Wednesday 27 October 2021

குறுங்கதைகள்-பல்





அவளுக்கு எதிர்பாராத விதமாக அதிகப் பணம் தேவைப்பட்டது. குடும்பத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க வேண்டியிருந்தது. தன் பூர்வீக வீட்டை விற்றுவிடலாம் என முடிவெடுத்தாள். அங்கிருந்த பொருட்களை என்ன செய்யலாம் எனப் பார்க்க வந்திருந்தாள். அங்கு அவள் சிறு வயதில் சேகரித்தப் பொருள்கள் எல்லாம் இருந்தன. குட்டி பாத்திரங்கள், சொப்புகள், பள்ளிக்குக் கொண்டு சென்ற பைகள், நோட்டுப் புத்தகங்கள், சில்லறை காசுகள், பலகைகள், பென்சில்கள், பேனாக்கள், தூரிகைகள், சிறுவயதில் வரைந்த ஓவியங்கள், சிறுவயதில் அணிந்த உடைகள், ரிப்பன்கள், சாப்பிட்டத் தட்டுகள், குடித்த குவளைகள், மட்பாண்டங்கள், சாமி சிலைகள், வளையல்கள், கொலுசுகள், மேஜைகள், நாற்காலிகள், கட்டில்கள், பெட்டிகள், முறங்கள், அம்மி, குழவி, மாவாட்டும் கல், துணி துவைக்கும் கல், இன்னும் இன்னும் எண்ணிலடங்கா பொருள்கள் இருந்தன. உள் அலமாரி திறந்தால் அதில் ஒரு சிறிய பெட்டி இருந்தது. அதைத் திறந்து பார்த்தாள். முதன் முதல் விழுந்த அவளுடைய பல் அதில் இருந்தது. அதைக் கண்டவுடன் பழைய நினைவுகள் எல்லாம் கிளர்ந்து வந்தன. அந்தப் பல் விழுந்தவுடன் அவள் எவ்வளவு துயருற்றாள் என நினைவுக்கு வந்தது. அந்தப் பல்லால் தான் எத்தனைத் தின்பண்டங்களை உண்டிருப்போம் எனத் தோன்றியது. புதிய பல் வளர்ந்து வரும் வரை விழுந்துவிட்ட அந்தப் பல் மீது அவளுக்குக் கடும் கோபம் இருந்தது. அதன் பின் அந்தப் பல் மீது அதிக வாஞ்சை ஏற்பட்டுவிட்டது. அதைப் பத்திரமாக வைத்துக் கொண்டாள். அந்தப் பால் பல்லைக் காட்டி அவள் சிரிக்கும் போது அவளது தாத்தா, பாட்டி மிகவும் மகிழ்ந்தார்கள். அந்தப் பல் இத்தனை ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது. தான் இறந்த பின்னும் அது இருக்கும் என நினைத்து நெகிழ்ந்து போனாள். அவளுக்குச் சட்டென்று ஒரு யோசனை வந்தது. அந்தப் பல்லை ஏலம் விட்டால் என்ன என்று தோன்றியது. ஓர் இணையதளத்தில் அந்தப் பல்லை ஏலம் விட்டாள். வெளிநாட்டில் மரபுக்கூறுகளைக் குறித்து ஆய்வுகளைச் செய்யும் நிறுவனம் கணிசமான தொகைக்கு அந்தப் பல்லை ஏலம் எடுத்துக் கொண்டது. கடன் சுமை தீர்ந்தது. அவள் வீட்டையும் விற்கவில்லை. 

Tuesday 26 October 2021

குறுங்கதைகள்-கானல்





அவன் வீட்டின் ஜன்னலிலிருந்து பார்த்தால் சற்று தொலைவில் இருக்கும் வீட்டின் ஜன்னலும் அந்த வீட்டில் நடப்பதும் தெரியும். அது இருக்கும் தொலைவை விட அருகில் இருப்பது போல் தெரியும். அது கானல் நீர் போன்ற காட்சி என பிறகு புரிந்துகொண்டான். எப்போதும் அந்த வீட்டில் நடப்பதை இவன் உன்னிப்பாகக் கவனிப்பதில்லை. அன்றிரவு அந்த வீட்டில் ஏதோ வித்தியாசமான ஒலி வந்ததால் அந்த ஜன்னலில் பார்த்தான். ஒருவன் ஒரு பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தான். இவனுக்குப் பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. அந்த வீட்டுக்குச் சென்று என்ன நடந்தது என்று பார்க்கலாம் எனக் கிளம்பினான். அந்த வீட்டின் கதவைத் தட்டினான். கழுத்தை நெறித்தவன் வந்து கதவைத் திறந்தான். அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. வீட்டில் ஏதாவது சண்டையா என இவன் கேட்டான். அப்படி எதுவுமில்லையே என்றான் அவன். தன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்த காட்சியை அவனிடம் சொன்னான் இவன். அவன் சிரித்துக் கொண்டு இவனை வீட்டுக்குள் அழைத்து அவன் ஜன்னலில் தெரிந்தது தன் வீட்டுத் தொலைக்காட்சி எனவும் அதில் அப்போது தான் நடிக்கும் ஒரு குறும்படக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் சொன்னான். உண்மையில் அங்கு ஒரு பெரிய தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இவனும் தொல்லைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு வந்துவிட்டான். இருந்தாலும் இவனுக்குச் சந்தேகம் தீரவில்லை. அவன் பொய் சொல்வதாகக் கருதினான். இதை எப்படிக் கண்டுபிடிப்பது என யோசித்தான். மீண்டும் தன் வீட்டுக்குச் சென்று அந்த வீட்டின் ஜன்னலைக் கவனித்தான். எதுவும் சலனம் இல்லாமல் இருந்தது. அவனுக்கு அந்த வீட்டில் கொலை நடந்திருப்பதாகவே பட்டது. மீண்டும் அந்த வீட்டுக்குப் போனான். கதவைத் தட்டாமல் ஒரு முறை வீட்டைச் சுற்றி வந்தான். அந்த வீட்டின் அருகில் ஒரு மரம் இருந்தது. அதில் ஏறிப் பார்த்தான். கட்டிலில் அந்தப் பெண் தாறுமாறாகக் கிடந்தாள். பக்கத்தில் தன்னுடன் பேசியவன் கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்தான். தன்னுடன் பேசியது யாராக இருக்கும் என நினைத்த அவனுக்கு அச்சத்தில் வியர்வை ஊற்றியது. மரத்திலிருந்து குதித்து தலைதெறிக்க வீடு வந்து சேர்ந்தான். 

Monday 25 October 2021

குறுங்கதைகள்-மீன்





அவன் அந்த அழகிய மீனைத் தொட்டியுடன் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்தான். அது இன்னும் வளரும் என்பதால் பெரிய தொட்டியாக வாங்கிவிட்டான். அந்த மீனை வளர்ப்பது குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டான். வீட்டுக்குக் கொண்டு வைத்தப் பின் அதன் குணாம்சம் மாறியது. அவனைக் கண்டால் அதற்குப் பிடிக்கவில்லை. அவன் தொட்டியில் தண்ணீர் மாற்றுவது உணவு வைப்பது போன்ற எல்லா வேலைகளையும் செய்து வந்தான். ஒரு நாள் மீன் அவனிடம் பேசியது. நீயாகப் பிறந்திருக்க வேண்டிய என்னைத் தந்திரமாக மீனாகப் பிறக்கச் செய்துவிட்டு மீனாகப் பிறந்திருக்க வேண்டிய நீ என்னை ஏமாற்றிவிட்டாய். உன்னை நான் விடப் போவதில்லை என்றது மீன். என்ன செய்யப் போகிறாய்  என்று கேட்டான் அவன். பொறுத்திருந்து பார் என்றது மீன். அவனுடைய நண்பன் ஒரு நாள் அவன் வீட்டுக்கு வந்திருந்தான். அந்த மீனின் அழகில் மயங்கி அதனைத் தன் வீட்டுக்கு எடுத்துப் போவதாகக் கூறினான். உடனே அதற்குச் சம்மதித்து மீனை எடுத்துக் கொடுத்துவிட்டான். அந்த மீனை எடுத்துப் பாத்திரத்தில் போட்டான் நண்பன். மீன் பேசியது. உன்னிடம் ஓர் உதவி தேவை என்றது. அவனுக்கு மீன் பேசுவது ஆச்சரியமாக இருந்ததால் என்ன செய்யவேண்டும்  என்றான் நண்பன். என்னை வெட்டி குழம்பாக்கி உன் நண்பனிடம் கொண்டு போய்க் கொடுக்கவேண்டும் என்றது. அதற்கு அவனும் ஒத்துக் கொண்டான். மீன் குழம்பு செய்து எடுத்துப் போய் அவனிடம் கொடுத்தான். தான் வளர்த்த மீன் தன்னை பழி வாங்கப் போவதாகச் சொன்னது. இப்போது குழம்பாகி வந்திருக்கிறது  என உற்சாகத்தோடு அதனைச் சாப்பிட்டான். உள்ளே போன மீன் சொன்னது என்னை உண்டதால் நீ மீனாகவும் நான் நீயாகவும் ஆகப்போகிறோம். இது புரியாமல் என்னை நீ உண்டுவிட்டாய் என்றது. அவனுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. காலியாக இருந்த மீன் தொட்டியில் இறங்கிப்படுத்துக் கொள்ளவேண்டும் போல் அவனுக்கு இருந்தது. அதில் இறங்கியவுடன் அவன் மீனாகிவிட்டான். அவனிலிருந்து பிரிந்த மீன் மனிதனாகி மீனாகிவிட்ட அவனை வளர்த்தது.  

Sunday 24 October 2021

குறுங்கதைகள்-பொம்மை உலகம்





சிறுமிக்கு அவளுடைய பெற்றோர்கள் ஏராளமான பொம்மைகளை வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அவளுக்கு அதில் சுவாரஸ்யம் ஏற்படவில்லை. அவளுக்கு மேலும் உற்சாகமூட்டும் விளையாட்டுத் தேவைப்பட்டது. ஒரு நாள் சர்க்கஸ் பார்க்கப் போனாள். அதில் வந்த கோமாளியை அவளுக்கு மிகவும் பிடித்தது. வீட்டுக்குப் போய் கோமாளியின் ஓவியத்தை வரைந்தாள். அது உயிருடன் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தாள். உடனே அது உயிர் பெற்றுவிட்டது. ஆனால் அவள் எந்த அளவு சிறியதாக வரைந்திருந்தாளோ அதே அளவுக்கான சிறிய கோமாளியாக உயிர் பெற்றது. அதைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சினாள். அந்தக் கோமாளி தனியாக இருந்ததால் அதனுடன் விளையாட ஒரு குட்டியானையை வரைந்தாள் அதுவும் உயிர் பெற்றது. கோமாளி குட்டியானையுடன் விளையாடினான். அதைப் பார்த்து சிறுமி குதூகலித்தாள். கோமாளியையும் குட்டியானையையும் ஒரு கூடையில் போட்டு மூடி வைத்தாள். பள்ளிக்குச் சென்று வந்து அவர்களுடன் விளையாடினாள். ஒரு நாள் கோமாளி காணாமல் போனான். அவள் வீடெல்லாமல் தேடினாள். கிடைக்கவில்லை. ஒருவேளை அந்த சர்க்கஸுக்குப் போய்விட்டானோ என அங்கே சென்று பார்த்தாள். கோமாளி அங்கு இருந்தான். அவனை அழைத்தாள். அவள் உடன் மறுத்தான். அவளுக்கு என்ன செய்வதென்று புரியாமல் வீட்டுக்கு வந்து புதிதாக ஒரு கோமாளியை வரைந்தாள். அது உயிர் பெற்றது. குட்டியானையுடன் அந்த கோமாளியும் விளையாடினான். முன்பிருந்த கோமாளி போல் அவனும் சர்க்கஸுக்குப் போய்விடுவானா என்று கேட்டாள். அவளுடன் விளையாடுவதால் என்ன பயன் என்று கோமாளி கேட்டான். சர்க்கஸுக்குச் சென்றால் பணமும் பாராட்டும் கிடைக்கும் என்றான். தானும் அந்தக் குட்டியானையைத் தூக்கிக் கொண்டு சர்க்கஸுக்குப் போக விரும்புவதாகச் சொன்னான். அவனையும் குட்டியானையையும் மீண்டும் ஓவியமாக்கினாள் சிறுமி. 

குறுங்கதைகள்-நகர்வு


 



அன்று காட்டில் அவள் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒன்று அவளைப் பிடித்து உலுக்கியது போல் இருந்தது. அவளால் நிற்கவே முடியவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டாள். அவள் நின்றிருந்த நிலப்பகுதி நகரத் தொடங்கியது. அந்த இடத்தில் அவளைத் தவிர வேறுயாரும் இல்லை. கீழே கிடந்திருந்தப் பழங்களை எடுத்துச் சாப்பிட்டாள். நிலம் மெதுவாக நகரும் படகு போல் நகர்ந்துகொண்டிருந்தது. அருகில் இருந்த கடலில் போய்ச் சேர்ந்தது. கடலில் மிதந்துகொண்டே சென்றது. அலைகளின் சீற்றம் அந்த நிலப்பகுதியை எதுவும் செய்யவில்லை. அந்தப் பகுதியில் இருந்த பழங்களும் கிழங்குகளும் மட்டுமே அவளுக்குப் போதுமானவையாக இருந்தன. ஆங்காங்கே தோன்றிய ஊற்றுகளிலிருந்து நீரை எடுத்துப் பருகினாள். இந்த நிலம் நிற்குமா இப்படியே பயணிக்குமா என யோசித்தாள். நிலத்தின் மீது நடப்பது சிரமமாக இருந்தது. மெதுவாக நகர்ந்து சென்று வேறு யாராவது அதில் இருக்கிறார்களா எனத் தேடினாள். யாரும் இல்லாத தனித் தீவு அது எனப் புரிந்துகொண்டாள். அந்தத் தனித்தீவின் ஒரே உரிமையாளர் தான் மட்டுமே என நினைத்து மகிழ்ந்தாள். ஆனால் இதை யாரிடமும் சொல்லி மகிழ்வதற்கு வழியில்லாமல் போய்விட்டதே என நொந்து கொண்டாள். தூரத்தில் மலைகள் தெரிந்தன. இந்த நிலப்பகுதி அங்கு போகுமா என நினைத்தாள். மழையும் பனியும் பொழிந்து கொண்டிருந்தன. வெயிலும் குளிரும் அவளைப் பெரிதாக வாட்டவில்லை. அந்த நிலப்பகுதி நகராமல் நிற்கவேண்டும் என்பது மட்டுமே அவளது எண்ணமாக இருந்தது. அப்படியே நின்றாலும் அங்கிருக்கும் மக்கள் தன்னை ஏற்பார்களா என்று சந்தேகம் கொண்டாள். இப்படி நகரும் நிலத்தில் வாழ்வதுதான் இனி இயற்கையின் விதி என்றால் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என நினைத்து அமைதியானாள். தூரத்தில் தெரிந்த மலைகள் இப்போது அருகே தெரிந்தன. மெதுவாக அந்த நிலம் மலைகளில் மோதி நின்றுவிட்டது.. அவள் அந்த மலையின் மீது ஏறினாள். உச்சிக்கு வந்து பார்த்தாள். அப்போது அவள் வந்த நிலம் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கீழே பார்த்தாள் ஒரு நகரம் தெரிந்தது. அங்கு போனாள். நகரும் நிலத்தில் அவள் அங்கு வந்து சேர்ந்ததாகச் சொன்னாள். அவள் மனநிலை பாதிக்கப்பட்டப் பெண் என எண்ணி அவளைக் காப்பகத்தில் சேர்த்தார்கள். சில நாட்களில் பெரிய நிலநடுக்கம் வந்தது. அவள் இருந்த பகுதி நகரத் தொடங்கியது. 

Saturday 23 October 2021

குறுங்கதைகள்-குறை





அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் மூளை வளர்ச்சி இல்லாத சிறுவன் ஒருவன் அந்த வீட்டின் ஜன்னலிலிருந்து அவன் வரைந்த பூவைக் காட்டுவான். அந்தப் பூவின் நிறத்தை வைத்து அன்று நடக்கப் போவதை அவள் ஊகிப்பாள். மஞ்சள் என்றால் மங்கலம், சிவப்பு என்றால் கோபம், பச்சை என்றால் பழைய நினைவுகள், நீலம் என்றால் நீர் போன்ற குளுமையான செய்திகள் இப்படி நிறத்திற்குத் தக்கவாறு ஊகிப்பாள். திரும்பி வரும்போது தான் அந்த பூவைக் கண்டு எண்ணியது அப்படியே நடந்துவிட்டது என்பதற்காக அவனைப் பார்த்து கையசைப்பாள். இது அவனுக்குப் பெரும் உற்சாகத்தைத் தரும். தினமும் நடப்பது இது. ஒரு நாள் அவனைக் காணவில்லை என்றால் கூட குழப்பமடைந்துவிடுவாள். பள்ளி இறுதிப் படிப்பு வரை இந்த விளையாட்டுத் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவன் காட்டிய பூக்களின் நிறங்கள்தான் அவளை ஊக்கப்படுத்தி நல்ல மதிப்பெண்கள் வாங்க வைத்தன என அவள் நம்பினாள். மருத்துவப் படிப்பில் சேர்ந்தாள். அப்போதும் பூக்களின் ஓவியங்களை அவனும் வரைந்து காட்டுவான். இவளும் கையசைப்பாள். மருத்துவப் படிப்பு முடியும் வரை இந்தப் பரிமாற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தது. பூக்களோடு இப்போது வண்ணத்துப் பூச்சிகளையும் அவன் வரைந்தான். அவளுக்கு அவையும் பல செய்திகளைக் கொடுத்தன. மருத்துவப் படிப்பு முடிந்து மூளை வளர்ச்சி திறன் குறைபாடு குறித்த சிறப்புத் துறையில் மேல் படிப்பு படித்தாள். அத்துடன் அந்தக் குறைபாட்டுக்குக் காரணமான மரபணுக்களைக் கண்டுபிடித்து அவற்றைத் திருத்துவது குறித்தும் அவைப் பரம்பரையில் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் ஆய்வு செய்து தீர்வு கண்டுபிடித்தாள். அது ஏற்கப்படும் நாள் அவன் என்ன நிற பூவைக் காட்டுவான் என்று அவள் ஆவலாகப் பார்த்தாள். அவன் கறுப்பு நிறத்தைக் காட்டினான். அது வரைக் கறுப்பு நிறத்தில் அவன் எதையுமே வரைந்ததில்லை. அன்று கறுப்பு நிறத்தைக் காட்டியது அவளுக்கு அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருந்தது. அவள் ஆய்வு அங்கீகரிக்கப்பட்டது. அன்று அவன் வீட்டுக்குச் சென்று அவனுக்கு நன்றி சொல்லி அவனை அழைத்துச் சென்று ஏதாவது நல்ல பரிசை வாங்கித் தரவேண்டும் என எண்ணி அவள் வீட்டுக்குப் போனாள். அவன் வீட்டிற்கு வெளியே பலரும் நின்றிருந்தார்கள். அவன் இறந்துபோயிருந்தான். கறுப்பு மலரின் பொருள் அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. 

Thursday 21 October 2021

குறுங்கதைகள்-வேட்டை





அவன் காட்டிற்குச் சென்று இறந்து கிடக்கும் விலங்குகளை எடுத்து வந்து புடம் போட்டு அவன் வீட்டின் அடுப்பகுதியில் வைத்துவிடுவான். அதுவும் இதுவரைக் கண்டிராத விலங்குகளை மட்டுமே எடுத்து வருவான். அதனால் அவை எப்போதாவதுதான் அவனுக்குக் கிடைத்தன. பறவைகள், பாம்புகள், போன்றவற்றையும் எடுத்துவந்திருக்கிறான். அன்று அவனுக்குக் கிடைத்தது ஓர் அதிசயமான உயிரினம். மனித உடலும் சிங்கத்தின் தலையும் வேறு ஏதோ பெயர் தெரியாத விலங்கின் முகமும் கொண்ட உயிரினம். அது மனிதனா என அவன் திருப்பித் திருப்பி ஆராய்ந்தான். ஆனால் அந்த உயிரினம் மனித உடலை மட்டுமே கொண்டிருந்தது. தலையிலிருந்து கழுத்து வரை வேறு ஏதோ உயிரினம்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். அதை வீட்டுக்கு எடுத்துவந்தான். அதைப் புடம் போட்டு வீட்டின் அடிப்பகுதியில் ஒரு பீடத்தின் மீது ஏற்றி நிற்கவைத்தான். அதனைச் சுற்றி மற்ற விலங்குகளை அடுக்கினான். மேலே பறவைகள் இந்தக் காட்சியைப் பார்ப்பது போல் வைத்துவிட்டு தன் அறைக்கு வந்து தூங்கிப் போனான். நள்ளிரவில் வீட்டின் அடிப்பகுதியில் ஏதோ வித்தியாசமான ஒலி கேட்டது. தன் கனவில் வரும் ஒலி என எண்ணித் தூங்கிப் போனான். காலையில் எழுந்து அடிப்பகுதிக்குச் சென்று பார்த்தான். பெரிய எலி போன்ற ஒரு விலங்கை வைத்திருந்தான். அது காணாமல் போயிருந்தது. பல இடங்களில் தேடினான். கிடைக்கவில்லை. ஏன் இப்படி நடந்தது என உறுத்திக் கொண்டே இருந்தது. அன்று இரவும் அதை எண்ணியபடியே தூங்கிவிட்டான். நள்ளிரவில் மீண்டும் அதே போன்ற ஒலி அடிப்பகுயில் இருந்து வந்தது. எழுந்து அமர்ந்து கூர்ந்து கேட்டான். விலங்குகள் ஓடுவது போல் கேட்டது. ஏதோ ஒரு விலங்கு ஓலமிடுவது போல் இருந்தது. அதன் பின் எல்லாம் அமைதியாகிவிட்டது. கீழே சென்றுபார்க்க அச்சமாக இருந்ததால் அமைதியாகப் படுத்து உறங்கிப் போனான். அடுத்த நாள் கீழே போய்ப் பார்த்தான். மற்றொரு கொம்பு முளைத்த குதிரை போன்ற ஒரு விலங்கு காணாமல் போயிருந்தது. இவனுக்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அன்றிரவு உறங்காமலேயே அமர்ந்திருந்தான். அறையில் மங்கலான வெளிச்சம் இருந்தது. அவன் அறைக் கதவு திறந்தது. அந்த மனிதனும் விலங்கும் இல்லாத உயிரினம் அவன் அறைக்குள் நுழைந்தது. அவன் அச்சத்தில் உறைந்து மயங்கிப் போனான். அடுத்தநாள் அந்த விலங்கு நின்றிருந்த பீடத்தில் அவன் உடல் நின்றிருந்தது. 

Wednesday 20 October 2021

குறுங்கதைகள்-வயது





அவள் மிகவும் முதுமை அடைந்துவிட்டதால் வேறு யாரும் ஆதவுக்கு இல்லை என்ற எண்ணத்தில் ஓர் இல்லம் தேடிப் போய்ச் சேர்ந்துவிட்டாள். அந்த இல்லத்தில் இருக்கும் போது எப்போதும் போல படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் தன்னுடைய வேலைகளைச் செய்துகொண்டும் இருந்தாள். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாதத்தில் அவளது தோற்றம் நடுத்தர வயதைத் தொட்டிருந்தது. அந்த இடத்தில் அவளுக்குப் பிடித்தமான அம்சங்கள் இருந்ததால் அவளது தோற்றத்தில் இளமை வந்துவிட்டது என நினைத்தாள். இன்னும் சில காலத்தில் அவள் தோற்றம் இன்னும் இளமையாகிவிட்டது. நரை மறைந்துவிட்டது. உதிர்ந்த கேசம் வளர்ந்துவிட்டது. அவளுக்குக் குழப்பமாக இருந்தது. அந்த இடத்தை விட்டு வேறிடம் செல்லலாம் என முடிவெடுத்தாள். அடுத்த நாள் வேறிடத்திற்குச் சென்றுவிட்டாள். அங்கு அவளைப் பார்த்தவர்கள் அவள் குறிப்பிடும் வயதிற்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை என சந்தேக்கத்துடன் பார்த்தார்கள். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தாள். அப்போது அவள் கல்லூரிக்குச் செல்லும் பெண் போல் ஆகியிருந்தாள். தனக்கு ஏன் இப்படி நேர்ந்திருக்கிறது என அறிய பல மருத்துவர்களை நாடினாள். முதுமையிலிருந்து இளமைக்குத் திரும்பும் தலைகீழ் வளர்சிதை மாற்றம் கொண்ட மரபணு அவள் உடலில் இருப்பதாகவும் அதன் காரணமாக இந்த இளமை அவளுக்குக் கிடைத்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இதை நிறுத்த முடியாது எனவும் அவர்கள் சொல்லிவிட்டார்கள். இவளுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. அடுத்த சில நாட்களில் அவள் பள்ளி செல்லும் சிறுமியாகிவிட்டாள். இப்போது என்ன செய்வது எனப் புரியாமல் தத்தளித்தாள். ஒரு நாள் ரயில் நிலையம் சென்று அமர்ந்திருந்தாள். இரவு நடமாட்டம் இல்லாத போது இவள் குழந்தையாகி வீறிட்டு அழத் தொடங்கினாள்.

 

Tuesday 19 October 2021

குறுங்கதைகள்-கண்ணாடி மாளிகை





அவள் ஓர் இடத்தில் கண்ணாடி மாளிகை இருப்பதாக அறிந்து அதைப் பார்க்கும் ஆவலில் அங்குப் போய்ச் சேர்ந்திருந்தாள். அதைக் காவல் காப்பவர் அதற்குள் சென்றுவிட்டால் வெளியே வருவது கடினம் எனவே அங்கு யாரும் உள்ளே போவதில்லை என்று கூறினார். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. உள்ளே நுழையும் கதவைத் திறந்தவுடன் அந்த அறைக்குள் மேலிருந்து கீழ் வரை கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்ததால் அவளது பிம்பத்தைக் காட்டின. அவள் நுழைந்தவுடன் அவளுக்குப் பின்புறம் அந்தக் கதவு சாத்திக்கொண்டது. அதிலும் உட்புறம் கண்ணாடி இருந்தது. அவள் மெதுவாக நகர்ந்தாள். அவள் பிம்பங்களும் நகர்ந்தன. ஒவ்வொரு கண்ணாடியாகத் தள்ளிப் பார்த்தாள். ஒன்று திறந்தது. அது மற்றொரு அறையாக இருந்தது. அதிலும் கண்ணாடிகள் மட்டுமே இருந்தன. அந்த அறையிலும் மெதுவாக எல்லா கண்ணாடிகளையும் தள்ளிப் பார்த்து மற்றொரு அறைக்கு வந்தாள். அதுவும் கண்ணாடிகளால் நிரம்பியிருந்தது. இப்படி எல்லா அறைகளிலும் கண்ணாடிகள் மட்டுமே காணப்பட்டன. எல்லாவற்றிலும் அவள் பிம்பங்கள் எதிரொளித்தன. இதில் பெரிய சுவாரஸ்யம் இல்லை என நினைத்த அவள் வெளியே போக எத்தனித்தாள். அறைக் கதவுகளைத் தேடித் தேடி திறந்தாள். அவை எல்லாம் மற்றொரு அறையில் மட்டுமே திறந்தன. வெளியில் போகும் வழி தென்படவில்லை. எப்படி வெளியே போவது எனத் தெரியாமல் அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. முதலில் அந்த அமைப்பைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என நினைத்தாள். ஓர் அறைக்குள் நுழைந்து அந்தக் கதவைத் திறந்து வைத்தாள். அந்த அறையில் இருக்கும் மற்றொரு கதவைத் திறந்தாள். அந்த இரண்டு கதவுகளைத் தவிர மூன்றாவது ஒரு கதவு இருக்கும் ஓர் அறை இருக்கிறது. அந்த அறையைக் கண்டுபிடித்தால் வெளியே போகலாம் எனப் புரிந்தது. இப்படி எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்துக் கொண்டே வந்து ஓர் அறையில் மூன்றாவது கதவு இருப்பதை அறிந்து அதைத் திறந்தாள். அது மீண்டும் மற்றொர் அறையில்தான் திறந்தது. அதில் நுழையாமல் இது போல் மூன்று கதவுள்ள அறைகளைத் தேடினாள். அவற்றுக்குள் நுழைந்தால் கண்ணாடி மாளிகையின் மிகவும் உட்புறம் போகவேண்டியிருக்கும் எனப் புரிந்துகொண்டாள்.  ஒரு குறிப்பிட்ட கணக்கில் மூன்று கதவுள்ள அறைகள் இருந்தன. அவை எல்லாமே கண்ணாடி மாளிகையின் உட்புற வழிகளாக இருந்தன. அவற்றைத் தவிர்த்து நான்காவது கதவுள்ள அறையைத் தேடினாள். அப்படியே சுற்றி வந்தாள். மிகவும் களைப்புற்று ஒரு கண்ணாடி மீது சாய்ந்தாள். அந்தக் கதவு வெளியே போவதற்கான வழியாகத் திறந்தது. 

Monday 18 October 2021

குறுங்கதைகள்-சொர்க்கம்





அந்தக் குழந்தை தவழ்ந்து தக்காளிச் செடி அருகே வந்தது. ஒரு தக்காளியைப் பறித்தது. அந்தப் பழம் குழந்தையின் நழுவிக் கீழே விழுந்தது. குழந்தை அதை மீண்டும் எடுக்கப் போனது. அப்போது தக்காளி நடக்கத் தொடங்கியது. குழந்தை மீண்டும் தக்காளியைப் பின் தொடர்ந்தது. தக்காளி வேகமாக நடந்தது. அழகான ஒரு சோலைக்குள் நுழைந்தது. குழந்தை வருகிறதா என்று பார்த்தது. குழந்தை அங்கும் வந்துவிட்டது. சோலையில் ஒரு பெரிய நாவல் மரம் இருந்தது. அதன் கீழே நாவல் பழங்கள் கொட்டிக் கிடந்தன. தக்காளி அதை எடுத்து குழந்தைக்குக் கொடுத்தது. குழந்தை அதைச் சுவைத்துப் பார்த்துச் சிரித்தது. சோலைக்குள் தக்காளி குழந்தையுடன் சுற்றி வந்தது. அங்கே ஒரு நரி படுத்திருந்தது. குழந்தை வருவதைப் பார்த்து தனது தீய எண்ணத்திற்கு ஊக்கம் கொடுத்தது. தக்காளி இதைக் கவனித்துவிட்டது. நரியிடம் சென்று குழந்தையை நரி நன்றாகப் பார்த்துக் கொண்டால் அது சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்றது தக்காளி. சொர்க்கத்தில் என்ன இருக்கிறது என்றது நரி. அதற்குத் தேவையான உணவு. நட்புடன் பழக பிற நரிகள். அது ஏமாற்றித் திரிய பிற விலங்குகள் எல்லாமே இருக்கின்றன என்றது தக்காளி. அதன் பேச்சை எப்படி நம்புவது என்றது நரி. தக்காளி அந்த நாவல் மரத்தின் மீது ஏறி கீழே குதித்தால் நம்புவதாக நரி சொன்னது. தக்காளி மரத்தின் மீது ஏறி கீழே குதித்தது. எந்தச் சேதாரமும் இல்லாமல் குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகவும் அதற்கு ஈடாகத் தனக்குச் சொர்க்கத்தைத் தக்காளிப் பெற்றுத் தரவேண்டும் என்றது நரி. சில நாட்கள் நகர்ந்தன. நரி குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொண்டது. இருந்தாலும் இந்தக் குழந்தையை வளர்த்து என்ன பயன் தான் எப்போதோ அனுபவிக்கப் போகும் சொர்க்கத்திற்காக இப்போதே நல்ல நரியாக ஏன் இருக்கவேண்டும் என எண்ணியது. தக்காளி அதனிடம் தீய எண்ணம் தலைதூக்குவதைப் புரிந்துகொண்டது. நரி இப்போதே சொர்க்கத்திற்குப் போய்விட்டுத் திரும்பவும் இங்கே வரலாம் என்றது தக்காளி. அது எப்படி நடக்கும் என்றது நரி. ஒரு முட்புதரைக் காட்டி இதற்குள் நுழைந்து மறுபக்கம் வந்தால் நடக்கும் எனக் கூறியது தக்காளி. அதற்குள் நுழைந்த நரி சொர்க்கத்திற்குப் போய்ச் சேர்ந்தது. மறுபக்கம் வரவே இல்லை.


 

 

Sunday 17 October 2021

குறுங்கதைகள்-நட்பு

 




அவன் வாகனம் பழுதானதால் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். இரவு வேளை யாரும் நடக்காத இடத்தில் ஒருவன் நின்றுகொண்டிருப்பது தூரத்திலிருந்து தெரிந்தது இவனுக்குக் கிலேசத்தைக் கொடுத்தது. இவன் மெதுவாக நடந்தான். அவன் இவனருகே வந்தான். இவனிடம் வந்து பள்ளியில் படித்த நண்பன்தானே என்று கேட்டான். இவனுக்கும் அவனை அடையாளம் தெரிந்தது. இருவரும் பேசிக் கொண்டே நடந்தார்கள். அவன் குடும்பத்தைப் பற்றி இவன் விசாரித்தான். தனது குடும்பம் ஒரு வாகன விபத்தில் சமீபத்தில் இறந்துவிட்டதாகவும் தான் மட்டும் தப்பியதாகவும் சொன்னான். சுடுகாடு அருகில் வந்தவுடன் தான் புறப்படுவதாகவும் பிறகு சந்திப்பதாகவும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். சமீபத்தில்தான் இவனும் குடித்துவிட்டு இரவில் ஓட்டியதில் ஒரு வாகனம் இவன் மீது மோதாமல் இருக்க ஒரு பெரிய விபத்தில் சிக்கி சின்னாபின்னமானது. இவன்தான் அந்த விபத்துக் காரணம் என்பது இதுவரை வெளியாகவில்லை. இவனும் அது பற்றிப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குடித்துவிட்டு தாறுமாறாக ஓட்டியதும் இவனுக்கு மறந்துவிட்டது. அடுத்த நாளும் இரவு நேரத்தில் அவன் அதே இடத்தில் நின்றிருந்தான். இருவரும் பேசிக் கொண்டே நடந்தார்கள். ஒரு வாரமாக இது ஒரு வழக்கமாகியது. இரு நாட்களில் தனது வாகனம் வந்துவிடும் எனவும் அடுத்தநாள் மட்டுமே இப்படி தான் வரப் போவதாக இவன் அவனிடம் சொன்னான். அடுத்தநாள் இவன் நடந்து வரும்போது அவனைக் காணவில்லை. அவன் நிற்கும் இடத்தில் வந்து இவன் சிறிது நேரம் நின்றான். அவன் வரவில்லை. இவன் கிளம்பிவிட்டான். அவனிடம் தொடர்பு எண் வாங்காதது தவறு என எண்ணிக் கொண்டான். சுடுகாடு அருகே சென்று பார்த்தான். அந்தப் பக்கம் எந்தத் தெருவும் வீடும் இல்லை. அவன் எந்தப் பக்கம் போகிறான் என இதுவரை தான் அறிந்துகொள்ளவில்லையே என நொந்து கொண்டான். அன்று அவனைக் காணாதது பெரும் குறையாக இருந்தது. அவனை எப்படிச் சந்திப்பது என எண்ணிப் பார்த்தான். அடுத்த நாள் அவனைச் சந்தித்து அவன் வீட்டு முகவரி வாங்கவேண்டும் என உறுதி செய்துகொண்டான். வேகமாக நடந்து சுடுகாடு அருகே வந்தான். அப்போது சுடுகாட்டின் கதவுகள் திறந்தன. அவன் வெளியே வந்தான். எப்போதும் இருப்பதை விட அதிக உயரமாக இருந்தான்.  கையில் ரத்தம் வழிந்தது. கண்கள் தீ போல் இருந்தன. இவனைப் பார்த்து அவன் சிரித்தச் சிரிப்பில் அந்தப் பகுதியே அதிர்வது போல் உணர்ந்தான். இவனருகே அவன் வந்தான். இவன் ஓடத் தொடங்கினான். அவன் பின் தொடர்ந்தான். எதிரில் ஒரு மின்விளக்குக் கம்பம் இருப்பது தெரியாமல் போய் இவன் அதில் மோதி கீழே விழுந்து இறந்தான்.

 

 

குறுங்கதைகள்-விளையாட்டு





அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தாள் அவள். பல சாதனைகளைச் செய்து மலை மீதிருக்கும் விளக்கை எடுத்து வருவதற்கான விளையாட்டு அது. அதில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பெண் இடையில் வந்த தடையில் வீழ்ந்துவிட்டாள். அலைபேசி இவளை அந்த ஓட்டத்தைத் தொடருமாறு கூறியது. இவள் அந்த ஓட்டத்தில் புகுந்தாள். எப்படியோ பல தடைகளைக் கடந்து மலை வரை முன்னேறிவிட்டாள். கீழே விழுந்த பெண் எழுந்து சமாளித்து வந்து மலை வரை வந்துவிட்டாள். இவளுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே பலத்த போட்டி எழுந்தது. அலைபேசி அந்தப் பெண்ணை ஆதரித்தது. இது நியாயமற்றது என்றாள் இவள். அலைபேசி கண்டு கொள்ளவில்லை. இவளும் வேகமாக மலை ஏறினாள். அந்தப் பெண்ணுக்கு ஓரளவு எளிமையான தடைகள் வந்தன. இவளுக்கு அதிகக் கடினமானத் தடைகள் வந்தன. இருவரும் ஒரே நேரத்தில் மலை உச்சிக்கு வந்து சேர முடிந்தது. மலை உச்சியில் இருந்த விளக்கை இருவரும் தொடமுடியாத படி இருந்தது. இவளுக்கு ஆற்றாமையாக வந்தது. இதுவரை அந்த விளையாட்டில் இருந்த சவால்களை விடுத்துப் புதிய சவால்களை அலைபேசி கொடுக்கத் தொடங்கியது. அவற்றில் வெற்றி பெற்றாலும் விளக்கை இருவராலும் தொடமுடியவில்லை. இறுதியில் விளையாட்டிலிருந்து பின் வாங்க விரும்புகிறீர்களா என அலைபேசி கேட்டது. இருவருமே அமைதி காத்தார்கள். சவால்கள் தீர்ந்துவிட்டன. விளக்கு இருவருக்குமே இல்லை. மீண்டும் முதலிலிருந்து தொடங்கி விளையாடலாம். அப்போது விளக்கு யாராவது ஒருவருக்குக் கிடைக்கும் என்றது. இவளால் அந்த அநியாயத்தை ஏற்க முடியவில்லை. அதில் மக்கள் தொடர்பு பக்கத்திற்குச் சென்று புகார் எழுப்பினாள். இனி இது போன்ற அநியாயம் நடக்காது என  பதில் வந்தது. இப்போது இந்த விளையாட்டைத் தனக்குச் சாதகமாக்கவேண்டும் என்றாள். அது முடியாது என பதில் வந்தது. என்ன காரணம் எனத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றாள். அலைபேசியில் இருக்கும் விளையாட்டில் எல்லா சவால்களையும் முறியடித்துவிட்டால் அப்படிச் செய்திருப்பது அலைபேசியின் கணினியைவிட அதிக சக்தி வாய்ந்த கணினி என அலைபேசி புரிந்துகொண்டுவிடும். அதனால் விளையாட்டை நிறுத்திவிடும். இப்போது அதுதான் ஆகியிருக்கிறது என பதில் வந்தது. அலைபேசியில் அந்த விளையாட்டை அவள் நீக்கினாள்.

Saturday 16 October 2021

குறுங்கதைகள்-காற்று





அவன் காற்றில் கரைந்து சில காலம் ஆகியிருந்தது. தனக்குத் தேவையான பொருட்களைத் தேவையான இடங்களுக்குச் சென்று எடுத்துக் கொள்வான். யாருக்கும் அவன் வந்து போனச் சுவடே தெரியாது. அன்றாடம் தேவையானவற்றை இப்படி மறைந்திருந்து எடுத்துக் கொள்வதில் எந்தச் சிரமத்தையும் அவன் அனுபவிக்கவில்லை. அவனுக்கு விருப்பமிருந்தால் எந்த வாகனத்திலும் பயணம் செய்வான். இப்படி இருப்பது அவனுக்குள் சலிப்பை ஏற்படுத்தியது. தன் இருப்பை எல்லோருக்கும் காட்டி மிரள வைக்கவேண்டும் அப்போதுதான் ஓர் உற்சாகம் கிடைக்கும் என நினைத்தான். அப்போது அவன் ஒரு வீட்டைக் கடந்துகொண்டிருந்தான். அந்த வீட்டில் ஒரு குழந்தை அழும் குரல் கேட்டது. உள்ளே போனான். அந்தக் குழந்தை இவனைப் பார்த்தவுடன் சிரித்து கையாட்டியது. இவன் துணுக்குற்றான். யாரும் தன்னைக் காண முடியாத போது இந்தக் குழந்தை மட்டும் எப்படித் தன்னை அடையாளம் கண்டுகொண்டது என நினைத்தான். அந்தக் குழந்தையின் விளையாட்டு பொம்மைகளை இயக்கினான். குழந்தை அமைதியாக இருந்தது. ஒரு விமான பொம்மையை இயக்கிய போது குழந்தை குதூகலித்தது. பல கடைகளுக்கும் சென்று விமான பொம்மைகளை வாங்கிவந்தான். குழந்தை வளர்ந்தான். பல குட்டி விமானங்களை வடிவமைத்து இயக்குவதில் திறமையானவனாக இருந்தான். விமான ஓட்டியாகவும் அவன் ஆகிவிட்டான். இத்தனைக்கும் காற்றில் கரைந்திருந்த அவன்தான் காரணம் என்றாலும் அவன் அதை வெளிப்படுத்தவே இல்லை. விமான ஓட்டியான அந்த இளைஞன் விண்வெளிக்குப் போகும் வாகனத்தை வடிவமைத்து சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள இருந்தான். காற்றில் மறைந்திருக்கும் இவன் வெளிப்பட சரியான தருணம் அதுதான் என நினைத்தான். விண்வெளி ஓடம் கிளம்பியது. விண்வெளியில் அந்த இளைஞனின் உடலில் புகுந்து விடலாம் என இவன் திட்டமிட்டான். விண்வெளியில் பறந்து கொண்டிருந்த போது அதில் இருந்த மற்றொரு குட்டி விமானத்தில் ஏறிய அந்த இளைஞன் தான் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கப் போவதாகவும் அந்த விண்வெளி ஓடத்தில் அமர்ந்து தன் வடிவத்தில் அவனைத் திரும்பி வந்த வழியில் செல்லுமாறும் கூறிவிட்டான். இனி அவனைப் போல் காற்றில் கரைந்து தான் இருக்கப் போவதாகவும் சொல்லிவிட்டு அந்தக் குட்டி விமானத்தில் பறந்து சென்றுவிட்டான். 

Thursday 14 October 2021

குறுங்கதைகள்-தற்கொலை






அவள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாள். எந்த வழிமுறையில் சாவது என பலமுறை யோசித்தாள். தூக்கில் தொங்குவது சுலபம்தான். ஆனால் சரியாக முடிச்சு விழாமல் உயிர் போகாமல் பெரும் சிக்கலாகிவிடும். அதனால் அது சரியில்லை எனத் தோன்றியது. கடலில் மூழ்கிவிடலாம். அதில் காப்பாற்றப்பட்டால் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியிருக்கும். தூக்கமாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஓரளவு மரணம் நிச்சயம். அவற்றை எப்படி வாங்குவது என சிந்தித்தாள். இரண்டு இரண்டாக பல கடைகளில் வாங்கி சேகரிக்கவேண்டும். அதற்கு நாளாகிவிடும். தற்கொலை எண்ணம் போய்விடும். முயற்சி வீணாகிவிடும். தீ வைத்துக் கொள்ளலாம். வீடே தீ பிடித்துவிட்டால் பலரும் சிரமப்படுவார்கள். மாடியிலிருந்து குதிக்கலாம். கை, கால் உடைந்து உயிர் பிழைத்துவிட்டால் காலமெல்லாம் யாராவது கவனித்துக் கொள்ளும்படி ஆகிவிடும். இரயிலில் போய் விழுந்துவிடலாம். சாவு நிச்சயம். ஆனால் யாரும் காப்பாற்றிவிடக்கூடாது. கை நரம்புகளை வெட்டிக் கொண்டு சாகலாம். அதற்கும் அதிக நேரம் பிடிக்கும். கத்தியால் வயிற்றில் குத்திக் கொண்டு சாகலாம். கத்தி சரியாக இறங்கவிட்டால் வாழ்நாள் முழுக்க உபாதையாகிவிடும். அமிலத்தைக் குடித்துவிட்டால் செத்துவிடலாம். அது சரியாக வேலை செய்யாவிட்டால் வெறும் புண்ணாகி பெரும் அவஸ்தை ஆகிவிடும். எலி மருந்து குடிக்கலாம். வாந்தி எடுத்துவிட்டால் பாதிதான் வேலை செய்யும்.  பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும். பாம்பிடம் கடிபடலாம். அதற்காக ஒரு பாம்பைத் தேடிப் போகவேண்டும். வாகனங்கள் முன் பாயலாம். அவர்கள் ஏற்றாமல் சென்றுவிட்டால் சாக வாய்ப்பு இல்லை. யாருவதுடன் சண்டை போட்டு கொலை வெறி ஊட்டி சாகடிக்கச் செய்யலாம். அவர்கள் கொலைச் செய்யாவிட்டால் சண்டை வீணாகிவிடும். நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து சாகலாம். அதை எங்கு வாங்குவது என யோசனையாக இருந்தது. யாரையாவது கொலை செய்துவிட்டு தூக்குத் தண்டனை பெறலாம். தூக்குத் தண்டனை கிடைக்காமல் ஆயுள் தண்டனை பெற்றுவிட்டால் பெரும்பாடாகிவிடும். எனவே தற்கொலை செய்துகொள்ள வழியே இல்லை. தற்கொலை மனநிலையில் நீடித்து இருப்பதுதான் சாவுக்கு அருகில் இருப்பது போன்றது. சாவு எளிமையானது. வாழ்வதுதான் சாவுக்கு நிகரானது. அதிலிருந்து தப்பிக்கத்தான் தற்கொலை எண்ணம் வருகிறது. எனவே வாழ்ந்திருந்து சாவை அனுபவிப்போம் என முடிவெடுத்தாள். 

Wednesday 13 October 2021

குறுங்கதைகள்-பூக்களின் தேவதை





பூக்களின் தேவதை அந்தக் குடும்பத்தில் வந்து மகளாகப் பிறந்தாள். அவள் பிறந்தவுடன் அந்தக் குடும்பத்தில் மிகவும் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் அந்தக் குடும்பத்தில் தேவதைக்குத் தம்பியாக வந்து பிறந்தவன் செய்த காரியங்களால் பூக்களின் தேவதை பெரும் துயரத்திற்கு ஆளானாள். சிறு குழந்தையாக இருக்கும் போதே பூக்களைத் தின்றுவிடுவான். இல்லை எனில் கசக்கிவிடுவான். பூக்களின் தேவதைக்கு இதைப் பார்த்து கண்களில் கண்ணீர் பெருகும். அவனுக்குச் சாபம் கொடுத்து இந்தக் காரியங்களை நிறுத்தியிருப்பாள். ஆனால் அந்தக் குடும்பம் துயரப்படும் என்பதால் விட்டுவைத்திருந்தாள். ஒரு நாள் அவன் செய்த காரியம் அந்தக் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தீபாவளி அன்று பட்டாசு கொளுத்திவிட்டு செடிகளுக்கும் பூக்களுக்கும் தீவைத்துவிட்டான். பூக்களின் தேவதைக்கு இனிமேலும் பொறுத்துக் கொள்ளக்கூடாது எனத் தோன்றியது. அவன் பள்ளி செல்லத் தொடங்கினான். பூக்களின் தேவதையும் அதே பள்ளியில்தான் படித்தாள். இவள் எல்லாப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் வாங்கினாள். ஆனால் அவன் ஒரு பாடத்திலும் தேர்ச்சி அடையவில்லை. ஆசிரியர்கள் எவ்வளவு உருட்டி மிரட்டினாலும் அவனுக்குப் படிப்பு ஏறவில்லை. அவன் கவனம் எல்லாம் பூக்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றைத் துன்புறுத்துவதில் மட்டுமே இருந்தது. ஒரு நாள் அவன் கனவில் பூக்களின் தேவதைத் தோன்றினாள். இனிமேல் பூக்களை, செடிகளை, விலங்குகளை, பறவைகளைத் துன்புறுத்தினால் அவனுக்குக் கண் பார்வை போய்விடும் என எச்சரித்தாள். அடுத்த நாள் காலையில் அவன் தாயிடம் சகோதரி தன்னைக் கனவில் அச்சுறுத்துவதாகப் புகார் கூறினான். தாயும் இனிமேல் அவன் அடங்கி நடந்தால் யாரும் பயமுறுத்தமாட்டார்கள் என்றாள். ஆனாலும் சகோதரி சொன்னதை உதாசினப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அவனுள் ஆட்டிப்படைத்தது. அடுத்த நாள் பள்ளியிலிருந்து வரும் வழியில் மலை மீது ஏறி பூக்களைக் கசக்கத் தொடங்கினான். அப்போது பாம்பு போல் ஒரு பூ சீறியது. அவன் அஞ்சி வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான். அடுத்த நாளிலிருந்து அவனுக்கு ஜுரம் கடுமையாக வந்தது. அவன் பார்வை மங்கத் தொடங்கியது. சகோதரியிடம் மன்னிப்புக் கோரினான். பல பூச்செடிகளை நட்டு வளர்த்தான். அந்தப் பூக்கள் பேசத்தொடங்கின. தங்கள் மூதாதையர்களை அழித்த அவன் மீது சாபமிட்டன. கள்ளிச் செடியாக மாறிய அவன் பாலைவனத்தில் வளர்ந்தான். பூக்களின் தேவதையிடம் மன்றாடி தன்னை மீண்டும் மனிதனாக்க வேண்டினான். மனிதனாக்க முடியாது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் மலராக வேண்டுமானால் ஆக்க முடியும் எனக் கூறிவிட்டாள். கள்ளிச் செடியாக இருப்பதை விட மலராவதே மேல் என அவனும் அதை ஏற்றுக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பூவானான். 

Tuesday 12 October 2021

குறுங்கதைகள்-குண்டூசி





அவள் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் மேஜை மீதிருந்த குண்டூசி எழுந்து நின்றது. அவள் அதை அதிசயத்துடன் பார்க்க அது குண்டூசி அளவே உள்ள மனிதன் என்று  புரிந்தது. அவன் இவளுடைய வீட்டுப் பாடத்தைத் தான் எழுதித் தந்துவிடுவதாகவும் தனக்கு ஒரே ஒரு துளி தேன் மட்டும் கொடுத்தால் போதும் என்றான். அவள் ஓடிச் சென்று தேனை எடுத்து வந்து அவனுக்குக் கொடுத்தாள். அவள் போய் வருவதற்குள் அவளுடைய வீட்டுப் பாடத்தை எழுதி முடித்துவிட்டிருந்தான். அவள் மிகவும் பரவசப்பட்டு அந்தக் குண்டூசி மனிதன் வேறென்ன அதிசயத்தை எல்லாம் செய்வான் எனக் கேட்டாள். அது போகப் போக அவளுக்கே தெரியும் என்றான் குண்டூசி மனிதன். இவளுடைய பரவசத்தைக் கண்ட இவளது தாய் வீட்டுப் பாடத்தை எழுதிவிட்டாளா எனக் கேட்டாள். இவள் குண்டூசி மனிதன் பற்றி தாயிடம் சொல்லவில்லை. அந்த மனிதனை எடுத்து ஒரு தீப்பெட்டியில் போட்டு வைத்துவிட்டுத் தூங்கப் போனாள். காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டாள். மாலை வந்து பார்த்தால் அந்தத் தீப்பெட்டியைக் காணவில்லை. இவள் வீடு முழுக்கத் தேடிப் பார்த்தாள். அது கிடைக்கவில்லை. இவளுக்கு அழுகையாக வந்தது. வீட்டைச் சுற்றி வெளியில் தேடிப் பார்த்தாள். குப்பையைக் கிளறிப் பார்த்தாள். அப்போது அந்தத் தீப்பெட்டி கிடைத்துவிட்டது. அதைத் திறந்து பார்த்தாள். அந்தக் குண்டூசி மனிதன் இருந்தான். அதை எடுத்துக் கொண்டு ஓடிவந்தாள். முதலில் அவனுக்கு ஒரு துளி தேன் கொடுத்தாள். அவனைப் பற்றி விசாரித்தாள். அவன் அருகில் இருக்கும் கிரகத்திலிருந்து வந்திருப்பதாகவும் யார் கண்ணிலும்படாமல் இருப்பதற்காகத் தன் வடிவத்தைச் சுருக்கிவிட்டதாகவும் சொன்னான். அவன் ஏன் தன் வீட்டுக்கு வந்ததாகக் கேட்டாள். அவள் தன்னைப் பத்திரமாக வைத்துக் கொள்வாள் என எண்ணி வந்ததாகக் கூறினான். அவன் என்ன செய்ய வந்திருப்பதாகக் கேட்டாள். அவளைப் போல் பல குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்லவிருப்பதாகச் சொன்னான். அவன் இடத்தில் என்ன இருக்கும் எனக் கேட்டாள். உண்ண, உறங்க, விளையாட அருமையான இடம் இருப்பதாகக் கூறினான். தன் பெற்றோரை விட்டு தான் எப்படி வரமுடியும் எனக் கேட்டாள். அவள் எப்போதும் போல் இங்கும் இருப்பாள் எனவும் கூறினான். அங்கு எத்தனை நாட்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டாள். எப்போதுமே அங்குதான் இருக்கவேண்டும் என்றான். அவளுக்கு அது ஏற்புடையதாக இல்லை. அவள் வரமுடியாது என்றாள். அவள் தூங்கும்போது அவளைத் தான் எடுத்துப் போய்விடப் போவதாகச் சொன்னான். குண்டூசி மனிதனைத் தீப்பெட்டியில் போட்டு வீட்டை விட்டு வெகு தூரத்தில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்துவிட்டாள். உறங்கப் போகும் போது தன் தாயிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள். அவள் ஏதோ கனவு கண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டுத் தூங்கிப் போனாள். இரவு அவளால் தூங்க முடியவில்லை. அந்த அறையில் மாட்டியிருந்த அவளுடைய புகைப்படத்தைப் பார்த்தபடி படுத்திருந்தாள். அப்போது அந்தப் படம் ஜன்னல் வழியாகப் பறந்து போய்விட்டது.  

 

Monday 11 October 2021

குறுங்கதைகள்-முத்திரை





அரசன் தன் நாட்டில் இருந்த மிகச்சிறிய ஓவியங்களை வரைந்து முத்திரை இடும் கலைஞர்கள் அனைவரையும் அரசவைக்கு அழைத்து தனது மோதிரத்தில் அரசக் குறியீடான சிங்கத்தைப் பதிக்கவேண்டும் எனவும் யார் மிகநேர்த்தியாகப் பதிக்கிறார்களோ அவர்களுக்குத் தக்க சன்மானம் தரப்படும் எனவும் தெரிவிக்கிறான். ஆயிரம் கலைஞர்கள் வந்திருந்தார்கள். ஒரு மாதத்தில் வேலையை முடிக்கவேண்டும் எனச் சொல்லப்பட்டது. அவர்களின் வீட்டுக்கு தங்க மோதிரங்கள் வினியோகிக்கப்பட்டன. அந்த மோதிரங்களில் உள்பகுதியில் சிங்கத்தை வரைந்து முத்திரை இடவேண்டியிருந்தது. மிகச்சிறிய பகுதியில் மிக நேர்த்தியாகவும் துல்லியமாகவும் வரைந்து முத்திரை இடுபவர்களுக்கு அதிக சன்மானம் கிடைக்கும் என்பதால் எல்லோரும் கவனமாக வரையத் தொடங்கினார்கள். அவன் திரும்பத் திரும்ப சிங்கம் வரைந்து பார்த்தான். பித்தளை மோதிரத்தில் முத்திரையை இட்டுப் பார்த்தான். இருந்தாலும் அவனுக்குத் திருப்தி கிடைக்கவில்லை. அவன் பக்கத்துவீட்டில் ஒரு பார்வையற்ற கலைஞன் இருந்தான். அவன் மிகவும் துல்லியமாவும் நேர்த்தியாகவும் சிங்கத்தை வரைந்திருந்தான். அதை முத்திரை இடுவதிலும் கைத்தேர்ந்தவனாகவும் இருந்தான். அவனுக்குத்தான் சன்மானம் கிடைக்கும் என எல்லோருக்கும் புரிந்தது. அது இவனுக்கு ஏற்புடையதாக இல்லை. அந்தப் பார்வையற்ற கலைஞனைச் சந்தித்தான். அவன் மிகவும் திறமையானவன் என்பதைத் தெரிந்துகொண்டான். அவனிடம் கலையைப் பயின்றுவிட்டு பிறகு தங்க மோதிரத்தில் முத்திரையை இடலாம் என்று எண்ணினான். அவன் வரைந்த சிங்கத்தைத் தொட்டுப் பார்த்த பார்வையற்றவன் நேர்த்தி குறைவாக இருப்பதாகக் கூறிவிட்டான். எவ்வளவு முயன்றும் இவனால் நேர்த்தியை அடையவே முடியவில்லை. அவனுக்கு இது மன உளைச்சலைத் தந்தது. இறுதி நாள் நெருங்கிவிட்டது. என்ன செய்வது என யோசித்து பார்வையற்றவன் சிங்கத்தைப் பொறித்துவைத்திருக்கும் தங்க மோதிரத்திற்குப் பதில் தான் முத்திரை பதித்துவைத்திருக்கும் மோதிரத்தை மாற்றிவைத்துவிடலாம் எனத் திட்டமிட்டான். அன்று அவன் வீட்டுக்குச் சென்று தன் மோதிரத்தை அங்கு வைத்துவிட்டு அவனுடையதை எடுத்துக் கொண்டான். அரசவையிலிருந்து தங்க மோதிரத்தைக் கொண்டுபோக வந்தவர்களிடம் கொடுத்துவிட்டான். அரசன் கலைஞர்களை அரசவைக்கு அழைத்து அவர்கள்  முத்திரை இட்ட மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்தான். அப்போது பார்வையற்றவனுக்கும் அவன் முத்திரை இட்ட மோதிரம் திரும்பி வந்தது. அதைத் தொட்டுப் பார்த்த பார்வையற்றவன் அது தான் பொறித்த மோதிரம் அல்ல என்று கூறிவிட்டான். அரசன் சன்மானம் கொடுப்பதற்காக வைத்திருந்த மோதிரத்தை எடுத்து பார்வையற்றவனிடம் கொடுத்து அந்த மோதிரம் அவனுடையதா என்று கேட்டான். ஆம் என்றான். இவனை அழைத்து உண்மையைக் கேட்டான் அரசன். தன் தவறை ஒப்புக்கொண்டான். இனிமேல் முத்திரை இடும் கலையை அவன் செய்யக்கூடாது எனவும் பார்வையற்றவனிடம் பணியாளாக இவன் இருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டான்.

 

 

 

Sunday 10 October 2021

குறுங்கதைகள்-மோலாயி*டம் ஒரு விசாரணை





இங்கிலாந்து நாவலாசிரியரான சாமுவேல் பெக்கெட் மோலாய் எனும் நாவலை எழுதியிருக்கிறார். அதில் வந்த மோலாய் பாத்திரத்தைச் சந்தித்தேன். அந்த மோலாய் வயதான முதியவராகிவிட்டார். அவரை அழைத்துக் கொண்டு மலைப் பாதையில் நடக்கத் தொடங்கினேன். மோலாய் நீங்கள் ஏன் உங்கள் தாயின் பெயரையும் உங்கள் பெயர் என்றே கூறுகிறீர்கள் என்றேன். என்னை ஏன் தாயாக உன்னால் பார்க்க முடியாதா என்றார். மோலாய் நாவலில் நீங்கள் ஒரு கொலை செய்திருக்கிறீர்கள் என்றேன். ஆம் அதனால் என்ன என்றார். வெகு இயல்பாக எப்படி வாழ்கிறீர்கள் என்றேன். நான் மனப்பிறழ்வு அடைந்திருந்த போது என்னை அறியாமல் செயத தவறு அது. அதற்கு ஏன் நான் பொறுப்பேற்க வேண்டும் என்றார் மோலாய். இல்லை, கொலை செய்த பின் மனப்பிறழ்வு வந்துவிட்டது போல் நடித்தீர்கள் அதனால் அந்தப் பொய்யை உண்மையாக்கப் பார்க்கிறீர்கள் என்றேன். இத்தனைக் காலகட்டத்திற்குப் பின் என்னைப் படைத்த பெக்கெட்டே இறந்த பின் நான் எதற்கு அந்தக் கொலைக்காகப் பொறுப்பேற்று வருந்தவேண்டும் என்றார். உயிரைப் பறிப்பது வெகு இயல்பானதா என்றேன். அந்த நேரத்தில் காட்டில் தன்னந்தனியாக என் மகன் சைக்கிளை எடுத்து வருவான் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த போது அந்த நபர் என்னைப் பெரிதும் தொல்லைப்படுத்தினார். எனக்கு அவரிடமிருந்து தப்ப வேறு வழித் தெரியவில்லை. அதனால் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டேன் என்றார். அது குறித்து குற்றவுணர்வு கூட உங்களிடம் இல்லையே என்றேன். குற்றவுணர்வு கொண்டால் போன உயிர் திரும்பவந்துவிடுமா என்றார். நீங்கள் இன்னும் மனப்பிறழ்வில் இருப்பது போலத் தெரிகிறீர்கள் என்றேன். ஆம் அதனால்தான் உன்னையும் கொல்ல முடிவெடுத்துவிட்டேன் எனக் கூறி என்னுள் கத்தியைச் செருகினார்.

*சாமுவேல் பெக்கெட் எழுதிய நாவலில் வந்தப் பாத்திரம் மோலாய். இங்கு அது மீண்டும் எடுத்தாளப்பட்டுள்ளது. 

குறுங்கதைகள்-ரகசியம்





கிரகங்களை விண்வெளியில் ஒரு கற்பனையான புள்ளியில் நிலைத்து வைத்திருக்கும் காந்த விசைகளைக் கட்டுப்படுத்தும் ஓர் அளவைமானியைக் கண்டுபிடித்தது ஒரு மர்மக்குழு. அந்தக் கருவியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்தால் கிரகங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பதை அறிந்து கொண்டது அந்த மர்மக்குழு. எந்த இடம் எவ்வளவு காலம் என்ற ரகசியத்தை ஒவ்வொரு பரம்பரையாகக் கடத்திக் கொண்டு வந்து அந்த அளவை மானியை ஒவ்வொர் இடமாக மாற்றிக் கொண்டிருந்தது அந்தக் குழு. அந்த ரகசியக் குழுவில் உறுப்பினராக வேண்டும் என்றால் பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். வீட்டு உறுப்பினர்கள் கடத்தப்படுவார்கள். அவர்கள் இருக்கும் இடத்தைச் சரியாக அறிந்து கண்டுபிடிக்கவேண்டும். வாகனம் எதிர்பாராமல் நின்றுவிடும். அதைச் சரி செய்யத் தெரிந்திருக்கவேண்டும். கடும் மழையில் வேண்டுமென்றே சுடுகாட்டுக்கு அழைக்கப்பட்டு அங்கு ஒரு குண்டுமணியைத் தேடி எடுக்க வேண்டியிருக்கும். இப்படி பல கட்டச் சோதனைகளைக் கடந்து அந்தக் குழுவில் சேர்ந்தால் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டு அந்த அளவை மானியைத் தேடச் சொல்லி செய்தி வரும். அந்தக் குழுவின் தலைவர் யார் என்பது அதன் உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட ஒரு குழுவில் பல கட்டச் சோதனைகளைக் கடந்து ஒருவன் வந்து சேர்ந்தான். அவன் அந்த அளவை மானியை உடனடியாக அந்தக் கிரகத்தின் கிழக்குத் திசையிலுள்ள ஒரு புள்ளிக்கு எடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பை ஏற்றான். அந்த அளவை மானியைத் தேடி அலைந்தான். குப்பைத் தொட்டிகளிலும் மரப்பொந்துகளிலும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் தேடிப் பார்த்தான். கிடைக்கவில்லை. அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வேலையை முடிக்க இன்னும் குறைவான நாட்களே இருந்தன. வந்திருந்த ரகசியச் செய்தியில் ஏதாவது துப்பு கிடைக்குமா என நூறாவது முறையாகப் படித்துப் பார்த்தான். ’மானியும் முதலாம் நகரத்து மூன்றாம் திசையில்’ என மட்டும் எழுதியிருந்தது. அந்த வாசகத்தை வேறு மொழிகளில் மொழிபெயர்த்தான். நகரம் என்ற சொல் நகரத்தைக் குறிக்கவில்லை எனப் புரிந்தது. வேறு ஏதோ ஒன்றைக் குறிக்கிறது என்று நினைத்து ரயிலடிக்கு வந்தான். அங்கிருந்த மூன்றாவது நடைமேடையில் இருந்த முதல் இருக்கையின் அடியில் பார்த்தான். அளவை மானி கிடைத்துவிட்டது.

Saturday 9 October 2021

குறுங்கதைகள்-சிப்பி





அன்று கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த அழகிய சிப்பி அவளுக்குக் கிடைத்தது. அதனை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டு தன் நண்பர்களிடம் காட்டினாள். அதன் அழகில் மயங்கிய அவள் பள்ளித் தோழன் அதனைத் தரும்படி கேட்டான். அதற்கு மறுத்துவிட்டு வீட்டுக்கு வந்தவள் தனக்குப் பிடிக்காத உணவைப் பார்த்து முகம் சுழித்தாள். அந்தச் சிப்பியைக் கையில் வைத்துக் கொண்டு தனக்குப் பிடித்தமான உணவு கிடைக்க ஏங்கினாள். உடனே அவளுக்குப் பிடித்தமான உணவு வகைகள் வந்தன. அவள் குதூகலத்துடன் அவற்றைச் சாப்பிட்டு உறங்கிப் போனாள். காலையில் எழுந்து பள்ளிக்குச் சென்று அந்தச் சிப்பியைக் கையில் வைத்து தேவையானவற்றைக் கேட்டால் உடனே வரும் என்று கூறினாள். அவளுக்குப் பிடித்த புத்தம் புதிய உடைகள் வரும்படி கேட்டாள். அவை உடனே வந்தன. அவளுடன் படித்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியமும் ஆச்சரியமும் ஏற்பட்டன. வீடு வந்து சேர்ந்தவளுக்கு தன் வீடு மாளிகை போல் ஆகவேண்டும் எனக் கேட்டாள். மிகப்பெரிய அரண்மனையில் அவள் அமர்ந்திருந்தாள். தான் பெரியவளாகி இளவரசி ஆகவேண்டும் என நினைத்தாள். அவள் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியாகிவிட்டாள். தன் அண்டைநாட்டு இளவரசனை முடித்தாள். இருவரும் கப்பலில் பல ராஜ்ஜியங்களைப் பார்க்கக் கிளம்பினார்கள். தன் கையில் இருக்கும் சிப்பியால்தான் தனக்கு இந்த வாழ்வு கிடைத்ததாகக் கணவனிடம் கூறினாள். அதை வாங்கிப் பார்த்த இளவரசன் இது எங்கே கிடைத்தது என்று கேட்டான். தான் சிறுவயதில் விளையாடிய கடற்கரையில் கிடைத்ததாகக் கூறினாள். சிறுவயதில் தன்னுடன் விளையாடிய போது ஒரு சிறுமி இதே போன்ற சிப்பியைத் தன் கையில் கொடுக்காததை எண்ணிக் குறைப்பட்டுக் கொண்ட இளவரசன் அந்தக் கடற்கரைக்குத் தான் சிறுவனாகச் செல்லவேண்டும் என்று நினைத்தான். அந்தக் கடற்கரையில் எடுத்த அழகிய சிப்பியுடன் சிறுவன் வீடு வந்து சேர்ந்தான். பெரிய அரண்மனை கேட்டான் உடனே கிடைத்தது. வளர்ந்து பெரியவனாகி பெரிய ராஜ்ஜியத்தின் இளவரசனாகக் கேட்டான். உடனே இளவரசன் ஆகிவிட்டான். அண்டை சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியை மணமுடித்தான். இருவரும் கப்பலில் பயணம் செய்தார்கள். சிப்பியால்தான் இந்த அளவு வளர்ந்து இந்தக் கப்பல் வரை வந்து சேர முடிந்ததாகத் தன் மனைவியிடம் கூறினான்.  

 

குறுங்கதைகள்-பெண் எந்திரம்




 

அவளை அழைத்துக் கொண்டு ஒரு விருந்துக்குச் சென்றிருந்தான் அவன். தன் மனைவி என அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தத்தான் அங்குப் போயிருந்தான். அவளைக் கண்டவர்கள் அனைவருக்கும் அவளிடம் ஏதோ ஒரு வித்தியாசமான கவர்ச்சி இருப்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆனால் அது என்ன யாருக்கும் புரியவில்லை. அவனுடைய நண்பன் அவர்கள் இருவரையும் தொடர்ந்து வந்தான். அவர்களிடம் மட்டுமே பேசினான். அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள பெரிதும் ஆர்வப்பட்டான். ஆனால் நண்பனை அதிகம் அண்டவிடக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான். விருந்து முடிந்து இருவரும் காரில் புறப்பட்டார்கள். நண்பன் அவர்களைத் துரத்தி வந்து அவர்களின் காரை மறித்து நிறுத்தினான். இவர்கள் வாகனம் அருகே வந்தான். துப்பாக்கியைக் காட்டி இவனை இறங்கச் சொன்னான். இவன் இறங்கி நின்றான். நண்பன் இவனிடம் அவளைத் தன்னுடன் அனுப்பச் சொன்னான். இவன் முடியாது என்றான். அவள் ஓர் எந்திரம் என்பது தனக்குத் தெரியும் என்று சொன்னான். இவன் அதிர்ந்து போனான். அவளை உடன் அனுப்பாவிட்டால் உலகுக்கு உண்மையைத் தெரிவித்துவிடப் போவதாக மிரட்டினான் நண்பன். இவன் அமைதியாக இருந்தான். அப்போது அவள் காரை விட்டு இறங்கினாள். நண்பனைப் பார்த்து கண்களை அகல விரித்தாள். அவள் கண்களிலிருந்து லேசர் கதிர் பாய்ந்து அவன் தூக்கி எறியப்பட்டான். இருவரும் காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தார்கள். அவள் உடனே அவனை ஓர் அறையில் வைத்து பூட்டினாள். சோதனைக் கூடத்திற்குச் சென்றாள். தன்னைப் போல் பல பெண் எந்திரங்களை உற்பத்தி செய்தாள். அவர்களை அழைத்துக் கொண்டு ஓர் உணவு விடுதிக்குச் சென்றாள். அங்கிருந்த ஆண்கள் பலர் இவர்களுடன் பேச விரும்பினார்கள். ஒவ்வொரு பெண் எந்திரமும் ஓர் ஆணுடன் புறப்பட்டுச் சென்றாள். மீண்டும் இவள் வீட்டுக்குத் திரும்பி சோதனைக் கூடத்திற்குச் சென்று அந்தப் பெண் எந்திரங்களை இயக்கினாள். ஆண்களை எப்படி நடத்தவேண்டும் என அந்தப் பெண் எந்திரங்களுக்கு ஆணைகளைப் பிறப்பித்தாள். அந்தப் பெண் எந்திரங்கள் பிற பெண் எந்திரங்கள் உற்பத்தி செய்ய ஆணையிட்டாள். பெண் எந்திரங்களுக்கு ஆண்கள் சலிப்பை ஏற்படுத்தினார்கள். அதனால் ஆண் எந்திரங்களை தங்கள் விருப்பப்படி வடிவமைத்துப் பெண் எந்திரங்கள் உருவாக்கின. இப்படியாக ஆண் முதன்மைச் சமூகம் முடிவுக்கு வந்தது. 

Wednesday 6 October 2021

குறுங்கதைகள்-ஒற்றுமை







அவன் தன்னைப் போல் தோற்றமுள்ள ஒருவனைச் சந்தித்தான். ஒரே மாதிரி தோற்றம் இருப்பவனைப் பார்த்த இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவனுடைய மனைவி தோற்ற ஒற்றுமை உடையவனைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தாள். தன் தோற்ற ஒற்றுமையாளனுக்கு நல்ல விருந்தைப் படைத்து மகிழ்ந்தான். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். தோற்ற ஒற்றுமை கொண்டவன் அடிக்கடி இவன் வீட்டுக்கு வரத் தொடங்கினான். சில சமயங்களில் இருவரும் ஒரே மாதிரியான உடை அணிந்திருந்தார்கள். இவனுடைய மனைவிக்குக் கணவன் யாரெனக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஒரு நாள் இவன் ஊரில் இல்லாத போது தோற்ற ஒற்றுமையாளன் இவன் வீட்டுக்கு வந்தான். இவனுடைய மனைவிக்குக் குழப்பமாக இருந்தது. வந்திருப்பது யாரெனத் தெரியவில்லை. வந்தவுடன் அவன் இவளிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஏன் ஏமாற்றினாள் என்று கேட்டான். திருமண நாளன்று குடும்பத்தில் ஏற்பட்ட நெருங்கிய உறவினரின் மரணம் காரணமாக அவர்களின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதை இவள் நினைவு கூர்ந்தாள். அதன் பின் இவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அங்கு போய் வந்து திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறிவிட்டான். இடையில் இப்போது கணவனாக இருப்பவன் இவளுடைய குடும்பத்தாரைச் சந்தித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டான். தோற்ற ஒற்றுமை காரணமாக இவன் வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டதாகச் சொன்னதை அவர்களும் நம்பிவிட்டார்கள். திருமணம் முடிந்தவுடன்தான் தன் கணவனாக வந்தது வேறொருவன் எனப் புரிந்துகொண்டாள். தான் ஏமாற்றப்பட்டதையோ தோற்ற ஒற்றுமை உள்ள வேறொருவனைத் திருமணம் செய்ய விரும்பியதையோ கணவனிடம் இவள் சொல்லவில்லை. இவன் இதைக் கேட்டு அவன் ஆத்திரமடைந்து இவளுடைய கணவன் ஊரிலிருந்து வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிச் சென்றான். கணவன் ஊரிலிருந்து வந்தவுடன் நடந்தை எல்லாம் கூறிவிட்டாள். இவள் கணவன் தன் தோற்ற ஒற்றுமையாளனை அழைத்து தன் மனைவியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி மன்னிப்பு கேட்டான். இருவரும் ஓர் அறைக்குச் சென்று குடித்து தங்கள் மன உளச்சலைத் தீர்த்துக் கொண்டார்கள். காலையில் இவள் எழுந்து அவர்களின் அறைக்குப் போய்ப் பார்த்தாள். ஒருவனைக் காணவில்லை. ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான். கடிதம் ஒன்று மேஜையில் இருந்தது. இவளுடைய கணவன் எழுதியிருந்தான். வெளிநாட்டில் வேலையில் இருந்தபோது இந்தத் தோற்ற ஒற்றுமையாளனைப் பார்த்ததாகவும் அவன் இவனைப் பார்க்கவில்லை என்றும் அவனைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து இப்படித் திருமணம் நடக்கவிருப்பதை அறிந்து இங்கு வந்து ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாகவும் தன் மீது தான் தவறு இருப்பதாகக் கூறி இனி அவள் அவனுடன் வாழலாம், தான் அவள் வாழ்வில் குறுக்கிடப் போவதில்லை என்றும் எழுதியிருந்தான்.   

Tuesday 5 October 2021

குறுங்கதைகள்-மரகதச் சாவி

 



பள்ளி முடிந்து காட்டுக்கு வந்து விளையாடிக் கொண்டிருந்த அவனுக்குப் புதரின் பின்புறத்தில் ஓர் அங்குலம் அளவே இருந்த மரகதக் கல்லாலான ஒரு சாவி கிடைத்தது. அதை எடுத்துப் பார்த்த அவனுக்குள் குதூகலம் பிறந்தது. இந்தச் சாவி திறக்கும் பூட்டு எங்கிருக்கும் என யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது வானத்தில் ஒரு பெரிய கருடன் பறந்து வட்டமிட்டது. இவனுக்கு லேசாக அச்சம் தோன்றியது. எழுந்து வீட்டுக்குப் போய்விடலாமா என நினைத்தான். கருடன் மெதுவாக இறங்கி அவனருகே வந்தது. உனக்கு ஒரு சாவி கிடைத்ததா என கருடன் கேட்டது. ஆம் என்றான். என்னுடன் நீ வந்தால் உன்னை இந்தச் சாவி திறக்கும் பூட்டு உள்ள இடத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றது. அதற்கு ஒத்துக் கொண்டு அதன் பின்னால் ஏறி அமர்ந்தான். கருடன் வெகு தூரம் பறந்து ஆறிப்போன எரிமலையின் வாய்ப் பகுதியில் நுழைந்தது. உள்ளே சாம்பல் வாசம் வீசியது. அந்த மலையின் உட்பகுதியில் ஒரு சுரங்கம் இருக்கிறது. அதற்குள் போனால் ஒரு பெரிய எறும்பு ஒரு கதவைக் காவல் காத்துக் கொண்டிருக்கும். அவன் வைத்திருக்கும் சாவியைக் காட்டினால் உள்ளே அனுமதிக்கும் என்று சொல்லி கருடன் அவனை இறக்கிவிட்டது. இவன் மெதுவாக நடந்து உள்ளே போனான் ஒரு பெரிய எறும்பு அந்தக் கதவிற்குக் காவல் நின்று கொண்டிருந்தது. இவன் சாவியைக் காட்டினான். உள்ளே போக அந்த எறும்பு அனுமதித்தது. அந்தக் கதவு திறந்தவுடன் மஞ்சள் ஒளி அவன் கண்களைக் கூசச் செய்தது. அதில் தடுமாறி நடந்தான். புகை மண்டலம் போலவும் இருந்தது. அந்தப் பாதையின் இறுதியில் பெரிய கதவுகள் இருந்தன. அந்தக் கதவுகளுக்கு மிகச்சிறிய பூட்டு இருந்தது. அவனுடைய சாவி கொண்டு அதனைத் திறந்தான். அங்கு அவனுக்குப் பிடித்த தின்பண்டங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. மிக அழகிய விளையாட்டுப் பொருள்கள் மற்றொரு வரிசையில் அடுக்கப்பட்டிருந்தன. வேறொரு பக்கம் அழகழகான கண்ணைப் பறிக்கும் ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன. இவனுக்கு எதைத் தொடுவதற்கும் பயமாக இருந்தது. இவன் தயங்கி நிற்பதைப் பார்த்து எங்கிருந்தோ வந்த முதியவர் இவனை அழைத்து அவை எல்லாமே அவனுக்காகத்தான் என்றார். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏன் இதை எனக்குக் கொடுக்கிறீர்கள் எனக் கேட்டான். மரகதச் சாவி யார் கண்ணிலும்படாமல் அவனுக்குக் கிடைத்திருப்பதால் அவன் உயரிய பரிசுகளைப் பெறத் தகுதியானவனாகிறான் என்றார் முதியவர். இவற்றை எல்லாம் தன்னால் எடுத்துச் செல்ல முடியாதே என்றான் சிறுவன். அவன் தினம் அங்கு வந்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் முதியவர். ஒரே ஒரு விதி அவன் மரகதச் சாவியைப் பத்திரமாக வைத்திருக்கவேண்டும் என்றார். அவனும் அதற்கு ஒத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வந்த வழியிலேயே கருடன் துணையோடு திரும்பி வந்து சேர்ந்தான். மரகதச் சாவியைத் தொட்டுப் பார்த்து கொண்டே தூங்கிப் போனான். கனவில் மீண்டும் அந்த இடத்துக்குப் போனான். இரவில் அந்த இடம் பாம்புகளும் கொடூர விலங்குகளும் வாழும் இடமாய் மாறியிருந்தது. இவன் பயந்து கருடனை அழைத்து தன் இடத்திற்கு வேகமாய்த் திரும்பினான். அடுத்த நாள் அந்த மரகதச் சாவியைக் கொண்டுபோய் காட்டில் வீசிவிட்டு வந்தான்.   

Monday 4 October 2021

குறுங்கதைகள்- 7 கண்கள்

 



அவள் வீட்டின் சுவரிலிருந்து ஊடுருவிப் பார்த்தான் அவன். அவளின் குழந்தைத்தனத்தையும் ஸ்படிகம் போன்ற தூய எண்ணங்களையும் கண்டு தான்தான் அந்தக் குழந்தையாய் இருப்பதாக எண்ணிக் கொண்டான். அவளை முப்பொழுதும் கண்காணித்து வந்தான். ஒரு நாள் அவளை நேரில் சந்திக்கும் ஆர்வம் கொண்டு அவளிடம் பேசினான். உன்னை என் குழந்தைப் பருவ நானாகவே காண்கிறேன். உன்னைச் சந்திக்க வேண்டும் என்றான். அவளும் சந்திக்கலாம் ஆனால் அவள் கேட்பதை அவன் கொடுக்கவேண்டும் என்றாள். அதற்கு ஒத்துக்கொண்டு அவன் நேரில் வந்தான். அவள் அவனுடைய தலையை வெட்டிக் கொடுக்குமாறு கேட்டாள். இதற்கு முன் இதே போல் அவளைக் கண்காணித்தவர்கள் ஒன்பது பேர் நேரில் வந்து தலையை வெட்டிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அண்டத்தின் பூதத்திற்கு 9 தலைகளைப் படைத்தால் அது வரம் கொடுக்கும். அதில் ஒன்று தலை கொடுத்தவர்களை உயிர்ப்பிப்பதும் ஆகும் என்றாள். அவன் தன் தலையை வெட்டிக் கொடுத்தான். அண்டத்தின் பூதம் கேட்ட 9 தலைகளைக் கொடுத்துவிட்டதால் இனி வரம் வேண்டும் என்று கேட்கிறாள். பூதமும் 7 கண்களைக் கொடுத்து அவற்றிடம் கேட்டு வரங்களை நிறைவேற்றிக் கொள்ளுமாறு கூறிவிட்டது. முதல் கண்ணிடம் தலைகொடுத்த 9 பேரையும் உயிர்ப்பிக்க வேண்டினாள். அந்தக் கண்மூடித் திறந்தது. வரம் நிறைவேறியது. இரண்டாவது கண்ணிடம் எல்லா அண்டத்திலுள்ள உயிர்களிடமும் எந்த ஆயுதமும் இருக்கக்கூடாது என வேண்டினாள். ஆயுதங்கள் அழிந்தன. மூன்றாவது கண் உயிர்களிடம் பழி, குரோதம். கோபம், பசி, பிணி உட்பட எந்தத் தீயதும் இன்றி வாழவேண்டும் என வேண்டினாள். கண் மூடித் திறந்தவுடன் வரம் கிடைத்துவிட்டது. நாலாவது கண்ணிடம் உயிர்கள் அனைத்தும் முக்காலமும் அறியவேண்டும் என வேண்டினாள். அதுவும் கிடைத்து. ஐந்தாவது கண்ணிடம் எல்லா உயிர்களும் 11 அண்டங்களிலும் பயணிக்கவேண்டும் என்றாள். அதுவும் நிறைவேறியது. ஆறாவது கண்ணிடம் அண்ட பூதங்கள் உட்பட இனி எந்தத் தீய உயிரும் பிறக்கக்கூடாது என வேண்டினாள். கண் மூடித்திறந்தவுன் வரம் நிறைவேறியது. ஏழாவது கண்ணிடம் 11 அண்டங்களைத் தாண்டி 12வது அண்டத்தில் தான் வாழவேண்டும் என வேண்டினாள். அண்டங்களின் உற்பத்திச் சக்தியில் கலந்தாள்.   

 

குறுங்கதைகள்-இசை

 



அந்தக் கிரகம் பழமையான இனத்தைச் சார்ந்தது. அவர்கள் ஓரளவுதான் பேசக் கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் இசைக் கருவிகளை உருவாக்கி அவற்றை வாசித்து தங்களின் பேச்சை வெளிப்படுத்தினார்கள். இது அந்த இனம் முழுக்கப் பரவ எல்லோரும் ஏதோ ஓர் இசைக் கருவியை வாசித்துப் பழகி அதிலேயே அவர்களின் எல்லா பேச்சு பரிமாற்றங்களையும் நிகழ்த்திக் கொண்டார்கள். அதனால் அந்தக் கிரகம் முழுவதுமே பல்வேறு வகையான இனிமையான இசையால் நிரம்பியிருந்தது. இதைக் கண்ட மாற்றொரு கிரகவாசிகள் அந்தக் கிரகத்தைத் தங்கள் வசப்படுத்த எண்ணினார்கள். அதே போல் இசைக் கருவிகளை உருவாக்கி வாசிக்கும் ஒருவனை அங்கு அனுப்பிவைத்தார்கள். அவன் வாசித்த இசைக்கருவி பல வேறுபட்ட ஒலிகளை எழுப்பியது. மேலும் அதில் பேச்சு மட்டும் அல்லாமல் இன்னும் பல உணர்வுகளையும் தேவைகளையும் வெளிப்படுத்துவதாகவும் நிறைவு செய்வதாகவும் இருந்தது. அதைக் கண்ட இந்தக் கிரகத்தினர் அதே போன்ற கருவியைச் செய்து தருமாறு கோரினார்கள். அவனும் எல்லோருக்கும் அதே போன்ற இசைக் கருவிகளைச் செய்து கொடுத்தான். அவர்கள் எல்லோரும் அந்த இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு இசைத்ததால் யாருடைய இசை நன்றாக இருக்கிறது என்ற போட்டி எழுந்தது. இது வரை இசையாகப் பேசியவர்கள் இப்பொழுது சண்டையிடத் தொடங்கினார்கள். அந்தக் கிரகம் முழுக்க இன்னிசையாக இருந்த நிலை மாறி பேரிரிச்சைலானது. பின் கடும் ஓலமாக மாறியது. ஒருவரை ஒருவர் குத்திக் கிழித்து குதறி அழிந்தார்கள். இதை எதிர்பார்த்து வந்த அந்த வேற்றுக்கிரகவாசி தன் இலக்கை எட்டிவிட்டத் திருப்தியில் அந்தக் கிரகத்தையும் தனது சொந்தமாக்கிக் கொண்டான்.

 

Sunday 3 October 2021

குறுங்கதைகள்-புழு


 


அவள் குழந்தையாக இருக்கும் போது தன் வீட்டுக்கு எதிரில் மண்ணிலிருந்து வெளிக் கிளம்பும் புழு ஒன்றைத் தினமும் பார்ப்பாள். அதில் என்ன அதிசயம் என்றால் அந்தப் புழு தினமும் ஒரு நிறத்தில் வெளிவரும். அதன் நிறத்திலிருந்துதான் அவளால் வண்ணங்களில் வேறுபாடுகளையும் அவற்றின் பெயர்களையும் அறிய முடிந்தது. தினம் அது எந்த நிறத்தில் வரும் என அவளுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு கட்டத்தில் அவள் நினைக்கும் நிறத்தில் வெளிப்படும் போது அவளுக்குப் பெரும் பரவசமாக இருக்கும். தினம் காலையில்தான் அது வெளியே வரும். தினம் இப்படி இவள் காலையில் எழுந்ததும் வெளியே வந்து எதையோ பார்க்கிறாள் என கண்டறிந்த இவளுடைய தாய் இந்தப் புழுவைப் பார்த்துதான் இவள் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறாள் எனப் புரிந்து அதிர்ச்சி அடைந்தாள். ஒருவேளை இவள் அந்தப் புழுவைத் தொட்டு இவளுக்கு உடலில் கேடு வந்துவிட்டால் என்ன செய்வது என அஞ்சினாள் இவளுடைய தாய். அடுத்த நாள் இவள் எழும் முன்பே சாணியிட்டு தெளித்து முற்றத்தைப் பெருக்கி மெழுகிவிட்டிருந்தாள் இவளுடைய தாய். இவள் எழுந்து பார்க்கும் போது புழு வெளிப்படும் மண் குழி காணாமல் போயிருந்தது. இவள் பெரும் துக்கமடைந்தாள். புழு தன்னிடம் பேசாதா என ஏங்கினாள். புழு மானசீகமாக இவளுடன் பேசியது. தன் குழி மூடப்பட்டதால் அடுத்து தான் எப்படியாவது ஓர் இடத்தில் வெளிப்பட்டு குழியை உருவாக்கவேண்டும் எனவும் பிறகொரு முறை அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் கூறியது. அவளும் அந்தப் புழுவைக் காணும் எண்ணத்திலேயே வளர்ந்தாள். கல்லூரிப் படிப்பில் விலங்கியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்து படித்து அதில் ஆய்வுப் படிப்பு வரை வந்துவிட்டாள். மண்ணுக்கு அடியில் வாழ்ந்து நிறம் மாறும் புழுக்களைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினாள். அப்போது இவள் தேடிக் கொண்டிருந்த புழு குறித்த காணொலியை ஒரு சிறுமி பகிர்ந்திருந்தாள். தினம் நிறம் மாறி வெளிப்படும் புழுவைப் பற்றிய காணொலியாக இருந்தது அது. அந்த இடம் இவளுடைய இடத்திலிருந்து பல்லாயிரம் அடி தூரத்தில் இருந்தது. ஆனாலும் இவள் அங்கு போய் அந்தச் சிறுமியின் வீட்டின் முன் நின்றிருந்தாள். அந்த வீட்டின் முன் ஒரு சிறிய குழி இருந்தது. அதன் அருகே நின்று அந்தப் புழு வெளிப்படவேண்டிய நிறத்தை மனதில் நினைத்தாள். அதே நிறத்தில் புழு வெளிப்பட்டது.   

Saturday 2 October 2021

குறுங்கதைகள்-பொய்

 



பெரும் செல்வங்களும் சொத்தும் கொண்டிருந்த ஒருவன் தன் அனைத்துச் சொத்துகளையும் யாரொருவர் உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியாத பொய்யைக் கூறுகிறார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தான். ஒவ்வொருவரும் வந்து விதவிதமான பொய்களைச் சொன்னார்கள். ஒருவன் வந்து அவனுக்கு உறவுமுறை என்றான். மற்றொருவன் உலகம் அழியப் போகிறது என்றான். இன்னொருவன் செல்வந்தனின் சொத்து முழுவதும் களவு போய்விட்டது என்றான். இப்படிப் பல பொய்கள் சொன்னாலும் எல்லாமே வெளிப்படையான பொய்களாகவே இருந்தன. உண்மையை வெகு சுலபமாகக் காட்டிக் கொடுத்தன. செல்வந்தன் தன் சொத்து தன்னைவிட்டுப் போகாது என நினைத்துக் கொண்டான். அன்று ஒருவன் வந்தான். அவன் தன் கனவில் கடவுளைக் கண்டதாகச் சொன்னான். இறந்து போன தன் தந்தை கடவுளை அடையாளம் காட்டியதாகச் சொன்னான். அந்தக் கடவுள் அவதாரம் எப்படி இருக்கும் என்றால், ஒரு கோவிலில் தான் கண்ட சிற்பத்தை ஒத்து இருந்ததாகச் சொன்னான். இது உண்மை போல் தெரிகிறதே என்றான் செல்வந்தன். வந்தவன் தான் சொன்னது உண்மையா பொய்யா என செல்வந்தன்தான் கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறிவிட்டான். செல்வந்தன் அவன் சொன்ன கோயிலுக்குச் சென்று கடவுளின் தோற்றத்தைக் கண்டான். பொய் சொன்னவனிடம் உன் கனவில் கடவுள் வந்திருந்தால் நீ எதற்கு என்னிடம் வந்து பொய் சொல்லவேண்டும் என்று கேட்டான். ஆகவே நீ சொன்னது பொய் அல்ல உண்மை. எனவே நான் உனக்கு என் சொத்துகளைத் தரமுடியாது என்றான். பொய் சொன்னவன் அடுத்த முறை கடவுளைக் கனவில் கண்டால் நீங்கள் சொன்னதைச் சொல்லிவிடுகிறேன் என்றான். இது அருமையான பொய். நான் உன் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று சொன்ன பின்னும் சிறிது அதிர்ச்சியடையாமல் இருந்துவிட்டு எப்படியும் சொத்தை அடைந்தே தீருவது என்ற உன் முயற்சியில் சொன்ன பொய் அற்புதமானது. ஆகவே உனக்கே என் சொத்துகளைத் தருகிறேன் என்றான்.   

Friday 1 October 2021

குறுங்கதைகள்-சாகசம்

 



அந்தச் சிறுவன் ஓர் அழகான மாயக் குதிரையை வளர்த்து வந்தான். அதில் பயணம் செய்து பல இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்பி அதைக் கிளப்பினான். குதிரை சிறுவனிடம் அந்தப் பயணம் மிகவும் விசித்திரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்றது. அப்போது வழியில் ஓர் அடர்ந்த காடு வந்தது. அந்தக் காட்டுக்குள் செல்லவேண்டாம். அது அவர்களுக்குப் பல சிக்கல்களைத் தரும் என்றது குதிரை. ஆனால் சிறுவனுக்குச் சாகசங்களைச் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் அந்தக் காட்டிற்குள் போகலாம் என அடம் பிடித்தான். குதிரையும் விருப்பமில்லாமல் அந்தக் காட்டுக்குள் அவனை அழைத்துச் சென்றது. அடர்ந்த காட்டுக்குள் போனவுடன் அங்கு ஏராளமான நீல வண்டுகள் பறந்து கொண்டிருந்தன. அவற்றிலிருந்து தப்பிக்க குதிரையும் இவனும் பெரிதும் பாடுப்பட்டார்கள். குதிரை வேகமாக ஓடி அந்தப் பகுதியைக் கடந்தது. அடுத்து அவர்கள் நுழைந்த காட்டுப் பகுதியில் குழந்தைகள் சிரிப்பது போன்ற ஒலி கேட்டது. இருவரும் அங்கே தங்கி இளைப்பாறினார்கள். எங்கிருந்து குழந்தைகளின் சிரிப்பொலி கேட்கிறது என அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கேயே அவர்கள் தூங்கிப் போனார்கள். சிறிது நேரத்தில் இருவரும் அதிர்ச்சியில் எழுந்தார்கள். குழந்தைகளின் சிரிப்பொலி அழும் ஒலியாக மாறிவிட்டது. அந்த இடத்தில் இருக்க முடியாதவாறு காதைப் பொத்திக் கொள்ளும் அளவுக்கு அந்த ஒலி பேரிரிசைச்சலாக அது கேட்டது. அங்கிருந்து குதிரை வேகமாக ஓடி மலையின் உச்சிக்கு வந்து சேர்ந்தது. கீழே மிக ஆழமான பள்ளத்தாக்குத் தெரிந்தது. அங்கிருந்து அடுத்த மலை முகட்டிற்குச் செல்லவேண்டும் என்றால் மூச்சைப் பிடித்துக் கொண்டு குதிரை பறக்க வேண்டும். இவன் குதிரையிடம் கெஞ்சினான். குதிரையும் எப்படியோ பறந்து அடுத்த மலை முகட்டிற்கு சிறுவனைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. அங்கிருந்து இருவரும் நடந்து வந்தார்கள். அந்த மலையின் இறுதியில் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி விழுந்து கொண்டிருந்தது. இருவருக்கும் வேறு வழியில்லை. அந்த நீர்வீழ்ச்சியில் குதித்தார்கள். அது ஒரு நதியில் போய் பாய்ந்தது. இருவரும் நதியில் நீந்தி ஒரு சமவெளிக்கு வந்து சேர்த்தார்கள். அங்கிருந்த ஒரு மரத்தடியைச் சேர்ந்து தூங்கிப் போனார்கள். சிறுவன் குதிரையை எழுப்பினான். இப்போதுதானே பயணித்து இத்தனைச் சாகசங்களைச் செய்து வந்தோம் என்றது குதிரை. இன்னும் பயணம் தொடங்கவே இல்லையே என்றான் சிறுவன். இதுவரைத் தான் கண்ட கனவிலிருந்து விடுபட்டு சிறுவனை அழைத்துக் கொண்டு கிளம்பியது குதிரை. அப்போது வழியில் ஓர் அடர்ந்த காடு வந்தது. அதற்குள் செல்ல அடம் பிடித்தான் சிறுவன்.

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...