Monday 30 August 2021

குறுங்கதைகள்-கோழி




அவன் ஒரு கோழி வளர்த்து வந்தான். அது மற்ற எந்தக் கோழிகளுடனும் சேராமல் இருந்தது. அதன் போக்கில் ஏதோ மாற்றம் தெரிந்ததைக் கண்டு அதைத் தொடர்ந்து கவனித்து வந்தான். இரவில் அது காட்டு மேயச் சென்றது. காலையில் இவன் வீட்டுக்கு வந்துவிடும். இரவில் அது டைனோசர் போல் மாறி மற்ற விலங்குகளை வேட்டையாடுவதாக ஒரு செய்தி ஊருக்குள் பரவியது. இவனுக்கு அது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்து. ஒரு நாள் இரவு ஒரு மூட்டையில் சாணியை எடுத்துக் கொண்டு கோழியின் பின்னால் பதுங்கிப் பதுங்கிக் காட்டுக்குச் சென்றான். காட்டுக்குள் போனவுடன் அது சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேகமாக ஓடியது. இவனும் அதைப் பின்தொடர்ந்தான். காட்டின் நடுவில் ஒரு பெரிய வெளி ஒன்று வந்தது. அதற்கு நடுவில் போய் கோழி நின்றது. அது நின்ற இடத்தில் ஒரே ஒரு பெரிய மரம் மட்டும் இருந்தது. இவன் மெதுவாக மறைந்து தவழ்ந்து அந்த மரத்தை அடைந்து அதில் ஏறிவிட்டான். கோழிக்கு நேராக இருப்பது போல் அமர்ந்து கொண்டான். அதனிடம் ஏதாவது மாற்றம் தென்பட்டால் சாணியை அதன் மீது வீசி எறியத் தயாராக இருந்தான். அது வேறு ஏதோ ஒலியை எழுப்பியது. அதுதான் தருணம் அவன் என நினைத்து சாணியை அதன் மீது வீசினான். அந்தக் கணம் அவன் முகத்திற்கு அருகே டைனோசரின் முகம் வந்து நின்றது. அதிர்ச்சியில் உறைந்து மரத்திலிருந்து குதித்து ஒரே ஓட்டமாக ஓடிவந்தான். டைனோசர் பின்னால் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. எப்படியோ ஓடி சாலைக்கு வந்து திரும்பிப் பார்த்தான். கோழி ஓடி வந்து கொண்டிருந்தது. அவன் ஏதோ கனவு என நினைத்து கோழியைப் பிடித்துக் கொண்டு போகலாம் என அங்கேயே நின்றான். அவன் அருகே வந்த கோழி, டைனோசர் போல் பெரிதாகி அவனை விழுங்கியது.

 

 

Sunday 29 August 2021

குறுங்கதைகள்-எழுத்தாளரைக் கொல்வது



 

நீங்கள் வாழ்ந்திருப்பது அவனுக்குத் தெரியும். நீங்கள் தொடர்ந்து கதைகளை எழுதி பலரையும் அதில் வாழ வைக்கிறீர்கள் என்பதால் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பானதல்ல. அவன் இது போன்ற உங்களின் கற்பனையைத்தான் ரசிப்பதில்லை. ஒரு நாள் நீங்கள் அவனால் கொல்லப்படுவீர்கள். இது எச்சரிக்கை அல்ல. நடக்கப் போவது. உண்மையானது. ஏன் கொல்லப்படுவீர்கள் எனத் தெரியுமா? நீங்கள் கண்ட மனிதர்களின் குணாம்சங்களைப் பற்றிப் படைப்பதால் கொல்லப்படுவீர்கள். பாத்திரங்களைப் படைப்பதாகச் சொல்லிக் கொண்டு உங்களையே படைத்துவிட்டு பாத்திரங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல் காட்டிக் கொள்வதால் நீங்கள் கொல்லப்பட  வேண்டியவர் ஆகிறீர்கள். உங்கள் கதைகள் உண்மை சம்பவங்களைப் போலச் செய்தவை என்பதால் அவற்றின் நீங்கள் கட்டுப்படுத்துவதாக நீங்கள் எண்ணுவதன் காரணமாக நீங்கள் சாகவேண்டியவர். எழுத்தாளராக இருப்பது அடுத்தவர்களின் மூளையில் ஏதோ ஒரு தேவையற்ற குப்பையைச் சேகரிப்பதுதான் என்பதை ஒரு நாளும் உணராமல் இருந்ததற்காக நீங்கள் கொல்லப்படுவீர்கள். உங்களை வாசிக்கும் அப்பாவிகள் உங்கள் கதைகளை அவர்களுக்கு ஏற்றது போல் எழுதிக் கொள்கிறார்கள். அதற்குப் பொறுப்பெடுக்காமல் இருந்ததற்காகக் கொல்லப்படுவீர்கள். உங்களை விட உங்களுடைய வாசகர்கள்தான் உங்கள் கதைக்குப் பொருள் சேர்க்கிறார்கள் என்பதை உணராமல் நீங்கள் இருந்ததற்காகக் கொல்லப்பட போகிறீர்கள். உங்கள் வாசகர் உங்களை வாசிக்கும் போதே உங்களை பாதி கொலை செய்துவிட்டதை நீங்கள் அறியாமல் இருந்ததற்காகவும் இனிமேல் எழுத்தாளராகவே இருக்கப் போவதாகப் பிடிவாதம் பிடித்ததற்காகவும் உங்கள் வாசகனான அவனால் நீங்கள் கொல்லப்பட்டீர்கள்.

 

குறுங்கதைகள்-பரமார்த்த குரு*வின் சீடன் குருவான போது…



 

பராமார்த்த குருவுக்கு ஐந்து சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் மட்டி. அவன் தன்னுடைய குருவை விட அதிக ஞானம் பெற்றுவிட்டதாகக் கருதினான். அதனால் தன் போக்கில் தனி மடத்தைத் தொடங்கி சீடர்களைச் சேர்த்தான் மட்டி. சந்தேகம் கேட்க வந்த பொது மக்களுக்கு ஆலோசனை கூறத் தொடங்கினான். அவனுடைய இறந்து போன பெற்றோர் அவனுக்குத் துணை நிற்பதாகக் கூறிக் கொண்டான். அவனுடைய சீடன் ஒருவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான். ஏன் ஒருவருடைய முகம் கண்ணாடியில் பிரதிபலிக்கையில் எதிராகத் தெரிகிறது நேராகத் தெரிவதில்லை என்றான். மட்டி அதற்குக் கண்ணாடியைத் திருப்பி வைத்துப் பார்த்தால் நேராகிவிடும் என்று விடை கூறிவிட்டான். கண்ணாடிக்குள் செல்ல முடியுமா என்று மற்றொரு சீடன் கேட்டான். செல்லலாம் அதற்கு நம் உடல் கண்ணாடி போல் ஆகவேண்டும் என்றான் மட்டி. கண்ணாடி பிம்பத்தை உடைத்தாலும் நாம் ஏன் உடைவதில்லை என்றான் வேறொருவன். கண்ணாடி பிம்பத்தை உடைத்தால் பல நூறாகப் பெருகும் நம்மால் பெருக முடியாது என்றான் மட்டி. எல்லா கண்ணாடிகளும் ஒரே மாதிரியான பிம்பத்தைக் காட்டுவதில்லையே ஏன் என்றான் ஒரு சீடன். எல்லா நேரத்திலும் நாம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்றான் மட்டி. கண்ணாடி முன் நாம் நிற்கும் போது நம்மை மட்டுமே அது ஏன் பிரதிபலிக்கிறது, நாம் நினைப்பவற்றை ஏன் பிரதிபலிப்பதில்லை என்று கேட்டு குருவை மடக்கிவிட்டதாக மகிழ்ந்தான் ஒரு சீடன். அப்படி நினைப்பவற்றைக் காட்டினால் நாம் மறுத்துவிடுவோம் என கண்ணாடிக்குத் தெரியும் என்றான் மட்டி. நீங்கள் கண்ணாடியா என்று கேட்டான் ஒரு சீடன். நாம் அன்றாடம் நம்முடைய கண்ணாடிகளாகத்தான் இருக்கிறோம் என்றான் மட்டி. ஆனால் உங்களை நான் பார்த்தால் நான் ஏன் தெரிவதில்லை என்றான் சீடன். நான்தான் நீ என்றான் மட்டி.


*வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதையின் பாத்திரங்கள் இங்கு மீண்டும் எடுத்தாளப்படுகின்றன.

Friday 27 August 2021

குறுங்கதைகள்-குறுவாள்





அவனிடம் மிகச்சிறிய குறுவாள் ஒன்று இருந்தது. பழைய இரும்புக் கடை ஒன்றில் அது கிடைத்தது. அதன் அழகில் சொக்கி அவன் அதை வாங்கிக் கொண்டான். அதன் முனையில் விஷம் தோய்த்து உறையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது பணம் தேவைப்பட்டால் கூட்ட நெரிசலில் புகுந்து யாராவது ஒருவரை அவர் அறியாமல் குத்திவிட்டு அவரிடம் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிவிடுவான். இப்படிச் செய்வதில் பணத்திற்காக இந்தக் கொலைகளைச் செய்தான் என்பதைவிட அந்தக் குறுவாளை வாகாகப் பயன்படுத்த முடிவதை எண்ணி இன்பம் அடைவதை நோக்கமாகக் கொண்டுதான் அவற்றைச் செய்தான். பணம் கையில் கிடைத்தவுடன் திரைப்படம் பார்க்கச் சென்றுவிடுவான். அன்று அப்படி ஒரு கொலையைச் செய்துவிட்டுத் திரைப்படம் பார்க்கத் திரையரங்கத்தில் வந்தமர்ந்தான். இடுப்பில் குறுவாள் இருக்கிறதா என அடிக்கடித் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். திரைப்படம் தொடங்கியது. அதில் வந்த கதாநாயகன் இவன் வைத்திருக்கும் அதே போன்ற குறுவாள் கொண்டு இவனைப் போலவே கூட்ட நெரிசலில் ஒருவரைக் கொலைச் செய்தான். அடுத்தடுத்து இவனைப் போலவே அதே வரிசையில் கொலைகள் நடந்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இருக்கையின் விளிம்பில் அமர்ந்திருந்த இவன் எழுத்து, தான் அந்தக் கொலைகளைச் செய்யவில்லை எனக் கூச்சலிடத் தொடங்கினான். அருகில் இருந்தவர்கள் அவனைப் பிடித்து இழுந்து இருக்கையில் அமரவைத்தனர். அவனுக்குக் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. திரையில் அடுத்து நடக்கப் போவதுதான் தனக்கும் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் திரையை உற்று நோக்கினான். திரையில் கதாநாயகன் திரைப்படம் பார்க்கப் போய் அமர்ந்திருந்தான். அவன் குறுவாள் நழுவிக் கீழே விழுகிறது. அதைக் கவ்விய பெரிய எலி அவனுடைய ஒரு காலில் விஷமேறிய அந்தக் குறூவாளைக் குத்திவிட்டு ஓடி மறைகிறது. இருக்கையிலேயே அந்தக் கதாநாயகன் சாய்ந்துவிடுகிறான். தன்னுடைய குறுவாள் இருக்கிறதா என தொட்டுப் பார்த்தான். அது காணாமல் போய்விட்டிருந்தது.  

குறுங்கதைகள்-பானை





தோழிகள் இருவரும் பானைகளைச் செய்யும் தொழில் செய்து வந்தார்கள். ஒருத்தியின் பானைகள் மிக அழகாக நேர்த்தியாக இருந்தால் அதிக விலைபோயின. மற்றொருத்திக்கு இது நெருடலையும் மன உளைச்சலையும் தந்தது. தன்னுடைய பானைகளும் குறையின்றித் தான் இருக்கின்றன. ஆனால் ஏன் விலை போவதில்லை என கவலை கொண்டாள். தன் பானையின் நேர்த்தியின்மையை ஒரு நாள் தோழி சுட்டிக்காட்டினாள். அதிலிருந்து அவளைப் பார்ப்பதையும் அவளுடன் பேசுவதையும் நிறுத்தினாள். ஒரு மாந்திரீகனிடம் சென்று தனக்குப் போட்டியாகத் தன் தோழி செய்து வரும் பானைத் தொழிலை இனி அவள் செய்யவே கூடாது எனவும் அதற்காக ஏதாவது ஒரு சூனியம் செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாள். மாந்திரீகன் அவளிடம் ஒரு பானையைக் கொடுத்து அதில் தினம் தண்ணீர் ஊற்றி வர வேண்டும். அதை உடையாமல் பாதுகாக்கவேண்டும். உடைந்தாலோ தண்ணீர் ஊற்றாமல் இருந்தாலோ அவள் செய்யும் தொழில் நாசமாகிவிடும் எனக் கூறினான். அவளும் அதை ஏற்று அதைப் பத்திரமாக வைத்து தண்ணீர் ஊற்றி வந்தாள். சில நாட்களிலேயே அவளுடையத் தோழியின் பானைகள் எல்லாம் உடைந்து போயின. அவளால் விற்பனைக்குக் கொண்டுச் செல்ல முடியவில்லை. அவள் வீட்டில் முடங்கினாள். அவள் ஒரு பூனையை வீட்டில் வளர்த்து வந்தாள். அதனிடம் தன் தொழில் நலிந்து போய்விட்டதைக் கூறி அழுதாள். இதைக் கேட்டப் பூனை சமயம் பார்த்துக் காத்திருந்தது. தன் உரிமையாளரின் கண்களில் கண்ணீர் வடியச் செய்தவள் வீட்டை விட்டு எப்போது வெளியே கிளம்புவாள் என்று பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் அவள் பானை செய்ய மண் வாங்க வெளியே கிளம்பினாள். அப்போது அவள் வீட்டுக்குப் போய் மாந்திரீகன் கொடுத்த பானையை உருட்டி வெளியே போட்டுவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு பானையை வைத்தது. மாந்திரீகனின் பானையையும் உடைத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டது. அடுத்தநாள் வழக்கம் போல் மாந்திரீகனின் பானை என எண்ணி அங்கிருந்த பானையில் தண்ணீரை ஊற்றினாள். அவள் செய்து வைத்த பானைகள் எல்லாம் கீழே விழுந்து உடைந்தன.

 

Wednesday 25 August 2021

குறுங்கதைகள்-யானை


 



சுள்ளி பொறுக்குவதற்காக அந்தக் காட்டிற்கு வந்தேன். முந்தைய நாள் மழையில் எல்லா இடமும் இன்றும் ஈரமாகவே இருந்தது. அப்போது சட்டென்று ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டேன். மேலே ஏறவே முடியவில்லை. தூரத்திலிருந்து ஒரு யானை அருகே வந்து நின்றது. அதனிடம் கையைக் காட்டி மேலே இழுக்கச் சொன்னேன். அது எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியவில்லை. சிறிது நேரம் அருகில் நின்ற யானை கொஞ்சம் தொலைவில் சென்று சிறுசிறு கற்களைப் பொறுக்கி எடுத்து வந்து பள்ளத்தில் போட்டது. ஓரளவு பள்ளம் நிரம்பியது. அடுத்த நாளும் கடும் மழை பொழிந்தது. யானை என்னருகிலேயே நின்று தும்பிக்கையில் என் கையைப் பிடித்துக் கொண்டது. பள்ளத்தில் நீர் நிரம்பியது. மீண்டும் யானை என்னை இழுத்துப் பார்த்தும் முடியவில்லை. அருகில் நின்ற யானை பக்கத்தில் ஏதோ தேடி ஒரு விதையை என் தலை மீது போட்டது. பழங்களையும் கிழங்குகளையும் பறித்து வந்து எனக்கு உண்ணக் கொடுத்தது. அருகிலிருந்து ஓடையிலிருந்து தண்ணிரைக் கொண்டு வந்து குடிக்கக் கொடுத்தது. என் தலை மீதும் தண்ணீரை ஊற்றியது. சில நாட்கள் அந்தப் பள்ளத்திலேயே யானையின் பராமரிப்பில் இருந்தேன். தலையில் செடி வளர்ந்திருந்தது. மெல்லிய
வேர்கள் தலையிலிருந்து கீழே பரவிக் கொண்டிருந்தன. மேலும் சில நாட்கள் ஒரு சிறிய மரமாக அது வளர்ந்துவிட்டிருந்தது. எப்படியோ யானை கொடுக்கும் பழம், கிழங்கு போன்றவற்றை உண்டும் நீரைப் பருகியும் காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தேன். இரவும் பகலும் யானை அருகிலேயே நின்றிருந்தது. சில நாட்களில் மரம் பெரிதாக வளர்ந்துவிட்டிருந்தது. ஒரு நாள் யானை அந்த மரத்தை வேருடன் சாய்த்தது. அப்போது நானும் அந்த வேருடன் வெளியே வந்தேன். யானை என்னைத் தூக்கி வெளியே போட்டது. 

குறுங்கதைகள்-கை





அன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்தவுன் சாலையில் யாரோ ஒருவருடைய பாதி கை துண்டிக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்தேன். அதிர்ச்சி அடைந்து உடனே வீட்டுக்குச் சென்று கதவை மூடிக்கொண்டேன். ஒரே குழப்பமாக இருந்தது. யாருடைய கையாக இருக்கும். அணிந்திருந்த உடையுடன் அந்தக் கை வெட்டுப்பட்டிருந்தது. காவல் துறையில் புகார் அளித்தால் வீணான வம்பு வந்து சேருமே என்ற எண்ணம் மேலோங்கியது. பலரும் கவனித்திருப்பார்கள் நாம் மட்டும் ஏன் சொல்லவேண்டும் என்று தோன்றியது. அந்தக் கைக்கு உரியவன் இறந்துவிட்டிருப்பான் என எண்ணி சங்கடமாக இருந்தது. வீட்டுக்கு மேலே சென்று என்ன ஆகிறது என்று பார்க்கலாம் என நினைத்தேன். சாலையில் நான் பார்த்த போதிருந்த பாதி கை இப்போது முழு கையாக வளர்ந்திருந்தது. என் கண்களுக்கு மயக்கம் வந்துவிட்டது என எண்ணி கீழே வந்துவிட்டேன். இருந்தாலும் ஆர்வமிகுதியால் மீண்டும் போய்ப் பார்த்தேன். கை மட்டுமல்ல தோளும் வளர்த்திருந்தது. அத்துடன் உடையும் இருந்தது. இது எப்படி நடக்கும் என சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்தேன். எந்த மாற்றமும் இல்லை. கீழே போய்விட்டு சில மணி நேரங்கள் கழித்து வந்து பார்த்தேன். உடலின் மேல் பாகம் முழுக்க வந்துவிட்டிருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் கீழ் பாகமும் வளர்ந்துவிட்டிருந்தது. நான் பார்க்கும் போது வளராத உடல் பார்க்காத போது எப்படி வளர்கிறது என ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து போய்ப் பார்த்தேன். முழு உடலும் வளர்ந்துவிட்டிருந்து. அவன் அங்கே தூங்குவது போல் படுத்திருந்தான். அருகில் செல்லத் தயங்கி மெதுவாகச் சென்றேன். அவன் எதுவுமே நடக்காதது போல் எழுந்து அமர்ந்திருந்தான். அவனிடம் சென்று விசாரிக்கப் போனேன். அவன் மணி என்ன என்று கேட்டான். 

Monday 23 August 2021

குறுங்கதைகள்-அரசி





அன்றைய விமானப் பயணம் எப்படி அமையுமோ என எண்ணிக் கொண்டேதான் இருக்கையில் அவள் அமர்ந்தாள். விமானம் கிளம்பி அரை மணி நேரம் ஆகியிருந்தது. அவள் ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய மேகக் கூட்டத்தையும் அதற்கு நடுவே ஒரு சிறிய அண்டம் ஒன்றும் தெரிந்தது. அதில் கூர்மையாகப் பார்த்தால் இவளின் நிழலை ஒத்த ஒரு பெண் ஆட்சி செய்து கொண்டிருந்தாள். இவளின் நிழலைக் கேட்டு அந்த அண்டம் நடந்துகொண்டிருந்தது. அந்த அண்டத்தை நகர்த்தலும் மேகக் கூட்டத்தைப் பாதுகாப்பாகத் திரளச் செய்தலும் அவளுடைய முதன்மையாக வேலைகளாக இருந்தன. அங்கிருந்தவர்கள் அவளின் திறமையான வழிநடத்தலைக் கண்டு அகமகிழ்ந்திருந்தனர். இதை விடப் பெரிய அண்டம் கிடைக்குமோ என அங்கிருப்பவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு நிழலாக இருக்கும் அரசி நிஜமாக அங்கு வரவேண்டும் என்று அசரீரீ வந்தது. அப்படி அரசி இங்கு நிஜமாக வந்துவிட்டால் பெரிய அண்டங்களை நோக்கி நாம் நகரலாம் என்று அங்கிருந்தவர்கள் ஏக்கம் கொண்டனர். அது எப்போது நடக்கும் என்று அவர்கள் பொறுமையின்றி கேட்டனர். இன்னும் சில மணித்துளிகளில் அது நடக்கும் என அசரீரீ கேட்டது. அப்போது அவர்கள் எழுப்பிய கரவொலி அந்த அண்டத்தையே பிளப்பதாக இருந்தது. அந்தக் கணத்தில் அந்த அண்டத்தின் நிழலாக இருந்த அரசி நிஜமாக வந்து சேர்ந்தாள்.

மேக வெடிப்பில் சிக்கி விமானம் விபத்துக்குள்ளானது. அதிலிருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

குறுங்கதைகள்-சொல்







தினம் ஒரு சொல் அவளுக்கு ஏதோ ஒரு தொடர்பிலிருந்து வந்து சேரும். அது எப்படி அவள் வாழ்க்கையோடு பொருள் கொடுப்பதாக இருக்கிறது என்று தேடி கண்டுபிடிப்பாள். அப்போது மற்றொரு சொல் வந்து சேர்ந்துவிடும். அவளால் சில சொற்கள் எப்படிப் பொருள் கொடுக்கும் என அறிந்துகொள்ள முடியாமல் போயிருக்கிறது. இந்தச் சொற்கள் வருவது நின்று போகுமோ என சில சமயங்களில் அவள் அச்சப்பட்டிருக்கிறாள். ஏனெனில் அவற்றின் பொருளைக் கொண்டுதான் அவளுக்கு என்ன நடக்கவிருக்கிறது என பல முறை அறிந்துகொண்டிருக்கிறாள். அன்று வந்தச் சொல்லின் பொருள் பூனை என்றிருந்தது. பூனை போல் பதுங்க வேண்டுமோ எனவும் இரவில் கண் விழித்து பகலில் தூங்க வேண்டுமோ எனவும் பலவாறு குழம்பி பூனை மீது வைக்கும் பிரியத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அடுத்த நாள் எலி என்ற பொருள்படும் சொல் வந்தது. பூனை எலியைப் பிடிக்க வரும் என்ற பொருள் பொருத்தமாக இருந்தது. அடுத்த நாள் பால் என்ற சொல் வந்தது. பூனைக்குப் பால் ஊற்றினால் எலியைப் பிடிக்கத் தெம்பிருக்கும் எனப் பொருளை வளர்த்தாள். அடுத்த நாள் பொறி என்ற சொல் வந்தது. பூனை எலியைப் பிடிக்காவிட்டால் பொறி வைத்துப் பிடிக்கலாம் என சமாதானமடைந்தாள். அடுத்த நாள், இரவு என்ற சொல் வந்தது. பூனை எலியை இரவு பிடிக்கலாம் என எண்ணிக் கொண்டாள். அடுத்த நாள் இருள் என்ற சொல் வந்தது. பூனைக்கு இருளில் கண்கள் நன்றாகத் தெரிவது போல் எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருக்கவேண்டும் எனப் புரிந்துகொண்டாள். அடுத்த நாள் தோல்வி என்ற பொருள்படும்படி ஒரு சொல் வந்தது. பூனை எலியைப் பிடிக்க முடியாமல் தோற்றுவிட்டது என எண்ணிக் கொண்டாள். அடுத்த நாள், சாவு என்ற சொல் வந்தது. பூனை சாகுமோ எலி சாகுமோ என்ற யோசனையிலேயே இருந்தாள். இரவு கடும் இருளில் பூனை போல் பதுங்கி அவள் வீட்டுக்கு வந்தவன் அவளைக் கொன்றுவிட்டு மரணம் என எழுதிவிட்டுச் சென்றான்.

Sunday 22 August 2021

குறுங்கதைகள்-மாயப்பெண்





மலையில் தேன் எடுக்க அவன் வந்திருந்தான். அடர்த்தியான காட்டில் தேனடைகளைப் பார்த்து அவற்றைச் சாக்கில் நிரப்பிக் கொண்டிருந்தான். அப்போது அவன் ஏறியிருந்த மரத்தின் அடியில் ஒரு பெண் துள்ளிக் குதித்து ஓடி மறைந்தாள். அவன் இந்தப் பூலோகத்தில் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை. அந்தப் பெண்ணைத் தேடிப் பார்க்க முடிவு செய்தான். அந்த மலை முழுக்கத் தேடிப் பார்த்தான். அங்கு யாரும் இல்லை. அந்தப் பெண் எப்படி அங்கு வர முடியும் என பல முறை யோசித்துப் பார்த்தான். தான் பார்த்த காட்சி உண்மையா பொய்யா எனவும் பல முறைச் சிந்தித்தான். இருந்தாலும் அவளை மறக்கவே முடியாமல் திணறினான். இருந்தாலும் இறுதியாக ஒரு முறை குகைகளில் தேடி விடலாம் என வேகமெடுத்து ஓடினான். சோர்ந்து போய் ஒரு குகையின் வாசலில் படுத்தான். அதன் பக்கத்தில் யாரோ ஓடுவது போல் ஒலி கேட்க அமைதியாகச் சுற்றிப் பார்த்தான். புதரின் மறைவில் இரு கண்கள் தெரிந்தன. மெதுவாகப் பதுங்கி அந்தப் புதரின் மறைவில் இருந்ததை இரு கைகளால் தாவிப் பிடித்தான். அது ஓர் அழகான மான் குட்டி. இத்தனை நேரம் தான் மான் குட்டியைத்தான் தேடினோமா என்று சலித்துக் கொண்டான். இருந்தாலும் அந்த மான் குட்டியைத் தூக்கிப் பார்த்த போது அதை வளர்க்கலாமா என்று நினைத்தான். அது அவனிடம் ஒட்டிக் கொண்டது. அதைத் தடவிப் பார்த்து தோளில் வைத்துக் கொண்டான். சூரியன் மறையும் நேரம் வந்துவிட்டதால் காட்டை விட்டுச் செல்லவேண்டும் என்று புறப்பட்டான். மானிலிருந்து பிரிந்தப் பெண் அவன் செல்வதைப் பார்த்து புன்னகைத்து மறைந்தாள்.

 

 

Friday 20 August 2021

குறுங்கதைகள்-அம்பலாதன் வரலாறு

 




இது பல நூறாண்டுகளுக்கு முன் நடந்த கதை. அம்பலாதன் எனும் தச்சன் தன் குல தெய்வத்திற்குக் கோயில் கட்டி அங்கு உயர்வகை எட்டி மரத்தை நடவிரும்பினான். அந்தக் குலதெய்வம் அவனுடைய கனவில் வந்து பல ஆயிரம் கஜங்களுக்கு அப்பால் இருக்கும் எட்டி மரத்தைக் காட்டி அதன் விதையை எடுத்துவந்து வளர்க்குமாறு சொல்லிவிட்டதால் அந்த இடத்திற்குச் செல்லப் பயணப்பட்டான். அவனுக்குச் சித்த மருத்துவமும் பல மொழிகளும் தெரியும். தான் கனவில் கண்ட அந்த மரம் இருக்கும் வனத்தை எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிட்டான். அங்கு இருந்தவர்கள் ஒரு மரத்திற்காக ஊர் விட்டு ஊர் வந்திருக்கும் அம்பலாதனை விநோதமாகப் பார்த்தனர். அந்த ஊரில் சில நாள் தங்கியிருந்த அவன் அங்குப் பல நோயாளிகளை மூலிகை மருந்தைக் கொடுத்துக் குணப்படுத்தினான். இவன் வருகையையும் அதன் நோக்கத்தையும் இவனுடைய மருத்துவ அறிவையும் குறித்து அரசனிடம் சிலர் போய்ச் சொல்லியிருக்கிறார்கள். அரசன் அவனை அழைத்து வரச் சொல்லி நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்த தன் மகளைக் குணப்படுத்தினால் அவன் நினைத்தது நடக்கும் என அரசன் கூறுகிறான். அரசனின் மகள் திருமண ஏக்கம் கொண்டு நோய்வாய்ப் பட்டிருப்பதைப் புரிந்துகொண்ட அம்பலாதன் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கச் சொல்லுகிறான். அரசன் அவனையே அவளுக்குத் திருமணம் செய்துவைத்து அவள் உடல்நலம் தேறுகிறாளா என்று பார்க்க முடிவு செய்கிறான். ஆனால் அம்பலாதனுக்கு தன் ஊரில் தான் கட்டி வரும் கோயிலும் அதில் வைத்து வளர்க்கப் போகும் எட்டி மரம் மட்டுமே கவனத்தில் இருந்தது. அரசனிடம் தன் நிலையைக் கூறினான். தன் நாட்டிலிருந்து எந்தப் பொருளையும் யாருக்கும் தான் தருவதாக இல்லை என்றும் தன் மகளைத் திருமணம் புரியாமல் அவன் அங்கிருந்து போக முடியாது என்றும் அப்படிச் செய்தால் அவனைச் சிறை வைக்க வேண்டியிருக்கும் என்றும் கூறிவிட்டான். அவனுக்கும் வேறு வழியில்லாமல் திருமணம் புரிந்தான். ஆனால் ஒரு நாள் தன் ஊருக்கு எப்படியும் சென்று விடவேண்டும் எனத்  தீர்மானத்தில் இருந்தான். ஓர் இரவு எல்லோரும் தூங்கும் போது அந்தக் காட்டிற்குச் சென்று அந்த எட்டி மரத்தின் விதைகளை எடுத்துக் கொண்டு தன் ஊருக்குப் பயணப்பட்டுவிட்டான். காலையில் அம்பலாதனைக் காணாத அரசன் அவன் எங்கிருந்தாலும் அவனைக் கொன்றுவிட உத்தரவிட்டான். அவனுடைய ஆட்கள் அம்பலாதனைத் தேடிக் கொண்டு புறப்பட்டனர். அம்பலாதன் ஊர் வந்து சேர்ந்தான். தனக்குத் திருமணம் நடந்ததையோ மற்ற எந்த அனுபவங்களையுமோ யாரிடமும் கூறாமல் தன் கோயில் வேலைகளைத் தொடர்ந்தான். அங்கு எட்டி விதைகளைப் போட்டு வைத்தான். ஒரு வருடம் கழிந்திருக்கும் மரம் வளர்ந்துவிட்டிருந்தது. அவனும் கோயிலை நல்ல முறையில் பராமரித்துவந்தான். அரசனின் ஆட்கள் அவன் எப்படியும் எட்டிமரத்தை எடுத்து வந்திருப்பான் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருந்தனர். அவர்கள் அவன் கோயிலில் வளர்ந்திருந்த எட்டி மரத்தைப் பார்த்தனர். அது அவனுடையதுதான் என்று புரிந்துகொண்டனர். எட்டி மரத்தின் வேரைப் பார்த்தனர். ஒன்று வடக்கு நோக்கி வளர்ந்திருந்தது. அதை மட்டும் வெட்டி ஒரு மாந்திரீகனிடம் கொடுத்து அம்பாலதனுக்குச் செய்வினை வைக்கச் சொல்லி வற்புறுத்தினர். அவனும் செய்வினை வைத்தான். அம்பலாதன் பித்துப் பிடித்து அந்த மரத்தை வெட்டிவிட்டு கோயில் கிணற்றில் பாய்ந்து இறந்து போனான்.

 

 

 

Thursday 19 August 2021

குறுங்கதைகள்-கப்பல்





மழை நீர் ஆறாக ஓடியதைப் பார்த்து சிறுமிக்கு உற்சாகம் கரை புரண்டது. உடனடியாக ஒரு தாளை எடுத்து படகு ஒன்றைச் செய்து அந்தத் தண்ணீரில் விட்டாள். அது மிதந்து போனது. உடன் அவளும் சென்றாள். சிறிது தூரம் போனவுடன் படகு பெரிதானது. இன்னும் கொஞ்சம் தூரத்தில் சிறுமி அமரும் அளவுக்குப் பெரிதானது. அதில் அமர்ந்தாள் சிறுமி. இன்னும் சற்றுத் தொலைவில் பெரிய படகானது. கடலில் போய்ச் சேரும் இடத்தில் பெரிய கப்பலானது. சிறுமி பெரும் ஆனந்தம் அடைந்தாள். கப்பல் நல்ல வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. தொலைவில் ஒரு தீவு தெரிந்தது. அந்தத் தீவுக்குப் போகலாமா என சிறுமி நினைத்தாள். கப்பல் அங்குச் சென்று நின்றது. சிறுமி கப்பலை விட்டு இறங்கி தீவுக்குள் சென்று பார்த்தாள். இனிமையான பழங்கள் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றைப் பறித்து உண்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தாள். மற்றொரு தீவு தூரத்தில் தெரிந்தது. அங்குப் போனாள். அங்குப் பெரும் பாம்புகள் ஊறிச் சென்றுகொண்டிருந்தன. பயந்து வந்து கப்பலில் ஏறிக் கொண்டாள். அவள் வேகமாக மற்றொரு தீவுக்குப் போனாள். அங்கு வெகு உயரமான மனிதர்கள் இருப்பது தூரத்திலிருந்து தெரிந்ததால் அங்குப் போகவேண்டாம் என நினைத்தாள். அதற்குள் அங்கு உள்ளவர்கள் இவளைத் துரத்தி வரத் தொடங்கினார்கள். இவள் அச்சமுற்று அமர்ந்திருக்க ஓர் உயரமான மனிதன் ஒரே பாய்ச்சலில் இவளைத் தூக்கி அந்தத் தீவில் போட்டுவிடுகிறான். கப்பல் அங்கேயே நின்றுவிடுகிறது. அவர்களைப் பார்த்து விட்டுச் செல்பவர்களை அவர்கள் விட்டுவைப்பதில்லை என்று அந்த உயரமான மனிதர்கள் சொல்கிறார்கள். அவளை எரியும் தழலில் வீச எத்தனிக்கிறார்கள். அவள் அலறி தான் தெரியாமல் வந்துவிட்டதையும் கப்பல் வளர்ந்தக் கதையையும் சொல்கிறாள். அந்தக் கப்பலைப் பார்க்க வரும் ஓர் உயரமான மனிதன் அந்தக் கப்பலைத் தொட்டவுடன் குள்ளமான மனிதனாகிவிடுகிறான். இதைக் கண்ட மற்றவர்கள் சிறுமி ஏதோ மாயாஜாலம் செய்பவள் எனக் கருதி அவளை அந்தக் கப்பலில் ஏற்றி அனுப்பிவைத்து விடுகிறார்கள். கப்பல் வேகமெடுத்து போகும் போது கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைக்கிறார்கள். அப்போது கப்பலின் மேல் பகுதியில் ஒரு பறவை வந்து ஒரு ஓலையைப் போட்டுவிட்டுப் போகிறது. அதை எடுத்துப் படிக்கும்போது அந்தக் கப்பலின் அடிப்பகுதியில் ஒரு சிறிய பெட்டியும் அதற்கான சாவியும் இருப்பதாகவும் அந்தப் பெட்டியைத் திறந்தால் அந்தக் கடற்கொள்ளையர்கள் திசைமாறிச் சென்றுவிடுவார்கள் என்றும் எழுதியிருக்கிறது. சிறுமி உடனே கப்பலின் அடிப்பகுதிக்குச் சென்று அந்தப் பெட்டியைத் திறக்கிறாள். அதே போல் கடற்கொள்ளையர்கள் காணாமல் போகிறார்கள். இத்தனை அற்புதங்களையும் பார்த்த சிறுமி தன் வீட்டுக்குச் செல்லவேண்டும் என நினைக்கிறாள். மீண்டும் அவள் இடம் நோக்கி கப்பல் விரைந்தது. கடல் வரை கப்பலாகவும் அதனைத் தாண்டியவுடன் படகாகவும் அளவு குறைந்தது. வீட்டின் அருகே வந்தவுடன் சிறுமி செய்த சிறிய படகாக மாறியது. சிறுமி தன் வீடு சென்று நிம்மதியாக உறங்கினாள்.

 

குறுங்கதைகள்-மேற்கோள்





என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு போவான். குடித்து விட்டு வந்து தூங்குவான். வழக்கம் போல் காலையில் அலுவலகம்  கிளம்பிவிடுவான். தினம் வழமையாக நடக்கும்  இது அவனுக்குச் சலிப்பைத் தரவில்லையா என்று ஒரு நாள் கேட்டேன். ஆம் என்றான். இனிமேல் சண்டை போட்டாலும் வேறு ஏதாவது புதுமையாகச் செய்யலாம் என சொல்லிவிட்டுப் போனான். அலுவலகம் போய் ஒரு தத்துவவாதியின் கீழ்க்கண்ட மேற்கோளை அனுப்பினான்:

      “இருவருக்கு இடையில் இணக்கம் என்பது இணக்கமின்மைக்கான அச்சத்திலிருந்து வருவது. இதில் இணக்கம் என்பதில் அன்பு, பாசம் போன்ற பெயரிடப்படாத பல உணர்வுகளைப் பொதித்து வைப்பதன் மூலம் இணக்கமின்மை வெடித்துவிடுகிறது. அன்பின்மை, வெறுப்பு, துயரம் போன்ற பல எதிர்மறை உணர்வுகள் குடியேறிவிடுகின்றன. இணக்கமும் இணக்கமின்மையும் ஒரே பொருளைத்தான் கொண்டிருக்கின்றன. இதுதான் சலிப்புக்கு அடிப்படையாகிறது. இணக்கமும் சலிப்பைத் தருகிறது. இணக்கமின்மையும் அவ்வாறே. இதில் சலிப்பின்றி இருப்பது குறித்தத் தேடல் மறைகையில் வாழ்வின் சுமை கூடிவிடுகிறது. அதை அடுத்தவர் தலைமேல் போட்டுவிடுவதே குறிக்கோளாக இருப்பதால் போர் மூளுகிறது. இதில் சமாதானமும் சலிப்பின் ஒரு வடிவம்தான். போரில் இருக்கும் சுவை சமாதானத்தில் இருப்பதில்லை. போர் உருவாகிவிடும் அல்லது போரை உருவாக்கவேண்டும் என்பதில் உள்ளார்ந்து ஏற்படும் கிளர்ச்சிக்கு நிகர் ஏதுமிருப்பதில்லை. அதை அனுபவிக்கத்தான் சலிப்பை அதிகப்படுத்த முனைகிறோம். போர் அபின் போன்றது. அந்த மயக்கம் தரும் போதைக்காக எவ்வளவு சலிப்பையும் தாங்குகிறோம். பால், சாதி, மத, இன வேறுபாடு எல்லாம் முக்கியமல்ல. தொடர்ந்து சலிப்படைந்து போரிடுகிறோம். போரைக் கைவிட்டு அங்குக் குடியேறிவிடும் சலிப்பை வெளியேற்ற எந்த ஆயுதமும் இல்லை. போரும் இன்றி சலிப்பும் இன்றி இருப்பதுதான் முக்தி நிலை. அது ஒருவருக்கு வாழ்நாளில் எதற்குத் தேவை? எனவே போரிடலாம் சலிப்படைய. சலிப்படையலாம் மீண்டும் போரைத் தொடங்க…”

இப்படி தினம் ஒன்றைப் புதுமையாகச் செய்து நாம் இணக்கமும் இணக்கமின்மையும் கொள்ளலாம் என்றும் ஒரு செய்தியை அனுப்பியிருந்தான். இந்தப் புதுமைக்கு சண்டையே பரவாயில்லை என்று தோன்றியது. 

குறுங்கதைகள்-பறவை





இந்த ஓடுதான் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. இதிலிருந்து வெளியே வர இந்த முட்டையை உடைக்கவேண்டும். அதன் பின் இதிலிருந்து பறந்து போய்விடலாம். யாராவது இதை உடைத்து நம்மை வெளியே எடுத்தால் பெரும் ஆசுவாசமாக இருக்கும். இப்படி எல்லாம் அந்தச் சிறுபறவை எண்ணிக் கொண்டிருந்த போது முட்டை உடைந்தது. வெளியே அந்தப் பறவை எதிர்பார்க்காத வகையில் ஒரு கழுகு அமர்ந்திருந்தது. அந்தச் சிறுபறவையைத் தூக்கிச் செல்லும் ஆக்ரோஷம் அதனிடம் இருந்தது. அந்தச் சிறுபறவை கழுகிடம் தன்னை விட்டு விட கெஞ்சியது. கழுகு அதற்கு ஈடாக அது வளர்ந்த பிறகு இடும் முட்டைகள் அனைத்தையும் தனக்கே தரவேண்டும் என்றது. உயிர் பிழைப்பதற்காக அதற்கு ஒத்துக் கொண்டது சிறுபறவை. வளர்ந்த பின் அந்தக் கழுகைச் சந்திக்கக்கூடாது என எண்ணிக் கொண்டது. வளர்ந்துவிட்ட அந்தச் சிறுபறவை தன் கூட்டில் முட்டை இட்டு வைத்திருப்பதைக் கழுகு அறிந்துகொண்டு அங்கு வந்தது. இதைப் பார்த்துவிட்ட அந்தச் சிறுபறவை கழுகை விரட்ட பாம்பிடம் சென்று தன்னைக் கழுகிடம் காப்பாற்ற மன்றாடியது. அதற்குப் பாம்பும் முட்டைகள் வேண்டும் என்று கேட்டது. பறவையும் ஒத்துக் கொண்டது. கழுகும் பாம்பும் சண்டையிட்டன. அப்போது சிறுபறவை தன் முட்டைகளைக் கொண்டு போய் மலை உச்சியில் வைத்தது. மீண்டும் அவைகளிடம் சிக்காமல் இருக்க மலைப் பொந்தில் வாழ்ந்துவந்தது. அங்கிருந்து பார்த்த போது இனி தன் உலகம் இப்படி தனிமையான ஒன்றாக இருந்துவிடும் என்பதைப் புரிந்துகொண்டு பறவை பெரும் துயரத்தில் வீழ்ந்தது. வாழ்வதற்காக என்னன்ன மலினமான நடத்தையைத் தான் மேற்கொள்ள வேண்டியிருந்தது என எண்ணி வருந்தியது. உடனே முட்டைகளை எடுத்துக் கொண்டு போய் கழுகிற்கும் பாம்பிற்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு மலை உச்சிக்கு வந்து கீழே பாய்ந்து இறந்தது. 

Monday 16 August 2021

குறுங்கதைகள்-தேள்






மகனுக்கு உடல்நிலை சரியில்லை. மூளையில் கட்டி என்று சொல்லிவிட்டார்கள் அறுவை சிகிச்சைக்குப் பின் என்ன ஆகும் என மருத்துவர்கள் உறுதி கூறவில்லை. எனக்கிருந்த ஒரே துணை முருகன்தான். அவனிடம் முறையிட்டேன். எந்தச் சலனமும் இல்லை. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அது தீர்க்கப்படும் என்பதற்கு முருகன் ஏதாவது அறிகுறியைத் தருவான். இது வரை எந்த அறிகுறியும் தென்படவில்லை. முருகனுக்கு விருப்பமிருந்தால் நலம் பெறட்டும் இல்லை எனில் முருகன் விருப்பத்தை ஏற்கலாம் என முடிவு செய்துவிட்டேன். அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரத்திற்கு முன் மகனிடம் ஏதோ ஒரு மாற்றம் தென்பட்டது. இது நல்லதா கெட்டதா எனத் தெரியவில்லை. பொறுமையாக இருந்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என நினைத்தேன். கடைசியாக ஒரு முறை ஆய்வுக்கு மகனை அழைத்துச் சென்றார்கள். கட்டி இன்னும் சிறியதாகிவிட்டது எனவும் அறுவை சிகிச்சை தேவை இல்லை எனவும் கூறி மருந்து மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். முருகனின் திருவிளையாடல் எனப் புரிந்துகொண்டேன். இது எப்படி நடந்திருக்கும் எனும் ஆவல் அடக்க முடியாததாக இருந்தது. அபாயத்திலிருந்து காக்கப்பட்டிருப்பதை நம்ப முடியவில்லை. இதை யோசித்துக் கொண்டே வெளியே பார்த்த போது ஒரு ஸ்கார்ப்பியோ வண்டி வந்து நின்றது அதன் முன் பகுதியில் ஒரு வேல் நிறுத்தப்பட்டிருந்தது. வேலின் தண்டு சிவப்பு நிறத்தில் இருந்தது. அந்த நேரத்தில் அடித்த ஒளி அது வேறு பல பொருள்களையும் தந்தது. தேளின் கொடுக்குப் பதிவதற்கு முன் வேலால் அது நசுக்கப்பட்டிருக்கிறது என்பதாக அதைப் புரிந்துகொண்டேன்.

 

Sunday 15 August 2021

குறுங்கதைகள்-பயணம்






அந்தக் கடற்கரையில் அழகான பறக்கும் தட்டு ஒன்று வந்திறங்கியது. அதிலிருந்து ஒளியைப் போன்ற ஒரு பெண் இறங்கினாள். அவள் கையில் கண்ணைப் பறிக்கும் நிறத்தில் ஒரு பெட்டி வைத்திருந்தாள். அவளைக் கண்டவர்கள் அசையாமல் அதே இடத்தில் நின்றுவிட்டிருந்தார்கள். அந்தக் கிரகத்தின் ஆயுள் முடிவடைய இருப்பதால் அங்கிருப்பவர்களைக் காப்பாற்ற வந்திருப்பதாகச் சொன்னாள். அதனால் அங்கிருப்பவர்களை மூன்று வகையாகப் பிரித்திருப்பதாகவும் அவர்களை வேறு மூன்று கிரகங்களுக்கு அனுப்பிவிடப் போவதாகவும் சொன்னாள். முதல் பிரிவு உள்ளுணர்வு மூலம் எதையும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்பவர்கள். இரண்டாவது பிரிவு உள்ளுணர்வில் எதையும் புரிந்துகொள்ளாதவர்கள். மூன்றாவது பிரிவினர் உள்ளுணர்வில் புரிந்துகொண்டாலும் அதற்கு எதிராக நடந்துகொள்பவர்கள். இப்படிப் பிரிக்கப்பட்டதில் உள்ளுணர்வால் இயங்குபவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்த மூன்று பிரிவினரையும் கொண்டு செல்ல மூன்று விண்கலன்கள் வந்திறங்கின. மூன்று பிரிவினரும் அவர்களுக்கு உரிய விண்கலன்களில் ஏறிக்கொண்டனர். அந்தப் பெண் தன் கண்கவர் நிறப்பெட்டியைத் திறந்து அந்த விண்கலன்கள் செல்லும் பாதையைக் குறித்துக் கொண்டாள். விண்கலன்கள் கிளம்பின. முதலாம் பிரிவான உள்ளுணர்வால் இயங்குபவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்கள். இரண்டாம் பிரிவினர் இலக்கு எது என்று அறியாமல் விண்வெளியில் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தனர். மூன்றாம் பிரிவினர் அவர்களைக் கடக்கும் போது அவர்கள் போகும் திசைக்கு எதிர் திசையில் போகும்படி அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்கள். மூன்றாம் பிரிவினர் ஒரு முறை விண்வெளியைச் சுற்றி விட்டு மீண்டும் தங்கள் கிரகத்திற்கே வந்து சேர்ந்துவிட்டனர். அவர்கள் இரண்டாம் பிரிவினர் மீது பரிதாபப்பட்டனர். மேலும் அவர்கள் முதலாம் பிரிவினர் கடும் போராட்டத்தை அடைவார்கள் என்று சாபமிட்டனர். இந்த வகையான மூடநம்பிக்கைகளை நம்பக்கூடாது என்றும் எது நடந்தாலும் துணிச்சலாகச் சமாளிக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் கூறிக்கொண்டார்கள். இலக்கு எது என்று தெரிந்தும் அதை அடையவிடாத அதில் ஒரு குழுவை மற்றொரு குழு கடுமையாகச் சாடியது. அதனால் பெரிய போர் வெடித்தது. அந்தக் கிரகத்தை அழிக்கும் ஆயுதத்தை அவர்களில் ஒரு குழு பிரயோகித்தது.  

குறுங்கதைகள்- குழந்தை*





காலையில் இருந்தே அவனுடன் அவளுக்குச் சண்டைத் தொடங்கிவிட்டிருந்தது. இந்த ஒரு மாதக் குழந்தையை வைத்துக் கொண்டு அவள் படும் அவஸ்தை சொல்லி மாளாததாக இருந்தது. அவனுக்குக் குடி மட்டுமே விருப்பமான ஒன்றாக மாறிவிட்டிருந்தது. அவள் இனி ஏதாவது வேலைக்குப் போனால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு வேலைக்கும் போவது சிரமம். இதை எங்கேயும் விட முடியாத சூழல் வேறு அவளை அலைக்கழித்தது. அவன் மயங்கி உறங்குவதைப் பார்க்கும் போது தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிடலாம் போல் இருந்தது. அமைதியாக யோசித்தாள். அவன் எழுந்து மறுபடியும் குடித்துவிட்டு வரக் கிளம்பினான். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவன் புறப்படுகையில் இனி அவனை வீட்டுக்கு வரவேண்டாம் என்றாள். அவளை ஓங்கி அறைந்தான். அவள் சுருண்டு படுத்துவிட்டாள். இரவு அவன் சாலையில் அடிபட்டு விபத்தில் இறந்துவிட்டதாக யாரோ வந்து சொன்னார்கள். இவள் எந்தச் சிந்தனையும் இல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். விடிந்து சில மணி நேரங்கள் ஆன பின்தான் அவள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தாள். குழந்தையைக் கையில் எடுத்து ஒரு முறை ஆழமாகப் பார்த்தாள். அவள் வீடு மூன்றாவது மாடியில் இருந்தது. கொஞ்சம் சிதிலமடைந்த குடியிருப்பு அது. சிறிய பால்கனி ஒன்றிருந்தது. அதை நோக்கிக் குழந்தையுடன் நடந்தாள். சுற்றிப் பார்த்தாள். யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு குழந்தையைத் தூக்கிவீசினாள். அது பெரிய ஒலி எதுவும் எழுப்பாமலேயே இறந்து போனது. கீழே இறங்கி வந்து குப்பை அள்ளும் வண்டியில் குழந்தையைத் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்தாள்.

* 5ஆம் வகுப்புப் படிக்கையில் பள்ளிக்குச் செல்லும் சாலையில் இருந்த வீட்டில் ஒரு கைக்குழந்தையை அதன் தாய் தூக்கி வீசிக் கொன்றதை நேரில் பார்த்ததன் நினைவாக எழுதிய கதை இது.

 

குறுங்கதைகள்-நட்சத்திரம்

 





அவளும் அவள் பொம்மையும் முதல் முறையாக அந்த அழகான நட்சத்திரத்தைப் பார்த்தனர். அப்போதிலிருந்து அந்த நட்சத்திரக்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தனர். அவள் தன் பொம்மையிடம் அதற்கான வழி ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டாள். பொம்மை கடினமான நூல் ஏணியைக் கட்டி நட்சத்திரம் வரை போய்வரலாம் என்றது. அவளும் பொம்மையும் இணைந்து நூல் ஏணியைக் கட்டத் தொடங்கினார்கள். மிக உயரமாக இருக்கவேண்டும் என்றது பொம்மை. பல நாட்களாக அதைக் கட்டி முடித்தார்கள். அதில் ஏறத் தொடங்கினார்கள். நடுவில் அவர்களுக்குப் பயம் வந்தது. இங்கிருந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று இவள் கேட்டதற்கு பொம்மை அவளுக்குத் துணிச்சல் தந்து ஏறவைத்தது. அந்த நட்சத்திரத்தை அடைந்த பின் நடக்கப் போவதை மட்டும் சிந்திக்கச் சொல்லி பொம்மை தைரியம் கொடுத்தது. எப்படியோ ஒரு வழியாக இருவரும் அந்த நட்சத்திரத்தை அடைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் அது ஒரு சொர்க்கம் போல் இருந்தது. அங்குத் தின்பண்டங்களும், விளையாட்டுப் பொருட்களும், நீரூற்றுகளும் நிரம்பி காணப்பட்டன. அவர்கள் இருவரும் அங்குப் பெரு மகிழ்வுடன் கழித்தார்கள். சில நாட்கள் கழிந்த பின் அந்த நட்சத்திரத்தின் உரிமையாளரான அசுர விலங்கு அங்கு வந்துவிட்டது. அவர்கள் இருவரையும் கண்டு கோபமடைந்த அந்த விலங்கு அவர்கள் இருவரையும் உண்ணப் போவதாகச் சொன்னது. பொம்மை அந்த விலங்கிடம் நாங்கள் இருவரும் பாடுபட்டு இங்கு வந்திருக்கிறோம் எங்களை எங்கள் இடத்திற்கு அனுப்பிவிட்டால் நன்றியுடன் இருப்போம் என்றது. அவர்கள் இருவரும் அங்கு வந்ததற்கு என்ன தண்டனைத் தருவது என்று விலங்கு கேட்டது. பொம்மை தங்கள் இடத்திற்கு வந்து தேவையானதை எடுத்துச் செல்லுமாறு கூறியது. விலங்கும் அதற்கு ஒப்புக் கொண்டது. அவர்கள் இருவரும் தங்கள் இடத்திற்கு மீண்டு வந்தார்கள். உடன் விலங்கும் வந்தது. அவர்கள் இடத்தில் பசி, பிணி, பட்டினி என்ற நரகத்தின் அத்தனைக் காட்சிகளையும் கண்ட விலங்கு அவளையும் பொம்மையையும் தன் நட்சத்திரத்திற்கு அனுப்பிவிட்டு அவர்கள் இடத்திலேயே தங்கிவிட்டது.

Thursday 12 August 2021

குறுங்கதைகள்-சமையல்






அவள் பல விதமான சமையல் வகைகளைச் செய்வதில் பெயர் பெற்றவள். என்னை வீட்டுக்கு அழைத்திருந்தாள். இதுவரை நான் பார்த்தேயிராத பல உணவு வகைகளைச் செய்து வைத்திருந்தாள். இந்த உணவு வகைகளைச் செய்ய அவளே காட்டுக்குச் சென்று பல வகையான காய், கனிகளைப் பறித்துக் கொண்டு வந்ததாகச் சொன்னாள். அந்த உணவு வகைகளின் நிறமும் மணமும் அருமையாக இருந்தன. அவற்றைப் பரிமாறிக் கொண்டே ஒவ்வொரு காய்கறி குறித்தும் சொல்லிக் கொண்டே வந்தாள். அதில் ஒன்று முட நோயை குணமாக்கும் எனவும் கரடிக்கு மிகவும் பிடித்த காய் அது என்றும் கூறினாள். மற்றொரு கனி நோய்களைத் தீர்க்கும் என்றாள். அது நரிக்குப் பிடித்தது என்றாள். இன்னொன்று ரத்தத்தை அடர்த்தியாக்கவிடாதாம். அது யானைக்குப் பிடித்தது என்றும் கூறினாள். இதே போல பல காய், கனிகளைக் குறித்தும் சொன்னாள். இந்த உணவு வகைகளைத் தயாரிக்க அவள் பல காட்சி ஊடகங்கள் பார்ப்பது நூல்களைப் படிப்பது என்று நேரத்தைச் செலவழித்ததாகக் கூறினாள். எப்படியாவது வித்தியாசமான சமையல் கலை நிபுணர் ஆவது என்பது மட்டுமே அவளுடைய இலக்கு என்று கூறினாள். அவற்றின் ருசி நாக்குக்குப் பழக்கப்படாத ஒன்றாக இருந்தது. ஒரு கட்டத்தில் உண்ணவே இயலாத அளவுக்குத் துவர்ப்பும் கசப்பும் கலந்து விஷம் போல் மாறிவிட்டது. அதைச் சொன்னால் அவள் வருந்துவாள் என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன். தன் சமையல் திறமை குறித்து என் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்தாள். உலகத்திலுள்ள எல்லா நாட்டுக்காரார்களுக்கும் உகந்த சமையலைச் செய்யக் கற்றுக் கொண்டுவிட்டதாகப் பெருமிதம் தெரிவித்தாள். அடுத்து ஒரு வகை இருப்பதாகவும் அதை யாரிடமும் இது வரை கூறியதில்லை என்றும் என்னிடம் மட்டும் ரகசியமாகச் சொல்வதாகத் தெரிவித்தாள். ஓர் இரவு என்ன சமைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு வேற்றுக்கிரகவாசி ஒரு புதிய வகை சமையலைச் சொல்லியதாகவும் அதைச் சர்வதேச சமையல் போட்டி ஒன்றில் செய்து அசத்தப் போவதாகவும் பெருமையுடன் கூறினாள். தன்னுடைய இலட்சியமே அந்தச் சமையல் வகையைச் சாப்பிட்டவர்கள் அது போன்ற உணவை உண்டதில்லை, இனி உண்ணப் போவதும் இல்லை என சொல்லிவிட்டுச் சாகவேண்டும். அதைத் தான் பார்க்கவேண்டும் என்றும் கூறிவிட்டு அதைத்தான் எனக்குச் சமைத்து கொடுத்ததாகவும் தன் சமையல் எப்படி இருந்தது என்றும் கேட்டாள். இது போன்ற உணவை உண்டதில்லை இனி உண்ணப் போவதும் இல்லை என்றேன்.

Wednesday 11 August 2021

குறுங்கதைகள்-கனவுக்குள் புகுதல்





அவளிடம் பேச முடியவில்லை. எந்தச் செய்தியையும் அவளுக்கு அனுப்ப முடியவில்லை. அவளைப் பார்க்காமலே இத்தனை நாட்கள் மூளை அலைவரிசையில் பேசிக்கொண்டு வந்திருக்கிறேன். இப்போது அது போதாது என்று தோன்றிவிட்டது. அவள் இல்லாமல் வாழ முடியாது என உறுதியாகத் தோன்றுகிறது. எப்படி அவளிடம் இத்தனையும் சொல்வது. நீண்ட நேர யோசனைக்குப் பின் அவள் கனவில் புகுந்து சொல்லிவிடுவது என முடிவெடுத்தேன். இரவு வெகு நேரம் விழித்திருந்து நள்ளிரவு தாண்டிய பின் அவள் கனவுக்குள் புகுந்தேன். முதலில் அவள் என்னை அடையாளம் காணவில்லை. பின்பு புரிந்துகொண்டாள். கனவில் என் உருவம் வேறு மாதிரி இருப்பதாகச் சொன்னாள். என் எண்ணத்தில் இருக்கும் எல்லாவற்றையும் கொட்டினேன். அவள் சிரித்துக் கொண்டாள். அவளால் இதற்கு எதுவும் செய்யமுடியாது என்றாள். ஏதாவது ஒரு தீர்வு கிடைத்தால் எனக்கு ஆறுதல் கிடைக்கும் என்றேன். தினம் அவள் கனவில் நான் வரலாம் என்றாள். அது எனக்கு உகந்ததாகப்பட்டது. அவள் எண்ணத்தை என் சார்பாக மாற்ற இதுவே சரியான உத்தி என முடிவெடுத்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியைக் கனவில் சொல்லலாம் என நினைத்தேன். ஒரு நாள் என் பலவீனத்தைக் கூறி அவளிடம் கருணையைப் பெற முயன்றேன். அடுத்த நாள் என் பலத்தைக் கூறி அவளிடம் பெருமிதம் கொண்டேன். அடுத்த நாள் அதே போல கனவில் மட்டுமே சந்திப்பதில் இருக்கும் சிக்கலைக் கூறினேன். என் சிக்கலை அவள் புரிந்து கொண்டு என் கனவில் அவள் வருவதாகச் சொன்னாள். அடுத்த நாள் நான் காத்திருந்தேன். அவள் என் கனவில் வரவில்லை. அதற்கடுத்த நாள் என் கனவில் அவள் வந்தாள். முந்தைய நாள் தன் கனவில் வேறொருவர் வந்ததாகக் கூறினாள். 

Tuesday 10 August 2021

குறுங்கதைகள்-கடவுளான கலிவர்*






கலிவர் ஓர் அழகான நகரத்தை நிர்மாணிக்கப் பல தீவுகளைத் தேடிச் சென்றார். ஓர் அருமையான தீவைக் கண்டு அதில் தான் நினைத்தவாறு ஒரு நகரத்தைக் கட்டமைத்தார். அதில் புழங்குவதற்கு வேற்றுக்கிரகத்திலிருந்து இரண்டு அங்குல உயரமான மனிதர்களை வரவழைத்தார். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக அந்தத் தீவில் வாழ்ந்து வந்தனர். கலிவரைக் கண்டு அச்சமும் வியப்பும் அடைந்தனர். அத்தனை பெரிய உருவம் கொண்ட உயிரினம் அவர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்தது. அவர்களுக்குள் கலந்து பேசி பலத் திட்டங்களைத் தீட்டினர். இவ்வளவு பெரிய உயிரினம் தங்களை நன்றாக வைத்திருந்தாலும் எல்லா நேரத்திலும் அதே போல் அது இருக்கும் என எதிர்பார்க்க முடியாது என அவர்கள் எண்ணினர். மேலும் காத்தலும் அழித்தலும் ஒரே கடவுளுக்குரிய செயல்பாடாக இருக்கலாம் என அவர்களின் மூத்தவர்கள் கூறினர். தங்கள் இனத்தில் கடவுளாவதற்கு உரியதான உத்திகளில் சிலவற்றைக் கூறினர். தங்கள் கிரகத்திலிருந்து எடுத்து வந்த வேரை உண்ணக் கொடுத்தால் அந்த உயிரினம் கல்லாக மாறிவிடும். அதன் பிறகு அதன் கடவுளாக வணங்கலாம் என்றனர். அவர்கள் இனத்தில் இப்படித்தான் கல்லாகும் பல கடவுள்கள் அருள் பாலிப்பதாக உறுதி கூறினார். இதனால் கலிவரைக் கொன்றுவிட்ட குற்ற உணர்ச்சி வந்து சேராது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் கலிவருக்கு வேரை உண்ணுவதற்காக எடுத்து வந்து அது தங்கள் இனத்தின் அமிர்தம் என்றும் அவர்களின் இனத்திற்கு கலிவர் செய்த நன்மைக்குப் பதிலாகப் பரிசாக அளிப்பதாவும் கூறி அவருக்கு உண்ணக் கொடுத்தனர். கலிவரும் அதை மகிழ்ச்சியாக உண்டார். சில மணித்துளிகளில் கலிவர் கல்லாக சமைந்தார். கடவுளான கலிவருக்கு வேற்றுக்கிரகவாசிகள் மந்திரங்கள் கூறி விழுந்து வணங்கினர்.


*ஜோனாதன் ஸ்விப்ட் எழுதிய கலிவர் பயணங்கள் கதையில் வந்த கதாபாத்திரமான கலிவர் இங்கு மீண்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.

 

Monday 9 August 2021

குறுங்கதைகள்-கொலை





அவன் இன்னும் ஓர் ஆறு மாதங்களில் கொலை செய்யப்படுவான் என அவனுடைய குரு சொல்லிவிட்டார். அதுவும் ஒரு சிறுமியின் கையால் கொலை நடக்கும் என்பதையும் கூறியிருந்தார். ஆறு மாதம் பாதுகாப்பாக இருக்கப் பெரிய கோட்டை மதில் சுவர் உள்ள வீட்டைப் பார்த்துக் குடியேறினான். அந்த மதிலைத் தொட்டால் எச்சரிக்கை மணி ஒலிக்கும்படி செய்தான். அந்தச் சுவரில் ஓரிரு சிறிய துளைகளை இட்டான். பெரும்பாலும் அவன் வீட்டுக்கு யாரும் வருவதில்லை. ஆடு, மாடு போன்ற விலங்குகள் மட்டும் அந்த மதிலின் வாசலைத் தாண்ட முயற்சி செய்யும். அவை வாசலுக்குள் வராமல் இருக்க கம்பி வேலி அமைத்து அதில் மின்சாரம் பொருத்தி வைத்தான். ஒரு துப்பாக்கியை எப்போதும் இடுப்பில் சொருகி வைத்திருந்தான். மின்சாரம் இல்லாத நேரத்தில் வேலியைத் தாண்டும் விலங்குகளைத் துப்பாக்கியால் கொன்றுவிடுவான். மதில் பக்கத்தில் யாராவது நடமாடுவது போல் ஒலி கேட்டால் அதில் இருக்கும் துளைகளில் துப்பாக்கியை வைத்துச் சுட்டுவிடுவான். ஆறு மாதங்கள் கடந்தன. ஒரு நாள் அவன் வீட்டின் நிலவறையில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுமி அந்த வீட்டின் வாசலில் வந்து நின்றாள். மின்சாரம் இல்லாததால் வாசலைத் தாண்டினாள். வீட்டைச் சுற்றி வந்தாள். வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று அறிய ஆவல் கொண்டாள். பின் கதவைத் திறந்தாள் அது திறந்தது கொண்டது. யாருமற்ற அந்தப் பெரிய வீட்டில் வெளியே வைக்கப்பட்டிருந்தத் துப்பாக்கியை எடுத்தாள். அது தன் பொம்மைத் துப்பாக்கி போலவே இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள். வீட்டின் அடிப்பகுதிக்குப் போவதற்கான படிகள் இருப்பதைப் பார்த்து அதில் இறங்கினாள். அங்கு அவன் தூங்கிக் கொண்டிருந்த அறையில் நுழைந்தாள். அவன் உறங்குவதைப் பார்த்து அவனுடன் விளையாடுவதற்காக அந்தத் துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி குறி பார்த்து இயக்கினாள்.   

 

Sunday 8 August 2021

குறுங்கதைகள்-பொம்மைப் பெண்







அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து அந்தப் பெண்ணை அங்குப் பார்த்து வருகிறான். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பாள். அவளிடம் அவன் பேசியதில்லை.  அவளை அவனுக்கு மிகவும் பிடித்தது. எப்போதும் ஏதோ ஓர் இடத்தில் அமர்ந்தே இருந்தாள் அவள். ஒரு நாள் ஆள் அரவமற்றிருக்கும் போது அவளைத் தூக்கிச் சென்றுவிடவேண்டும் என முடிவெடுத்தான். ஒரு குதிரையை அமர்த்திக் கொண்டு ஒரு நாள் இரவு அவள் வீட்டுக்கு வந்தான். வீடே அமைதியாக இருந்தது. அவள் படியில் அமர்ந்திருந்தாள். அவள் வாயைப் பொத்தி அப்படியே தூக்கிக் கொண்டு குதிரை மீது தாவி ஏறினான். அவள் பஞ்சு போல் எடை இன்றி இருந்தாள். அவன் தூக்கி வரும் போது எந்த எதிர்ப்பையும் அவள் காட்டவில்லை. அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்றெண்ணி உற்சாகமாக குதிரையை வேகமாகச் செலுத்தினான். ஊரைத் தாண்டி வரும் போது விடிந்துவிட்டிருந்தது. அவன் மீது அவள் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவன் குதிரையை விட்டு இறங்கி ஓர் ஆலமரத்தடியில் அவளைத் தூக்கி அமர வைத்தான். அதே புன்னகையுடன் இருந்தாள். அவளிடம் பேசத் தொடங்கினான். அவள் எந்த எதிர்வினையையும் காட்டவில்லை. அவளைப் பிடித்து உலுக்கினான். அவள் பொம்மையாய் சரிந்தாள்.  

Saturday 7 August 2021

குறுங்கதைகள்-பாம்பின் கால்





அவள் அருகே நெளியும் குளிர்ச்சியான கறுப்பும் நீலமும் கலந்த சிறுகோடுகள், புள்ளிகள், வளைவுகள் கொண்ட அந்தப் பாம்பின் தோல் அவளுக்கு மிகவும் பிடித்தது. அந்தப் பாம்பைத் தொடவேண்டும் என ஆவல் கொண்டாள். அவளை நோக்கி அது சீறியது. அவள் நகர்ந்து கொண்டாள். உன் தோல் மிகவும் அழகாக இருக்கிறது. நான் உன்னுடன் இருந்துவிடட்டுமா என்று கேட்டாள். நீ மனித இனம் உன்னுடன் நான் வாழ்ந்தால் என் இனம் என்னைச் சேர்க்காது என்றது அது. யாருக்கும் தெரியாமல் உன் புற்றுக்குள் நான் இருந்துகொள்கிறேன். உன் இனம் உறங்கும் போது பழங்களைப் பறித்து நான் உண்டுவருகிறேன் என்றாள். அவளுக்காக மனம் இரங்கி தன் புற்றில் வாழ இடம் கொடுத்தது. அடுத்த நாள் அவள் பழம் பறிக்கச் சென்றாள். அவள் வர காலதாமதம் ஆனது. பாம்பு பெரிதும் கவலையுறத் தொடங்கியது. தான் மனித இனத்தின் குணாம்சத்திற்கு மாறி வருவது போல் தோன்றியது. இதை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர எண்ணியது. அவள் திரும்பி வரும்போது ஒரே கொத்தாக கொத்தி அவளைக் கொன்று விடவேண்டும் எனத் திட்டமிட்டது. அவள் பாம்புக்காக எலிகளையும் தவளைகளையும் பிடித்துக் கொண்டுவந்திருந்தாள். பாம்பால் அவளைக் கொல்ல முடியவில்லை. அவள் நிம்மதியாக உறங்கினாள். பாம்புக்கு இருப்புக் கொள்ளவில்லை. தான் மனித குணாம்சத்திற்கு மாறிக் கொண்டிருப்பது தன் இனத்திற்கு ஆகாது. தன் இனம் தன்னைப் புறக்கணிக்கப் போவதைப் பாம்பால் ஏற்கமுடியவில்லை. புற்றை விட்டு வெளியே வந்தது. தூரத்தில் கிரி ஒன்று நிற்பதைப் பார்த்தது. வேகமாகச் சென்று அதன் காலடியில் விழுந்தது.

 

 

குறுங்கதைகள்-வாசகம்





மீண்டும் தலைக்குள் அந்த வாசகம் வந்து கொண்டே இருந்ததால் மனநல மருத்துவரைப் பார்க்கக் கிளம்பினான். மருத்துவர் அவனைச் சோதித்தார். என்ன வாசகம் வருகிறது என்று கேட்டார். இவனால் அதைச் சொல்ல முடியவில்லை என்றும் குறியீடுகளாக இருப்பதாகவும் சொன்னான். மருத்துவர் மனவசிய சோதனைக்கு உட்படுத்தினார். அப்போது அவனிடம் ஒரு தாளையும் பேனாவையும் கொடுத்து எழுத வைத்தார். அதில் அவன் கீழ்க்கண்ட வாசகத்தை எழுதினான்:

௩ ௨௰௮ ௨௰௪. ௰௩௨ ௨௰௭ ௰௭. ௰௭ ௨௰௫ ௨௰௧௩ .

௨௰௮௭ ௰௮. ௰௮௪ ௰௩. ௰௩௩ ௨௰௬ ௰௩ ௨௰௮௨ ௰௪௩

இவை எல்லாமே தமிழ் எண்கள் என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. இவற்றைக் கொண்டு அந்த வாசகத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசித்து அவனை ஒரு  வாரம் கழித்து  வரச் சொன்னார். அந்த வாசகத்தைக் கீழ்க்கண்ட வகையில் பிரித்தார். எண்களுக்கு நேராக தமிழ் எழுத்துகளை முதலில் எழுதிக்கொண்டார். அதன் பின் அவனுடைய வாசகத்திற்கு நேராக அந்த எழுத்துகளை எழுதினார்.

௩-3-இ

௨௰௮-28-வ

௨௰௪.-24-ன் (அருகில் இருக்கும் புள்ளி அந்த எழுத்தின் புள்ளியாக இருக்கும் எனக் கருதினார்)

௰௩௨-13+2-க+ஆ-கா

௨௰௭-27-ல

௰௭.-17-ப்

௰௭-17-ப

௨௰௫-25-ய

௨௰௧௩ .- 21+3-ண+இ-ணி .(இங்கு உயிர்மெய்யில் முடிவதால் அந்த எழுத்தின் புள்ளியாக இருக்காது. வாசகம் முடிவதற்கான புள்ளி என நினைத்தார்)

௨௰௮௭-28+7-வ+ஏ-வே

௰௮.-18-ற்

௰௮௪-18+4-ற+உ-று

௰௩.-13-க்

௰௩௩-13+3-க+இ-கி

௨௰௬-26-ர

௰௩-13-க

௨௰௮ ௨-28+2-வ+ஆ-வா

௰௪௩-14+3-ச+இ-சி

”இவன் காலப்பயணி. வேற்றுக்கிரகவாசி”.

என்ற வாசகம் வந்தது. அதனைப் பார்த்தவுடன் அவனைத் தொடர்புகொண்டு தன்னால் அந்த வாசகத்தின் பொருளை அறிய முடியவில்லை என்றும் அவனை வேறு மருத்துவரை அணுகும்படியும் சொல்லித் தொடர்பைத் துண்டித்தார்.

Friday 6 August 2021

குறுங்கதைகள்-வண்டு





அவள் கை மீது ஒரு காட்டு வண்டு ஒன்று வந்தமர்ந்தது. அவள் அதைத் துரத்த கை ஓங்கினாள். என்னைத் துரத்தாதே என்றது. ஏன் என்றாள்.  நான் காட்டில் வாழ்ந்து சலித்துவிட்டதால் நாட்டுக்கு வந்திருக்கிறேன். என்னை இங்கேயே வைத்துக் கொள் என்றது. அதை ஒரு கூடையில் போட்டு வைத்தாள். இரவு அவளிடம் வந்து காட்டிலிருந்து உனக்கு ஏதாவது பழம் எடுத்து வருகிறேன். நாளை காலை உன்னருகில் பழம் இருக்கும் என்றது. அடுத்த நாள் அவள் கண் விழித்த போது பழத்துடன் வண்டும் அமர்ந்திருந்தது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று கேட்டாள். தன்னைப் போல் இறக்கை முளைத்து பறக்கலாம் என்றது. அவள் இறக்கை முளைப்பதை விரும்பவில்லை. அப்படி என்றால் இந்தப் பழம் எனக்கு வேண்டாம் என்றாள். சரி நாளை வேறொரு பழம் எடுத்து வருகிறேன் என்றது. அடுத்த நாள் கொண்டு வந்த பழத்தைச் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று கேட்டாள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்பே தெரிந்துகொள்ளலாம் என்றது. அதில் மயங்கி அந்தப் பழத்தை அவள் சாப்பிட்டாள். அடுத்த நாள் அவர்கள் இருக்கும் பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் தாக்கும் என்று அவளுக்குப் புரிந்தது. இதை எல்லோரிடமும் கூறினாள். அவளுக்கு எப்படித் தெரியும் என்று கேட்க வண்டையும் அது கொடுத்தப் பழத்தையும் பற்றிக் கூறினாள். அவளுக்குப் புத்தி பேதலித்துவிட்டது எனக்கூறி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவள் வண்டையும் எடுத்துப் போனாள். மருத்துவமனைக்கு வெளியே சென்று அமர்ந்துவிட்டாள். மருத்துவமனைக்குள் வரப் போவதில்லை என்று கூறிவிட்டாள். அடுத்த நாள் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. சுற்று வட்டாரத்தில் எல்லாமே அழிந்து போனது. அவள் வண்டை எடுத்துக் கொண்டு காட்டை நோக்கிப் புறப்பட்டாள்.

Thursday 5 August 2021

குறுங்கதைகள்-கிரிகோர் சம்ஸா*வுடன் ஓர் உரையாடல்





 காஃப்காவின் கதையில் உருமாறிய கிரிகோர் சாம்ஸாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்தக் கதையை விட்டு வெளியேற முடியவில்லை என்றான். பலரும் தொடர்ந்து அந்தக் கதையை வாசிப்பதால் அவர்களுக்காக அந்தக் கதையிலேயே இருக்க  வேண்டியிருப்பதாகக் குறைபட்டுக் கொண்டான். பூச்சியான பிறகு வாழ்வு தரும் சிக்கலை எப்படி பொறுக்க முடிகிறது என்றேன். உருமாறி இருப்பது குறித்து மகிழ்வு இருப்பதால் சாத்தியமாகிறது என்றான். அவனுடைய குடும்பமே அவனை ஏற்காத போது இன்னும் என்ன நம்பிக்கையில் வாழ முடிகிறது என்றேன். யாருமற்ற உலகில் பூச்சிகள் துணை நிற்பதாகச் சொன்னான். அவர்களின் வாழ்வில் இருக்கும் சிக்கல்களைத் தெரிந்து கொள்ள தன் வாழ்வு பயன்படுவதாக எண்ணி காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதாகக் கூறினான். பூச்சிகளைச் சுலபமாக கொன்றழித்துவிடுகிறார்கள். அப்படி ஒழிக்கப்படுவோம் என்ற அச்சம் இருக்கிறதா என்றேன். மனிதனாக இருந்தால் மட்டும் என்ன எப்படியும் ஒழித்துக்கட்டி இருப்பார்கள். பூச்சியான மனிதன் என்ற வேடிக்கை பார்க்க விட்டுவைத்திருக்கிறார்கள். எல்லோரும் பூச்சியாக உருமாறிவிட வேண்டும் என நினைக்கிறாய் என்றேன். இல்லை அப்படி ஆகிவிட்டால் மனிதனாக உருமாறுவது குறித்து யாராவது கதை எழுதிவிடுவார்கள் என்றான். பூச்சியாகிவிட்டதால் மனித குணாம்சங்கள் மறைந்து சுமை குறைவது போல் இருக்கிறதா என்றேன். ஆம் பூச்சிகள் சுமையற்றவை என்றான். நான் உன்னை பூச்சியாக பார்க்க வேண்டுமா மனிதனாகப் பார்க்க வேண்டுமா என்று கேட்டேன். நீ பூச்சியாக மாறிவிட்டால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன் என்றான். பூச்சியான பெண் குறித்து நான் ஒரு கதை எழுதலாம் என நினைக்கிறேன் என்றான்.

* பிரான்ஸ் காஃப்கா எழுதிய உருமாற்றம் நாவலில் இடம்பெற்ற கிரிகோர் சாம்ஸா பாத்திரம் இங்கு மீண்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.

 

Tuesday 3 August 2021

குறுங்கதைகள்-பொம்மை




(அமெரிக்காவில் ராபர்ட் என்ற பொம்மை அமானுஷ்ய தன்மை பெற்றிருப்பதாகக் கருதி அதை ஓர் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள். அதன் நினைவாக எழுதப்பட்ட கதை)


சிறுவன் போன்றிருந்த பொம்மை உயிர் பெற்றது. அந்தப் பொம்மையை வைத்திருந்த சிறுவன் பொம்மையானான். இந்த அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்த போது சிறுவனின் தாய் ரயில் முன் பாய்ந்து இறந்துவிட்டிருந்தாள். அந்தப் பொம்மைக் கண்காட்சியில் கிடைத்தது. மிகவும் ஆசைப்பட்டு அந்தப் பொம்மையை வாங்கி வந்த சிறுவன் தன்னைப் போலவே உடை உடுத்தி உணவு கொடுத்துப் பழக்கிவிட்டான். பெரும்பாலும் அந்தப் பொம்மையுடனேயே நேரத்தைக் கழித்தான். உறங்கும் நேரமும் உடன் உறங்கியது பொம்மை. சிறுவனின் தாய்க்கு இது எந்த வேறுபட்ட நடத்தையாகவும் தோன்றவில்லை. சிறுவன் பள்ளிக்குச் செல்ல மறுத்து பொம்மையுடன் நேரத்தைக் கழிக்கத் தொடங்கினான். சிறுவனை உருட்டி மிரட்டி பள்ளிக்கு விரட்டினாலும் பாடங்கள் அவனுக்கு ஏறவில்லை. பொம்மையைப் பிரிந்த ஏக்கம் ஆட்டிப் படைத்தது. வீட்டில் பொம்மையுடன் பேசிப் பேசி நெருங்கிய நட்பை உருவாக்கிவிட்டான். நண்பர்களை மறந்தான். வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதையே விரும்பினான். அதை அவனது தாய் விரும்பவில்லை. மகனைத் திருத்த ஒரு நாள் பொம்மையை ஒளித்துவைத்துவிட்டாள். மகன் பைத்தியமாகி அழுவதும் அலைவதும் அரற்றுவதும் காணச் சகிக்காமல் போனதால் மீண்டும் பொம்மையை எடுத்துக் கொடுத்துவிட்டாள். அதன் பின் பொம்மையை ஒரு நிமிடம் கூடப் பிரியாமல் இருந்தான் சிறுவன். அவனை வழிக்குக் கொண்டு வர பொம்மையை வைத்துக் கொள்வதால் அவன் கல்வியை மறந்து சீரழிந்து போவான் என எச்சரித்தாள். அந்தப் பொம்மை அவனை எல்லா சிரமங்களிலிருந்தும் காப்பாற்றும் எனச் சொல்லியிருப்பதாகக் கூறினான் மகன். தன்னைவிட அவனுக்குப் பொம்மை முக்கியமா என்று கேட்டாள். ஆம் என்றான் மகன். நாளை தான் இருக்கப் போவதில்லை, பொம்மை அவனைக் காப்பாற்றுமா என்று கேட்டாள். ஆம் என்றான். தாய் தன்னை விட்டுச் செல்வதை எந்தச் சலனமும் இன்றி பார்த்தான். பொம்மையாக மாறிக் கொண்டிருந்தான் அவன். சிறுவனாக மாறிவிட்ட பொம்மை அவனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. 

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...