Friday, 12 June 2015

இயக்குநர் அருண்மொழியின் ஆவணப்படத்தில் பேசியது

இயக்குநர் அருண்மொழி தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு என்ற ஓர் ஆவணப்படத்தை எடுத்துவருகிறார். இதுவரை பல பழந்தமிழ் எழுத்தாளர்கள் முதல் இன்றைய எழுத்தாளர்கள் வரை பலரை நேர்காணல் செய்திருக்கிறார். அவர்களிடம் பல இலக்கியங்கள் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் என்னிடம் சில்வியா பிளாத், நகுலன், ஜி.நாகராஜன், மௌனி, தருமு சிவராம் பிரமிள் ஆகியோரின் இலக்கியங்கள் பற்றி ஒரு நேர்காணலை ஒளிப்பதிவு செய்தார். அந்த நேர்காணலில் நான் பேசியவற்றை கீழே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்:

கவிஞர் சில்வியா ப்ளாத்தை நான் ஒரு முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறேன். அவர் எழுதிய கவிதைகளில் என்னை அதிகம் கவர்ந்த கவிதை ஒன்றைப் பற்றி பார்க்கலாம்.

Mirror

I am silver and exact. I have no preconceptions.
Whatever I see I swallow immediately
Just as it is, unmisted by love or dislike.
I am not cruel, only truthful ‚
The eye of a little god, four-cornered.
Most of the time I meditate on the opposite wall.
It is pink, with speckles. I have looked at it so long
I think it is part of my heart. But it flickers.
Faces and darkness separate us over and over.

Now I am a lake. A woman bends over me,
Searching my reaches for what she really is.
Then she turns to those liars, the candles or the moon.
I see her back, and reflect it faithfully.
She rewards me with tears and an agitation of hands.
I am important to her. She comes and goes.
Each morning it is her face that replaces the darkness.
In me she has drowned a young girl, and in me an old woman
Rises toward her day after day, like a terrible fish.

இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்பு: 

ஆடி

துல்லியமான வெள்ளி நான்.  முன்தீர்மானமேதுமில்லை எனக்கு.
பார்ப்பதையெல்லாம் விழுங்கிவிடுவேன் அப்பொழுதே.
உள்ளதைப்போலமறைக்காமல் நேசத்தை அல்லது வெறுப்பை.
கொடூரமாக இல்லை உண்மையாக மட்டுமே
நாற்கோண சிறுதெய்வ விழியாய்.
பெரும்பாலான நேரங்களில் எதிர் சுவற்றில் என் தியானம்
இளஞ்சிவப்புதோலில் படரும் சிறுபுள்ளிகளாய் அது. நீண்டநேரமாக அதை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
என் மனதின் ஒரு பகுதியென நினைக்கிறேன் . ஆனால் மினுக்குகிறது அது.  
முகங்களும் இருளும் எங்களைத் தொடர்ந்து பிரிக்கின்றன.


இப்போது நானொரு ஏரி. ஒரு பெண் என் மீது வளைகிறாள்,
தேடுகிறாள் அவள் யரென்பதற்காக எனது எட்டுதல்களின் எல்லைவரை
பின் திரும்புகிறாள் அந்த பொய்யர்களான மெழுகுத்திரிகள் அல்லது நிலவு நோக்கி.
அவளது பின்புறத்தை பார்க்கிறேன்அதை சிரத்தையுடன் பிரதிபலிக்கிறேன்.
கைமாறாக தனது கண்ணீரையும் கைகளின் அசைவையும் தருகிறாள்.
நான் அவளுக்கு முக்கியம். அவள் வருகிறாள் போகிறாள்.
ஒவ்வொரு காலையும் இருளை பதிலி செய்கிறது அவள் முகம்.
இளம்பெண்ணாக அமிழ்ந்திருந்தாள் எனக்குள்,
மேலும் எனக்குள் முதுமையான பெண்ணாய் வளர்கிறாள்
அவளது நாட் கடந்த நாட்கள் நோக்கிஒரு கொடூரமான் மீனைப்போல.


----------------

1.லக்கானின் மிரர் ஸ்டேஜ் என்ற கோட்பாட்டை இந்தக் கவிதையில் பொருத்திப் பார்க்கமுடியும்.
கண்ணாடியைப் பார்த்து தன்னிலை உருவாக்கம் நிகழ்தல் பற்றிய கோட்பாடு அது.
தானும் தன் பிரதிபலிப்பும் ஒன்று அல்லது வேறாகிறது. பிரதிபலிப்பு உண்மையாகவும் அதுவே தானாகவும் மாறுகிறது. கண்ணாடி பிறன்மையாக இருந்தாலும் அதுதான் தானாக நிலைபெறுகிறது என்பதே அந்தக் கோட்பாடு.

2.கண்ணாடி இந்த கவிதைக்குள் தன்னை விளக்குகிறது, விவரிக்கிறது
தன் பிரதிபலிப்பை பொருளாக்குகிறது.

3.பிரதிபலிப்பு என்பது பொருள் முன்வந்தால்தான் நடக்கும்.
இங்கு சுவர் இருக்கிறது. சுவரே கண்ணாடியாகிறது. கண்ணாடி சுவராகிறது.
சுவர் போல்தான் பிம்பம் இருக்கிறது. அல்லது பொருளற்றதாகிறது. 
4.இருளும் முகங்களும் சுவரையும் கண்ணாடியையும் பிரிக்கின்றன.
மீண்டும் சுவர்களாகின்றன. பொருளற்றதாகின்றன. 
5.அடுத்து கண்ணாடி கரைந்துவிடுகிறது நீராய். இப்போது பிரதிபலிக்க ஒரு பெண் கிடைக்கிறாள். 
6.பிரதிபலிப்பு மூழ்கக்கூடியதாகிறது. கண்ணாடி இளமையைத் தேக்கிவைக்கிறது.
அதனால்தான் மூழ்குகையில் இளம்பெண்ணாகவும் எழுகையில் முதிய பெண்ணாகவும் இருக்கிறாள். 
7.பிரதிபலிப்பால் கொடூரம் விளையாது என்று அறிவித்துக் கொள்கிறது கண்ணாடி.
பிரதிபலிக்கும் பொருள் கொடூரமான மீனாகிறது என்று அறிவிக்கிறது நீர். 
8.இருள் பற்றி கண்ணாடி புலம்புகிறது. ஒளி பற்றி நீர் புகார் செய்கிறது.
ஒளியை பொய்யாக்குகிறது நீர்.  
9.கண்ணாடிக்கு நேசமும் வெறுப்பும் சமநிலையில் இருக்கின்றன. நீரோ தன் பிரதிபலிப்புக்கான பிரதிபலனை எதிர்பார்க்கிறது. பரிசளிப்பை ஏற்கிறது.
கண்ணாடி, பிம்பங்களை நேசிக்கவில்லை. நீர் பெண்ணை ஈர்க்கிறது.  
10.சிறிய கடவுளின் கண்ணாய் கண்ணாடி நான்கு முனைகளுடன் பரவாமல் இருக்கிறது. நீர் பரவுகிறது பெண்ணின் எல்லைகளில்.
------------

அடுத்து நகுலன் கவிதை ஒன்றைக் காணலாம்.

நான்

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்? 

-------

1.இந்தக் கவிதையில் அகமொழி ஒன்று உள் ஓடுகிறது. நான் மற்றும் நானை கவனிக்கும் இன்னும் ஒரு நான். 
2.நானிலிருந்து பிரிந்த நான் இரு கதவுகள் போல் இருக்கின்றன. 
3.எந்த நான் சுசீலாவுக்காகத் திறக்கும் என்பது தெரியாது. நானைத் திறத்தல் என்பது மூடிய நான் என்பதிலிருந்து திறக்கும்ம் நானாக மாறுதல். 
4.நானும் நானற்ற மற்றதும் ஒரே அறையில் இருப்பதும் எந்த நான் என்ற பிரச்னையை வாசிக்கும் இடத்தில் விட்டுவிடுகிறது கவிதை.  
5.சுசீலா தேர்ந்தெடுத்திருக்கும் நானின் மற்றமை, கவிதைக்குள் இருக்கும் நான் அறிந்த ஒன்றல்ல. ஆனால் ஏதோ ஒன்றாக இருக்கலாம். 
6.நான்/பிறன்மை என்ற பிளவு இங்கு நான்/நான் என்றாகியிருக்கிறது.
7.தெகார்த்தின் நான் சிந்திக்கிறேன் ஆகவே நான் இருக்கிறேன் என்ற வரியின் சிக்கலில் அதாவது நான் என்பதை இடமாற்றி, புதிராக்கி, புறந்தள்ளுகிறது இந்தக் கவிதை.
8.நான் இருப்பது பற்றிய விழிப்புணர்வும் நான் இல்லாதது பற்றிய விழிப்புணர்வும்
ஒரு சேர நடக்கிறது இந்தக் கவிதைக்குள்.
9.கவிதைச் சொல்லி இந்த நான்களை எழுதிய நானாக இருக்கிறது.
கவிதை சொல்லியின் நானுக்கும் கவிதைக்குள் வரும் நானுக்கும் இருக்கும் தூரம் அல்லது நெருக்கம் பற்றிய பயணத்தைத் தொடரச் செய்கிறது இந்தக் கவிதை.
10.எளிமையான புதிர். விடுவிப்பு மீண்டும் ஒரு புதிர்தான்.
11.மூடிவைத்தலும் திறத்தலும் கதவின் மூலம் விடுதலையடைகிற செயல்பாடு.
-----------

அடுத்து தருமு சிவராம் பிரமிள் எழுதிய ஒரு கவிதை

கண்ணாடியுள்ளிருந்து

யாரிது?
இதுதான் என் பிறப்பா
இது பிரதி,
எனது புதிய மறுமை

கண்ணாடி சமீபிக்கிறது
எனது எண்ணங்கள்
கதவைத் தட்டுகின்றன.
தட்டும் ஒலி எதிரொலித்து
எனது இரட்டையின்
காலடியில் சப்திக்கிறது.

சிகிக்சைக் கருவிபோல்
ஒரு கதிர்
என்னைத் துளைத்து
நுழைகிறது.
தனது நகத்தைக் கழற்றி
என்னுள் எங்கோ
எரிய விடுகிறது.

இரவினுள் புதைந்து
முடங்கிக்கிடக்கும் நிழல்கள்
ஒன்றையொன்று கண்டு நிற்கும்
கண்ணாடிகளினுள்
புதைந்து
தனது பிரதிகளின் கானகத்துள்
தன்னை மறக்கிறது
எங்கும் வியாபித்த
ஒற்றை யுரு.
பிரதி பிம்பத்துக்கு
முதுகு இருக்குமா?
கண்ணாடியின் மர்மப்படலம்
கண்ணுக்குத் தெரியாது.
அதன் வித்தை ஒரு
போலிவெளி

மீண்டும்
நான் கண்ணாடியுள் பிறக்கிறேன்
ஆனால்கண்ணாடியுள் நிற்பவன்
நிழலுக்கும் பதிதன்
கண்ணாடி
ஊடற்ற ஒரு
போலி வெளி
வெற்றுத் தளம்
நிர்பரிமாணம்
பாலைமீ தெங்கும்
திசையின்மையுள்
திசை தவறி ஓடும்
சுவடுகள்.
கண்ணாடி
வெறிச்சிட்டு நிற்கிறது.

1.தருமு சிவராம் பிரமிளின் இந்தக் கவிதை கண்ணாடியுள்ளிருந்து ஊடுருவும் ஒரு மாய உலகம். பிரதிபலிப்பின் மீது எழுப்பும் கேள்விகள், ஒளியின் ஊடுருவல்கள், நிழலின் நீட்சிகள் என்று பல வர்ணனைகள் கொண்டது 
2.பிரதியும் ஒரு பிரதிபலிப்புதான். அது வெறுமையை பிரதிபலிக்கிறது.
அல்லது கவிதை சொல்லியின் மறுமையாக இருக்கிறது. 
3.கண்ணாடியைத் தட்டுவதா கதவைத் தட்டுவதா என்ற ஒலித் தடுமாற்றம் இருக்கிறது. தானும் தனது பிம்பமும் இரட்டையாக இருக்கிறார்கள்.
அல்லது பிம்பம் கண்ணாடியைக் கதவு போல் தட்டி பிரதிபலிப்பின் காலடியில் ஒலி எழுப்புகிறது. தன்னையும் தன் பிரதிபலிப்பையும் இணையாக்கி எதிராக்கி ஒன்றாக்கி உருவாக்கி இருக்கிறது இக்கவிதை.  
4.தன்னை ஊடுருவும் ஒளி. தன்னை எரியவைக்கும் ஒளி.
பிரதி பிம்பமாக மாற. இதில் தான் என்பது தனது பிம்பமாக தனது பிறன்மையாக மாறுகிறது. கண்ணாடியின் பிம்பம் தன்னை வர்ணிப்பது நடக்கிறது. 
ஒளியின் ஊடுருவல் இப்படி நடக்கிறது.
5.ஒளியை விரும்பாத படைப்பு. தன்னை எரியவிடுவதை பதிவு செய்யும் படைப்பு.
பிம்பத்தின் தானாக இருப்பதால் ஒளி ஊடுருவுவதாக சொல்கிறது. 
6.கண்ணாடிகளில் புதைந்த நிழல்கள் பிரதிகளில் வியாபிக்கிறது. அது ஓர் ஒற்றை உரு. தானும் தன் பிறனும் கலந்தது. பிரதிகளிலிருந்தோ கண்ணாடியிலிருந்தோ பிரித்தெடுத்துவிடலாம் என்றால் அது ஒற்றை உருவாக உள்ளது.  
7.பிரதிபிம்பத்திற்கு ஒற்றைப் பரிமாணம் மட்டுமே இருப்பதாக தோன்றுகிறது.
அதன் பின்புறத்தைக் காணமுடியவில்லை. அதனுள் ஊடுருவிச் சென்று காணமுடியாது. ஒரே பக்கத்தை மட்டுமே காட்டும். நின்றுவிட்ட பரிமாணம்.
அது ஒரு போலி வெளி. உண்மை போல் தெரிவது.
அதன் போலித் தன்மையைத் தெரிந்துகொள்ள பிம்பத்தின் எல்லா பக்கங்களும் தெரியாமல் இருப்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம். 
8.வெற்றுவெளி, பாலைவனம் போன்றது. அது போல் கண்ணாடியும் வெறிச்சோடிவிடும். அதன் முன் ஏதுமற்ற உரு நின்றால் பிரதிபலிக்க முடியாமல் வெறிச்சிடும். 
9.நான்/பிறன்மை என்ற விளையாட்டின் கூறுகள் கொண்ட கவிதை இது.
பிறன்மை மூலம் 'தான்' கட்டப்படுவதை புதிர் போல் வளைத்துச் சொல்கிறது இந்தக் கவிதை.  
10.மேலும் இது ஒரு குறுங்காவியம். அதில் 'தான்' 'பிறன்மை' இத்துடன் தான் என்பது கட்டப்படுவதற்கு பெண் உடல் எப்படி கண்ணாடியாக செயல்படுகிறது என்பதையும் குறிக்கிறது.
______________

அடுத்து ஜி.நாகராஜன் எழுதிய 'நாளை மற்றுமொரு நாளே' நாவலைப் பற்றி ஒரு சிறிய ஆய்வு.

1.சமூகத்திற்கு எதிரான மனிதர்கள் பாத்திரங்களாவது.
சமூகத்தின் இயல் ஓட்டத்தை மாற்றி அமைக்க முயல்வது. சமூகத்தின் விதிகளுக்கு எதிரான புதிய விதிகளை உருவாக்குவது. 
2.ஒரு நாளில் நடக்கும் வேறுபட்ட சம்பவங்களின் தொகுப்பு. அந்தச் சம்பவங்களுக்குள் இருக்கும் பொருளின்மை பற்றிய விமர்சனம் முன்வருகிறது.
அறத்தையும் அறமற்றதையும் ஒன்றாக வைத்துவிடுகிறது பிரதி. 
3.பாலியல் இன்பத்தை துன்பவியலாக மாற்றுகிறது.
ஒரு பாத்திரத்தின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டாலும் ஒரு ஒற்றைத்தன்மை இல்லாத நிலை இருக்கிறது.  
4.ஒழுக்கவியல், அறவியல், நீதியியல் மீதான அழகியல் உணர்வுகளை அலங்கோலமாக்குவது. சிதைப்பது. 
5.அலங்கோலமான சின்னபின்னமான அருவருப்பான உணர்வுகளை படைப்பாக்குவது. உணர்வரசியலின் உதாரணம்.  
6.விருப்பு, வேட்கை, விழைவை மனித இயந்திரத்தின் மையமாக்குவது.  
7.போலியான பிறன்மை கட்டப்படாமல் அதிர்ச்சிதரத்தக்க பிறன்மையைக் கட்டி எழுப்புகிறது இப்பிரதி  
8.ஒரு நாள் என்பது ஒரு வாழ்வின் காலமாக மாற்றப்படுகிறது. காலம் உறைந்து ஒரு நாளாக மாறியிருக்கிறது.  
9.சோஷலிச கருத்துகளும் மற்றொரு பகடியாக மாறி உள்ளன. இயல்பற்ற அகத்தின் பிறழ்ந்த நிலையின் மற்றொரு வண்ணமாக உள்ளன.  
10.குழந்தைகளும் அவற்றின் மீதான பற்றும் உணர்ச்சி சாராத இயக்கமாக உள்ளது. மரணமும் வாழ்வும் நிகராக்கப்பட்டுள்ளது.
__________

மௌனி

1.புற உலகின் சிக்கல்கள் அக உலகை மாற்றி அமைப்பதை சொல்பவை மௌனியின் கதைக்கள்.  
2.மொழி கணிதத்தின் தர்க்க ஒழுங்குடன் இருக்கிறது.  
3.மாயாவாத மொழி கொண்ட கதைகள்.  
4.புதிர்களின் ஒத்திசைவு போல் கதைகள் எழுதப்பட்டுள்ளன.  
5.'பிரக்ஞை வெளியில்' கதையில் சுசீலா என்ற மனைவி பாத்திரம் போல் கருதப்பட்டு அது கன்னி பாத்திரமாகிறது. ஒரே பாத்திரம் இன்னொன்றாக மாறுவது.
அல்லது ஒன்றின் சாயலில் மற்றொன்றும் இருப்பது.
ஒரே பாத்திரத்தில் மனைவி-கன்னி-கைம்பெண் எல்லாமாக உருமாற்றுவது.  
6.சேகரன் என்ற பாத்திரத்தின் மனவெளியில் நடக்கும் கதை.
சேகரனின் மனம் ஓர் ஆடி போல் இதில் இருக்கிறது.
அதில் பிரதபலிப்பது சுசீலா. அந்தப் பெண் தன் மனைவியாக இருப்பதை ஏற்கும் மனம் கன்னியாக இருப்பதை ஏற்கவில்லை. அல்லது அந்தப் பெண் அப்படி மாற்றப்பட்டது பற்றிய பிரதிபிம்பத்தின் அவசத்தை கதையாக்கிப் பார்ப்பது போல் இருக்கிறது.  
7.ஒளியற்ற வெளியில் இயங்கி மறைகிற கதை. சேகரன் மரணம் என்பது கண்ணாடியின் சிதைவு. சுசீலா கவர்ந்து கொண்ட கண்ணாடி.
பிம்பமும் பொருளும் இணைந்துவிட்ட பாத்திரம். 
8.எல்லா கதைகளிலும் இந்த வகையான ஒரு மனநிழல் புகை போல் படிகிறது.
அந்த அகமொழித் தேடலைத்தான் எல்லா கதைகளும் முன்வைக்கின்றன.  
9.உறுப்புகளற்ற உடலின் விருப்பு போல் இந்த மொழி பரவுகிறது. அல்லது உறுப்புகள் மட்டுமே உடலானது போன்ற மொழியாக இருக்கிறது.  
10.மரணம், சிதைவு என்பது ஒரு படிமத்தின் கரைதலாக உள்ளது.
ஆண்,பெண் உறவின் வதைபடுதல் இதம் போன்ற தன்மையை இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன.  
11.மனக்கோட்டை கதையும் பிரபஞ்ச வெளியில் கதையும் இரட்டைத் தன்மை கொண்ட பாத்திரங்களைக் கொண்டு கட்டப்பட்டவைதான்.
சங்கர் சேகர் என்ற பாத்திரங்கள் போல்தான் சுசீலா மனைவி காதலி என்ற பாத்திரங்கள்.
12.சுசீலா பாத்திரம் மௌனிக்கும் நகுலனுக்கும் முக்கிய ஒற்றுமையாக இருக்கிறது.

இந்த எல்லா படைப்புகளுக்குள்ளும் கண்ணாடியும் பிரதிபிம்பமும் ஏதோ ஒரு வகையில் ஊடாடிக் கொண்டிருப்பதை ஒற்றுமையாகக் காண முடிந்தது. மேலும் ஒளியை தவிர்த்து இருளை விரும்பும் படைப்புகளாக இருப்பதையும் பார்க்க முடிந்தது.
---------

இந்த இலக்கியங்களைப் பற்றி கருத்து சொன்ன பிறகு என் கவிதைகளை நானே வாசிப்பதையும் பதிவு செய்துகொண்டார் திரு.அருண்மொழி. அத்துடன் எனது ஓவியங்களையும் ஒளிப்பதிவு செய்தார். இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்காக அவருக்கு நன்றி. மேலும் என்னைப் பற்றி இயக்குநர் அருண்மொழியிடம் கூறிய எழுத்தாளரும் விமர்சகருமான திரு.சண்முகத்திற்கும் நன்றி.




2 comments:

Unknown said...

super mam excellent poems

Mubeen Sadhika said...

Thx Noor Mohamed

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...