மழை நீர்
ஆறாக ஓடியதைப் பார்த்து சிறுமிக்கு உற்சாகம் கரை புரண்டது. உடனடியாக ஒரு தாளை எடுத்து
படகு ஒன்றைச் செய்து அந்தத் தண்ணீரில் விட்டாள். அது மிதந்து போனது. உடன் அவளும் சென்றாள்.
சிறிது தூரம் போனவுடன் படகு பெரிதானது. இன்னும் கொஞ்சம் தூரத்தில் சிறுமி அமரும் அளவுக்குப்
பெரிதானது. அதில் அமர்ந்தாள் சிறுமி. இன்னும் சற்றுத் தொலைவில் பெரிய படகானது. கடலில்
போய்ச் சேரும் இடத்தில் பெரிய கப்பலானது. சிறுமி பெரும் ஆனந்தம் அடைந்தாள். கப்பல்
நல்ல வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. தொலைவில் ஒரு தீவு தெரிந்தது. அந்தத் தீவுக்குப்
போகலாமா என சிறுமி நினைத்தாள். கப்பல் அங்குச் சென்று நின்றது. சிறுமி கப்பலை விட்டு
இறங்கி தீவுக்குள் சென்று பார்த்தாள். இனிமையான பழங்கள் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன.
அவற்றைப் பறித்து உண்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தாள். மற்றொரு தீவு தூரத்தில் தெரிந்தது.
அங்குப் போனாள். அங்குப் பெரும் பாம்புகள் ஊறிச் சென்றுகொண்டிருந்தன. பயந்து வந்து
கப்பலில் ஏறிக் கொண்டாள். அவள் வேகமாக மற்றொரு தீவுக்குப் போனாள். அங்கு வெகு உயரமான
மனிதர்கள் இருப்பது தூரத்திலிருந்து தெரிந்ததால் அங்குப் போகவேண்டாம் என நினைத்தாள்.
அதற்குள் அங்கு உள்ளவர்கள் இவளைத் துரத்தி வரத் தொடங்கினார்கள். இவள் அச்சமுற்று அமர்ந்திருக்க
ஓர் உயரமான மனிதன் ஒரே பாய்ச்சலில் இவளைத் தூக்கி அந்தத் தீவில் போட்டுவிடுகிறான்.
கப்பல் அங்கேயே நின்றுவிடுகிறது. அவர்களைப் பார்த்து விட்டுச் செல்பவர்களை அவர்கள்
விட்டுவைப்பதில்லை என்று அந்த உயரமான மனிதர்கள் சொல்கிறார்கள். அவளை எரியும் தழலில்
வீச எத்தனிக்கிறார்கள். அவள் அலறி தான் தெரியாமல் வந்துவிட்டதையும் கப்பல் வளர்ந்தக்
கதையையும் சொல்கிறாள். அந்தக் கப்பலைப் பார்க்க வரும் ஓர் உயரமான மனிதன் அந்தக் கப்பலைத்
தொட்டவுடன் குள்ளமான மனிதனாகிவிடுகிறான். இதைக் கண்ட மற்றவர்கள் சிறுமி ஏதோ மாயாஜாலம்
செய்பவள் எனக் கருதி அவளை அந்தக் கப்பலில் ஏற்றி அனுப்பிவைத்து விடுகிறார்கள். கப்பல்
வேகமெடுத்து போகும் போது கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைக்கிறார்கள். அப்போது கப்பலின்
மேல் பகுதியில் ஒரு பறவை வந்து ஒரு ஓலையைப் போட்டுவிட்டுப் போகிறது. அதை எடுத்துப்
படிக்கும்போது அந்தக் கப்பலின் அடிப்பகுதியில் ஒரு சிறிய பெட்டியும் அதற்கான சாவியும்
இருப்பதாகவும் அந்தப் பெட்டியைத் திறந்தால் அந்தக் கடற்கொள்ளையர்கள் திசைமாறிச் சென்றுவிடுவார்கள்
என்றும் எழுதியிருக்கிறது. சிறுமி உடனே கப்பலின் அடிப்பகுதிக்குச் சென்று அந்தப் பெட்டியைத்
திறக்கிறாள். அதே போல் கடற்கொள்ளையர்கள் காணாமல் போகிறார்கள். இத்தனை அற்புதங்களையும்
பார்த்த சிறுமி தன் வீட்டுக்குச் செல்லவேண்டும் என நினைக்கிறாள். மீண்டும் அவள் இடம்
நோக்கி கப்பல் விரைந்தது. கடல் வரை கப்பலாகவும் அதனைத் தாண்டியவுடன் படகாகவும் அளவு
குறைந்தது. வீட்டின் அருகே வந்தவுடன் சிறுமி செய்த சிறிய படகாக மாறியது. சிறுமி தன்
வீடு சென்று நிம்மதியாக உறங்கினாள்.
No comments:
Post a Comment