Monday, 2 August 2021

குறுங்கதைகள்-மயில் பெண்




மேல் பாதி பெண். கீழ் பாதி மயில். இப்படி இருக்கும் இவர்கள் மயிலின் எண்ணத்தைப் பெண்ணும் பெண்ணின் எண்ணத்தை மயிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் போன்ற மற்ற உயிரினங்கள் ஏதும் இல்லை என்பதால் அவற்றுக்கு என தனி சிறப்பு இருந்தது. மற்ற உயிரினங்கள் இவர்களை மதித்தன. பெண்ணுக்கு மயிலின் குரல் பிடிக்கவில்லை. இருந்தாலும் அந்தக்  குரலில் பேசவேண்டியிருந்தது. மயிலுக்கு பெண்ணின் குணம் பிடிக்கவில்லை. மயில் தன் ஆட்டத்தைத் தொடர்கையில் பெண் வெறுத்தாள். அவள் பேசுகையில் மயில் வெறுத்தது. இருவரும் பிணைந்து இனி வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தார்கள். பெண் பிரிந்தால் அவளுடைய பாதியாக யார் இருப்பது என்ற போட்டி உருவானது. மயில் பிரிந்தால் அதற்குப் பாதியாக பல உயிரினங்கள் முன் வந்தன. இந்தப் பஞ்சாயத்தைத் தீர்க்க முருகனிடம் சென்றன. மயில் தன் பாதியாக மயிலிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாம். பெண்ணும் தன் பாதியாக மற்றொரு பெண்ணைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தான். சில நாட்கள் கழிந்தன. பெண்ணும் மயிலும் பிணைந்து இருந்த போது வந்த சண்டைகளை விட இப்போது அதிக சண்டைகள் வந்தன. மீண்டும் மயில் பெண்ணிடம் வந்து பழையபடி பிணைந்திருக்கலாம் என்றது. பெண்ணுக்கும் அது பிடித்திருந்தது. மீண்டும் முருகனிடம் சென்று முறையிட்டார்கள். இந்த முறை மயில் பெண்ணாகவும் பெண் மயிலாகவும் மாறிப் பிணைய முருகன் ஆணையிட்டான். மீண்டும் ஒரு போர் தொடங்கியது. 

குறுங்கதைகள்-அவளும் அவனும்






அன்றுதான் அந்தக் கதையின் 1000மாவது பக்கத்தை அவன் எழுதி முடித்திருந்தான். அந்தக் கதை அவன் விண்வெளிப் பயணம் போனதைப் பற்றியதுதான். அவனுடைய சுயபுராணம் என்றுகூடச் சொல்லிவிடலாம். விண்வெளியில் அவன் கண்ட காட்சிகள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் அந்தக் கதையில் இடம்பெற்றன. அவன் விண்வெளியில் அனுபவித்த ஒவ்வொரு மணித்துளியையும் கதையாக எழுதவேண்டும் என்ற வேகத்தில் அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்தான். எல்லாமே நினைவில் இருந்து எழுதவேண்டியிருந்தது. எதையும் பயணத்தின் போதே பதிவு செய்ய முடியாதிருந்தான். அதனால் அந்தப் பயணத்தை மீண்டும் மேற்கொள்வது போல கதையில் பயணித்துக் கொண்டிருந்தான். முதல் அனுபவம் பற்றியே 1000 பக்கங்களை எழுதிவிட்டான். இது அவனுடைய முதல் விண்வெளிப் பயணம். முதலில் அவன் சென்றடைந்தது பூமியைப் போன்றே இருக்கும் ஒரு கிரகம். அங்கிருந்தவர்கள் பூமியைச் சேர்ந்தவர்கள் போலவே இருந்தார்கள். இவனும் அந்தப் புதிய பூமியில் மிகவும் இனிமையாக நாட்களைக் கடத்தினான். அங்கு ஒரு பெண் இவனுக்கு அறிமுகம் ஆனாள். அந்தப் பெண்ணிடம் தன்னைப் பற்றிக் கூறினான். அவளும் வேறொரு கிரகத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறினாள். அந்தப் புதிய பூமியில் இருக்கும் சிலரைத் தன்னுடன் அழைத்துச் செல்ல அங்கு வந்திருப்பதாக அவள் கூறினாள். தானும் அவளுடன் வருவதாகக் கூறினான். பூமியிலிருந்து வருபவர்களுக்கு தன்னிடத்தில் வாழ முடியாது என்று கூறினாள். அவள் தன்னை உருமாற்றிக் கொண்டு அந்தப் புதிய பூமிக்கு வந்திருப்பதாகச் சொன்னாள். பூமிவாசிகளுக்கு இப்படி உருமாற்றிக் கொண்டு வேறிடத்தில் வாழ்வது இன்னும் சாத்தியமில்லை என்றாள். அவளைப் போல உருமாற என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைப் போல அவளால் உருமாற முடியும் என்றாள். ஆனால் மீண்டும் அவன் தன் பழைய நிலைக்கு மீள முடியாது என்றாள். அதை அவன் பொருட்படுத்தவில்லை என்றான். தன்னைப் போல் உருமாறி அவளுடைய இடம் சென்று தான் எழுத நினைத்த இந்தக் கதையை எழுதினால் போதும் என்றான். அவள் அவனாக உருமாறி இந்தக் கதையை எழுதிக்கொண்டிருந்தான்/ள்.  

Friday, 30 July 2021

குறுங்கதைகள்-அவள்






அந்த மலைப்பாதையில் அவள் நடந்துகொண்டிருந்தாள். அவள் எதிரே வந்தவன் அவளை உற்றுப் பார்த்துவிட்டுப் போனான். அவள் தன் இறந்து போன மனைவி போலவே இருந்தது அவனுக்கு ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தந்தது. தன் மனைவி தன்னைப் பொருட்படுத்தாமல் நடந்து செல்வது போல் அவனுக்குத் தோன்றியது. அவளைக் கொன்றது போல இவளையும் கொல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் அவளைப் பின் தொடர்ந்தான். எதிரே ஒரு வயதானவர் வந்து கொண்டிருந்தார். அவள் தான் கொலை செய்த தன் மகள் போல் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார். அந்தப் பெண்ணை நிறுத்தி அவளைத் தன் மகள் போல் இருப்பதாகக் கூறி தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அவள் மறுத்துவிட்டு நடந்தாள். அந்த வயதானவர் சிறிது தூரம் திரும்பிச் சென்று விட்டு மீண்டும் அவளைப் பின் தொடர்ந்தார். எதிரில் ஒருவன் வந்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியுற்று நின்றுவிட்டான். அந்தப் பெண்ணைப் பின்தொடரும் இருவரையும் பார்த்து அந்தப் பெண்ணைப் பின்தொடரவேண்டாம் என்று எச்சரித்தான். அவளைத் தன் அறிந்திருப்பதாகக் கூறி அவர்களுடன் நடந்தான். அவள் ஒரு பிசாசு என்றும் அதனால் பின்தொடரவேண்டாம் எனத் தடுத்தான். அந்த மலைப்பாதையில் இறுதியில் உள்ள மலை உச்சிக்குக் கொண்டு சென்று தள்ளிவிட்டுவிட்டு அவள் காணாமல் சென்றுவிடுவாள் என்றான். அவர்கள் இருவரால் அதை நம்பமுடியவில்லை. அவர்கள் அவன் சொன்னதை நம்பாமல் அவளைப் பின்தொடரப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். மலை உச்சி வந்தது. அவள் திரும்பி அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தாள். அவர்கள் இருவரும் அவள் அருகே போனார்கள். அவள் உடனே மலை உச்சியிலிருந்து குதித்துவிட்டாள். அவர்கள் இருவரும் வேறு வழி தெரியாமல் அவளைக் காப்பாற்ற எண்ணி அங்கிருந்து குதித்தார்கள். சில நாட்களுக்குப் பின் அவள் மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தாள். 

Thursday, 29 July 2021

குறுங்கதைகள்-மஞ்சள் பூ





உலகம் முழுக்க ஓர் அறிவிப்பு வருகிறது. துர்நாற்றம் வீசும் ஒரு பூ மலர இருக்கிறது. அது மலர்ந்தால் உலகம் அழிந்துவிடும். எனவே அந்தப் பூவின் மொட்டு இருக்கும் செடிகளை உடனடியாக அழிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. மஞ்சள் நிற பூவான அந்தப் பூவின் மொட்டு என நினைத்து உலகத்தின் அத்தனை மஞ்சள் நிற பூச்செடிகளும் அழிக்கப்பட்டன. எந்தப் பூ மலர்ந்தாலும் அதன் வாசத்தைச் சோதித்தனர். மலரின் வாசத்திற்கு முன் வீச்சமே நினைவுக்கு வந்தது. மஞ்சள் பூ மலர்வதற்கு முன் வெள்ளை மொட்டாக இருக்கலாம் என வதந்தி பரவியது. உடனே வெள்ளைப் பூச்செடிகள் அழிக்கப்பட்டன. மஞ்சள மட்டுமல்ல அந்தப் பூ சிவப்பு நிறத்திலும் மலர்வதாகச் சொல்லப்பட்டது. உடனடியாக சிவப்பு பூச்செடிகளும் அழிக்கப்பட்டன. அவ்வப்போது ஊதா நிறம் பற்றி சந்தேகம் எழுந்தது. அவையும் அழிக்கப்பட்டன. காடெல்லாம் தீயாய் மாறியது. வீடுகளைச் சுற்றி அனலாய் எழுந்தது. மலைகளில் அந்தப் பூக்கள் மலரலாம் என்றார்கள். மலைக்காடுகள் முழுக்க அழிக்கப்பட்டன. இனி பூச்செடிகளே இருக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பூக்களற்ற உலகத்தை எட்டுவது மிகவும் எளிது என்றார்கள். பூக்கள் பற்றி கருத்து தகவல்களும் அவற்றின் மீதான ஆர்வத்தைக் கிளப்பிவிடும் என அஞ்சினார்கள். அவையும் அழிக்கப்பட்டன. பூக்களையும் அவற்றின் வாசனையையும் அறியாத ஓர் பரம்பரையை உருவாக்கிவிடும் பெருமிதம் கொண்டார்கள். பூக்களைக் கண்டால் அழி என்பதே உலக வாசகமானது. பூக்களைப் போல் இருப்பவர்களும் மலர்களை நினைவுபடுத்துகிறார்கள் என குறை சொல்லப்பட்டது. பூக்களைப் போன்றவர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. பூக்கள் போன்றவர்களாக எண்ணி ஒடுக்குபவர்களும் ஆபத்தானவர்கள் என்றார்கள். அவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. அந்த அழிவை எண்ணியே இருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. காடுகளை அழிக்க ஆட்கள் இல்லை. செடிகளை அழிப்பவர்களின் எண்ணிக்கை அருகியது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூச்செடிகள் முளைத்தன. மஞ்சள் பூ மலர்ந்தது.

 

 

Wednesday, 28 July 2021

குறுங்கதைகள்-பேச்சு

 




        பள்ளி விடுமுறை என்பதால் காட்டுக்குள் இருக்கும் குன்றைப் பார்க்கக் கிளம்பினான். தன்னுடன் படிக்கும் யாரையும் அங்குக் கூட்டிச் செல்லக்கூடாது என்பதுதான் அவனது திட்டம். புதர் மண்டிய அந்தக் குன்றில் ஏறினான். அது அதிக உயரமில்லை. அதன் உச்சிக்கு வந்துவிட்டான். அந்தக் குன்றின் மேலே ஒரு துளை இருந்தது. அதற்குள் என்ன இருக்கும் என எட்டிப் பார்த்தான். அங்கே பாம்பு மனிதர்கள் ஏதோ சடங்கைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியிலிருந்து அவனால் கண்களை விலக்கவே முடியவில்லை. எவ்வளவு நேரம் கடந்தது எனத் தெரியாமல் அவன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது பாம்புப் பெண் ஒருத்தி இவனைப் பார்த்துவிட்டாள். இவன் அதிர்ந்து போனான். அவளுடைய பார்வை இவனுக்குள் ஊடுருவியது. அச்சத்தில் அந்த இடத்தை விட்டுத் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான். வீடு வந்து சேர்ந்த பின்னும் அந்தக் கண்கள் அவனைப் பின் தொடர்ந்தன. மகனின் அச்ச முகம் கண்டு பெற்றோர் விசாரித்த போது அவனால் பேச முடியவில்லை. பெற்றோர் பல மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று காட்டியும் அவனைப் பேச வைக்க முடியவில்லை. முயற்சிகளைக் கைவிட்டு பேச்சுத் திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பள்ளியில் சேர்த்தார்கள். எப்படியோ படித்து ஏதோ ஒரு வேலைக்குப் போனான். ஆனால் அந்தக் கண்களை மீண்டும் பார்க்கவேண்டும் என்பது மட்டும் அவனுக்குள் ஆழமாக வளர்ந்திருந்தது. ஒரு விடுமுறை நாளில் மீண்டும் அந்தக் குன்றைக் காணச் சென்றான். அதே துளை வழி பார்த்த போது அதே சடங்கு நடந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் இவனைப் பார்த்துவிட்டாள். இவனுக்கு அச்சமாக இல்லை. இவன் சிரித்தான். அவள் இவனைத் துளை வழியாக உள்ளே இழுத்துக் கொண்டாள். இவன் அம்மா என்று அலறினான்.

 

Tuesday, 27 July 2021

குறுங்கதைகள்-ஓசையின் நயம்


 




        இளம் வயதில் அவளுக்கு ஒரு கர்வம் இருந்தது. தன் குரலைக் கேட்பவர்கள் தன்னிடம் ஆட்படுவார்கள் என்று இறுமாப்பு அடைந்தாள். அவள் குரல் ஒலித்தால் உலகத்தின் அடுத்த பக்கத்திற்குக் கேட்கும். அவ்வளவு பெரிய குரல். அந்த ஓங்கி ஒலிக்கும் குரல் பால் பேதமின்றி இருந்தது. ஆணாகவும் இல்லை. பெண்ணாகவும் இல்லை. வேறு எந்தப் பாலைச் சார்ந்தும் இல்லை. அத்தகைய பெருங்குரலில் அவள் ஒரு முறை பிரகடனம் செய்தாள். தான் விரும்பியவரை விரும்பியவாறு மணம் புரியப் போவதாகச் சொன்னாள். பல இளம் ஆண்கள் பெரும் அச்சம் கொண்டனர். அந்தக் குரலில் தாங்கள் ஒழித்துக் கட்டப்படுவோம் என அஞ்சினர். அவளும் ஒருவரைத் தேர்ந்தெடுத்தாள். அவனை மணம் புரிந்தபின் அவன் செவித்திறன் இல்லாதவன் எனத் தெரிந்துகொண்டாள். அதைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. ஓர் இரவு அவன் உறங்கும் போது அவள் பெருங்குரலெடுத்து அவன் பெயரை அவன் காதுகளில் ஒலித்தாள். அப்போதுதான் உறக்கம் கலைந்த அவன் உலகத்தின் ஒலிகள் மெல்லியதாகக் கேட்பதை உணரத் தொடங்கினான். அவள் மீண்டும் பெருங்குரலெடுத்து அவனை அழைத்தாள். இவ்வளவு இனிமையான மென்மையான குரலை அதுவரை தான் கேட்கவில்லையே என நினைத்து புளங்காகிதம் அடைந்தான். அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பது மட்டுமே இனி தன் வாழ்நாள் முழுக்கச் செய்யவேண்டும் என நினைத்தான். அப்போது பெரும் இடியோசை முழங்கியது. அவள் காதைப் பொத்திக் கொண்டாள். உலகத்தின் இடி கூட இவ்வளவு மெல்லியதாக இனிமையானதாக ஒலிப்பது அவனுக்கு அருமையாக இருப்பதாகச் சொன்னான். தன் குரலால் எந்தப் பயனும் இல்லை என முதல் முறையாக உணர்ந்தாள் அவள்.

 

 

Monday, 26 July 2021

குறுங்கதைகள்-9ஆம் எண்

 





    பிரபஞ்சத்தை ஆட்டிப் படைப்பது 9 என்ற எண்தான். இந்த எண்ணிலிருந்துதான் மற்ற எண்கள் தொடர்பை வளர்க்கின்றன. இவள் பிறந்த எண்ணும் 9தான். 9ஆம் எண் எல்லாமுமாகவும் சூனியமாகவும் ஒரே சமயத்தில் இருக்கிறது எனச் சொல்லலாம். இவளும் தன்னை அப்படியே எண்ணிக் கொள்கிறாள். எல்லாமுமாகவும் எதுவுமே இல்லாமலும். இவள் வேண்டி விரும்பியவை எல்லாமும் கூட எல்லாமுமாகவும் எதுவுமே இல்லாமலும் ஆகிவிட்டன. எல்லாவற்றையும் பெற இவள் முனையவில்லை. எதையும் பெறாமல் இருக்கவும் முனைந்திருக்கிறாள். ஆனால் இதில் 9ஆம் எண்ணின் தாக்கம் இருப்பதுதான் இவளயும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு முறை 9ஆம் எண்ணைக் கொண்டு பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை அழித்துவிட முயற்சித்தாள். அதில் பாதி பலன்தான் கிடைத்தது. அது ஒரு சோதனை முயற்சிதான் என அதைக் கைவிட்டு பிரபஞ்சம் போன்ற மற்றொரு அமைப்பை உருவாக்க முனைந்திருக்கிறாள். அதிலும் 9ஆம் எண்தான் ஆட்சி செலுத்துகிறது. ஆனால் முற்றிலும் புதிய அமைப்பாக அது உருவாகி வருகிறது. ஒரே ஒரு குறை என்னவெனில் 9ஆம் எண்ணைச் சார்ந்தவர்கள் மட்டுமே அங்குச் செல்ல முடியும். மற்றவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள். அங்குப் போகும் கலமும் 9ஆம் எண் போலவே இருந்தது. இவள் பயணித்தது தலைமைக் கலனில்தான். ஒரு முறை அதில் பயணித்துக் கொண்டிருக்கையில் எதிர் முகாமைச் சேர்ந்த பூஜ்யம் எண் கொண்டவர்களின் கலன் மோதிவிட்டது. அதில் 9லிருந்த சுழியும் வாலும் பிரிந்துவிட்டன. அதனால் பாதி கலன் அந்த பூஜ்யக்காரர்களின் பிரபஞ்சத்தையும் மீதிக் கலன் ஒன்றாம் எண்ணுள்ள பிரபஞ்சத்தையும் போய்ச் சேர்ந்துவிட்டன. இவள் அண்டத்தில் கரைந்து 9ஆம் எண்ணை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறாள்.

 

மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு

  (தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...