அவளுக்கு
எதிர்பாராத விதமாக அதிகப் பணம் தேவைப்பட்டது. குடும்பத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க
வேண்டியிருந்தது. தன் பூர்வீக வீட்டை விற்றுவிடலாம் என முடிவெடுத்தாள். அங்கிருந்த
பொருட்களை என்ன செய்யலாம் எனப் பார்க்க வந்திருந்தாள். அங்கு அவள் சிறு வயதில்
சேகரித்தப் பொருள்கள் எல்லாம் இருந்தன. குட்டி பாத்திரங்கள், சொப்புகள்,
பள்ளிக்குக் கொண்டு சென்ற பைகள், நோட்டுப் புத்தகங்கள், சில்லறை காசுகள், பலகைகள்,
பென்சில்கள், பேனாக்கள், தூரிகைகள், சிறுவயதில் வரைந்த ஓவியங்கள், சிறுவயதில்
அணிந்த உடைகள், ரிப்பன்கள், சாப்பிட்டத் தட்டுகள், குடித்த குவளைகள்,
மட்பாண்டங்கள், சாமி சிலைகள், வளையல்கள், கொலுசுகள், மேஜைகள், நாற்காலிகள்,
கட்டில்கள், பெட்டிகள், முறங்கள், அம்மி, குழவி, மாவாட்டும் கல், துணி துவைக்கும்
கல், இன்னும் இன்னும் எண்ணிலடங்கா பொருள்கள் இருந்தன. உள் அலமாரி திறந்தால் அதில்
ஒரு சிறிய பெட்டி இருந்தது. அதைத் திறந்து பார்த்தாள். முதன் முதல் விழுந்த
அவளுடைய பல் அதில் இருந்தது. அதைக் கண்டவுடன் பழைய நினைவுகள் எல்லாம் கிளர்ந்து
வந்தன. அந்தப் பல் விழுந்தவுடன் அவள் எவ்வளவு துயருற்றாள் என நினைவுக்கு வந்தது.
அந்தப் பல்லால் தான் எத்தனைத் தின்பண்டங்களை உண்டிருப்போம் எனத் தோன்றியது. புதிய
பல் வளர்ந்து வரும் வரை விழுந்துவிட்ட அந்தப் பல் மீது அவளுக்குக் கடும் கோபம்
இருந்தது. அதன் பின் அந்தப் பல் மீது அதிக வாஞ்சை ஏற்பட்டுவிட்டது. அதைப்
பத்திரமாக வைத்துக் கொண்டாள். அந்தப் பால் பல்லைக் காட்டி அவள் சிரிக்கும் போது
அவளது தாத்தா, பாட்டி மிகவும் மகிழ்ந்தார்கள். அந்தப் பல் இத்தனை ஆண்டுகளாக
அப்படியே இருக்கிறது. தான் இறந்த பின்னும் அது இருக்கும் என நினைத்து நெகிழ்ந்து
போனாள். அவளுக்குச் சட்டென்று ஒரு யோசனை வந்தது. அந்தப் பல்லை ஏலம் விட்டால் என்ன
என்று தோன்றியது. ஓர் இணையதளத்தில் அந்தப் பல்லை ஏலம் விட்டாள். வெளிநாட்டில்
மரபுக்கூறுகளைக் குறித்து ஆய்வுகளைச் செய்யும் நிறுவனம் கணிசமான தொகைக்கு அந்தப்
பல்லை ஏலம் எடுத்துக் கொண்டது. கடன் சுமை தீர்ந்தது. அவள் வீட்டையும் விற்கவில்லை.
Wednesday, 27 October 2021
குறுங்கதைகள்-பல்
Tuesday, 26 October 2021
குறுங்கதைகள்-கானல்
அவன்
வீட்டின் ஜன்னலிலிருந்து பார்த்தால் சற்று தொலைவில் இருக்கும் வீட்டின் ஜன்னலும்
அந்த வீட்டில் நடப்பதும் தெரியும். அது இருக்கும் தொலைவை விட அருகில் இருப்பது
போல் தெரியும். அது கானல் நீர் போன்ற காட்சி என பிறகு புரிந்துகொண்டான். எப்போதும்
அந்த வீட்டில் நடப்பதை இவன் உன்னிப்பாகக் கவனிப்பதில்லை. அன்றிரவு அந்த வீட்டில்
ஏதோ வித்தியாசமான ஒலி வந்ததால் அந்த ஜன்னலில் பார்த்தான். ஒருவன் ஒரு பெண்ணின்
கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தான். இவனுக்குப் பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. அந்த
வீட்டுக்குச் சென்று என்ன நடந்தது என்று பார்க்கலாம் எனக் கிளம்பினான். அந்த
வீட்டின் கதவைத் தட்டினான். கழுத்தை நெறித்தவன் வந்து கதவைத் திறந்தான். அவனிடம்
எந்த மாற்றமும் தெரியவில்லை. வீட்டில் ஏதாவது சண்டையா என இவன் கேட்டான். அப்படி
எதுவுமில்லையே என்றான் அவன். தன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்த காட்சியை அவனிடம்
சொன்னான் இவன். அவன் சிரித்துக் கொண்டு இவனை வீட்டுக்குள் அழைத்து அவன் ஜன்னலில்
தெரிந்தது தன் வீட்டுத் தொலைக்காட்சி எனவும் அதில் அப்போது தான் நடிக்கும் ஒரு
குறும்படக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் சொன்னான். உண்மையில் அங்கு
ஒரு பெரிய தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இவனும் தொல்லைக்கு மன்னிப்பு
கேட்டுவிட்டு வந்துவிட்டான். இருந்தாலும் இவனுக்குச் சந்தேகம் தீரவில்லை. அவன்
பொய் சொல்வதாகக் கருதினான். இதை எப்படிக் கண்டுபிடிப்பது என யோசித்தான். மீண்டும்
தன் வீட்டுக்குச் சென்று அந்த வீட்டின் ஜன்னலைக் கவனித்தான். எதுவும் சலனம்
இல்லாமல் இருந்தது. அவனுக்கு அந்த வீட்டில் கொலை நடந்திருப்பதாகவே பட்டது.
மீண்டும் அந்த வீட்டுக்குப் போனான். கதவைத் தட்டாமல் ஒரு முறை வீட்டைச் சுற்றி
வந்தான். அந்த வீட்டின் அருகில் ஒரு மரம் இருந்தது. அதில் ஏறிப் பார்த்தான்.
கட்டிலில் அந்தப் பெண் தாறுமாறாகக் கிடந்தாள். பக்கத்தில் தன்னுடன் பேசியவன்
கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்தான். தன்னுடன் பேசியது யாராக இருக்கும் என நினைத்த
அவனுக்கு அச்சத்தில் வியர்வை ஊற்றியது. மரத்திலிருந்து குதித்து தலைதெறிக்க வீடு
வந்து சேர்ந்தான்.
Monday, 25 October 2021
குறுங்கதைகள்-மீன்
அவன் அந்த
அழகிய மீனைத் தொட்டியுடன் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்தான். அது இன்னும் வளரும்
என்பதால் பெரிய தொட்டியாக வாங்கிவிட்டான். அந்த மீனை வளர்ப்பது குறித்து
முழுமையாகத் தெரிந்துகொண்டான். வீட்டுக்குக் கொண்டு வைத்தப் பின் அதன் குணாம்சம்
மாறியது. அவனைக் கண்டால் அதற்குப் பிடிக்கவில்லை. அவன் தொட்டியில் தண்ணீர்
மாற்றுவது உணவு வைப்பது போன்ற எல்லா வேலைகளையும் செய்து வந்தான். ஒரு நாள் மீன்
அவனிடம் பேசியது. நீயாகப் பிறந்திருக்க வேண்டிய என்னைத் தந்திரமாக மீனாகப்
பிறக்கச் செய்துவிட்டு மீனாகப் பிறந்திருக்க வேண்டிய நீ என்னை ஏமாற்றிவிட்டாய்.
உன்னை நான் விடப் போவதில்லை என்றது மீன். என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டான் அவன். பொறுத்திருந்து பார்
என்றது மீன். அவனுடைய நண்பன் ஒரு நாள் அவன் வீட்டுக்கு வந்திருந்தான். அந்த மீனின்
அழகில் மயங்கி அதனைத் தன் வீட்டுக்கு எடுத்துப் போவதாகக் கூறினான். உடனே அதற்குச்
சம்மதித்து மீனை எடுத்துக் கொடுத்துவிட்டான். அந்த மீனை எடுத்துப் பாத்திரத்தில்
போட்டான் நண்பன். மீன் பேசியது. உன்னிடம் ஓர் உதவி தேவை என்றது. அவனுக்கு மீன்
பேசுவது ஆச்சரியமாக இருந்ததால் என்ன செய்யவேண்டும் என்றான் நண்பன். என்னை வெட்டி குழம்பாக்கி உன்
நண்பனிடம் கொண்டு போய்க் கொடுக்கவேண்டும் என்றது. அதற்கு அவனும் ஒத்துக் கொண்டான்.
மீன் குழம்பு செய்து எடுத்துப் போய் அவனிடம் கொடுத்தான். தான் வளர்த்த மீன் தன்னை
பழி வாங்கப் போவதாகச் சொன்னது. இப்போது குழம்பாகி வந்திருக்கிறது என உற்சாகத்தோடு அதனைச் சாப்பிட்டான். உள்ளே
போன மீன் சொன்னது என்னை உண்டதால் நீ மீனாகவும் நான் நீயாகவும் ஆகப்போகிறோம். இது
புரியாமல் என்னை நீ உண்டுவிட்டாய் என்றது. அவனுக்குப் பெரும் அதிர்ச்சியாக
இருந்தது. காலியாக இருந்த மீன் தொட்டியில் இறங்கிப்படுத்துக் கொள்ளவேண்டும் போல்
அவனுக்கு இருந்தது. அதில் இறங்கியவுடன் அவன் மீனாகிவிட்டான். அவனிலிருந்து பிரிந்த
மீன் மனிதனாகி மீனாகிவிட்ட அவனை வளர்த்தது.
Sunday, 24 October 2021
குறுங்கதைகள்-பொம்மை உலகம்
சிறுமிக்கு
அவளுடைய பெற்றோர்கள் ஏராளமான பொம்மைகளை வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அவளுக்கு
அதில் சுவாரஸ்யம் ஏற்படவில்லை. அவளுக்கு மேலும் உற்சாகமூட்டும் விளையாட்டுத்
தேவைப்பட்டது. ஒரு நாள் சர்க்கஸ் பார்க்கப் போனாள். அதில் வந்த கோமாளியை அவளுக்கு
மிகவும் பிடித்தது. வீட்டுக்குப் போய் கோமாளியின் ஓவியத்தை வரைந்தாள். அது
உயிருடன் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தாள். உடனே அது உயிர்
பெற்றுவிட்டது. ஆனால் அவள் எந்த அளவு சிறியதாக வரைந்திருந்தாளோ அதே அளவுக்கான
சிறிய கோமாளியாக உயிர் பெற்றது. அதைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சினாள்.
அந்தக் கோமாளி தனியாக இருந்ததால் அதனுடன் விளையாட ஒரு குட்டியானையை வரைந்தாள்
அதுவும் உயிர் பெற்றது. கோமாளி குட்டியானையுடன் விளையாடினான். அதைப் பார்த்து
சிறுமி குதூகலித்தாள். கோமாளியையும் குட்டியானையையும் ஒரு கூடையில் போட்டு மூடி
வைத்தாள். பள்ளிக்குச் சென்று வந்து அவர்களுடன் விளையாடினாள். ஒரு நாள் கோமாளி
காணாமல் போனான். அவள் வீடெல்லாமல் தேடினாள். கிடைக்கவில்லை. ஒருவேளை அந்த
சர்க்கஸுக்குப் போய்விட்டானோ என அங்கே சென்று பார்த்தாள். கோமாளி அங்கு இருந்தான்.
அவனை அழைத்தாள். அவள் உடன் மறுத்தான். அவளுக்கு என்ன செய்வதென்று புரியாமல்
வீட்டுக்கு வந்து புதிதாக ஒரு கோமாளியை வரைந்தாள். அது உயிர் பெற்றது. குட்டியானையுடன்
அந்த கோமாளியும் விளையாடினான். முன்பிருந்த கோமாளி போல் அவனும் சர்க்கஸுக்குப்
போய்விடுவானா என்று கேட்டாள். அவளுடன் விளையாடுவதால் என்ன பயன் என்று கோமாளி
கேட்டான். சர்க்கஸுக்குச் சென்றால் பணமும் பாராட்டும் கிடைக்கும் என்றான். தானும்
அந்தக் குட்டியானையைத் தூக்கிக் கொண்டு சர்க்கஸுக்குப் போக விரும்புவதாகச்
சொன்னான். அவனையும் குட்டியானையையும் மீண்டும் ஓவியமாக்கினாள் சிறுமி.
குறுங்கதைகள்-நகர்வு
அன்று
காட்டில் அவள் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒன்று அவளைப் பிடித்து
உலுக்கியது போல் இருந்தது. அவளால் நிற்கவே முடியவில்லை. அப்படியே
அமர்ந்துவிட்டாள். அவள் நின்றிருந்த நிலப்பகுதி நகரத் தொடங்கியது. அந்த இடத்தில்
அவளைத் தவிர வேறுயாரும் இல்லை. கீழே கிடந்திருந்தப் பழங்களை எடுத்துச்
சாப்பிட்டாள். நிலம் மெதுவாக நகரும் படகு போல் நகர்ந்துகொண்டிருந்தது. அருகில்
இருந்த கடலில் போய்ச் சேர்ந்தது. கடலில் மிதந்துகொண்டே சென்றது. அலைகளின் சீற்றம்
அந்த நிலப்பகுதியை எதுவும் செய்யவில்லை. அந்தப் பகுதியில் இருந்த பழங்களும்
கிழங்குகளும் மட்டுமே அவளுக்குப் போதுமானவையாக இருந்தன. ஆங்காங்கே தோன்றிய
ஊற்றுகளிலிருந்து நீரை எடுத்துப் பருகினாள். இந்த நிலம் நிற்குமா இப்படியே
பயணிக்குமா என யோசித்தாள். நிலத்தின் மீது நடப்பது சிரமமாக இருந்தது. மெதுவாக
நகர்ந்து சென்று வேறு யாராவது அதில் இருக்கிறார்களா எனத் தேடினாள். யாரும் இல்லாத
தனித் தீவு அது எனப் புரிந்துகொண்டாள். அந்தத் தனித்தீவின் ஒரே உரிமையாளர் தான்
மட்டுமே என நினைத்து மகிழ்ந்தாள். ஆனால் இதை யாரிடமும் சொல்லி மகிழ்வதற்கு வழியில்லாமல்
போய்விட்டதே என நொந்து கொண்டாள். தூரத்தில் மலைகள் தெரிந்தன. இந்த நிலப்பகுதி
அங்கு போகுமா என நினைத்தாள். மழையும் பனியும் பொழிந்து கொண்டிருந்தன. வெயிலும்
குளிரும் அவளைப் பெரிதாக வாட்டவில்லை. அந்த நிலப்பகுதி நகராமல் நிற்கவேண்டும்
என்பது மட்டுமே அவளது எண்ணமாக இருந்தது. அப்படியே நின்றாலும் அங்கிருக்கும் மக்கள்
தன்னை ஏற்பார்களா என்று சந்தேகம் கொண்டாள். இப்படி நகரும் நிலத்தில் வாழ்வதுதான்
இனி இயற்கையின் விதி என்றால் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என நினைத்து
அமைதியானாள். தூரத்தில் தெரிந்த மலைகள் இப்போது அருகே தெரிந்தன. மெதுவாக அந்த
நிலம் மலைகளில் மோதி நின்றுவிட்டது.. அவள் அந்த மலையின் மீது ஏறினாள். உச்சிக்கு
வந்து பார்த்தாள். அப்போது அவள் வந்த நிலம் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கீழே
பார்த்தாள் ஒரு நகரம் தெரிந்தது. அங்கு போனாள். நகரும் நிலத்தில் அவள் அங்கு வந்து
சேர்ந்ததாகச் சொன்னாள். அவள் மனநிலை பாதிக்கப்பட்டப் பெண் என எண்ணி அவளைக்
காப்பகத்தில் சேர்த்தார்கள். சில நாட்களில் பெரிய நிலநடுக்கம் வந்தது. அவள் இருந்த
பகுதி நகரத் தொடங்கியது.
Saturday, 23 October 2021
குறுங்கதைகள்-குறை
Thursday, 21 October 2021
குறுங்கதைகள்-வேட்டை
அவன்
காட்டிற்குச் சென்று இறந்து கிடக்கும் விலங்குகளை எடுத்து வந்து புடம் போட்டு அவன்
வீட்டின் அடுப்பகுதியில் வைத்துவிடுவான். அதுவும் இதுவரைக் கண்டிராத விலங்குகளை
மட்டுமே எடுத்து வருவான். அதனால் அவை எப்போதாவதுதான் அவனுக்குக் கிடைத்தன. பறவைகள்,
பாம்புகள், போன்றவற்றையும் எடுத்துவந்திருக்கிறான். அன்று அவனுக்குக் கிடைத்தது
ஓர் அதிசயமான உயிரினம். மனித உடலும் சிங்கத்தின் தலையும் வேறு ஏதோ பெயர் தெரியாத
விலங்கின் முகமும் கொண்ட உயிரினம். அது மனிதனா என அவன் திருப்பித் திருப்பி
ஆராய்ந்தான். ஆனால் அந்த உயிரினம் மனித உடலை மட்டுமே கொண்டிருந்தது. தலையிலிருந்து
கழுத்து வரை வேறு ஏதோ உயிரினம்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். அதை
வீட்டுக்கு எடுத்துவந்தான். அதைப் புடம் போட்டு வீட்டின் அடிப்பகுதியில் ஒரு
பீடத்தின் மீது ஏற்றி நிற்கவைத்தான். அதனைச் சுற்றி மற்ற விலங்குகளை அடுக்கினான்.
மேலே பறவைகள் இந்தக் காட்சியைப் பார்ப்பது போல் வைத்துவிட்டு தன் அறைக்கு வந்து
தூங்கிப் போனான். நள்ளிரவில் வீட்டின் அடிப்பகுதியில் ஏதோ வித்தியாசமான ஒலி
கேட்டது. தன் கனவில் வரும் ஒலி என எண்ணித் தூங்கிப் போனான். காலையில் எழுந்து
அடிப்பகுதிக்குச் சென்று பார்த்தான். பெரிய எலி போன்ற ஒரு விலங்கை வைத்திருந்தான்.
அது காணாமல் போயிருந்தது. பல இடங்களில் தேடினான். கிடைக்கவில்லை. ஏன் இப்படி
நடந்தது என உறுத்திக் கொண்டே இருந்தது. அன்று இரவும் அதை எண்ணியபடியே
தூங்கிவிட்டான். நள்ளிரவில் மீண்டும் அதே போன்ற ஒலி அடிப்பகுயில் இருந்து வந்தது.
எழுந்து அமர்ந்து கூர்ந்து கேட்டான். விலங்குகள் ஓடுவது போல் கேட்டது. ஏதோ ஒரு
விலங்கு ஓலமிடுவது போல் இருந்தது. அதன் பின் எல்லாம் அமைதியாகிவிட்டது. கீழே சென்றுபார்க்க
அச்சமாக இருந்ததால் அமைதியாகப் படுத்து உறங்கிப் போனான். அடுத்த நாள் கீழே போய்ப்
பார்த்தான். மற்றொரு கொம்பு முளைத்த குதிரை போன்ற ஒரு விலங்கு காணாமல்
போயிருந்தது. இவனுக்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அன்றிரவு உறங்காமலேயே
அமர்ந்திருந்தான். அறையில் மங்கலான வெளிச்சம் இருந்தது. அவன் அறைக் கதவு திறந்தது.
அந்த மனிதனும் விலங்கும் இல்லாத உயிரினம் அவன் அறைக்குள் நுழைந்தது. அவன்
அச்சத்தில் உறைந்து மயங்கிப் போனான். அடுத்தநாள் அந்த விலங்கு நின்றிருந்த
பீடத்தில் அவன் உடல் நின்றிருந்தது.
மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு
(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...
-
(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...






