Friday, 29 November 2024

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

 


ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விளக்கத்தை உருவாக்க இயலாதவாறான சுதந்திரமான படைப்பாக்கங்களாக அவருடைய ஓவியங்கள் உள்ளன. அவருடைய வண்ணங்களில் அழுத்தமான நீலம், சிவப்பு, பழுப்பு, பச்சை, மரகத நிறம், இளஞ்சிவப்பு உள்ளிட்ட பல நிறங்கள் கூடியும் கலந்தும் ஓர் இசைக் கோர்வை போல் கித்தானில் ஆக்கிரமித்திருக்கின்றன. ஆனால் இந்த வண்ணங்கள் நேரடியான பொருளையும் மறைமுகமான பொருளையும் காலம் கடந்து நிற்கும் பொருளையும் உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அரூப ஓவியங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற கருத்து பொதுவாகச் சொல்லப்படுகிறது. உலகின், வாழ்வின் எல்லா அம்சங்களையும் யாரும் புரிந்துகொள்ள முடியுமா என்பது சந்தேகமே. இதில் புரியாமை குறித்த கேள்வி எங்கு எழுகிறது என்றால் பல ஓவியங்களும் ஸ்தூலமான பொருளாம்சத்தைக் கொடுக்கின்றன, அரூப ஓவியங்கள் கொடுப்பதில்லை என்ற கருத்திலிருந்து இந்தப் புரியாமை என்ற கருத்து உருவாகிறது. ஆனால் எந்தப் படைப்பைப் பற்றியும் தொடர்ந்து சிந்தித்தால் அது குறித்த பல விளக்கங்கள் உருவாகும்.

ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

1.அரூப வகையைச் சார்ந்தவை

2.தாறுமாறான பொருளைத் தருபவை

3.இயற்கையின் மற்றொரு வடிவமாக உள்ளவை

என்ற மூன்று வகைமையில் பிரித்துப் பொருளை அறியக்கூடிய வகையில் உள்ளன.

1.அரூப வகைமை

அரூப வமைமையிலான ஓவியங்கள் பல பொருளாம்சங்களைக் கொண்டவை. சுதந்திரமான பொருளாம்சங்களை உருவாக்கிக் கொண்டே செல்லக்கூடிய தகவமைவைப் பெற்றவை. மேலும் இந்த அரூப வகைமையைச் சார்ந்த ஓவியர்களில் ஜேசன் பொல்லாக்கிலிருந்து இன்னும் பல மேலைநாட்டு ஓவியர்கள் குறிப்பிடத்தக்க ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். நம் தமிழகத்தைச் சேர்ந்த ஆதிமூலம் போன்றவர்களும் அரூப ஓவிய வகைமைகளை வரைந்திருக்கிறார்கள். அச்சுதன் கூடலூரும் அரூப ஓவிய வகைமையைச் சார்ந்தவர். ஆனால் ஓவியர் விஸ்வம் அவர்களின் அரூப வடிவிலான ஓவியங்கள் ஸ்தூலமான புலனறிவு சார்ந்த பொருளாம்சங்களைத் தொடர் உற்பத்தி செய்யக்கூடிய வகைமையிலானவையாக உள்ளன. அரூப ஓவியங்கள் பொதுவாக இயற்கையின் காட்சிகளையும் ஆன்மீகத்தின் அடிப்படையையும் குறிப்பதாக இதுவரையிலான அரூப ஓவியங்களைச் சங்கேதவிலக்கம் செய்து எழுதிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

     அரூப ஓவியங்கள் மட்டுமல்லாமல் எல்லா ஓவியங்களிலும் அவற்றில் காணப்படும் கோடுகள், வண்ணத்தின் பயன்பாடுகள், உருவங்கள், வடிவங்கள் என்று பலவற்றைக் கணக்கில் எடுத்தே பொருள் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் இதுவரை ஓவியங்களைப் பார்த்த அனுபவமும் எந்த ஓர் ஓவியத்தை அறிவதற்கும் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள் பின்னப்படுத்தப்பட்ட குறுக்கும் மறுக்குமான தூரிகையின் கீற்றுகளால் நிரப்பப்பட்டவையாக உள்ளன. மேலும் ஒவ்வொரு முறையும் ஒரு வகையான படிமத்தை அவை ஏற்படுத்துகின்றன. அதனால் அரூப வகைமையின் முழுமையான குணாம்சங்களைக் கொண்டவையாக ஓவியர் விஸ்வத்தின் படைப்புகள் உள்ளன.

2.தாறுமாறான பொருளைத் தருபவை

     அரூப ஓவியங்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் அவை தாறுமாறான பொருளைத் தருபவையாக உள்ளன. இதற்குக் காரணம் வாழ்வின் ஒழுங்கற்ற நிலையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன. ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகளிலும் இந்தக் குணாம்சத்தைப் பார்க்க முடிகிறது. மேலும் அந்த ஒழுங்கின்மை பார்ப்பவர்களின் உலகத்தில் இருக்கும் ஒழுங்கின்மையுடன் உறவு கொள்கிறது. அந்த ஒழுங்கின்மை அவர்களின் வாழ்வின் பொருத்தமான கணங்களில் வெளிப்படும் குழப்பத்தை முன்வைப்பது போலும் உள்ளது.

          இந்த ஒழுங்கின்மைக் கொண்ட படைப்பாக்கம் ஓர் ஒளிக்கற்றை போல பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. அது கனவின் ஒளிக்கற்றைப் போலவும் கற்பனையில் ஊடாடும் ஒளிச்சிதறல் போலவும் உள்ளது. ஓவியர் விஸ்வத்தின் படைப்புகளில் உமிழப்படும் ஒளிக்கற்றையும் பன்மைத்துவ அடுக்கல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவற்றின் குறுக்குமறுக்கான நகர்வைப் பின்தொடர்தல் பல பொருள் படிமங்களை உருவாக்குபவையாக உள்ளன. இயற்கை ஒழுங்குடன் இருப்பதான கற்பனை அந்தத் தாறுமாறைக் கண்டு அதிர்ச்சியைத் தருகிறது. காட்டின் தாறுமாறு அதிர்ச்சி தருவது போல, மேகங்களன் திரளில் உள்ள தாறுமாறு போல ஓவியர் விஸ்வத்தின் ஓவியங்களின் தாறுமாறும் காணப்படுகிறது.  

ஜியோமிதியின் வடிவங்கள் நெருக்கி உருவாக்கப்பட்டவைப் போல் இந்த அரூப ஓவியங்களின் தாறுமாறான பண்பு உள்ளது. அதன் காரணமாக ஒரு நவநெகிழித் தன்மையைக் கொண்டவையாக இவைக் காணப்படுகின்றன. ஓவியர் விஸ்வர் அவர்களின் படைப்புகளில் இந்த வகையான நெகிழித் தன்மையின் ஊடாகப் பரவும் தாறுமாறான குணாம்சத்தைப் பார்க்க முடிகிறது.

3.இயற்கையின் மற்றொரு வடிவமாக உள்ளவை

  ஓவியர் விஸ்வம் அவர்களின் ஓவியங்களை ஐம்பூதங்களின் வகைமையைச் சார்ந்தவையாகப் பிரிக்கும் வகையில் அவற்றின் பொருளாம்சத்தை விரிவுபடுத்தலாம். நீலம் என்றால் வானத்தின் நீலமும் கடலின் நீலமும் குளத்தின் நீலமும் நதியின் நீலமும் இன்ன பிற நீலங்களும் கலந்த நீரின் தன்மையை எதிரொலிப்பவையாக இருக்கின்றன. அவற்றைக் காணும் போது இயற்கையின் அருபத்தை, நீரின் அரூபத்தைச் சிந்தும் வகையில் இருப்பதைக் கண்டு கொள்ள முடிகிறது. நீலம் என்பது வெறும் ஒரு வண்ணமாக மட்டும் அல்லாமல் ஏன் இயற்கையின் அரூபங்களாக அது காட்சி தருகிறது என்றால் அந்த வண்ணத்தைக் கண்ட மரபார்ந்த பார்வை இயற்கையின் பல வண்ணங்களோடு அதை ஒப்பிட முயற்சிக்கிறது.  

அக்னியின் சிவப்பு கோபமாக, எரிதழலாக, பெருவெடிப்பாக, எரிமலையாக, இயற்கையின் அத்தனை கோபத்தின் அரூப வடிவாகங்களாவும் பூக்களாக, செவ்வானமாக, சூரியனாக இன்னும் பல இதமான செம்மையின் ரூபமாகவும் உள்ளதைக் காண முடிகிறது. எனவே இயல்பான உணர்ச்சிகளின் போக்குகளையும் அவற்றின் வெளிப்பாடுகளையும் வண்ணங்களாக மாற்றுவது போன்ற பண்பை ஓவியர் விஸ்வம் அவர்களின் ஓவியங்கள் கொண்டிருக்கின்றன.

சாம்பல் நிறத்திலான படைப்புகள் வானத்தின் மேகமூட்டத்தைக் குறிப்பதைப் போலுள்ளன. மழையின் உக்கிரத்தைக் காட்டுபவை போலவும் ஒளியற்ற உலகத்தின் மற்றொரு பக்கமாகவும் இருளின் வாசலில் நிற்க வைப்பவை போலவும் இந்த ஓவியங்கள் உள்ளன. இடியும் மின்னலும் மூண்டு விடக்கூடிய வானத்தைத் தொடர்ந்து முன்வைப்பவையாக இந்த ஓவியங்கள் உள்ளன.

மொத்தத்தில் ஓவியர் விஸ்வர் அவர்களின் படைப்புகள் நிலத்தின் குணாம்சத்தையும் நீரின் பாய்வையும் காற்றின் அலைதலையும் அக்னியின் பீறிடலையும் வானத்தின் பெருவெளியையும் தாறுமாறாகக் காட்டும் அரூப ஓவியக் கற்றைகள் என்று சொல்லலாம். நகரத்தின் ஒழுங்கின்மை போல சிலவும் மண் மறைத்த கிராமம் போல சிலவும் மாயத்தன்மைய இந்த ஓவியங்கள் பெருக்கி இருக்கின்றன.

 

 

 

Wednesday, 21 August 2024

பெண் மைய ஆளுமைகளான பெண் பாத்திரங்கள்: பேராசிரியர் பிரேமாவின் ’எங்களோட கதை’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பு






(இலக்கியவெளி இதழில் வெளிவந்த கட்டுரை)


பெண்ணியத்தின் வரலாற்றை, போக்குகளை, தீர்மானங்களைக் குறித்து பல நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பிரேமாவின் படைப்பாக்கமும் பெண்ணியம் சார்ந்தே அவருடைய இந்தச் சிறுகதைத் தொகுப்பான எங்களோட கதையில் உள்ளது. பல்வேறு வாழ்வியல் நிலைகளில் பெண்கள் படும் பாட்டை இந்தத் தொகுப்பின் பத்து கதைகளில் எடுத்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர். இந்தத் தொகுப்பில் உள்ள பெண்களை கீழ் வரும் வகையில் வரிசைப்படுத்தலாம்:

1.உறுதியானவர்கள்

2.அப்பாவியானவர்கள்

3.தனித்திறன் கொண்டவர்கள்

………………

1.உறுதியானவர்கள்

இந்த வகைமையில் உள்ள பெண்கள் தங்களின் முடிவைத் தானே எடுக்கும் நிலையில் இருப்பவர்களாக இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் அவர்களிடம் பொறுப்பு உள்ளது. மேலும் ஆண்களைச் சார்ந்து நிற்கக் கூடாது என்ற எண்ணத்தில் உறுதியானவர்களாக உள்ளனர். இதுதான் பெண்ணியம் காட்டும் உறுதி. அதை ஆசிரியர் பாத்திரங்கள் வழி கொண்டு வந்திருக்கிறார். பெண்களிடம் அரிதாகக் காணக்கிடைக்கும் இந்த உறுதியை இந்தக் கதையின் பாத்திரங்களிடம் படைத்திருப்பதன் மூலம் இயல் வாழ்வில் பெண்களுக்கான பாதையாக எது இருக்கவேண்டும் என்று காட்ட நூலாசிரியர் பிரேமா அவர்கள் விரும்பியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, பரிதவிப்பு என்ற கதையின் நாயகியும் எனக்கான காற்று என்ற கதையின் நாயகியும் இத்தகைய உறுதியானவர்கள் என்ற வகைமையில் வரக்கூடிய பெண் பாத்திரங்களாக உள்ளனர். பரிதவிப்பு கதையில் நாயகி தன் அம்மாவிற்காகச் சிறுநீரங்கத்தைத் தானம் கொடுத்ததற்காக காதலனைப் பிரிய நேர்கிறது. அதைப் பொருட்படுத்தாமல் தன் குடும்பத்திற்காக வாழ்வது என்ற உறுதியாக முடிவெடுக்கிறாள். மீண்டும் தன் காதலன் வந்து திருமணம் செய்து கொள்ளக் கேட்ட போதும் அதை அவள் ஏற்பதில்லை. இது போன்ற உறுதி பொதுவாக, ஆண்களிடம் இருப்பதாக இதுவரைச் சமூகம் எண்ணி வந்ததை மாற்றி அது பெண்ணிடமும் இருப்பதாக இந்தக் கதை காட்டுகிறது. அதைத் தவிர பெண் தனக்கான பொறுப்பாகச் சிலவற்றைத் தானே ஏற்பதும் ஒரு விடுதலையான பெண்ணின் பாத்திரத்தை இந்தக் கதை வரைந்து காட்டுகிறது.

மற்றொரு கதையான எனக்கான காற்று என்ற கதையின் நாயகி ஒரு பாடகி. காதலித்து மணந்த கணவன் குடிக்கு அடிமையாவதுடன் தன் மகனும் குடிக்கு அடிமையானதைப் பார்த்துப் பொறுக்காமல் விவாகரத்தைத் தேர்ந்தெடுப்பது பெண்ணுக்கான உறுதியான முடிவாக உள்ளது. அது தவிர, தன்னுடைய சுயமான காற்றைச் சுவாசிக்க இது போன்ற உறுதியான முடிவு தேவை என்று பெண் தீர்மானிப்பது குறித்து இந்தக் கதைத் தெளிவாகக் காட்டுகிறது.

தன்னிலை என்பது மற்றமையால் விளக்கப்படுகிறது என்பதுதான் பொதுவான விளக்கம். அதுவும் பெண்மை என்ற பாலினத்தின் தன்னலை ஆண்மை என்ற தன்னிலையின் மூலமாக விளக்கப்படுவதாக, நிறைவடைவதாக உளவியலாளர்களின் அவதானிப்பாக உள்ளது. ஆனால் பெண் அந்தத் தன்னிலையைக் குறித்து விழிப்புணர்வு அடைந்து தன்னுடைய தன்னிலை, மற்றமையால் தீர்மானிக்கப்படுவதாக இருப்பதைப் புரிந்து அதிலிருந்து விடுவித்துக் கொண்டு தன் சுயம் சார்ந்த தன்னிலையை வளர்த்தெடுத்து அதற்கான மற்றமையைத் தேர்வு செய்யவேண்டும் என்பதுதான் பெண்ணியலாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது. அது போன்ற பெண்களை இந்தக் கதைகளின் பாத்திரங்கள் மூலம் காணமுடிகிறது. பெண் மைய ஆளுமைகளாக, பெண்ணாகுதல் என்ற வினையை நிகழ்த்துபவர்களாகப் பெண்கள் உருவாகவேண்டும் என்பதற்கான அடிப்படைதான் பெண்ணியத்தின் சாரமாக இருப்பதாகப் பல பெண்ணியலாளர்கள் கருதுகிறார்கள். அதற்கான எடுத்துக்காட்டுகளாக இது போன்ற உறுதி கொண்ட பெண்களைப் படைப்பதை பெண்ணியக் கருதுகோள்களைக் கொண்டவர்களின் பிடிப்பாக உள்ளது.

2.அப்பாவியானவர்கள்

இந்தக் கதைகளின் அடுத்த வகைமையிலுள்ள பெண்கள் அப்பாவியானவர்கள். இவர்கள் பெரிதும் தன்னுணர்வின்றி எதேச்சையான முடிவை எடுப்பவர்களாக அதனால் வரும் விளைவுகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் போக்கு பிறரைப் பாதிப்படையச் செய்துவிடுவதாக உள்ளது. ஆனால் சமூகத்தில் இத்தகைய பெண்களின் இயல்பு ஏற்கத்தக்கதாக இருப்பதில்லை. பெண்ணின் சுயம் சார்ந்த போக்குகளை விமர்சிக்கும் நிலையில்தான் எப்போதும் சமூகம் உள்ளது. அத்தகைய பெண் இயல்புகளையும் அதனால் விளையும் பாதிப்புகளையும் குறித்து சில கதைகள் விரிவாகப் பேசுகின்றன.

எடுத்துக்காட்டாக, கள்ளிப் பாதையும் நுணாப் பூவும் என்ற கதையில் வந்த சிறுமி, ஓர் அப்பாவியான பெண். அவளுக்குச் சமூகத்தின் சூது வாது தெரியாது. ஆனால் அவள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் போது அதை எதிர்ப்பது விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அதனால் அவள் காப்பாற்றப்படுகிறாள் என்பதை இந்தக் கதை ஆழமாக விளக்குகிறது. அந்தச் சிறுமியின் அப்பாவியான குணாம்சத்தின் மீது ஏற்பட்ட தாக்குதலை அவள் அதே விளையாட்டுத்தனத்துடன் சமாளித்துவிடுவதும் அதற்காகப் பின் வருந்துவதும் ஓர் இயல்பான பெண்ணின் போக்காக இந்தக் கதை காட்டுகிறது. அப்பாவித்தனம் என்பது பெண்ணின் இயல்பு என்றும் அதுதான் பெண்ணின் குணாம்சத்தில் ஆணைக் கவரக்கூடியது என்றும் இதுவரையிலான ஆண் மைய சமூகத்தின் அடிநாதக் கருத்தாக இருந்திருக்கிறது. அதனைப் பெண்ணுக்குச் சாதகமாக மாற்றி இந்தக் கதையில் எழுதப்பட்டிருக்கிறது. அப்பாவியாக இருந்தாலும் தனக்கு ஊறு நேர்ந்தால் அதை எதிர்க்கவும் துணியக் கூடிய அப்பாவித்தனமாக ஒரு பெண் இருக்கிறாள் என்பது பல சிறுமிகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் ஒரு படிப்பினை போல் இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது. 

            மற்றொரு எடுத்துக்காட்டு அக்கினி மனசு கதையில் வரும் நாயகி. காதலித்து மணந்த கணவனுடன் குடும்பம் நடத்துகையில் வறுமை வாட்டுகிறது. இருந்தாலும் கணவனிடம் தனக்கு பிரியாணி தேவை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி அதை அவன் வாங்கி வராததால் தீயிட்டுக் கொளுத்திக் கொள்கிறாள். ஓர் அப்பாவியான பெண்ணின் உள்ளத்தில் உள்ள குழந்தைத்தனமான பிடிவாதம் குறித்து இந்தக் கதை குவிமையப்படுத்துகிறது. அந்த நாயகியின் பொறுப்பற்றத்தனத்தைக் காட்டும் அதே வேளையில் பெண்ணின் இயல்பான அப்பாவித்தனம் குறித்து கதை அடிக்கோடிடுகிறது.

            அதே போல் ‘பிரம்மாண்டம்’ கதையின் நாயகியும் முதிய பெண்மணி. ஆனால் அமெரிக்காவுக்குத் தனியாகச் சென்று சேர்வது குறித்த கதை. அப்பாவியான பெண், அதனால் தனக்குத் துணையாக கடவுள் முருகன் இருப்பதாக எண்ணும் பெண்ணாகக் கதை காட்டுகிறது. மற்றொரு கதை மணிமேகலை காப்பியத்தின் ஒரு காட்சியைக் கதையாக்கி உள்ள இது தான் காதலா? என்ற கதை. இதில் மணிமேகலை அப்பாவியாக இருந்தாலும் நிதானமாக தன் உணர்வுகளைக் கையாளக் கூடிய பெண் என்பதைச் சித்தரித்த கதை.

பெண்மையின் குணாம்சங்களாக ஆண் மைய கதையாடல்களின் மூலம்தான் இதுவரைப் பலவும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அப்பாவியாக இருப்பது, தன் விருப்பத்திற்கு நடந்துகொள்வது போன்றவை ஆணின் குணாம்சமாக, சுதந்திரமாக வரையறுக்கபட்டிருக்கிறது. ஆனால் அது பெண் செய்யும் போது அவள் விமர்சிக்கப்படவேண்டியவளாகிறாள். அவள் ஆணின் நடத்தையைப் பிரதிபலிக்க முடியாது என்பதுதான் ஆண் மைய சமூகம் சொல்லும் ஒரு கருத்தாக்கம். அதனால் அந்த அளவுகோலை வைத்து பெண்ணின் குணத்தை அளப்பதோ அல்லது அவளுக்கான சட்டகங்களை உருவாக்குவதோ முறையாக இராது என்பதுதான் பெண்ணியத்தின் அடிநாதமான கருத்து.

3.தனித்தன்மையானவர்கள்

சில பெண்களுக்கு மட்டுமே தனித்தன்மையான சில குணாம்சங்கள் அமையும், அத்தகைய குணாம்சங்களை சில கதைகள் எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக மானுடம் வென்றதம்மா என்ற கதையில் வரும் நாயகி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு உணவு கொடுப்பது என்ற செயல் அவளுடைய மனிதத் தன்மையைக் காட்டுவதாக உள்ளது. தன் குடும்பத்தின் நலத்தையும் மீறி அவள் இதைச் செய்கிறாள். மேலும் வயதானவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நடத்தை என்பது ஆணைவிட பெண்ணுக்கே உடனடியாக வரும் என்பதையும் இந்தக் கதை காட்டுகிறது.

            மற்றொரு எடுத்துக்காட்டாக, எனக்கு நீ மனைவி அல்ல என்ற கதையில் தன் கணவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவனுடைய மனைவி பாத்திரம் படும்பாடும் அவள் முழுமையாக அவனுக்கு ஆறுதலாக, குடும்பத்தைத் தாங்கி நிற்பதும் அவளுடைய தனித்தன்மையான குணாம்சமாக இந்தக் கதை காட்டுகிறது. அவளை ஒரு தாயாக அவளுடைய கணவன் மதிக்கிறான். இது போன்ற குணாம்சங்கள் பெண்களிடம் இயல்பாகவே இருப்பதை இந்தக் கதை மிகவும் விளக்கமாகக் காட்டியிருக்கிறது.

            இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதை எங்களோட கதை என்ற தலைப்புக் கதை. இதில் ஒரு கதை இல்லை பல கதைகள் உள்ளன. அதாவது பல பெண்களின் கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு போல இந்தக் கதை உள்ளது. இந்தக் கதையை வாசித்தால் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளை வாசித்தது போன்ற உணர்வு ஏற்படும். இந்தக் கதையில் மொத்தம் எட்டு பெண்களின் கதை இடம்பெறுகிறது. ஒவ்வொன்றும் ஒரு தனிக் கதை போல் உள்ளது. இந்தக் கதையில் பெண்ணுக்கான வேலைகளை இன்னும் வீடு தீர்மானித்து வைத்திருக்கிறது என்பதில் தொடங்குகிறது பெண்ணுக்கான இடம் என்ற எதிர்ப்புணர்வின் குரல். பெண் வெளியில் வேலை செய்தாலும் அவளுடைய உடைமைகளைக் கணவன் உட்பட பலரும் எடுத்துப் பயன்படுத்துவது பற்றி அடுத்த எதிர்ப்பு தொடர்கிறது. அடுத்தது மிகவும் கொடுமையான கதை. மகளையே பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கும் தன் கணவன் பற்றி ஒரு பெண்ணின் தீரா புலம்பல். இது முதல் கதை போல் இருந்தாலும் ஒரு பெண்ணின் வலிமையான உள்ளார்ந்த எதிர்ப்பாக உள்ளது. ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியாத நிலையை இந்தக் கதை காட்டுகிறது. அடுத்து குடும்பப் பொருளாதாரம் வீட்டின் பெரியவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறித்து ஒரு பெண் காட்டும் தீவிரமான எதிர்ப்பாக ஒலிக்கிறது. கணவன் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதைக் கண்டிக்க முடியாமல் மனைவி படும்பாட்டைச் சொல்கிறது அடுத்த குரல். ஒரு பெண் குழந்தை இல்லாத குறையைப் பெரிதாக எடுக்க முடியாமல் இருக்கிறாள். மற்றொரு பெண் வயதான பின் யாரும் துணை இல்லாத நிலையில் திருமணத்திற்கு வற்புறுத்தும் ஒருவரை மணக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாள். வேறொரு பெண் இரண்டாவது திருமணம் செய்து அதுவும் துயரத்தில் முடிந்ததைக் கூறுகிறாள். பெண்களின் வாழ்வு திருமணம் மூலம் பல வகையான இன்னல்களுக்கு ஆளாவதை இந்தக் கதைகளின் தொகுப்பாக உள்ள ஒரே கதை கூறுகிறது.

            பெண்களின் சுயமாகத் தீர்மானித்து தங்கள் வாழ்வைக் கொண்டு செலுத்த சமூகத்தின் எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. ஆண்களுடனான உறவு பெரும்பாலான சமயங்களில் கேடில் முடிகிறது. பெண்கள் தனியாக வாழ்வது குறித்து எப்போதும் கேள்வி எழுப்பப்படுகிறது. குடும்பத்திலும் தங்கள் குரல் ஒலிக்கச் செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் கொண்டவர்களாவும் ஆண்களைப் போன்ற ஒழுங்கற்ற வாழ்வுக்கும் ஏங்க முடியாத நிலையைக் கொண்டவர்களாகவும் பெண்கள் பெரும் துயருக்கு ஆளாகிறார்கள் என்பதை இந்தக் கதை வரையறுக்கிறது.

            பெண்களின் துயர் மிகுந்த வாழ்வு பெரும்பாலும் சுயமாக எடுத்த முடிவுகளால் ஏற்படுவதல்ல. ஆண்களாலும் பெற்றோராலும் மற்றோராலும் ஏற்படுவதாக உள்ளது. இத்தகைய வாழ்வை ஏற்று அதில் உழல்ந்து இறுதி வரைப் போராடி எந்த ஒரு பயனையும் பெறாது வாழ்வை முடிப்பவர்களாகப் பல பெண்கள் உள்ளனர். இந்த வகையான வாழ்வு குறித்த கேள்விகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த இது போன்ற கதைகள் தேவைப்படுகின்றன. பெண்மை என்பது உருவாகுதல் என்பார்கள் டெல்யூஜ், கத்தாரி. அதாவது பெண் என்ற நிலையை அடைதல் என்பது சமூகத்தால் இன்ன பிற அம்சங்களால் தடை செய்யப்பட்டு, மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் மீண்டும் பெண்ணாகும் நிலையை அடைந்தால்தான் சமூகத்தின் ஒடுக்கு முறை அகலும் என்ற கருத்தைக்கூற அந்தத் தத்துவவியலாளர்கள் இப்படி ஒரு கருத்தாக்கத்தை எடுத்துக் கூறுகிறார்கள். ஆண் கூட பெண்ணாகலாம். ஏனெனில் பெண் என்பது ஒரு மூலக்கூறு நிலை. பெண் மூலம்தான் படைப்பும், காப்பும், வளர்ப்பும் சாத்தியமாகிறது. அத்தகைய பெண் என்ற நிலையை அடைவது என்பதற்கான தடைகளையும் அதிகாரப் பரிவர்த்தனைகளையும் அறிந்து விழிப்புணர்வு அடைவது பற்றித்தான் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளும் பேசுகின்றன.

            இதைத் தவிர இந்தக் கதைகளில் ஆண்களின் பல்வேறு தீய குணங்கள் பற்றிய தீவிரமான வர்ணனைகளும் விமர்சனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் ஆண்களின் பல குறைகளும் பல கதைகளில் எடுத்துக் காட்டப்படுகிறது. ஆண்களின் இயல்பு குறித்த பெண்ணின் பார்வையாக இந்தக் கதைகளில் வரும் ஆண் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களில் மிகவும் சில பாத்திரங்கள் மட்டுமே அதிகாரத்தைப் பிரயோகிக்காத, தவறான நடத்தைகளைக் காட்டாத, குழப்பம் இல்லாத குணாம்சம் கொண்டவைகளாக உள்ளன. பெண் மைய சிந்தனையில் ஆண்மை என்பது இத்தகைய குறை உடையதாகவும் இயல்பைக் கொண்டதாகவும் இருப்பதை இந்தக் கதைகள் காட்டுகின்றன. மேலும் ஆண்களின் இருப்பு என்பது பெண்களைச் சார்ந்து இருப்பதாகவும் பல கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே இயல் உலகில் கூட இது போன்ற பெண்களைச் சார்ந்த வாழ்வை ஆண்கள் கொண்டிருப்பது வெளித்தெரியாமல் இருப்பதைப் பற்றிய ஒரு குரலாக இந்தக் கதைகளின் குரல் ஒலிக்கிறது. பெண்களின் ஆற்றலின் முன் ஆண்கள் சாதாரணர்களாக மாறிவிட்டதையும் இந்தக் கதைகள் ஆழமாகக் காட்டுகின்றன. மேலும் பெண்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் ஆண்களுக்கும் பயனளிப்பதாக இருப்பதையும் முன்னெடுக்கக்கூடிய கதைகளாக இவை உள்ளன.

            மொத்தத்தில் இந்தக் கதைகள் பெண்ணியத்தை ஒலிக்கச் செய்யும் பிரதிகளாக உள்ளன. கதைகள் மிகவும் சுருக்கமாக உள்ளன. மேலும் விரிவாக இந்தக் கதைகளை எழுதினால் அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்துபவையாக இருக்கும். 

Friday, 9 August 2024

கேசவதி (சிறுகதை)

    


    

    அவனுக்கு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசையாக இருந்தது. அவன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் யாருக்கும் நீண்ட கூந்தல் இல்லை. அவன் போய் வரும் வழியில் பல பெண்களைப் பார்த்தான். சிலருக்கு நீளமான கூந்தல் இருந்தாலும் அவர்களிடம் பேச கூச்சமாக இருந்தது. அவனுக்கு பெற்றோர் இல்லை. அதனால் எப்போதும் நண்பர்களிடம்தான் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வான். அவனுடைய நண்பர்களிடம் தன் ஆசையை ஒரு நாள் சொன்னான். அவனுடைய நண்பர்கள் அவனுக்காகப் பெண் பார்த்தனர்.

ஒரு நண்பனுடன் அவனுடைய கிராமத்திற்குச் சென்றிருந்தான். அப்போது அங்கு ஒரு குலதெய்வ விழா நடந்து கொண்டிருந்தது. அந்த விழாவில் ஒரு பெண் தெய்வத்தைக் குலதெய்வமாகக் கும்பிட்டனர். அந்தப் பெண் தெய்வத்தின் வரலாறு பற்றி ஒரு பாட்டி கூறிக் கொண்டிருந்ததை அவளருகே அமர்ந்து அவன் கேட்டான். எங்க தெய்வம் அது. அதுக்குப் பேரு கேசவதி. அவளுக்கு நீளமா முடி இருக்கும். ஒரு தெரு வரைக்கும் போகும் முடி. அதைப் பாத்து சனம் பிரமிச்சு போய் நின்னுரும். அவளை கண்ணாலம் கட்டிக்க யாரும் வரல. வந்தவன் எல்லாம் முடிய பாத்து பயந்து ஓடிப் போய்ட்டான். கோயில்ல போய் முடி குடுக்கறதா அவ அம்மா நேந்துகிட்டா. பொண்ணைக் கூட்டிட்டுப் போய் மொட்டை அடிச்சா. கோயில்ல சுருண்டு விழுந்த அவ முடி அப்படியே பாம்பா மாறி படமெடுத்து ஆடுச்சு. அம்மாக்காரிக்குக் கண்ணு இருட்டிட்டு வந்துடுச்சு. மொட்டையான கேசவதி அப்படியே குளத்துல மூழ்கி செத்துப் போயிட்டான்னு சொல்றாங்க. காணாம போயிட்டதா சொல்றாங்க. எங்க கேசவதி அதுக்குப்பறம் இந்த ஊருக்கு எல்லாமே நல்லதுதான் செஞ்சா. விளையாத நிலம் விளைஞ்சது. கண்ணாலம் ஆகாத பொண்ணுங்களுக்கு கண்ணாலம் ஆச்சுது. வர்சா வர்சம் கேசவதிக்கு அல்லாரும் சேந்து விழா எடுக்கலாம்னு ரோசனை பண்ணி இத்தனை வர்சமா பண்ணிட்டு வந்திருக்கோம். இதுல யாராவது ஒரு பொண்ணு முடிய காணிக்கையா குடுப்பா. அப்போதான் கேசவதிக்கு மனசாறும்,’ என்று அவள் சொல்லி முடித்தாள்.

அந்தக் கதையைக் கேட்டதிலிருந்து சன்னதம் வந்தது போல் இருந்தது அவனுக்கு. அருகில் இருந்த கிராமத்தில் ஒரு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணை அவள் கூந்தலுக்காகவே யாரும் மணமுடிக்கவில்லை என்று நண்பன் அப்போது சொல்லக் கேட்டான்.  இவனுக்கு உடனடியாக அந்தப் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அங்கே கிளம்பிப் போனான்.

நண்பனுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டை அடைந்தான். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களுக்கு நல்ல உபசரிப்பைத் தந்தனர். பெண்ணை அவள் அறையில் சென்று பார்த்து வரச் சொன்னார்கள். இவனும் அந்த அறையில் நுழைந்தவுடன் அதிர்ச்சி அடைந்துவிட்டான். பாம்பைப் போல் மிக நீளமாக அந்த அறை முழுவதும் சுற்றி வைக்கப்பட்டிருந்தது அவளுடைய தலைமுடி. அவனுக்கு அவளுடன் எப்படிப் பேசுவது என்று தயக்கமாக இருந்தது.

ஆனால் அவள்தான் தான் தேடி வந்த கேசவதி என்று முடிவு செய்துவிட்டான். அவளை அந்தக் கிராமத்தின் குலதெய்வம் போலவே அவனுக்குப் பாவிக்கத் தோன்றியது. அவளிடம் ஏன் இத்தனை நீள முடி வளர்த்தாள் என்று கேட்டான். அது கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிட்டதாக அவள் சொன்னாள். வெட்டிவிட்டால் இன்னும் பெரிதாக வளரும் என்று யாரோ சொன்னதால் அப்படியே விட்டுவைத்திருப்பதாகச் சொன்னாள். இனி எப்போதும் வெட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அவன் நண்பன் அவளுடைய தலைமுடியின் நீளத்தை வைத்துக் கொண்டு எப்படி இவன் குடும்பம் நடத்துவான் என்று கேள்வி எழுப்பினான். அவள் கேசவதியின் மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறாள்; அவளைத் திருமணம் செய்ய அந்தக் குலதெய்வமே தன்னை அனுப்பியிருக்கிறது என்றான் இவன். இருந்தாலும் அந்த முடியை வைத்துக் கொண்டு தின நடவடிக்கைகளே சாத்தியமில்லை, தலைமுடியை வெட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னான் நண்பன். முடியை வெட்டக்கூடாது என்று சொல்லிவிட்டதாகத் தெரிவித்தான் இவன்.

மணப்பெண்ணோ திருமணம் நடக்கவிருப்பதே பெரிய விஷயம் அதற்குத் தலைமுடி பெரும் அவஸ்த்தையாக இருப்பதாகக் கருதி  தலைமுடியை வெட்டிவிடச் சொன்னாள். இருந்தாலும் இவ்வளவு தலைமுடி வைத்துக் கொண்டு திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட தன் ஆசை சரியானதில்லையோ என்று சில சமயங்களில் அவளுக்குள் தோன்றியது.

திருமணத்தன்று அவள் முடி பாதி வெட்டிவிடப்பட்டது. அதைத் தூக்கிக் கொண்டு நடப்பதே அவளுக்குச் சிரமமாக இருந்தது. அவள் முடியை வெட்டியதைக் கண்டவுடன் அவனுக்கு மிகவும் துக்கமாகிவிட்டது. திருமணம் முடிந்து அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். அவளுடைய தலைமுடியின் கனமும் அதனால் அவள் படும் சிரமமும் அவனுக்குப் பரிதாபத்தைக் கொடுத்தன. ஆனாலும் அவள் குலதெய்வத்தின் மறுபிறப்பு என்ற கருத்து மட்டும் அவன் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

திருமணத்தின் போது வெட்டிய அவள் தலைமுடி சில நாட்களிலேயே மீண்டும் அசுர வளர்ச்சி அடைந்தது. அவனுக்கு அவளைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அவனுக்கு ஒரு தெய்வத்துடன் குடும்பம் நடத்துவது போல் தோன்றியது. அது அவனை வேறோர் உலகத்திற்குக் கொண்டு செல்வது போல் இருந்தது. இருந்தாலும் அவளுடைய சிரமத்தைப் போக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுள் மேலோங்கியது.

அவன் அலுவலகம் சென்ற பின் ஒவ்வொரு நாளும் அவள் பல மருத்துவர்களைச் சந்தித்து தன் பிரச்னையைச் சொன்னாள். அவளுக்குச் சில மருந்துகளும் ஆலோசனைகளும் தரப்பட்டன. ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை. அலுவலகத்தில் அவன் தன் மனைவி குலதெய்வத்தின் மறுபிறப்பாகவே தான் கருதுவதாகச் சொன்ன போது சிலர் சிரித்தார்கள். அவன் அதைப் பற்றி அதிகம் வெளியில் பேச முடியாதபடி ஆகிவிட்டது.

அவள் நம்பிக்கைத் தரும் கோயில்களுக்குச் சென்றாள். அங்கு தவத்தில் இருந்த சில சாமியார்களிடம் தன் சிக்கலைச் சொன்னாள். அவர்களில் சிலர் அமைதியாகப் புன்னகைத்தார்கள். சிலர் கண் திறந்தும் பார்க்கவில்லை. ஒரு மலைக் கோவிலுக்குச் சென்றுவிட்டு ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தாள். ஒரு சாமியார் அவள் அருகில் வந்தமர்ந்தார். மனதில் கலக்கம் வழியில் தயக்கம் அம்மைக்கு என்ன சிக்கல் என்று கேட்டார். அவள் சிக்கலைத் தயங்கி தயங்கிச் சொன்னாள். அவர் ஒரு களிம்பை எடுத்துக் கொடுத்தார். அதைத் தடவினால் சரியாகிவிடும் என்று சொன்னார். அதைப் பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

தலைமுடியின் வளர்ச்சியால் அவளுக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மருந்துகளை வாங்கிவந்தாள். சாமியார் கொடுத்த களிம்பைத் தடவிவிட்டுத் தூங்கினாள். காலையில் எழுந்து பார்த்தால் தலைமுடி தங்க நிறமாக மாறியிருந்தது. அது மட்டும் இல்லாமல் முடியின் அடர்த்தியும் குறைந்து அளவாக இருந்தது. அவளது தலைமுடி அவளால் மிகவும் எளிதாகக் கையாள ஏதுவாகவும் இருந்தது. ஆனால் தங்க நிறத்தில் மாறிவிட்டதுதான் அவளுக்கும் அவனுக்கும் ஏற்க முடியாதபடி இருந்தது. அவள் களிம்பைத் தடவியதைக் குறித்து அவனிடம் பரிசீலித்திருக்க வேண்டும் என்று அவளைக் கடிந்து கொண்டான். அவளுக்கு அவளுடைய மதிப்பே தெரியவில்லை என்று எண்ணி குமைந்தான்.

இதற்கு மீண்டும் வைத்தியம் பார்க்கவேண்டும் என்று நினைத்தான். அலுவலகம் சென்றவுடன் அவன் எதிர்பார்க்காத உயர் பதவிக்கு அவனைப் பரிந்துரைப்பதாக மேலாளர் கூறினார். அவன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். வீட்டுக்கு வந்து மனைவியுடன் அந்தச் செய்தியைப் பரிமாறிக் கொண்டான். அவளுக்குத் தலைமுடியின் நிறம் மாறிய கவலைதான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. உடனடியாக ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். அதை கருமையாக்க செயற்கை நிறங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எதற்காக வருந்த வேண்டும் என்று சொல்லி மருத்துவர் அனுப்பிவிட்டார்.

இருந்தாலும் மனைவிக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. அதற்குரிய ஆலோசனைகள் யாராவது தருவார்கள், கவலை வேண்டாம் என்று சமாதானப்படுத்தினான். பல மருத்துவர்களையும் அழகுக் கலை நிபுணர்களையும் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றான். ஆனால் எதுவும் தீர்வாகாது என்று புரிந்துகொண்டான். அந்த சாமியாரை எங்குத் தேடிக் கண்டுபிடிப்பது என்று எண்ணி சோர்வடைந்தாள் அவள். மீண்டும் ஒரு முறை அந்த மலைக் கோவிலுக்கும் சென்றுவந்தாள்.

மனைவியின் வருத்தத்தை அவனால் போக்க முடியவில்லை. அவன் மனைவியின் முடியைத் தடவி இத்தனை அழகான முடி யாருக்குமே இல்ல. நீ ஏன் கவலைப்படற? என்று கேட்டான். இருந்தாலும் எனக்கிருந்த அந்தக் கறுப்பு முடிதான் வேணும் என்றாள் அவள். சரி வந்துரும் கவலைய விடு என்றான். உனக்கு இந்த முடி அதைவிட அழகா இருக்குது என்று சொன்னான். அவள் முறைத்துப் பார்த்தாள். அப்போது அவன் ஊரிலிருந்து அலைபேசியில் பேசினார்கள். அவனுக்குச் சேர வேண்டிய சொத்தை அவன் சொந்தங்கள் அவனுக்கே விட்டுக் கொடுத்துவிடுவதாக நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் கூறினார். அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. பாரு உனக்கு தங்க நிறத்துல முடி மாறின பிறகு எனக்கு பதவி உயர்வு வந்தது. இப்போ பூர்வீக சொத்தும் வந்துருச்சு. இப்பவும் ஏன் வருத்தப்படற? என்று அவளைச் சமாதானப்படுத்தினான். குலதெய்வம் கேசவதிதான் அவளுடைய முடியின் நிறத்தை மாற்றி அதற்கு ஒரு சக்தியைக் கொடுத்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டான்.

ஒரு நாள் அண்டை வீட்டுக்காரி அவளுடைய குழந்தையை எடுத்து வந்தாள். அப்போது அவள் கூந்தலுக்கு சாம்பிராணி புகைப் போட்டுக் கொண்டிருந்தாள். அண்டை வீட்டுக்காரி அவளருகே வந்து நின்று குழந்தைக்கு உடல்நலமில்லை என்றாள். அவள் குழந்தைக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தாள். சளி, ஜுரம்  என்றாள் அவள். மருத்துவரிடம் காட்ட இவள் கூறினாள். அவள் ஆம் என்று தலையாட்டிவிட்டு இவளது கூந்தலைத் தடவி மிகவும் அழகாக இருப்பதாகச் சொல்லிவிட்டு சாம்பிராணி வாசத்தை குழந்தையின் முகத்தருகே கொண்டு சென்றாள். அவளது தலைமுடியைத் தடவிய கையை தன் குழந்தையின் தலையிலும் தடவினாள். மிகவும் சோர்வாக இருந்த குழந்தை மெதுவாகக் கண் திறந்து பார்த்தது. உன் கூந்தலுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்குதுன்னு நினைக்கறேன். பாரேன் குழந்தை இவ்வளவு நேரம் கண்ணே முழிக்கல. இப்போ உடனே கண் திறந்து பாக்கறான், என்றாள் அவள். இவள் சிரித்துக் கொண்டாள். அவளுக்கு இவள் தலைமுடி மீது பொறாமையாக வந்தது.

அண்டை வீட்டுக்காரி சென்ற பின் பால் கொண்டு வருபவன் வந்தான். இவள் உள்ளே இருந்து பாத்திரத்தை எடுத்து வந்தாள். மாடு எங்கேயோ காணம போயிடுச்சுமா என்றான் அவன். ஒரு மாடுதான். நாளைக்குள்ள கிடைச்சா பால் கொண்டு வருவேன். இல்லைன்னா என்னை எதிர்பாக்காதீங்க என்று சொன்னான். இவள் கிடைச்சுடும் என்று சொல்லிவிட்டு அவன் பாலை ஊற்றிய பின் உள்ளே வந்துவிட்டாள். அவனும் புறப்படத் திரும்பியவன் வீட்டு வாசலில் அவளது தங்க நிற முடி ஒன்று கிடப்பதைக் கண்டு அதை எடுத்து வைத்துக் கொண்டான். அது அவனுக்கு ஒரு பொக்கிஷம் போலத் தோன்றியது. வீட்டுக்கு வந்தான். மாடு வந்துச்சா என்று மனைவியிடம் கேட்டான். இல்ல என்றாள் அவள். இந்தா என்று தலைமுடியை நீட்டினான். என்னாதிது என்றாள் அவள். பால் ஊத்தற வீட்டு அம்மாவோட தலைமுடி. தங்க நிறத்துல எவ்வளவு அழகா இருக்குது பாரேன் என்றான். அவளும் அதை ரசித்துப் பார்த்துவிட்டு பத்திரமாக ஒரு சிறிய பெட்டியில் போட்டு வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள். காணமல் போன மாடு வந்து நின்றிருந்தது. அவர்கள் இருவருக்கும் பெரும் ஆசுவாசமாக இருந்தது.

அவர்கள் மகன் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தான். புள்ளைக்கு வேலை கிடைச்சிடுச்சுன்னா நம்ம கஷ்டம் ஓரளவு தீந்துடும் என்று மனைவி சொன்னாள். ஆமா எத்தனையோ எடத்துக்கு போயிட்டு வந்துட்டான். இதுவரைக்கும் கிடைக்கல. இன்னைக்கு என்னாகுதோ என்று பால்காரன் சொன்னான். தூரத்தில் மகன் வருவது தெரிந்தது. இருவரும் வாசலிலேயே நின்றிருந்தார்கள். மகன் சிரித்துக் கொண்டே வந்தான். என்னாச்சுப்பா என்று அம்மா கேட்டாள். அம்மா வேலை கிடைச்சிடுச்சும்மா என்றான். அவன் அம்மாவுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. இப்போதாம்மா வேலைக்கு வரச் சொல்லி சொன்னாங்க என்றான். அவன் அப்பாவுக்குப் பெருமிதமாக இருந்தது. இரவு கணவன் மனைவி இருவரும் படுத்திருந்தார்கள். அந்த முடி கொண்டு வந்ததிலிருந்து எல்லாமே நல்லதா நடக்குதுங்க என்றாள் அவள். ஆமா நான் சொல்லலாம்னு இருந்தேன். நீயே சொல்லிட்ட என்றான் அவன். அந்த முடி முழுக்க நமக்குக் கிடைச்சா எவ்வளவு நல்லாருக்கும் என்றாள் அவள். ஆமா குடுப்பாங்க, தூங்கு பேசாம என்று சொல்லிவிட்டு அவன் உறங்கிவிட்டான்.

வெகு நாட்களுக்குப் பின் அவள் தாய்மை அடைந்திருந்தாள். இத்தனை நாட்களாக அவள் கூந்தலின் அவஸ்த்தையால் அவள் பட்டபாடு முடிந்து இப்போதுதான் அவளால் தாய்மை அடைய முடிந்திருந்தது. அதுவும் தங்கநிற முடி அவளுக்கு வாய்த்தப் பின்தான் அவளுக்கு தாய்மை பாக்கியம் கிடைத்திருப்பதாகவே அவள் கணவன் நினைத்தான்.

 அவளுக்குக் குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அவள் கிராமத்தில் குலதெய்வ விழா இருந்தது. அதற்குப் போயாகவேண்டும் என்று இருவரும் கிளம்பினார்கள். அங்குக் கோவிலருகில் அந்தப் பாட்டி அமர்ந்து கேசவதிக்கு யாராவது முடி காணிக்கைக் கொடுக்கணும். அப்போதான் அவ மனசாறும் என்று சொல்லியது அவன் காதில் விழுந்தது.

சட்டென்று மனைவியை கேசவதி வா கோயிலுக்குப் போகலாம் என்று அழைத்தான். அவனுக்கு அந்தக் குலதெய்வத்தின் கதையில் மூழ்கிவிட்டது போல் இருந்தது. கணவன் மனைவி இருவரும் கோயிலுக்கு வந்தார்கள். அவர்களின் அண்டை வீட்டுக்காரியும் அந்த விழாவுக்கு வந்திருந்தாள். பால்காரன் குடும்பத்தினரும் வந்திருந்தார்கள். காலையில் குலதெய்வத்திற்கு பால், பழம், பன்னீர், மஞ்சள், குங்குமம் அபிஷேகங்கள் நடந்தன. அவற்றை எல்லாம் பார்த்து முடித்துவிட்டு கோயில் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு குளத்தருகே மனைவியை அமரச் சொன்னான். குலதெய்வம் கேசவதிதான் அங்கு அமர்ந்திருக்கிறாள் என்று நினைத்து மனைவியைப் பார்த்தான்.

எதற்காக இங்கு அமர அவன் சொல்கிறான் என்று அவள் கேட்டாள். நான் உன் முடிய காணிக்கையா கேசவதிக்குக் குடுக்குறதா வேண்டிகிட்டேன். அதான் என்றான். ஐயோ வேண்டாம் என்றாள் அவள். இல்லை வாக்கு மாறக்கூடாது, தெய்வக்குத்தம் ஆயிடும் என்றான் அவன். இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரியும் பால்காரன் குடும்பத்தினரும் அருகே வந்து நின்றார்கள். வேண்டுதலை நிறைவேத்திடுங்க என்று அவர்களும் சொன்னார்கள். அவளுக்கு வேறு வழியில்லாமல் அமைதியானாள். மனைவியின் முடியைக் காணிக்கையாகக் கொடுக்க அவனே போய் ஒரு நாவிதரை அழைத்து வந்தான்.

அண்டை வீட்டுக்காரிக்கும் பால்காரன் குடும்பதிற்கும் அந்த முடியில் கொஞ்சம் கிடைத்தால் போதும் என்ற பேராசை நிரம்பி வழிந்தது. நாவிதர் கத்தி எடுத்து முடியை வழிக்கத் தொடங்கினார். அப்படியே கற்றையாக முடி கீழே விழுந்தது. அவள் அதை வருத்தமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அந்த முடி அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பெரிய பாம்பாக மாறி படமெடுத்தது. அண்டை வீட்டுக்காரியும் பால்காரக் குடும்பமும் குளத்தருகே நின்றிருந்த பலரும் தெறித்து ஓடினார்கள். அந்தப் பாம்பு அப்படியே வாயைப் பெரிதாகப் பிளந்து மனைவி அருகே நின்றிருந்த அவனை விழுங்கியது. அதைப் பார்த்த அவன் மனைவி குளத்தில் விழுந்து காணாமல் போனாள்.

 

 (சீர்-ஜூலை-செப்டம்பர் 2024ல் வெளியான சிறுகதை)

 

 

 

Monday, 18 September 2023

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு




மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிறார்கள் என்பது அப்போதுதான் புரியும். இது மற்றும் ஒரு வணிகத் திரைப்படம் என்று கடந்து போக முடியாது. நமக்குத் தெரிந்தவர்களில் அநேகம் பேர் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டார்கள். இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று உந்துதல் ஏன் ஏற்படுகிறது என்பதை அறிந்தால்தான் இது போன்ற படங்கள் உருவாக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்ள முடியும்.

மார்க் ஆண்டனி இந்தப் பெயர் 1995ல் பாட்சா திரைப்படத்தின் வில்லனின் பெயர். ரகுவரன் ஏற்று நடித்தப் பாத்திரம். மீண்டும் பாட்சா போன்ற படங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் மார்க் ஆண்டனி போன்ற படங்கள் வராது. ஏனெனில் மார்க் ஆண்டனி, பாட்சாவுடன் முடிந்து போய்விட்ட வில்லன் என்றுதான் இதுவரை எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் மார்க் ஆண்டனி மறு உருவாக்கம் செய்யப்பட்டால் என்ன என்ற கேள்வியைப் படம் வைக்கிறது. அதற்கு 1995க்கே திரும்பிச் சென்றால் மார்க் ஆண்டனி மீண்டும் வரமுடியும். மார்க் ஆண்டனி என்ற பெயர் தோற்றமெடுத்ததற்கான நியாயம் கிடைத்துவிடும் என்று படம் எதிர்பார்க்கிறது.

மார்க் ஆண்டனி படம் என்றால் ரஜினிக்கு எதிரான வில்லனைப் போற்றும் படம் என்றுதான் பொருள் கொள்ள முடியும். ரஜினி மட்டும்தான் நல்லதையும் செய்யும் வில்லன் அல்ல. மார்க் ஆண்டனியும்தான். பாட்சாவில் மாணிக்கம் என்ற பெயரைச் சுருக்கி மாணிக் பாட்சா ஆகிவிட்ட ரஜினி தன் நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டிருப்பார். அதே போல்தான் ஆண்டனி என்ற பெயர் இருந்தாலும் பட்டை நாமம் போட்டுக் கொண்டுள்ள பாத்திரமாக விஷாலின் பாத்திரம் இதில் உள்ளது. பாட்சா, தன் இஸ்லாமிய நண்பர் இறந்ததற்காகப் பழி வாங்கக் கிளம்பியது போல் இதிலும் ஆண்டனி தன் நண்பன் ஜாக்கி பாண்டியனுக்காக எதையும் செய்யத் துணிந்த பாத்திரம்தான். ஒரே வேறுபாடு இந்த நண்பன் ஒரு துரோகி.

ரஜினிக்கு எதிரான பலத்துடன் இருந்த ஒரு பாத்திரம்தான் மார்க் ஆண்டனி. அதனால் அதற்குரிய வல்லமை அந்தப் பாத்திரத்திற்கு இருந்திருக்கும் என்று நம்ப ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். எனவே ரஜினிக்கு எதிரான வில்லனும் நல்லவன்தான் என்று நினைத்துக் கொள்ளவும் மயங்கவும் ஆயத்தமாகிறார்கள் அவர்கள்.

மார்க் ஆண்டனி மீண்டும் ஒரு வில்லனாகத்தான் உருவாக வேண்டுமா? இப்போது எல்லா வணிகத் திரைப்பட நாயகர்களும் வில்லன்கள்தான். அதனால் இதிலும் ஒரு வில்லன் உருவாவதால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது. இதிலும் தீமைக்கு எதிரான தீமை. அதில் கொஞ்சம் நன்மை. இந்த அரதப் பழசான கதையை எத்தனை முறை பார்த்தாலும் ஏன் அலுக்கவே இல்லை? ஏனெனில் நன்மை, தீமை இன்னும் மாறாத பொருளில் இருக்கின்றன.

அது மட்டுமல்ல இந்த வணிகத் திரைப்படங்களில் வரும் பாத்திரங்கள் எல்லாமே எதார்த்தமானவை அல்ல. எங்குமே காண முடியாத வித்தைகளைச் செய்பவர்கள். அது போன்ற மாயவித்தைகளைக் கண்முன் நிகழ்த்திக்காட்ட பெரிய திரை ஒன்றும் அதற்கேற்றத் தொழில்நுட்பங்களும் அதில் என்னென்ன சாத்தியங்கள் முடியுமோ அத்தனையும் செய்து பார்க்கத் துணியும் கலைஞர்களும் இருக்கையில் ரசிகர்கள் மட்டும் அவற்றைப் பார்ப்பதிலிருந்து பின்வாங்குவார்களா?

1995ல் இந்தப் படத்தின் கதை நடக்கிறது. அந்தக் கதையின் வரலாறு 1975ல் தொடங்குகிறது. 1975ல் நாட்டில் அவசரநிலை இருந்தது. அப்போதும் தீமை கோலோச்சிக் கொண்டுதான் இருந்திருக்கிறது. அதில் ஆண்டனி நன்மை தெரிந்த தீயவர். இன்றிலிருந்து 1995க்குப் பயணிக்க உதவும் காலப்பயண தொலைபேசி கதையின் இழைகளை மாற்றி அமைக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் ஏன் தொலைபேசி காலப்பயணத்தைச் சாத்தியப்படுத்தும் எந்திரமாகிறது? நம் அலைபேசிகள் தினம் ஒரு நினைவை மீட்டுத் தருகின்றன. அந்தந்தக் காலகட்டத்தில் நடந்ததை மறுபடியும் நிகழ்த்திப் பார்க்க வாய்ப்பை அளிக்கின்றன. அதிலிருந்து தொலைபேசி காலப்பயணத்தின் எந்திரமாகலாம் என்ற கதையின் முக்கிய முடிச்சை இந்தத் திரைப்படம் உருவாக்குகிறது.

மேலும் சில காலப்பயணம் குறித்தத் திரைப்படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. இந்தத் திரைப்படத்தில் கடந்த காலத்திற்கு மட்டும் பயணம் செய்யும் எந்திரமாக அந்தத் தொலைபேசி இருக்கிறது. ஏன் கடந்தகாலம் மட்டுமே பயணத்திற்கு உகந்ததாக இருக்கிறது? கடந்தகாலம் எப்போதும் நல்ல காலமாக இருக்கும். அது சுகமான நினைவுகளைத் தேக்கி வைக்கும் காலமாக இருக்கலாம். அது மட்டும் அல்லாமல் அதை மட்டும் மாற்றி அமைத்தால் நிகழ்காலமும் எதிர்காலமும் மாறிவிடும். அதனால் கடந்தகாலத்திற்கு மட்டும் பயணம் செய்வதை முன்னெடுக்கிறது இந்தப் படத்தின் கதை.

எல்லோருக்குள்ளும் கடந்த காலத்தை மாற்றி அமைக்கும் ஆசை இருக்கும். அதனை நடத்திக் காட்டுகிறது படம். காயம் இருந்தால் அதனை அகற்றிவிடலாம். விரல்களைச் சுட்டுத் தள்ளிவிடலாம். இப்படிப் பல சம்பவங்கள் நடக்கின்றன. இறந்தவர் மீண்டு வரமுடிகிறது. தொடர்ந்து வாழ முடிகிறது. இறந்த நினைவே இன்றி வாழ்வைத் தொடர முடிகிறது. சில பாத்திரங்கள் பல முறை இறந்து பல முறை வாழ்கின்றன. இது போன்ற பிறப்பு முதல் இறப்பு வரை என்ற நேர்க்கோடு காணாமல் போன வணிகத் திரைப்படங்கள் குறைவு. அந்த வகையில் மரணத்தை ஒத்திவைக்கும் விளையாட்டைத் தீயவர்கள் இருவர், நன்மைக்காகவும் தீமைக்காகவும் விளையாடிப் பார்ப்பது ரசிகர்களுக்குப் புதிதாக உள்ளது. புதிராகவும் உள்ளது.

இந்தக் கதையின் காலப்பயணத்தில் நடக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்தான் ரசிகர்களை மகிழ்வின் உச்சிக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அது ஒரே பாத்திரம் தன் இளம் வயது பாத்திரத்துடன் பேசும் காட்சிகள். தன்னுடன் தானே பேசுவது போன்ற பேரின்பத்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். ஏனெனில் தான் என்ற சுயத்தைப் பிளக்கும் வேலையை இதுவரை அவர்களால் செய்யவே முடியவில்லை. இந்தத் திரைப்படம் செய்துவிட்டது. நிகழ்காலத்தில் இருக்கும் சுயம் கடந்த காலத்தில் இருந்த சுயத்துடன் அளவளாவுவது போன்ற ஒரு காலப்பயணத்திற்காகத்தான் ஏங்கித் தவிக்கிறார்கள் பலரும். அப்படிப்பட்ட ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டும் போது அந்தத் திரைப்படம் வெற்றி பெறாமல் இருக்கவே முடியாது.

தன்னிலையின் பிளவு பல தன்னிலைகள் உருவாகுதல், எதுவும் நிரந்தரமற்று இருத்தல், இப்படி கதையின் இழைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றன. காலம் நிச்சயமற்றது என்பதையும் அதில் உள்ளார்ந்த இழையாக இந்தத் திரைப்படம் காட்டுகிறது. அதனால் அந்தந்த காலத்தில் நிகழும் சம்பவங்கள் உண்மை. அதனால் ஏற்படும் விளைவுகள் உண்மை. ஆனால் அவை எப்போதும் தொடர்ந்திருக்காது. ஒரே ஒரு தொலைபேசி பலரின் வாழ்வை மாற்றி அமைத்திருக்கிறது. பிறப்பும் இறப்பும் வெறும் தொழில்நுட்பத்தால் எதிர் கொள்ளப்படக்கூடியவை என்றால் யாருடைய சுயமும் ஒற்றையானதல்ல, பன்மையானது, நிரந்தரமானதல்ல, மாறக்கூடியது.

 

 

Sunday, 17 September 2023

கருமேகங்கள் கலைகின்றன: தந்தைமையின் மறு உருவாக்க மொழி




தந்தைமை என்ற பரிணாம வளர்ச்சியைப் படைத்துக் காட்டியிருக்கும் படம் தங்கர் பச்சான் இயக்கியிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம். தந்தை முதன்மைச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இன்றைய குடும்ப அலகுகளில் தந்தைமை மதிப்பைப் பெறுவதும் இழப்பதும் உறவுகளின் நிர்ணயிப்புகளால்தான் என்பதைக் காட்ட இந்தத் திரைப்படம் பெரும் முயற்சி எடுத்திருக்கிறது. அத்துடன் தந்தைமையைத் தாங்கிப் பிடிக்கும் உணர்வுகளின் சிக்கல்கள் ஏற்படுத்தும் போராட்டத்தையும் உள்வாங்கியிருக்கிறது இந்தப் படம். இந்தத் திரைப்படத்தில் ஓடும் இழைகளைக் காலவெளி வரிசைப்படியும், உறவுகளின் அமைப்பு மாற்ற பரிணாம வளர்ச்சிப்படியும் அணுக முடியும்.

 

இந்தத் திரைப்படத்தில் இருக்கும் தந்தையர்கள்:

1.பாரதிராஜா
2.விபின் லால்
3.கௌதம் வாசுதேவ் மேனன்
4.யோகி பாபு
.....

கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற ஒரு பொதுவான தந்தைமையைப் பிரதிபலிக்கும் ஆசையில் குறைகளுடன் கூடிய தந்தைமையாக பரிணாம வளர்ச்சியின் முதல் கட்டம் தொடங்குகிறது. அதன் வீழ்ச்சியாகப் பல குறைகள் உள்ள விபின் லால் போன்ற தந்தைமையை நிறைவு செய்யாத பாத்திரமாக அடுத்த கட்டத்தை எட்டுகிறது. அதன் உச்சமாக பாரதிராஜாவின் பாத்திரமாக உருமாற்றம் அடைந்துவிடுகிறது. அதன் saturation pointஐ எட்டுவதாக யோகி பாபு என்ற அதிகாரப் பூர்வமற்றத் தந்தை பாத்திரம் இருக்கிறது. அது பகுதி நேர தந்தைமை என்ற நிலையை அடைவதுதான் பரிணாமம் எனலாம். தந்தைமையின் தேவை குறித்து பெரும் கேள்வி எழுப்புகிறது இந்தப் படம். அதன் அடிநாதமாக குடும்ப அமைப்பையே கேள்வி கேட்கிறது என்றும் சொல்லலாம்.

தாய்மை அல்லது பெண்மை என்று எதைக் காட்டுகிறது படம். இந்தப் படத்தில் பெண் பாத்திரங்கள் காட்டும் பெண்மையை வரிசைப்படுத்தலாம்.

1.அமுதவல்லி என்ற பாரதிராஜாவின் முன்னாள் காதலி
2.பாரதிராஜாவின் மனைவி
3.கௌதம் வாசுதேவனின் மனைவி
4.மீனாகுமாரி எனும் மஹானா
5.அதிதி
....

அமுதவல்லி என்ற பாத்திரம் குடும்பத்தை மீறிய உறவை வைக்கும் பெண்மை. அதனால் பாதிக்கப்படும் பெண். அதன் காரணமாகவே தந்தையாக உருமாறவேண்டிய பாத்திரமாகிறது. படத்தில் வராத பாத்திரம் இது.

பாரதிராஜாவின் மனைவி திருமணத்தை மீறிய உறவை வைத்திருந்த கணவனை ஏற்றுக் கொள்ளும் பாத்திரம். படத்தில் வராத பாத்திரம் இது.

கௌதம் வாசுதேவனின் மனைவி நீக்குப்போக்குக் காட்டும் பெண்.

குடும்ப உறவு சரியாக இல்லை என்றால் குடும்பம் தேவை இல்லை என்று முடிவெடுக்கும் பெண் மஹானா.

இந்தப் பெண்மைக்கு எல்லாம் உச்சமாக மாறியிருப்பது அதிதி.
இந்தப் பாத்திரம் வழி தவறும் தந்தைமையை ஏற்கவில்லை. அந்தப் பாத்திரத்திற்குக் குடும்ப உறவுக்கான தேவை இல்லை. எல்லா மீறல்களாலும் வழிதவறுதல்களாலும்  பிறந்துவிட்ட குழந்தைகளைக் காப்பாற்றினாலே போதும், குடும்பம் இனி தேவை இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்ட பெண்மைதான் அதிதி பாத்திரம் என்பதாகப் படம் வரையறுக்கிறது.

தமிழ்ச் சமூகம் திருமணத்திற்கு மீறிய உறவுகளைப் பார்த்துப் பழகிவிட்டது. இந்தப் படம் அதையே வேறொரு தளத்தில் பேசுகிறது. இன்னும் சொல்லப் போனால் அறம் சார்ந்த சொல்லாடல்களில் அதை இயல்பாக்கம் normalise செய்யப் பார்க்கிறது. அதன் விளைவு குடும்ப அமைப்பு உடைதல் என்பதையும் படம் காட்டிவிடுகிறது.

 

இந்தத் திரைப்படத்தில் இரண்டு இழைகளைக் கொண்டு தந்தைமையின் பரிணாம வளர்ச்சி காட்டப்படுகிறது. முதல் இழை பாரதிராஜாவின் கடந்தகால பழைமையைப் பற்றியது. வழி தவறுதல் நடைமுறையில் இருப்பதைக் காட்டிய இழை இது. இரண்டாவது இழை யோகி பாபுவின் நிகழ்கால இழை. இதில் வழி தவறுதலுக்கான சாத்தியம் இருந்தாலும் கூட அதைத் தேர்ந்தெடுக்காத ஒழுக்க இழையாக இது இருக்கிறது.

 

யோகிபாபு ஏற்படுத்திக் கொள்ளும் தந்தைமை என்பது தற்காலத்திற்கான ஒரு மாதிரி தந்தைமை. இதில் குடும்பத்தின் பொறுப்புகள் சுமையாக இருக்காது. விரும்பும் வரை இருக்கும். விரும்பாவிட்டால் விலகும் என்ற தளர்வுடன் கூடிய அமைப்பில் இருக்கும் தந்தைமை. இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான தந்தைமையாக இது இருக்கிறது. யார் வேண்டுமானாலும் இந்தச் சமூகப் பாத்திரத்திற்குள் வரலாம். விலகலாம். இது பாரதிராஜாவின் காலத்து தந்தைமையைப் போல் நெருக்கும் கயிறல்ல. தற்காலத்து சுதந்திரத்தை முன்வைக்கும் நெகிழி. முந்தைய காலத்து உணர்ச்சிகள், தவிப்புகள் எல்லாம் இதில் இருக்கும். அல்லது இருப்பது போலச் செய்து காட்டும். Simulate செய்யும்.

 

இந்த இரண்டு இழைகளில் யோகி பாபுவின் இழை ஓர் ஓவியம் போல் இருக்கிறது. அதைக் கண்டு பாரதிராஜாவின் இழையை வரைந்தால் அது எப்படி இருக்கும் என்று சிந்திக்கச் சொல்கிறது படம். கடலில் மூழ்கி பழங்காலத்தின் மதிப்பை மீண்டும் நிர்ணயிக்கலாம். அல்லது கடலிலிருந்து விலகி வந்து குற்றவுணர்வுடன் மீண்டும் தந்தமையைத் தொடரலாம்.

 

இந்த இரண்டு இழைகளுமே எதார்த்தம் போல் சித்தரிக்கப்படுகின்றன. பாரதிராஜாவின் பாத்திரத்தையும் யோகிபாபுவின் பாத்திரத்தையும் இரண்டு எதார்த்தக் கோடுகளாக வரைந்து ஒன்று மற்றொன்றிற்கு எதிரானதாக இருப்பது போன்றக் கற்பனையை உருவாக்குகிறது படம்.

 

இந்த இரண்டு இழைகளைக் கொண்ட படத்தின் மொழி, பார்வையாளர்களுக்குள் இருக்கும் மொழியைச் சந்திக்கும் போது, மீண்டும் உறவின் மீதான பிடிப்பு குறித்த வரையறையை உருவாக்குகிறது. அதனால்தான் அதிதி பழங்காலத்து தந்தைமையை ஏற்க முடியாத இக்காலத்துப் பாத்திரமாகிறது. இது, தந்தமையைப் போலச் செய்யும் யோகி பாபுவை ஏற்க முடிகிற பாத்திரமாகிறது. தாயையும் தந்தையாகவே பார்த்த பாத்திரம் அதிதி. அதனால் இனியும் தந்தைமைக்கான அவசியம் இல்லாத நிலையில் இருக்கிறது.

 

இந்தக் கதைக்குள் இருக்கும் இடம் இந்தப் படத்தில் உள்ள இந்த இரண்டு இழைகளை இரண்டாகப் பிரிக்கிறது. ஒன்று, குடும்பத்தின் தேவையைக் காட்டுவது. எனவே படத்தில் காட்டப்படும் குடும்பம் ஒரு சொகுசான கூரை. மற்றொன்று, அது இல்லாதவர்களுக்குக் கிடைக்கும் ஆசிரமம் எனும் குடை.  அதுவும் நிலத்தின் கடைக் கோடியில், ராமேஸ்வரத்தில் கிடைக்கிறது.  இந்த இரண்டு இடப் புள்ளிகளுக்கு இடையே சமுகத்தைக் கதையாக நகர்த்தியிருக்கிறது படம்.

 

காலவெளி சார்ந்த இரண்டு இழைகளைக் கிடைக்கோடாகவும் குத்துக்கோடாகவும் பாவித்தால் இரண்டும் வெட்டும் புள்ளியாக அதிதி பாத்திரமும் யோகி பாபு பாத்திரமும் இருக்கின்றன. மேலும் இந்த இரண்டு இழைகளும் பழமையையும் புதுமையையும் காட்டுவதால் இரண்டுமே சாமான்ய மொழியில் சொல்லப்படுகின்றன. ஆனால் ஒன்றுக்கு மற்றொன்று என்ன பொருளைத் தருகிறது என்பதுதான் இதில் இருக்கும் பின்நவீன மொழி. அதுதான் நேர்க்கோடல்லாத கதை மொழியாகிறது. Non-linearity கொண்ட கதையாகிறது இந்தப் படம். பழமை கிடைக்கோடாக இருந்தால் புதுமை செங்குத்துக் கோடாக இருக்கும். பழமையின் மறந்து போன அறம் புதுமையில் மீண்டு வந்து உயிர்த்தெழும்.

 

தந்தைமையிலிருந்து பிறழ்வது குறித்தக் குற்றவுணர்வை வெளித்தள்ளும் வடிகாலாக இந்தத் திரைப்படத்தின் மொழியை உள்வாங்கலாம். அல்லது பிறழ்வுகள் இயல்பான பின் அவற்றின் நினைவுகளிலிருந்து வெளியேறும் வடிகாலாகவும் பார்க்கலாம். அறத்தின் பாற்பட்ட சொல்லாடலில் கிளைத்திருக்கும் இந்தப் படத்தின் திரைமொழி சமூகத்தின் மௌன உருமாற்றத்தைக் கோருகிறது.   


#கருமேகங்கள்கலைகின்றன

  

Friday, 4 November 2022

முபீன் சாதிகாவின் நூறு புராணங்களின் வாசல்: ஒரு வாசகனின் மனப்பதிவுகள்- செ.ரவீந்திரன்



                இன்று நாம் வாழும் உலகம், மின்னணு தொடர்பு ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது நோம் சாம்ஸ்கி தம் நூலில் கூறியதைப் போன்று வெகுஜன ஊடகங்களால் மனித மனம் கட்டமைக்கப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். எடுத்துக்காட்டாக முகநூல் பெரும்பாலானவர்களின் தொடர்பு சாதனமாக உள்ளது. இதன் மூலம் ஐந்தாயிரம் உறுப்பினர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் சலுகை உண்டு. ஒருவகையில் சொன்னால் இன்று முகநூல் முகமற்ற மனிதர்களின் தொடர்பு சாதனமாகவும் உள்ளது. என் எழுத்தின் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களைக் காட்டிலும் இன்று முகநூலில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். எங்கு போனாலும் ஒரு சிலரைம் தொடர்பு கொள்ள, கருத்து பரிமாறிக் கொள்ள முகநூல்  எனக்குப் பயன்படுகிறது. அவர்களுள் முபீன் சாதிகாவும் ஒருவர்.

முபீன் சாதிகாவிடம் நூல் வெளிவரும் போது அது பற்றிய மதிப்புரை எழுதித் தருகிறேன் என்று சொன்னேன். முதலில் இந்நூலில் வடிவமைப்பில் அட்டை ஓவியம் வரைந்த முபீன் சாதிகா அட்டை வடிவமைப்பையும் உள்பக்க வடிவமைப்பையும் கதிரவன் அட்டை புகைப்படம் எடுத்துள்ள புருஷோத் அப்பு எல்லோரும் பாராட்டுக்குரியவர்கள். முபீன் சாதிகாவின் நூறு புராணங்களின் வாசல் என்னும் குறுங்கதைத் தொகுப்பு நன்னூல் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ள மணலி அப்துல் காதர் அவர்களைப் பாராட்ட வேண்டும். அவர் ’திறந்தே இருக்கும் மாய உலகின் வாசல்’ என்னும் தலைப்பில் மதிப்புரை எழுதியுள்ளார். கதைகளை வாசித்த பின் வாசகர்களாகிய நீங்கள் தான் நிறைய சொல்ல வேண்டும் என அவர் மதிப்புரை மூலம் விடுத்த வேண்டுகோள் வாசகர்களை மௌனவாசகர்களாக இருக்கக் கூடாது என்பதைக் காட்டியது. இதுவும் ஒருவகையில் முபீன் சாதிகாவின் தொகுப்பு பற்றி எழுதத் தூண்டியது எனலாம். இந்நூலுக்கு முன்னுரை எழுதிய வாஸந்தி சொந்த மனநிலையில் பல ஆற்றல்மிக்கக் கருத்துகளைக் கூறியிருக்கிறார். முபீன் சாதிகாவின் குறுங்கதைகள் நூறு என்று தொகைப்படுத்தியிருப்பது சங்க இலக்கியங்களைத் தொகைப்படுத்தி இருப்பது போல் உள்ளது. குறுங்கதைகளை என் அளவில் இரண்டு வகைகளாக வகைப்படுத்தி கொண்டு என் பார்வையை இங்கு முன் வைப்பது பொருத்தமாக இருக்கும் என உணர்கிறேன். அவற்றுள் ஒன்று அவரைப் பாதித்த எழுத்தாளர்களின் படைப்புகளால் உந்துதல் பெற்று உருவான குறுங்கதைகள், இரண்டு இப்பொழுது உலகில் தான் கண்ட தரிசனத்தின் வெளிப்பாட்டில் உருவான குறுங்கதைகள். 15 ஆவது குறுந்தகையான ’கிரிகோர் சாம்சாவுடன் ஓர் உரையாடல்’ என்ற கதை உருமாற்றம் நாவலில் கிரிகோர் சாம்சா உடன் தன்னை இணைத்துக் கொண்டு பூச்சியான பெண் குறித்து அந்த கதை எழுதலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் காஃப்காவின் உருமாற்றம் இப்பூவுலின் இன்றைய சமூகச் சூழல் பற்றியதுதான். ஒரு கரப்பான் பூச்சியாக உருமாறிய தன் உருமாற்றத்தை தன் தாய் தந்தையர் மற்றும் தங்கை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றியது மட்டும் இன்றி இவ்வுலகமும் குப்பைக் கிடங்காக உருமாறிய சூழலில் தானும் ஒரு கரப்பான் பூச்சியாக மாறிய பின் கதையே உருமாற்றம் ஆகிவிட்டது எனக் கொள்ளலாம்.

                82 ஆவது குறுந்ததை மோலாயிடம் நீங்கள் ஒரு கொலை செய்திருக்கிறீர்கள் என்று விசாரணையை தொடங்குகிறார் கதை சொல்லி. அவனிடம் நீங்கள் இன்னும் மனப்பிறழ்வில் இருப்பது போல் தெரிகிறீர்கள் என்கிறார். ஆம் அதனால் தான் உன்னையும் கொல்ல முடிவெடுத்து விட்டேன் என்று கூறி கத்தியை செருகுகிறார் என கூறுவதோடு விசாரணை முடிவடைகிறது. விசாரணை என்ற பெயரில் மோலாயிடும் கேட்கப்படும் கேள்விகள் ஒருவனை எழுத்தாளனிடம் அவன் ஏன் எழுதினான் எதற்கு எழுதினான் என்று கேட்பதற்கு ஒப்பானதாகும்.

                தற்கொலை குறுங்கதை அவள் தற்கொலை முடிவு எடுத்தாள் என குறுங்கதை தொடங்குகிறது, இறுதியில் சாவு எளிமையானது வாழ்வதுதான் சாவுக்கு நிகரானது என்று சொல்வது தோல்வி மனப்பான்மையை, இயலாமையை சொல்லுகிறது எனலா.ம் தம்முடைய நூலான The Rebel என்னும் நாவலில் தற்கொலை செய்து கொள்பவனை ஒரு புரட்சியாளர் என சொல்லுகிறார் காஃப்கா.
                நாற்பதாவது குறுங்கதை, எழுத்தாளரைக் கொல்வது என்னும் தலைப்பு கொண்டது. முபீன் சாதிகாவின் நூறு புராணங்களின் வாசல் என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள குறுந்ததைகள் தொகுப்பிற்கான ஆப்த வாக்கியம் என்று சொல்லலாம். நீங்கள் வாழ்ந்திருப்பது அவனுக்குத் தெரியும் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பானது அல்ல எனச் சொல்லும் இந்தக் குறுங்கதை எழுத்தாளர்களின் படைப்புச் செயல்பாடுகள் மீது அவற்றைப் பாதிக்கும் வாசகர்கள், விமர்சகர்கள் இவர்களின் நிலைப்பாடுகள் எதிர்வினைகள் பற்றிய கதை இது. ரோலன்ட் பார்த் எழுத்தாளன் இறந்துவிட்டான் என அறிவித்தவர். இன்று உலகெங்கிலும் எழுத்தாளர்கள் பலர் படைப்புக்காகக் கொல்லப்பட்டது நாம் அறிந்த செய்தியாகும். எழுத்தாளர்கள் கௌரி லங்கேஷ் எழுத்துக்காக கொல்லப்பட்டார். இப்படிப் பலப்பல பொருள்களைக் கொண்டு நூறு கதைகள் உள்ள இந்தத் தொகுப்பைப் படித்து முடித்த போது பல கடந்த கால நினைவுகளும் எழுத்து குறித்துச் சிந்தனைகளும் மேலோங்கி நின்றன.

………………………………………

நூறு புராணங்களின் வாசல்-முபீன் சாதிகா, நன்னூல் பதிப்பகம், விலை: 130. பக்கங்கள்:127   தொடர்புக்கு:9943624956.

Friday, 2 September 2022

கி.ராவின் பெண்கள்-நாச்சியாரம்மாள், செவனி, பேச்சி: பேயாகுதலின் பரிணாம வளர்ச்சி

 



கி.ராஜநாராயணன் எழுதிய கதைகளில் பல பெண் பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் மூன்று பாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பேயாகுதல் என்ற கருத்தை கி.ரா எப்படி வளர்த்தெடுத்திருக்கிறார் என்பதைப் பார்க்கலாம். பெண்ணுக்கும் பேய்க்கும் ஏன் இந்த நெருக்கம் வாய்த்தது என்பதும் பேய் என்ற உருவாகுதலுக்கான காரணம் என்ன என்பதும் விளக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் இந்தக் கதைகளிலிருந்து விளைந்து வந்த கருத்தாகவும் இருக்கிறது. அணங்கு, நீலி, சூலி இன்னும் இது போன்ற பெண் பேய்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் சங்க இலக்கியங்கள் முதல் தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து பதிவாகியிருக்கின்றன. பெண்ணை உயிராகப் பார்ப்பதற்கு முன் உடலாகப் பார்ப்பதால் விளைந்த கருத்தாகவே பேயாகப் பெண்ணை உருவாக்கியதற்கான காரணமாகக் கொள்ளமுடிகிறது. மேலும் பெண் வெறும் உடலாகப் பார்க்கப்பட்டதற்கு இருபால் உறவு நிறுவனம் பெண்ணை மறுஉற்பத்தி மையமாக மாற்றிவைத்திருந்தது என்ற அடிப்படையைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பெண் குறித்த பயம் பெண் உடல் குறித்த அச்சம் எப்போது எழுகிறது என்றால் பெண் பாலியல் அழுத்தப்படும் போது அறவியல் சார்ந்த பிறழ்வு நேரும் போது பெண்ணை, பேரருள் கொண்ட, உடலுக்கு அப்பாற்பட்ட, சக்தி மிக்க உருவாகப் பார்க்கும் பார்வை தோன்றுகிறது. பெண்ணுக்கான இயங்கு பரப்பாக இருப்பவை, தெய்வமாதலும் பேயாதலும்தான். பெண் தன்னிலை கட்டமைக்கப்பட உருவாக்கப்படும் மற்றமையாக இருக்கும் ஆண் தன்னிலைக்குள் அதிகாரம், அரசு இன்ன பிற அம்சங்கள் செயல்படுகின்றன்றன. பெண்ணின் பெண் மைய ஆளுமையை உருவாக்குதலில் ஆண் சார்ந்த அல்லது தந்தைமை சார்ந்த பலன்களுக்கான வழிமுறைகள்தான் பின்பற்றப்பட்டிருப்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை காட்டி நிற்கின்றன. 

      இந்தக் கட்டுரையில் ‘கன்னிமை’, ‘கிடை’, ‘பேதை’ என்ற மூன்று சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள பெண் பாத்திரங்களான நாச்சியாரம்மாள், செவனி, பேச்சி இவர்களைக் குறித்து ஆய்வு செய்து பார்த்தால் பேயாகுதல் என்ற போக்கின் வளர் நிலை அம்சம் வெளிப்படும். ஏனெனில் இந்த மூன்று பாத்திரங்களும் பெண்ணிலிருந்து பேயாகுதல் வரையான செயற்பாட்டைக் காட்டுவதாக இருக்கின்றன. ’கன்னிமை’ கதையின் பெண் பாத்திரமான நாச்சியாரம்மாள் திருமணத்திற்கு முன் காட்டும் அன்பும் அரவணைப்பும் திருமணத்திற்குப் பின் காணாமல் போவதை இந்தக் கதை முன்வைக்கிறது. ‘கிடை’ கதையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த செவனி என்ற பெண் பாத்திரம் எல்லப்பன் என்ற உயர்சாதி ஆணால் பாலுறவுக்கு இட்டுச் செல்லப்பட்டு கைவிடப்படுவதால் பேய் பிடித்து மனநலம் கெடுவதாக இந்தக் கதை காட்டுகிறது. ‘பேதை’ என்ற கதையில் வரும் பேச்சி என்ற பெண் பாத்திரம் பாலியல் வல்லுறவுக்குப் பின் ஊரால் ஒதுக்கப்பட்டு குழந்தையைப் பெற்றெடுத்து அது இறந்து போனதால் மனநலம் கெட்டு நிர்வாணமாக சுடுகாட்டில் தங்கி நரமாமிசம் உண்டு மீண்டும் தாய்மை அடைவதை இந்தக் கதை வர்ணிக்கிறது. ’கன்னிமை’ கதையில் நாச்சியாரம்மாள் ஒரு தேவதை போன்ற பெண் என்பதான கற்பனையில் புனையப்பட்டிருக்கிறது. ’கிடை’ கதையில் சுதந்திரமான பெண் போல் செவனி பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ‘பேதை’ கதை, பெண்ணிடம் இதுவரை அறியாத குணங்களும் வீர இயல்புகளும் பேயின் தன்மைகளும் வந்து ஒட்டிக் கொள்வதை விவரிக்கிறது.

      பெண் எப்போதும் சிறுபான்மையானவள்தான். இது எண்ணிக்கை சார்ந்து அல்ல. இந்த மனப்போக்கில்தான் அவள் பார்க்கப்படுகிறாள். அதனால் முதலில் பெண்ணாகுதல் என்பது குறித்தே அவள் அறியாத வகையில் நடந்துவிடுகிறது. அதைத்தான் ‘கன்னிமை’ கதையில் வரும் பெண் பாத்திரம் சுட்டுகிறது. திருமணத்திற்கு முன்பு ஒரு தேவதை போல இருக்கும் பாத்திரமாக நாச்சியார் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. திருமணத்திற்குப் பின் தேவதை என்ற அம்சம் முழுவதும் காணாமல் போய்விட்டிருப்பதைக் கதை பதிவு செய்கிறது. தேவதையாக இருக்கிறோம் என்பதோ அதைக் கைவிட்டிருக்கிறோம் என்பதோ அந்தப் பெண் பாத்திரம் அறிவதே இல்லை. அது கதைசொல்லியின் பார்வையிலிருந்து புரிந்துகொள்ளப்பட்ட ஓர் அம்சம்.

      பெண்மை என்பது இத்தகைய தேவதை அம்சத்தின் இலக்கணங்களோடு இருக்கவேண்டும் என்பதுதான் இருபால் உறவு நிறுவனத்தின் எதிர்பார்ப்பு; கட்டமைப்பு. இதற்குத் திருமணத்திற்கு முன்பான நாச்சியாரம்மாள் பாத்திரம் உதாரணமாக இருக்கிறது. தேவதை அம்சம் காணாமல் போகையில் பெண் என்ற அம்சமே காணாமல் போய்விட்டது போன்ற ஒரு குறை அந்தப் பெண் பாத்திரத்திடம் உருவாகிறது. திருமணத்திற்கு முன் நாச்சியாரம்மாள் காட்டிய கனிவு பல பகைகளை மறையச் செய்கிறது. அதனால் பெண்ணாகுதல் என்ற நாச்சியரம்மாள் பாத்திரத்தின் உருவாகுதல்தான் இருபால் உறவு எந்திரத்தின் உச்சபட்ச சமூகவயமாக்கலாகும். சாதாரண மனித உயிர்-உடல் என்ற பருப்பொருளிலிருந்து அதீத அரூப அம்சங்களைக் கொண்ட மற்றொர் உயிராகுதல் என்பதாகவே பெண் கருதப்படுகிறாள். இந்தப் புள்ளியிலிருந்துதான் பெண்ணை உடலாகவோ, மந்திர சக்தியாகவோ, பேயாகவோ பாவிக்கும் கருத்துருவாக்கம் தொடங்குகிறது.

      பெண்ணாகுதல் என்பது முதலில் ஒரு வரலாற்றை அவளுக்குள் புகுத்ததல் ஆகிறது. அதாவது பெண் என்றால் மென்மையான, அன்பான, அரவணைப்புள்ள, ஏமாற்றங்களைத் தாங்குகிற, எல்லா எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுகிற, நன்மை மட்டுமே செய்யத் தெரிந்த, எப்போதுமே அப்பாவியாக இருக்கக்கூடிய, உதாரண பெண்மையை உள்வாங்குகிற, கலாச்சாரத்தின் விதிகளைப் பேணக்கூடிய, கிடைத்த சுதந்திரத்தில் மகிழ்கிற, துன்பங்களை மறக்கச் செய்கிற, இன்ன பிற மனித குணாம்சங்களாக உள்ளவற்றை வெளிப்படுத்தக்கூடிய உயிராக, உடலாக இருப்பதுதான் வரலாறாகப் பெண்ணுக்குள் இறங்குகிறது; இறக்கப்படுகிறது. அவள் ஓர் உதாரணமாகவும் பொறியாகவும் ஒரே சமயத்தில் இருக்கவேண்டியவளாகிறாள். கற்பு போன்ற அம்சங்களையும் மீறி பெண் என்ற உடல், அச்சம்  தரக்கூடிய அதிர்ச்சி தரக்கூடிய கற்பனைக்கு எட்டாத ஒன்றாக உருவாகிவிடுகிறது. பெண் என்பது ஓர் அரூப எல்லை. அதுதான் மனித எல்லை என்பது போல் பாவிக்கவும்படுகிறது. எனவே பெண்ணாகுதல் என்பது மனித முழுமைக்குமான பெண் உடல் என்ற உயிர்த்தலை உருவாக்குதலாக கற்பிதம் செய்யப்படுகிறது. குழந்தையாக, சிறுமியாக, வளர்ந்த பெண்ணாக எப்படி இருந்தாலும் பெண்ணாகுதல் என்ற எல்லை எப்போதும் வரையறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த எல்லை மீறல் நடக்கும் போது அவள், அணங்காகிறாள், பேயாகிறாள், தெய்வமாகிறாள்.

      இத்தகைய ஒரு கணத்தை ‘கிடை’ கதையில் வரும் செவனி பாத்திரம் சொல்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த வயதுக்கு வராத சிறுமியான செவனியை எல்லப்பன் தன் இச்சைக்கு உட்படுத்திவிட்டு வீட்டின் அழுத்தம் காரணமாக செல்வந்தர்களான இரு சகோதரிகளை மணமுடித்துக் கொள்கிறான். செவனிக்குப் பேய் பிடித்துவிடுவதாகக் கதை சொல்கிறது. ஆடுகள் சேதம் செய்த விளைச்சலுக்குக்கூட பரிகாரம் செய்யும் சமூகம், ஆண் செய்யும் சேதத்திற்குப் பெண்ணைப் பேயாக்கிவிடுவதில் குறியாக இருக்கிறது. ’பொதுவாக பேய் எளிமையாக பற்றக்கூடிய உடல்களாக முன்வைக்கப்பட்டிருப்பவை 1. கர்ப்பிணிப் பெண்கள் 2. பருவமடைந்த பெண்கள் 3. பருவமடைந்த ஆண்கள் 4. மாதவிடாய் வந்த பெண்கள். இவ்வுடல்களுக்குள் ஒரு ஒற்றுமை இருப்பதை காணலாம். இவை எல்லாம் பாலியலுடன் உறவு கொண்டவை என்பதே அது. தெய்வம் மற்றும் பேய் பற்றிய கதையாடல்கள் பாலியல் உடல் தளங்களுடன் ஒரு உறவு கொண்டிருக்கின்றன’ என ஜமாலன் கூறுவதை இங்குப் பொருத்திப் பார்க்கலாம். எனவே ‘கிடை’ கதையின் பெண் பாத்திரம் செவனி, பேய் என்ற படிநிலையில் முதலாவதான அணங்காகிறாள். தமிழ் இலக்கிய பரப்பில் அணங்காதல் என்பதற்கு அது குறித்து ஆய்வு செய்த கலைவாணி கூறுவதை இங்கு ஒப்பு நோக்கவேண்டும். ’அணங்கு என்னும் சொல் பல்திறப்பட்ட பொருள் தந்தாலும் இவை அனைத்திற்குமே பொதுப்பொருள் ‘அச்சம்’ என்பதேயாகும். அச்சவுணர்வைத் தோற்றுவித்துத் துன்பம் தரும் பொருளனைத்தும் ‘அணங்கு’ எனப்பெற்றன’ என்கிறார். சாதி வேறுபாட்டின் காரணமாக, பெண் உடல் சீரழிவதைப் பொருட்படுத்தாத கவனமுள்ள சமூகம் குறிப்பாக, ஆண் மைய சமூகம் செவனியின் மனப்பிறழ்வு குறித்து பொருட்படுத்துவதில்லை. பேய்நிலைக்குச் செல்லும் எந்த உடலும் அச்சத்தோடு பார்க்கப்படும் சமூகத்தில் சேர்க்கப்படாது; விலக்கப்படும். பெண்ணும் அத்தகைய நிலைக்கு வெகு எளிதாகத் தள்ளப்பட்டுவிடுகிறாள். பெண்ணாகிய பேயுடல் சமூகவிலக்கத்தினால் படும்பாட்டை ‘பேதை’ கதை விளக்குகிறது.

      உடலுறவு கொண்டதைக்கூட அறியாத பேதைப் பெண் பேச்சி. திருமணம் ஆகாமல் தாய்மை அடைந்ததால் அவளைச் சமூகம் விலக்கிவைக்கிறது. அவளுக்குத் தாய்மை அடைவது மட்டுமே போதுமானதாக இருக்கிறது. குழந்தையுடன் இருப்பதை ஆராதிக்கிறாள். அந்தக் குழந்தை இறந்தவுடன் மனப்பிறழ்ச்சி அடைகிறாள். அந்தக் குழந்தை எரிக்கப்பட்ட சுடுகாட்டில் மறைந்து வாழ்கிறாள். நிர்வாண உடலுடன் வளையவருகிறாள். மீண்டும் தாய்மை அடைகிறாள். அவளைப் பெண்ணாக ஏற்க சமூகம் விரும்புவதில்லை. பேயாகத் தொடர்கிறாள். தெய்வ நிலையை அடையும் பெண் தொழக்கூடிய தன்மை உடையவளாகவும் இயற்கை இகந்த காரியங்களைச் செய்பவளாகவும் இயற்கை அவளிடம் அடிபணியக்கூடியதாகவும் இருப்பதாகக் காட்டப்படும். ஆனால் பேயாகிவிட்ட பெண் அழித்தல் தொழில் செய்பவளாகவும் குறிப்பாக மனித மறுஉற்பத்திக்கு எதிரானவளாகவும் ஆண் என்ற அதிகாரத்தை அச்சமூட்டுபவளாகவும் காட்டப்படுகிறாள். ஆனால் இந்தக் கதையில் இருக்கும் பேயாகிவிட்ட பெண்ணான பேச்சி அழித்தொழிப்பை செய்யவில்லை. ஆண் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தவில்லை.  தாய்மைக்கான ஏக்கத்தில் இருக்கும் உடலாக மாறிவிட்ட பேய். அதை உதாசீனப்படுத்தும் சமூகம்தான் அவளை விலக்கி வைத்து பேயாக்கிவிடுகிறது. தாய்மை என்ற அன்பு நல்கும் பெண், பேயாகுதல் மூலம் அந்த விருப்பத்தை நிறைவு செய்கிறது. பெண்ணாகுதல் என்ற எல்லையிலிருந்து பேயாகுதல் என்ற எல்லையை அடைகிறது. அல்லது பெண் என்ற எல்லையை நீக்கம் செய்துவிட்டு பேய் என்ற புதிய எல்லையை உருவாக்கிவிடுகிறது.

      மனித மறுஉற்பத்திக்கான எந்திரமாக பாவிக்கப்பட்ட பெண் சுயமான விருப்பம் சார்ந்த உற்பத்தி எந்திரமாக இருப்பதில்லை. கட்டுபடுத்தப்பட்ட, விதிகள் சார்ந்த, எல்லைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள். நாச்சியாரம்மாள் அந்த எல்லைக்கு உட்பட்டவள். செவனி அந்த எல்லைக்கு உட்பட விரும்பியவள். பேச்சி அந்த எல்லை எது என்றே அறியாதவள். இருபால் உறவு எனும் நிறுவனம் கட்டமைத்த விதிகள் சார்ந்த உடலாக மட்டுமே வளர்ந்திருக்க வேண்டிய பெண், வேறு விதிகளை உருவாக்குதலோ மற்றொரு அதீத சக்தி கொண்ட உடலாக உருவாகுதலோ ஏற்கப்படுவதில்லை. பெண் பேரச்சம் தருபவளாக அடையாளப்படுத்தப்பாட்டல் மற்ற தன்னிலைகள் சிதறிவிடும். இதனால் பெண் எனும் சட்டகம் பொதுபுத்தியின் வரையறையிலிருந்து எந்த வகையிலும் மாற்றி வரையப்படாததாக இருக்கவேண்டியது அவசியம் என்பதும் அப்படி மாற்றி வரையப்பட்டால் நிகழக்கூடிய கட்டுக்குலைவை இந்தக் கதைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கரிசல் காடாக இருந்தாலும் வேறு எந்த நாடாக இருந்தாலும் இந்த விதிகள் மாறாமல் பெண் மீதான கண்காணிப்பை எப்போதும் செய்து கொண்டேதான் இருக்கும் என்பதுதான் பரிணாம வளர்ச்சியின் அடிப்படை விதியாகப் புரிந்துகொள்ளலாம்.

……………………

பயன்பட்ட நூல்கள்:

1.கி.ராஜநாராயணன் கதைகள், அன்னம், 2011

2.கலைவாணி, தொன்மப் பதிவுகளில் அணங்கு, https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/1659-2013-sp-142/25620-2013-11-28-10-33-13

3.ஜமாலன், பெண்கள் - பேய்கள் - தெய்வங்கள் காஞ்சனை - உரையாடும் கதையாடல்

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3825-2010-02-19-10-40-37

4.Deleuze, G & Guattari, F. A Thousand Plateaus-Capitalism and Schizophrenia, Tr.Brian Massumi, Minnesota Press, 1987.

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...