அவன் இரவு
தூங்கும் போது ஒரு பெண் பாடும் ஒலி கேட்டது. அவன் அதைக் கேட்டுக் கொண்டே
இருந்தான். தூக்கம் கலைந்து எழுந்த போது பாடல் நின்றுவிட்டது. கனவு ஏதோ கண்டு
அதில் ஒலித்த பாடல் என நினைத்துக் கொண்டு தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான்.
அடுத்த நாள் இரவு தூங்கும் போது மீண்டும் அதே பெண்ணின் பாடல் ஒலி கேட்டது. அவன்
அதில் மூழ்கிப் போனான். தூக்கம் கலைந்த பின் பாடல் நின்றுவிட்டது. இது தினம்
நடக்கும் நிகழ்வாகிப் போனது. அவனுக்கு ஒரு நாள் இரவில் தூங்காமல் இருந்து அந்தப்
பாடல் ஒலிப்பதைக் கேட்கவேண்டும் என முடிவு செய்து தூங்காமல் அமர்ந்திருந்தான்.
பாடல் கேட்கவில்லை. அடுத்த இரவு தூங்கிப் போனான். மீண்டும் அதே பெண்ணின் பாடும்
ஒலி கேட்டது. தூக்கத்தில் எப்படியாவது யார் பாடுவது எனக் கண்டுபிடிக்கவேண்டும் என
எவ்வளவோ முயற்சி செய்துபார்த்தான், முடியவில்லை. அடுத்த இரவு தூங்கும் போதே அந்தப்
பாடும் பெண் யார் என்று தெரியவேண்டும் என முருகனிடம் வேண்டிக் கொண்டான். அன்று
இரவு பாடல் ஒலித்தது. இப்போது தூக்கத்தில் அவனால் பேச முடிந்தது. யார் பாடுவது
எனக் கேட்டான். நான் உன் தூக்கத்தின் காதலி. என் பாடலால் மட்டுமே உன்னை வந்தடையமுடியும்.
இப்படியே உன் தூக்கத்தில் என்னை இருக்க அனுமதி. என் பாடல் உன்னைத் தாலாட்டும்
என்றாள் அந்தப் பெண். இவனும் வேறு வழியின்றி அந்தப் பெண்ணுக்குத் தன் தூக்கத்தில்
பாட இடம் கொடுத்தான். காலையில் முருகனிடம் அந்தப் பெண் தூக்கத்தில் மட்டுமல்ல
எப்போதும் தன்னிடம் இருக்கவேண்டும் என வேண்டினான். அந்தப் பெண் எப்போதும் உடன்
இருக்கவேண்டும் என்றால் அவன் தூங்கக் கூடாது எனவும் அப்படி அவன் தூங்கிப் போனால்
அவள் மீண்டும் அவன் தூக்கத்தில் மட்டுமே பாடுவாள் என முருகன் கூறினான். அதற்கு
ஒத்துக் கொண்டு தூங்காமல் இருக்கத் தொடங்கினான். அந்தப் பெண்ணும் அவனிடம் வந்தாள்.
ஓர் இரவு அவன் அறியாமல் தூங்கிப் போனான். அந்தப் பெண் மீண்டும் அவன் தூக்கத்தில்
மட்டும் வந்து பாடத் தொடங்கினாள்.
No comments:
Post a Comment