Thursday 29 July 2021

குறுங்கதைகள்-மஞ்சள் பூ





உலகம் முழுக்க ஓர் அறிவிப்பு வருகிறது. துர்நாற்றம் வீசும் ஒரு பூ மலர இருக்கிறது. அது மலர்ந்தால் உலகம் அழிந்துவிடும். எனவே அந்தப் பூவின் மொட்டு இருக்கும் செடிகளை உடனடியாக அழிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. மஞ்சள் நிற பூவான அந்தப் பூவின் மொட்டு என நினைத்து உலகத்தின் அத்தனை மஞ்சள் நிற பூச்செடிகளும் அழிக்கப்பட்டன. எந்தப் பூ மலர்ந்தாலும் அதன் வாசத்தைச் சோதித்தனர். மலரின் வாசத்திற்கு முன் வீச்சமே நினைவுக்கு வந்தது. மஞ்சள் பூ மலர்வதற்கு முன் வெள்ளை மொட்டாக இருக்கலாம் என வதந்தி பரவியது. உடனே வெள்ளைப் பூச்செடிகள் அழிக்கப்பட்டன. மஞ்சள மட்டுமல்ல அந்தப் பூ சிவப்பு நிறத்திலும் மலர்வதாகச் சொல்லப்பட்டது. உடனடியாக சிவப்பு பூச்செடிகளும் அழிக்கப்பட்டன. அவ்வப்போது ஊதா நிறம் பற்றி சந்தேகம் எழுந்தது. அவையும் அழிக்கப்பட்டன. காடெல்லாம் தீயாய் மாறியது. வீடுகளைச் சுற்றி அனலாய் எழுந்தது. மலைகளில் அந்தப் பூக்கள் மலரலாம் என்றார்கள். மலைக்காடுகள் முழுக்க அழிக்கப்பட்டன. இனி பூச்செடிகளே இருக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பூக்களற்ற உலகத்தை எட்டுவது மிகவும் எளிது என்றார்கள். பூக்கள் பற்றி கருத்து தகவல்களும் அவற்றின் மீதான ஆர்வத்தைக் கிளப்பிவிடும் என அஞ்சினார்கள். அவையும் அழிக்கப்பட்டன. பூக்களையும் அவற்றின் வாசனையையும் அறியாத ஓர் பரம்பரையை உருவாக்கிவிடும் பெருமிதம் கொண்டார்கள். பூக்களைக் கண்டால் அழி என்பதே உலக வாசகமானது. பூக்களைப் போல் இருப்பவர்களும் மலர்களை நினைவுபடுத்துகிறார்கள் என குறை சொல்லப்பட்டது. பூக்களைப் போன்றவர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. பூக்கள் போன்றவர்களாக எண்ணி ஒடுக்குபவர்களும் ஆபத்தானவர்கள் என்றார்கள். அவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. அந்த அழிவை எண்ணியே இருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. காடுகளை அழிக்க ஆட்கள் இல்லை. செடிகளை அழிப்பவர்களின் எண்ணிக்கை அருகியது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூச்செடிகள் முளைத்தன. மஞ்சள் பூ மலர்ந்தது.

 

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...