(இலக்கியவெளி இதழில் வெளிவந்த கட்டுரை)
பெண்ணியத்தின் வரலாற்றை, போக்குகளை, தீர்மானங்களைக் குறித்து பல நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பிரேமாவின் படைப்பாக்கமும் பெண்ணியம் சார்ந்தே அவருடைய இந்தச் சிறுகதைத் தொகுப்பான எங்களோட கதையில் உள்ளது. பல்வேறு வாழ்வியல் நிலைகளில் பெண்கள் படும் பாட்டை இந்தத் தொகுப்பின் பத்து கதைகளில் எடுத்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர். இந்தத் தொகுப்பில் உள்ள பெண்களை கீழ் வரும் வகையில் வரிசைப்படுத்தலாம்:
1.உறுதியானவர்கள்
2.அப்பாவியானவர்கள்
3.தனித்திறன் கொண்டவர்கள்
………………
1.உறுதியானவர்கள்
இந்த வகைமையில் உள்ள பெண்கள் தங்களின் முடிவைத் தானே
எடுக்கும் நிலையில் இருப்பவர்களாக இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் அவர்களிடம்
பொறுப்பு உள்ளது. மேலும் ஆண்களைச் சார்ந்து நிற்கக் கூடாது என்ற எண்ணத்தில்
உறுதியானவர்களாக உள்ளனர். இதுதான் பெண்ணியம் காட்டும் உறுதி. அதை ஆசிரியர்
பாத்திரங்கள் வழி கொண்டு வந்திருக்கிறார். பெண்களிடம் அரிதாகக் காணக்கிடைக்கும்
இந்த உறுதியை இந்தக் கதையின் பாத்திரங்களிடம் படைத்திருப்பதன் மூலம் இயல் வாழ்வில்
பெண்களுக்கான பாதையாக எது இருக்கவேண்டும் என்று காட்ட நூலாசிரியர் பிரேமா அவர்கள்
விரும்பியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
எடுத்துக்காட்டாக, பரிதவிப்பு என்ற கதையின் நாயகியும்
எனக்கான காற்று என்ற கதையின் நாயகியும் இத்தகைய உறுதியானவர்கள் என்ற வகைமையில்
வரக்கூடிய பெண் பாத்திரங்களாக உள்ளனர். பரிதவிப்பு கதையில் நாயகி தன்
அம்மாவிற்காகச் சிறுநீரங்கத்தைத் தானம் கொடுத்ததற்காக காதலனைப் பிரிய நேர்கிறது.
அதைப் பொருட்படுத்தாமல் தன் குடும்பத்திற்காக வாழ்வது என்ற உறுதியாக
முடிவெடுக்கிறாள். மீண்டும் தன் காதலன் வந்து திருமணம் செய்து கொள்ளக் கேட்ட
போதும் அதை அவள் ஏற்பதில்லை. இது போன்ற உறுதி பொதுவாக, ஆண்களிடம் இருப்பதாக
இதுவரைச் சமூகம் எண்ணி வந்ததை மாற்றி அது பெண்ணிடமும் இருப்பதாக இந்தக் கதை
காட்டுகிறது. அதைத் தவிர பெண் தனக்கான பொறுப்பாகச் சிலவற்றைத் தானே ஏற்பதும் ஒரு
விடுதலையான பெண்ணின் பாத்திரத்தை இந்தக் கதை வரைந்து காட்டுகிறது.
மற்றொரு கதையான எனக்கான காற்று என்ற கதையின் நாயகி
ஒரு பாடகி. காதலித்து மணந்த கணவன் குடிக்கு அடிமையாவதுடன் தன் மகனும் குடிக்கு
அடிமையானதைப் பார்த்துப் பொறுக்காமல் விவாகரத்தைத் தேர்ந்தெடுப்பது பெண்ணுக்கான
உறுதியான முடிவாக உள்ளது. அது தவிர, தன்னுடைய சுயமான காற்றைச் சுவாசிக்க இது போன்ற
உறுதியான முடிவு தேவை என்று பெண் தீர்மானிப்பது குறித்து இந்தக் கதைத் தெளிவாகக்
காட்டுகிறது.
தன்னிலை என்பது மற்றமையால் விளக்கப்படுகிறது
என்பதுதான் பொதுவான விளக்கம். அதுவும் பெண்மை என்ற பாலினத்தின் தன்னலை ஆண்மை என்ற
தன்னிலையின் மூலமாக விளக்கப்படுவதாக, நிறைவடைவதாக உளவியலாளர்களின் அவதானிப்பாக
உள்ளது. ஆனால் பெண் அந்தத் தன்னிலையைக் குறித்து விழிப்புணர்வு அடைந்து தன்னுடைய
தன்னிலை, மற்றமையால் தீர்மானிக்கப்படுவதாக இருப்பதைப் புரிந்து அதிலிருந்து
விடுவித்துக் கொண்டு தன் சுயம் சார்ந்த தன்னிலையை வளர்த்தெடுத்து அதற்கான
மற்றமையைத் தேர்வு செய்யவேண்டும் என்பதுதான் பெண்ணியலாளர்களின் கருத்தாக இருந்து
வருகிறது. அது போன்ற பெண்களை இந்தக் கதைகளின் பாத்திரங்கள் மூலம் காணமுடிகிறது.
பெண் மைய ஆளுமைகளாக, பெண்ணாகுதல் என்ற வினையை நிகழ்த்துபவர்களாகப் பெண்கள் உருவாகவேண்டும்
என்பதற்கான அடிப்படைதான் பெண்ணியத்தின் சாரமாக இருப்பதாகப் பல பெண்ணியலாளர்கள்
கருதுகிறார்கள். அதற்கான எடுத்துக்காட்டுகளாக இது போன்ற உறுதி கொண்ட பெண்களைப்
படைப்பதை பெண்ணியக் கருதுகோள்களைக் கொண்டவர்களின் பிடிப்பாக உள்ளது.
2.அப்பாவியானவர்கள்
இந்தக் கதைகளின் அடுத்த வகைமையிலுள்ள பெண்கள்
அப்பாவியானவர்கள். இவர்கள் பெரிதும் தன்னுணர்வின்றி எதேச்சையான முடிவை
எடுப்பவர்களாக அதனால் வரும் விளைவுகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால்
அவர்களின் போக்கு பிறரைப் பாதிப்படையச் செய்துவிடுவதாக உள்ளது. ஆனால் சமூகத்தில்
இத்தகைய பெண்களின் இயல்பு ஏற்கத்தக்கதாக இருப்பதில்லை. பெண்ணின் சுயம் சார்ந்த
போக்குகளை விமர்சிக்கும் நிலையில்தான் எப்போதும் சமூகம் உள்ளது. அத்தகைய பெண்
இயல்புகளையும் அதனால் விளையும் பாதிப்புகளையும் குறித்து சில கதைகள் விரிவாகப்
பேசுகின்றன.
எடுத்துக்காட்டாக, கள்ளிப் பாதையும் நுணாப் பூவும் என்ற கதையில் வந்த சிறுமி,
ஓர் அப்பாவியான பெண். அவளுக்குச் சமூகத்தின் சூது வாது தெரியாது. ஆனால் அவள் பாலியல்
சீண்டலுக்கு உள்ளாகும் போது அதை எதிர்ப்பது விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அதனால் அவள்
காப்பாற்றப்படுகிறாள் என்பதை இந்தக் கதை ஆழமாக விளக்குகிறது. அந்தச் சிறுமியின் அப்பாவியான
குணாம்சத்தின் மீது ஏற்பட்ட தாக்குதலை அவள் அதே விளையாட்டுத்தனத்துடன் சமாளித்துவிடுவதும்
அதற்காகப் பின் வருந்துவதும் ஓர் இயல்பான பெண்ணின் போக்காக இந்தக் கதை காட்டுகிறது.
அப்பாவித்தனம் என்பது பெண்ணின் இயல்பு என்றும் அதுதான் பெண்ணின் குணாம்சத்தில் ஆணைக்
கவரக்கூடியது என்றும் இதுவரையிலான ஆண் மைய சமூகத்தின் அடிநாதக் கருத்தாக இருந்திருக்கிறது.
அதனைப் பெண்ணுக்குச் சாதகமாக மாற்றி இந்தக் கதையில் எழுதப்பட்டிருக்கிறது. அப்பாவியாக
இருந்தாலும் தனக்கு ஊறு நேர்ந்தால் அதை எதிர்க்கவும் துணியக் கூடிய அப்பாவித்தனமாக
ஒரு பெண் இருக்கிறாள் என்பது பல சிறுமிகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் ஒரு படிப்பினை
போல் இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது.
மற்றொரு எடுத்துக்காட்டு அக்கினி மனசு
கதையில் வரும் நாயகி. காதலித்து மணந்த கணவனுடன் குடும்பம் நடத்துகையில் வறுமை வாட்டுகிறது.
இருந்தாலும் கணவனிடம் தனக்கு பிரியாணி தேவை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி அதை அவன்
வாங்கி வராததால் தீயிட்டுக் கொளுத்திக் கொள்கிறாள். ஓர் அப்பாவியான பெண்ணின் உள்ளத்தில்
உள்ள குழந்தைத்தனமான பிடிவாதம் குறித்து இந்தக் கதை குவிமையப்படுத்துகிறது. அந்த நாயகியின்
பொறுப்பற்றத்தனத்தைக் காட்டும் அதே வேளையில் பெண்ணின் இயல்பான அப்பாவித்தனம் குறித்து
கதை அடிக்கோடிடுகிறது.
அதே போல் ‘பிரம்மாண்டம்’ கதையின் நாயகியும்
முதிய பெண்மணி. ஆனால் அமெரிக்காவுக்குத் தனியாகச் சென்று சேர்வது குறித்த கதை. அப்பாவியான
பெண், அதனால் தனக்குத் துணையாக கடவுள் முருகன் இருப்பதாக எண்ணும் பெண்ணாகக் கதை காட்டுகிறது.
மற்றொரு கதை மணிமேகலை காப்பியத்தின் ஒரு காட்சியைக் கதையாக்கி உள்ள இது தான் காதலா?
என்ற கதை. இதில் மணிமேகலை அப்பாவியாக இருந்தாலும் நிதானமாக தன் உணர்வுகளைக் கையாளக்
கூடிய பெண் என்பதைச் சித்தரித்த கதை.
பெண்மையின் குணாம்சங்களாக ஆண் மைய கதையாடல்களின்
மூலம்தான் இதுவரைப் பலவும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அப்பாவியாக இருப்பது,
தன் விருப்பத்திற்கு நடந்துகொள்வது போன்றவை ஆணின் குணாம்சமாக, சுதந்திரமாக வரையறுக்கபட்டிருக்கிறது.
ஆனால் அது பெண் செய்யும் போது அவள் விமர்சிக்கப்படவேண்டியவளாகிறாள். அவள் ஆணின் நடத்தையைப்
பிரதிபலிக்க முடியாது என்பதுதான் ஆண் மைய சமூகம் சொல்லும் ஒரு கருத்தாக்கம். அதனால்
அந்த அளவுகோலை வைத்து பெண்ணின் குணத்தை அளப்பதோ அல்லது அவளுக்கான சட்டகங்களை உருவாக்குவதோ
முறையாக இராது என்பதுதான் பெண்ணியத்தின் அடிநாதமான கருத்து.
3.தனித்தன்மையானவர்கள்
சில பெண்களுக்கு மட்டுமே தனித்தன்மையான சில
குணாம்சங்கள் அமையும், அத்தகைய குணாம்சங்களை சில கதைகள் எடுத்துக் காட்டுகின்றன.
குறிப்பாக மானுடம் வென்றதம்மா என்ற கதையில் வரும் நாயகி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட
முதியவர்களுக்கு உணவு கொடுப்பது என்ற செயல் அவளுடைய மனிதத் தன்மையைக் காட்டுவதாக
உள்ளது. தன் குடும்பத்தின் நலத்தையும் மீறி அவள் இதைச் செய்கிறாள். மேலும்
வயதானவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நடத்தை என்பது ஆணைவிட பெண்ணுக்கே உடனடியாக வரும்
என்பதையும் இந்தக் கதை காட்டுகிறது.
மற்றொரு
எடுத்துக்காட்டாக, எனக்கு நீ மனைவி அல்ல என்ற கதையில் தன் கணவன் புற்றுநோயால்
பாதிக்கப்பட்ட பின் அவனுடைய மனைவி பாத்திரம் படும்பாடும் அவள் முழுமையாக அவனுக்கு
ஆறுதலாக, குடும்பத்தைத் தாங்கி நிற்பதும் அவளுடைய தனித்தன்மையான குணாம்சமாக இந்தக்
கதை காட்டுகிறது. அவளை ஒரு தாயாக அவளுடைய கணவன் மதிக்கிறான். இது போன்ற
குணாம்சங்கள் பெண்களிடம் இயல்பாகவே இருப்பதை இந்தக் கதை மிகவும் விளக்கமாகக்
காட்டியிருக்கிறது.
இந்தத் தொகுப்பில்
இடம்பெற்ற கதை எங்களோட கதை என்ற தலைப்புக் கதை. இதில் ஒரு கதை இல்லை பல கதைகள்
உள்ளன. அதாவது பல பெண்களின் கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு போல இந்தக் கதை உள்ளது.
இந்தக் கதையை வாசித்தால் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளை வாசித்தது போன்ற உணர்வு
ஏற்படும். இந்தக் கதையில் மொத்தம் எட்டு பெண்களின் கதை இடம்பெறுகிறது. ஒவ்வொன்றும்
ஒரு தனிக் கதை போல் உள்ளது. இந்தக் கதையில் பெண்ணுக்கான வேலைகளை இன்னும் வீடு
தீர்மானித்து வைத்திருக்கிறது என்பதில் தொடங்குகிறது பெண்ணுக்கான இடம் என்ற
எதிர்ப்புணர்வின் குரல். பெண் வெளியில் வேலை செய்தாலும் அவளுடைய உடைமைகளைக் கணவன்
உட்பட பலரும் எடுத்துப் பயன்படுத்துவது பற்றி அடுத்த எதிர்ப்பு தொடர்கிறது.
அடுத்தது மிகவும் கொடுமையான கதை. மகளையே பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கும் தன்
கணவன் பற்றி ஒரு பெண்ணின் தீரா புலம்பல். இது முதல் கதை போல் இருந்தாலும் ஒரு
பெண்ணின் வலிமையான உள்ளார்ந்த எதிர்ப்பாக உள்ளது. ஆனாலும் அவளால் எதுவும் செய்ய
முடியாத நிலையை இந்தக் கதை காட்டுகிறது. அடுத்து குடும்பப் பொருளாதாரம் வீட்டின்
பெரியவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறித்து ஒரு பெண் காட்டும் தீவிரமான
எதிர்ப்பாக ஒலிக்கிறது. கணவன் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதைக் கண்டிக்க
முடியாமல் மனைவி படும்பாட்டைச் சொல்கிறது அடுத்த குரல். ஒரு பெண் குழந்தை இல்லாத
குறையைப் பெரிதாக எடுக்க முடியாமல் இருக்கிறாள். மற்றொரு பெண் வயதான பின் யாரும்
துணை இல்லாத நிலையில் திருமணத்திற்கு வற்புறுத்தும் ஒருவரை மணக்கலாமா என்ற
யோசனையில் இருக்கிறாள். வேறொரு பெண் இரண்டாவது திருமணம் செய்து அதுவும் துயரத்தில்
முடிந்ததைக் கூறுகிறாள். பெண்களின் வாழ்வு திருமணம் மூலம் பல வகையான இன்னல்களுக்கு
ஆளாவதை இந்தக் கதைகளின் தொகுப்பாக உள்ள ஒரே கதை கூறுகிறது.
பெண்களின் சுயமாகத்
தீர்மானித்து தங்கள் வாழ்வைக் கொண்டு செலுத்த சமூகத்தின் எதிர்ப்பு கடுமையாக
இருக்கிறது. ஆண்களுடனான உறவு பெரும்பாலான சமயங்களில் கேடில் முடிகிறது. பெண்கள்
தனியாக வாழ்வது குறித்து எப்போதும் கேள்வி எழுப்பப்படுகிறது. குடும்பத்திலும்
தங்கள் குரல் ஒலிக்கச் செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் கொண்டவர்களாவும் ஆண்களைப்
போன்ற ஒழுங்கற்ற வாழ்வுக்கும் ஏங்க முடியாத நிலையைக் கொண்டவர்களாகவும் பெண்கள்
பெரும் துயருக்கு ஆளாகிறார்கள் என்பதை இந்தக் கதை வரையறுக்கிறது.
பெண்களின் துயர் மிகுந்த
வாழ்வு பெரும்பாலும் சுயமாக எடுத்த முடிவுகளால் ஏற்படுவதல்ல. ஆண்களாலும்
பெற்றோராலும் மற்றோராலும் ஏற்படுவதாக உள்ளது. இத்தகைய வாழ்வை ஏற்று அதில் உழல்ந்து
இறுதி வரைப் போராடி எந்த ஒரு பயனையும் பெறாது வாழ்வை முடிப்பவர்களாகப் பல பெண்கள்
உள்ளனர். இந்த வகையான வாழ்வு குறித்த கேள்விகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த
இது போன்ற கதைகள் தேவைப்படுகின்றன. பெண்மை என்பது உருவாகுதல் என்பார்கள் டெல்யூஜ்,
கத்தாரி. அதாவது பெண் என்ற நிலையை அடைதல் என்பது சமூகத்தால் இன்ன பிற அம்சங்களால்
தடை செய்யப்பட்டு, மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் மீண்டும்
பெண்ணாகும் நிலையை அடைந்தால்தான் சமூகத்தின் ஒடுக்கு முறை அகலும் என்ற
கருத்தைக்கூற அந்தத் தத்துவவியலாளர்கள் இப்படி ஒரு கருத்தாக்கத்தை எடுத்துக்
கூறுகிறார்கள். ஆண் கூட பெண்ணாகலாம். ஏனெனில் பெண் என்பது ஒரு மூலக்கூறு நிலை.
பெண் மூலம்தான் படைப்பும், காப்பும், வளர்ப்பும் சாத்தியமாகிறது. அத்தகைய பெண்
என்ற நிலையை அடைவது என்பதற்கான தடைகளையும் அதிகாரப் பரிவர்த்தனைகளையும் அறிந்து
விழிப்புணர்வு அடைவது பற்றித்தான் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளும் பேசுகின்றன.
இதைத் தவிர இந்தக்
கதைகளில் ஆண்களின் பல்வேறு தீய குணங்கள் பற்றிய தீவிரமான வர்ணனைகளும்
விமர்சனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் ஆண்களின் பல குறைகளும் பல
கதைகளில் எடுத்துக் காட்டப்படுகிறது. ஆண்களின் இயல்பு குறித்த பெண்ணின் பார்வையாக
இந்தக் கதைகளில் வரும் ஆண் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களில்
மிகவும் சில பாத்திரங்கள் மட்டுமே அதிகாரத்தைப் பிரயோகிக்காத, தவறான நடத்தைகளைக்
காட்டாத, குழப்பம் இல்லாத குணாம்சம் கொண்டவைகளாக உள்ளன. பெண் மைய சிந்தனையில்
ஆண்மை என்பது இத்தகைய குறை உடையதாகவும் இயல்பைக் கொண்டதாகவும் இருப்பதை இந்தக்
கதைகள் காட்டுகின்றன. மேலும் ஆண்களின் இருப்பு என்பது பெண்களைச் சார்ந்து
இருப்பதாகவும் பல கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே இயல் உலகில் கூட இது போன்ற
பெண்களைச் சார்ந்த வாழ்வை ஆண்கள் கொண்டிருப்பது வெளித்தெரியாமல் இருப்பதைப் பற்றிய
ஒரு குரலாக இந்தக் கதைகளின் குரல் ஒலிக்கிறது. பெண்களின் ஆற்றலின் முன் ஆண்கள்
சாதாரணர்களாக மாறிவிட்டதையும் இந்தக் கதைகள் ஆழமாகக் காட்டுகின்றன. மேலும் பெண்கள்
எடுக்கக்கூடிய முடிவுகள் ஆண்களுக்கும் பயனளிப்பதாக இருப்பதையும்
முன்னெடுக்கக்கூடிய கதைகளாக இவை உள்ளன.
மொத்தத்தில் இந்தக்
கதைகள் பெண்ணியத்தை ஒலிக்கச் செய்யும் பிரதிகளாக உள்ளன. கதைகள் மிகவும் சுருக்கமாக
உள்ளன. மேலும் விரிவாக இந்தக் கதைகளை எழுதினால் அழுத்தமான விளைவுகளை
ஏற்படுத்துபவையாக இருக்கும்.