சாகித்ய அகாடமியும் லேடி டோக் கல்லூரியும் இணைந்து நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை
இளைஞர்களது எழுத்துகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க அடிப்படையான அலகுகளாக இங்கு எடுத்துக் கொள்ளும் கருதுகோள்கள்:
1.கலாச்சார உணர்ச்சிசார் படைப்புத்துவம் கொண்ட படைப்புகள் உருவாவது ஆக்கமுள்ள இலக்கியமாகுமா
2.பின்நவீனத்துவ வடிவம் குறித்த கற்பனை போதுமானதாக உள்ளதா
3.தத்துவச் சிந்தனை அவசியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறதா
இந்த மூன்று அடிப்படை அலகுகளைக் கொண்டு எதிர்காலத்தில் இளைஞர்களின் எழுத்துகள் எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணிக்க முயலலாம்.
---
I.கலாச்சார-உணர்ச்சிசார் படைப்புத்துவம்
தமிழில் கலாச்சார உணர்வுகளின் அடிப்படையில் படைப்புத்துவம் நிகழ்கிறது. தமிழ் இலக்கியத்தில் உணர்வுகளின் அடிப்படையில் ஓர் வரலாற்றைப் பார்த்தால் கலாச்சார உணர்வுகளின் அடிப்படையில் உருவாகும் படைப்புத்துவத்திற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளலாம்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடேன்ப
என்ற தொல்காப்பியத்தின் விதி, இலக்கியத்தில் ஆளப்படும் உணர்வுகளைப் பற்றியதாக உள்ளது. அது வாழ்விலும் பொருந்திப் போகிறது. இந்த உணர்வுகள் அகம் மற்றும் புறம் சார்ந்தவை என்று பிரிக்கப்படுகின்றன. அவற்றில் அகம் சார்ந்தவை 32 மெய்ப்பாடுகளாகக் கூறப்படுகின்றன. இவை அனைத்துமே இலக்கியத்தில் ஆளப்படவேண்டியவையாக உள்ளன. இவை மென்மையான உணர்வுகளாகவும் வன்மையான உணர்வுகளாகவும் உள்ளன. இவற்றை விதி சார்ந்து இலக்கியத்தில் கையாளும் போது படைப்பின் உணர்வுகளாகிவிடுகின்றன.
பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் குறிப்பாக, திருக்குறளில் இந்த உணர்வுகள் அறம்சார்ந்த உணர்வுகளாக வெளிப்படுகின்றன. அதன் பின் காப்பியங்களில் காவிய உணர்வுகளாக நிலைபெறுகின்றன. அவை மிகை உணர்வுகளாகவும் மாறிவிடுகின்றன. ஏனெனில் சமூக மதிப்புகளை ஒரு குறிப்பிட்ட போக்கில் நகர்த்த இந்த வகையான மிகை உணர்வுகள் அவசியமாகின்றன.(கற்பை சோதித்தால் வெகுண்டெழுதல், ஒருவனுக்கு ஒருத்தி என்ற இருபாலியல் அமைப்பை இறுக்கமான அமைப்பாக மாற்ற வேட்கையின் உணர்வுகளுக்கான விதிகளை அமைத்தல்)
அதன் பின் பக்தி இலக்கியங்கள் உருவாகின்றன. சமயங்களின் எழுச்சியை முன்னெடுக்க அவை காரணமாகின்றன. அவற்றை அடியொற்றி இறை உணர்வுகளாக அவை பரிணமிக்கின்றன. அந்த உணர்வுகளில் தொல்காப்பியம் கூறிய அகம் சார் உணர்வுகளும் வன்மையாக வெளிப்படுகின்றன. ஆனால் அகத்தின் பால் மடைமாற்றப்பட்ட இறை உணர்வுகளாக அவை தோற்றம் பெறுகின்றன. அவை மத உணர்வுகளாகவும் சமய உணர்வுகளாகவும் தற்போது எச்சமாகியிருக்கின்றன.
அதன் பிறகு விளிம்புநிலை மனிதர்களின் உணர்வுகளாக சிற்றிலக்கியங்களில் விரிபவை, பேரிலக்கியங்களின் குறிப்பாக காப்பியங்களின் உணர்வுகளைப் போலச் செய்பவையாக இருக்கின்றன. அதன் பின் காலனியாக்கத்தில் உணர்வுகளின் இடம்பெயர்தல் நடக்கிறது. அது நாட்டு விடுதலை என்ற உணர்வில் நிலைபெற்றதாக வீறுணர்வு வகைமைக்குள் அடங்கிவிடுகிறது. திராவிட அரசியலின் உள்வாங்குதல் இயல்பு வாழ்வில் பெருகிவிட்ட காலகட்டம் என்பதால் உணர்வுகளின் செயற்கை தன்மை நீடித்திருந்தது.
ஊடகங்களில் வெளிப்பட்ட மலின உணர்வுகளாக அவை திசை மாறின. அந்த உணர்வுகள் வணிகத்தை அடிப்படையாகக் கொண்ட இதழ்களில் தட்டை நிலையை எய்தின. அந்த உணர்வுகளின் உறைந்த நிலை இன்றும் ஒரு தளத்தில் இருக்கிறது. அதற்கு எதிரான உணர்வுப் போக்குகளை சிறுபத்திரிகைகளும் சீரிய இலக்கியங்களும் கைக்கொள்ளத் தொடங்கி அவற்றின் அங்கீகாரத்தை வணிகம்சார் கலை வடிவங்களில் தேடுகின்றன.
இன்றைய பொருளாதார தாராளமயம், தகவல் தொழில்நுட்ப சுதந்திரம், உணர்வுகளுக்கு வெளிப்பாட்டைத் தந்திருக்கின்றன. அலைபேசிகளில் பகிர்ந்துகொள்ளும் உணர்சித்திரங்களாக அவை இன்று பெருக்கப்படுகின்றன.
தமிழில் உணர்வின் வரலாற்றிற்கான அடிப்படை கட்டமைப்பிற்காக இருப்பவற்றை இரண்டு காரணிகளைக் கொண்டு ஆராயலாம்.
1.மரபின் சாயல் 2.பாலின வேறுபாடு
1.மரபின் சாயல்
மனித மரபணுவில் தேங்கியிருக்கும் நினைவின் ஆதாரம் தொடர் சங்கிலியாய் இணைக்கப்படுகிறது. அகம் மற்றும் புறம் சார் உணர்வுகளும் இந்த மரபணு மூலம் தமிழ் மொழி உருமாற்றிய வகைமையை உள்வாங்கி இலக்கியம் வழி தடம் கொள்கின்றன. இதனால் மரபியலானது உணர்வின் வரலாற்றைத் தேக்கி மறுஉற்பத்தி செய்து படைப்பில் குறிப்பாக இலக்கியத்தில் பதிவாகக் காரணமாக அமைகிறது. அவ்வப்போது பிறழ்வு எனப்படும் ம்யுட்டேஷனும் உணர்வின் மாதிரியை சற்று மாற்றுகிறது.
மரபான உணர்வுகளாக இருப்பவை தன்னியல்பான உணர்வுகளாகக் கருதப்பட்டுவிடுகின்றன. சக்தி சொட்டுப் பொறியியல் எனப்படும் க்வாண்டம் உயிரியலின் கருத்துப்படி வினை ஊக்கிகளான ஹார்மோன்கள் உடலை இயக்கி படைப்புக்குள் மொழியைப் படியவைக்கின்றன. மரபியல் கூறுகள் புதிய மாற்றுகளை உணர்வுகளுக்குள் பதியவைத்துக் கொள்வதும் அதை படைப்பாக மாற்றுவதும் வெகு குறைவாகவே நடக்கிறது.
பொதுவான குணாம்சங்களை வைத்து உணர்வுகளை கட்டமைப்பதும் அவற்றை பாரம்பரியச் சொத்தாக சேகரித்து வைப்பதும் படைப்புகளின் நிலவரமாக உள்ளது. உதாரணமாக தாய்மை, என்றால் பேரன்பு. தாய்மையின் வடிவத்தில் வேறு சில வகைமைகள் என்பதாகவே படைப்புகள் பெருக்கப்படுகின்றன. கருணை என்ற அம்சத்தினை முன்வைத்த படைப்புகளாகவே தொடர்ந்திருக்கின்றன.
மரபியல் ரீதியாக உருவாகும் உணர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை அடைவது முதல்படி. புலனுணர்வுகளின் வழியாக சமூகப் பரப்பின் உணர்ச்சிகள் கைக்கொள்ளப்படுவதை அறிவது அடுத்த படி. உணர்வுகளின் உடல்களாக உருவாகுதல் எப்படி சாத்தியப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வது மற்றொரு படி.
உதாரணமாக மனுஷி பாரதி என்ற இளம் கவிஞர் எழுதிய கவிதை ஒன்றைப் பார்க்கலாம்.
(மனுஷி பாரதியின் கவிதை)
உன் அருகாமை தேவைப்பட்டபோது….
உன் அருகாமை வேண்டி நின்றேன்
நீ என் அருகில் இல்லை.
நீ என் அருகில் இல்லை.
மிகப்பெரிய துயரம் ஒன்று
நிதானமாகக் கொன்று கொண்டிருந்தது
என்னைக்
கொலைகள் செய்து பழக்கப்பட்ட முகபாவத்துடன்.
நிதானமாகக் கொன்று கொண்டிருந்தது
என்னைக்
கொலைகள் செய்து பழக்கப்பட்ட முகபாவத்துடன்.
அன்பின் வாசனையோ
கருணையின் நிழலோ
சிறிதும் அறிந்திராத துயரம்
அது.
கருணையின் நிழலோ
சிறிதும் அறிந்திராத துயரம்
அது.
ஒரு மாயச் சுழலைப் போல
உள்ளே இழுத்துச் சென்று கொண்டிருந்தது
என்னை.
ஊழிக் காலத்தின் கடைசி நிமிடங்கள் போல
பதற்றத்துடன் நகர்ந்துகொண்டிருந்தன
நாட்கள்.
உள்ளே இழுத்துச் சென்று கொண்டிருந்தது
என்னை.
ஊழிக் காலத்தின் கடைசி நிமிடங்கள் போல
பதற்றத்துடன் நகர்ந்துகொண்டிருந்தன
நாட்கள்.
அந்த மாபெரும் துயரத்தில் இருந்து
என்னை மீட்டுச் செல்வாய் என்று
கைகளை நீட்டியபடி காத்துக் கொண்டிருந்தேன்.
என் கை தொடும் தூரத்தில்தான்
நீ இருந்தாய்.
என்னை மீட்டுச் செல்வாய் என்று
கைகளை நீட்டியபடி காத்துக் கொண்டிருந்தேன்.
என் கை தொடும் தூரத்தில்தான்
நீ இருந்தாய்.
அப்போது
வேறு சிலரோடு சுவாரஸ்யமாக
உரையாடிக் கொண்டிருந்தாய்.
உன் உரையாடலும் பேச்சும்
கலையைப் பற்றியும்
கவிதையைப் பற்றியதுமாக இருந்தது.
உன்னைச் சிறந்த கலைஞன் என்று
சொல்லிக் கொண்டாய்.
வேறு சிலரோடு சுவாரஸ்யமாக
உரையாடிக் கொண்டிருந்தாய்.
உன் உரையாடலும் பேச்சும்
கலையைப் பற்றியும்
கவிதையைப் பற்றியதுமாக இருந்தது.
உன்னைச் சிறந்த கலைஞன் என்று
சொல்லிக் கொண்டாய்.
சன்னமான குரலில்
மீண்டும் மீண்டும்
உன்னை அழைத்துக் கொண்டே இருந்தேன்.
துயரச் சுழல் என்னை உள்ளிழுத்துச் செல்வதை
நீ பார்த்துக் கொண்டே இருந்தாய்.
மீண்டும் மீண்டும்
உன்னை அழைத்துக் கொண்டே இருந்தேன்.
துயரச் சுழல் என்னை உள்ளிழுத்துச் செல்வதை
நீ பார்த்துக் கொண்டே இருந்தாய்.
உன் அருகாமை தேவைப்பட்டபோது
நீ என் அருகில் இல்லை.
என் குரல் தொடும் தூரத்தில்
ஓர் இசையைக் கேட்டபடி லயித்திருந்தாய்...
நீ என் அருகில் இல்லை.
என் குரல் தொடும் தூரத்தில்
ஓர் இசையைக் கேட்டபடி லயித்திருந்தாய்...
1.பெண்மை என்பதே மரபுசார் குணாம்சமாகக் கொள்ளப்படுகிறது.
2.அன்பு, கருணை என்ற குணாம்சங்கள் தொடர்ந்திருக்கும் மரபியல் அம்சங்களை வெளிப்படையாகக் காட்டும் க்விதை.
3.நீ, நான் என்பவை பெண் மற்றும் ஆண் என்றே வாசக வரம்பானது உட்செறித்துக் கொள்வதும் மரபியல் குணாம்சத்தின் வெளிப்பாடுதான்.
4.மரபியல் உணர்வுகளுக்குள் விழிப்படையாமல் இருந்துகொண்டு படைபபாக்கத்தை நிகழ்த்துவதில் சுய பரிசோதனைக்கான களம் உருவாவதில்லை.
2.பாலின வேறுபாடு
பாலினம் சமூகத்தால் கட்டமைக்கப்படுவது. பாலினம் என்பதே ஒரு நிகழ்த்துதல்தான். பாலியலின் தற்செயலான விளைவல்ல பாலினம். பாலியலை உறுதிப்படுத்தும் ஒன்றும் அல்ல. பாலியல் உடல்களுக்கும் கலாச்சார கட்டமைவான பாலினத்திற்கும் அடிப்படையான தொடர்பின்மை உள்ளது. இருபால் உறவு என்ற நிறுவனத்தை மையமாக வைத்து பாலினம் அறியப்படுகிறது. ஆண்மை, பெண்மை, பிற பாலுமை, இவை எல்லாமே வேறுபாடுகளின் அடிப்படையில் உருவானவை. ஓர் உடலில் இவை இருப்பதாக ஊன்றுவது ஓர் கற்பிதம். உடல் பொதுவானது. பாலுமைகளின் கூட்டுத் தொகுப்பு அது. இரு பால் உறவின் விருப்பினால் பாலினமானது கட்டப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் இருபால் உறவுதான் அதிகாரத்தையும் சொல்லாடலையும் உற்பத்தி செய்கிறது. இந்தப் புரிதல் இருந்தால் பாலினத்தின் சிக்கலை எழுத்தில் தவிர்க்கலாம். பெண்ணியவாதம் பெண்ணுக்கும் பெண் எழுத்துக்கும் மட்டுமே உரியதல்ல. அது பொதுவானது. மேலும் ஆண் எதிர்ப்பு என்பது மட்டுமே பெண்ணியம் அல்ல. எல்லா பாலினங்களையும் உள்ளடக்கியதுதான் பெண்ணியம். பாலினச் சார்பை அடையாளப்படுத்திக் கொள்வதுதான் முதல் சவால்.
பாலினம் இன,நிற,வர்க்க,பால்,தேச எல்லைகளை ஊடுருவியிருப்பதாகப் புரிந்துகொண்டால் எழுத்தின் குணாம்சம் மாறும். தன்னிலையைக் கற்றல் என்ற நிலையில் குழந்தை சமூக மொழியை உள்வாங்குவதும் அதன் காரணமாகப் பாலினம் நிகழ்த்தப்படுவதும் இன்னும் படைப்பாகவில்லை. இந்த காலகட்டத்தில்தான் உணர்வுகளின் ஆதிக்கம் மொழிவழியாக உடலரசியலை நிகழ்த்தத் தொடங்குகிறது.
ஆண்மை என்பது பொது என்றும் பெண்மை என்பது தனிப்பட்டது என்றும் தொடர் சித்திரமாக படைப்புகளில், கருத்தாக்கங்களில் செயல்படுகிறது. உடல்சார் அனுபவங்களைப் படைத்தல் என்பதுதான் பெண்ணிய மொழி என்பதாக அடையாளப்படுத்துவதில் ஆண் என்ற பகுப்பின் அதீத கற்பனையான பெண் உடலை உள்வாங்குதலாக மாறுகிறது. லிங்கமையமொழியின் பிறன்மை போலாகத்தான் அது இருக்க முடியும்.
பாலினம் நிறுவப்படுவதில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்வதோடு அதற்குப் பின்னணியில் இயங்கும் உளவியல் வரலாற்றுப் போக்குகளைக் கண்டுகொண்டு அதிலிருந்து விடுபடுவதற்கான புனைதலை முன்வைப்பது மற்றொரு சவாலாகிறது. ஏனெனில் பாலினத்தை அடையாளப்படுத்த கூடா பாலியலிலிருந்து தன்பால்விருப்பு வரையான பாலியல் சிக்கல்களை வரலாற்று ரீதியில் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும். இந்த உணர்தலுக்குள் செயல்படும் படைப்புகளை உருவாக்குதல் அனைத்துப் பாலின எழுத்தாளர்களின் சவாலாக இருக்கும். பாலினம் என்பது ஒரு பன்மை போக்கு. அதன் உணர்வுக் களங்கள் ஒரு சார்பானவையாக இருப்பதை அறிதலே சமூகவயமாவதிலிருந்து தவிர்ப்பதற்கான தொடக்கமாக இருக்கும்.
மற்றொரு உதாரணமாக கவிஞர் அனார் எழுதிய ஒரு கவிதையைப் பார்க்கலாம்.
பெண் சிலந்திப்பூச்சியின் வீடு-அனார்
ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி...மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கவ்வி
ஆற அமர ஆசையாய்..என்ன சுவையாய்..
கொன்று.............
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி
நிலவில் துளையிட்ட ராட்சத முனையை
மலை முகட்டில் இழுத்துக்கட்டி
முடிகிறாள் மறுமுனையை
முதலையின் தருணக் காத்திருப்பில்
கோடித் தாபங்களாய் வலை விரித்திருக்கிறாள்
வெறும் கோதுகளாகிய பிற பூச்சிகளும்
ஆண் சிலந்திகளின் இறந்த உறுப்புகளும்
பெண் சிலந்தியின் சிறைவாசலில் எறியப்பட்டிருக்க
கனவின் துவாரங்களின் வழி
சொட்டித் தேங்கிய
காமக் கடல் அலைகள் பாய்கிறது
சிலந்தி வயிற்றினுள்
சிலந்திப் பெண்ணிலிருந்து தோன்றி
நீளத் தொடங்குகிற நூலாம்படையுடன்
மித மிஞ்சிய வல்லமைகளாய்ப் பொங்கி
உலகைத் தாண்டிப் பெரிதாகிறது...
1.பெண் சிலந்தி என்பது பெண்ணாகவும் இருக்கலாம்.
2.பெண்மையின் குணாம்சங்களைத் தொகுத்திருப்பதாக இங்குக் கொள்ளலாம்.
3.பெண் விடுதலை உணர்வு, சிலந்தியின் விடுதலை உணர்வாகிவிட்டது
4.விடுதலை உணர்வு என்பதற்கு ஒரு சமூக வரையறை அல்லது கலாச்சார தொனி கொண்டிருப்பதை கவிதைக்குள்ளிருந்து புரிந்து கொள்ளமுடிகிறது
5.பெண்மை என்பதற்கான கட்டுபடுத்தப்பட்ட இயக்கத்திலிருந்து விடுபடுவதற்கான முறைமைகளைக் காட்டுகிறது இக்கவிதை.
6.பெண்மை என்பதற்கான விடுபடுதல்கள் வெறும் கட்டுப்பாடுகளாகக் கொண்டுவிடுகையில் இந்த வகையான படைப்பாக்கம் சாத்தியப்படும்
---
மற்றொரு இளம் கவிஞர் நிஜந்தன்தோழன் எழுதிய ஒரு கவிதையைப் பார்க்கலாம்.
தொண்டைக்குள் சிக்குண்ட முள்ளென
நெஞ்சுக்குள் நெருடும்
என்னமோவொன்று
சமயங்களில்
நீ உடைத்தெறிய முயலும்
நெடும் மௌனங்களினூடு
தகர்ந்து போவது
என் நெருக்கமான உரையாடல்கள்
அதன்பின்னரான விடைபெறுதல்கள்
உணர்வுகளை அசுரபசியுடன்
பிடுங்கித் தின்னும்
இந்தக் காதலுடன்
தொலைபேசி கைநழுவ
கால்களினிடையே முகம்புதைத்து
விம்மி விம்மியழும் பொழுதுகள்
இனிமேலும் வேண்டாமெனக்கு..
நெஞ்சுக்குள் நெருடும்
என்னமோவொன்று
சமயங்களில்
நீ உடைத்தெறிய முயலும்
நெடும் மௌனங்களினூடு
தகர்ந்து போவது
என் நெருக்கமான உரையாடல்கள்
அதன்பின்னரான விடைபெறுதல்கள்
உணர்வுகளை அசுரபசியுடன்
பிடுங்கித் தின்னும்
இந்தக் காதலுடன்
தொலைபேசி கைநழுவ
கால்களினிடையே முகம்புதைத்து
விம்மி விம்மியழும் பொழுதுகள்
இனிமேலும் வேண்டாமெனக்கு..
எதுவும் பேசிக்கொள்ளாத கணங்களின்
வலி தெறிக்கும் குரலில்
நினைப்பதனைத்தையும்
சொல்லிவிட முடிந்திடுமாயின்
சிதைதல் சிலகாலங்களுக்கேனும்
தள்ளிப்போகக்கூடும்
காத்திருத்தல்களில் வந்துமுடியும்
கனவுகளின் கனத்த முடிச்சுகளுடன்
தன் வழி ஏகுதலும்
பிரியம் கூற விழைதலும்
பழம் பஞ்சாங்கங்களாய்க் கசக்க
வெறும் வார்த்தைகள்
வலி தெறிக்கும் குரலில்
நினைப்பதனைத்தையும்
சொல்லிவிட முடிந்திடுமாயின்
சிதைதல் சிலகாலங்களுக்கேனும்
தள்ளிப்போகக்கூடும்
காத்திருத்தல்களில் வந்துமுடியும்
கனவுகளின் கனத்த முடிச்சுகளுடன்
தன் வழி ஏகுதலும்
பிரியம் கூற விழைதலும்
பழம் பஞ்சாங்கங்களாய்க் கசக்க
வெறும் வார்த்தைகள்
உன்னில் சலனங்களை
ஏற்படுத்தக் கூடுமோவென்ற
சந்தேகங்களோடு
முன்புபோல் எதுவும்
ஆறுதலளிப்பதாயில்லை
விழிநீரை வீணாக்குவது மட்டுமே அழுகையாகின்
அழத்தோன்றினால்
அழுவதில் ஒன்றுமேயில்லைதான்
நீயற்ற வெறுமைகளின்
இறுக்கந்தளர்த்த வழியற்று
எனக்கான அழுகையாகிப் போனமை
நீயறிவாயா எனதன்பே.
ஏற்படுத்தக் கூடுமோவென்ற
சந்தேகங்களோடு
முன்புபோல் எதுவும்
ஆறுதலளிப்பதாயில்லை
விழிநீரை வீணாக்குவது மட்டுமே அழுகையாகின்
அழத்தோன்றினால்
அழுவதில் ஒன்றுமேயில்லைதான்
நீயற்ற வெறுமைகளின்
இறுக்கந்தளர்த்த வழியற்று
எனக்கான அழுகையாகிப் போனமை
நீயறிவாயா எனதன்பே.
1.ஆண்மையின் ஒரு வகை வெளிப்பாடகவே இதை வாசிக்கத் தூண்டும்
2.பாலினத்தின் சமூகவயமாக்கலில் விளையும் ஒரு குரலாக இது உள்ளது.
3.ஏற்கனவே புரிந்துகொள்ளப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட உணர்வுகளின் மற்றும் ஒரு தொகுப்பு இது.
கலாச்சார உணர்ச்சிசார் படைப்புகள் தொடர்ந்து உணர்ச்சிப் பூர்வமான மனித ஆளுமையைக் கட்டமைக்கவே பயன்படுகின்றன. அதற்கு அடுத்த கட்ட படைப்புகளை உருவாக்க இயல்பிலேயே உண்ர்வுகளைப் பற்றிய அறிதல் சாத்தியமாகவேண்டும்.
II.பின்நவீனத்துவ வடிவம் குறித்த கற்பனை
உலக இலக்கியங்கள் பலவற்றையும் வாசித்த அனுபவம் கிடைக்கும் போது உருவாகும் இலக்கியம் ஒரு புதிய முனையைக் கொண்டிருக்கலாம். தமிழில் அநேகமாக எதார்த்த வகை சிறுகதைகளும் நாவல்களும் அதிகமாக எழுதப்படுகின்றன. அவையும் திரும்பத் திரும்ப ஏதோ ஓர் அறிந்த உணர்வை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுபவையாகவும் கிளர்த்துபவையாகவும் உள்ளன. அதனால் பன்மொழி இலக்கியங்களின் அறிமுகம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் இதுவரை அறியாத ஓர் வாசிப்பனுவத்தையும் படைப்பனுவத்தையும் தரும்.
சில பன்மொழி இலக்கியங்கள் பற்றி இங்கு குறிப்பிடலாம். அந்த்வாந்த் எஸுபெரி எழுதிய 'லிட்டில் பிரின்ஸ்' என்ற ''குட்டி இளவரசன்''. இந்த நாவல் அளவில் மிகவும் சிறியது. ஆனால் கருத்தில் மிகவும் கடினமாகப் புரிந்துக்கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. ஒரு விமானி தன் விமானத்தை ஒரு பாலைவனத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறங்க வேண்டியிருக்கிறது. அங்கு யாருமற்ற தனிமையில் ஒரு குட்டி சிறுவனை சந்திக்கிறார். அந்த சிறுவன் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவன். அவன் மட்டுமே தனியாக அந்த கிரகத்தில் இருக்கிறான். அவன் பல கிரகங்களைப் பார்த்து வருவதற்காக பூமிக்கு வந்திருக்கிறான். அவன் பூமியில் பார்த்த அனைவரும் சுயநலம் கொண்டிருப்பதையும் அதிகாரத்தின் வெறி கொண்டு விளங்குவதையும் கண்டு தன் இடத்திற்கே திரும்பிவிட விரும்புகிறான். அவனை ஒரு பாம்பு தீண்டிவிடுகிறது. ஆனாலும் அவன் காணாமல் போகிறான். அவன் தன் கிரகத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கருதிக் கொண்டு அநத விமானி தன் விமானத்தை சரி செய்து பயணத்தைத் தொடர நினைக்கிறார். அந்த சிறுவனை மீண்டும் காணவேண்டும் என்ற நம்பிக்கைக் கொண்டிருக்கிறார். எதார்த்த வகை நடையில் எழுதப்பட்டாலும் இந்தக் கதையோ அதன் பொருளோ இதுவரை படித்திராத ஒரு வாசிப்பைக் கொடுக்கின்றன. பல பொருள் அடுக்குகளைக் கொண்டதாக இந்தக் கதை உள்ளது.
இது போன்ற கதைகளும் இன்னும் லூயிஸ் கேரோல் எழுதிய 'லுகிங் த்ரூ க்ளாஸ்' என்ற 'ஆடியினூடே' என்று மொழிபெயர்க்கப்பட்ட கதையும் ரால்ட் டால் எழுதிய கதைகளும் சிறுவர்களுக்கு மட்டுமல்ல எல்லா வயதினருக்கும் ஏற்ற கதைகளாக உள்ளன.
மிலரோட் பாவிச் எழுதிய 'டிக்ஷனரி ஆப் கஜார்ஸ்', இரு நூல்களாக உள்ள நாவல். அதில் ஒரு வரியைப் படித்தால் அதில் வரும் ஒரு சொல்லுக்கு அந்த நூலின் வேறொரு பகுதியில் பொருள் இருக்கும். அங்கிருந்து அந்த நாவலைப் படிக்கலாம். அந்த இடத்தில் வரும் வரியில் இருக்கும் ஒரு சொல்லின் பொருள் மற்றொரு பகுதியில் இருக்கும். அங்கிருந்து அந்த நாவலைத் தொடரலாம். இந்த வகையாக எழுதப்பட்ட இந்த நாவல் வடிவத்திலும் பொருளிலும் இதுவரை வாசித்திராத ஓர் அனுபவத்தைத் தருகிறது.
உம்பர்ட்டோ ஈகோ என்ற இத்தாலிய எழுத்தாளர் எழுதிய ஃபூக்கோஸ் பெண்டுலம் என்ற நாவல் ஏழு வருடங்கள் ஆய்வு செய்து எழுதப்பட்ட ஒன்று. நிலத்திற்கு அடியிலும் கடலுக்கு அடியிலும் ஓடிக் கொண்டிருக்கும் விசைப் பாதைகளைத் தக்கவைத்து பூமியின் இயக்கத்தைப் பாதுகாக்கும் சித்தர்கள் போன்ற ஒரு குழுவைப் பற்றி எழுதப்பட்ட கதை. வரலாற்றை எழுதுவது போல எழுதப்பட்ட கதை. கதையின் வரலாறா அல்லது வரலாற்றின் கதையா என்ற மயக்கத்தைத் தருவதாக உள்ளது.
பி.எஸ்.ஜான்சன் எழுதிய நாவல்கள், சாமுவேல் பெக்கெட்டின் நாவல்கள், ஜார்ஜ் லூயி போர்ஹே எழுதிய கதைகள் பின் நவீனத்துவ வடிவங்களுக்கு மிகச் சிறந்த உதாரணங்களாக உள்ளன. அதே போல் ஜோஸ் சரமேகோ, இடாலோ கால்வினோ, போன்றோரின் நாவல்களும் குறிப்பிடத்தக்க பின்நவீனத்துவ வகைமைகளாக இருக்கின்றன.
ஆனால் இந்த வகையான பன்மொழி இலக்கிய அறிமுகம் இல்லாததனால் பின்நவீனத்துவ வடிவம் குறித்து இளைய எழுத்தாளர்கள் சோதனை ரீதியாகவும் எழுத இயலாத நிலை இருக்கிறது. உதாரணமாக அபிலாஷ் சந்திரன் எழுதிய ஒரு கதை, 'கொலை' என்ற தலைப்பில் உள்ளது. விபத்தில் நடந்த மரணத்திற்காக பொறுப்பேற்க வைக்கப்படும் ஒரு நபர் தன்னை இளவயதில் தாக்கிய ஒரு நபரை கொலை செய்துவிட்டு தண்டனையை ஏற்கும் கதை. இந்த கதை எழுதப்பட்ட விதமும் கதைக்கருவும் ஏற்கனவே கேட்ட, தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது.
ஜி.முருகன் எழுதிய 'மஹாவிஜயம்' எனற ஒரு கதை. கடவுள் மீண்டும் வருவதைப் பற்றியது. இது ஏற்கனவே தெரிந்த ஒரு கதைதான். இது அனைவரிடமும் இருக்கும் கதை. அதில் கடவுள் போல் ஒருவர் வருவது எப்படி கண்டும் காணாமல் விடப்படுகிறது என்பதாகக் கதை சொல்லிச் செல்கிறது. எதார்த்த வகையில் எழுதப்பட்ட நையாண்டி கதை இது. புதுமைப்பித்தன் ஏற்கனவே இது போன்ற கதைகளை எழுதிவிட்டார். இன்றைய இளைய சமூகம் இது போன்ற எழுத்துகளின் அறிமுகத்திற்குப் பின்னாலும் திரும்பவும் அதையே படைக்கிறது.
எம்.டி.முத்துக்குமாரசாமி எழுதிய சில கதைகள் பின் நவீனத்துவ வடிவங்களை உள்வாங்கியிருக்கின்றன. 'இரவு மணி 11.59' என்ற சிறுகதை இத்தகைய ஒரு வடிவத்தைத் தாங்கியிருக்கிறது. மெய்நிகர் உலகின் பாத்திரங்களோடு இணைத்து புனையப்பட்ட கதை இது. ஏற்கனவே இவர் சில்வியா என்ற பெயரில் பின்நவீனத்துவ கதைகளை எழுதியிருக்கிறார். தற்போது எழுதி வரும் கதைகளும் முக்கியமான கதைகளாக உள்ளன. திசேரா என்ற எழுத்தாளரின் கதைகளும் இது போன்ற ஒரு பின்நவீனத்துவ வடிவத்தைக் கொண்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். சண்முக விமல்குமார் எழுதிய கவிதைகளும் இது போன்ற வடிவங்களைக் கொண்டிருக்கின்றன.
பின்நவீனத்துவ வடிவம் பற்றிய ஒரு கற்பனையைப் பெற பன்மொழி இலக்கிய ஆக்கங்கள் குறித்த அறிமுகம் தேவை. அது இளைய எழுத்தாளர்களிடம் குறைவாக உள்ளது. உரையாக எழுதத் தெரிந்தால் கதை உருவாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. பன்மொழி ஆக்கங்களைப் படிக்கும் போது அந்த படைப்புக்குரிய கற்பனையும் உழைப்பும் பற்றிய கருத்து உருவாகும். அதற்கான தேவை இப்போது அதிகமாக இருக்கிறது. மாயாஜால எதார்த்தம், பெருங்கதையாடல், பகடி, புதிர், குறைந்தபட்ச படைப்பு, அதிகபட்ச படைப்பு என்று பல வடிவங்கள் உள்ளன. அவற்றை இளைய எழுத்துகள் கைக்கொள்ளவேண்டும்.
ஒரு நூற்றாண்டு தனிமை, டான் கவிக்ஸாட், போன்ற படைப்புகள் பின்நவீனத்துவ நாவலின் வகைமைகளுக்கு முன் உதாரணமாக உள்ளன. இந்த நாவல்கள் ஏற்படுத்திய தாக்கம் தமிழில் வந்த தாண்டவராயன் கதை, விஷ்ணுபுரம் போன்ற படைப்புகளில் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்..
III.தத்துவச் சிந்தனை
தாக்கம் அல்லது பாதிப்பு என்பதுதான் உணர்ச்சிக்கு முக்கியமான காரணி. உணர்வுகள் தனித்துவமானவை உயிர்வரைவுத் தன்மையுள்ளவை. உணர்ச்சிகள் சமூகவயமானவை. பாதிப்பு அல்லது தாக்கம் என்பது தனிப்பட்ட உணர்வுகளுக்கு முந்தைய நிலையில் இருப்பவை. உணர்வுகள் அனுபவத்தினை சார்ந்து புரிந்துகொள்ளப்படக்கூடியவை. உணர்ச்சிகள் பொதுவானவை. விதிகளுக்கு உட்பட்டவை. தாக்கம் என்பது அழுத்தமான முன்னுணர்வு சார்ந்தது. அதனை மொழி மூலமாக பெயர்த்துச் சொல்லிவிட முடியாது. ஒரு தாக்கம் காரணமாக உணர்வு உருவாகிறது. சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட தன்னுணர்வாக இருக்கும் கலாச்சார உணர்ச்சி அதனைக் குறிப்பிட்ட மாதிரியில் செலுத்தி வெளிப்படுத்துகிறது. இது போன்ற நுட்பமான புரிதல்களைக் கொண்டு படைப்பாக்கம் நிகழ்ந்தால் அதன் பொருள் ஒரு தத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.
அழகியல் உணர்வாகவோ, பேருண்மைகளின் தேடலாகவோ, மாயமாகவோ, மந்திரமாகவோ, யோகமாகவோ, புராணமாகவோ ஏதோ ஒரு வகையில் தத்துவச் சிந்தனை படைப்பிற்குள் இருக்கவேண்டியது அவசியமாகிறது. நேரடியான பொருளை எந்த உழைப்பும் இன்றி புரிந்துகொள்ளக் கூடிய பொருளைத் தரும் படைப்புகளில் தத்துவச் சிந்தனைக்கு இடமின்றி போகும்.
எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் காப்கா எழுதிய இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று உருமாற்றம்(மெட்டாமார்ஃபஸிஸ்) என்ற நாவல். விலங்கும் மனிதனும் இணைந்து உருமாறியதை வாசிக்கையில் விலங்கும் மனிதனும் குணாம்சங்களில் பொதுவாக இருப்பதையும் மாறி மாறிப் பயணிப்பதையும் அறிய முடிகிறது. பெரும்பான்மை உணர்வுகளை மறுத்து அதற்கு எதிரான ஓர் உருமாற்றத்தை, தகவியலை இந்த நாவல் ஏற்படுத்தியது.
நகுலன் எழுதிய ஒரு கவிதையை இங்குப் பார்க்கலாம்.
எல்லைகள்-நகுலன்
அவன் எல்லைகளைக் கடந்து கொண்டி
ருந்தான். ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லைத் தாண்டாமல் நின்றால் ''அவன்
அதுவாகும் விந்தை'' நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை
மனிதனும் விலங்கும் கலந்து உருவாகும் உருமாற்றத்தைச் சொல்லும் ஒரு கவிதை இது. அல்லது மனிதனிடம் இருக்கும் விலங்கு குணாம்சங்களைச் சுட்டிச் செல்லும் ஒனறு என்றும் கூறலாம்.
இந்த வகையான தத்துவச் சிந்தனை இருப்பதால் வாசிப்பனுவமானது மாற்றி அமைக்கப்படுகிறது. புதிதான ஓர் அனுபவமாகக் கட்டப்படுகிறது. அந்தப் புனைவோ, கவிதையோ கோரும் உருமாறுதல் வாசிப்பில் சாத்தியப்படுகிறது. இது போன்ற தத்துவச் சிந்தைனையைக் கொண்டிருக்கும் இளைய எழுத்துகள் தமிழில் அரிதாகவே உள்ளன. இவற்றின் தேவை இப்போது அதிகம் உள்ளது.
மற்றொரு கவிதை நேசிமித்திரன் எழுதியது.
லேசர் பொன்வண்டுகளும் மாரீசப் பெண்ணும்-நேசமித்திரன்
நீர்ச்சிலந்தி கண்கள்
நெய்தபடி இருக்கிறது நீத்தார்
கடனொப்ப ஆகாயம் பார்த்த சொற்களுடன்
ஆதிக் குகையில் ஒளித்த சிக்கி முக்கி கல்
நடுக்கடலின் நங்கூரம்
லேசர் பொன்வண்டுகள் மொய்க்கும்
நடனத்தரையில்
சொட்டு உதிரம்....
துளிர் -சருகு குழப்பத்தில்
தேவாலயத்தின் பாதி எரிந்த மெழுகை ஏற்றுகிறது ஏதுமற்ற மற்றுமோர் கரத்தின்
பிரார்த்தனை
பேழைக்குள் உறங்குகிறது தைலமிட்ட உடல்
யுகங்கடந்து தீண்டும் கருந்துளை சூரியனுக்கு
தன் மத்தகம் சிதறச் சிதற கொலுசொலித்து
மயன் செய்த குளம்போக காத்திருக்கிறாள்
மாரீசப் பெண்
நெய்தபடி இருக்கிறது நீத்தார்
கடனொப்ப ஆகாயம் பார்த்த சொற்களுடன்
ஆதிக் குகையில் ஒளித்த சிக்கி முக்கி கல்
நடுக்கடலின் நங்கூரம்
லேசர் பொன்வண்டுகள் மொய்க்கும்
நடனத்தரையில்
சொட்டு உதிரம்....
துளிர் -சருகு குழப்பத்தில்
தேவாலயத்தின் பாதி எரிந்த மெழுகை ஏற்றுகிறது ஏதுமற்ற மற்றுமோர் கரத்தின்
பிரார்த்தனை
பேழைக்குள் உறங்குகிறது தைலமிட்ட உடல்
யுகங்கடந்து தீண்டும் கருந்துளை சூரியனுக்கு
தன் மத்தகம் சிதறச் சிதற கொலுசொலித்து
மயன் செய்த குளம்போக காத்திருக்கிறாள்
மாரீசப் பெண்
1.மாரீசன் என்ற புராணப் பாத்திரத்தின் அடியொற்றி பெண்ணாக உருமாறுகிறது இங்கு.
2.புராணங்களின் நவீன சொல்லாடலாக கவிதை மாறியிருக்கிறது.
3.இந்தக் கவிதையில் புராணமும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய குறிப்பும் இணைந்து இருப்பதைக் காணமுடிகிறது.
4.புடமிட்ட உடல்கள் அண்டங்களின் அழிவு வரை காத்திருப்பதைச் சொல்லும் ஒரு வரி.
5.மாயன் என்ற ஆதி இனத்தின் குளத்தில் செவ்வாய் கிரகத்துப் பெண் இறங்குவது போல் ஒரு கற்பனையை இறுதியில் சொல்லிச் செல்கிறது கவிதை.
6.புராணத்தின் கூறுகளை எடுத்து வேற்றுக்கிரகச் செய்திகளுக்குள் புனைந்து இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
7.முன்னோர்களின் இறுதிச் சடங்கும் பூமிக்கு மீண்டும் வரப்போகும் இறை குமரனை தரிசிக்கக் காத்திருக்கும் பிரார்த்தனையும் இதில் அவநம்பிக்கைக் கொண்டவர்களாக வேற்றுக்கிரகவாசிகள் இருப்பார்கள் எனற கற்பனையும் கொண்டு உருவான நாடகீயத்தைப் பற்றி புனையப்பட்டிருக்கிறது இக்கவிதை.
விமர்சனத் துறையில் இளையவர்களின் எழுத்துகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இல்லை. ரசனைபூர்வமான விமர்சனங்களையே அதிகம் காண முடிகிறது. படைப்பைக் கட்டுடைத்து வாசிக்கும் பயிற்சி மிகவும் குறைவாக உள்ளது. இலக்கியத்தை மட்டும் அல்ல சக மனிதர்கள், நடப்பியல் சம்பவங்களையும் கட்டுடைக்கும் அவசியம் இருப்பதை முதிய சமூகமும் உணராததால் இளைய சமூகத்திற்கு அதைக் கொண்டு செல்லவில்லை. மேலும் விமர்சனத்தில் ஆழந்த ஈடுபாடு கொண்டிருந்தால் அதற்கு பின்னணியாக தத்துவ நூல்களைப் படிக்கவேண்டியது அவசியமாகிறது. ஆனால் அது போன்ற ஒரு தேடல் இளைய விமர்சகர்களிடம் காண முடியவில்லை.
- கலாச்சார உணர்ச்சிசார் படைப்புகள் ஏற்படுத்தும் விளைவுகள் ஆக்கத்தைக் கொடுப்பவையா என்பது சந்தேகமே. உணர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்கும் படைப்புகளே ஆக்க இலக்கிய வகையாக உள்ளன.
- பன்மொழி இலக்கிய அறிமுகம் இல்லாத எழுத்துகள் மீண்டும் மீண்டும் ஒரே வகையிலான வட்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
- தத்துவச் சிந்தனையைத் தவிர்த்து எழுதப்படும் எழுத்துகள் வாசிப்பனுவத்தில் எந்த ஓர் உழைப்பையும் கோருவதில்லை.
இந்த முடிவுகளைத்தான் இளைய எழுத்துகளின் எதிர்காலம் பற்றி சிந்தித்த போது பெறமுடிந்தது.
உதவிய நூல்கள்:
1.தொல்காப்பியம்-பேராசிரியர் உரை
2.மனுஷி பாரதி கவிதைகள்(முகநூலிலிருந்து)
3.அனார் கவிதைகள்(வலைப்பூவிலிருந்து)
4.நிஜந்தன்தோழன் கவிதைகள்(முகநூலிலிருந்து)
1.The Cultural Politics of Emotion-Sarah Ahmed, Routledge, 2012
2.After Darwin:Animals, Emotions and the Mind, Edited by Angelique Richardson, Amsterdam, 2013
3.Darwin and Derrida on Human and Animal Emotions:The Question of shame As a Measure of Ontological Difference-Linda Williams
No comments:
Post a Comment