Sunday, 24 May 2015

தற்காலத் தமிழப் பெண் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்


(சாகித்ய அகாடமி நடத்திய நாரி சேத்னா என்ற கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை)



ஆண்மை/பெண்மை என்ற பாலின வேறுபாட்டை ஏற்கமுடியாது என்று ஜூடித் பட்லர் என்ற பெண்ணியலாளர் கூறியிருக்கிறார்.
நாம் ஆண்/பெண் எழுத்தாளர் என்ற வேறுபாட்டைத் தவிர்க்கலாம்.
பொதுவாக எழுத்தாளர்கள் சந்திக்கும் சவால்கள் என்பதாகப் பார்க்கலாம்.
தமிழின் இலக்கியங்களைப் பின்தொடர்ந்த போது 5 சவால்கள் முக்கியமாக உள்ளது புரிந்தது

1.மொழி பற்றியது
2.பாலின அடையாளத்தின் சார்பானது
3.பின் நவீனத்துவ வடிவம்/உள்ளடக்கம் தொடர்பானது
4.அரசியலின் பின்னணி குறித்தது
5.தத்துவத்தை எதிர்கொள்ளலை முன்வைத்தது

I.மொழி:

1.தொல்மொழி, செவ்வியல் மொழி, நடப்பு மொழி-அடையாளப்படுத்துதல்
2.அகமொழித் தேடல்
3.வாசிப்பின் முறைமையை வகுத்தல்

1.தொல்மொழி, செவ்வியல் மொழி, நடப்பு மொழி-அடையாளப்படுத்துதல்

தொல்மொழி என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன் ஒரு சங்க இலக்கியப் பாடலைப் பார்ப்போம்:

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.

இந்தப் பாடல் உருவாவதற்கு முன் இருந்த மொழி எப்படி இருந்திருக்கும். ஓர் ஓசை, சந்தம், நயம், லயம், உணர்ச்சி எல்லாம் இருந்திருக்கும் அந்த மொழி தொல்மொழியாக இன்று பார்க்கப்படும். அது போன்ற ஒரு மொழி இந்தப் பாடலில் உள்ள செவ்வியல் மொழியாக வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் மொழியை அடையாளப்படுத்துவது ஒரு சவால்.

தொல்மொழியைக் கொண்ட படைப்பின் அவசியம் வெறும் அருங்காட்சியகப் பொருளாக மாறுதல் என்றாகிறது.
செவ்வியல் மொழி, இனப் பெருமையின் அடிப்படையாக, அடையாளமாக நிலவுகிறது.
நடப்புமொழி பெரும்பாலும் உள்ளீடற்று நிறமிழந்து செறிவிழந்து செயலூக்கம் இன்றி சருகாகிறது.

2.அகமொழித் தேடல்

''நனவிலி, மொழி போல் கட்டமைக்கப்பட்டுள்ளது'' என்ற லக்கானின் பிரபலமான வாக்கியத்தை நினைவில் கொண்டு மொழியைப் பின்தொடர்ந்தால் அகமொழி என்ற படைப்புமொழி பற்றிய தேடல் தமிழ்ப் படைப்புகளில் அதிகம் இல்லை.

அகமொழியைத் தேடுவதும் அதைக் கண்டடைவதும் அதற்கான அவசியத்தைக் கொண்டிருப்பது பற்றிய சிந்தனையும் முதன்மை சவாலாகக் கொண்டுவிடலாம்.

அகமொழியை அறிய நகுலன் எழுதிய ஒரு கவிதையைப் பார்க்கலாம்.

தன்மிதப்பு
-நகுலன்

யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலைச்
சீவிக் கொண்டிருந்தான்
அவனைப்போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது – அது
கூடத்தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் – இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்

இந்தக் கவிதையில் பென்சில் சீவுவதும் தலையைச் சீவுவதும் ஒன்றாக்கப்பட்டிருக்கிறது. பென்சில் சீவுவது இயல் உலகில் நடந்தால் தலையை சீவுவது அகஉலகில் நடக்கிறது. இப்படி தலையைச் சீவும் கற்பனையையும் தன்மிதப்பால் சமாளித்துவிட முடியும் என்று ஒரு பாத்திரம் எண்ணுவது கவிதையாகியிருக்கிறது. இப்படி ஒரு அகமொழிக்கானத் தேடலை படைப்புகளிலும் நமக்குள்ளும் ஏற்படுத்திக் கொளவது ஒரு சவால்.

3.வாசிப்பின் முறைமையை வகுத்தல்

இதை சசூரின் கருத்தாக்கத்தின் படி மொழியானது இடுகுறித்தன்மை வாய்ந்தது. குறி(sign) குறிப்பான், குறிப்பீடு என்ற இருமையால் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த இரண்டுக்கும் இடையிலான உறவு இடுகுறித்தன்மை வாய்ந்தது என்கிறார்.
இது சொன்மை, பொருண்மை என்ற தொல்காப்பியம் கூறும் கருத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய ஒன்று.
உதாரணமாக மரம் என்ற பதத்தை எடுத்துக் கொள்ளலாம். மரம் ஒலி மரம் கருத்து அல்லது பொருள். சொல்பவருக்கு ஒரு மரம் கேட்பவருக்கு ஒரு மரம். படைப்பில் ஒரு மரம். கிளைத்துப் பரவும் பொருள் போல் படைப்பிலும் பொருள் கிளைத்துப் பரவுகிறது.

வாசித்தலின் சொல்லாடல் உற்பத்தி செய்யும் படைப்பு மற்றொரு படைப்பாக இருப்பதை அறிதலும் அந்த வாசிப்பு முறையை பயில்தலும் அடுத்த சவாலாக இருக்கும்.

II.பாலின அடையாளச் சார்பு

1.பாலினம் என்பது ஒரு நிகழ்த்துதல்
2.உடல்சார் அனுபவங்களைப் படைத்தல்
3.வரலாற்றுப் போக்குகள் மூலம் பாலினத்தைப் புரிந்துகொள்ளல்

1.பாலினம் என்பது ஒரு நிகழ்த்துதல்

பாலினம் சமூகத்தால் கட்டமைக்கப்படுவது.
பாலியலின் தற்செயலான விளைவல்ல பாலினம்.
பாலியலை உறுதிப்படுத்தும் ஒன்றும் அல்ல.
பாலியலுக்கும் கலாச்சார கட்டமைவான பாலினத்திற்கும் அடிப்படையான தொடர்பின்மை உள்ளது.
இருபால் உறவின்(Heterosexuality) நிறுவனத்தை மையமாக வைத்து பாலினம் அறியப்படுகிறது.
ஆண்மை, பெண்மை, பிற பாலுமை, இவை எல்லாமே வேறுபாடுகளின் அடிப்படையில் உருவானவை.
ஓர் உடலில் இவை இருப்பதாக ஊன்றுவது ஓர் கற்பிதம்.
உடல் பொதுவானது. பாலுமைகளின் கூட்டுத் தொகுப்பு அது.
இதற்குக் காரணம் இருபால் உறவுதான் அதிகாரத்தையும் சொல்லாடலையும் உற்பத்தி செய்கிறது.
இந்தப் புரிதல் இருந்தால் பாலினத்தின் சிக்கலை எழுத்தில் தவிர்க்கலாம்.
ஆண் எதிர்ப்பு என்பது மட்டுமே பெண்ணியம் அல்ல.
ஜூலியா கிறிஸ்தவா சொல்லும் கருத்தாக்கத்தை வைத்து பாலினத்தை விளக்கினால் இன்னும் தெளிவடையலாம். குழந்தை தாயின் சேவையைப் பெற்றுக் கொண்டிருக்கும் போது அதற்குத் தன்னிலை என்பது முழுமையாக உருவாக நிலை உள்ளது. மொழியைக் கற்கும் போது தன்னிலை ஒன்றை உருவாக்கவேண்டியத் தேவை எழும் போது கலாச்சாரத்தால் நிர்பந்திக்கப்படும் போது கலாச்சாரத்தின் மொழியில் இருக்கும் பாலினத்தைத் தேர்வு செய்யும் நெருக்கடி ஏற்படுகிறது. தாயின் கண் கொண்டு தன்னைப் பார்த்தது தன்னிலை கொண்டு எல்லாவற்றையும் பார்க்கவேண்டியிருக்கிறது. தன்னை கட்டமைக்க பிறன்மையை நாடுகிறது. அப்போது கலாச்சாரத்தின் மொழியில் இருக்கும் பாலினத்தையும் தேர்கிறது. அந்த இடத்தில் பாலினம் என்ற நிகழ்த்துதல் தொடங்குகிறது. இதுதான் சமூகம் கட்டமைப்பதாக பாலினம் உள்ளதை அறிவது.
பாலினச் சார்பை அடையாளப்படுத்திக் கொள்வதுதான் முதல் சவால்.
2.உடல்சார் அனுபவங்களைப் படைத்தல்
லிங்கமையமொழியின் பிறன்மை போலாகத்தான் பெண்மைய மொழி இடம்பெற முடியும்.
இருபால் உறவின் போதாமை குறித்த மேலதிகப் பதிவுகளாவது படைப்பின் மந்தநிலையாக மாறிவிடும். பாலின உருவாக்கலைப் புரிந்து கொள்ளாமல் அதனால் ஏற்பட்ட விளைவின் மீது விமர்சனம் வைப்பதாக படைப்பது முழுமையாகாது.
இதை உணர்ந்து படைப்பது ஒரு சவால்.

ஜனனி-லா.ச.ராவின் கதை(பெண் தெய்வ புராணம்-பெண்ணின் புராணம்-தாய்மை அற்ற நிலை-பாலியல் விடுதலை)

3.வரலாற்றுப் போக்குகள் மூலம் பாலினத்தைப் புரிந்துகொள்ளல்

பாலினத்தின் பின்னணியில் இயங்கும் உளவியல் வரலாற்றுப் போக்குகளைக் கண்டுகொண்டு அதிலிருந்து விடுபடுவதற்கான புனைதலை முன்வைப்பது மற்றொரு சவாலாகிறது.

ஏனெனில் பாலினத்தை அடையாளப்படுத்த கூடா பாலியலிலிருந்து தன்பால்விருப்பு வரையான  பாலியல் சிக்கல்களை வரலாற்று ரீதியில் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும். இந்த உணர்தலுக்குள் செயல்படும் படைப்புகளை உருவாக்குதல் இருபால் எழுத்தாளர்களின் சவாலாக இருக்கும்.

டோனால்டல் பார்த்தல்மி, ஸ்நோவொயிட் என்ற நாவலை எழுதியிருக்கிறார். ஸ்நோவொயிட் என்ற புராணத்திற்கு எதிரான பகடி இது. பனி வெண்மை பெண், இளவரசனைத் தேடிச் சென்றடைவது என்பதற்கு பதிலாக கறுப்பு நிறப் பெண்ணையும் ஸ்நோவொயிட்டாகப் படைத்து இணையாக்கும் செயலை இந்தப் பிரதி செய்திருக்கிறது. இந்த வகையில்தான் பாலினத்தின் மீதான விமர்சனத்தை பகடியாக்கி வைக்கமுடியும் என்று காட்டிய ஒரு நாவல் அது.

பின்நவீனத்துவ வடிவம்/உள்ளடக்கம்

1.பல வகைமைகள்
2.பொருளின்மை-நவீனத்துவத்தின் சிக்கல்
3.படைப்பின் புரிதல் தன்மை

1.பல வகைமைகள்

பெருங்கதையாடல், போலச் செய்தல், பகடி, அழித்தெழுதப்பட்ட பிரதி, மாயாஜால நடப்பியல் போன்ற பல்வேறு வகைமைகள் பின்நவீனத்துவ இலக்கிய வகைமைகளாக உள்ளன. அந்த வகைமையில் தமிழில் எழுதப்படுவதுதான் சவால்.

போர்ஹேஸ் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கதைகளைத்தான் எழுதினார். ஆனால் அவருடைய எழுத்துகளுக்குள் இருக்கும் ஆற்றல் பல இலக்கியவாதிகள் அவரைப் பின் தொடர வைத்தது.

கோணங்கி, பிரேம், தமிழவன், போன்ற எழுத்தாளுமைகளின் புனைவுக்குள் இருக்கும் சொல்லாடலை புரிந்துகொள்வதன் மூலமும் பின்நவீனத்துவ புனைவுகளை உருவாக்கலாம்.

2.பொருளின்மை-நவீனத்துவத்தின் சிக்கல்

பொருளின்மையும் படைப்புதான் என்பது பின்நவீனத்துவத்தின் குணாம்சத்தில் ஒன்று.

பெக்கெட் அபத்தவாதத்தின் அடிப்படையில் படைத்தார். அவருடைய எழுத்துகளில் இருக்கும் பொருளாம்சம் எப்போதும் பின்நவீன குணாம்சங்களைக் கொண்டதாகவே இருக்கிறது.

3.படைப்பின் புரிதல் தன்மை

பின்நவீன இலக்கியங்கள் புரிவதில்லை என்ற தொடர் குற்றச்சாட்டு உள்ளது. இது அடுத்த சவால்.

இந்த இலக்கியங்கள் எந்த வகைமையில் புரியவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்றால் நவீன இலக்கியங்களின் வகைமையில் புரியவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் எந்த ஓர் உழைப்பும் இன்றி எல்லா படைப்புகளும் புரியவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் இந்த வகையான எதிர்பார்ப்புக்கு அடிப்படை வணிகம் சார் எழுத்துகளும் அந்த வகைமையை தீவிர இலக்கியத்திற்குள் செலுத்தும் இடைநிலை எழுத்துகளும்தான்.

அரசியல்

1.உடலரசியல் சார்ந்தது
2.உணர்வரசியல் சார்ந்தது
3.உயிர் அரசியல் சார்ந்தது
1.உடலரசியல் சார்ந்தது

உடலரசியல் என்பது மொழியானது உடலை கட்டமைப்பதும் உடலானது மொழியை புலனறிவாக மாற்றுவதும் என்ற தொடர் இயக்கம் குறித்த ஒன்றைப் பற்றியது.

உடலரசியல் என்பதைப் பற்றி எழுத்தாளர் ஜமாலன் ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருக்கிறார்.

இயல் உடல் என்பதாகப் பொருள் கொள்ளாமல் இதன் அரசியலைப் பார்க்கவேண்டும். அடக்கப்பட்ட வேட்கையின் அரசியல் அது.

டோரிஸ் லெஸ்ஸிங் எழுதிய 'கோல்டன் நோட்புக்' என்ற நாவல் ஐந்து நிறங்களைக் கொண்ட நூல்களை ஒன்றிணைத்தது போன்ற ஒன்று. கருப்பு நூல் போர் அனுபவங்களைப் பற்றியது, சிவப்பு நூல் மார்க்சிய கட்சியில் அந்த நாவலின் முதன்மை பெண் பாத்திரத்தின் அனுபவங்கள் பற்றியது, மஞ்சள் நூல் அந்தப் பாத்திரம் அப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பற்றியது நீல நூல் அந்தப் பாத்திரத்தின் சொந்த அனுபவங்கள் பற்றியது இந்த ஐந்தையும் இணைக்கும் நூல் பொன்னிறத்திலானது. துண்டாகிப் போன வாழ்வை ஒட்ட வைத்தது போன்ற அனுபவத்தைக் கொடுக்கிறது அந்த நாவல். உடலரசியலின் ஆழ்ந்த சிக்கல்களைக் குறுக்கு மறுக்காக அந்த நாவல் நெய்திருக்கிறது.

2.உணர்வரசியல் சார்ந்தது

உணர்வரசியல் என்பதை உணர்வின் பரிமாணங்களைப் போலச் செய்தலாக இணையானதாக ஒப்புமை உள்ளதாக உருவகிப்பதாக இலக்கியம் காட்டுகிறது.

அழகியல், ஒழுக்கவியல், நீதியியல் சார்ந்து உணர்வரசியல் இயங்குகிறது. அதன் தாக்கம் மற்றும் பாதிப்பு என்பதை இலக்கியம் பகிர்கிறது.
தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியலின் அடிப்படையில் வரையறுக்கலாம்.

உணர்வரசியலில் நுட்பமாக இருப்பது உள்ளுணர்வு. உணர்வரசியலின் வீச்சை அறிவது அடுத்த சவால்.

மார்சியா அரைட்டா என்ற கவிஞரின் ஒரு கவிதை:

பொத்தான்களும் எழுத்துகளும்

அழுது தள்ளலாம். அனுமதிக்கு அடையாளமாய்...
இரவில் மான் வந்து படுக்கையை மேயலாம்.
மொழி பெயர்ப்பை எழுதுவது கடிதங்களிலிருந்து விலகவும் விடுபட்டு ஒதுங்கவும்
காஃபி மேஜையின் மீதிருக்கும் நூல்கள் பேச்சைப் பரிந்துரைக்கின்றன
முக்கியமற்றுப் போவதை என்னால் ஏற்கமுடியாது. ஒருவரை ஒருவர் நினைவூட்டிக் கொளவோம்
தூண்டப்படுதலுக்காக, நம் வாக்கியங்களை முடிக்க, தெளிவாக
எழுத. நூல்களும் தீவுகளும் காலணிகளும் கோட்டைகளும்.
நான் எப்போதும் அனாதையாக உணர்கிறேன்.

இந்தக் கவிதையில் இருக்கும் எல்லாப் பொருள்களுமே தனிமையின் உணர்வை குறியிடுபவை போல மாற்றப்பட்டிருக்கின்றன. அல்லது அந்தப் பொருள்களின் தனிமை போலவும் இதை வாசிக்கலாம். பொருளுக்கும் மனிதனுக்கும் இடையிலான வேறுபாட்டைக் களைந்த நிலை இது. இந்த வகையான தனித்த உணர்வுக்கான அரசியலை அறிவது ஒரு சவால்.

3.உயிர் அரசியல் சார்ந்தது

உயிர் அரசியல் என்பது பொருளாதார அரசியல் ஓட்டங்களினால் வாழ்தல் உருமாறுவது பற்றியது.

இயல் வாழ்வும் அரசியல் வாழ்வும் கலந்த நிலையை உயிர் அரசியல் எனலாம்.
இலக்கியத்தில் தமிழில் புறம் சார்ந்து பார்க்கப்பட்டது.
மனிதனுக்குக் கீழே இயற்கையை வைப்பது அரசியல். மனிதனுக்குக் கிழே மனிதனையும் எல்லா உயிர்களையும் வைப்பது பற்றி அறிவது உயிர் அரசியல்.

உயிர் அரசியல் சார்ந்த படைப்பு, அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் ஒன்றாக இருக்கும். இதைக் கைக்கொள்வது ஒரு சவால்.

சங்க இலக்கியத்தில் திணை என்பது உணர்வின் எதிரொலிப்பாகவும் இயற்கையை மொழியில் உள்வாங்குவதாகவும் உள்ளது. மனிதன் இயற்கை மீதான அதிகாரத்தை மொழி வழியிலிருந்து தொடங்கியிருப்பதும் இயற்கைக்கான இடத்தையும் விட்டுக் கொடுத்திருப்பதும் இந்த சங்கப் பாடல்களில் காணமுடிகிறது.

தத்துவத்தை எதிர்கொள்ளல்

1.படைப்பு உருவாக்கும் தத்துவம்
2.மதங்களைக் கட்டுடைத்தல்
3.அறிவியலைப் பகுத்தல்

1.படைப்பு உருவாக்கும் தத்துவம்

காஃப்காவின் இலக்கியத்தை ஆய்வு செய்யும் ஜில் டெல்யூஜ் அதை ஒரு சிறுவாரி இலக்கியம் என்று கூறுகிறார்.

அதற்கு என்ன காரணம் என்றால் அது பெரும்பான்மை இலக்கியத்திற்கு எதிரான அரசியல் கூறுகளைக் கொண்டிருக்கிறது என்பதால்.

இது போன்ற கூறுகளை மௌனியின் கதைகளில் இருப்பதாக ஜமாலன் எழுதியிருக்கிறார்.

படைப்பு இத்தகைய ஓர் தத்துவத்தை முன்வைப்பதற்கு என்ன காரணம் என்றால் எழுத்தாளரின் அனுபவம், மொழி, வடிப்பு என்று கூறலாம்.

இந்த வகையான தத்துவ அறிமுகத்தைப் பெற்று அதை படைப்பில் எழுதுவது இங்கு ஓர் சவாலாக இருக்கிறது.

2.மதங்களைக் கட்டுடைத்தல்

மதங்களை கட்டுடைத்தல் என்பது தத்துவத்தின் முக்கியச் செயல்பாடு.
இந்தச் செயல்பாட்டில் ஈடுபடுவது சமூக வரையறைகளை மாற்றிப் படைக்க உதவும். அதற்கான முனைப்பு மிகவும் அவசியம்.

இன்றைய சூழலில் பெரிய சவாலாக இருப்பது மதங்களின் சொல்லாடலைத் துல்லியமாகப் புரிந்துகொள்வதும் கையாள்வதுமாக இருக்கிறது. மதச்சார்பின்றி படைப்பை உருவாக்குதல் என்ற முயற்சிதான் சவாலாகக் கொள்ளமுடியும்.

சல்மான் ருஷ்டி சாத்தானிக் வெர்சஸ் என்ற நாவலை எழுதியது மதக்கட்டுடைத்தலாக உள்ளது. இஸ்லாமிய வரலாற்றின் மறைவுப் பக்கங்களை எழுதி அம்மதத்தின் மீதான வாசிப்பை அந்த நாவல் முன்வைத்தது.

3.அறிவியலைப் பகுத்தல்

அறிவியலின் எல்லையையும் அதற்குள் செயற்படும் கருத்தாக்கத்தையும் தத்துவ ரீதியில் பாகுபடுத்திப் பார்த்தல் அடுத்த ஒரு சவால்.

அதில் இன்றைய இணையதளம் வரையிலான செயற்பாடுகளைக் கொள்ளலாம்.

மனிதத் திறனின் மதிப்பீடுகளையும் உள்ளடக்கி உருவாக்கும் அறிவியலைத் தத்துவம் மூலம் பகுத்தாய்வது பெரும் விளைவுகளைத் தரும். இத்தகைய சோதனையை இலக்கியங்களிலும் மேற்கொள்வது சவாலாக இருக்கும்.

இந்த சவால்களை எதிர்கொண்டால் செழுமையான கூர்மையான படைப்புகள் சாத்தியம்.

















Thursday, 16 January 2014

மரம் விளையும் பதம்






















‘துணையின்றி தனித்திருக்கும் அகம்
முன் நிற்கும் விருட்சமாய்’
‘கிளை கதைக்கும் பரவலில்
முகிழ்க்கும் தண்மையாய்’

‘கொல்லும் வெறுப்பாய் பூத்துவிட்ட
நிதியை காட்சியில் வைக்க’
‘துளைக்கும் வண்டும் இனிதென
வாழும் கூட்டை கொண்டே’

’இச்சையாவும் வீண் எனும் பயிராய்
களையாகி சொக்கியதே’
‘விழைவும் ஆற்றலும் உள் கனன்று
மலர் எனவும் கனி எனவும் முளைத்ததுவே’

‘உணர் அறி புலன் கோரும் யாவும்
குறையென பெற்றிடின்’
‘தாவும் மந்தியும் மிழற்றும் கிள்ளையும்
தஞ்சமென அணைக்கும் பேற்றுடனே’

‘உற்றும் சுற்றும் விலக்கி தன்னிலை
விரிக்க வந்து நின்ற தன்மையதே’
‘முன்னிலையில் செவியுற்று நிலைத்த
கோலமாய் தாங்கிய வேரென’

‘தொடர்பும் அணுவாய் தொடரலும்
துகளாய் மாறும் பரிமாற்றத்தில்’
‘கானமும் பாரமாய் கூவலும் 
துயரினதாய் ஆற்றுவித்தலின் பொருளாக’

‘உரியதும் கொள்ளாத உரித்ததும்
நிலையாத கர்மமென ஆகி’
‘தினையாக உள்ளதுமாய் தகையும்
திறத்தினதாய் தகவு கொண்டே’

‘ஆவினோடு அனைத்தும் இழந்தும்
கதியில்லா தடத்தில் எதிர்வருமே சுவனமாய்’
‘ஒற்றையாய் நிற்றலும் தோப்பின்
தாவரமாய் மிகஉரைத்து போக்கிய துயராய்’

‘விளையும் பழமாய் காத்திருக்கும் 
சுகமென தான் தங்கும் தன்னிலை’
‘முளைத்து இலைவிரித்து பரவி
உருக்கும் குளிரினதாய் தன்மை’

‘பருவம் காணும் கடந்ததும் உருவழிந்த
திண்ணமாய் மெய் மிக விரும்பி’
‘வித்தாய் உறங்கி நெடுவெண் கிடையாய்
நின்று நிகழ்ந்த உரமாய்’

‘குருதியும் நீராய் உண்டு வளர்ந்து
புனலில் செழித்த காயமுடன் சேர்ந்து’
‘பச்சையும் வனமாய் பூத்திருக்க தனிப்
பெரும் தண்டாய் நிலைத்திருக்கும் களம்’

‘குறையும் குற்றுயிரும் விளம்பிய கிளவியாய்
முகர் சுருங்கி குனிந்திருக்க’
‘நிறையும் பெருமையும் பேறாய் பெற்ற
செவியோடே ஞாலத்தில் விழித்திருக்க’

‘உறவற்ற சித்திரத்தின் வண்ணக் கோடாய்
விரிந்து பொருள் கூடும் மையத்து’
‘இனமும் சாறும் இருந்தும் தனிமை
இலங்கிய வெளியில் வளியாய் பேச’

‘துண்டான உள்ளமும் துடிக்கும் 
சிந்தையும் ஒன்றாய் கருகி விழ’
‘உணர்வும் நீர்மமாய் உணவும் ஆவியாய்
அறிந்திட்ட நிலையில் எளிதின் விருப்பாய்’

‘அறமெனும் புனைவும் பகர்ந்திட்ட காதையில்
பாவையாய் ஆடும் விளக்கத்தைச் சொல்ல’
‘பூக்கும் காயும் நகைக்கும் கூத்தில்
ஆதாரம் காணும் திருச்சுவையாய் பெயர்க்கும்’

‘எரிந்த நெஞ்சும் கரிந்த உடலும் 
காட்சியின் அங்கமாய் மொழிந்திருக்க’
‘பூத்த நெருப்பும் உள்கவிய தண்மை
போலே நகைக்கும் தரவாய் சொல்லே’

‘என்பும் இனி தண்டாய் மெலிய
காலும் நிலமதில் படர ஞாயிறைத் தேடிய முகத்துடன்’
‘மண் இணையும் கல்லாய் மாற உணர்வற்று
கூடி உறியும் நீரும் ஆவியாய் பிரிய’

‘இடம் மாறும் இனத்தின் பால் எனவே
துன்பமும் நீளா இம்மையை கடந்து’ 
‘இன்மையும் நிகராகி இச்சையற்று விலக
துளியன்ன பொருளாய் இகத்தில் கரைந்த’


'காவ்யா' பொங்கல் மலரில்(ஜனவரி-மார்ச் 2014) வெளியான எனது கதை கவிதை.







Wednesday, 9 January 2013

அழித்தனன் அழிந்தனன்


கிறிச்சீடும் கிள்ளை மொழியோ பிறழும் ஆயுத ஒலிகேட்டு. வாளும் வேலும் பழஞ்சேனைகளுக்கானதால் புதிதாய் பொலியும் எடையில்லா பருமையும் கொண்டு விரைந்து நிகழும் ஆற்றல் உள்ளதுமான சிறு கை எந்திரம் படைத்து ஏமாப்பு கொள்ளத் துணிந்த கருமமதில்.

குருதி வழிந்த சிறு நீள் வட்ட உருளை கொழித்திருக்கும் இரும்பின் மணம் கலந்து நெகிழ்வைக் கூட்டிடும். செம்மையும் கருமையும் இறுகும் நீராய் திவலைகள் வீழ்ந்திருக்க. உயிர் பாய்ந்த சுவடுகள் தெறித்ததின் சான்றுகள் மறைந்த சதுக்கமாய் அவ்விடம் உறையும். ஆயுதம் ஒரு கணம் கண் சிமிட்டி நகைக்கும். மரணம் பறித்த உவகையில் துள்ளும். விசையிடம் கற்று வேகத்தில் பயின்று இலக்கை எட்டும் வித்தை தெரிந்ததில் அழிவும் அற்புதமாய் அடங்கிற்று. வினையும் எதிர்வினையும் அடர்ந்த இயல்பின் தன்மையாய் ரசம் ஆடிற்று. இன்மையாக்கலை நிகழ்த்திய கருவி வகை பிரிப்பில் சேரும். படைகலனின் மூலம் தேடி பாதை விரியும். கிளியும் குரலெடுத்து இயம்பும்:
1.சிறுகுறு வகை: குறை தூரம் கடக்க வல்ல ஆற்றல். குறி தாக்கும் துல்லியம். ஒரு கணத்தில் சில தசம அடி தாண்டும். பொருளில் படும் இடம்சார்ந்து எடை மாறும்.
2.சிறுபெரு வகை: நீட்டலும் இன்றி குறுக்கலும் அன்றி இடை பாயும். அடையும் எல்லை கழுகுக் கண் பாவை. நாழிகை நுனியில் பல தூரம் கடக்கும். நிலை எட்டும் அம்பின் கணையாய்.
3.நீள் வகை: கண் கொத்தும் குறிப்பை கணத்தில் சேரும் கலன். எதிர் நோக்கும் காணா இமைப்பில் மறையும். நிறை கூடும். தொகை பெருக்கும்.
4.இயங்கும் எடை வகை: குடி அழிக்கும் நோக்கில் மலையும் காடும் தாண்டி செயல்படும். குழுவாய் முயன்று தகர்க்கும். கோட்டையும் உடையும். இறுமாப்பு பெருக.

கிளி கடிந்தது வன்மத்தில். அலகும் கூர்ந்து செப்பும். மருளும் மாந்தர் பகை போக்க வெளி சமைத்ததோ. உந்தும் தள்ளும் உடன் மடியும் இரையதனை கண்ட துதி தேவையோ. சிறு குழவி கரம் பற்றினாலும் உறுதியாகும் சாக்காடு. பயனிலா போகமாய் ஆக்குவது ஏனோ.

கிளி விளி கேட்டு சினமும் இறுக்க வதியும் கூட்டை நொறுக்கும் ஆர்வம் கிளம்பும். உடன் கொஞ்சும். பைங்கிளி அகத்தின் ஈரம் காட்டும். மானமில் செயலதனை சுட்டும். கிளியைக் கொல்ல ஆயுதம் ஏந்திய வீரமோ என இளிவும் தாக்க முதிரா சலிப்பு சேரும்.

தத்தை மீண்டும் தொடரும். கொலைத் தொழில் நடந்தேறும் குறிப்பதனை உற்று நோக்கும். துறவின் மாட்சிமை பொருந்திய மூப்பின் உடல் சிதைந்ததை சொல்லி விழிநீர் பெருக்கும். மதம் மயங்கிய களிற்றின் நிலை போல் அழுத்தும் அலகை பற்றியதும் மாறிய தீரத்தை கண்ணுற்ற பிணி தீருமோ.

ஆயுதம் தாங்கிய மரணம். உயர் இடம் மாறி திடமாய் வல்லடியுறும். நிகழும் எனும் நேரம் சார் பொருளை மறு உருவாக்கல் செய்யும். விதிகளில் சிக்காமல் துடிப்பை நிறுத்தும் சங்கதி அறிய. ஆளும் பிம்பம் மறைய. கூர்மை சிதைக்கும் ஆடியை. நொறுங்கும் கண்ணில் உடல், பொருள், ஆவி இழக்க.

இறப்பும் உயிர்ப்பும் வேகத்திலும் கூர்மையிலும் குறிபார்த்தலிலும் இறுதி காணும் திடுமென்று உயிர்த்தலற்ற பொழுதும் எட்ட. உந்தித் தள்ளிய உந்தலின் வேட்கை உயிரின் விருப்பம் அறிந்திருக்க.


கொடியதாய் குத்தியும் கிழித்தும் உட்புகும் திறத்தினதாய் திடம் கொண்ட உலோகம் இயங்க. சிறுபொறி பறக்கும். ஒலியும் வெடிக்கும். தூரத்தின் வகையில் சாவும் இடம் செறிந்து
1.முனைதள்ளி: அணுகலும் அகலலும் இன்றி மத்தியில் நிலை கொண்டது.
2.முனையவெளி: குறுகிய இடைவெளியில் ஸ்திரமானது.
3.முனைபுள்ளி: வெளிப்பட்டவுடன் வாகை சூடும் இடம் பற்றியது.

கணத்தில் பொழியும் பண் நிறை கோளங்களை அரசனும் பவனி வர துளைத்தது ஒன்று. விழி நீர் பெருக்கி துவண்டனன் சிறு கொடியாய். படையும் அறியவில்லை காரணமும். முன் செலுத்தும் வித்தை கொண்ட மாயவகை சார்ந்த திட்டமதில். எஃகின் வலி பெருக்கும் கூர்மை விசையது. பேய் வெண்தோல் பிளந்து செவ்வரி ஓடி ஊற்றெடுத்தது. அதிர்ந்த துளிகள் தெறித்தன அங்குமிங்கும். நீரன்ன வெம்மையில் திரண்ட ஒழுகலாய். கொட்டும், ஊற்றும் செம்புனலென. மண்ணுடன் தான் கலந்த கறையாக செங்களம் விரித்து ஈர்க்கும். நாறும் மணம் புலவித் திறத்தை புகைத்தது. வெறியின் பித்தாய் வீசியது. காற்றும் கலந்து இறுகியது. நீர்த்ததும் வளி போன்றதும் வெளியேறியதில் கலந்தது துடிப்பு. விழி காணா படலம் ஆவியின் வெம்மையாய் பரவும். வலிந்து பறித்த ஆற்றலும் நகைத்து கோண. முள்ளன்ன தொடுவலி உணரா மேன்மை பொறிகொண்ட பேரானந்தமாய்.

ரௌத்திரம் பழகிய கிளி செய்வதறியா பதைப்பில் மிழற்றி களிப்பும் பொங்கும் உவகை போல் கொப்பளிக்கும் சுரப்பும். செந்நிறம் பெற்று அனல் கொண்டு தகிக்கும். வேறு இடமும் புதிய கணமும் நேர்வித்த விளைவில். பல்லுயிர் பெருக்கி எண் கொடுக்க. உருள் திரள்கள் எத்தனை எத்தனை என விண்மீனாய் சிமிட்டும். அரசும் வீழ கொடியும் காய, ஆதியின் மகனும் வாழா நிலையதனை காணவும் உளதோ இன்னும். இனிக்கும் சுவை கூட்டும் நிலையற்ற வாழ்வதனில் இருப்பதும் இருப்பதான கருத்துமாய் இடையீட்டில் ஊசலாடி மௌனம் கவ்வும் சூதில் முற்றும் பெற ஆகிவந்த கருவி.

பிள்ளைப் பட்சி தீட்டும் உபாயம் மறைபொருளாய் விளங்கிற்று. எப்படியும் அக்கருவி எடுத்து பறந்தோடும் வித்தை ஒன்றை புனைந்தது அது. தன் இனம் சேர்த்து படை திரட்டி மீளும் திறமாய் அது இருக்க. பழி தீர்க்கும் மோகம் உன்மத்தமாகி நுடங்கும்.

கிளி உடைத்தது கூடு. தேடிப் பறந்ததது கலனுக்காக. அவள் இடம் வந்து சேர கண்டது காட்சியை.

தந்தையும் தனயனும் தலைவனும் வெற்றுடம்பாய் நீண்ட பொழுதில் தன் உறவு விடுத்த அவள் மயங்கும் புலனாய் கொண்ட கலன். நன்றி உணரா நன்றறிந்து அழுத்திய பொறியில் நில்லாது பொழிந்த கூர் வட்டுகள் சாய்த்தன விநாடியில். தீதும் இன்றி தீயதாய் உருவமைந்த எதுவும் இன்றி நன்றாய் மாறிய திறமும் இன்றி.

ஆய்ந்தறிந்து தகவமைத்த சான்றோனும் மரண ஆட்டம் முடிவிலா தொடரானதாய் ஆற்றாமல் தன் பெயர் ஈந்த கருவியை ஒழிக்கும் புது விடை காணாது திரும்ப, கிளி அழுத்தி விசை தெறித்து மூச்சையும் நிறுத்தினனே.



Thursday, 12 January 2012

பெண்:புராணம்-பிளவு-தன்னிலை:இறுதிப் பகுதி

3.தன்னிலை

சுயமானது தன்னிலையாக கட்டப்படும் என்றும் மற்றமையாக அது வெளிப்படும் என்றும் நனவிலியை மையமிழக்க வைத்து சிதைவடைந்த உடலை தந்தைமை கலாச்சாரத்தில் புனைவதை உறுதிப்படுத்தும் என்றும் கூறி பெண்மையின் தன்னிலையை காணாமல் செய்துவிட்ட உளவியல் ஆய்வும் உண்டு. மணம் செய்யாத பெண் உடல் பொருளற்றிருப்பதாக பயனிற்றிருப்பதாக அறவுரை வழங்கப்பட்டு விதிகளை பெருக்கிய பல நூற்றாண்டு பெண்மையின் தன்னிலையும் பேசும். பெண் தன்னிலை அது கட்டப்படுவதற்கு முன்பான விதிகளால் ஆளப்பட்டிருக்கும்[1]. சமூக வாழ்நிலையில் வாழமுடியாத, வாழ இயலாத தன்மையையும் கொண்டிருக்கும் தன்னிலை என்ற பரப்பில் தனித்த உயிராக நிலை பெற்ற, விலக்கப்பட்ட, உள்ளிருப்பாக மாறும் பெண்மையின் ஒழுங்கமைவு, பால் என்ற பதத்தின் தளத்திலிருந்து கொள்ளப்பட்டிருக்கலாம்.

பாலின் மதிப்பு பாலினமாக இயல்பாக்கப்பட்டிருக்கிறது. பால் என்பது கலாச்சாரத்தில் பாலினமாக மறுதலிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாலை நேரடியாக புரிந்துகொள்ளப்படுவதை விட பாலினமாக புரிந்துகொள்ளப்படுவதுதான் நடப்பில் இருக்கிறது. பால் ஒரு கதையாக அதீத கற்பனையாக புனைவாக இருப்பதாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. தன்னிலை என்பது பாலின உறவில் பிணைந்து வருகிறது. பாலினமாக கொள்ளப்படுவது முதலில் தன்னிலைக்கு முன்பாக செயல்பட்டு அது கோரும் தன்னிலையாக பாவிக்கிறது. மனிதம் உருவாவதற்கு முன்னரே பாலினம் செயல்பட்டுவிடுகிறது. பாலினமாக பெயரிடப்படுதலே பாலின விதிகளை நிர்ணயித்துவிடுகின்றது. மொழி அல்லது சமூகம் அல்லது மொழியாடல் தன்னிலையில் பிரதிபலிக்கும் போது தன்னிலையின் மீமெய்யியல் வலுப்படுகிறது. இங்கு தன்னிலை கட்டப்படுவதாக கொள்ளப்பட்டால் இந்த கட்டமைப்பில் தன்னிலையும் அதன் செயல்பாடும் தோற்றம் கொள்வதாக வலியுறுத்தப்படுகின்றன. இந்த வலியுறுத்தலில் பால், உற்பத்தியும் செய்யப்படுகிறது; உறுதியின்மையும் ஆகிறது.

பெண்மை என்பது பொருளாம்சத்திற்கும் பொதுமைக்கும் பிரதிநிதியாக ஆக்கப்படுவது சிக்கலானதல்ல. மாறாக பெண்மை உருவுக்கும் பொளுக்கும் பொதுமைக்கும் தனிப்பட்டதற்குமான இருமைகளுக்கு வெளியில் இருப்பதால் சிக்கலாகிறது[2].

சதை தொகுப்பின் அம்சமாக பெண் தன்னிலை வார்க்கப்பட்டிருக்கிறது. அல்லது சதை தொகுதிகளாக சதை பிண்டங்களாக பெண்மை பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. வளையல்களாகவும் அவற்றின் ஒலிகளாகவும் அவற்றை அணிவதன் மகிழ்வாகவும் அவற்றின் வரலாறாகவும் அவற்றின் உறுப்பாகவும் பிளக்கப்பட்டிருப்பதை நுண்மையுடன் மறைக்கப்படும்[3] இடங்களும் உண்டு. பொருள்வயின் பிரிந்தாலும் போர்வயின் பிரிந்தாலும் உடல் மெலியும் நலியும் காமத்தின் பாற்பட்ட பிரிவாக மாற்றிப் பார்க்கும். பேராசை பிம்பமாகவும் குடும்பத்தின் இணைப்பு கண்ணியாகவும் அழும் கண்களாகவும் கணவன்களை பிணைத்திருக்கும் அங்கமாகவும் ஆண் துணை சேர் வாழ்வை பெரிதும் விரும்புவதாகவும் இருக்கும் பெண் தன்னிலையாக வகுக்கப்பட்டிருக்கும். பெண்மை என்ற உடல் பாலியல் தன்னிலையாக வேர்கொண்ட அழுத்தம்தான் புனைவாக பொருளாக சொல்லாக மொழியாக வரையப்படும். எதிர்பால் விழைவுகள் கொண்ட விதிகளுக்கு உட்படுவது, அருள் பாலிப்பதும் அருள் பெறுவதும் நிறைகொள் உணர்வாய் இருப்பது, என்று பெண் தன்னிலை உருக்கொள்கிறது. நகையும் பொய்யாய் உணர்ச்சியும் மிகையாய் செயற்கையும் பகட்டும் மீதூர பகடையாய் பரவசப்படுவதும் பெண் தன்னிலையின் பாவனைகள் புகலப்படுகின்றன. உடல் மேன்மை பாராட்டும் அரூபமாக பாவையாக பின்னியிருக்கும் பெண் தன்னிலை அதிர்ச்சியான இன்பப் பீறிடல்களையும் நிகழ்த்துகிறது அவ்வப்போது. சேலை கட்டும் அதியம் ராமர்களைத் தேடும் செயபாட்டுத்துவம், புணர்வின் மீறல்களை அடுக்கும் மயக்க பிதற்றல்கள் என பெண் தன்னிலை புதுக் கோணல்களைத் தீர்மானிக்கிறது[4]. மணபந்தம் மீறிய உறவுகளின் தேவைகளை நிர்ணயிப்பதும் உள் புழுங்கும் வேட்கையின் பொங்குதல்களை மடைமாற்றுவதும் தோற்பாவைகளின் நிழல்கூத்தாடிகளாய் மரபை இடமாற்றம் செய்வதும் பெண் தன்னிலையின் நெருக்கடிகளுக்கான பதில்களாக இருக்கின்றன. தெய்வம் தொழுது கொழுநன் தொழுது மழை பெய்விக்கும் இயற்கை விதி மீறிய ஒழுக்கம் புலன்சார் இறையாய் அடைக்கப்பட்டுவிட்டதால் இனி காமத்திலும் காயத்திலும் புரண்ட புழங்கிய வெளியாய் தன்னிலை விடுவிக்கப்படுகிறது. பொது உடலாக தனி உடல் தன்னிலையில் இணைக்கப்பட்டிருக்கிறது. பெண் என்பதே இல்லை என்ற முன்தீர்மானத்தில் தன்னிலையை கட்டமைப்பது லிங்கமையவாதத்தின் ஒழுங்கமைவுதான். அதனால் உருவாகும் பெண் என்பதே ஒரு பன்மைத்துவமாக கொள்ளப்பட்டால் இருமை பிளவை தவிர்க்க முடியும். எல்லா மனப்பிறழ்வுகளையும் இடிபல் முக்கோணத்திலிருந்து விலக்கிவைக்க முடியும். ஆனால் பெண் என்பதே பெண்மை என்ற விதிகளிலிருந்து கட்டமைக்கப்படுவதாக மாறுகிறது. பொம்மை விளையாட்டின் குழந்தையான சிறுமியிலிருந்து பெண் உடலாக மாற்றம் பெறுவதைத்தான் பாலினத்தின் சிக்கலாக தன்னிலையின் உருவாகலாக தொடரப்படுகிறது. மழலை பேசும் சிறுமியின் தாயாக மாற்றமடையும் அடையாளம் தன்னிலையை சங்கேதப்படுத்துகிறது.  எதிர் பாலுறவின் அடிப்படையில் உருவான தன்னிலை ஆண்மையின் அடிப்படையில் பெண்மையை முன்னிலைப்படுத்துகிறது. அண்ணன், தம்பிகளுக்கும் அக்கா, தங்கைகளுக்கும் என்று உறவுகளுக்கு இடையில் பாரபட்சம் காட்டப்படும் உடல் முன்னுரிமையின் அடிப்படையில், சிறுமியின் உடல் பெண்ணின் உடலாக விதிகளின் அடிப்படையில் முன்தீர்மானிக்கப்பட்ட விதிகளின் உடலாக மாற்றம் பெறுவது படைப்பின் சிறுகளமாகிவிடுகிறது[5]. பெண் தன்னிலை தன்னை தானாக முன் நிறுத்துவது மற்றமையின் விருப்பத்திலிருந்துதான். தாய், மகள், சகோதரி, மனைவி என்று உறவின் பாற்பட்ட தன்னிலையாக இவற்றிலிருந்து பிரிந்து செல்லும் பிளவுறும் தன்னிலையை காணவேண்டியதாக அலைவுறும் புள்ளிகளில் நிலைபெறுவதாக கொண்டுவிட, படைப்பில் கண்டுவிடத்தான் பொருளாம்சத்தை தேடவேண்டியிருக்கிறது.

  




[1] Judith Butler, Bodies that Matter On the Discursive Limits of Sex
[2] The problem is not that the feminine is made to stand for matter or for universality; rather, the feminine is cast outside the form/matter and universal/particular binarisms. Judith Butler, Bodies that matter On the Discursive Limits of Sex P.42.
[3] சகீனாவின் வளையல்கள்-ஜாஹீரா சையது,ஆப்கானிய சிறுகதை மொழிபெயர்ப்பில், திண்ணை இணையதளம்
[4] பெருந்தேவி கவிதைகள்
[5] வசியம்- காஞ்சனா தாமோதரன் சிறுகதை-திண்ணை இணைய தளம்


மந்திரச்சிமிழ்-இதழ் 7-10 ஏப்ரல் '11-மார்ச் '12 இதழில் வெளியான கட்டுரை 

   

  



Bibiliography
1.Judith Butler-Bodies that Matter On the Discursive Limits of Sex
2.Virpi Lehtinen-Luce Irigary's Philosophy of Feminine Being:Body, Desire and Wisdom
3.Ian Buchanan and Claire Colebrook(Ed)-Deleuze and Feminist Theory
4.Chrysanthi Nigianni and Merl Storr(Ed)-Deleuze and Queer Theory
5.நீலி-மாலதி மைத்ரி கவிதைகள் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம், 2005
6.காலச்சுவடு இணையதளம்
7.திண்ணை இணையதளம்
8.இன்னபிற வலைப்பூ
9.குட்டிரேவதி கவிதைகள் வலைப்பூ
10.சங்க இலக்கியம்-தமிழ் இணைய நூலகம்.



















Wednesday, 4 January 2012

பெண்:புராணம்-பிளவு-தன்னிலை:பகுதி 2

2.பிளவு

எதிர்பால் பிளவு இருமைகளின் நிகழ்வை நெறிமையாக்க லிங்கமையமொழியின் அபிநயம். தலையில் மழை துளிகள் விழுந்ததால் பேரொலி எழுப்பும் அரவம் போல் பாலியல் விழைவின் ஒப்பிடல்[1]. இல்லை எனில் மெய் மலிந்த காமம் என்று மிகை கொள் போக்காக நிலைப்பு. ஆண்மை/பெண்மை என்ற இருமைகளில் காணாமல் போகும் பெண்மையும் மேலதிக பெண்மையுமாய். ஆண்மையின் ஊடுருவலாய் பெண்மையை லிங்கமையமொழி பின்னி, தாய்/கொள்கலன் என்ற மேலதிக பெண்மையை நெய்யும். ஆயமும் ஊரும் கோவலரும் வடித்தெடுத்த பெண்மை மொழிவது காமத்தின் மொழி அல்லது பேரார்வமான பாலியல் விழைவு. அறத்தின் நிலைபேறாக இருப்பதும் வேட்கையை ஆட்டுவிப்பதும் என பல பூணுதல்களைக் கொண்டிருப்பதால் ஆண் உடலின் தேடலில் பெண்மையை விளைவித்திருக்கும் லிங்கத்தை ஊடுருவக் கோருவதாக சிருங்காரச் சுவை கூட்டும். தோலின் மெய்ப்பாடுகள் துலங்கும் சிலிர்ப்புகளை பெண்மையின் குறித்தலில் சேர்த்து இரங்குதலையும் பிரிதலையும் புணர்தலையும் பொருள் கொள்ள வைக்கப்படும். அல்லது உறையிலிடாத உப்பாய் கரையும் முத்தமாக சேர்க்கப்படும்[2]. காணாமல் போயிருக்கும் பெண் உடலாய் மொழி பேசி பெண்மையின் நிழலாட. தோலில் நிலைபெறும் உடலாய் பாவித்து பாலியல் சமைக்கும் பண்டமாய் பிரவாகிக்கும். சிறைபட்டிருக்கும் உடலில் சிறைபட்டிருக்கும் பெண்மையாக தோலின் நிலையை அறிவித்து நிற்பதாக படிக்கப்படலாம். பூக்காத உடல் பெண்மை கொண்டதாக சிறைபடாதிருப்பதும் தனிக்காட்டு மானாய் தொலைந்து போவதும் முன் தீர்மானிக்கப்பட்டதாவும் இருக்கலாம்[3]. ஆணின் பெண்ணாக ஆணின் பிரதிபிம்பமாக உருவற்ற ஒன்றாக, நீர்மமாக, கொள்கலனாக, உணர்வாக, தாய்மையாக, செவிலியாக பாத்திரமற்றவளாக பிளவுறுவதுதான் நிகழ்த்துதலாக இருக்கிறது. மனம் எனும் உடலையும் உடல் எனும் மனதையும் இணைத்திருப்பதில் பெண்மையின் நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. ஆண் உடலின் தேவை போல் பெண் உடலின் தேவையை வர்ணிப்பதும் சமநிலையாக விடுதலையை பாவிப்பதும் விடுதலையாக இருப்பது உடலின் எல்லை மீறலாக புனைவதும் பாலின பிளவை பெரிதாக்குவதும் லிங்க மைய மொழி அமைப்பாகக் கொள்ளப்படலாம். பெண்மைக்கான உடல் என்று பிளவு எப்படி நிலைபெற்றது என்றும் பெண்மையின் உடல் பெருமையாக அல்லது தோற்றத்தின் நிலைபேற்றாக அறத்தின் சார்பில் விளைந்த பிளவாக தோற்றம் கொள்ள வைப்பதும் இருமை பண்புகளின் முடிந்த முடிபுகளாக மாறிப் போகலாம். மீமெய்யியலிலிருந்து உருவான பிளவுதான் என்றோ அல்லது உள்ளீட்டின் ஒரு வடிவம் என்றோ கொள்ளத்தான் உடல் வேறுபாடு உறுப்புகளின் வேறுபாடாக கொள்ளப்பட்டும் இருக்கும். மறு உற்பத்தி உடல் என்ற உணர்வு கொண்ட உடல் இப்படி பிளவை சாத்தியப்படுத்துகிறது வரலாற்றின் அடிச்சுவட்டில் சிக்கி. சிறைபட்டிருக்கும் பாலினத்தில் சிறையான உடலாய் பாவிக்க.

தாய்மை/பராமரிப்பவர் என்பது மனித வடிவத்தை ஒப்புமை கொள்ளும் உருவகம் அல்ல. ஆனால் அது மனித எல்லையில் உருவான  விதிகளுக்குட்பட்ட ஒரு வடிவமற்ற, வடிவமற்றுப் போவதான அச்சத்தைக் கொண்டது. அது ஒரு வடிவமோ அல்லது உருவோ அல்ல அதனால் அது ஒரு உடலே அல்ல .[4]

சான்றோனாக்கும் தாயாக குழந்தையை போர்க்களம் அனுப்புபவளாக கொள்கலனாக நிரப்பப்படும் நிறையாக இல்லாத குறையாக உடல்சார் உற்பத்தியின் எந்திரமாக இருப்பதாக முன் தீர்மானத்தை ஏற்று பெண்மையை நவில்ந்துவிடும் போக்கும் இருக்கும். பரிகாரமாக இருப்பதும் உடலின் பலவகையான போலச் செய்தல்களாகவே இருக்கும். நளினத்தின் தேர்வில் பகடி செய்வது மட்டுமே உரித்தானதாக மாற்றப்பட்டிருப்பதால் தாய்மையின் அரங்கேற்றமும் மீள் உற்பத்தியும் பூமாதேவியின் வாழ்தல் என, அடிவயிற்றுக் கோடுகள் என முட்டை இடுவதை கற்பனை செய்வதைப் போல இங்கு போன்மைகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்[5]. ஆண் உடலின் கிளையாய் பரவி நிற்கும் பெண்மையை விதிகளுக்கு உட்பட்டு நிகழ்த்தவைக்கும் படலம் வனபேச்சியின் காட்டை ஈன முடியாத வதைக்கு உட்படுத்துகிறது[6]. நிலைக்காத ஒருவன் உடன் அழைக்காத ஒருவன் கரம் பற்றி கருவறை தாண்டுவதும் ஆணின் பெண்ணற்றதும் ஆணின் பெண்ணானதுமான விளையாட்டின் ஒரு படி. பெண்ணின் உருவாகுதலாக இருக்கும் இடத்தில்தான் பெண்மை எனும் பாலினத்தை ஊன்றிவிட்ட புள்ளியாக கொண்டுவிடலாம்தான்[7]. 

பிறழ்ச்சிப் பெண்மை, அன்புக்குரிய பெண்மை, மாயப்பெண்மை என்று பெண்மையை ஆணின் பெண்ணாக வகைமைக் கொண்டுவிடலாம்[8]. பிறழ்ச்சிப் பெண்மையின் பாலியல் விழைவுகள் ஆணின் பெண்மையாக இல்லாத நிலையின் வெளிப்பாடாக இருக்கலாம். உயவு நோய் அறியாது துஞ்சும் ஊரின் மீது வெறுப்படைந்து தாக்கும் பாலியலை வெளிப்படுத்தும் பிறழ்வுற்ற செயல்முறையாக புனைவு உரைக்கப்படுகிறது[9]. சிதறி பிறழ்ந்து பொழியும் விருப்பத்தின் முதிர்வை சொல்லிச் செல்லும். காமத்திலும் காயத்திலும் புரண்டு கோடையின் சுழலாய் இசை மேலெழும்புகிறது[10], விருப்பமாக. சிறைப்படுத்தலின் விதிகளை மீறி எழுந்த இசையாய் விருப்பம் அறிவிப்பது ஒழுங்கின்மையை. பாலியல் ஒழுங்கின்மையை. பெண்மையின் வகைமைகளாய் போலச் செய்து கொண்டிருக்கின்ற லிங்கமையத்தின் சொல்லாடலில் மாற்றை மற்றமையை இன்மையாக பொருளாம்சம் கொள்ள வைப்பதில் சிக்கல் கொண்ட பாத்திரமேற்பு பரிதவிக்கிறது. முடமாவதிலும் முடங்கிப்போவதிலும் பெண்மையின் மொழியை தேடி நிறுவி விடுவது பெண் உருவாகுதலின் ஒரு பகுதியாகிவிடலாம். மூதுரைகளின் பிடியிலும் அறவரிகளின் நிலைப்பிலும் பெண்ணாக உருமாறுவது ஆணின் பெண்ணாகத்தான். பெண்ணை பெண் பதிலி செய்வதும் உடல் பொருளாம்சத்தால்தான். ஒரே வார்ப்பிலான பெண்மையின் ஸ்தானத்தை விதிபலனாய் முகிழ்த்த மொழியாம்சத்தின் உட்பொருளாக பதியவைப்பதும் நடக்கிறது. உடலின் பிறப்பை விட உருவாக்கப்படுவதுதான் பாலினத்தை முற்ற வைக்கிறது என்பதில் நிகழ்த்துதல் மாய வலையாக பின்னப்படுகிறது. பெண்மையின் மொழிதலாக விருப்பம் அழுத்தப்படுகிறது. கண்காணிக்கப்படுகிறது. ஒடுக்கப்படுகிறது. நோய்மைப்படுகிறது.

பெண்மையின் குணாம்சங்களாக அடைக்கப்பட்டவை இடம்பெறும் இடமாக கொள்கலன் இருக்கும். பெண்மை, தாய்மை மற்றும் பராமரிப்பை எதிர்க்கிறது. இந்த பெண்மை எனும் குறியின் கீழ் வரும் எல்லா விலக்கப்பட்டவைகளின் எச்சங்களையும் இந்த கொள்கலன் என்பது நிகழ்த்தி, நடித்துக் காட்டுகிறது அதனால் இந்த கொள்கலன் என்பது ஒரு பிரதிமை ஆகிறது. ஆனால் கொள்கலனை சாதாரணமாக எளிமையாக பிரதிமை என்று கொள்ளமுடியாது, அழைக்க முடியாது. ஏனெனில் பெண்மை சிலவற்றை விலக்கிவைக்கிறது எதிர்க்கிறது விலக்கப்பட்டவற்றின் எச்சங்களை வெறுமனே நிகழ்த்தி அல்லது நடித்துக் காட்டுகிறது அது எந்த பாத்திரத்தில் நடிக்கிறதோ அல்லது நிகழ்த்துகிறதோ அதை ஒரு படிமமாக கொள்ளலாம்.[11]

அன்புக்குரிய பெண்மை என்பது பெண்ணை உடலாக பதிலி செய்யப்படும் உடலாக பாவித்துக் கொள்ளும் மொழிதலில் கட்டமைக்கப்படுவது. குடும்பத்தை உடைப்பதில் ஒழுக்கத்தின் நிலைப்பாட்டை மீறாமல் இருக்கும் உடலாக விழைவை முயங்கச் செய்வதில் அன்புக்குரிய பெண்மை மருளுகிறது. மருட்டப்படுகிறது.

மாயப் பெண்மை, இறையை விருப்பத்தின் வெளிப்பாடாய் மோகிப்பதாக இறையாய் விருப்பம் மயங்குவதாக நிலைப்படுத்தப்படுகிறது. கற்பூரமும் கமலமும் பவளச் செவ்வாயும் நாறுவதும் சுவைப்பதும் இறையில் சங்கமிக்கும் விருப்பத்தின் நுகர்வு[12]. இறையாய் லிங்கமையத்தை மேம்படுத்துவதும் அதன் பால் அருளாய் காதலைப் பெறுவதும் மாயப்பெண்மையின் வாழ்நிலை. தூய பக்திக்கு கிடைக்கும் தூய காதல் என்பதாகவும் தூய பாலியல் என்பதாகவும் பொருளாம்சம் விரிவுபடுகிறது. இறையின் அறிவில் மெய்மறந்து மெய்யை மறுத்து ஆண்மையின் உயர்வாய் கொண்டு மெய்ப்பொருளாய் கண்டு உய்வித்துவிடும் பெண்மையும் உண்டு. ;மாயப்பெண்மையின் இறை லிங்கமையத்தின் மீதான விருப்பத்தேர்வு லட்சிய ஆண்மைக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. லட்சிய ஆண்மைதான் மாயப் பெண்மையை வரையறுக்கும். துறவின் வழியில் வற்றிவிட்ட பெண் பாலியலாகவும் அல்லது பேயாகிவிட்ட பெண் பால் உடலாகவும் வர்ணிக்கப்படலாம்.
'நீ என்னுள் இல்லை. நான் உன்னை என்னுள் கொள்ளவில்லை. என் வயிற்றில் என் கைகளில் என் தலையில் வைத்திருக்கவில்லை. என் நினைவில் என் மனதில் என் மொழியிலும் வைத்திருக்கவில்லை. நீ இருக்கிறாய் என் தோல் போல்'[13] என்ற தோலின் வரையறையாக பாலின சங்கமிப்பு அடிக்கோடிடப்படும். தோலின் சதையின் இளமையின் கறையை வற்றிவிட்டு எலும்பின் பாலியல் இன்பத்தை பெற பேயாவதாக, ஏக்கத்தில் இருக்கும் அருள் எனும் இன்மையை அடைய விரும்பும் உடலாக மாறுவதும் வரலாறாகிறது[14]. உண்டிச் சுருக்கி அழகு பெற்று சொற்திரம்பாத கற்பைக் கொண்டு மரணத்திற்கு சமமான அடக்கத்தையும் மானத்தையும் பெற்று சிறையின் விதிகளில் சிறைபட்டு நிற்கிறது பெண்மை என்ற பால் மறைந்த அதீத புனைவின் மறுபெயர்[15].

மந்திரச்சிமிழ்-இதழ் 7-10 ஏப்ரல் '11-மார்ச் '12-ல் வெளியான கட்டுரை


[1] ஔவையார் பாடல் நற்றிணை 129, 187
[2] உறையிலிடாத முத்தம்-சுகிர்தராணி கவிதைகள்-காலச்சுவடு
[3] அம்பையின் காட்டில் ஒரு மான் சிறுகதை-திண்ணை இணைய தளம்
[4] This receptacle/nurse is not a metaphor based on likeness to a human form, but a disfigu-ration that emerges at the boundaries of the human both as its very condition and as the insistent threat of its deformation; it cannot take a form, a morphe, and in that sense, cannot be a body.-Judith Butler, Bodies that Matter  On the Discursive limits of Sex P.41
[5] பூமாதேவி-நீலி,மாலதி மைத்ரி கவிதைகள் தொகுப்பு. ப 28
[6] வனப்பேச்சி-மாலதி மைத்ரி கவிதைகள்
[7] கருவறை-குட்டிரேவதி கவிதைகள்
[8] Virpi Lehtinen-Luce Irigary's Philosopy of Feminine Being:Body, Desire and Wisdom, P.65
[9] ஔவையார் பாடல் குறுந்தொகை 8
[10] ஒரு துளி இசையும் ஒரு பாம்புச்சட்டையும்-சுகிர்தராணி கவிதைகள்-காலச்சுவடு
[11] the receptacle is not simply a figure for the excluded, but, taken as a figure, stands for the excluded and thus performs or enacts yet another set of exclusions of all that remains unfigurable under the sign of the feminine—that in the feminine which resists the figure of the nurse-receptacle. Judith Butler, Bodies that Matter On the Discursive limits of Sex, P.42
[12] ஆண்டாளின் திருப்பாவை
[13] You are not in me. I do not contain you or retain you in my stomach, my arms, my head. Nor in my memory, my mind, my language. You are there, like my skin." Luce Irigary, Speculam of the Other Woman P.37
[14] காரைக்காலம்மையார், திருப்பதிகம்
[15] ஔவையார் ஆத்திச்சூடி.



மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு

  (தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...