Thursday, 30 September 2021

குறுங்கதைகள்-வால் நட்சத்திரம்

 



அந்தச் சிவப்பு வால் நட்சத்திரத்தின் வால் அவன் வாழும் கிரகத்தை உரசப் போகிறது. அதனால் அந்தக் கிரகத்தில் பனிப் பொழிவு தொடங்கிவிடும். கிரகத்திலுள்ள பனி உருகி முழு கிரகத்திலும் நிறைந்துவிடும். அது பல நாள் நீடிக்கும். மீண்டும் பனி உருகி நீராகி ஆவியாகி போகும் வரை புல் பூண்டும் முளைக்காது. பனியில் வாழும் உயிர்கள் தவிர பிற எல்லாம் அழிந்துவிடும். இதுதான் அவன் வானியல் சாஸ்திரம் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் போது தெரிய வந்தக் கணிப்பு. இதிலிருந்து அவனுடைய கிரகத்தையும் அதில் இருக்கும் உயிர்களையும் காப்பாற்ற என்ன செய்யலாம் எனத் திட்டமிட்டதில் இரு யோசனைகள் அவனுக்குக் கிடைத்தன. கிரகத்தின் அடித்தகட்டில் வாழ்வதற்கான வழிகளைத் தேடுவது. இரண்டாவது வேறொரு கிரகத்திற்கு குடிபெயர்வது. பல விண்கலன்களை உருவாக்கி விண்வெளியில் சுற்றி வந்து பொருத்தமான கிரகத்தைத் தேடி குடியமரலாம் என்றும் அவனுக்குத் தோன்றியது. இதில் எது வேகமாக நடக்கும் எனப் பார்த்தால் பல விண்கலன்களை உருவாக்குவதுதான். ஆனால் எத்தனை பெரிய கலன்களை உருவாக்கினாலும் அத்தனை ஜீவராசிகளுக்கும் போதாது. எனவே ஒவ்வொரு உயிர்க்கும் தனித்தனியாக எளிமையாக இயக்குவது போன்ற ஒரு பறக்கும் எந்திரத்தை உருவாக்கலாம் என முடிவு செய்தான். அந்த எந்திரம் ஈர்ப்பு விசைக்கு எதிராக இயங்கக் கூடியதாகவும் காந்தவிசையோடு ஒத்திசைந்து நகரக் கூடியதாகவும் எடை மிகவும் குறைவானதாகவும் இருப்பது போல அவன் வடிவமைத்தான். அதன் பறத்தலை சோதிக்க தானே பறந்து பார்க்க முடிவு செய்தான். அவன் நினைத்தது போலவே மிகவும் திறனுடன் அது பறந்தது. அந்த எந்திரத்தில் விண்வெளியில் விருப்பமான வகையில் சுற்றி சுற்றி வந்தான். மேலும் அவன் இருக்கும் கிரகத்திலிருந்து வெகு தூரம் வந்துவிட்டான். அப்போது அவன் அந்த சிவப்பு வால் நட்சத்திரத்தைக் கண்டான். அதனருகே போனான். இவனை நோக்கி அது ஈர்க்கப்பட்டு வந்தது. இவன் சுற்றும் திசையில் அதுவும் பயணித்தது. இப்படியே இவன் சுற்றி சுற்றி வந்தால் வால் நட்சத்திரமும் தன் கிரகத்தை நோக்கி நகராது என்று புரிந்துகொண்டான். வால் நட்சத்திரத்தின் திசையை மாற்றி தன் கிரகத்தைக் காப்பாற்றிவிட்டதில் மகிழ்ச்சியடைந்து விண்வெளியில் சுற்றித் திரிந்தான்.

 

Tuesday, 28 September 2021

குறுங்கதைகள்-கண்ணாடி

 



அவன் அந்தக் கண்ணாடியை ஒரு கண்காட்சியில் வாங்கினான். அங்குப் பார்த்த போது தலைகீழ் பிம்பங்களைக் காட்டியது. தூரத்தில் இருக்கும் பிம்பங்களைக் காட்டவில்லை. அருகில் வந்தால்தான் காட்டியது. இது வேடிக்கையாக இருக்கவே அதைக் கொண்டு வந்து வீட்டில் வைத்தான். அதில் தன் முகத்தைப் பார்த்தபோது நம்பவே முடியாத அளவுக்கு முகத்தை நேர்த்தியாகக் காட்டியது. தன்னுடைய பிம்பம் தானா என்ற சந்தேகம் அவனுக்கு எழுந்தது. கொஞ்சம் தொலைவு சென்றான். பிம்பம் அருகில் வந்தது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஓடி அருகில் வந்தான். பிம்பம் தூரச் சென்று சிறியதாகிவிட்டது. இதில் ஏதாவது கணினி இருந்து இத்தகைய வித்தைகளைக் காட்டவைக்கிறதா எனச் சந்தேகம் கொண்டான். மிக அருகில் சென்று நின்றான். கண்களை மட்டுமே காட்டியது. கண்ணாடி மீது இவனுக்கு இப்போது ஆற்றாமை வந்தது. ஏன் இயல்பான பிம்பத்தைக் காட்டவே காட்டதிருக்கிறது என்று கேட்டான். நீ இயல்பாக இல்லாத போது பிம்பம் மட்டும் இயல்பாக இருக்குமா என இவனுடைய பிம்பம் கண்ணாடியிலிருந்து பேசியது. இவன் சோர்ந்து போய் தூங்கிப் போனான். இரவு தூக்கம் கலைந்துவிட்டது. கண்ணாடியைப் பார்த்தான். இவனுடைய பிம்பம் இவனை உற்று நோக்கியவாறு இருந்தது. இந்தக் கண்ணாடியைக் காலையில் கொண்டு போய் உடைக்கவேண்டும். அல்லது அந்த விற்பனையாளனிடமே கொடுத்துவிடவேண்டும் என முடிவு செய்துவிட்டுத் தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்த்த போது அந்தக் கண்ணாடியைக் காணவில்லை. அதன் விற்பனையாளனைப் போய்ப் பார்த்தான். காலையில்தான் அவன் அந்தக் கண்ணாடியைக் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்தான் மீண்டும் அந்தக் கண்ணாடி வேண்டுமா என விற்பனையாளன் கேட்டான்.

குறுங்கதைகள்-நிறம்


 


அவன் நிறங்களைக் குறித்து ஆய்வு செய்பவன். பல இடங்களுக்கும் சென்று இந்த ஆய்வைச் செய்து வந்தான். அந்த வகையில் ஒரு பழங்குடி இனம் இருக்கும் மலைக் குகைகளுக்குச் சென்று ஆய்வை நடத்தினான். அங்கிருப்பவர்களிடம் இயற்கையின் நிறங்களைக் குறித்துக் கேட்டான். அவர்களுக்கு நிறங்கள் என்றால் என்ன என்றே தெரியவில்லை. இவன் அவர்களுக்குப் புரியாத ஆனால் தீங்கு விளைவிக்கக்கூடிய ஏதோ ஒன்றைக் கேட்கிறான் என அவர்கள் நினைத்தார்கள். இவனைப் பிடித்துப் போய் அவர்களுடைய தலைவரிடம் விட்டார்கள். இவன் செய்த தவறைக் குறித்து விசாரித்த அந்தத் தலைவர் இவன் கேட்ட கேள்விகளைத் தன்னிடம் கேட்குமாறு பணித்தார். இவனும் அவருக்கு இந்த விவரங்கள் தெரிந்திருக்கலாம் எனும் எண்ணத்தில் வானத்தின் நிறம் என்ன என்றான். வானம் பல வகைகளில் காட்சி அளிக்கிறது. அதை நீ ஏன் ஒற்றைத் தன்மை கொண்டதாகப் பார்க்கிறாய் எனத் தலைவர் கேட்டார். பின் வேறு கேள்வி என்ன என்றார். இலைகளின் நிறம் என்ன என்றான். இலைகளின் இயல்பை ஒரு நிறத்தில் அடைத்துவிட நினைக்கிறாயா என்று தலைவர் மறுகேள்வி கேட்டார். மேலும் இப்படி எல்லா நிறங்களையும் பிரித்து நீ என்ன செய்யப் போகிறாய் என்றும் விசாரித்தார். அப்போது பழங்குடி இனத்தின் கூட்டம் அங்குக் கூடியிருந்தது. அங்கிருந்த ஒருவன் எழுந்து மனிதத் தோலின் நிறத்தையும் இவன் பிரிக்கிறான் தலைவரே என்றான். இது கடுங்கோபத்தைத் தலைவருக்குக் கொடுத்துவிட இவன் கண்களைக் கட்டி வைத்து சமைக்காத உணவைக் கொடுங்கள். இவன் நிறங்களை மறக்கும் வரை கண்களைக் கட்டி வையுங்கள் என உத்தரவிட்டார். சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் தலைவர் முன் அவன் கண்களின் கட்டு அவிழ்க்கப்பட்டது. அவன் முன் ஒரு வெள்ளை எலியை வைத்து இது  என்ன நிறம் என்று தலைவர் கேட்டார். நிறத்தைக் கூறினால் தண்டனைக் கிடைத்துவிடும் என அஞ்சி அது உங்கள் மனதின் நிறம் என்றான். உடனே தலைவர் என் மனதின் நிறத்தைக் கூட இவன் அறிந்திருக்கிறான். இவன் நிறங்களை மறக்கவே இல்லை. ஆயுள் முழுக்கக் கண்களைக் கட்டிச் சிறைப்படுத்திவிடுங்கள் எனத் தீர்ப்பளித்தார்.

Monday, 27 September 2021

குறுங்கதைகள்-களவு

 



அவன் சிறிய சிறிய கண்டுபிடிப்புகளைச் செய்யக்கூடியவன். ஆனால் அவற்றைக் கொண்டு கண்டுபிடிக்கவே முடியாத பல களவு வேலைகளைச் செய்திருக்கிறான். ஒரு வங்கியின் பணக்கிடங்கு இருக்கும் அறைக்குள் அவனால் நுழைய முடியவில்லை. அந்தக் கதவு திறக்கச் சிலருடைய விழித்திரையைப் பதிவு செய்திருப்பதாலும் அவர்களுடைய பெருவிரல் அடையாளத்தைக் கொண்டிருப்பதாலும் லேசர் கதிர்களைப் பாய்ச்சுவதாலும் மட்டுமே திறக்கும். லேசர் கதிர்களைப் போலவே ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சக்கூடிய ஒரு கடிகாரத்தை உருவாக்கிக் கட்டிக் கொண்டான். அந்தக் கதவுகளைத் திறக்கும் நபர்கள் யார் எனப் பார்த்து அவர்களின் விழித்திரையைப் போன்றே மிக மெல்லிய திரையை உருவாக்கி தன் கண்ணில் பொருத்திக் கொண்டான். அதே போல் பெருவிரலுக்கும் ஓர் உறையை உருவாக்கி அணிந்து கொண்டான். ஓர் இரவு அந்த வங்கிக்குச் சென்று அங்கு எச்சரிக்கை மணிகளை முதலில் நிறுத்தினான். காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்தான். வேவு பார்க்கும் கேமரா இருந்ததால் அதனைச் செயலழிக்கச் செய்வது ஒன்றும் அவனுக்குப் பெரிய  வேலை இல்லை. அந்தக் கதவுக்கு அருகில் சென்று விழித்திரையைக் காட்டினான். பெருவிரலை வைத்தான். கடிகாரத்திலிருந்து லேசர் கதிர்களைப் பாய்ச்சினான். கதவு திறந்துகொண்டது. உள்ளே சென்று தேவையான பணத்தை அள்ளிக் கொண்டு முதலில் எல்லாம் எப்படி இருந்ததோ அப்படியே சீர் செய்து வைத்துவிட்டு கதவையும் பூட்டிவிட்டு வந்துவிட்டான். அந்தக் கண் திரையையும் பெருவிரலின் உறையையும் கழற்றி வீசினான். காவலாளியிடம் அவன் நெருங்கிப் பழகினான். அதனால் தன் மீது மயக்க மருந்து தெளித்தது யார் என காவலாளியால் அறிந்து கொள்ள முடியவில்லை. வெளிநாடு தப்பித்துச் செல்ல விமானநிலையம்  வந்தான். அவனிடம் ஏதோ ஒரு சக்தி வாய்ந்தப் பொருள் இருப்பதாக அங்கிருந்த கருவி காட்டிக் கொடுத்தது. அவன் தன் கையில் கட்டியிருந்த லேசர் ஒளிக்கற்றையைப் பாய்ச்சும் கடிகாரத்தைக் கழற்ற மறந்துவிட்டான். அதைக் கண்டுபிடித்தக் காவல்துறையினர் அவன் வங்கியில் கொள்ளையடித்ததைத் துருவிப் பார்த்துக் கண்டுபிடித்தனர்.

Sunday, 26 September 2021

குறுங்கதைகள்-நடிப்பு


 




வேலையிலிருந்து நிரந்தர ஓய்வுப் பெற்றப் பின் அதைக் கொண்டாட இவள் தன் தோழியருடன் சேர்ந்து தனக்குப் பிடித்தச் சுற்றுலாத் தலத்திற்கு வந்திருந்தாள். அங்கு இவளுக்குப் பிடித்தும் பிடிக்காத நடிகையை ஒரு திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் இடத்தில் சந்தித்தாள். அந்த நடிகையிடன் இவள் பேசவில்லை. அந்த நடிகை மிகவும் இளமையானத் தோற்றத்துடன் இருப்பதாக இவளுடைய தோழிகள் கூறினார்கள். அறைக்குத் திரும்பிய பின்னும் அவளால் நடந்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. காலையில் எழுந்தவுடன் தோழிகளைப் பார்த்து மைனாவின் குரலில் வணக்கம் கூறினாள். அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து எது கேட்டாலும் இவள் மைனாவைப் போல் மிழற்றிக் காட்டினாள். அனைவரும் சேர்ந்து இவளை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். இவளைப் பரிசோதித்த மருத்துவர் இவள் ஏதோ ஒரு காரணத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புரிந்துகொண்டு தன் மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கச் சொன்னார். மற்றவர்கள் இவளை அங்கே விட்டுக் கிளம்பினார்கள். அடுத்த நாள் மருத்துவர் ஆழ்மனச் சோதனைக்கு உட்படுத்தினார். அவள் யார் என்று கேட்டார். சுற்றுலாவில் சந்தித்த நடிகை என்றாள். மைனாவின் குரலில் ஏன் பேசுகிறாள் என்று கேட்டார். அந்த நடிகைக்குப் பின்னணி குரில் கொடுப்பவர் மைனா போல் பேசுவதால் தானும் அவ்வாறு பேசுவதாகக் கூறினாள். திரைப்படத்தில் இப்போது நடிக்க முடியுமா என்று கேட்டார். அந்த நடிகையை விடத் தான் இளமையாக இருப்பதால் முடியும் என்றாள். இரவு மருத்துவர் ஒரு நோயாளியை அழைத்து வந்தார். அவன் புலியின் கர்ஜனை ஒலிப்பது போல் அவளைப் பார்த்து தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அந்த நோயாளி நடிகராகும் ஆசையில் இப்படி புலிக் குரலில் பேசித் திரிவதாகச் சொன்னார் மருத்துவர். அடுத்த நாள் அந்த புலிக் குரல் நோயாளியை அழைத்து அவளுடன் சேர்ந்து சில திரைப்படப் பாடல் காட்சிகளில் வரும் கதாநாயகன்-கதாநாயகியின் ஆடல் முத்திரைகளைச் செய்யச் சொல்லி அவற்றைப் புகைப்படம் எடுத்து அவற்றை ஓர் ஆல்பமாகச் செய்து அவர்களிடம் கொடுத்து திரைப்படம் எடுக்கும் நிறுவனங்களில் வாய்ப்புத் தேடும் படி சொல்லி இருவரையும் அனுப்பிவைத்தார்.

 

Saturday, 25 September 2021

குறுங்கதைகள்-கண்


 


ஒற்றைக் கண் மட்டும் வரையப்பட்ட அந்த ஓவியம் ஏலத்திற்கு வந்திருந்தது. அந்த ஓவியம் அது வரை நான்கு பேரிடம் கை மாறி வந்திருக்கிறது. அந்த ஓவியத்தில் ஒரே ஒரு கண் பெரிதாக வரையப்பட்டிருந்தது. அதை முதலில் வாங்கியவர் காணாமல் போய்விட்டார். அவரைத் தேடுவது இன்னும் தொடர்கிறது. மிகப் பெரிய செல்வந்தரான அவர் ஏன் காணாமல் போனார் என்பதற்கான எந்தத் துப்பும் இது வரை கிடைக்காமல் இருந்தது. அவரது வீட்டில் இருந்த அந்த ஓவியத்தைப் பார்த்த அவரது நண்பர் அதனை வாங்கிக் கொண்டார். அந்த இரவு அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டு பேச்சிழந்தார். அதன் பின் படுத்த படுக்கையாகிவிட்டார். அவரைக் காண வந்த மற்றொரு நண்பர் அந்த ஓவியத்தை வாங்கிச் சென்றார். அதை அவர் வீட்டில் மாட்டிவிட்டுத் திரும்பிய போது படிகளில் உருண்டு விழுந்து இறந்து போனார். அவரது சாவுக்கு வந்திருந்த அவரது நண்பர் அந்த ஓவியத்தால் ஈர்க்கப்பட்டு அதனை வாங்கிச் சென்றார். அடுத்த வாரம் அவருடைய தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு சொத்துக்களை இழந்தார். அந்த ஓவியத்தையும் ஏலத்துக்கு வைத்துவிட்டார். அந்த ஓவியம் அதுவரை யாரிடம் எல்லாம் இருந்தது எனப் பார்த்து அதனை ஏலம் எடுக்க வந்திருந்தவர்கள் விலை கூறிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு சிறுவன் அந்த ஓவியத்தை வாங்குபவர்களுக்குத் தீங்கு வந்து சேரும். இது வரை வாங்கியவர்களின் கதி என்னவாயிற்று என்று எடுத்துக் கூறி விளக்கினான். எல்லோரும் அவனை ஏளனப்படுத்தினர். அவன் அந்த ஓவியத்தில் இருக்கும் கண் சூனியம் செய்பவர்களுடையது என்றும் அதை வீட்டில் வைத்தால் அவர் வாழ்வில் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறினான். அந்தக் கணத்தில் அந்தக் கண் அந்த ஓவியத்திலிருந்து பிரிந்து அவன் அருகில் வந்தது. கூர்மையான பார்வையை அவன் மீது செலுத்தியது. அவன் தன்னிடம் ஒரு கண்ணாடியை வைத்திருந்தான். அதில் அந்தப் பார்வையைக் குவித்தான். அந்தக் கண் சுருங்கி அந்தக் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டது. அதனைத் தூக்கி வீசி எறிந்து உடைத்தான்.

 

Friday, 24 September 2021

குறுங்கதைகள்-யார்


 



அவளைப் பெரிதும் விரும்பினான் அவன். பெரும் பாடுபட்டு அவளை மணமுடித்தான். அவளுடன் தனிமையில் முதன் முதலாக அந்த இரவில் இருக்கப் போகிறோம் என்ற நினைப்பே அவனை மகிழ்ச்சியில் மூழ்கடித்துக் கொண்டிருந்தது. அவள் வந்தாள். அவளைக் கண்டவுடன் அவனுக்கு வியர்த்தது. இதுவரைத் தான் பழகி வந்த பெண் இவள் இல்லையோ என ஒரு முறை சந்தேகம் அவனுள் வந்து போனது. அவளிடம் இயல்பாகப் பேசக் கூட அவனால் முடியவில்லை. அந்த அறையை விட்டு ஓடிவிடலாமா என நினைத்தான். அவளை அந்த நிமிடத்திலிருந்து வெறுக்கத் தொடங்கினான். இனம் புரியாத விரக்தி அவன் மனதில் குடி கொண்டது. அவள் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை பற்றி மட்டுமே மூளை யோசித்தது. அவளை அழைத்துக் கண்ணாடி முன் நிறுத்தினான். அதில் பாம்பும் பெண்ணும் இணைந்த பிம்பம் தெரிந்தது. அவனுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. இருந்தாலும் அவளிடமிருந்து தப்பிக்க என்ன வழி இருக்கிறது என எண்ணிப் பார்த்தான். அவள் சிரித்துக் கொண்டே அவன் பக்கம் திரும்பினாள். நாம் இருவரும் நம் இனத்தைப் பற்றி அறியாமலேயே ஒருவருடன் ஒருவர் எப்படி சரியாக உறவை உருவாக்க முடிவு செய்தோம் என்பதுதான் இப்போது வரை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றாள். இவனால் அதைக் கேட்டு அமைதியாக இருக்க முடியவில்லை. நீ பாம்பு என்னை ஏமாற்றி மண முடித்திருக்கிறாய். நான் உன்னை விட்டு விலகுகிறேன் என்றான். அவள் ஒரு நிமிடம் என்று கூறி தன் கண்களை விரித்து அதில் அவனுடைய பிம்பத்தைப் பார்க்கச் செய்தாள். ஒரு பாம்பு படம் எடுத்து நின்றிருந்தது.

 

குறுங்கதைகள்-தொடர்


 




அவன் எழுதும் தொடர்கதைகளை அவள் விரும்பி வாசித்து வந்தாள். அந்தக் கதைகளில் வரும் கதாநாயகிகளைத் தன்னை நினைத்து எழுதியதாகவே அவள் கருதிக் கொள்வாள். பல கதைகளின் முடிவுகளை அவள் பெரிதும் ரசித்திருக்கிறாள். அவனுக்கு அடிக்கடி மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கதையின் போக்குகளைக் குறித்து விவாதிப்பாள் அவன் தொலைபேசி எண்ணை அவளிடம் கொடுக்க மறுத்தான். எப்படியோ தேடி அதையும் வாங்கிவிட்டாள். ஆனால் அவள் பேசுவதை அவன் விரும்பவில்லை. குறுஞ்செய்திகள் மட்டும் அனுப்ப அனுமதி தந்தான். அதில் தன் குணநலன்களை விளக்கினாள். கதையின் நாயகிகள் தன்னைப் போல் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாகக் கூறினாள். ஆனால் அவன் அவளுடைய கருத்துகளைப் பெரும்பாலும் புறக்கணித்துவிடுவான். அவன் போக்கில் எழுதுவதை எப்படியும் இவள் விரும்பியே தீருவாள். ஒரு பிரபல வார இதழில் அவனது ஒரு தொடர் வந்து கொண்டிருந்தது. அதில் வரும் கதாநாயகியை வேண்டுமென்றே அவளைப் பிரதிபலிப்பது போல் உருவாக்கியிருந்தான். அதில் அவளுக்குப் பரம திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இறுதியில் கதை என்ன ஆக வேண்டும் எனப் பல யோசனைகளைக் கூறிக்கொண்டே இருந்தாள். கதையின் நாயகியின் திருமணம் குறித்தச் சிக்கல் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. கதாநாயகனை அந்தக் கதாநாயகி மணந்து கொள்ளக் கூடாது என்று இவள் கூறினாள். அப்படி ஒரு காட்சியை அமைத்தால் இவள் தற்கொலைச் செய்து கொள்ளப் போவதாக மிரட்டினாள். அவன் அதனால் எரிச்சலடைந்தான். கதையின் நாயகி கதாநாயகனைத் திருமணம் செய்யாமல் போனால் வாசகர்கள் விரும்பமாட்டார்கள். என்ன செய்வது என யோசித்தான். கதையின் நாயகி கதையிலிருந்து வெளியேறி விட்டதாகவும் அவள் தன்னைச் சந்தித்தால் தானே அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறி கதையை முடித்தான். இதைத்தான் அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது என்று கூறி அவனைச் சந்திக்க நேரில் வந்து நின்றாள்.

Tuesday, 21 September 2021

குறுங்கதைகள்-விபத்து


 


அவன் தன்னுடைய மனித ரோபாட்டை வடிவமைக்கத் தொடங்கினான். இந்த எந்திர மனிதன் எல்லா வகையிலும் மனிதனை  விட அதிகத் திறன் வாய்ந்ததாக இருக்க பல முன்னேற்பாடுகளைச் செய்தான். எந்திரங்கள், வாகனங்கள், ஆயுதங்கள், விலங்குகள், மரங்கள், மனிதர்கள் என எல்லா காரணங்களினாலும் வரும் அபாயங்களைப் பதிவு செய்தான். இதில் முக்கியமான ஒரு வளர்ச்சியாக முன்னுணர்வு கொள்வதற்கான சூத்திரத்தை உருவாக்கி எந்திர மனிதனின் மூளையில் வைத்தான். இதனால் அது நிலநடுக்கம் முதல் புயல் மழை வரை வரக்கூடிய அபாயங்களை முன் கூட்டியே கணித்தது. இத்தனையும் செய்தும் அதில் ஏதோ குறை இருப்பது போல் அவனுக்குப்பட்டது. மனித மூளை எதைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது, ஓர் அனுபவத்திற்குப் பின் என்ன சிந்திக்கும் என்பதைக் குறித்த அறிவை உருவாக்கி எந்திர மனிதனுக்குக் கொடுத்தால் ஓரளவு எந்திர மனிதன் அதிமனிதன் ஆவான் என அவனுக்குத் தோன்றியது. அதையும் நிகழ்ச்சி நிரலாக மாற்றி அந்த எந்திரத்தின் கணினியில் பதித்தான். அதனைச் சோதித்துப் பார்க்க எண்ணினான். தான் சிந்திப்பது குறித்து கேட்டான். எந்திரக் கணினியில் அடுத்து என்ன புதிய அம்சத்தை உருவாக்கலாம் எனச் சிந்திப்பதாகச் சரியாகப் பதிலளித்துவிட்டது அது. மேலும் சில அம்சங்களைக் குறித்து யோசித்துக் கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தான். எந்திர மனிதன் அபாயம் அபாயம் என அலறினான். எதற்காக அலறுகிறது எனக் கேட்டான். மனிதனுக்கு விபத்து வரப்போவதாகக் கூறியது. எந்த மனிதன் எனக் கேட்டான். அதற்குச் சொல்லத் தெரியவில்லை. உலகத்திலுள்ள மனிதர்கள் அனைவரைப் பற்றியும் அது அறிந்தால் மட்டுமே அது துல்லியமாகச் சொல்லும். தன்னைப் பற்றிக் கூட அதன் மூளையில் பதிவு செய்யவில்லையே என நினைத்தான். என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டே எழுந்து போய் கையைத் தவறுதலாக மின்சார இணைப்பில் வைத்துவிட்டான். மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட அவன் மூச்சு நின்றது. அபாயம் அபாயம் என எந்திர மனிதன் அலறிக் கொண்டிருந்தான்.

Monday, 20 September 2021

குறுங்கதைகள்-மூப்பு

 



இந்த எண்பது வயதில் மனைவியின் இளமைக் காலத்தை எண்ணிப் பார்ப்பதில் இருக்கும் ஆனந்தம் அலாதியானது. அதனால் அவளுக்கு இப்போதைய பெண்கள் உடுத்தும் உடைகளை வாங்கிக் கொடுத்தேன். அவளுக்கு எல்லாமே பொருத்தமாக இருந்தன. இன்றைய பெண்களைப் போல அவள் நடை உடை பாவனைகள் மாறியிருந்ததைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அவளுடன் புதிய திரைப்படத்திற்குப் போனது ஒரு தனி அனுபவமாக இருந்தது. அவளுக்கு அந்தப் படம் பிடித்தது. எனக்குப் பிடிக்கவில்லை. என் வயது மூப்பினால் அது போன்ற படங்களை ரசிக்க முடியவில்லை. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. வழி நெடுகிலும் பலரும் அவளை உற்றுப் பார்த்தனர். எனக்குப் பெருமிதமாக இருந்தது. அவளின் பொங்கும் இளமையும் இன்றைய இளம் பெண்கள் போன்ற தோற்றமும் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தன. அவள் இப்படி இருப்பதைத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். அவள் எப்போதும் இப்படியே இருந்துவிட்டால் எனக்கு ஆறுதலாக இருக்கும். அவள் இளமையாகிவிட்டதால் என்னைத் தனக்கு நிகரான நபராக வைத்துக் கொள்ள விரும்புவாளா என்ற சந்தேகம் எனக்குள் தோன்றியது. அவள் என்னை விட்டுப் பிரிந்து செல்ல முற்பட்டால் என் இதயம் வெடித்துவிடும். அவள் இளமையாகிவிட்டதால் என் பேத்தி போல் இருக்கிறாள். அவளுக்கு என்னைப் பற்றித் தாழ்வு மனப்பான்மை நிச்சயம் ஏற்படும். அதை என்னால் போக்க முடியாது. ஆனால் அவளை என்னுடன் இருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தவும் நான் விரும்பவில்லை. நான் இறந்துவிட்டால் அவள் வேறு யாராவது ஒருவரோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளாலாம். ஆனால் அதையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என்னால் தூங்க முடியவில்லை. அவளுடைய உடைகளைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். அடுத்த நாள் இரவு அவளுக்குத் தூக்க மாத்திரைகளைப் பாலில் கலந்து கொடுத்தேன். இனி அவள் எழுந்திருக்கப் போவதில்லை என்றாலும் அவளுடைய உடைகள் மட்டும் அவளுடைய நினைவை பசுமையாக வைத்துக் கொள்ளப் போதும் என எண்ணிக் கொண்டேன்.

குறுங்கதைகள்-காகம்

 



எப்படியாவது மயிலாகிவிட வேண்டும் என்று காகம் ஒன்று பெருந்தவம் இருந்தது. மயில் தோகைகளைக் கொண்டு வந்து கூட்டில் வைத்து அதன் மீது அமர்ந்து தவம் செய்தது. அதிகமாகக் கரையவே இல்லை. ஏனெனில் மயில் போல் குரலும் வாய்க்க வேண்டும் என கவனம் கொண்டது. மயில் போன்ற அழகும் கம்பீரமும் வாய்த்துவிட்டால் முருகனின் அருள் பார்வைக் கிடைக்கும் என எண்ணியது. மயில் தோகை விரிப்பது போலவும் நடனம் ஆடுவது போலவும் கனவு கண்டது. அந்த மயிலாகத் தான் ஆகிவிட்டதாக எண்ணி ஒயிலாக நடமாட ஆசைக் கொண்டது காகம். மயில் தோகை விரித்தால் பின்புறம் வேல் போல் தெரியும் தோற்றம் கிடைக்கும் என்று நினைத்து அதற்காக ஏங்கிப் போனது. தான் மயிலாகிவிட்டால் தன் சந்ததிகள் அனைத்தும் மயிலாகிவிடும் என நினைத்து இறுமாந்து கொண்டது. முருகனை எண்ணிப் பலவாறு துதித்தது. முருகன் தோன்றி காகத்திடம் எதற்காக மயிலாகவேண்டும் எனக் கேட்டான். அப்போதுதான் அவனுடைய இருப்பிடத்தில் வசிக்க முடியும் என்றது காகம். மயிலாகாமலேயே தன்னிடத்தில் வசிக்கலாம் என்றான் முருகன். ஆனால் மயிலானால் அங்கிருப்பவர்கள் தன்னை மதிப்பார்கள் என்றது காகம். பிறர் மதிப்பதற்காக எதற்கு உருமாற வேண்டும் என்றான் முருகன். தன் அழகு கூடும் என்றது காகம். அழகு நிலையானதல்ல என்றான் முருகன். மயில் பெற்றிருக்கும் மதிப்பைப் பெற என்றது காகம். மயில் மதிப்பு பெற்றிருப்பதாக வீண் கற்பனை செய்யக்கூடாது என்றான் முருகன். காகமாக எல்லோரும் உதாசினப்படுத்துகிறார்கள் என்றது. தோற்றத்திற்கு இத்தனைக் கவனம் கொண்டு மயில் ஆகிவிட்டால் கூட தன் இடத்திற்கு வரமுடியாது என்றான் முருகன். மயிலாக மாறி சில மணித்துளிகள் மட்டும் முருகனின் இருப்பிடத்தில் இருக்க அனுமதி கேட்டது காகம். தன்னிடத்தில் சில மணித்துளிகள் மிக நீளமானவை என்றான் முருகன். தான் பேசியது எல்லாமே அபத்தமானவை என்று கூறி முருகனிடம் இருக்கவேண்டும் என்பது மட்டுமே தன் நோக்கம் என மன்னித்து அருளுமாறு கெஞ்சியது காகம். மயிலும் காகமும் இணைந்து புதிய பறவையாய் தன்னிடம் வாழ முருகன் அருளினான்.  

Sunday, 19 September 2021

குறுங்கதைகள்-கல்





சிறுமியை வன்புணர்வு செய்ததற்காக அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பல நாட்களாக அவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் காவல்துறையும் பாடுபட்டு வந்தது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே இருந்தது. அன்றும் வழக்கம் போல் அவனை அழைத்து வந்தார்கள். வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவனை மீண்டும் அழைத்துப் போவதற்கான வண்டியில் ஏற்ற இருந்த போது அவன் அதே இடத்தில் ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டான். யாராலும் அவனை அந்த இடத்திலிருந்து நகர்த்த முடியவில்லை. ஒரு பொம்மையைப் போல் அதே இடத்தில் நின்றுவிட்டான். மருத்துவக் குழு அவனை நகர்த்த முயற்சி செய்தும் முடியவில்லை. காவல் துறையினர் பலம் கொண்ட மட்டும் அவனை நகர்த்திப் பார்த்தனர் முடியவில்லை. அவனை வேடிக்கைப் பார்க்கக் கூட்டம் கூடிவிட்டது. அவன் அப்படியே நின்று பல நாட்கள் ஓடிவிட்டன. அவன் மீதிருந்த வழக்கை என்ன செய்வது என்று தெரியாமல் நீதிமன்றமும் குழம்பிப் போனது. அவன் நின்றிருந்த இடத்தில் எப்போதும் காலவர்கள் பணியில் இருந்தார்கள். அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. பல நாட்கள் ஆனபின், அவன் மீதிருந்த கவனம் குறையத் தொடங்கியது. சிலர் அவன் மீது கல்லெறிந்து பார்த்தார்கள். அதனால் அவன் முகத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாயின. பளிங்குக் கல்லாக அவன் சமைந்துவிட்டான் போல் இருந்தது. இந்த நிகழ்வு பல குற்றவாளிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் இது போன்ற தண்டனைகள் வந்துவிடும் என அவர்கள் பெரிதும் அச்சப்பட்டனர். ஒரு நாள் கடும் மழை பொழிந்தது. அவன் கரைந்து காணாமல் போனான். 

Friday, 17 September 2021

குறுங்கதைகள்-கர்ட் வன்னேகாட்*டுடன் நடந்த உரையாடல்


 



நாவலாசிரியர் கர்ட் வன்னேகாட் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தேன். அவருடைய கசாப்புக்கடை-5* என்ற மிகப் பிரபலமான நாவல் குறித்து விவாதித்தேன். அதில் ட்ரால்ஃபமடோரியன்* என்ற வேற்றுக்கிரகவாசிகள் இனம் குறித்து விரிவாக எழுதியிருந்தார். அந்த வேற்றுக்கிரகவாசிகளை அவர் நேரில் சந்தித்திருப்பதாகத் தெரிந்ததால் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் வேறு சில வேற்றுக்கிரகவாசிகளைச் சந்தித்திருப்பதாகவும் அவர்களை அப்படியே கதையில் பயன்படுத்தினால் ஏதாவது  விபரீதம் ஏற்படும் என்பதால் இப்படி உருமாற்றி வேறு பெயரில் பயன்படுத்தியதாகச் சொன்னார். அவர் சந்தித்த வேற்றுக்கிரகவாசிகள் ஆல்ஃபா சென்டாரி என்ற விண்மீன் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு கிரகத்திலிருந்து வந்ததாகவும் குறிப்பிட்டார். அப்போது தன்னுடைய மரணத்தைப் பற்றியும் கூறினார். தான் இறந்த பின் அந்த வேற்றுக்கிரகவாசிகள் தன்னை அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்று சொன்னார். அவர்கள் பூமிவாசிகளைக் கண்காட்சியாக வைத்துப் பார்ப்பதற்காக அழைத்துப் போகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். கசாப்புக்கடை-5 கதையில் வந்த பில்லி பில்கிரிம் பாத்திரம் அவருடையதா என்று கேட்டேன். ஓரளவு ஒற்றுமை இருப்பதாகச் சொன்னார். அந்த வேற்றுக்கிரகவாசிகளிடம் ஏன் சரணடையவேண்டும் என்று கேட்டேன். வேறு எந்த முடிவுக்காகவும் காத்திருப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று கூறினார். அந்தக் கிரகத்திற்குப் போகலாம் என்ற உறுதியான முடிவு ஆறுதல் அளிப்பதாகவும் குறிப்பிட்டார். என்னையும் அந்த வேற்றுக்கிரகத்தில் கண்காட்சிப் பொருளாக வைத்துக் கொள்ளப் பரிந்துரைக்கலாமா எனக் கேட்டார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். வேறு என்ன காரணத்தினால் அந்த வேற்றுக்கிரகவாசிகளுடன் செல்ல அவர் முடிவெடுத்தார் என்று கேட்டேன். அங்குக் கடிகாரம் இல்லை என்றார்.


**கர்ட் வன்னேகாட் அமெரிக்க நாவலாசிரியர். ஜெர்மனியிலிருந்து குடிபெயர்ந்தவர். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் ட்ரெஸ்டன் நகர் அழிக்கப்பட்டதை நேரில் கண்டவர். அதனை வைத்து கசாப்புக்கடை-5 (Slaughterhouse-V) என்ற பின்நவீனத்துவ நாவலை எழுதியவர். அந்த நாவலாசிரியரும் அந்த நாவலில் வந்த பில்லி பில்பிரிகிம் மற்றும் ட்ரால்ஃபமடோரியன் கதாபாத்திரங்களும் மீண்டும் இங்குக் கதாப்பாத்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். 

Thursday, 16 September 2021

குறுங்கதைகள்-வாசம்





அவள் உடுத்தியிருந்த அந்தப் புடவையில் ஒரு சிவப்பு மலர் பெரிதாக விரிந்திருந்தது. இரவில் அவள் உறங்கும் போது அதைக் கண்ட ஒரு நாகம் அந்தப் பூவில் ஒளிந்துகொள்ள விரும்பியது. மெதுவாக அந்தப் பூவுக்கு அருகில் வந்து சுருண்டு அதன் மையத்திற்குப் போனது. அந்தப் பூவின் வாசம் அந்த நாகத்தை மயக்கியது. இந்தப் பூ மட்டுமே தனது சொர்க்கம் என கருதியது. இனி என்ன நடந்தாலும் இந்தப் பூவை விட்டுப் போகக் கூடாது என முடிவெடுத்தது. தன் உடலைப் புடவையுடன் ஒட்டியிருப்பது போல் மாற்றிக் கொண்டது. அவள் எழுந்தாள். புடவையில் ஏதோ மாற்றம் தெரிவதை உணர்ந்து கொண்டாள். உடனடியாக புடவையை மாற்றிக் கொண்டாள். கழற்றிய புடவையை ஒரு பையில் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினாள். அருகில் இருக்கும் காட்டுப் பகுதியில் ஒரு புற்றின் அருகில் பையை வீசிவிட்டு வந்தாள். புடவையில் இருந்த பூவிசன் வாசம் மறைந்துவிட்டது. நாகத்திற்குச் சுயநினைவு வந்தது. காட்டுக்கு எப்படி வந்தது எனப் புரியாமல் விழித்தது. பூ இருக்கிறது. வாசம் ஏன் இல்லை என வேதனை அடைந்தது. வாசத்தைத் தேடிப் போகலாம் என முடிவெடுத்து. அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்தது. வாசலில் தான் விரும்பிய பூவும் தனக்குப் பிடித்த வாசமும் இருப்பதைக் கண்டு அந்தச் செடிக்கு அருகிலேயே சுருண்டு படுத்துக் கொண்டது. அந்த நாகம்  வரும் என எதிர்பார்த்த அந்தப் பெண் பூவின் மீது தனது விருப்பமான வாசனைத் திரவியத்தைத் தெளித்து வைத்திருந்தாள். அப்படியே அந்தப் பாம்பைத் தூக்கி பையில் போட்டுக் கொண்டு அத்துடன் அந்தப் பூச்செடியையும் போட்டு எடுத்துப் போய் அதன் புற்றுக்கு அருகில் விட்டுவிட்டு வந்தாள். தினம் அந்த வாசனைத் திரவியத்தை அந்தப் பூச்செடியின் மீது தெளித்துவந்தாள். ஒரு நாள் வேலை காரணமாக அங்குப் போக முடியவில்லை. நாகம் மீண்டும் அவள் வீட்டில் குடியேறியது. 

குறுங்கதைகள்-பாடல்





அவன் இரவு தூங்கும் போது ஒரு பெண் பாடும் ஒலி கேட்டது. அவன் அதைக் கேட்டுக் கொண்டே இருந்தான். தூக்கம் கலைந்து எழுந்த போது பாடல் நின்றுவிட்டது. கனவு ஏதோ கண்டு அதில் ஒலித்த பாடல் என நினைத்துக் கொண்டு தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான். அடுத்த நாள் இரவு தூங்கும் போது மீண்டும் அதே பெண்ணின் பாடல் ஒலி கேட்டது. அவன் அதில் மூழ்கிப் போனான். தூக்கம் கலைந்த பின் பாடல் நின்றுவிட்டது. இது தினம் நடக்கும் நிகழ்வாகிப் போனது. அவனுக்கு ஒரு நாள் இரவில் தூங்காமல் இருந்து அந்தப் பாடல் ஒலிப்பதைக் கேட்கவேண்டும் என முடிவு செய்து தூங்காமல் அமர்ந்திருந்தான். பாடல் கேட்கவில்லை. அடுத்த இரவு தூங்கிப் போனான். மீண்டும் அதே பெண்ணின் பாடும் ஒலி கேட்டது. தூக்கத்தில் எப்படியாவது யார் பாடுவது எனக் கண்டுபிடிக்கவேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்துபார்த்தான், முடியவில்லை. அடுத்த இரவு தூங்கும் போதே அந்தப் பாடும் பெண் யார் என்று தெரியவேண்டும் என முருகனிடம் வேண்டிக் கொண்டான். அன்று இரவு பாடல் ஒலித்தது. இப்போது தூக்கத்தில் அவனால் பேச முடிந்தது. யார் பாடுவது எனக் கேட்டான். நான் உன் தூக்கத்தின் காதலி. என் பாடலால் மட்டுமே உன்னை வந்தடையமுடியும். இப்படியே உன் தூக்கத்தில் என்னை இருக்க அனுமதி. என் பாடல் உன்னைத் தாலாட்டும் என்றாள் அந்தப் பெண். இவனும் வேறு வழியின்றி அந்தப் பெண்ணுக்குத் தன் தூக்கத்தில் பாட இடம் கொடுத்தான். காலையில் முருகனிடம் அந்தப் பெண் தூக்கத்தில் மட்டுமல்ல எப்போதும் தன்னிடம் இருக்கவேண்டும் என வேண்டினான். அந்தப் பெண் எப்போதும் உடன் இருக்கவேண்டும் என்றால் அவன் தூங்கக் கூடாது எனவும் அப்படி அவன் தூங்கிப் போனால் அவள் மீண்டும் அவன் தூக்கத்தில் மட்டுமே பாடுவாள் என முருகன் கூறினான். அதற்கு ஒத்துக் கொண்டு தூங்காமல் இருக்கத் தொடங்கினான். அந்தப் பெண்ணும் அவனிடம் வந்தாள். ஓர் இரவு அவன் அறியாமல் தூங்கிப் போனான். அந்தப் பெண் மீண்டும் அவன் தூக்கத்தில் மட்டும் வந்து பாடத் தொடங்கினாள்.

 

Tuesday, 14 September 2021

குறுங்கதைகள்-ஒளி


 



அன்று அவன் வீட்டு எதிரில் ஒரு பானை இருந்தது. அதை எடுத்துப் பார்த்தான். அதனுள் ஒளி நிரம்பியிருந்தது. அவனுக்கு அந்தப் பானையைக் கண்டு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அந்த பானையை வைத்துக் கொண்டு என்ன செய்வது  என யோசித்தான். வீட்டில் அதை வைத்துவிட்டு தன் பாட்டுக்கு எப்போதும் போல் வேலைகளைப் பார்ப்பது முதலாவது முடிவாக இருக்கும் என நினைத்தான். அந்தப் பானையில் தண்ணீர் ஊற்றிக் குடித்துப் பார்ப்பது இரண்டாவது முடிவாகக் கருதினான். யாருக்காவது அந்தப் பானையைக் கொடுத்துவிடுவது அல்லது கிணற்றில் அல்லது நதியில் போட்டு உடைப்பது மூன்றாவது முடிவாக எண்ணினான். அந்தப் பானை ஏதோ ஒரு காரணத்திற்காகத் தன்னிடம் வந்திருக்கிறது. அதனால் அதை வைத்துவிட்டு எப்போதும் போல் இயல்பாக இருக்க அவனால் முடியவில்லை. அதை யாருக்கும் கொடுப்பதையும் உடைப்பதையும் அவனால் ஏற்க முடியவில்லை. அதனால் அதில் தண்ணீர் ஊற்றி வைத்துக் குடித்தான். உடனே தன் பிறவியின் முக்காலத்தையும் அறிந்தான். வேலைக்குக் கிளம்பினான். அங்கிருப்பவர்களின் முக்காலங்களையும் அறிந்து கொண்டான். இதைச் சொன்னால் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும். நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதால் எல்லோரும் தங்கள் வருங்காலத்தை அறிந்து துன்பமே அடைவார்கள். எதற்காக அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தவேண்டும். தனக்குத் தெரிந்து தன்னுடன் மட்டுமே இருக்கட்டும் என கருதி வீட்டிற்கு வந்து அந்தப் பானையைக் கிணற்றில் போட்டு உடைத்தான். கிணற்றில் தண்ணீர் ஒளிரத் தொடங்கியது.  

Monday, 13 September 2021

குறுங்கதைகள்-தலை





திடீரென்று அவள் அமர்ந்திருந்த இடத்தின் தரைப் பகுதி வெடித்து ஒரு தலை முளைத்தது. ஓர் ஆணின் தலை அது. அதன் கண்கள் மூடி இருந்தன. அவளுக்கு அச்சத்தில் பேச்சு மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. அந்தத் தலை எப்படி வந்தது, ஏன் வந்தது என அவளால் யோசிக்கவே முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அதன் முகத்தில் புன்னகை வந்தது. மண்ணில் புதைந்திருந்து வெளிப்பட்டதால் அதன் முகத்தில் மண் அப்பியிருந்தது. பயந்துவிட்டாயா என்றது அது. ஆம் என்றாள். தான் வந்துவிட்டதால் இனி அச்சப்பட வேண்டாம் என்றது. மேலும் அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்றும் கேட்டது. ஒரு வார இதழில் வந்திருந்தக் குறுக்கெழுத்துப் புதிர் விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பதாகக் கூறினாள். தெரியாத சொற்களைத் தன்னிடம் கேட்கும் படி சொன்னது. அவளும் அதை ஆமோதித்து ஆழ்கடலாக இருக்கவேண்டியது எது என்று கேட்டாள். அறிவின் தெளிவு என்றது தலை. அதற்குத் தொடர்பான சொற்களைப் போட்டு அதைப் பூர்த்தி செய்தாள். இன்மை எனப்படுவது எது என்று கேட்டாள். அனுபவம் பெறாத எதுவும் என்றது தலை. சரியான சொல் என்றாள் அவள். தலை பெருமிதமாகச் சிரித்தது. உள்ளும் புறமும் இருப்பது எது என்று கேட்டாள். உன் உள்ளில் இருப்பது என் புறத்தில் இல்லை என் உள்ளில் இருப்பது உன் புறத்தில் இல்லை என்றது. புரியவில்லை என்றாள். சுயத்தைக் குறித்த கவனம்தான் அது என்றது. இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டாள். இதெல்லாம் தெரிந்ததால்தான் என்னை மண்ணுக்குள் போட்டுப் புதைத்துவிட்டார்கள் என்றது. நீ ஏன் திரும்பி வந்தாய் என்றாள். உன்னிடம் என்னை ஏற்கும் பக்குவம் இருக்கும் என்பதால் வந்தேன் என்றது. வெறும் தலையாகிய உன்னை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது என்றாள். குறுக்கெழுத்துப் புதிர் விளையாடலாம் என்றது. வேறு ஏதாவது உபோயகமான செயலாகச் சொல் என்றாள். என்னைப் பற்றி வெளியில் சொன்னால் உன்னைப் பெரும் சக்தி வாய்ந்தவளாகக் கருதுவார்கள் என்றது. அது எனக்குத் தேவையில்லை என்றாள். என்னை உயிருள்ள பொம்மை என்று கூறிவிடு என்றது. அது அவளுக்குப் பிடித்தது.

Sunday, 12 September 2021

குறுங்கதைகள்-கிளி





அந்தக் கிரகத்தின் உட்புறkf உள்ள உள்ளீடான பகுதிக்குள் இயங்கும் உலகத்தைச் சேர்ந்தவன் அவன். எப்படியாவது மீண்டும் அந்த இடத்திற்குச் சென்றுவிடவேண்டும் என முடிவு செய்தான். தனக்கு நெருங்கியவர்களிடம் ஒரு பெரிய தாழியில் அவனை இட்டு அவனுக்குத் தேவையானவற்றை வைத்து உடன் அவன் வளர்த்து வரும் கிளியையும் வைத்து மூடி அந்தக் கிரகத்தின் வட துருவப் பகுதியில் கடலின் ஆழத்தில் வைக்கச் சொல்லிவிட்டான். அந்தப் பகுதியிலிருந்து சென்றால் தன் இனம் இருக்கும் இடம் வந்துவிடும் என இப்படிச் செய்யச் சொன்னான். அப்படியே அவர்களும் அவனை ஒரு தாழியில் உள்ளே வைத்து கடலுக்கடியில் போட்டுவிட்டு வந்துவிட்டார்கள். அவன் அதிலிருந்து வெளிப்பட்டு கிளியை மட்டும் எடுத்துக் கொண்டு அவன் இனத்தைப் போய்ச் சேர்ந்தான். அவர்கள் அவனை விரும்பவில்லை. அவன் அங்கிருந்து சென்றுவிட்டால் நலம் என நினைத்தார்கள். அவன் கொண்டு வந்திருந்த கிளி மிகச் சிறிய அளவாகச் சுருங்கிவிட்டது. அதனால் அவன் கிளி வைத்திருந்து அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அது அவனைச் சுற்றி நடப்பதை அவனுக்குச் சொல்லத் தொடங்கிற்று. அவன் வட துருவத்தில் இருந்தாலும் அந்தக் கிரகத்தின் நீளத்தைக் கடந்து தென்துருவத்தை வந்தடைந்தான். இனி தனக்கென தனி ராஜ்ஜியம் அமைக்கும் எண்ணம் கொண்டான். தன் இனத்திடம் இருக்கும் பல கருவிகள் கிடைத்தால் அது சுலபமாக நடக்கும் என நினைத்தான். கிளியை அனுப்பி ஒற்றறிந்து அந்தக் கருவிகளைச் செய்தான். பின் பல கிரகங்களுக்கும் அந்தக் கருவிகளை அனுப்பி அங்கிருக்கும் இனங்களிலிருந்து சிலரைக் கடத்திக் கொண்டு வந்தான். அவர்களைத் தன் ராஜ்ஜியத்தில் பல வேலைகளுக்கு அமர்த்தினான். இப்படியே ராஜ்ஜியத்தை வளர்த்து பெரிய சாம்ராஜ்ஜியம் ஆக்கிவிட்டான். எல்லாவற்றிற்கும் கிளிதான் உதவியது. அவன் இத்தகைய ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டதை அவன் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ராஜ்ஜியத்தை அமைக்கும் அளவுக்கு யார் அவனுக்கு உதவியது என அதிர்ச்சி அடைந்தார்கள். அந்தக் கிளிதான் இத்தனை வேலைகளையும் செய்தது என்பதைப் புரிந்து அதைச் சிறையிட்டார்கள். அவனுடைய ராஜ்ஜியம் சிதிலமடைந்தது.

 

குறுங்கதைகள்-பசை


 



ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் அவர். மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்வதில் வல்லவர். ஒரு குழந்தைக்குக் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஏதுமில்லாமல் பிறந்திருந்ததால் அந்தக் குறையைச் சரி செய்ய அவரிடம் அழைத்து வரப்பட்டது. அந்தக் குழந்தைக்கு செயற்கையான கண்கள் பொருத்த முடிவு செய்தார் மருத்துவர். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் பயன்தராது என அவருடைய அனுபவ அறிவு எச்சரித்தது. அதனால் ஒரு சில மாதங்கள் கடும் ஆய்வு செய்து திசுக்களை ஒட்டும் பசை ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்தப் பசையைப் போட்டு துண்டான உறுப்புகளை ஒட்ட முடியும் என்பதையும் கண்டறிந்தார். அறுவை சிகிச்சை இல்லாமல் சில மணி நேரங்களிலேயே குணமடையக் கூடிய மருத்துவ முறைமையாக அது இருந்தது. அதைப் பயன்படுத்தி அந்தக் குழந்தைக்குச் செயற்கைக் கண்களைப் பொருத்தத் திட்டமிட்டார். அந்தக் கண்கள் மூளையின் பார்வை நரம்புகளுடன் இணைய மட்டும் சிறிய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. எல்லாவற்றையும் செய்து முடிக்க சில மணி நேரங்கள் ஆனது. மருத்துவர் இந்தக் குழந்தையின் சிகிச்சையைத் தனக்கு ஒரு சோதனையாகக் கருதிக் கொண்டிருந்தார். ஓரளவு வெற்றிகரமான சிகிச்சைதான் என அவருக்குப் புரிந்த பின்தான் தன் அறைக்குத் திரும்பினார். மிகவும் சோர்வாக இருந்ததால் தன் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தார். அரை மணி நேரத்தில் அவரது இருக்கையிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவர் துறையில் இருந்த மற்றொரு மருத்துவர் இந்தப் பசையைக் கண்டுபிடித்ததற்காக அவர் மீது கடும் பொறாமையில் இருந்தார். அதனால் அந்தத் தண்ணீர் பாட்டிலில் அந்தப் பசையைக் கலந்துவிட்டிருந்தார். அதைக் குடித்தால் மரணம் நிச்சயம் என்பது மட்டும் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.  

Friday, 10 September 2021

குறுங்கதைகள்-சூரியபுராணம்





சூரியன் அவளை அழைத்தான். சூரியனின் தேரில் அவள் ஏறி அமர்ந்தாள். சூரியனிடம் தன்னை ஏன் உடன் சேர்த்துக் கொண்டதாகக் கேட்டாள். அவள் தனது மற்றொர் உயிர் என்றான் சூரியன். அவள் சூரியனுடன் சேர்ந்து விட்டது மற்ற நட்சத்திரங்களுக்குத் தெரியுமா என்று கேட்டாள். இல்லை என்றான் சூரியன். தெரிந்தால் என்னாகும் என்று கேட்டாள். பொறுத்திருந்து பார்க்கலாம் என்றான் சூரியன். இவள் சூரியனுடன் சேர்ந்திருப்பதை எப்படியோ தெரிந்து கொண்ட ஒரு நட்சத்திரம் சூரியனிடம் வந்து தனக்கு அவளை விட்டுக் கொடுக்குமாறு கேட்டது. தன் உயிரில் பாதி அவளுக்குக் கொடுத்திருப்பதால் அது முடியாது என்று சூரியன் கூறிவிட்டான். அதனால் ஆத்திரமடைந்த அந்த நட்சத்திரம் மேலும் ஒன்பது நட்சத்திரங்களை அழைத்து வந்து அவளைத் தங்களுடன் அனுப்பக் கேட்டன. அவள் தன் பத்து விரல்களைப் பிய்த்து அந்தப் பத்து நட்சத்திரங்களிடம் கொடுத்து அவர்கள் தனது மூச்சுக்காற்றை ஊதினால் தன்னைப் போன்ற பெண் கிடைப்பாள் என்று சொல்லி அனுப்பிவிடுகிறாள். அவர்கள் போன பின் அண்டத்தின் தலைவர் வந்து அவளைத் தன்னிடம் அனுப்புமாறு கோரினார். சூரியன் அச்சமடைந்து என்ன செய்வது எனத் திகைத்து நின்றுவிட்டான். அவளுடன் தான் கலந்து விட்டால் அவள் மட்டுமே ஒளி பெற்றுத் திகழ்வாள் எனவும் தான் ஒளி தந்து கொண்டு இருக்கப் போவதில்லை எனவும் தன்னுடன் அவள் இருப்பதால்தான் இந்தப் போட்டி எனவும் கூறி அவளுடன் கலந்துவிடுகிறான். சூரியனின் ஒளியைப் பெற்று புதிய சூரிய நட்சத்திரமாகிவிட்ட அவள் தன்னைப் போன்ற உருப்பெற்ற பெண்களை மற்ற நட்சத்திரங்களிடமிருந்து காணாமல் போகச் செய்தாள். சூரியன் தன்னுடன் கலந்துவிட்டதால் ஈருயிர் என்ற நிலைமாறி ஓருயிர் ஆகிவிட்டதால் தான் யாருக்கும் இனி சொந்தமாகப் போவதில்லை எனக் கூறி அண்டத்தின் தலைவரையும் அனுப்பிவைத்தாள்.  

குறுங்கதைகள்-மலை





எப்போதும் அந்த மலையில்தான் அவளும் அவள் தோழியும் பள்ளி முடிந்தவுடன் விளையாட வருவார்கள். அவர்களுக்கு மலையின் அழகும் கம்பீரமும் அதனை நெருங்க நெருங்கத்தான் அதிகரிக்கும். அதன் மௌனம் அவர்களுக்குள்ளும் எப்போதும் குடிகொள்ளும். அவர்கள் இருவரும் மலை அருகே போவதற்காக ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று மலை முன்னே நகரத் தொடங்கியது. தினமும் அவர்கள் இருவரும் எத்தனை முறை அந்த மலை மீது ஏறி இறங்கி விளையாடி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்த மலை அன்று மட்டும் ஏன் நகர்கிறது என இருவருக்கும் அதிசயமாக இருந்தது. இருவரும் சிறிது பின்வாங்கினார்கள். அது மெதுவாக முன்னோக்கி வந்து கொண்டிருந்தது. இதை எப்படி நிறுத்துவது எனப் புரியாமல் இருவரும் விழித்தார்கள். மலையின் முன் மண்டியிட்டு அமர்ந்து இருவரும் முறையிட்டார்கள். அவர்களை விடப் பல மடங்குப் பெரிதாக இருக்கும் மலை இப்படி நகர்ந்தால் அதன் எதிரில் எதுவும் இருக்க முடியாது. எல்லாமும் அழிந்துவிடும். அதனால் தயைக் கூர்ந்து நகர்தலை நிறுத்தும்படி இருவரும் வேண்டிக் கொண்டார்கள். மலை சொன்னது நகர்தலை நிறுத்த முடியாது. ஏனெனில் தனக்குள் இருக்கும் கல் அசுரன் இப்படி நகர உத்தரவிட்டிருப்பதாக மலை கூறியது. அந்த அசுரனுக்குப் பிடித்த ஒரு பாடல் எங்கோ ஒலிப்பதால் அதைக் கேட்க இப்படி நகரச் சொல்வதாக மலை சொன்னது. அந்தப் பாடல் தங்களுக்குக் கேட்கவில்லையே என்று இரு தோழியரும் சொன்னார்கள். மண்ணின் அடியில் காதை வைத்துக் கேட்டால் அவர்களுக்கும் அந்தப் பாடல் கேட்கும் என மலை கூறியது. உடனே அவர்கள் இருவரும் அருகில் இருந்த வற்றிப் போனக் கிணற்றில் குதித்தார்கள். அந்தக் கிணற்றின் அடிப்பகுதியில் இருந்த மண்ணின் மீது காதை வைத்துக் கேட்டார்கள். அப்போது ஓர் இனிமையான பாடல் கேட்டது. அதன் இனிமையில் சொக்கி இருவரும் அந்தப் பாடலைப் பாடத் தொடங்கினார்கள். மலை, கிணற்றின் அருகில் வந்து நின்றது. 

Wednesday, 8 September 2021

குறுங்கதைகள்-சிலந்தி





உளவுத் துறைக்கு அவன் புதிதாக வந்திருந்தான். அவனிடம் தீர்க்க முடியாத ஒரு வழக்கை ஒப்படைத்தனர். ஒரு பெண் இறந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. அவள் எப்படி இறந்தாள் எனத் தெரியவில்லை. அதை அவன்தான் கண்டுபிடிக்கவேண்டும் எனக் கூறிவிட்டனர். அவள் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறைக்குச் சென்று பார்த்தான். அவள் தூங்குவது போல் இருந்தது. இறந்தது போல் இல்லை. அவள் பெட்டிக்கு அருகே ஒரு சிலந்தி அமர்ந்திருந்தது. அது இவனைப் பார்த்தது. மெதுவாக நகர்ந்தது. அவள் இறந்துபோது அவள் வீட்டுக்கு யாரும் வரவில்லை. எனவே கொலைக்கான வாய்ப்பில்லை. அவள் விஷம் எதையும் உண்ணவில்லை. தற்கொலையும் அல்ல. அவளுக்கு வந்த குறுஞ்செய்திகள் எவையும் சந்தேகம்படும்படி இல்லை. அவள் ஒரு மூடிய அறையில் இருந்து போது இறந்து போயிருந்தாள். கடைசியாக அவள் எழுதிய ஒரு கவிதை எனச் சொல்லி ஒரு நோட்டு புத்தகத்தை நீட்டினார்கள். அதில் அவள் கடைசியாக எழுதிய கவிதை ஒன்று இப்படி இருந்தது:

     சிலம்பியாய் உருமாறி

     எனைக் கொள்ளும்

     வேல் வளஇளவனே

     போற்றி!!! போற்றி!!!

இந்தக் கவிதைக்கும் இவள் மரணத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. சிலம்பி என்பது சிலந்தி என்ற பொருள் கொண்டச் சொல். அவளது பெட்டி அருகே ஒரு சிலந்தி இருந்தது. சிலந்தியாய் உருமாறி என்ற கவிதையின் வரி இவளை யாரோ சிலந்தியாய் உருமாற்றி இருக்கிறார்கள். வேல்வள இளவன் என்பது முருகனைக் குறிக்கலாம். இவள் இறக்கவில்லை. சிலந்தியாய் உருமாறி இருக்கிறாள். கூடு விட்டுக் கூடு பாய்ந்திருக்கிறாள். மீண்டும் தன் உடலுக்குத் திரும்ப முடியாமல் போய்விட்டதால் இவள் தூங்குவது போல் காணப்படுகிறாள். அந்தச் சிலந்திதான் அவள். அந்த உடலை அப்படியே வைத்திருந்தால் எப்போதாவது அவள் மீண்டும் தன் உடலுக்கு மீளக்கூடும். இவன் இதைக் கண்டுபிடித்துவிட்டதை யாரும் ஏற்கவில்லை. ஏனெனில் இது நம்பத்தகுந்தபடியாக இல்லை எனக் கூறிவிட்டனர். அவனை உளவுத் துறையிலிருந்தும் மாற்றிவிட்டனர்.

Monday, 6 September 2021

குறுங்கதைகள்-தேரை





அவன் அந்த மலையைக் கண்டு பெரிதும் விருப்புற்று அங்கு ஒரு வீட்டைக் கட்ட நினைத்தான். வீடு பாதி கட்டி இருக்கும் போது இடிந்து விழுந்தது. அவனுக்கு என்ன காரணம் எனப் புரியாமல் பெரும் துயருற்றான். அப்போது அந்த மலையின் அடிப்பகுதியில் ஒரு கல்லில் இருந்த தேரை தான் இருக்கும் கல்லைக் கண்டு அவன் அகற்றிவிட்டால் வீட்டைக் கட்டமுடியும் என்று சொன்னது. அவன் பெரு முயற்சி செய்து பார்த்தான். முடியவில்லை. முருகனிடம் முறையிட்டான். மலை மீது வீடு கட்ட வேண்டுமா மலை இருக்கும் இடத்தில் வீடு கட்ட வேண்டுமா என முருகன் கேட்டான். எது இருந்தாலும் தனக்கு ஏற்புடையதுதான் என்று இவன் கூறிவிட்டான். அடுத்த நாள் அவன் அந்த இடத்தைச் சென்று பார்த்த போது மலை கரைந்து போயிருந்தது. அந்தக் கல்லும் காணவில்லை. தேரையும் இருக்காது என நம்பினான். அந்த இடத்தில் வீட்டைக் கட்டி முடித்தான். வீட்டுக்கு ஒரு கிணறு வெட்ட முடிவு செய்தான். கிணறு வெட்டும் போது மண் குவியல் கிணறு மூடிவிட்டது. மீண்டும் முருகனிடம் முறையிட்டான். அந்தத் தேரையின் வேலைதான் இது எனப் புரிந்துகொண்ட முருகன், கிணறு இருந்த இடத்தில் சிறு மலையை உருவாக்கச் சொன்னான். அவனும் அந்த இடத்தில் கல், மண்ணைக் குவித்து ஒரு சிறு மலையை உருவாக்கினான். அந்த மலை தனக்கானது என மகிழ்ந்து போனது தேரை. அடுத்த நாள் அந்த மலை கரைந்து கிணறு உருவானது. தான் இருக்கும் கற்களை எல்லாம் கரைத்துக் கொண்டே போனால் எப்படி வாழ்வது என முருகனிடம் முறையிட்டது தேரை. முருகன் அந்தத் தேரையை கற்கள் மட்டுமே இருக்கும் கிரகத்தில் கொண்டுவிட்டான். அந்தக் கிரகத்தைச் சாய்த்துவிட்டு ஒரு கல்லில் இருந்து கொண்டு விண்வெளியைச் சுற்றி வந்து கொண்டிருந்தது தேரை.

Sunday, 5 September 2021

குறுங்கதைகள்-முத்து





அவனுக்கு நதியில் நீச்சலடிப்பது பெரு விருப்பமான ஒன்றாக இருந்தது. அந்த நதி காட்டில் நுழைந்து வரும் இடம்தான் அவனுக்கு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. அன்று நீச்சலடிப்பதற்காகக் காட்டிற்கு வந்தான். நதியில் பாய்வதற்கு நின்றான். அப்போது நதியின் ஆழத்தில் ஒரு பெண் இருப்பதைக் கண்டான். அவளிடம் பெரிதும் ஈர்க்கப்பட்டுப் பேசினான். அவளிடம் தான் வரவேண்டும் என்று விருப்பமாக இருப்பதாகச் சொன்னான். தான் மிகவும் ஆழமான பகுதியில் இருப்பதால் அவனால் மூச்சை அடக்கி அங்கு வர முடியாது என்றாள். அங்கிருந்து போக விருப்பமில்லாமல் கரையிலேயே தங்கிவிட்டான். அந்தப் பெண்ணிடம் ஏதாவது வழியில் அவளை வந்தடைய முடியும் என்றால் அதைச் சொல்லச் சொல்லி வற்புறுத்தினான். அதற்குப் பல கடும் பயிற்சிகள் செய்யவேண்டும் என்றாள் அவள். அதற்கு ஒத்துக்கொண்டான். முதலில் நதியில் தலைகீழாகத் தொங்க வேண்டும் என்றாள். அதைச் செய்தான். பல மணி நேரங்கள் நதியில் நீச்சலடிக்க வேண்டும் என்றாள். அதையும் செய்தான். அங்கிருந்து தூரத்தில் தெரியும் மலையின் அடிவாரத்தில் இருக்கும் குளத்தில் சிப்பி ஒன்று இருப்பதாகவும் அதை எடுத்து வரவேண்டும் என்றும் கூறினாள். அதற்கு அபாயங்களைக் கடக்கவேண்டும் என்றாள். அதைச் செய்ய உறுதி பூண்டான். அந்தக் குளத்திற்குச் சென்றான். அந்த குளத்தில் கண்ணாடி மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. மேலும் பல விஷ பூச்சிகள் கொடுக்குகளைத் தூங்கிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தன. அதை எல்லாம் பொருட்படுத்தாது அந்தக் குளத்தில் பாய்ந்தான். கண்ணாடி மீன்கள் அவனைக் குத்திக் கீறின. அவன் உடல் ரணமானது. இருந்தும் விடாமல் முயற்சி செய்து அந்தச் சிப்பியை எடுத்துக் கொண்டு வந்தான். அந்த நதியில் இருக்கும் பெண்ணிடம் அதைக் காட்டினான். அதை நதியில் கழுவச் சொன்னாள். அதைக் கழுவக் கழுவ அந்தப் பெண் வெண்மையாய் உருண்டு திரண்டு உருமாறி முத்தாய் மாறி அவன் கையில் வந்து சேர்ந்தாள்.

 

குறுங்கதைகள்-மரம்

 




என் படுக்கை அறையில் திடீரென அந்தச் செடி முளைத்திருந்தது. அறையின் நடுவில் இரவோடு இரவாக எப்படி முளைத்திருக்கும் என யோசனை செய்துபார்த்தேன். அதைப் பிடுங்கி எறிய மனம் வரவில்லை. ஒரு வாரத்தில் கொஞ்சம் பெரிய செடியாக வளர்ந்துவிட்டது. பெரிய மரமாக வளரப் போவதில்லை இப்படியே அறையில் இருக்கட்டும் என விட்டுவிட்டேன். வேலை காரணமாக ஒரு மாதம் வெளியூர் சென்று விட்டு வந்து பார்த்தால் கூரையை முட்டிக் கொண்டு பெரிய மரமாக வளர்ந்திருந்தது. எனக்கு பயமாகப் போய்விட்டது. இந்த மரம் கூரையைப் பிய்த்துவிட்டால் இந்த வீட்டில் இருக்க முடியாது என அச்சம் ஏற்பட்டது. மரத்தை வெட்ட முடியாது. வீட்டை விட்டுச் சென்று விடுவது என முடிவு செய்து தூங்கிப் போனேன். காலையில் என் கால்களை நகர்த்த முடியவில்லை. மரத்தின் வேர்கள் கால்களோடு பின்னிப் பிணைந்திருந்தன. எப்படி விடுவித்துக் கொள்வது எனப் புரியவில்லை. அப்படியே படுத்துக்கிடந்தேன். மரத்தின் கிளையில் ஒரு பூ மலர்ந்திருந்தது. அந்தக் கிளை என் அருகே தொங்கிக் கொண்டிருந்தது. இது என்ன மரமாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். காட்டில் வளர வேண்டிய மரம் என் வீட்டில் வளர்ந்துவிட்டது என நினைத்தேன். அது இன்னும் வளர்ந்தால் கூரை என் மீது விழும் என்ற உணர்வு அந்த இடத்தை விட்டு உடனே அகல கலவரப்படுத்தியது. வேர்களிலிருந்து எப்படியோ கால்களை விடுவித்தேன். எழுந்து நின்றால் கால்கள் தடுமாறின. அரை முழுக்க வேர்களாக இருந்தன. இதைத் தாண்டிப் போவதே பெரும் சிரமமாக இருக்கும் எனத் தோன்றியது. மற்றொரு கிளை என் அருகே வந்தது. அதில் என் உயரம் அளவுக்கு ஒரு பூ மலர்ந்திருந்தது. அதைத் தொட்டுப் பார்க்கக் கை நீட்டினேன். அந்த மலர் என்னை உள்ளிழுத்து மூடிக் கொண்டது. 

Saturday, 4 September 2021

குறுங்கதைகள்-ஓவியர்


 



எனக்குப் பிடித்த ஓவியரின் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். இதுவரை பார்த்திராத ஒரு பெரிய பறவை ஒன்றை மிகப்பெரிய ஓவியமாக வரைந்திருந்தார். அதைப் பார்த்தப்பின் அதிர்ச்சியும்  கடும் துயரமும் எனக்குள் ஏற்பட்டன. அந்தப் பறவை என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது. நான் அதன் அருகில் செல்லாமல் பின் வாங்கி அங்கிருந்து வந்துவிட்டேன். அடுத்த நாளும் அந்தக் கண்காட்சிக்குச் செல்லவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு அங்குச் சென்றேன். அந்தப் பறவை என்னைப் பார்த்து நீ வருவாய் என எதிர்பார்த்தேன் என்றது. நான் அதனுடன் பேசவில்லை. நாளை மலை உச்சியில் இருக்கும் கோட்டைக்கு வா உன்னிடம் சில உண்மைகளைச் சொல்லவேண்டும் என்றது. எனக்கு அந்தப் பறவையின் பேச்சைக் கேட்டு அந்தக் கோட்டைக்குச் செல்லவேண்டுமா என்று அச்சமாக இருந்தது. என்றாலும் அது கூறப் போகும் உண்மைகள் ஏதாவது ஒரு வகையில் உதவும் என்பதால் அடுத்த நாள் அந்த மலை உச்சியில் இருந்த அந்தக் கோட்டைக்குப் போனேன். அங்கு அந்தப் பறவை ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தது. என்னை நீ பறவை என்று மட்டும் நினைத்துவிட்டாயா? நான்தான் உன் காதலன். அந்த ஓவியரின் ஓவியங்கள் மீது ஈடுபாடு கொண்டு என்னிடமிருந்து விலகிப் போக நீ நினைத்தாய். அதனால் அந்த ஓவியரைக் கொன்றுவிடத் தீர்மானித்தேன். அவர் வீட்டுக்குப் போய் அவரைக் கொல்ல முயன்றேன். அவன் என்னை வீட்டின் மேற்கூரையிலிருந்து தள்ளிவிட்டுவிட்டார். நான் காயமடைந்து எப்படியாவது தப்பிவிடலாம் என இந்த மலைக் கோட்டைக்கு வந்துவிட்டேன். அப்போது இடிவிழுந்து இறந்து போனேன். மீண்டும் அடுத்த ஜென்மம் எடுத்ததில் பறவையாகிப் போனேன். இப்போதாவது அந்த ஓவியரைப் பழிவாங்கலாம் என்று போனேன். அவர் என்னை பிடித்து ஓவியமாக்கிவிட்டார். அந்த ஓவியர் மீது நீ ஈடுபாட்டை விட்டுவிட்டால் நானும் உன்னைப் பின் தொடரமாட்டேன் என்றது. அப்போது அங்கு வந்த அந்த ஓவியர் அந்தப் பறவையைத் தன் கித்தானில் பிடித்துப் போனார்.  

Thursday, 2 September 2021

குறுங்கதைகள்-பூனை





குட்டிப் பூனையாக அது அவர்கள் வீட்டுக்கு வந்த போது பெரும் குதூகலமாக இருந்தது. அவன் அப்போதுதான் பள்ளியில் சேர்த்திருந்தான். அந்தப் பூனை அவனுடனேயே இருந்தது. அவன் படிக்கும் பாடங்களை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தது. அவனுக்கும் பூனையுடன் சேர்ந்து பாடம் படிப்பது மிகவும் பிடித்திருந்தது. இப்படியே ஐந்தாம் வகுப்பு வரை வந்துவிட்டான். அந்தப் பூனையும் இவனுடன் சேர்ந்து பள்ளிக்கு வரும். இவன் சாப்பாட்டை அதற்கும் கொடுப்பான். வகுப்பறைக்கு அருகிலேயே உட்கார்ந்திருக்கும். ஜன்னலில் அமர்ந்து கொண்டு பாடங்களைக் கவனிக்கும். இவனுக்கு ஜன்னலருகில் இருக்கை என்பதால் இவனுக்கு வசதியாகப் போனது. ஒரு நாள் ஆசிரியர் மூன்று விடுகதைகளை வகுப்பில் சொல்லி அதற்கு விடை எழுதுமாறு கூறிவிட்டார். இவனுக்கு என்ன யோசித்தும் விடை தெரியவில்லை. மெதுவாகப் பூனையை நெருங்கி அந்த விடுகதைகளைச் சொல்லி விடை கேட்டான். முதலாவது விடுகதை: வழுக்குவான் வாசம் உள்ளவன். அவன் யார்? என்பதாகும். பூனை ஓடிச் சென்று அருகிலிருந்து தண்ணீர் தொட்டியில் குதித்து அதில் இருந்த தண்ணீரில் குளிப்பது போல் பாவனை செய்தது. வீட்டில் குளிப்பாட்டினால் அதற்குப் பிடிக்கவே பிடிக்காது. இங்கு வந்து குளிக்கிறதே அதுவும் தனக்குச் சந்தேகத்தைத் தீர்க்காமல் குளிக்கப் போய்விட்டதே என ஆதங்கப்பட்டான். குளிக்க விரும்பாத பூனை ஏன் இப்படிச் செய்திருக்கும் என யோசித்தான். விடையைக் கண்டுபிடித்துவிட்டான். சோப்பு. பூனையை மெச்சிக் கொண்டான். அடுத்த விடுகதை: வாயே இல்லாதவனுக்கு ஏராளமான பற்கள். இவன் யார்? என பூனையைக் கேட்டான். பூனை தன் தலையைக் காலால் நீவுவது போல் திரும்பத் திரும்ப செய்து காட்டியது. பூனைக்கும் புரியவில்லை என நினைத்துக் கொண்டான். இருந்தாலும் தானும் ஒரு முறை தலையை நீவிப் பார்த்தான். தலை கலைந்து விடுமே என யோசித்தான். தலை வாராமல் இருந்தால் ஆசிரியர் திட்டுவார் என எண்ணினான். தலை வாரும் சீப்புதான் அதற்கான விடை என உடனே புரிந்துகொண்டான். பூனை மீது வாஞ்சை ஏற்பட்டது. அடுத்த விடுகதை: அதை நீ பார்த்தால் அது உன்னைப் பார்க்கும்-அது எது? என்று பூனையைக் கேட்டான். பூனை, தூணுக்கு நேராக நீன்று காலை நீட்டி தூணைத் தொட்டது. பின்பு தூண் தன் பின்பக்கமாக இருக்குமாறு தன் எதிரில் ஒரு பூனை இருப்பது போல நினைத்து அதே காலை எடுத்து நீட்டியது. இதைத் திரும்பத் திரும்ப செய்து காட்டியது. பூனைக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக எண்ணிக் கொண்டான். தூணைப் பூனை கண்ணாடி என நினைத்துக் கொண்டதாக என யோசித்தான். அதுதான் விடை எனப் புரிந்தது. பூனையின் அறிவு அவனை ஆட்படுத்திவிட்டது. பூனை படித்த பாடங்களைத் தான் ஏன் படிக்கவில்லை என நினைத்துக் கொண்டான்.

குறுங்கதைகள்-குடை






அன்று கடும் மழை பொழிந்தது. குடை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். குடையை விரித்தவுடன் அது எப்போதும் இருப்பதை விட பெரிதாக விரிந்தது. சிறிது நேரத்தில் அதன் கைப்பிடி நீளமானது. குடை இன்னும் மேலே போய் பெரிதாகிவிட்டிருந்தது. சிறிது நேரத்தில் வானத்தை மறைக்கும் அளவுக்குப் பெரிதாகிவிட்டது. நான் அதைப் பிடித்துக் கொண்டு நடக்க முடியாததால் அதே இடத்தில் நின்றுவிட்டேன். எல்லோரும் என்னைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டார்கள். நல்லவேளையாக நீங்கள் குடையை விரித்து இந்த மழையிலிருந்து எங்களைக் காக்க வந்தீர்கள். இல்லை என்றால் எங்கள்பாடு திண்டாட்டம்தான் என்றனர். ஒருவர் வந்து புராணத்தில் கண்ணன் கோவர்த்தனகிரியைத் தூக்கி மழையிலிருந்து மக்களைக் காப்பாற்றிய பிறகு நீங்கள்தான் காத்திருக்கிறீர்கள் என்றார். மற்றொருவர் வந்து குடையைப் பிடிக்கச் சிரமமாக இருக்கிறதா என்று கேட்டார். இல்லை என்றேன். உண்மையில் கைகளில் இருப்பது குடை போலவே இல்லை. ஏதோ ஒரு குச்சியைப் பிடித்திருப்பது போல் தோன்றியது. மழை நிற்க சில காலம் ஆனது. அது வரை குடை பிடித்துக் கொண்டே நின்றேன். எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் வந்து தான் குடையைப் பிடித்துக் கொண்டு நின்று கொள்வதாகவும் நான் நகர்ந்து போகலாம் என்றும் சொன்னார். மற்றொருவர் வந்து வேண்டாம் வேறு யார் பிடித்தாலும் ஒரு வேளை குடை சிறுத்துவிடலாம் என பயமுறுத்தினார். மழை நின்ற பின் குடையை மடக்கிவிடலாம் என நினைத்தேன். ஆனால் கடும் வெயிலாக இருந்தது. அங்கிருந்தவர்கள் என்னைத் தடுத்தார்கள். இந்த வெயிலுக்கும் குடை தேவை என்றார்கள். நான் நின்ற இடத்தில் மண் மூடத் தொடங்கியது. என்னை பாதி அளவு மண் மூடிவிட்டது. எல்லோரும் மண்ணை அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். அதன் பின் அந்த வேலைச் சலித்து பின்வாங்கினார்கள். சிறிது காலத்திற்குப் பின் அவர்கள் அருகில் வருவதேயில்லை. என்னை மண் முழுமையாக மூடிவிட்டது. மண்ணில் புதைந்த குடை விரிந்தே இருந்தது.


Wednesday, 1 September 2021

குறுங்கதைகள்-நினைவுச்சின்னம்





என் பாட்டிமார்கள் இறந்து போய் சில காலம் ஆகிவிட்டது. அவர்களின் உலகத்தில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து வரக் கிளம்பினேன். இருவரும் சேர்ந்து தாஜ்மகால் போன்ற ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எதற்கு என்று கேட்டேன். எனக்காத்தான் என்றார்கள். என் மீது அன்பு செலுத்தும் நபர் இது போன்ற சின்னத்தை எழுப்ப முடியாமல் சிரமப்படலாம் அதற்காக இவர்கள் இதை எழுப்பி அந்த நபரிடம் கொடுத்து விடுவார்களாம். அந்த நபர் அதை எனக்குக் கொடுப்பாராம். என் பாட்டிமார்களின் பைத்தியக்காரத்தனத்தைக் கண்டு எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. என் பாட்டிமார்களுக்கு இத்தகைய நினைவுச் சின்னத்தை யாராவது எழுப்பியிருக்கிறார்களா எனக் கேட்டேன். அவர்கள் பரம்பரையில் யாரும் யாருக்கும் இது போன்ற சின்னத்தை எழுப்பியதில்லையாம். அந்தக் குறை எனக்கும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக இவர்கள் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த முனைந்திருப்பதாகச் சொன்னார்கள். அப்படி ஒரு நபரே இல்லாத போது நினைவுச்சின்னம் மட்டும் எதற்கு என்று கேட்டேன். எந்த நபரும் இல்லை என்றாலும் நினைவுச் சின்னம் அழியாமல் நின்று பல கதைகளைச் சொல்லும் என்றார்கள். அப்படி ஒரு நபரே வரமாட்டார் என்றால் இந்த நினைவுச் சின்னம் என்ன ஆகும் என்றேன். இந்த நினைவுச் சின்னத்தைக் கண்டவர்களால் என்னை விட்டு விலகவே முடியாதாம். என்னைவிட நினைவுச் சின்னத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டுவிடுபவர்களுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இருக்காது எனச் சொல்லிவிட்டு கிளம்பினேன். 

பெண் மைய ஆளுமைகளான பெண் பாத்திரங்கள்: பேராசிரியர் பிரேமாவின் ’எங்களோட கதை’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பு

(இலக்கியவெளி இதழில் வெளிவந்த கட்டுரை) பெண்ணியத்தின் வரலாற்றை, போக்குகளை, தீர்மானங்களைக் குறித்து பல நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பிரே...