Saturday 9 June 2018

காலா...


இந்தப் படத்தின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு அது என்ன பொருள் கொடுக்கிறது என்று பார்க்க முடியாது. ஏனெனில் இந்தப் படம் திரைப்படத்தின் பொதுவான கதை ஓட்டம் என்ற ஒன்றைக் கொள்ளவில்லை. அல்லது கொண்டிருப்பது இயல் வாழ்வின் ஓட்டத்துடன் ஒட்டி நின்றிருக்கிறது. அந்த இரண்டு புள்ளிகளையும் இணைப்பது ரஜினியின் சூப்பர் ஸ்டார் என்கிற பிம்பம். அந்தப் பிம்பம் இந்தப் படம் வரும் போது அரசியலுடன், அதிகாரத்துடன் இணையவிருக்கும் பிம்பமாக மாறியிருக்கிறது. அந்தப் பிம்பத்தைக் கொண்டிருப்பவர் வெறும் நடிகர் என்பதாக இந்தப் படம் சுருக்கி இருப்பதாகவும் கொண்டுவிடலாம். அல்லது திரைக்கு வெளியேயான சூப்பர் ஸ்டார்+அரசியல்வாதி பிம்பத்துடன் நடத்தும் உரையாடல் என்றும் இந்தப் படத்தைக் கொண்டுவிடலாம். அதுதான் கதை. 

சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெற்றவர் தாராவி, அல்லது அடித்தட்டு மக்களின் வாழ்வை வாழ்ந்து அல்லது அவர்களுக்காகவே வாழ்ந்து மரிக்கவேண்டும். இந்த அரசியலை சூப்பர் ஸ்டார் தேர்ந்தெடுத்தார் என்றால் அவர் இறப்பற்ற வாழ்வைத் தொடர்வார். முடிவற்ற அரசியலை, அதிகாரத்தைப் பெறுவார். திரைப்படத்தில் தொடர்ந்தது போல. ரஜினி என்ற மனிதர் காலா என்ற திரைப்படத்தில் இறக்காமல் அல்லது இறந்து போவது போல் தெரிந்தாலும் நிலையான வாழ்வைத் தொடர்பவராக இயல்வாழ்வில் இருப்பார். 

காலா என்றச் சொல் கருப்பு, யமன், காலம், என்ற பல பொருள்களைக் குறித்தாலும் தலித், திராவிடன் என்ற அடிப்படையில்தான் படத்தில் பயன்படுத்தப்படுகிறது. கருப்புக்கு எதிரான உணர்வுகளை ’அடக்குவது அத்துமீறுவது அடங்கமறுப்பது’ இதுதான் காலா திரைப்படத்தின் ஆணிவேர். அதற்குக் கருப்பான சூப்பர் ஸ்டார் தேவை. வெள்ளையைக் கருப்பாக்க. வெள்ளை என்பது ஆரியம், ஆர்எஸ்எஸ், பிஜேபி மற்றும் முதலாளித்துவம். எப்போதும் நிலைத்திருக்கப் போகிற அடித்தட்டு வர்க்கத்திற்கு கருப்பு மட்டும்தான் உரியது. கருப்பு அழுக்கு. வெள்ளையின் அழுக்கு என்பதால். அழுக்கைத் துவைக்கும் முதல் காட்சியிலிருந்து பல வண்ணங்களாய் முடியும் இறுதிக் காட்சிவரை கருப்பின் ஆதிக்கம் மேலாதிக்கமாக இந்தப் படத்தில் இருக்கிறது.

நிலம் உரிமை என்பது ஒரு குறியீட்டு வாசகம். இயல் வாழ்வில் அடித்தட்டு மக்களின் பாதுகாப்பு, அதிகாரம், மேலாதிக்கம் என்பதற்கான தேடலை கட்சி வடிவம் கொடுக்க-ரஜனியின் கட்சியாக வடிவம் கொடுக்க காலா முனைகிறது. திரைப்படத்தில் ரஜினி தொடங்கிய கட்சி அது. வெள்ளையை எதிர்த்தால் மரணம் என்றால் கருப்பை எதிர்த்தாலும் மரணம்தான் படம் சொல்லும் கொள்கை. வெள்ளையின் கொலை அதிகார வெறி. கருப்பின் கொலை ஆதிக்க ஏக்கம்.

ரஜினியின் குடும்பம் கட்சிக்கு எதிராக-கருப்பிற்கு எதிராக இருந்தால் விட்டுவிலகலாம் அல்லது விலக்கப்படலாம். மற்ற படங்களில் உண்மைக்கு மிக அருகில் ரஜினி குடும்பம் பற்றிய கற்பனை இருக்கும். இந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் அது கற்பனையின் உண்மையாக மாறியிருக்கிறது. கருப்பு என்ற ஒற்றை முடிச்சு இருப்பதால் சூப்பர் ஸ்டாரின் மனைவியும் கருப்பாகத்தான் இருந்தாகவேண்டும். ரஜினி ரசிகர்கள் முந்தைய பல படங்களில் வெள்ளை நாயகிகளைப் பார்த்துவிட்டபடியால் இனி கருப்பு மனைவிமார்களைச் சகித்தாகவேண்டும்.

சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தைக் கடன் வாங்கி கட்சி தொடங்கி இருப்பதால் கவர்ச்சி அம்சங்களுக்கும் திசை மாறுதல்களுக்கும் இடம் இல்லை. ரஜினி தொடங்கும் கட்சியில் கருப்பின் ஆதிக்கம் இல்லை என்றால் தோற்றுவிடும். நாயும் கூட தலித்தான். நாய் தோன்றும் காட்சிகள் முக்கியமான முடிவுகளை அல்லது எதிர்வினைகளைக் கொண்ட காட்சிகளாக இருக்கின்றன. விலங்குகளுடன் இணையான உறவை அடித்தட்டு மக்கள் கொண்டிருப்பதாகவும் சூப்பர் ஸ்டார் ஜாதி நாய்களை வளர்ப்பார் ஆனால் தலித் நாயை வளர்ப்பவர்தான் சூப்பர் ஸ்டாராக முடியும் என்றும் கூட அந்த நாய் சொல்லிவிட்டது.

அழுத்தமான காட்சி அமைப்புகள் இல்லை, நினைவில் பதியும் சம்பவக் கோர்வைகள் இல்லை. மேலோட்டமான குழப்பக் களிப்பு போல் காட்சிகள் உள்ளன. அழகியலுக்காக இந்தப் படத்தைப் பார்க்கக்கூடாது என்ற ஒரு காட்சி வரைமுறையை ஏற்படுத்த முனைகிறது திரைப்படம்.



மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...