Saturday, 16 December 2017

பாலினச் சாய்வின் மொழி:சிறைபடலும் விடுபடலும் புத்தாயிரத்தின் பெண் கவிஞர்களின் படைப்புகள் குறித்து…



(ஜூலை-செப்டம்பர், அக்டோபர்-டிசம்பர் 2017 சிற்றேடு இதழ்களில் வெளிவந்த கட்டுரை)
·         புத்தாயிரத்தின் பெண் படைப்புகள் குறித்துப் பார்ப்பதற்கு முன் பெண்ணியச் சிந்தனையின் புரிதல், அதன் விளைவு, அதனால் நிகழ்ந்த மாற்றங்கள், பற்றியும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் பெண்ணியச் சிந்தனை ஒரு கோட்பாடாகத் தமிழில் சிந்திக்கப்படுவதற்கு முன்னும் பெண்களின் படைப்புகள் அந்த வகையான அடையாளங்களைக் காட்டியுள்ளன. ஆனால் பெண்ணியச் சிந்தனை என்ற முறையான கோட்பாட்டு அறிதல் படைப்பாளர்களிடம் இல்லாமல் போனதால் அதன் வளர்ச்சி பற்றியோ அதனால் உருவாக வேண்டிய தெளிவு குறித்தோ எந்த ஒரு கருத்தும் தமிழில் வளரவில்லை. இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் பெண்ணியச் சிந்தனையில் குறிப்பாக, அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளில் ஏற்பட்டப் பாய்ச்சல் இங்கு எட்டவில்லை. தொண்ணூறுகளின் பிந்தைய காலகட்டத்தில் பொருளாதார தாராளமயம் பெண்ணியக் கோட்பாட்டின் சில மின்னல்களைப் படைப்பாளர்களிடம் எதிரொளிக்கக் காரணமாக அமைந்தது. அந்தக் கோட்பாடுகளைப் பற்றி இப்போது விரிவான அறிமுகமும் விளக்கமும் சரியான புரிதலும் தேவைப்படுகிறது. கோட்பாடுகளை அறிந்து படைப்பாக்கம் உருவாக்கப்படவேண்டும் என்பதல்ல. ஆனால் பெண் நிலையை மட்டும் படைப்பாக்கிக் கொண்டிருத்தலும் அதிலும் பாலினச் சாய்வு குறித்த விழிப்புணர்வு இன்றி இருத்தலும் அடிப்படை பெண்ணிய நிலைப்பாட்டைத் தக்கவைக்க மட்டுமே உதவும். மொழியின் பயன்பாட்டுக்குரிய அமைப்பின் தடைகள், கட்டுப்படுத்தப்பட்ட மொழியை மீறும் முறைகள், அதன் பிறகான படைப்பாக்கங்கள் இவைப் பற்றியும் ஒரு சிக்கலான பார்வையே இதுவரை நிலவி வருகிறது. பொதுவாக, தமிழ்ப் படைப்புகள் எதார்த்தவகையிலானவையாகவே இருந்துவருகின்றன. அவற்றில் எழுச்சி பெற்ற பரிசோதனை முயற்சிகள் காணக்கிடைப்பதில்லை. அதனால் இடைநிலை வாசிப்புக்கும் அதன் பயனாக வணிக மதிப்பீடுகளின் உற்பத்திக்கும் அவைக் களனாகிவிடுகின்றன.
பெண்கள் எழுதும் கவிதைகளை ஆய்வு செய்ய கீழ்க்கண்ட மூன்று பிரிவுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன:
·         பாலினத்தைக் கடத்தல்
·         லிங்கமைய மொழிக்குப் பிறகு
·         பொங்கி வழியும் நவீனம்
----------------
பாலினத்தைக் கடத்தல்
-பாலின அடையாளம்
-பாலின பிளவு ஏற்றல்/மறுத்தல்
-உருவாகுதல், பெண்ணாதல், மற்றமையாதல்

லிங்கமைய மொழிக்குப் பிறகு
-லிங்கமைய மொழி
-பெண் மொழி
-உடலரசியல்

பொங்கி வழியும் நவீனம்
-எதார்த்தப் படைப்பு
-உரையின் ஆட்சியும் இடைநிலை எழுத்தும்
-பின்நவீன கவிதையும் பெண்ணியமும்
-------------------
பாலினத்தைக் கடத்தல்
பாலினத்தைக் கடப்பதற்குப் பாலின அடையாளம் பற்றிய அறிதல் அவசியம். பெண்ணியத்தில் பாலினத்தை ஏற்பதும் அதை மறுப்பதுமாக வந்த சிந்தனை வளர்ச்சி அடுத்த கட்டமாக இருக்கிறது. பாலினச் சார்பைப் புரிந்துகொள்வதில் மற்றமையாதல் மற்றும் உருவாகுதல் பற்றிய சிந்தனையும் பெண்ணியக் கருத்தாக்கத்தில் பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. பாலின அடையாளம், பாலினத்தை ஏற்றல்/மறுத்தல், உருவாகுதல் பற்றி அடுத்து காணலாம்.

பாலின அடையாளம்

பாலினம் என்பது ஒரு நிகழ்த்துதல். பாலினம் சமூகத்தால் கட்டமைக்கப்படுவது. பாலியலின் தற்செயலான விளைவல்ல பாலினம். பாலியலை உறுதிப்படுத்தும் ஒன்றும் அல்ல. பாலியலுக்கும் கலாச்சார கட்டமைவான பாலினத்திற்கும் அடிப்படையான தொடர்பின்மை உள்ளது. இருபால் உறவின்(Heterosexuality) நிறுவனத்தை மையமாக வைத்து பாலினம் அறியப்படுகிறது. ஆண்மை, பெண்மை, பிற பாலுமை, இவை எல்லாமே வேறுபாடுகளின் அடிப்படையில் உருவானவை. ஓர் உடலில் இவை இருப்பதாக ஊன்றுவது ஓர் கற்பிதம். உடல் பொதுவானது. பாலுமைகளின் கூட்டுத் தொகுப்பு அது. இதற்குக் காரணம் இருபால் உறவுதான் அதிகாரத்தையும் சொல்லாடலையும் உற்பத்தி செய்கிறது. இந்தப் புரிதல் இருந்தால் பாலினத்தின் சிக்கலை எழுத்தில் தவிர்க்கலாம். ஆண் எதிர்ப்பு என்பது மட்டுமே பெண்ணியம் அல்ல.
ஜூலியா கிறிஸ்தவா சொல்லும் கருத்தாக்கத்தை வைத்து பாலினத்தை விளக்கினால் இன்னும் தெளிவடையலாம். குழந்தை, தாயின் சேவையைப் பெற்றுக் கொண்டிருக்கும் போது அதற்குத் தன்னிலை என்பது முழுமையாக உருவாகாத நிலை உள்ளது. மொழியைக் கற்கும் போது, தன்னிலை ஒன்றை உருவாக்கவேண்டியத் தேவை எழும் போது, கலாச்சாரத்தால் நிர்பந்திக்கப்படும் போது, கலாச்சாரத்தின் மொழியில் இருக்கும் பாலினத்தைத் தேர்வு செய்யும் நெருக்கடி ஏற்படுகிறது. தாயின் கண் கொண்டு தன்னைப் பார்த்தது, தன்னிலை கொண்டு எல்லாவற்றையும் பார்க்கவேண்டியிருக்கிறது. தன்னைக் கட்டமைக்க பிறன்மையை அல்லது மற்றமையை நாடுகிறது. அப்போது கலாச்சாரத்தின் மொழியில் இருக்கும் பாலினத்தையும் தேர்கிறது. அந்த இடத்தில் பாலினம் என்ற நிகழ்த்துதல் தொடங்குகிறது. இதுதான் சமூகம் கட்டமைப்பதாகப் பாலினம் உள்ளதை அறிவது. பாலினச் சார்பை அடையாளப்படுத்திக் கொள்வதுதான் முதல் சவால்.
புத்தாயிரத்திலும் பெண்மை என்ற பாலினச் சார்பையும் சாய்வையும் காட்டும் படைப்புகள்தான் அதிகமாகப் பெண்கள் எழுதுகிறார்கள். உதாரணமாக, சக்தி ஜோதியின் ஒரு கவிதை:
குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர் என்னிடம் தோற்றுவிட்டது
கொஞ்சம் வருத்தம்தான்
எப்படியும் குறிஞ்சிமலர்கள்
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்
ஒரே ஒருமுறை பூப்பவள் நான்
எப்பொழுது மலர்ந்தேன் என்பது
ஒருவருக்கும் தெரியாது
அம்மாவின் கணக்கு வேறு
அப்பாவுக்கோ கணக்கே தெரியாது
இன்னும்
இன்னும்
இன்னும்
பலருக்கும் மலர்தல் என்றால் என்னவென்றே தெரியாது
அந்த இரகசியத்தை அறிந்த ஒரே ஒருவன் உண்டு
நான் மலர்ந்தத் தருணத்தை
அவனிடம் சொல்லும் முன்பு 
நான் செத்து விடலாம்
அப்படிச் சாவேன்.
-----------
·         குறிஞ்சி மலர்
·         மலர்தல்
·         பூப்பவள்
·         மரணம்

இந்தக் கவிதையில் இருக்கும் சில குறிப்புச் சொற்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதனூடாகப் பாலினச் சார்பு சமூகவயமாக்கலின் மூலம் உறைந்திருப்பதை அறிந்துகொள்ளலாம். 'குறிஞ்சி மலர்', 'மலர்தல்' 'பூப்பவள்' 'செத்துவிடலாம்' ஆகியச் சொற்களை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கவிதையில் வந்த குறிஞ்சி மலர் இயற்கையில் இருக்கும் 'குறிஞ்சி மலர்' போன்றதுதான் பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது. ஆனால் இந்தக் கவிதையில் ஒரு முரணைச் சந்திக்கிறது. பெண் என்ற மலருடன் அது போராட முடியாமல் தோற்றுவிடுகிறது. குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்க முடியும். பெண் வாழ்வில் ஒரே ஒரு முறைதான் 'பூப்பவள்'. பூ மலர்வதை அது அறிவதில்லை. அது போல் அல்லாமல் பெண் மலர்வதை அறிந்திருப்பவள். பூ மலர்வது எல்லோருக்கும் இனிமையான அனுபவம். ஆனால் பெண் மலர்வது யாரோ ஓர் ஆணுக்கு மட்டுமே இனிமையானதாக இருக்கவேண்டியிருக்கிறது. அந்த ரகசியத்தை அவன் அறிவதற்காகச் சொல்லும் போது இறத்தலுக்குச் சமமான ஒன்று சம்பவிக்கிறது.
இந்தக் கவிதையில் குறிப்பிடப்பட்ட மலர் போன்ற மென்மையான, மணமுள்ள பொருட்கள் பெண்ணுக்கு நிகராவது காலங்கள் தோறும் தமிழில் நடந்தேறிக்கொண்டே இருக்கிறது. மலர் என்பதற்குப் பதிலியாக பெண்ணை வைத்துக் கொள்ளும் அளவுக்கு மொழியின் இயல்பு இங்குத் தேய்ந்துவிட்டது. இந்த வழமை பெண்மையின் இயல்பாகவும் குறுகிவிட்டது. சமூகத்தின் உள்வாங்கலில் பெண்மையின் குணாம்சங்களில் மலர் பிரதான இடத்தைப் பெற்றுவிட்டது. அதிலிருந்து பாலினச் சாய்வு உறுதிபடுகிறது. அந்த உறுதியைக் கேள்விக்குட்படுத்தாத அப்படியே ஏற்கும் ஒரு மொழிக்கிடங்கு இது போன்ற படைப்பை உற்பத்தி செய்கிறது. பெண்மைக்குரியதாகச் சமூகப் பொதுப்புத்தியில் இருக்கும் இந்தச் சாய்வை அறிவதன் மூலம் பாலினச் சார்பை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் படைப்புகளை அணுகுவதும் படைப்பதும் மாற்றம் பெறக்கூடிய வாய்ப்புள்ளது.

பாலின பிளவை ஏற்றல்/மறுத்தல்
பெண்ணியத்தின் அடுத்த சிந்தனையாக ஆண்/பெண் பிளவை ஏற்றல் அல்லது மறுத்தல் என்பதாக உள்ளது. ஆணுக்குப் பெண் எதிர்மை நிலையில் வைத்து சிந்திப்பதாக இந்தக் கருத்தாக்கம் வளர்கிறது. உளவியல் ஆய்வுகள் சுயத்தைக் கட்டமைக்க மற்றமைதான் பிரதான பங்கை வகிப்பதாகக் காட்டின. ஆணின் சுயம் என்றால் பெண் மற்றமையாகவும் பெண்ணின் சுயம் என்றால் ஆண் மற்றமையாகவும் கொள்ளப்படும் சிந்தனையாக இது உள்ளது. மேலும் பாலினப் பிளவை இதன் மூலம் ஏற்பது நடக்கிறது. பாலினம் ஒரு நிகழ்த்துதல் என்ற கருத்தாக்கத்தின் மூலம் எல்லா பாலினங்களுக்கும் உரியதான கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சமூகவயத்தின் ஆழமான தாக்கம் மற்றமை மூலம் சுயம் கட்டமைக்கப்படுவதை அழிக்க முடியாத நிலை உள்ளது.
இலக்கியத்திலும் பெண் எழுத்துகளில் இந்த வகையான ஏற்றல்/மறுத்தல் என்ற பாலினப் பிளவைக் காணமுடிகிறது. பாலினம் என்ற அடையாளப்படுத்துதலை விட உடலியல் சார் விளைவுகளுக்குத் தக வெளிப்படும் குணாம்சங்களாகக் கொள்ளப்படாததால் ஆண்மை/பெண்மை என்ற பிளவை ஏற்க வேண்டிய நிலை உருவாகிறது. ஆண்மை மூலம் ஒடுக்குதலும் பெண்மை ஒடுக்கப்படுதலும் என்ற வாடிக்கையான உறைநிலை இலக்கியங்களில் தொடர்கிறது. பாலின குணாம்சங்களைக் கேள்வியின்றி ஏற்பதும் எதிர்பாலின குணாம்சங்களை மறுப்பதும் ஒருபடித்தான இலக்கிய வகைமையாக மாறிவிடுகிறது.
உதாரணமாக ஒரு கவிதை மூலம் இதைப் பார்க்கலாம். லீனா மணிமேகலை எழுதிய 'ஒரு நாள்' என்ற கவிதை.

ஒரு நாள்

என் தோலைக் கழற்றி வீசினேன்
கூந்தலை உரித்து எறிந்தேன்
துவாரங்களில் ரத்தம் ஒழுகும்
மொழுக்கைப் பெண்ணென காதல் கொள்ள அழைத்தேன்

காதலர்கள் வந்தார்கள்
கரிய விழிகள் கொண்ட அவர்கள்
நெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்
குருதியை நூலாக்கித் திரித்து
செந்நிறத்தின் ஊடுபாவிய வலையை
எட்டுக் கால்கள் விரித்தார்கள்
அந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்
அப்பொழுதும் சொன்னேன்
நான் பூரணமாய் காதலிக்கப்பட்டவள்
மறுபடி நானே
உலகின் அழகிய முதல் பெண்

·         தோல்
·         காதலர்கள்
·         பூரண காதல்
·         அழகு
இந்தக் கவிதையின் கவிதை சொல்லி பெண் என்பதை அறிவித்துக் கொள்கிறது. பெண்மைக்குரிய ஒன்றாகச் சமூகம் வரித்திருப்பது அழகும் தோலும். தோலைக் கழற்றி வீசி எறிந்து விட்டப் பின்னும் அழகு நிலைத்திருக்கிறது. பெண்மையாக இருப்பது தோலில் நிலைத்துவிட்டது. அல்லது அழகில் தொடர்ந்திருப்பது. தோலற்ற, கூந்தலற்ற உருவம் பெண்ணெனச் சொல்லிக் கொண்டதாலேயே காதலர்கள் கிடைத்திருக்கிறார்கள், பூரண காதலை நல்க. 'பெண்' என்ற சொல் 'காதல்' என்ற சொல்லால் பூரணமடைகிறது கவிதைக்குள். காதலர்கள் என்ற அகராதி பொருளால். ஆண்/பெண் என்ற பிளவை ஏற்றல் அதன் சுமையால் மறுத்தல் என்ற அடிப்படை பாலின முரணைக் காணமுடிகிறது.

உருவாகுதல்

'பெண்ணாக உருவாகுதல் என்பது பெண்ணாக மாறுதல் அல்ல ஆனால் அது மூலக்கூறாவது, பல்பொருள் கொண்டதாவது, உயிரற்றதாவது அல்லது இன்னும் விளக்கமாகச் சொன்னால் உறுப்புகளால் விளக்கப்படுவதல்ல மாறாக அவற்றின் வினைகளால் விளக்கப்படுவது'[1]. சிமோன் டி பூவா சொன்னது போல பெண் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள் என்பதிலிருந்து வளர்ந்த இந்தச் சிந்தனை டெல்யூஜ், கட்டாரியிடம் பெண் என்ற உயிரி மூலக்கூறாக உருமாற்றம் அடைவதில் போய் நிற்கிறது. ஆணுக்கும் பெண்ணாகுதல் சாத்தியம். ஆனால் பெண் ஒரு 'நிறைத்தொகை'(molar) வகைமை என்பதால் அந்த உயிருக்குள் சமூகம், தன்னிலை, குடும்பம், போன்ற எல்லா உறுப்புகளுமே அடக்கம். பெண் என்று உருவாகுதல் என்பது ஒரு தளம். அந்தத் தளத்திற்கு எந்த ஓர் உயிரியும் மாறமுடியும் என்பதே டெல்யூஜ், கட்டாரியின் வாதம்.

ஆண் என்ற மிகை அதிகார நிலைப்புள்ளியானது பெரும்பான்மை என்ற வரைமுறைக்குள் இருப்பதிலிருந்து சிறுபான்மையான அதிகாரமற்ற எப்போதும் மாறிக் கொண்டிருக்கிற பெண் என்ற உருவாகுதலுக்குள் வருவதுதான் டெல்யூஜ் கூறும் கருத்து. பெண் என்ற சொல், வரலாற்று பொருள் கொள்ளலின் மூலம் அளிக்கும் அர்த்தமும் மாறும் சமூகப் பொருளாதார விளக்கங்கள் மூலம் தரும் வர்ணனையும் குறிக்கும் ஒட்டுமொத்த மாறிலியாகும். ஆண் பெண்ணாகுதல் சாத்தியமாவதன் மூலம் காதலில், காமத்தில் பெண்ணாகி அதன் பின் விலங்காகுதலாக உருமாறுகிறது[2].

உருவாகுதல் என்ற கருத்தாக்கத்தை தேன்மொழி தாஸ் எழுதிய ஒரு கவிதை மூலம் காணலாம்.

காடுபடு திரவியமாய் உனது விரல்கள்

துரோகங்களினால் 
துடைத்துக் காலிசெய்யப்பட்டிருந்த
ஆன்மாவின் பாத்திரத்தில்
ஒரு துளியாய் விழுகிறது
உனது அன்பு
காற்றை விதைத்து
பூவைப் பறிப்பதென
உனது சொற்கள்
தன்னந் தனியே அலையும்
தனுராகக் காட்டுக் கழுதை தான்
எனது மனம்
சிறுத்தையின் வாயில் அகப்பட்ட
கலைமானின் கழுத்தாய்
எனது வாழ்வு சிதைந்ததையும்
அறிவின் சுடர் எரிய
மாடம் அற்றுப்போனதையும்
முயலின் சதைருசியில் 
பலரின் விழியில் எனது உடல்
விழுவதையும் தாங்கயியலாமல்
உனது மனம் பலிபீடமாவதை 
உணர்கிறேன்
உனக்கு நான் சொல்ல விரும்புவது
காட்டு அழுகன்னி செடியின் தன்மையில்
எனது உடலை மாற்றி
காலங்கள் ஆகிவிட்டது என்பதையே
காடுபடு திரவியங்களாய்
உனது விரல்கள்
எனை தழுவுகையில்
அதை நீ உணர்ந்திருப்பாய்
உனக்குள் ஊரும் கண்ணீர்
தனிச் சொல்
அதன் ருசியை நானறிவேன்
அடவியின் தருக்கள்
அசையும் என் விழிகளைப்
பத்திரப்படுத்துவாய்
-----
·         உனது
·         என்
·         அன்பு
·         சிதைவு

இந்தக் கவிதையின் முதன்மை எதிர்மை ‘உன்/என்’ என்பது. இதில் ‘உனது’ என்பது ஓர் உயிரி. ஆணாக இருக்கலாம். ‘என்’ என்ற உயிரி பெண்ணாக இருக்கலாம். இரண்டையும் இணைப்பது அன்பு. இணையவிடாமல் தடுப்பது ஓர் உயிரியின் சிதைந்த வாழ்வு. சிதைந்த, ஏமாற்றப்பட்ட, வெறுப்பால் ஆட்கொள்ளப்பட்ட பெண்மை என்ற உரு, அன்பால் மீட்டெடுக்கப்படவேண்டும் என்று கோருகிறது இக்கவிதை. மீண்டும் பெண்மையின் இயல்பைப் பெற. கவிதைக்குள் பெண்மை என்ற குணாம்சம் இல்லை. பெண்மையாவதற்கான முயற்சி இருக்கிறது. உடல் மாற்றம் என்பதுதான் பெண்ணாகுதலுக்கான முயற்சியாக இருக்கிறது. ஆண்மையின் பெண்ணுக்கு உரியதாக வரையறுக்கப்பட்ட மென்மையான அன்பு போன்ற ஒன்றைப் பற்றிக் குறிப்பதன் மூலம் ஆண்மையின் பெண்ணாகும் முயற்சியைக் கவிதை புரியவைக்கிறது. பொருளாதார தாரளமயத்திற்குப் பின் பெண் உடலரசியல் கவிதைகள் அதிகம் எழுதப்பட்டன. அதற்குப் பிறகான கவிதையில் ஒன்றாக இதைக் காணமுடிகிறது. உடலரசியலுக்குப் பின்னான பெண்ணாகுதலுக்கு இந்தக் கவிதை அடித்தளமிடுகிறது. 
லிங்கமைய மொழிக்குப் பிறகு

இரண்டாம் அலை பெண்ணிய சிந்தனை உருவாக்கிய போக்கில் முதன்மையாக இருந்தது, ஆண்மைய மொழி அல்லது லிங்கமைய மொழி என்பதை எதிர்க்கும் கருத்தாக்கம். ஹெலன் சிக்ஸுவின் கருத்தாக்கமாக லிங்கமைய மொழி இருக்கிறது. லிங்கமைய மொழியின் காரணமாகத்தான் பெண்ணின் மொழி செயலற்றதாக இருக்கிறது என்று ஹெலன் சிக்ஸு கூறினார். அதனால் பெண் உடல் மொழியை, உடல் அரசியலை எழுத அழைப்புவிடுத்தார். அதன் பிறகுதான் லிங்கமைய மொழிக்கு எதிரான மொழியாக பெண்ணிய மொழி உருவானது. ஆனால் ஜுடித் பட்லரின் கருத்துப் படி, இந்தக் கட்டுரையில் ஏற்கனவே பார்த்தது போல், பாலினம் என்பது ஒரு நிகழ்த்துதல் என்பதை அடிப்படையாகக் கொண்டச் சிந்தனை மொழியிலிருந்து பெண்மையின் ஒடுக்குதல் தொடங்கியதாகக் கருதவில்லை. இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்தால் சமூகவயமாக்கலை ஏற்ற உடல்கள் லிங்கமைய மொழியைத்தான் பேசுகின்றன. பட்லர் கூறும் சிந்தனை லிங்கமைய மொழி தோன்றுவதற்கான காரணங்கள் என்ன என்பதை விளக்குவதாக உள்ளது. பட்லர் கூறும் சிந்தனையை ஏற்றுக் கொண்டால் பாலினப் பிளவையும் தவிர்த்து லிங்கமைய மொழியின் சார்பையும் ஒழிக்கலாம். லிங்கமைய மொழிக்குப் பிறகான மொழியைத் தேறலாம்.

லிங்கமைய மொழி

டெரிடா சொன்ன இலச்சினையியல்(லோகோசென்ட்ரிசம்) என்பது மொழியைக் கட்டுடைக்க உருவான சிந்தனையிலிருந்து லிங்கமைய மொழி(பேலோசென்ட்ரிக்) உருவானது. ஆண் முதன்மை என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தந்தை முதன்மை சமூகத்தில் லிங்கமைய மொழியின் ஆதிக்கம் இருப்பதால் பெண் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சிறுபான்மை என்ற உணர்வின் பீடித்தலிலிருந்து தன் வெளிப்பாட்டை வைக்கிறாள். அதனால் அது ஒடுக்கப்படுவதற்குரியதாக மாறுகிறது. இதற்கு எதிராகத் தமிழிலும் பொருளாதாரத் தாரளமயத்திற்குப் பின் பெண் கவிஞர்களின் படைப்புகள் எழுதப்பட்டன.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியத்தில் வெளிப்படையான வேட்கையைச் சொல்லும் பாடல்கள் எழுதுவது இயல்பானதாக இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு காப்பிய காலத்தில் பெண்மையின் இலக்கணமாக உருவான குணாம்சங்கள் பாலியலின் கட்டுப்பாட்டை உருவாக்கி அறச் சிந்தனையைப் பேசின. பக்தி இலக்கியத்தில் பாலியல் விடுதலை பக்திக்குள் இருந்து வெளிப்பட்டது. பெண் பாலியல் விருப்பைப் படைத்த கவிதைகளாக இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டிகளிலும் இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுதப்பட்டன.

லிங்கமைய மொழி

லிங்கமையம் என்ற கருத்தாக்கம் ஜாக் டெர்ரிடாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண் மைய என்ற பொருளில் வழங்கப்படும் இக்கருத்தாக்கம் பின்நவீனத்துவத்தின் சிந்தனையில் பெரும் பங்களிப்பை வழங்கியது. ஆணுக்கு மற்றமையாகப் பெண் இருப்பதை அடையாளப்படுத்திய தத்துவமாக லிங்கமையம் இருந்தது. பெண்ணியலாளர் ஹெலன் சிக்ஸு லிங்கமைய மொழியை அடையாளப்படுத்திக் கொண்டு அதற்கு எதிரான மொழியை உருவாக்கப் பெண்களுக்கு அழைப்புவிடுத்தார். பெண் மைய மொழி ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்று அவர் வாதிட்டார்.

பெண் உடலின் மதிப்பு தாழ்வானதாகக் கருதப்பட்டதற்கு எதிராக மிகை மதிப்பு கொண்டதாக பெண் உடலைப் படைக்க வேண்டும் என்று ஹெலன் சிக்ஸு கூறினார். அதிலிருந்து பெண் உடலரசியல் என்ற பெண்ணியச் சிந்தனை வளர்ந்தது. அதன் காரணமாகப் பெண் உடல் பற்றி எழுதுதலாக அது மாறியது. பெண் உடல் எழுத்து லிங்கமைய மொழியை எதிர்க்கவும் மறுக்கவும் செய்தது.

தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியத்தில் பெண் கவிஞர்கள் பெண் வேட்கையைத் தடையின்றி எழுதினார்கள். அதன் பிறகான அறம் சார் மதிப்பீடுகளால் பெண்ணின் உடல் சிறைபடுத்தப்பட்டது. தொண்ணூறுகளில் லிங்கமைய மொழி பற்றிய அறிமுகம் ஏற்பட்டதால் பெண் கவிஞர்கள் அந்தத் தடைகளைக் கடந்து எழுதத் தொடங்கினார்கள். புத்தாயிரத்திலும் அத்தகைய விடுதலை உணர்வு தொடர்ந்தது. அது தவிர லிங்கமைய மொழி பற்றிய ஒரு விழிப்புணர்வு பெண் படைப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் ஆண் மைய ஒடுக்குமுறை மட்டும் அல்லாமல் சாதிய ஒடுக்குமுறையும் லிங்கமையத்தின் அதிகாரத்தைச் செறிவுபடுத்தின. அதற்கு எதிரான குரலாகவும் கவிதைகள் ஒலித்தன.

உதாரணமாக சுகிர்தராணி எழுதிய ஒரு கவிதையைப் பார்க்கலாம்.

முதல் முத்தம்

கனிந்த வேப்பம்பழத்திலிருந்து
வெளியேறும் விதையென
என்னிலிருந்து நீங்குகிறது வெட்கம்
நீயும் அறங்களனைத்தும் அழிய
சாய்ந்த மரத்தின் வேராகி நிற்கிறாய்
உன்மத்தம் வடியுமுன் வேர்கள்
என் நிலம் நோக்கி நகர
ஆழத்தில் புதைந்திருக்கும் நாளங்களில்
ஊமத்தைகள் தளும்புகின்றன
கள்ளியின் முட்கள் உள்ளிறங்கப்
பீறிடும் இரத்தத் துளிகளாய்
என் உடல் முழுவதும்
உருள்கின்றன காமத்தின் முத்துக்கள்
உன் சுடுமூச்சுகளின் நூல்கொண்டு
ஒவ்வொன்றையும் கோக்கிறாய்
தொங்கும் தோட்டமாகி மிதக்கிறேன்
பறவைகளற்ற வானம் பிரகாசமடைய
நாம் கலவிக்கால விகாரமுறுகிறோம்
என் மென்முலைகள் அழுந்த
முதல் முத்தமொன்றைத் தருகிறேன்
எவரும் விழித்திராத கருக்கலில்
சாதியின் கொடூர ஓடையில் மிதக்கின்றன
அரிந்து வீசப்பட்ட நான்கு உதடுகள்.

·         வெட்கம்
·         முதல் முத்தம்
·         சாதி ஓடை
·         உதடுகள்

இந்தக் கவிதையில் நான்கு முனைகள் போல் இருப்பவை மேற்குறிப்பிட்டச் சொற்கள். பெண்மையின் இலக்கணமான வெட்கம் நீங்குவது பிரகடனப்படுத்தப்படுகிறது. லிங்கமையமொழிக்கு எதிரான அறிவிப்பு போல் அது இருக்கிறது. பெண் மொழியின் அடையாளமாக வந்திருப்பவை முதல் முத்தம், காம முத்துகள் போன்றச் சொற்கள். லிங்கமைய அதிகாரத்தின் குறியீடான சாதியத்தின் வெறியைக் குறிக்கும் கவிதைக்குள் அரிந்த உதடுகள் என்ற சொற்களின் மூலம் கொடூரமான வர்ணனையாகப் படைப்பாக்கம் நிகழ்கிறது. லிங்கமைய அதிகாரத்தை எதிர்க்கும் வெறுப்புச் சொற்களாக அவை வெளிப்படுகின்றன.

பெண் மொழி

பெண் எழுதும் பெண்ணைப் பற்றிய மொழி. உண்மையில் மொழிக்கு இத்தகைய ஓர் தனிப்பட்ட விசேட பண்பு எதுவும் இல்லை. பெண் இதுவரையிலான வரலாற்றில் விலக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டும் இயல்பை மொழிக்குள் வரையறுப்பதாக பெண் மொழியைக் கொள்ளலாம். ஆண் மைய அதிகாரங்களாக இருந்த, இருக்கும் மத, நீதி பரிபாலன அமைப்புகளை ஒதுக்கி, ஒடுக்கி உருவாக்கும் படைப்பின் மொழியாகப் பெண் மொழி வெளிப்படுகிறது. பாலியலின் அடைக்கப்பட்ட, மறுக்கப்பட்டப் பிரதேசங்களில் பயணப்படும் மொழியாகப் பெண் மொழி புனையப்படுகிறது.

பெண் மொழி மூலம் பெண் பாலியல் விடுதலையோடு வெளிப்படும். ஆணியப் பெண் என்ற மிகுநிலை உருவாகும். பெண்ணிய ஆண் என்ற நிர்பந்தம் விதிக்கப்படும். பெண் எழுத்தின் மௌனம் ஒலிக்கும். பெண் மொழி என்பது ஆணின் மற்றமையாக பெண் இல்லை என்பதை அழுத்திக் கூறுவது. உளவியல் ரீதியாகப் பெண்ணை விடுவிப்பதைக் குறிப்பதாக பெண் மொழி என்ற கருத்தாக்கம் உள்ளது.

லிங்கமையம் என்ற நிறுவனமயமான சமூகவயமாக்கலுக்கு எதிரான போராட்டம் சார்ந்த வடிவத்தை ஒட்டுமொத்தமாகப் பெண் எழுத்தில் வடிப்பது பெண் மொழியாகக் கருதப்பட்டது. இரு பாலினங்களும் சமூகவயமாக்கலில் இரு-பாலியல்-உறவின் நிறுவனமயத்தால் உரிய அடையாளத்தை அடைந்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டால் ஆண் மேலாதிக்கம் என்பதும் பெண் மொழி என்பதும் இரண்டு கடைநிலைப் புள்ளிகளாகவும் இடையில் இருக்கும் சமூகவயமாக்கல் சார்ந்த காரணிகள் மாற்றப்படவேண்டியவை என்பதும் தெளிவாகும்.

இருந்தாலும், தொண்ணூறுகளுக்குப் பின் தமிழின் நவீன கவிதைப் பரப்பில் பெண் மொழிக்கான ஆழமான குரல் எழுந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அனாரின் ஒரு கவிதையிலிருந்து பெண் மொழி பற்றிய தீர்க்கமான சிந்தனை தமிழின் கவிதைப் பரப்பில் நிலவியதைப் பார்க்கலாம்.
பெண் சிலந்திப்பூச்சியின் வீடு

ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி...மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கவ்வி
ஆற அமர ஆசையாய்..என்ன சுவையாய்..
கொன்று.............
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி
நிலவில் துளையிட்ட ராட்சத முனையை
மலை முகட்டில் இழுத்துக்கட்டி
முடிகிறாள் மறுமுனையை
முதலையின் தருணக் காத்திருப்பில்
கோடித் தாபங்களாய் வலை விரித்திருக்கிறாள்

வெறும் கோதுகளாகிய பிற பூச்சிகளும்
ஆண் சிலந்திகளின் இறந்த உறுப்புகளும்
பெண் சிலந்தியின் சிறைவாசலில் எறியப்பட்டிருக்க

கனவின் துவாரங்களின் வழி
சொட்டித் தேங்கிய
காமக் கடல் அலைகள் பாய்கிறது
சிலந்தி வயிற்றினுள்

சிலந்திப் பெண்ணிலிருந்து தோன்றி
நீளத் தொடங்குகிற நூலாம்படையுடன்
மித மிஞ்சிய வல்லமைகளாய்ப் பொங்கி
உலகைத் தாண்டிப் பெரிதாகிறது...


·         சிலந்தி
·         பெண்
·         ஆண் சிலந்தியின் இறந்த உறுப்புகள்
·         மித மிஞ்சிய வல்லமைகள்


பெண் சிலந்தி என்பது பெண்ணாகவும் இருக்கலாம். பெண்மையின் குணாம்சங்களைத் தொகுத்திருப்பதாகவும் இங்குக் கொள்ளலாம். பெண் விடுதலை உணர்வு, சிலந்தியின் விடுதலை உணர்வாகிவிட்டது. விடுதலை உணர்வு என்பதற்கு ஒரு சமூக வரையறை அல்லது கலாச்சார தொனி கொண்டிருப்பதைக் கவிதைக்குள்ளிருந்து புரிந்து கொள்ளமுடிகிறது. பெண்மை என்பதற்கான கட்டுபடுத்தப்பட்ட இயக்கத்திலிருந்து விடுபடுவதற்கான முறைமைகளைக் காட்டுகிறது இக்கவிதை. பெண்மை என்பதற்கான விடுபடுதல்கள் வெறும் கட்டுப்பாடுகளாகக் கொண்டுவிடுகையில் இந்த வகையான படைப்பாக்கம் சாத்தியப்படும். பெண் மொழி பேசும் லிங்கமைய எதிர்ப்புக் கவிதை இது.

உடலரசியல்

பெண்ணை உடலாக மட்டுமே கருதி வந்த பார்வையை எதிர்த்து உருவானது உடலரசியல். பாலியலின் வேட்கையை வெளிப்படுத்தும் முறைமைகள் விதிகளுக்குட்பட்டவையாக இருந்ததை எதிர்த்து படைக்கப்பட்ட இலக்கியங்கள் உடலரசியல் பேசின. பாலினச் சார்பும் சாய்வும் பாலியலுக்கு ஒற்றைப் பார்வையைக் கொடுத்திருந்தன. அதனால் அதை நேராக்கவும் சமமாக்கவும் உடலரசியலை பெண்ணியம் கையில் எடுத்தது. பெண் உடலின் பாலியல் வேட்கையை மிகைப்படுத்துதலாக வெளிப்படுத்தும் நோக்கம் அதில் இருந்தது. ஆண் பார்வையில் பெண்ணின் பாலியலை அறிந்த உலகம் பெண்ணின் எழுத்து வழியாக உடலரசியலைக் காணவேண்டியிருந்தது.

பெண் உடல் முழுவதுமே பாலியல் எந்திரமாகக் கட்டப்பட்ட அரசியலாக உடலரசியல் இருந்தது. தனிப்பட்டது, அரசியல்மயமானது என்பதை பெண்ணியம் வெளிப்படுத்தும் சரியான களமாக உடல் இருந்தது. உடல் என்பது ஆதிக்க வடிவமாக ஆண் முதன்மை சமூகம் முன்வைத்ததற்கு பதில் தரும் வகையில் உடலை மீட்டெடுத்தலாகப் பெண்ணியம் உடலரசியலைப் பேசியது.

பெண் தன் உடலிலிருந்தே வெகு தூரம் நகர்த்தப்பட்டிருப்பதை மறுத்து உடலைக் கொண்டாட உருவாக்கப்பட்ட அரசியல் இது. உண்மையில் உடல் பற்றிய பேசா மௌனங்கள் பொது வெளியில் படைக்கப்படுகையில் கட்டுப்படுத்தப்பட்ட தளைகள் அறுபடுவதையும் கலாச்சார மறைவுகள் வெளிப்படுவதையும் முன்னெடுத்தது இந்த அரசியல். உடலின் மீதான கையாளலை ஆண் மையத்திலிருந்து விலக்கி வைத்தது உடலரசியல். அதனைத் தமிழில் பல பெண் கவிஞர்கள் கையகப்படுத்தி தங்களின் படைப்புகளில் புகுத்தினார்கள்.

உதாரணமாக குட்டி ரேவதியின் 'விஷ கன்னிகையின் காமநொதி - இறுதி விருந்து' என்ற கவிதையைப் பார்க்கலாம்.

நட்சத்திரங்கள் பொடிந்து உதிரும்படியாக
இரவு அதிர்கிறது
கனவு பிரமாண்டமாகையில்

விஷமாய் இரசாயனம் மாறிக்கொண்டிருக்கிறது
வழிய இயலாத கண்ணீரும்
இருளில் மக்கும் கனவுகளும்

இவரா அவரா எனத்தீண்டிப் பார்க்கின்றன
சுருண்டு தவிக்கும் காமத்தின் நீலநரம்புகள்

எனது ஒவ்வொரு வார்த்தையையும்
கூர்மையாகச் சீவுகிறேன் பற்களினூடே

நுரையீரலுக்குள் காற்றின் புயல்
இருதயத்துக்குள் ரத்தத்தின் சுழல்

மார்புகள் கனிந்து தொங்குகின்றன
அதன் இரு கிண்ணங்களிலும்
திடமான விஷம்

திரண்ட ஒவ்வொரு துளிவிஷமும்
மலையைக் குடையக் கூடியது

இந்த விருந்தின் சுவையானதொரு பதார்த்தமாய்
உன் கோப்பையில் நிறைந்திருக்கிறேன்.

இனி நீ சுவைக்கலாம் என்னை...!!!
-குட்டி ரேவதி

·         கனவு
·         காமத்தின் நீலநரம்புகள்
·         விஷம்
·         சுவை

காமம் மட்டுமே பெண் வாழ்வை நிறைக்கக்கூடியதாகக் கருதப்பட்டதை எதிர்க்கும் கவிதைகள் காமத்தை மிகையாக்கி எழுதிப் பார்த்தன. இது ஓர்  அதிபுனைவாகத்தான் கொள்ள முடியும். இந்தக் கவிதையில் கனவுக்குள் ஒரு காட்சி நடக்கிறது. விஷக் கன்னிகை காமத்தின் சுவையைப் பரிமாறச் செய்வதைக் கவிதை வர்ணிக்கிறது. காமம் விடத்திற்குச் சமானமாக்கப்பட்டிருக்கிறது. காமத்தின் மீதான வெறி கொண்டிருப்பவருக்கு அது விடம் என்று அறியாமல் அதைக் குடிக்கச் சொல்கிறது கவிதை. கோப்பையில் சுவையானதொரு பதார்த்தமாய் இருப்பது காம விஷம். இதில் முன்னிலையாக அழைக்கப்பட்ட பொருளான 'நீ' ஆணைக் குறிப்பதாகக் கொள்ளலாம். காமம் இனியும் இன்பமாக இருக்கப் போவதில்லை விடமாக மாறப் போகிறது என்பதைச் சொல்கிறது கவிதை. காமத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த ஆண் மைய மொழிக்கு எதிரான விடமாகியிருக்கும் அரசியலை முன்வைக்கிறது இக்கவிதை. காமத்தை அதிபுனைவாக்கி அதன் எதிர்ப்பரசியலை நோக்கி நகர்த்துகிறது இக்கவிதை. ஆண் மையத்தின் இயலாமையை, போதாமையைக் குறிக்க இந்த நகர்த்துதல் உதவுகிறது.

பொங்கி வழியும் நவீனம்
புத்தாயிரத்தில் எழுதும் பல பெண் கவிஞர்கள் நவீன கவிதைகளையே அதிகம் படைக்கிறார்கள். ஆண் படைப்பாளர்களிடம் காணக் கிடைக்கும் நவீனத்துவம் பெண் படைப்பாளர்களின் கவிதைகளிலும் பொங்கி வழிகிறது. பரிசோதனைகளுக்கு இடம் தராத மெல்லிய வாசிப்புக்கு மட்டுமே உரியதாகின்ற இந்த நவீனக் கவிதைகள் மழுங்கிவிட்டன. ஆனால் அந்த வடிவத்தில் பெண் மொழி, உடலரசியல் போன்றவற்றைக் கேள்வி ஞானத்தால் மட்டும் உணர்ந்தப் பெண் படைப்பாளர்கள் இயல்பான நவீன கவிதைகளை மட்டுமே படைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இதுதான் புத்தாயிரத்தில் பல பெண் கவிஞர்களிடம் காணப்படும் படைப்பாம்சமாக உள்ளது. நவீனத்துவத்தில் வெற்று உரைகளாக நிரப்பும் கவிதைகள் உற்பத்தியாகின்றன. கதைகளின் சிறு வடிவங்களாக அவை இருக்கின்றன. நவீனத்துவத்தை வரித்தப் படைப்புகள் இடைநிலை எழுத்துகளாகவும் அதன் நீட்சியாக வணிக எழுத்துகளாகவும் மாறிப் போகின்றன.
எதார்த்தப் படைப்பு
நவீனத்துவத்தின் முதன்மை அம்சம் எதார்த்தப் படைப்பு. புத்தாயிரத்தின் பல பெண் படைப்பாளர்கள் இந்தப் பண்பைக் கவிதையில் கைக்கொள்கிறார்கள். மெல்லிய சிறு முணுமுணுப்பாக உள்ளடக்கம் இருப்பதான கவிதைகள் எழுதப்படுகின்றன. இயல்பான வாழ்வைப் படம் பிடிப்பதாகத்தான் இந்தக் கவிதைகள் உள்ளன. எதார்த்தவாதத்தின் பண்புகளை முன்னெடுப்பவையாக இவை படைக்கப்படுகின்றன. தொண்ணூறுகளுக்கு முன்பிருந்த கழிவிரக்கம், அந்நியமாதல், அகத்தின் தேடல் போன்ற கூறுகள் உள்ளீடற்றவையாய், நீர்த்துப்போனவையாய், பெருக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மற்ற இலக்கியங்களை விட கவிதை எளிதான புரிதல் சார்ந்த ஊடகமாக மாற்றப்படும் அவலமும் தமிழில் நேர்ந்தது. நேர்ந்துகொண்டிருக்கிறது. அறிவுப்புலத்திலிருந்து மாற்றுப் பாதையில், உணர்ச்சிப் பாதையில் செல்வதாக நவீன கவிதை இயல்பூக்கம் கொண்டது. உணர்வுக் கொந்தளிப்புகள், அபத்த நாடகங்கள், உலர்ந்து போன உரைகள், உருவமற்ற குறியீடுகள், உவமையற்ற பிரயோகங்கள் எல்லாமே கவிதையாயின. ஒன்றும் செய்ய இயலாத நின்றுபோகும் வாழ்வின் கணங்களே பெரும்பாலும் கவிதையாயின. காலமும் வாழ்வும் இணைந்துவிட்டதாய், மரணம் ஓர் இன்பவிளையாட்டாய், சிக்கிக் கொள்ளும் பரப்பைக் கவிதைகள் நிரப்பின. பெரும்பாலும் வடிவ மாற்றம் இன்றி, இறுதி வரியில் அதிர்ச்சியைக் கொடுக்கும் சில மொழிதல்களோடு முடியும் கவிதைகளாக எழுதுவதுதான் தொடர்ந்திருக்கிறது. கவிதை எழுதும் வினை தேய்ந்து வழமையாக மாறி மிகவும் மெல்லிய தினப் பயன்பாட்டில் இருக்கும் பொருள்களிலிருந்து அதி சாதாரண நிகழ்வு வரை கவிதையாகி விடுவதுதான் நவீனகவிதையின் வீழ்ச்சியாக இருக்கிறது.
உதாரணமாக பரமேஸ்வரி திருநாவுக்கரசின் ஒரு கவிதை.
எனக்கான வெளிச்சம்
பனிமூடி இருக்கும் வனம்

நிறை சூலியாய்க் காடு

பூத்திருக்கும் மலர்கள்

அடர்த்தியான மரம் செடி கொடிகள்

திரியும் விலங்குகள்

வெள்ளி நீர் வீழ்ச்சிகள்

பனியில் குளிர்ந்து

வெயிலில் கருகி

மழையில் நனைந்து

அசையா மோனத்தில்

சூன்யத்தின் நிழல்

தேடித் திரும்புகிறது

சக மனுஷியை!

பாட்டியின் உடலில் உயிர்ப்பு

மெல்லிசாய்..

பேத்தியின் திருமணம்

பார்க்க ஆசைப்பட்டதில்

பத்தாம் வகுப்பு மாணவி

மனைவி ஆனாள்.

முகமற்ற மனிதன் கைப்பிடித்து

ஏழு அடி எடுத்து வைக்கையில்

மாலை மாற்றுகையில்

பக்கத்தில் அமர்கையில்

கருகி உலர்கிறாள்

நெளிந்த பித்தளைப் பாத்திரமாய்ப்

பெண் முகம்...

ஆனந்த வெள்ளத்தில்

ஆவி பிரிய

நூற்று மூணாவது வயதில்

செத்துப் போன

பாட்டிக்காக அழுகிறார்கள்!

முட்டுச் சந்தில்

நிற்கப் போகிறோம்

என்றுணர்ந்தே

உன்னுடன் பயணித்தேன்

என்னை நிறுத்திவிட்டு

நீ மட்டும் திரும்பி நடந்தாய்

உன் காலடித் தடங்களில்

முட்கள் பூத்தன..

முன்னும் பின்னும்

போக வழியில்லாத

தவிப்பில் நான்!

----

·         சக மனுஷி
·         பாட்டி
·         நீ
·         நான்

இந்தக் கவிதையில் பாட்டி பார்க்க விரும்பும் பேத்தியின் திருமணம் என்ற பால்ய விவாகம் எனும் இயல்பான ஒரு காட்சி கவிதையாக மாறியிருக்கிறது. பேத்திதான் "நான்" என்பதும் மணம் புரிந்த கணவன் "நீ" என்றும் கவிதையின் இறுதியில் ஆகிவிட்ட பாத்திரங்கள். கவிதையின் தலைப்பு 'எனக்கான வெளிச்சம்'. எதார்த்தமான வாழ்க்கைச் சிக்கல் கவிதைக்குள் பெயர்க்கப்பட்டுவிட்டது. அதிர்வை ஏற்படுத்தாத வர்ணனை, நம்பிக்கை வறட்சி பற்றிய விளக்கம் இவையே கவிதையாக மாறியிருக்கின்றன.

உரையின் ஆட்சியும் இடைநிலை எழுத்தும்

நவீன கவிதையின் பெரும்பான்மை குணாம்சம் உரையாக நிற்பது. பெண் படைப்பாளர்களிடமும் இதைப் பெருவாரியாகக் காணமுடிகிறது. கதை போன்ற தன்மையுடன் கவிதைகள் எழுதப்படுவதும் கவிதைக்குள் கதை வருவதும் என்று உரை, ஆட்சி செய்கிறது. இந்தக் கவிதைகளில் கவிதையின் பண்பு குறைவாக இருக்கிறது. கவிதைக்கான அனுபவத்தையும் அவைத் தருவதில்லை. இலக்கணமற்ற உரை வடிவிலான கவிதைகளாக நவீன கவிதைகள் அடையாளப்படுத்தப்பட்டாலும் கவிதையின் இழையைத் தவறவிடும் வெற்று உரைகளாகப் பல கவிதைகள் இருந்துவிடுகின்றன.

இந்த வகையான கவிதைகள் இடைநிலை எழுத்துகளாக மாறுகின்றன. அவற்றின் இறுதி இலக்கு வணிக எழுத்தாகிப் போவது. காத்திரமான இலக்கியத்தின் கூறுகளை விடுத்து இடைநிலைக்குரிய எளிமை, பரவலான அறிமுகம், சுலபமான அங்கீகாரம் இவற்றிற்கான எழுத்துகளாக அவை இருக்கின்றன. பெண் படைப்பாளர்கள் பலருடைய எழுத்துகள் இந்த நிலையை விரைவில் எட்டிவிடுகின்றன. இடைநிலை இதழ்களிலும் வெகுஜன வணிக இதழ்களிலும் இதனால் பெண் படைப்பாளர்களின் கவிதைகள் எளிதாக இடம்பிடிக்கின்றன.

பெண்ணியத்தின் அடுத்த கட்ட சிந்தனை இந்தப் படைப்பாளர்களிடம் காணமுடிவதில்லை. பெண்ணியத்தின் தொடக்கக் காலச் சிந்தனையே மீண்டும் மீண்டும் படைக்கப்படுகிறது.

உதாரணமாக சல்மாவின் ஒரு கவிதையைப் பார்க்கலாம்.
மாலை நேரக்காற்று

முன்னிற்க
மணநாளில் பவ்யமாய்
விடை பெறுகிறாள்
மணப்பெண்
அவளது பர்தாவுக்குள்
முகம் புதைத்தபடி
மலர்களின் வாசனையோடிணைந்த
புணர்ச்சியைப் போதிக்கிறாள்
தமக்கை.

தானே அறிந்திராத
தடித்த புத்தகத்தின் பக்கங்களை
துரிதகதியில் புரட்டுகிறாள்
எந்த நாளில் புணர்ந்து
கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும்
ஹராமாக்கப்படதெனவும்
கூடவே

புணர்ச்சிக்குப் பிந்தைய
சுத்த பத்தங்களையும்
தன் குள்ள உருவத்திற்கேற்ற
குற்றக் கண்களில் குறுக்கிடுகிற
வாழ்வின் சுகவீனங்களையும்
நைந்து போன புணர்ச்சியின்
வெற்றுச் சூத்திரங்களையும்
தனக்குள்ளாக ஒளித்தபடி
அவ்வப்போது
வெட்கத்தில் துவண்டு
விழுகிற வார்த்தைகளை
சிறுமியின் அசட்டுத் தன்னம்பிக்கையுடன்
துடிப்போடு கடிவாளமிட்டபடி
தன் காதுத் தொங்காட்டானில்
சிக்கி மடங்கிய ஆலோசனைகளை
நீவி எடுத்து
அன்றைய  முழு இரவுக்குமாக
படுக்கையில் படர்த்துகிறாள்
புது மணப்பெண்
மழைக்காலங்களில்
தெருவில் அலையும் சிறுமிகள்
வெண்ணிற மழையையும்
வேனிற் காலங்களில்
வியர்வையை உரித்தெடுப்படியே
மஞ்சள் வெயிலையும் உடுத்துகிறார்கள்
தினமும் கருப்பு இரவுகளை உடுத்தி
தெருக்கோடி மூலைகளிடமும்
டூரிங் டாக்கீஸ் மணல் வெளிகளிடமும்
நட்போடு கிசுகிசுக்கிறார்கள்
தம் கட்டற்ற செயல்களால்
பருவங்களை வண்ண உடையாக்கி
காலம் இன்னும் செப்பனிடாத
குட்டி முலைகளின் மீது

பிறகொரு நாளில் மொத்த பருவங்களும்
மொத்த நிறங்களும்
ஒரே நிறமாய் உருப்பெற்று

யோனிக் கிண்ணத்திலிருந்து
உருகி வழிய
அவ்வர்ணத்தை வியந்து சமைகிறார்கள்
சிறுமிகள்
·         சிறுமி
·         மணப்பெண்
·         புணர்ச்சி

இந்தக் கவிதையில் துருத்தியிருக்கும் சொற்கள், சிறுமி மணப்பெண்ணாகையில் அவளுக்குப் புரியாத புணர்ச்சி பற்றிய விளக்கத்தை அறிதல் என்பதாக விளக்குகின்றன. இதில் ஒரு கதையம்சம் இருக்கிறது. அது நவீனத்திலிருந்து வருவது. நவீனத்தின் உணர்ச்சிகளில் ‘மனதைப் பிசையும் துக்கத்தை’ உருவாக்கும் உணர்ச்சி பல கதைகளில் தொடரப்படும் ஒன்று. அந்த உணர்ச்சியை, கதையின் உணர்ச்சியை இங்குக் கவிதைக்குள் கடன் வாங்கப்பட்டு அப்படியே முன்வைக்கப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமாக்குவது நவீனத்துவத்தின் செயற்பாடாகத் தமிழில் புரிந்துகொள்ளப்பட்டு அதை எழுத்தாக்கமாக மாற்றப்பட்டும் வந்திருக்கிறது. அதை இந்தக் கவிதையும் செய்கிறது. இந்த உணர்ச்சிகரமான சித்திரங்கள் இடைநிலையில் எழுதப்படும் பல இலக்கியங்களின் அச்சாணியாக இருக்கின்றன. அவைதான் வெகுஜன வாசகர்களைக் கொண்ட வணிக எழுத்துக்களுக்கு அடிப்படையாக அமைகின்றன.

பின்நவீன கவிதைகளும் பெண்ணியமும்

பின்நவீன கவிதைகள் பகடி செய்பவையாக, சுய உணர்ச்சி மிக்கவையாக, குறைந்தபட்ச பொருளாம்சம் நிறைந்தவையாக, பெருங்கதையாடலாக இருப்பவை என்று கொள்ளப்படலாம். அது போன்ற கவிதைகள் குறிப்பாக, பெண்ணியக் கொள்கைகளும் அறிந்து எழுதப்படுவது மிகவும் குறைவாகவே உள்ளன. பின்நவீன கவிதைகளை எழுதிய பெண்ணிய படைப்பாளர்களும் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளனர். பெண்ணியத்தின் அடிப்படையிலிருந்து தற்போதைய வளர்ச்சி வரையிலான கோட்பாட்டு சிக்கல்களைப் புரிந்து எழுதுபவர்களும் தமிழில் குறைவாகவே உள்ளனர். பின்நவீன கவிதை எழுதுபவர்களுக்கு உரிய அங்கீகாரமும் தமிழில் கிடைப்பதில்லை என்பதால் அத்தகைய படைப்புகளை எழுதுபவர்கள் ஊக்கம் குறைந்திருக்கிறார்கள். பின்நவீன கோட்பாடுகளுக்குள் வரும் படைப்பாக்கம் தொண்ணூறுகளுக்குப் பிறகு அதிகரித்து மிகக் குறுகிய காலகட்டத்தில் மட்டுமே இருந்து மறைந்துவிட்டது.

நவீனத்துவத்தின் ஆளுகைக்குள் கட்டுப்பட்டப் படைப்பாக்கம் மட்டுமே தமிழின் பெண்ணிய படைப்பாளர்களிடம் பெருகி இருக்கிறது. மேலும் தமிழின் பெண்ணிய படைப்பாளர்களிடம் செயற்பாட்டுத் தன்மை(activism) அதிகரித்ததால் பின்நவீனத்துவத்தின் தாக்கம் இல்லாமல் போய்விட்டது. படைப்பிலும் இந்தச் செயற்பாட்டுத் தன்மையே பெரிதும் மேலோங்கி இருக்கிறது. இயல் வாழ்வில் நடத்தப்படும் செயற்பாடுகள் படைப்புகளுக்குள்ளும் வருவது அவற்றின் இலக்கியத் தரத்தைக் குறைப்பதாகவும் பரிசோதனைக்கு இடமின்றியும் செய்துவிடுகிறது. பெண்ணியத்தைக் கோட்பாடாகப் புரிந்து கொள்வதற்கு மாறாக, செயற்பாடாகத்தான் தமிழின் பெண் படைப்பாளர்கள் புரிந்துகொள்கிறார்கள். பெருந்தேவி போன்ற சில விதிவிலக்கான கவிஞர்களும் இதில் இருக்கிறார்கள்.

விஸ்வரூபம் என்ற மாலதி மைத்ரியின் கவிதையைக் காணலாம்
ஏதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி
என்னைவிட்டு விலகிச் செல்லத்தொடங்கின
அவையே திரும்பி வந்து சேர்வதும்
பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை
தேடிச்சென்று அழைத்து வருவதென நிகழ்வதும்
பிறகு யாத்திரைபோலப் புறப்பட்டுச்
சென்றுவிடுவதும் வழக்கமாகி
எல்லாக் கால வெளியிலும் அலையத்துவங்கின
நீண்ட காலமாகிவிட்டது
பல திக்குகளின் நீர் நிலங்களை
நோக்கிச் சென்றிருக்கும்
எது எத்திசையில் உலவுகிறது
என யூகித்தறிய முடியவில்லை
திரும்பி வந்துவிடும்போது
வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும்
குரல்களோடும் என் உடலெங்கும் மேய்ந்து
என் அடையாளத்தைக் கலைத்து அடுக்குகின்றன
யோனி ஒரு பட்டாம்பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்
·         உறுப்புகள்
·         பறத்தல்
·         உடல்/தன்னிலை

இந்தக் கவிதையில் உடலும் தன்னிலையும் பிரிந்திருப்பதும் சேர்ந்திருப்பதும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. உடலையும் உறுப்புகளையும் பிரித்து தன்னிலை வர்ணித்தல் என்பது டெல்யூஜ் கூறிய விருப்ப எந்திரத்தின் உறுப்புகளற்ற உடலின் வினை போல் உள்ளது. உடல் உறுப்புகள் பறப்பதும் தன்னிச்சையாகச் செயற்படுவதும் மீண்டும் உடலை வந்து சேர்வதும் உடல் எந்திரத்தின் விழைவுகளாகக் கவிதை காட்டுகிறது. இது ஆர்தோவின் ஒரு கவிதையை ஒத்திருக்கிறது.

·         பாலினத்தைக் கடத்தல் என்பதுதான் பாலின அடையாளத்தின் முதன்மைச் செயல்பாடு. அப்போதுதான் பாலினத்தில் நடுநிலையான மொழி சாத்தியப்படும். பாலினத்தைக் கடந்து செல்லாவிட்டால் லிங்கமைய மொழியும் அதற்கு எதிரான மொழியும் மட்டுமே படைப்பில் வாய்க்கும். அது மூலத்தை அறியாமல் விளைவை மட்டும் நோகும் படைப்பாக இருக்கும். பாலினச் சார்பையும் சாய்வையும் சுயத்திலிருந்து விலக்கிவைப்பதற்குப் பெண்ணிய படைப்பாளர்கள் விழிப்புணர்வைக் கொள்ளவேண்டும். பாலினச் சார்பும் சாய்வும் பெண் படைப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஆண் படைப்பாளர்களுக்கும் உரிய ஒன்றாக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். லிங்க மைய மொழிக்கு எதிரான படைப்பாக்கம் நவீனத்துவத்தை மட்டுமே கொடுத்திருக்கிறது. அதை மீறிய பரிசோதனைக் களத்தை உள்ளடக்கிய பின்நவீன படைப்பாக்கங்கள் சாத்தியப்படுவது தமிழில் குறைவாக உள்ளது. செயற்பாட்டுத் தன்மையை படைப்புகளிலும் கொண்டிருந்தால் பெண்ணியத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை அறியாமல் போகும் வாய்ப்பு உருவாகிவிடும். நவீனத்துவத்திலும் பெண்ணியத்தின் ஈர்ப்பிலும் உருவாகும் படைப்புகள் தமிழில் தேக்கநிலையைக் கண்டிருக்கின்றன. நவீனத்துவம் இனியும் புதிய படைப்பாக்கத்தைத் தரப்போவதில்லை என படைப்பாளர்கள் அறியவேண்டிய கட்டம் வந்துவிட்டது. பெண்ணியக் கோட்பாட்டையும் பின்நவீன கோட்பாட்டையும் கொண்ட படைப்புகள் உருவாகி தமிழின் படைப்புத் தரத்தை உயர்த்த வேண்டிய தருணம் இது. கோட்பாடு டெரிடா சொல்வது போல் மாய அட்டை போல் பின்னிருந்து படைப்புக்கு வலுவூட்டும் ஒன்றாகச் செயல்படவேண்டும்.
பயன்பட்ட நூல்கள்
1.Gender Trouble-Feminism and the Subversion of Identity-Judith Butler, Routledge, United Kingdom, 1990.
2.Modules on Kristeva:On Psychosexual Development, Introductory Guide to Critical Theory, Felluga, Dino
3.A Thousand Plateus Capitalism and Schizophrenia-Giles Deleuze and Felix Gauttari, Continuum, London, 1988.
4.Interpreting The New Voice:A Preview of Postmodernism in Contemporary Indian English Women's Writing-Dr.Nutan Koatk, International Journal of English Language, Literuature and Translation Studies, Vol2 Issue4, Oct.2015
5.Theorizing Feminism and Postmodernity-A Conversation with Linda Hutcheon, by Kathleen O'Grady, Trinity College, University of Cambridge. 1998
6.Postmodern Feminism in 3 pages, ancestry.com
7.Women's Writing and Writing about Women:Analysis of the Golden Notebook by Dorris Lessing, Promotor Prof.Dr.Marysa Demoor, Sarah VanButsel, Ghent University.
8.The politics of becoming(-woman): Deleuze, sex and gender-L.Cull O'Maoilearca, academia.edu,
9.Theory @ buffalo on Feminism articles, Vol.8
10.An Introductio to Gynesis: Configurations of Woman and Modernity. JARDINE, ALICE A.  Ithaca: Cornell University Press, 1985.

---------------------



















[1]Becoming-woman, then, is not to become woman, but to become molecular, polysemic, non-organic, or better, not defined by organs and their functions.  'With or Without Lacan?-Stevie Schmiedel, Theory at Buffalo, Deleuze and Feminism, online magazine.
[2] Sexuality proceeds by way of the becoming-woman of the man and the becoming-animal of the human: an emission of particles. A Thousand Plateurs- Deleuze, Gautari, P 278-279

பாலினச் சாய்வின் மொழி:சிறைபடலும் விடுபடலும் புத்தாயிரத்தின் பெண் கவிஞர்களின் படைப்புகள் குறித்து…

(ஜூலை-செப்டம்பர், அக்டோபர்-டிசம்பர் 2017 சிற்றேடு இதழ்களில் வெளிவந்த கட்டுரை) ·          புத்தாயிரத்தின் பெண் படைப்புகள் குறித்துப...