3.தன்னிலை
சுயமானது தன்னிலையாக கட்டப்படும் என்றும் மற்றமையாக அது வெளிப்படும் என்றும் நனவிலியை மையமிழக்க வைத்து சிதைவடைந்த உடலை தந்தைமை கலாச்சாரத்தில் புனைவதை உறுதிப்படுத்தும் என்றும் கூறி பெண்மையின் தன்னிலையை காணாமல் செய்துவிட்ட உளவியல் ஆய்வும் உண்டு. மணம் செய்யாத பெண் உடல் பொருளற்றிருப்பதாக பயனிற்றிருப்பதாக அறவுரை வழங்கப்பட்டு விதிகளை பெருக்கிய பல நூற்றாண்டு பெண்மையின் தன்னிலையும் பேசும். பெண் தன்னிலை அது கட்டப்படுவதற்கு முன்பான விதிகளால் ஆளப்பட்டிருக்கும்[1]. சமூக வாழ்நிலையில் வாழமுடியாத, வாழ இயலாத தன்மையையும் கொண்டிருக்கும் தன்னிலை என்ற பரப்பில் தனித்த உயிராக நிலை பெற்ற, விலக்கப்பட்ட, உள்ளிருப்பாக மாறும் பெண்மையின் ஒழுங்கமைவு, பால் என்ற பதத்தின் தளத்திலிருந்து கொள்ளப்பட்டிருக்கலாம்.
பாலின் மதிப்பு பாலினமாக இயல்பாக்கப்பட்டிருக்கிறது. பால் என்பது கலாச்சாரத்தில் பாலினமாக மறுதலிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாலை நேரடியாக புரிந்துகொள்ளப்படுவதை விட பாலினமாக புரிந்துகொள்ளப்படுவதுதான் நடப்பில் இருக்கிறது. பால் ஒரு கதையாக அதீத கற்பனையாக புனைவாக இருப்பதாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. தன்னிலை என்பது பாலின உறவில் பிணைந்து வருகிறது. பாலினமாக கொள்ளப்படுவது முதலில் தன்னிலைக்கு முன்பாக செயல்பட்டு அது கோரும் தன்னிலையாக பாவிக்கிறது. மனிதம் உருவாவதற்கு முன்னரே பாலினம் செயல்பட்டுவிடுகிறது. பாலினமாக பெயரிடப்படுதலே பாலின விதிகளை நிர்ணயித்துவிடுகின்றது. மொழி அல்லது சமூகம் அல்லது மொழியாடல் தன்னிலையில் பிரதிபலிக்கும் போது தன்னிலையின் மீமெய்யியல் வலுப்படுகிறது. இங்கு தன்னிலை கட்டப்படுவதாக கொள்ளப்பட்டால் இந்த கட்டமைப்பில் தன்னிலையும் அதன் செயல்பாடும் தோற்றம் கொள்வதாக வலியுறுத்தப்படுகின்றன. இந்த வலியுறுத்தலில் பால், உற்பத்தியும் செய்யப்படுகிறது; உறுதியின்மையும் ஆகிறது.
பெண்மை என்பது பொருளாம்சத்திற்கும் பொதுமைக்கும் பிரதிநிதியாக ஆக்கப்படுவது சிக்கலானதல்ல. மாறாக பெண்மை உருவுக்கும் பொளுக்கும் பொதுமைக்கும் தனிப்பட்டதற்குமான இருமைகளுக்கு வெளியில் இருப்பதால் சிக்கலாகிறது[2].
சதை தொகுப்பின் அம்சமாக பெண் தன்னிலை வார்க்கப்பட்டிருக்கிறது. அல்லது சதை தொகுதிகளாக சதை பிண்டங்களாக பெண்மை பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. வளையல்களாகவும் அவற்றின் ஒலிகளாகவும் அவற்றை அணிவதன் மகிழ்வாகவும் அவற்றின் வரலாறாகவும் அவற்றின் உறுப்பாகவும் பிளக்கப்பட்டிருப்பதை நுண்மையுடன் மறைக்கப்படும்[3] இடங்களும் உண்டு. பொருள்வயின் பிரிந்தாலும் போர்வயின் பிரிந்தாலும் உடல் மெலியும் நலியும் காமத்தின் பாற்பட்ட பிரிவாக மாற்றிப் பார்க்கும். பேராசை பிம்பமாகவும் குடும்பத்தின் இணைப்பு கண்ணியாகவும் அழும் கண்களாகவும் கணவன்களை பிணைத்திருக்கும் அங்கமாகவும் ஆண் துணை சேர் வாழ்வை பெரிதும் விரும்புவதாகவும் இருக்கும் பெண் தன்னிலையாக வகுக்கப்பட்டிருக்கும். பெண்மை என்ற உடல் பாலியல் தன்னிலையாக வேர்கொண்ட அழுத்தம்தான் புனைவாக பொருளாக சொல்லாக மொழியாக வரையப்படும். எதிர்பால் விழைவுகள் கொண்ட விதிகளுக்கு உட்படுவது, அருள் பாலிப்பதும் அருள் பெறுவதும் நிறைகொள் உணர்வாய் இருப்பது, என்று பெண் தன்னிலை உருக்கொள்கிறது. நகையும் பொய்யாய் உணர்ச்சியும் மிகையாய் செயற்கையும் பகட்டும் மீதூர பகடையாய் பரவசப்படுவதும் பெண் தன்னிலையின் பாவனைகள் புகலப்படுகின்றன. உடல் மேன்மை பாராட்டும் அரூபமாக பாவையாக பின்னியிருக்கும் பெண் தன்னிலை அதிர்ச்சியான இன்பப் பீறிடல்களையும் நிகழ்த்துகிறது அவ்வப்போது. சேலை கட்டும் அதியம் ராமர்களைத் தேடும் செயபாட்டுத்துவம், புணர்வின் மீறல்களை அடுக்கும் மயக்க பிதற்றல்கள் என பெண் தன்னிலை புதுக் கோணல்களைத் தீர்மானிக்கிறது[4]. மணபந்தம் மீறிய உறவுகளின் தேவைகளை நிர்ணயிப்பதும் உள் புழுங்கும் வேட்கையின் பொங்குதல்களை மடைமாற்றுவதும் தோற்பாவைகளின் நிழல்கூத்தாடிகளாய் மரபை இடமாற்றம் செய்வதும் பெண் தன்னிலையின் நெருக்கடிகளுக்கான பதில்களாக இருக்கின்றன. தெய்வம் தொழுது கொழுநன் தொழுது மழை பெய்விக்கும் இயற்கை விதி மீறிய ஒழுக்கம் புலன்சார் இறையாய் அடைக்கப்பட்டுவிட்டதால் இனி காமத்திலும் காயத்திலும் புரண்ட புழங்கிய வெளியாய் தன்னிலை விடுவிக்கப்படுகிறது. பொது உடலாக தனி உடல் தன்னிலையில் இணைக்கப்பட்டிருக்கிறது. பெண் என்பதே இல்லை என்ற முன்தீர்மானத்தில் தன்னிலையை கட்டமைப்பது லிங்கமையவாதத்தின் ஒழுங்கமைவுதான். அதனால் உருவாகும் பெண் என்பதே ஒரு பன்மைத்துவமாக கொள்ளப்பட்டால் இருமை பிளவை தவிர்க்க முடியும். எல்லா மனப்பிறழ்வுகளையும் இடிபல் முக்கோணத்திலிருந்து விலக்கிவைக்க முடியும். ஆனால் பெண் என்பதே பெண்மை என்ற விதிகளிலிருந்து கட்டமைக்கப்படுவதாக மாறுகிறது. பொம்மை விளையாட்டின் குழந்தையான சிறுமியிலிருந்து பெண் உடலாக மாற்றம் பெறுவதைத்தான் பாலினத்தின் சிக்கலாக தன்னிலையின் உருவாகலாக தொடரப்படுகிறது. மழலை பேசும் சிறுமியின் தாயாக மாற்றமடையும் அடையாளம் தன்னிலையை சங்கேதப்படுத்துகிறது. எதிர் பாலுறவின் அடிப்படையில் உருவான தன்னிலை ஆண்மையின் அடிப்படையில் பெண்மையை முன்னிலைப்படுத்துகிறது. அண்ணன், தம்பிகளுக்கும் அக்கா, தங்கைகளுக்கும் என்று உறவுகளுக்கு இடையில் பாரபட்சம் காட்டப்படும் உடல் முன்னுரிமையின் அடிப்படையில், சிறுமியின் உடல் பெண்ணின் உடலாக விதிகளின் அடிப்படையில் முன்தீர்மானிக்கப்பட்ட விதிகளின் உடலாக மாற்றம் பெறுவது படைப்பின் சிறுகளமாகிவிடுகிறது[5]. பெண் தன்னிலை தன்னை தானாக முன் நிறுத்துவது மற்றமையின் விருப்பத்திலிருந்துதான். தாய், மகள், சகோதரி, மனைவி என்று உறவின் பாற்பட்ட தன்னிலையாக இவற்றிலிருந்து பிரிந்து செல்லும் பிளவுறும் தன்னிலையை காணவேண்டியதாக அலைவுறும் புள்ளிகளில் நிலைபெறுவதாக கொண்டுவிட, படைப்பில் கண்டுவிடத்தான் பொருளாம்சத்தை தேடவேண்டியிருக்கிறது.
[1] Judith Butler, Bodies that Matter On the Discursive Limits of Sex
[2] The problem is not that the feminine is made to stand for matter or for universality; rather, the feminine is cast outside the form/matter and universal/particular binarisms. Judith Butler, Bodies that matter On the Discursive Limits of Sex P.42.
மந்திரச்சிமிழ்-இதழ் 7-10 ஏப்ரல் '11-மார்ச் '12 இதழில் வெளியான கட்டுரை
Bibiliography
1.Judith Butler-Bodies that Matter On the Discursive Limits of Sex
2.Virpi Lehtinen-Luce Irigary's Philosophy of Feminine Being:Body, Desire and Wisdom
3.Ian Buchanan and Claire Colebrook(Ed)-Deleuze and Feminist Theory
4.Chrysanthi Nigianni and Merl Storr(Ed)-Deleuze and Queer Theory
5.நீலி-மாலதி மைத்ரி கவிதைகள் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம், 2005
6.காலச்சுவடு இணையதளம்
7.திண்ணை இணையதளம்
8.இன்னபிற வலைப்பூ
9.குட்டிரேவதி கவிதைகள் வலைப்பூ
10.சங்க இலக்கியம்-தமிழ் இணைய நூலகம்.
1 comment:
நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
Post a Comment