Friday 2 September 2022

கி.ராவின் பெண்கள்-நாச்சியாரம்மாள், செவனி, பேச்சி: பேயாகுதலின் பரிணாம வளர்ச்சி

 



கி.ராஜநாராயணன் எழுதிய கதைகளில் பல பெண் பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் மூன்று பாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பேயாகுதல் என்ற கருத்தை கி.ரா எப்படி வளர்த்தெடுத்திருக்கிறார் என்பதைப் பார்க்கலாம். பெண்ணுக்கும் பேய்க்கும் ஏன் இந்த நெருக்கம் வாய்த்தது என்பதும் பேய் என்ற உருவாகுதலுக்கான காரணம் என்ன என்பதும் விளக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் இந்தக் கதைகளிலிருந்து விளைந்து வந்த கருத்தாகவும் இருக்கிறது. அணங்கு, நீலி, சூலி இன்னும் இது போன்ற பெண் பேய்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் சங்க இலக்கியங்கள் முதல் தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து பதிவாகியிருக்கின்றன. பெண்ணை உயிராகப் பார்ப்பதற்கு முன் உடலாகப் பார்ப்பதால் விளைந்த கருத்தாகவே பேயாகப் பெண்ணை உருவாக்கியதற்கான காரணமாகக் கொள்ளமுடிகிறது. மேலும் பெண் வெறும் உடலாகப் பார்க்கப்பட்டதற்கு இருபால் உறவு நிறுவனம் பெண்ணை மறுஉற்பத்தி மையமாக மாற்றிவைத்திருந்தது என்ற அடிப்படையைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பெண் குறித்த பயம் பெண் உடல் குறித்த அச்சம் எப்போது எழுகிறது என்றால் பெண் பாலியல் அழுத்தப்படும் போது அறவியல் சார்ந்த பிறழ்வு நேரும் போது பெண்ணை, பேரருள் கொண்ட, உடலுக்கு அப்பாற்பட்ட, சக்தி மிக்க உருவாகப் பார்க்கும் பார்வை தோன்றுகிறது. பெண்ணுக்கான இயங்கு பரப்பாக இருப்பவை, தெய்வமாதலும் பேயாதலும்தான். பெண் தன்னிலை கட்டமைக்கப்பட உருவாக்கப்படும் மற்றமையாக இருக்கும் ஆண் தன்னிலைக்குள் அதிகாரம், அரசு இன்ன பிற அம்சங்கள் செயல்படுகின்றன்றன. பெண்ணின் பெண் மைய ஆளுமையை உருவாக்குதலில் ஆண் சார்ந்த அல்லது தந்தைமை சார்ந்த பலன்களுக்கான வழிமுறைகள்தான் பின்பற்றப்பட்டிருப்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை காட்டி நிற்கின்றன. 

      இந்தக் கட்டுரையில் ‘கன்னிமை’, ‘கிடை’, ‘பேதை’ என்ற மூன்று சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள பெண் பாத்திரங்களான நாச்சியாரம்மாள், செவனி, பேச்சி இவர்களைக் குறித்து ஆய்வு செய்து பார்த்தால் பேயாகுதல் என்ற போக்கின் வளர் நிலை அம்சம் வெளிப்படும். ஏனெனில் இந்த மூன்று பாத்திரங்களும் பெண்ணிலிருந்து பேயாகுதல் வரையான செயற்பாட்டைக் காட்டுவதாக இருக்கின்றன. ’கன்னிமை’ கதையின் பெண் பாத்திரமான நாச்சியாரம்மாள் திருமணத்திற்கு முன் காட்டும் அன்பும் அரவணைப்பும் திருமணத்திற்குப் பின் காணாமல் போவதை இந்தக் கதை முன்வைக்கிறது. ‘கிடை’ கதையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த செவனி என்ற பெண் பாத்திரம் எல்லப்பன் என்ற உயர்சாதி ஆணால் பாலுறவுக்கு இட்டுச் செல்லப்பட்டு கைவிடப்படுவதால் பேய் பிடித்து மனநலம் கெடுவதாக இந்தக் கதை காட்டுகிறது. ‘பேதை’ என்ற கதையில் வரும் பேச்சி என்ற பெண் பாத்திரம் பாலியல் வல்லுறவுக்குப் பின் ஊரால் ஒதுக்கப்பட்டு குழந்தையைப் பெற்றெடுத்து அது இறந்து போனதால் மனநலம் கெட்டு நிர்வாணமாக சுடுகாட்டில் தங்கி நரமாமிசம் உண்டு மீண்டும் தாய்மை அடைவதை இந்தக் கதை வர்ணிக்கிறது. ’கன்னிமை’ கதையில் நாச்சியாரம்மாள் ஒரு தேவதை போன்ற பெண் என்பதான கற்பனையில் புனையப்பட்டிருக்கிறது. ’கிடை’ கதையில் சுதந்திரமான பெண் போல் செவனி பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ‘பேதை’ கதை, பெண்ணிடம் இதுவரை அறியாத குணங்களும் வீர இயல்புகளும் பேயின் தன்மைகளும் வந்து ஒட்டிக் கொள்வதை விவரிக்கிறது.

      பெண் எப்போதும் சிறுபான்மையானவள்தான். இது எண்ணிக்கை சார்ந்து அல்ல. இந்த மனப்போக்கில்தான் அவள் பார்க்கப்படுகிறாள். அதனால் முதலில் பெண்ணாகுதல் என்பது குறித்தே அவள் அறியாத வகையில் நடந்துவிடுகிறது. அதைத்தான் ‘கன்னிமை’ கதையில் வரும் பெண் பாத்திரம் சுட்டுகிறது. திருமணத்திற்கு முன்பு ஒரு தேவதை போல இருக்கும் பாத்திரமாக நாச்சியார் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. திருமணத்திற்குப் பின் தேவதை என்ற அம்சம் முழுவதும் காணாமல் போய்விட்டிருப்பதைக் கதை பதிவு செய்கிறது. தேவதையாக இருக்கிறோம் என்பதோ அதைக் கைவிட்டிருக்கிறோம் என்பதோ அந்தப் பெண் பாத்திரம் அறிவதே இல்லை. அது கதைசொல்லியின் பார்வையிலிருந்து புரிந்துகொள்ளப்பட்ட ஓர் அம்சம்.

      பெண்மை என்பது இத்தகைய தேவதை அம்சத்தின் இலக்கணங்களோடு இருக்கவேண்டும் என்பதுதான் இருபால் உறவு நிறுவனத்தின் எதிர்பார்ப்பு; கட்டமைப்பு. இதற்குத் திருமணத்திற்கு முன்பான நாச்சியாரம்மாள் பாத்திரம் உதாரணமாக இருக்கிறது. தேவதை அம்சம் காணாமல் போகையில் பெண் என்ற அம்சமே காணாமல் போய்விட்டது போன்ற ஒரு குறை அந்தப் பெண் பாத்திரத்திடம் உருவாகிறது. திருமணத்திற்கு முன் நாச்சியாரம்மாள் காட்டிய கனிவு பல பகைகளை மறையச் செய்கிறது. அதனால் பெண்ணாகுதல் என்ற நாச்சியரம்மாள் பாத்திரத்தின் உருவாகுதல்தான் இருபால் உறவு எந்திரத்தின் உச்சபட்ச சமூகவயமாக்கலாகும். சாதாரண மனித உயிர்-உடல் என்ற பருப்பொருளிலிருந்து அதீத அரூப அம்சங்களைக் கொண்ட மற்றொர் உயிராகுதல் என்பதாகவே பெண் கருதப்படுகிறாள். இந்தப் புள்ளியிலிருந்துதான் பெண்ணை உடலாகவோ, மந்திர சக்தியாகவோ, பேயாகவோ பாவிக்கும் கருத்துருவாக்கம் தொடங்குகிறது.

      பெண்ணாகுதல் என்பது முதலில் ஒரு வரலாற்றை அவளுக்குள் புகுத்ததல் ஆகிறது. அதாவது பெண் என்றால் மென்மையான, அன்பான, அரவணைப்புள்ள, ஏமாற்றங்களைத் தாங்குகிற, எல்லா எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுகிற, நன்மை மட்டுமே செய்யத் தெரிந்த, எப்போதுமே அப்பாவியாக இருக்கக்கூடிய, உதாரண பெண்மையை உள்வாங்குகிற, கலாச்சாரத்தின் விதிகளைப் பேணக்கூடிய, கிடைத்த சுதந்திரத்தில் மகிழ்கிற, துன்பங்களை மறக்கச் செய்கிற, இன்ன பிற மனித குணாம்சங்களாக உள்ளவற்றை வெளிப்படுத்தக்கூடிய உயிராக, உடலாக இருப்பதுதான் வரலாறாகப் பெண்ணுக்குள் இறங்குகிறது; இறக்கப்படுகிறது. அவள் ஓர் உதாரணமாகவும் பொறியாகவும் ஒரே சமயத்தில் இருக்கவேண்டியவளாகிறாள். கற்பு போன்ற அம்சங்களையும் மீறி பெண் என்ற உடல், அச்சம்  தரக்கூடிய அதிர்ச்சி தரக்கூடிய கற்பனைக்கு எட்டாத ஒன்றாக உருவாகிவிடுகிறது. பெண் என்பது ஓர் அரூப எல்லை. அதுதான் மனித எல்லை என்பது போல் பாவிக்கவும்படுகிறது. எனவே பெண்ணாகுதல் என்பது மனித முழுமைக்குமான பெண் உடல் என்ற உயிர்த்தலை உருவாக்குதலாக கற்பிதம் செய்யப்படுகிறது. குழந்தையாக, சிறுமியாக, வளர்ந்த பெண்ணாக எப்படி இருந்தாலும் பெண்ணாகுதல் என்ற எல்லை எப்போதும் வரையறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த எல்லை மீறல் நடக்கும் போது அவள், அணங்காகிறாள், பேயாகிறாள், தெய்வமாகிறாள்.

      இத்தகைய ஒரு கணத்தை ‘கிடை’ கதையில் வரும் செவனி பாத்திரம் சொல்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த வயதுக்கு வராத சிறுமியான செவனியை எல்லப்பன் தன் இச்சைக்கு உட்படுத்திவிட்டு வீட்டின் அழுத்தம் காரணமாக செல்வந்தர்களான இரு சகோதரிகளை மணமுடித்துக் கொள்கிறான். செவனிக்குப் பேய் பிடித்துவிடுவதாகக் கதை சொல்கிறது. ஆடுகள் சேதம் செய்த விளைச்சலுக்குக்கூட பரிகாரம் செய்யும் சமூகம், ஆண் செய்யும் சேதத்திற்குப் பெண்ணைப் பேயாக்கிவிடுவதில் குறியாக இருக்கிறது. ’பொதுவாக பேய் எளிமையாக பற்றக்கூடிய உடல்களாக முன்வைக்கப்பட்டிருப்பவை 1. கர்ப்பிணிப் பெண்கள் 2. பருவமடைந்த பெண்கள் 3. பருவமடைந்த ஆண்கள் 4. மாதவிடாய் வந்த பெண்கள். இவ்வுடல்களுக்குள் ஒரு ஒற்றுமை இருப்பதை காணலாம். இவை எல்லாம் பாலியலுடன் உறவு கொண்டவை என்பதே அது. தெய்வம் மற்றும் பேய் பற்றிய கதையாடல்கள் பாலியல் உடல் தளங்களுடன் ஒரு உறவு கொண்டிருக்கின்றன’ என ஜமாலன் கூறுவதை இங்குப் பொருத்திப் பார்க்கலாம். எனவே ‘கிடை’ கதையின் பெண் பாத்திரம் செவனி, பேய் என்ற படிநிலையில் முதலாவதான அணங்காகிறாள். தமிழ் இலக்கிய பரப்பில் அணங்காதல் என்பதற்கு அது குறித்து ஆய்வு செய்த கலைவாணி கூறுவதை இங்கு ஒப்பு நோக்கவேண்டும். ’அணங்கு என்னும் சொல் பல்திறப்பட்ட பொருள் தந்தாலும் இவை அனைத்திற்குமே பொதுப்பொருள் ‘அச்சம்’ என்பதேயாகும். அச்சவுணர்வைத் தோற்றுவித்துத் துன்பம் தரும் பொருளனைத்தும் ‘அணங்கு’ எனப்பெற்றன’ என்கிறார். சாதி வேறுபாட்டின் காரணமாக, பெண் உடல் சீரழிவதைப் பொருட்படுத்தாத கவனமுள்ள சமூகம் குறிப்பாக, ஆண் மைய சமூகம் செவனியின் மனப்பிறழ்வு குறித்து பொருட்படுத்துவதில்லை. பேய்நிலைக்குச் செல்லும் எந்த உடலும் அச்சத்தோடு பார்க்கப்படும் சமூகத்தில் சேர்க்கப்படாது; விலக்கப்படும். பெண்ணும் அத்தகைய நிலைக்கு வெகு எளிதாகத் தள்ளப்பட்டுவிடுகிறாள். பெண்ணாகிய பேயுடல் சமூகவிலக்கத்தினால் படும்பாட்டை ‘பேதை’ கதை விளக்குகிறது.

      உடலுறவு கொண்டதைக்கூட அறியாத பேதைப் பெண் பேச்சி. திருமணம் ஆகாமல் தாய்மை அடைந்ததால் அவளைச் சமூகம் விலக்கிவைக்கிறது. அவளுக்குத் தாய்மை அடைவது மட்டுமே போதுமானதாக இருக்கிறது. குழந்தையுடன் இருப்பதை ஆராதிக்கிறாள். அந்தக் குழந்தை இறந்தவுடன் மனப்பிறழ்ச்சி அடைகிறாள். அந்தக் குழந்தை எரிக்கப்பட்ட சுடுகாட்டில் மறைந்து வாழ்கிறாள். நிர்வாண உடலுடன் வளையவருகிறாள். மீண்டும் தாய்மை அடைகிறாள். அவளைப் பெண்ணாக ஏற்க சமூகம் விரும்புவதில்லை. பேயாகத் தொடர்கிறாள். தெய்வ நிலையை அடையும் பெண் தொழக்கூடிய தன்மை உடையவளாகவும் இயற்கை இகந்த காரியங்களைச் செய்பவளாகவும் இயற்கை அவளிடம் அடிபணியக்கூடியதாகவும் இருப்பதாகக் காட்டப்படும். ஆனால் பேயாகிவிட்ட பெண் அழித்தல் தொழில் செய்பவளாகவும் குறிப்பாக மனித மறுஉற்பத்திக்கு எதிரானவளாகவும் ஆண் என்ற அதிகாரத்தை அச்சமூட்டுபவளாகவும் காட்டப்படுகிறாள். ஆனால் இந்தக் கதையில் இருக்கும் பேயாகிவிட்ட பெண்ணான பேச்சி அழித்தொழிப்பை செய்யவில்லை. ஆண் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தவில்லை.  தாய்மைக்கான ஏக்கத்தில் இருக்கும் உடலாக மாறிவிட்ட பேய். அதை உதாசீனப்படுத்தும் சமூகம்தான் அவளை விலக்கி வைத்து பேயாக்கிவிடுகிறது. தாய்மை என்ற அன்பு நல்கும் பெண், பேயாகுதல் மூலம் அந்த விருப்பத்தை நிறைவு செய்கிறது. பெண்ணாகுதல் என்ற எல்லையிலிருந்து பேயாகுதல் என்ற எல்லையை அடைகிறது. அல்லது பெண் என்ற எல்லையை நீக்கம் செய்துவிட்டு பேய் என்ற புதிய எல்லையை உருவாக்கிவிடுகிறது.

      மனித மறுஉற்பத்திக்கான எந்திரமாக பாவிக்கப்பட்ட பெண் சுயமான விருப்பம் சார்ந்த உற்பத்தி எந்திரமாக இருப்பதில்லை. கட்டுபடுத்தப்பட்ட, விதிகள் சார்ந்த, எல்லைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள். நாச்சியாரம்மாள் அந்த எல்லைக்கு உட்பட்டவள். செவனி அந்த எல்லைக்கு உட்பட விரும்பியவள். பேச்சி அந்த எல்லை எது என்றே அறியாதவள். இருபால் உறவு எனும் நிறுவனம் கட்டமைத்த விதிகள் சார்ந்த உடலாக மட்டுமே வளர்ந்திருக்க வேண்டிய பெண், வேறு விதிகளை உருவாக்குதலோ மற்றொரு அதீத சக்தி கொண்ட உடலாக உருவாகுதலோ ஏற்கப்படுவதில்லை. பெண் பேரச்சம் தருபவளாக அடையாளப்படுத்தப்பாட்டல் மற்ற தன்னிலைகள் சிதறிவிடும். இதனால் பெண் எனும் சட்டகம் பொதுபுத்தியின் வரையறையிலிருந்து எந்த வகையிலும் மாற்றி வரையப்படாததாக இருக்கவேண்டியது அவசியம் என்பதும் அப்படி மாற்றி வரையப்பட்டால் நிகழக்கூடிய கட்டுக்குலைவை இந்தக் கதைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கரிசல் காடாக இருந்தாலும் வேறு எந்த நாடாக இருந்தாலும் இந்த விதிகள் மாறாமல் பெண் மீதான கண்காணிப்பை எப்போதும் செய்து கொண்டேதான் இருக்கும் என்பதுதான் பரிணாம வளர்ச்சியின் அடிப்படை விதியாகப் புரிந்துகொள்ளலாம்.

……………………

பயன்பட்ட நூல்கள்:

1.கி.ராஜநாராயணன் கதைகள், அன்னம், 2011

2.கலைவாணி, தொன்மப் பதிவுகளில் அணங்கு, https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/1659-2013-sp-142/25620-2013-11-28-10-33-13

3.ஜமாலன், பெண்கள் - பேய்கள் - தெய்வங்கள் காஞ்சனை - உரையாடும் கதையாடல்

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3825-2010-02-19-10-40-37

4.Deleuze, G & Guattari, F. A Thousand Plateaus-Capitalism and Schizophrenia, Tr.Brian Massumi, Minnesota Press, 1987.

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...