Friday 9 August 2024

கேசவதி (சிறுகதை)

    


    

    அவனுக்கு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசையாக இருந்தது. அவன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் யாருக்கும் நீண்ட கூந்தல் இல்லை. அவன் போய் வரும் வழியில் பல பெண்களைப் பார்த்தான். சிலருக்கு நீளமான கூந்தல் இருந்தாலும் அவர்களிடம் பேச கூச்சமாக இருந்தது. அவனுக்கு பெற்றோர் இல்லை. அதனால் எப்போதும் நண்பர்களிடம்தான் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வான். அவனுடைய நண்பர்களிடம் தன் ஆசையை ஒரு நாள் சொன்னான். அவனுடைய நண்பர்கள் அவனுக்காகப் பெண் பார்த்தனர்.

ஒரு நண்பனுடன் அவனுடைய கிராமத்திற்குச் சென்றிருந்தான். அப்போது அங்கு ஒரு குலதெய்வ விழா நடந்து கொண்டிருந்தது. அந்த விழாவில் ஒரு பெண் தெய்வத்தைக் குலதெய்வமாகக் கும்பிட்டனர். அந்தப் பெண் தெய்வத்தின் வரலாறு பற்றி ஒரு பாட்டி கூறிக் கொண்டிருந்ததை அவளருகே அமர்ந்து அவன் கேட்டான். எங்க தெய்வம் அது. அதுக்குப் பேரு கேசவதி. அவளுக்கு நீளமா முடி இருக்கும். ஒரு தெரு வரைக்கும் போகும் முடி. அதைப் பாத்து சனம் பிரமிச்சு போய் நின்னுரும். அவளை கண்ணாலம் கட்டிக்க யாரும் வரல. வந்தவன் எல்லாம் முடிய பாத்து பயந்து ஓடிப் போய்ட்டான். கோயில்ல போய் முடி குடுக்கறதா அவ அம்மா நேந்துகிட்டா. பொண்ணைக் கூட்டிட்டுப் போய் மொட்டை அடிச்சா. கோயில்ல சுருண்டு விழுந்த அவ முடி அப்படியே பாம்பா மாறி படமெடுத்து ஆடுச்சு. அம்மாக்காரிக்குக் கண்ணு இருட்டிட்டு வந்துடுச்சு. மொட்டையான கேசவதி அப்படியே குளத்துல மூழ்கி செத்துப் போயிட்டான்னு சொல்றாங்க. காணாம போயிட்டதா சொல்றாங்க. எங்க கேசவதி அதுக்குப்பறம் இந்த ஊருக்கு எல்லாமே நல்லதுதான் செஞ்சா. விளையாத நிலம் விளைஞ்சது. கண்ணாலம் ஆகாத பொண்ணுங்களுக்கு கண்ணாலம் ஆச்சுது. வர்சா வர்சம் கேசவதிக்கு அல்லாரும் சேந்து விழா எடுக்கலாம்னு ரோசனை பண்ணி இத்தனை வர்சமா பண்ணிட்டு வந்திருக்கோம். இதுல யாராவது ஒரு பொண்ணு முடிய காணிக்கையா குடுப்பா. அப்போதான் கேசவதிக்கு மனசாறும்,’ என்று அவள் சொல்லி முடித்தாள்.

அந்தக் கதையைக் கேட்டதிலிருந்து சன்னதம் வந்தது போல் இருந்தது அவனுக்கு. அருகில் இருந்த கிராமத்தில் ஒரு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணை அவள் கூந்தலுக்காகவே யாரும் மணமுடிக்கவில்லை என்று நண்பன் அப்போது சொல்லக் கேட்டான்.  இவனுக்கு உடனடியாக அந்தப் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அங்கே கிளம்பிப் போனான்.

நண்பனுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டை அடைந்தான். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களுக்கு நல்ல உபசரிப்பைத் தந்தனர். பெண்ணை அவள் அறையில் சென்று பார்த்து வரச் சொன்னார்கள். இவனும் அந்த அறையில் நுழைந்தவுடன் அதிர்ச்சி அடைந்துவிட்டான். பாம்பைப் போல் மிக நீளமாக அந்த அறை முழுவதும் சுற்றி வைக்கப்பட்டிருந்தது அவளுடைய தலைமுடி. அவனுக்கு அவளுடன் எப்படிப் பேசுவது என்று தயக்கமாக இருந்தது.

ஆனால் அவள்தான் தான் தேடி வந்த கேசவதி என்று முடிவு செய்துவிட்டான். அவளை அந்தக் கிராமத்தின் குலதெய்வம் போலவே அவனுக்குப் பாவிக்கத் தோன்றியது. அவளிடம் ஏன் இத்தனை நீள முடி வளர்த்தாள் என்று கேட்டான். அது கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிட்டதாக அவள் சொன்னாள். வெட்டிவிட்டால் இன்னும் பெரிதாக வளரும் என்று யாரோ சொன்னதால் அப்படியே விட்டுவைத்திருப்பதாகச் சொன்னாள். இனி எப்போதும் வெட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அவன் நண்பன் அவளுடைய தலைமுடியின் நீளத்தை வைத்துக் கொண்டு எப்படி இவன் குடும்பம் நடத்துவான் என்று கேள்வி எழுப்பினான். அவள் கேசவதியின் மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறாள்; அவளைத் திருமணம் செய்ய அந்தக் குலதெய்வமே தன்னை அனுப்பியிருக்கிறது என்றான் இவன். இருந்தாலும் அந்த முடியை வைத்துக் கொண்டு தின நடவடிக்கைகளே சாத்தியமில்லை, தலைமுடியை வெட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னான் நண்பன். முடியை வெட்டக்கூடாது என்று சொல்லிவிட்டதாகத் தெரிவித்தான் இவன்.

மணப்பெண்ணோ திருமணம் நடக்கவிருப்பதே பெரிய விஷயம் அதற்குத் தலைமுடி பெரும் அவஸ்த்தையாக இருப்பதாகக் கருதி  தலைமுடியை வெட்டிவிடச் சொன்னாள். இருந்தாலும் இவ்வளவு தலைமுடி வைத்துக் கொண்டு திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட தன் ஆசை சரியானதில்லையோ என்று சில சமயங்களில் அவளுக்குள் தோன்றியது.

திருமணத்தன்று அவள் முடி பாதி வெட்டிவிடப்பட்டது. அதைத் தூக்கிக் கொண்டு நடப்பதே அவளுக்குச் சிரமமாக இருந்தது. அவள் முடியை வெட்டியதைக் கண்டவுடன் அவனுக்கு மிகவும் துக்கமாகிவிட்டது. திருமணம் முடிந்து அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். அவளுடைய தலைமுடியின் கனமும் அதனால் அவள் படும் சிரமமும் அவனுக்குப் பரிதாபத்தைக் கொடுத்தன. ஆனாலும் அவள் குலதெய்வத்தின் மறுபிறப்பு என்ற கருத்து மட்டும் அவன் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

திருமணத்தின் போது வெட்டிய அவள் தலைமுடி சில நாட்களிலேயே மீண்டும் அசுர வளர்ச்சி அடைந்தது. அவனுக்கு அவளைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அவனுக்கு ஒரு தெய்வத்துடன் குடும்பம் நடத்துவது போல் தோன்றியது. அது அவனை வேறோர் உலகத்திற்குக் கொண்டு செல்வது போல் இருந்தது. இருந்தாலும் அவளுடைய சிரமத்தைப் போக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுள் மேலோங்கியது.

அவன் அலுவலகம் சென்ற பின் ஒவ்வொரு நாளும் அவள் பல மருத்துவர்களைச் சந்தித்து தன் பிரச்னையைச் சொன்னாள். அவளுக்குச் சில மருந்துகளும் ஆலோசனைகளும் தரப்பட்டன. ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை. அலுவலகத்தில் அவன் தன் மனைவி குலதெய்வத்தின் மறுபிறப்பாகவே தான் கருதுவதாகச் சொன்ன போது சிலர் சிரித்தார்கள். அவன் அதைப் பற்றி அதிகம் வெளியில் பேச முடியாதபடி ஆகிவிட்டது.

அவள் நம்பிக்கைத் தரும் கோயில்களுக்குச் சென்றாள். அங்கு தவத்தில் இருந்த சில சாமியார்களிடம் தன் சிக்கலைச் சொன்னாள். அவர்களில் சிலர் அமைதியாகப் புன்னகைத்தார்கள். சிலர் கண் திறந்தும் பார்க்கவில்லை. ஒரு மலைக் கோவிலுக்குச் சென்றுவிட்டு ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தாள். ஒரு சாமியார் அவள் அருகில் வந்தமர்ந்தார். மனதில் கலக்கம் வழியில் தயக்கம் அம்மைக்கு என்ன சிக்கல் என்று கேட்டார். அவள் சிக்கலைத் தயங்கி தயங்கிச் சொன்னாள். அவர் ஒரு களிம்பை எடுத்துக் கொடுத்தார். அதைத் தடவினால் சரியாகிவிடும் என்று சொன்னார். அதைப் பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

தலைமுடியின் வளர்ச்சியால் அவளுக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மருந்துகளை வாங்கிவந்தாள். சாமியார் கொடுத்த களிம்பைத் தடவிவிட்டுத் தூங்கினாள். காலையில் எழுந்து பார்த்தால் தலைமுடி தங்க நிறமாக மாறியிருந்தது. அது மட்டும் இல்லாமல் முடியின் அடர்த்தியும் குறைந்து அளவாக இருந்தது. அவளது தலைமுடி அவளால் மிகவும் எளிதாகக் கையாள ஏதுவாகவும் இருந்தது. ஆனால் தங்க நிறத்தில் மாறிவிட்டதுதான் அவளுக்கும் அவனுக்கும் ஏற்க முடியாதபடி இருந்தது. அவள் களிம்பைத் தடவியதைக் குறித்து அவனிடம் பரிசீலித்திருக்க வேண்டும் என்று அவளைக் கடிந்து கொண்டான். அவளுக்கு அவளுடைய மதிப்பே தெரியவில்லை என்று எண்ணி குமைந்தான்.

இதற்கு மீண்டும் வைத்தியம் பார்க்கவேண்டும் என்று நினைத்தான். அலுவலகம் சென்றவுடன் அவன் எதிர்பார்க்காத உயர் பதவிக்கு அவனைப் பரிந்துரைப்பதாக மேலாளர் கூறினார். அவன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். வீட்டுக்கு வந்து மனைவியுடன் அந்தச் செய்தியைப் பரிமாறிக் கொண்டான். அவளுக்குத் தலைமுடியின் நிறம் மாறிய கவலைதான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. உடனடியாக ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். அதை கருமையாக்க செயற்கை நிறங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எதற்காக வருந்த வேண்டும் என்று சொல்லி மருத்துவர் அனுப்பிவிட்டார்.

இருந்தாலும் மனைவிக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. அதற்குரிய ஆலோசனைகள் யாராவது தருவார்கள், கவலை வேண்டாம் என்று சமாதானப்படுத்தினான். பல மருத்துவர்களையும் அழகுக் கலை நிபுணர்களையும் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றான். ஆனால் எதுவும் தீர்வாகாது என்று புரிந்துகொண்டான். அந்த சாமியாரை எங்குத் தேடிக் கண்டுபிடிப்பது என்று எண்ணி சோர்வடைந்தாள் அவள். மீண்டும் ஒரு முறை அந்த மலைக் கோவிலுக்கும் சென்றுவந்தாள்.

மனைவியின் வருத்தத்தை அவனால் போக்க முடியவில்லை. அவன் மனைவியின் முடியைத் தடவி இத்தனை அழகான முடி யாருக்குமே இல்ல. நீ ஏன் கவலைப்படற? என்று கேட்டான். இருந்தாலும் எனக்கிருந்த அந்தக் கறுப்பு முடிதான் வேணும் என்றாள் அவள். சரி வந்துரும் கவலைய விடு என்றான். உனக்கு இந்த முடி அதைவிட அழகா இருக்குது என்று சொன்னான். அவள் முறைத்துப் பார்த்தாள். அப்போது அவன் ஊரிலிருந்து அலைபேசியில் பேசினார்கள். அவனுக்குச் சேர வேண்டிய சொத்தை அவன் சொந்தங்கள் அவனுக்கே விட்டுக் கொடுத்துவிடுவதாக நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் கூறினார். அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. பாரு உனக்கு தங்க நிறத்துல முடி மாறின பிறகு எனக்கு பதவி உயர்வு வந்தது. இப்போ பூர்வீக சொத்தும் வந்துருச்சு. இப்பவும் ஏன் வருத்தப்படற? என்று அவளைச் சமாதானப்படுத்தினான். குலதெய்வம் கேசவதிதான் அவளுடைய முடியின் நிறத்தை மாற்றி அதற்கு ஒரு சக்தியைக் கொடுத்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டான்.

ஒரு நாள் அண்டை வீட்டுக்காரி அவளுடைய குழந்தையை எடுத்து வந்தாள். அப்போது அவள் கூந்தலுக்கு சாம்பிராணி புகைப் போட்டுக் கொண்டிருந்தாள். அண்டை வீட்டுக்காரி அவளருகே வந்து நின்று குழந்தைக்கு உடல்நலமில்லை என்றாள். அவள் குழந்தைக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தாள். சளி, ஜுரம்  என்றாள் அவள். மருத்துவரிடம் காட்ட இவள் கூறினாள். அவள் ஆம் என்று தலையாட்டிவிட்டு இவளது கூந்தலைத் தடவி மிகவும் அழகாக இருப்பதாகச் சொல்லிவிட்டு சாம்பிராணி வாசத்தை குழந்தையின் முகத்தருகே கொண்டு சென்றாள். அவளது தலைமுடியைத் தடவிய கையை தன் குழந்தையின் தலையிலும் தடவினாள். மிகவும் சோர்வாக இருந்த குழந்தை மெதுவாகக் கண் திறந்து பார்த்தது. உன் கூந்தலுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்குதுன்னு நினைக்கறேன். பாரேன் குழந்தை இவ்வளவு நேரம் கண்ணே முழிக்கல. இப்போ உடனே கண் திறந்து பாக்கறான், என்றாள் அவள். இவள் சிரித்துக் கொண்டாள். அவளுக்கு இவள் தலைமுடி மீது பொறாமையாக வந்தது.

அண்டை வீட்டுக்காரி சென்ற பின் பால் கொண்டு வருபவன் வந்தான். இவள் உள்ளே இருந்து பாத்திரத்தை எடுத்து வந்தாள். மாடு எங்கேயோ காணம போயிடுச்சுமா என்றான் அவன். ஒரு மாடுதான். நாளைக்குள்ள கிடைச்சா பால் கொண்டு வருவேன். இல்லைன்னா என்னை எதிர்பாக்காதீங்க என்று சொன்னான். இவள் கிடைச்சுடும் என்று சொல்லிவிட்டு அவன் பாலை ஊற்றிய பின் உள்ளே வந்துவிட்டாள். அவனும் புறப்படத் திரும்பியவன் வீட்டு வாசலில் அவளது தங்க நிற முடி ஒன்று கிடப்பதைக் கண்டு அதை எடுத்து வைத்துக் கொண்டான். அது அவனுக்கு ஒரு பொக்கிஷம் போலத் தோன்றியது. வீட்டுக்கு வந்தான். மாடு வந்துச்சா என்று மனைவியிடம் கேட்டான். இல்ல என்றாள் அவள். இந்தா என்று தலைமுடியை நீட்டினான். என்னாதிது என்றாள் அவள். பால் ஊத்தற வீட்டு அம்மாவோட தலைமுடி. தங்க நிறத்துல எவ்வளவு அழகா இருக்குது பாரேன் என்றான். அவளும் அதை ரசித்துப் பார்த்துவிட்டு பத்திரமாக ஒரு சிறிய பெட்டியில் போட்டு வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள். காணமல் போன மாடு வந்து நின்றிருந்தது. அவர்கள் இருவருக்கும் பெரும் ஆசுவாசமாக இருந்தது.

அவர்கள் மகன் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தான். புள்ளைக்கு வேலை கிடைச்சிடுச்சுன்னா நம்ம கஷ்டம் ஓரளவு தீந்துடும் என்று மனைவி சொன்னாள். ஆமா எத்தனையோ எடத்துக்கு போயிட்டு வந்துட்டான். இதுவரைக்கும் கிடைக்கல. இன்னைக்கு என்னாகுதோ என்று பால்காரன் சொன்னான். தூரத்தில் மகன் வருவது தெரிந்தது. இருவரும் வாசலிலேயே நின்றிருந்தார்கள். மகன் சிரித்துக் கொண்டே வந்தான். என்னாச்சுப்பா என்று அம்மா கேட்டாள். அம்மா வேலை கிடைச்சிடுச்சும்மா என்றான். அவன் அம்மாவுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. இப்போதாம்மா வேலைக்கு வரச் சொல்லி சொன்னாங்க என்றான். அவன் அப்பாவுக்குப் பெருமிதமாக இருந்தது. இரவு கணவன் மனைவி இருவரும் படுத்திருந்தார்கள். அந்த முடி கொண்டு வந்ததிலிருந்து எல்லாமே நல்லதா நடக்குதுங்க என்றாள் அவள். ஆமா நான் சொல்லலாம்னு இருந்தேன். நீயே சொல்லிட்ட என்றான் அவன். அந்த முடி முழுக்க நமக்குக் கிடைச்சா எவ்வளவு நல்லாருக்கும் என்றாள் அவள். ஆமா குடுப்பாங்க, தூங்கு பேசாம என்று சொல்லிவிட்டு அவன் உறங்கிவிட்டான்.

வெகு நாட்களுக்குப் பின் அவள் தாய்மை அடைந்திருந்தாள். இத்தனை நாட்களாக அவள் கூந்தலின் அவஸ்த்தையால் அவள் பட்டபாடு முடிந்து இப்போதுதான் அவளால் தாய்மை அடைய முடிந்திருந்தது. அதுவும் தங்கநிற முடி அவளுக்கு வாய்த்தப் பின்தான் அவளுக்கு தாய்மை பாக்கியம் கிடைத்திருப்பதாகவே அவள் கணவன் நினைத்தான்.

 அவளுக்குக் குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அவள் கிராமத்தில் குலதெய்வ விழா இருந்தது. அதற்குப் போயாகவேண்டும் என்று இருவரும் கிளம்பினார்கள். அங்குக் கோவிலருகில் அந்தப் பாட்டி அமர்ந்து கேசவதிக்கு யாராவது முடி காணிக்கைக் கொடுக்கணும். அப்போதான் அவ மனசாறும் என்று சொல்லியது அவன் காதில் விழுந்தது.

சட்டென்று மனைவியை கேசவதி வா கோயிலுக்குப் போகலாம் என்று அழைத்தான். அவனுக்கு அந்தக் குலதெய்வத்தின் கதையில் மூழ்கிவிட்டது போல் இருந்தது. கணவன் மனைவி இருவரும் கோயிலுக்கு வந்தார்கள். அவர்களின் அண்டை வீட்டுக்காரியும் அந்த விழாவுக்கு வந்திருந்தாள். பால்காரன் குடும்பத்தினரும் வந்திருந்தார்கள். காலையில் குலதெய்வத்திற்கு பால், பழம், பன்னீர், மஞ்சள், குங்குமம் அபிஷேகங்கள் நடந்தன. அவற்றை எல்லாம் பார்த்து முடித்துவிட்டு கோயில் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு குளத்தருகே மனைவியை அமரச் சொன்னான். குலதெய்வம் கேசவதிதான் அங்கு அமர்ந்திருக்கிறாள் என்று நினைத்து மனைவியைப் பார்த்தான்.

எதற்காக இங்கு அமர அவன் சொல்கிறான் என்று அவள் கேட்டாள். நான் உன் முடிய காணிக்கையா கேசவதிக்குக் குடுக்குறதா வேண்டிகிட்டேன். அதான் என்றான். ஐயோ வேண்டாம் என்றாள் அவள். இல்லை வாக்கு மாறக்கூடாது, தெய்வக்குத்தம் ஆயிடும் என்றான் அவன். இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரியும் பால்காரன் குடும்பத்தினரும் அருகே வந்து நின்றார்கள். வேண்டுதலை நிறைவேத்திடுங்க என்று அவர்களும் சொன்னார்கள். அவளுக்கு வேறு வழியில்லாமல் அமைதியானாள். மனைவியின் முடியைக் காணிக்கையாகக் கொடுக்க அவனே போய் ஒரு நாவிதரை அழைத்து வந்தான்.

அண்டை வீட்டுக்காரிக்கும் பால்காரன் குடும்பதிற்கும் அந்த முடியில் கொஞ்சம் கிடைத்தால் போதும் என்ற பேராசை நிரம்பி வழிந்தது. நாவிதர் கத்தி எடுத்து முடியை வழிக்கத் தொடங்கினார். அப்படியே கற்றையாக முடி கீழே விழுந்தது. அவள் அதை வருத்தமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அந்த முடி அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பெரிய பாம்பாக மாறி படமெடுத்தது. அண்டை வீட்டுக்காரியும் பால்காரக் குடும்பமும் குளத்தருகே நின்றிருந்த பலரும் தெறித்து ஓடினார்கள். அந்தப் பாம்பு அப்படியே வாயைப் பெரிதாகப் பிளந்து மனைவி அருகே நின்றிருந்த அவனை விழுங்கியது. அதைப் பார்த்த அவன் மனைவி குளத்தில் விழுந்து காணாமல் போனாள்.

 

 (சீர்-ஜூலை-செப்டம்பர் 2024ல் வெளியான சிறுகதை)

 

 

 

No comments:

பெண் மைய ஆளுமைகளான பெண் பாத்திரங்கள்: பேராசிரியர் பிரேமாவின் ’எங்களோட கதை’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பு

(இலக்கியவெளி இதழில் வெளிவந்த கட்டுரை) பெண்ணியத்தின் வரலாற்றை, போக்குகளை, தீர்மானங்களைக் குறித்து பல நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பிரே...