பெண்மையை பெண்ணை பெண்ணாய் பெண் பாலியலை பெண் பாலினமாய் பெண்மையத்தை பெண்ணாக உருவகித்த பெண் நிகழ்த்துதலை பெறற்கரிய பெருமையை பெற்றடைவதை செய்வது இங்கு தொழில். "புதுமை'' அடைமொழியுடன் உலா வந்ததில் கிடைத்த புத்தாடைகளும் புதுவேலைகளும் புதிய கதைகளும் மாற்றை மற்றமையை புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு நிகழ்வாக இருந்தன. ஏனெனில் உடல்கள் பொருள்கொள்ளப்படுகின்றன. உயிரியலாக இல்லாமல் உடல் பொருளியலாக.
1.புராணம்
எலும்பின் எலும்பாகவும் சதையின் சதையாகவும் ஆதிக்கதையில் பிறந்துவிட்டு ஆப்பிளைத் தின்றவளாக இனி ஒரு போதும் திரும்பாத இருண்ட நிலத்திலிருந்து விலகுவதற்கு தன்மையின் இடச்சொல்லை இழந்துவிடவேண்டி வந்தது[1]. நீருக்குள் மேகத்திரள் போல் மிதந்துவரும் விண்செருகவைக்கும் காதலாக அல்லது தேசத்தின் தகுதிவாய்ந்த இளவரசருக்கு பெண்களின் பிரதிநிதியாக மாறி காதல் கடிதம் எழுதும்[2] மதர்த்த குதிரைகளை அடக்கிக்கொண்டிருக்க ஓடும் ஓட்டமாக அந்தக் காதல், அவளின் காதலாக இருக்கலாம்[3]. இதயப் படங்களை வரைந்து அதிகாரத்திடம் முழுமையாக சரணாகதி அடைந்து வர்ணிக்க முடியாத இன்பத்தின் பிடியில் சிக்கி கண் மயங்க சொல் குழற கடிதப் புனைவும் காதல் முனைப்பும் தடுமாறும் சுயத்தின் பிறழ்வாய் நீள[4]. இன்னும் எழுதப்படாத கடிதங்களுக்கு பிரதிநிதித்துவமாக இருக்கும் எழுத்தை வடித்து புரட்டலில் இணைக்கப் பயன்படும் பிரதிகளாய்த் தொல்கதைகள்.
காமத்தின் புராதனக் கோயிலான தன்னிடம், பெண்ணிடம் அற்புதத் துளியை சிந்தும் உடலுக்கான தேவையை முன்வைப்பது எதிர்ப்பின் சின்னமாகப் பார்க்கப்படலாம். இருபால் விழைவின் பாலியல் சேர்க்கைக்கான அதிகாரத்தை போற்றி துதிக்க வழிபடும் இடத்தில் வழியும் சுண்ணமும் சாந்தும் பிளவில் கிளைபரப்பி தீமுட்டுகின்றன[5]. மீண்டும் ஒரு மாயத்தில் இழந்த தம்முடைய தன்னிலையாக இளநங்கையும் இளநம்பியும் காதலை புல்மாலையிட்டு செல்லும் தொன்மத்தை நிகழ்வாக மாற்றி நிற்கிறது பாலியல் விழைவு[6]. உப்பையும் விட சுவைக் கோரும் உதட்டையும் புல்லின் இழைகளை விட நெருக்கமாய் பின்னி இடம் மாறி அடையாளம் குலையும் நீயும் நானும் என்ற முன்னிலை தன்னிலைகளாய் பாலியல், புராணத்தில் கலந்திருக்கிறது[7].
பால் கலந்த பால்களாக இருப்பினும் பால் வெளிப்படுவதில் விதிகளுக்குக்குட்பட்ட புராணம் நெஞ்சு நேர்பவளாகவும் இம்மையிலும் மறுமையிலும் ஒரே கணவனை ஒரே துணையை ஒரே உடல் இணையை பெற்றவளாகவும் இருப்பதாகக் கட்டப்படுகிறது[8]. கள்ளின் சாடி போல் இளமை கொண்டவளை அழுகி உருக்குலைந்து முதிர்ந்து போவதான நிலையைக் கொடுத்தவனை வாழ்த்தி அல்லது சபித்து ஒலிக்கும் அதீதகற்பனை, மற்றமையாக புனைந்துரைக்கப்படுகின்றது[9]. குறியாக ஆணும் குறியாக பெண்ணும் பெயரிட்டவையாக புரிதலில் மாயமாய் புதிர் கூட்டத்தில் புணர்ந்தவிழும் பிரம்மமாய் பொருள் கொள்ளும் தொன்மமாய் தன்னிலை தெளிவுபெறும்.
வள்ளைப் பூவைப் போல் மயங்கி வதுவை அயர்ந்து தொடி நெகிழ்ந்து வண்டுகள் துளைக்கும் தாமரை போல் பொது உடலாகி கவர்வதில் மகிழ்வதும் கவர்ந்ததில் தியங்கி உடல் பொருளியலை புராணமாக்கும்[10]. கண்ணாய், கனியாய், இதழாய், இன்னும் பிற உடல் உறுப்புகளாய் பதிவு செய்து மெய்யின் மெய்களை பாலினமாய் பாலின் மையமாய் மாற்றி சட்டகத்தில் மாட்டி, விடுபடாமல் விடுதலையை வேண்டி, தொன்மத்தின் குணாம்சமாகிப் போகும். தூய உடல், தீண்டா உடல், மெய்யுடல் என புனிதத்தின் சக்கரத்தில் அச்சாணியாக்கி லிங்கத்தின் மேன்மையைப் பேணி தொல்கதை காவியமாகும். தெய்வமும் இறையும் பெண்ணில் உறையும் பொருளாவதற்கு. பெண் பாலியல் தன்னிலை மலராய் மதுவாய் அன்னமாய் அன்றிலாய் பேரானந்தத்தில் திளைக்க. தூய்மையை புனிதத்தை கைக்கொள்ளாத உடல் பிறழ்வை, பித்தை, வெறியைக் கொண்டதாக பாவிக்கும் தொன்மங்கள். பொது உடல் போல் பொது மொழி பெறா ஊமையாய் கடன் பெற்ற சுமையின் படிமங்களைக் கொண்டு பரிதவிக்கும் இயல் மொழியில் பற்றினை உரைக்கும் தொல்கதை.
பெண்மையை விவரித்தால் தன்னிலை தேடும் மரபில் மிக ஊர்ந்து உடைகளின் இறுக்கத்தில் அலங்காரங்களின் பிடியில் சிக்கி ஒற்றை கொள்கலனாய் மிதக்கும் ஓர் உயிரியின் இனமாய் கதை சொல்லலாம். சிற்றடிகளின் தடங்களையும் மின்னொளிகளில் பரவசத்தையும் மிகப்பெருக்கி தியாகத்தின் வெம்மையில் பூத்து கண்ணீர் உருக்குதலும் பழிதீரா துயர் கலந்து பலவீனத்தை பறைசாற்றி பற்றினை புராணங்கள் தோறும் சுவைக்கலாம். கணி மென்துறையும் துல்லியமாய் வரைந்தெடுத்த பொதுப் பண்புகளோடு மெய்யுரையும் சீரிய மாண்புகளை புனைந்துரைக்கும் தொல்கதையை முனைந்து அடுக்கும் முறைமைகளை கோட்பாடுகளின் நவிற்சியோடு பொழியும். ஏனெனில் கவியும் புனைவும் பொருளாம்சத்தில் இயங்குவது புதிர் இன்றி புகையும் சொற்சிலம்பில்தான் என்பதே புராணத்தில் கடைந்தேறுவதாகிறது.
மரப்பாச்சிகளின் உணர்வுகளை மென்பொருளாய்க் கொண்டு வன்கதைகள் கட்டப்படலாம். உடல் உறுப்புகளை மையமிட்ட மொழியாடல்கள், வர்ணனைகள் பெண் கதைகளாக உருமாற்றம் பெறும். மைய உடல் என்ற உடலிலிருந்து உறவாக உருமாறும் கதைகளிலிருந்து ஆட்படுத்தப்பட்ட தன்னிலை உருவகத்தை மீண்டும் மீண்டும் மறு ஆக்கம் செய்து கட்டுடைத்து மனோவியல்புகளை பெற்றெடுக்கும் பூர்வகதையின் மறுபக்கமாய் பொதித்து வைத்த சித்திரத்தின் வடிவை கோர்த்த புராணமாக்கிவிடலாம். உடலின் மனமாய் மனதின் உடலாய் வடிவெடுப்படுப்பதில் இரட்டைகளின் ஒருங்கிணைப்பு சிதற பன்மைகளின் விரிவாய் மாற புராணம் மாற்றி எழுதப்படவேண்டும்.
சாதிகளும் மதங்களும் காதலின் தடையாய் உடல்களின் தடையாய் மாறி நிற்பதில் ஒற்றை பாத்திரமேற்பு தட்டை பாத்திரமேற்பு கொண்டுவிடுவதில் புராணம் பழங்கதையாகவே இருக்கிறது. இல்லை எனில் சமானமற்ற பாலின புனைவை நூல்களாக தொகுதிகளாக பகுத்து பறைசாற்றும் புராணத்தை கைக்கொள்ளலாம். மதிப்பற்ற உயிரின் விலையை கோர செயற்கரிய செய்யும் அல்லது கொலை புரியும் கதைக்களன்களில் நின்று நிலை பெற்று தொன்மங்களை கட்டவிழ்க்கலாம்.
மந்திரச்சிமிழ்-இதழ் 7-10 ஏப்ரல் '11-மார்ச் '12ல் வெளியான கட்டுரை
No comments:
Post a Comment