அது ஏற்படுத்தும் பரவச நிலையும் அதனால் ஏற்படும் திருப்தியும் ஒரு பக்கமும் அதற்கு எதிரான அம்சங்களை அடுக்குவது மறுப்பக்கமும் என அந்த நாவலின் அரசியல் உள்ளார்ந்து ஒலிக்கிறது.  

அடையாளத்தின் வேற்றுமையும் கையறு நிலையும்

     யோசே சரமேகோவின் ‘டபுள்’ என்ற நாவலில் இரு கதாநாயகப் பாத்திரங்கள் ஒன்றை ஒன்று அழித்துவிட நினைக்கும். அது போன்ற ஒரு கதைச் சரடிலிருந்து இந்தக் கதையின் இரு நாயகர்கள் தோன்றியிருப்பது போல் உள்ள அடையாளத்தின் வேறுபாட்டைச் சுட்ட வேண்டியிருக்கிறது. செலால், காலிப் இரு கதாநாயகர்களில் செலாலைத் தேடிச் செல்லும் காலிப், செலால் ஆக மாறவேண்டியிருப்பது அடையாளத்தின் கேள்வியை உரத்துச் சொல்லும் இடமாக்கியிருக்கிறது இந்த நாவல். தனி அடையாளம் இல்லாத துருக்கி தேசத்தில் மற்றொருவரின் அடையாளத்தைக் கடன் வாங்கி இருக்கவேண்டியிருப்பதும் தன் அடையாளமும் பிறரின் அடையாளமும் வேறுபட்டவை என்றாலும் அதை ஏற்பதில் இருக்கும் கையறு நிலையைக் காட்டி எதிர்வினையைச் சொடுக்குகிறது இந்த நாவல். துருக்கியில் மட்டுமல்ல பல வளரும் நாடுகளிலும் தன்னிலையைப் பாதிப்பில்லாமல் தக்கவைப்பது இயலாத காரியம் என்பதையும் எந்த நெருக்கடி வந்தாலும் தன்னிலையைச் சமரசமின்றி அடையாளப்படுத்துவது சிக்கல் நிறைந்ததாக மாறி வருவதையும் இந்த நாவல் முன்வைத்து அதற்கு எதிரான வினையைத் தூண்டுவதாக உள்ளது. ’அடையாளம் என்பது முதன்மையானதல்ல; அது ஒரு கோட்பாடாக இருக்கலாம். ஆனால் இரண்டாம் நிலை கோட்பாடுதான், உருவாகி வரும் கோட்பாடு. ஆனால் அது வேறுபாட்டைச் சுற்றி வரும் ஒன்று: சூரியனைக் கோள்கள் சுற்றி வருவதாகச் சொன்ன கோபர்னிகன் கோட்பாட்டைப் போன்றது. இதனால் வேறுபாட்டைத் தன்னகத்தே கொண்டிருப்பதால் பிற ஒத்த அடையாளங்களைக் கொண்டு அறியப்பட்டவற்றால் ஆளப்படுவதல்ல’[1] என டெல்யூஜ் சொன்னதோடு இந்தப் பாத்திரங்களின் படைப்பை ஒப்பு நோக்கமுடியும். ஒரு பாத்திரம் தானாக இருப்பதில் இருக்கும் சிரமத்தைப் பல்வேறு கேள்விகளால் துளைக்கிறது. மற்றமையினால் விளக்கமடையும் தன்னிலை என்ற அடையாளமேற்பு குறித்து உளவியல் ஆய்வாளர் லக்கான் விளக்கினாலும் இந்த நாவலில் அது உருவாக்கும் சிக்கல் முதன்மை அம்சமாகிறது. ஏனெனில் துருக்கியர்கள் தங்களின் அடையாளத்தை ஐரோப்பிய அடையாளத்திலிருந்து வேறுபட்டதாகக் கொள்ள முடியவில்லை. அதிலிருந்து உருவாகிவரும் ஒன்றாகவே கருதிக் கொள்கிறார்கள். அதனால் இஸ்லாமிய நாடுகளுடனான எல்லையிலிருந்து நீளும் அடையாளத்தையும் கொள்ள முடியவில்லை. இதுதான் நாடோடி அடையாளம். இந்தக் கையறு நிலைதான் இந்த இரு கதாநாயகப் பாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்தி அதனை ஆன்மீகத்தின் வழி ஆற்றுப்படுத்துகிறது நாவல். ஏனெனில் துருக்கிய அடையாளச் சிக்கலுக்குத் தீர்வைத் தராத செலால் பாத்திரம் சுட்டுக் கொல்லப்படுகிறது. ஏனெனில் எல்லாப் பாத்திரங்களையும் எல்லாத் துருக்கியர்களையும் தன்னைப் போல் ஆக்கப் பார்த்தற்கான தண்டனையாக இந்தக் கொலை நாவலில் நடந்தேறுகிறது. அடையாளத்தை மீட்டல் என்பதற்கான எதிர்வினை என்பதாக இந்தக் கொலையைக் கருதி வாசிக்கலாம்.

கட்டுக்குலைவும் மத அதிகாரமும்

     துருக்கியின் அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது மத நம்பிக்கைதான். இந்த நாவலில் மதம் ஏற்படுத்திய குழப்பத்தின் சாட்சிகளை மெய்யும் மெய்நிகரும் கலந்து கட்டுக்குலைவின் நிலைப்பாட்டிலிருந்து வர்ணிக்கிறது நாவல். உதாரணமாக பேடி உஸ்தா உருவாக்கிய பொம்மைகள் குறித்த விவரணை. துருக்கியர்களைப் போல் அச்சு அசலான உருவங்களை உருவாக்கியதைப் பார்த்து கோபமுற்ற அரசன் உடனே அவற்றை யாருடைய கண் பார்வையிலும் படாமல் அகற்ற உத்தரவிடுகிறான். இஸ்லாமிய சட்டத்தில் இது போன்ற அச்சு அசலான மனித உருவங்களைச் செய்வது மதநம்பிக்கைக்கு எதிரானதாகும். பேடி உஸ்தா தனது படைப்புகளைத் தன் குழந்தைகள் போலத்தான் செய்துவந்தார். தன் படைப்புகளைச் செய்ய துருக்கியர்களின் ஒவ்வொரு அங்க அசைவையும் கவனித்து அவற்றுக்குச் சிலைகளில் உயிர் கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் துருக்கியர்கள் தங்களது சுயமான பல பாவனைகளைவிடுத்து மேல்நாட்டு திரைப்படங்களின் பாத்திரங்களின் பாவனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து பெரும் துக்கமடைந்துவிடுகிறார். அவருடைய சிலைகளைத் துணிக்கடைகளில் யாரும்  வைக்க விரும்புவதில்லை. ஏனெனில் அசலான துருக்கியர்களின் பாவனைகள் விற்பனைக்கு உதவாது என்ற காரணம் சொல்லப்படுகிறது. எதேச்சதிகாரமாக மதம் பீடம் ஏறுகையில் கட்டுக்குலைவின் நிலைப்பாட்டிலிருந்து அதனைப் பார்ப்பதை  படைப்பாக்கத்தின் எல்லைநீக்கம் ஏற்பதில்லை. மீண்டும் ஒரு புதிய எல்லையாக்கத்தை உருவாக்குவதைத்தான் பேடி உஸ்தாவின் சிலைகள் காட்டுகின்றன என்பதையும் அவை இருக்கும் சுரங்கத்தை வெளிநாட்டுக்குழுவுக்கு வெளிப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலமும் இந்தக் கதையாடல் எதிர்வினையை முன்னெடுக்கிறது. உண்மைக்கும் போலிக்கும் இடையிலான எல்லை நீக்கமும் எல்லை உருவாக்கமும் நிகழ்வதாக படைப்பாக்கம் அந்த எதிர்வினையைக் கட்டமைக்கிறது. துருக்கியின் அசல் அம்சங்கள் பேடி உஸ்தாவின் சுரங்கத்தில் இருப்பதாகவும் போலி அம்சங்கள் வெளியில் நடமாடுவதாகவும் எல்லையாக்கம் செய்யப்படுகிறது.  

     இந்த நாவல் அதிகார வன்கொடுமையைக் கட்டுக்குலைவின் நிலைப்பாடு மூலம் எதிர்கொள்கையில் கோரத்தின் அழகியலைப் பதிவிடுவதாகிறது. அரசனுக்கு எதிரான குறுநில மன்னர்களின் தலையைக் கொய்து செல்லும் தூதுவன் அதை வழியில் திறந்து பார்க்கக்கூடாது என்ற விதியை மீறி ஒரு குறுநில மன்னனின் தலையை எடுத்து வருகையில் அதன் அழுகை ஒலியால் அவதியுற்று அதைத் திறந்து பார்த்து அதன் அழும் முகத்தைச் சிரிப்பது போல் மாற்றிக் கொண்டுவந்ததைத் தெரிந்துகொண்டு தூதுவனின் தலை கொய்யப்படுகிறது. அந்தக் குறுநில மன்னனின் தலை கொய்யப்படவில்லை என்று எண்ணி அவன் தலையை கொய்யப் போகும் எல்லா தூதுவர்களுக்கும் இது போன்ற சிக்கலே வந்து சேர்கிறது. அதிகாரத்தை எதிர்க்க இந்தப் பிரதியின் வழிமுறை கோரத்தின் அழகியலை முன்வைப்பதாக மாறிவிடுகிறது. இப்படி அழகியலைக் கோரமாக்குவதன் மூலமும் கோரத்தை அழகியலாக்குவதன் மூலமும் எல்லையாக்கம் மறுவரையறை ஆகிறது.

நுண்பாசிச அரசியலும் செயற்பாடும்

     இரு கதாநாயகர்கள் வழி இந்தக் கதையாடல் உள்ளார்ந்து இழையோடச் செய்திருப்பது நுண்பாசிசத்தின் அரசியல். கதாநாயகன் காலிப்பின் மனைவி ருயா சொல்லாமல் கொள்ளாமல் அவனை விட்டுப் பிரிந்து செல்வதும் அவளைத் தேடும் அவன் செலாலுடன் அவள் இருக்கும் வாய்ப்பைப் புரிந்துகொள்வதும் அவள் மீண்டும் தன்னிடம் வர செலால் போல் மாறி கட்டுரை எழுதுவதும் நுண்பாசிச அரசியலின் நுட்பமான வினைகள். செலால் ஒழுங்கற்ற துருக்கிய சமூகத்தின் முகம். அவனுடைய எழுத்துகள் அதனை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதன் மூலம் ஒழுங்கை நிலைநாட்ட முயற்சிப்பதும் இங்குக் கவனம் கொள்ளத்தக்கது. செலால் உருவாக்கிய ஒழுங்கற்ற சமூகக் குரலைத் தொடர்ந்திருப்பது காலிப்பின் வேலை என்றாலும் தன் மனைவியுடன் இருந்திருக்கவேண்டிய இருபால் உறவு எல்லை குறித்த கேள்வி அவனுக்குள் எழுதுவது நுண்பாசிச அரசியலுக்கான ஒரு புள்ளியாக இருக்கிறது. செலால் ருயாவை சகோதரியாகக் கருதினாலும் அந்த உறவு இரு பால் உறவு போல் ஏன் இருந்தது என்ற கேள்வியை மறைமுகமாக இந்தப் பிரதி எழுப்புகிறது. காலிப் செலாலாக மாறுவதில் இருக்கும் சிக்கல் இந்த நுண்பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டதாகிறது. செலாலுடன் ருயாவும் கொல்லப்பட்டப் பின் வெளியில் செலால் உள்ளே காலிப் என்ற பிளவு தொடர்வதும் துருக்கிய சமூக ஒழுங்கின்மைக்கான எழுத்தைத் தொடர்ந்து எழுதி ஒழுங்கை ஏற்படுத்தும் முயற்சி காலிப்பின் நுண்பாசிச அரசியலை வெளிப்படுத்தும் செயல்பாடாகக் கருதலாம். செலாலைக் கொன்றது முன்னாள் ராணுவ அதிகாரி எனத் தெரிந்தும் காலிப் காட்டிக் கொடுக்காமல் இருப்பது செலாலின் எழுத்துகளால் ஒழுங்கின்மையை உணர்ந்த ஒரு நபரின் எதிர்வினையாக அதனைக் கருதியதால்தான். செலால் துருக்கிய பிரஜைகளைத் தன்னைப் போல் ஆக்க நினைத்ததை எதிர்த்துக் கேள்வி கேட்ட முடித்திருத்தும் கலைஞன்தான் செலாலின் கொலையாளி எனத் தவறாகத் தண்டிக்கப்பட்ட போதும் காலிப் அமைதி காத்ததற்குக் காரணம் இந்த முன்னாள் ராணுவ அதிகாரியைத் தப்ப வைக்கும் எண்ணத்தில்தான். மேலும் அந்த ராணுவ அதிகாரியின் மனைவியுடன் செலால் தகாத உறவைக் கொண்டிருந்தது தன் மனைவியுடன் செலால் காட்டிய நெருக்கம் போல் இருப்பதான கற்பனையில் காலிப் இருந்ததால் ராணுவ அதிகாரி செய்த கொலையை ஏற்பது போலாகிவிடுகிறது. இதுவும் நுண்பாசிச அரசியலின் தொடர்ச்சியாகவே காணமுடிகிறது. இந்தப் பிரதியில் செயற்பாடாக இழைவது அதன் அறம் சார்ந்த கருத்தியல் எனலாம். காலிப், செலாலின் எழுத்துகள் மீது விமர்சனத்தை வைக்க முடியாது. அதன் விளைவுகள் மீது அவனுக்குக் கட்டுப்பாடு இல்லை. ஆனால் ராணுவ அதிகாரி அதனை விமர்சிக்கிறார். அவனுடைய எழுத்துச் செயல்பாட்டினால் நாட்டில் விளைந்த பாதகங்களை முன்வைக்கிறார். அதனால் செலாலைக் கொல்வது அறத்தின் செயல்பாடாகிறது. நுண்பாசிசம் உட்பட பல வன்முறைகளிலிருந்து மீள எல்லோரும் கடவுள் வரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம் என ஆன்மீகம் பேசுகிறது இந்தப் பிரதி. புரட்சிக்கான பாதை இருளாகிவிடுகையில் ஆன்மீகத்தின் அறம் செயல்பாட்டைக் கனிந்திருக்கச் செய்கிறது என்பதை இந்தக் கதையாடல் உணர்த்துகிறது.

     மற்றொரு பொருளும் இத்துடன் இழையோடிக் கொண்டே இருக்கிறது. செலால், ஜெலாலுதீன் ரூமியின் மறுஉருவாக்கம் என்று கொண்டால் ரூமிதான் அவருடைய நெருங்கிய ஆதர்ச நட்பாக இருந்த தப்ரீஸைக் கொன்றிருக்க முடியும் என செலால் எழுதும் கட்டுரையின் அடிப்படையிலிருந்து இந்தப் பொருளைத் தருவித்துக் கொள்ளலாம். அதாவது செலால், ரூமியின் மறுஉருவாக்கம் என்றால் காலிப் மற்றொரு கவிஞரின் உருவாக்கம். காலிப், செலால் ஆனவுடன் ஆதர்ச, நட்பான தப்ரீஸ் கொல்லப்பட்டதைப் போல் செலால் கொல்லப்படுகிறான். பல இருமைகளின் பிளவும் இணைவும் இங்குக் கலந்து சந்தித்த புள்ளியாகவும் இந்த நாவல் மாறிவிடுகிறது.

முடிவு

  • இந்தக் கதையாடல் எதிர்ப்புணர்வின் அரசியலை அழகியலாக மாற்றிக் காட்டுகிறது. கலாச்சாரப் பொதுப் போக்குகளிலிருந்து உலகமயமாக்கல் வரை துருக்கிய தனித்துவத்திற்கான நிலைநாட்டலைக் கோருவதை இந்தப் பிரதி முன்வைக்கிறது. அடையாளத்தின் சமச்சீரின்மையும் வேறுபாட்டின் முன்னெடுப்பில் தவறிப் போகும் துருக்கியத் தன்னிலையும் இந்தப் பிரதியின் அடுத்த அடுக்கலில் உருவாகும் பொருளாம்சம். ஏனெனில் நிலையற்ற நாடோடித்தனத்தின் கோமாளிகளாக துருக்கிய பிரஜைகளைக் கண்டறிவதன் மூலம் அடையாளத்தின் சமநிலையைத் தூண்டத் தலைப்படுகிறது இந்தப் பிரதி. மத எல்லையாக்கத்தின் அதிகாரம் படைப்பைத் தடுப்பது குறித்து ஏற்படும் எதிர்ப்புணர்வை ஆழமாகப் பதியவைக்கிறது இந்தக் கதையாடல். நுண்பாசிசத்தின் அரசியலின் செயற்பாட்டுக்கு அறத்தைப் பதிலாக்குகிறது இந்தப் பிரதி.

பயன்பட்ட நூல்கள்

1.Deleuze, Gilles and Guattari, Felix, A Thousand Plateaus, Tr. Brian Massumi, Minnesota Press, 1987.

2.Lacan, Jacques, The Mirror Stage, Critical Link, At the Culmination of a historical effort of a society

3.Antakyalioglu, Zekiye, The Black Book: The Parody of Epic https://www.tandfonline.com/doi/abs/10.1080/14683849.2012.747298

4.Cansi Sanisneller, Saniye, Doppleganger in Orhan Pamuk's The Black Book, https://www.researchgate.net/publication/297515729_Doppelganger_in_Orhan_Pamuk's_The_Black_Book

 

 

 ’கல்குதிரை’ 34வது இதழில் இந்தக் கட்டுரை வெளியாகியிருக்கிறது....

 



[1] "That identity not be first, that it exists as a principle but as a second principle, as a principle become; that it revolves around the Different: such would be the nature of a Copernican revolution which opens up the possibility of difference having its own concept, rather than being maintained under the dominion of a concept in general already understood as identical" (Deleuze, G. Difference and Repetition, p.40-41).

 


மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...