Wednesday 21 July 2021

குறுங்கதைகள்-சுவர் கவியும்

    



    சுவர்கள் சூழ்ந்த அந்த அறையிலிருந்து வெளியே வர இவளிடம் இருப்பது ஓர் ஆணி மட்டுமே. அதைக் கொண்டு அந்தச் சுவர்களைத் துளையிட முனைந்தாள். சுவர்களுக்கு அப்பால் நாய், பூனை, மனிதர்களின் குரல்கள் கேட்ட வண்ணம் இருந்தன. அந்தக் குரல்களைச் சென்றடைய இந்த ஆணி போதுமா என நினைத்தாள். இருந்தாலும் முயற்சியைக் கைவிடவில்லை. ஒரு முறை ஓங்கிக் குத்தியதில் சுவரில் துளை விழுந்தது. மீண்டும் துளையைப் பெரிதாக்கப் பார்த்த போது அவளே நுழையும் அளவுக்குத் துளைப் பெரிதாகிவிட்டது. அதில் வெளிவந்தால் மீண்டும் சுவர்கள் கவிந்துவிட்டன. மீண்டும் துளையிட முயற்சி.  மீண்டும் ஒரு பெரிய துளை. வெளிவந்தால் மீண்டும் சுவர்கள் கவிவது என தொடர்ந்தது. ஆனால் குரல்கள் நிற்காமல் கேட்டன. அருகிலும் தொலைவிலும் ஒலித்துக் கொண்டே இருந்தன. இவளுடைய முயற்சியை அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் இரைச்சலுக்கு இடையில் இவளுடைய ஒலி அமிழ்ந்து போய்விட்டிருக்கலாம். இவளும் விடாமல் முயற்சி செய்து ஒரு சுவர் அருகில் வந்தாள். அந்தத் துளை சிறியதாக இருந்தது. ஒரு பூனை எட்டிப் பார்த்தது. இவளைப் பார்த்துக் கத்தியது. இவள் கை நீட்ட இவளிடம் வந்துவிட்டது. இவள் மடியில் படுத்துக் கொண்டது. தூங்கிப் போனது. இனி துளையிட சக்தியில்லாமல் இவளும் தூங்கிப் போனாள். எழுந்து பார்த்த போது பூனை இறந்துவிட்டிருந்தது. துளைகள் மறைந்துவிட்டிருந்தன. சுவர்கள் கவியத்தொடங்கியிருந்தன.

2 comments:

திசைசொல் said...

ஒன்லைன் போல வைத்திருக்கிறீர்கள் போல.மீதிக்கதையை மனதில் வைத்திருப்பதும் சரிதான்.வாழ்த்துகள்.நல்ல திரில்லர் மூவிக்கான கதை

Mubeen Sadhika said...

நன்றி திசைசொல்

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...