Monday 11 January 2016

கட்டுப்படுத்தும் சமூகத்தில் பிறக்கும் ரட்சிப்பு:ஜில் டெல்யூஜ்ஜை ஆண்டனியோ நெக்ரி எடுத்த பேட்டி -மொழிபெயர்ப்பு


மொழிபெயர்ப்பு:முபீன் சாதிகா
(பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில்:மார்ட்டின் ஜ்யுகின்)


('புது எழுத்து' 15ஆம் ஆண்டு சிறப்பிதழில் வெளியானது)

ஜில் டெல்யூஜ் சென்ற நூற்றாண்டின் மாபெரும் தத்துவவியலாளர். அவரது 'எதிர் இடிபல்' 'ஆயிரம் பீடபூமிகள்' போன்ற பல நூல்கள் இன்றும் பல்வேறு வகையான ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன. அரசியல், தத்துவம், சினிமா, இலக்கியம் என்று அவர் பல்வேறு துறைகளிலும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். அவரை ஆண்டனியோ நெக்ரி என்ற இத்தாலியைச் சேர்ந்த மார்க்சிய சோஷலிசவாதி பேட்டி கண்டார். நெக்ரி 'பேரரசு' என்ற நூலை மைக்கேல் ஹார்ட்டுடன் இணைந்து எழுதியிருக்கிறார். பல வருட சிறை வாழ்க்கையும் இடதுசாரி தீவிரவாத நிலையும் அவரைப் பண்படுத்தியிருக்கின்றன. பூக்கோ, டெரிடா, ஜில் டெல்யூஜ் போன்ற தத்துவவியலாளர்களுடன் அவர் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

நெக்ரிஉங்கள் அறிவுலக வாழ்வில் அரசியலின் சிக்கல் எப்போதுமே இருந்துவருவதாகவே தெரிகிறது. ஹியும் பற்றிய நூலிலிருந்து பூக்கோ பற்றிய நூல் வரை நீங்கள் பங்கெடுத்திருக்கும் பல்வேறு இயக்கங்கள் (சிறைக்கைதிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், இத்தாலிய பிரிவினைவாதிகள், பாலஸ்தீனர்கள்) ஒரு புறம், நிறுவனங்களில் ஏற்படும் நிரந்தரச் சிக்கல்கள் மற்றொரு புறம், ஒன்றுக்குப் பின் ஒன்றாகத் தொடரவும் உங்கள் பணியில் இரண்டுக்கும் இடையில் ஏற்படும் பரிமாற்றமும் இருந்துகொண்டே வருகிறது. அரசியல் பற்றிய கேளவியில் தொடர்ந்து இருக்கும் கவனத்தின் ஆணிவேர்கள் எவை? அது எப்படி உங்கள் வளரும் பணியில் விடாப்பிடியாக இருந்தது? இயக்கத்திற்கும் நிறுவனத்திற்குமான உறவு ஏன் எப்போதுமே சிக்கலாக இருக்கிறது?

டெல்யூஜ்: நான் எதில் அதிகமான ஆர்வம் கொண்டிருக்கிறேன் என்றால் பிரதிநிதித்துவத்தைவிட கூட்டுப் படைப்புகளில்தான். ''சட்டங்கள் நியதிகளை'' மீறி நிறுவனங்களில் முழுமையான ஒழுங்கின் இயக்கம் இருக்கிறது. சட்டத்தைப் பற்றியும் நிறுவனங்கள் பற்றியும் மிகவும் படைப்பூக்கமான எண்ணத்தை நான் ஹியுமில் கண்டேன். நான் தொடக்கத்தில் அரசியலைவிட சட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். பாலியல் தொடர்பான ஒப்பந்தங்கள் பற்றி மாசோக்கிலும் நிறுவனங்கள் பற்றி சேத்-திலும் முமையான தலைகீழாக்கப்பட்ட கருத்தாக்கங்கள் வெளிப்படுவதே நான் அதிகம் விரும்பியவை. இன்றைய காலகட்டத்தில் ஃப்ரான்கொய் ஈவால்ட்டின் சட்டம் பற்றிய தத்துவத்தை மீட்டுருவாக்கம் செய்வது என்பது மிகவும் அடிப்படையானது என்று கருதுகிறேன். சட்டம் அல்லது சட்டங்கள் (முதல் சொல் உள்ளீடற்ற கருத்து, இரண்டாவது சொல் விமர்சனமற்ற கருத்துகள்) அல்லது சமநிலைச் சட்டம் அல்லது உரிமைகள் என்னை ஆர்வப்படுத்துவது இல்லை, மாறாக சட்டவியல்தான் என்னை ஆர்வப்படுத்துகிறது. இந்தச் சட்டவியலின் நோக்கம் சட்டத்தை உருவாக்கிக் கொண்டேசெல்வது, இதை நீதிபதிகள் உருவாக்குவதாக நாம் விட்டுக்கொண்டிருக்கக் கூடாது. குடியாண்மை சட்டத்தைப் படிப்பதைவிட சட்ட அறிக்கைகளை எழுத்தாளர்கள் படிக்கவேண்டும். ஏற்கனவே நவீன உயிரியியலுக்குச் சட்ட அமைப்பை உருவாக்க எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நவீன உயிரியலில் இருப்பதெல்லாம், அது உருவாக்கும் புதிய சூழல்கள், அது சாத்தியப்படுத்தும் புதிய நிகழ்வுகளுக்கான வழிகள் போன்ற அனைத்துமே சட்டவியலை ஒட்டியுள்ளதுதான். இதற்காக நல்ல தகுதி படைத்த அறிவாளிகள் என்று அழைக்கப்படுகிற அறவியல் குழு தேவையில்லை, ஒரு பயனர் குழு போதும். இங்குதான் நாம் சட்டத்திலிருந்து அரசியலுக்கு நகர்கிறோம்.கத்தாரி மூலமும், பூக்கோ  மூலமும், எலை சம்பார் மூலமும். நான், எனது தனிப்பட்ட பங்கிற்காக, மே-68[1]இயக்கத்தை ஒட்டி நிகழ்ந்த அரசியலில் நகர்ந்து குறிப்பிட்ட சில பிரச்சனைகளோடு தொடர்பு கொண்டேன், 'எதிர்-இடிபல்' நூல் துவக்கத்திலிருந்து இறுதி வரை அரசியல் தத்துவத்தைப் பற்றிய நூல்.

நெக்ரி:68-நிகழ்வுகளை நீங்கள் காலந்தவறிய வெற்றியாக, வழமையாதலுக்கு எதிரான விடியலாக எடுத்துக்கொண்டீர்கள். நீங்கள் நீட்ஷே பற்றி எழுதியதிலும் சிறிது நாட்களுக்குப்பிறகு எழுதிய ''சில்லிடலும் குரூரமும்'' என்ற நூலிலும் அரசியலுக்குப் புதிய பொருள் அளித்தீர்கள்-அதற்கு சாத்தியம், நிகழ்வு, ஒருமை என்று. நிகழ்காலத்தோடு எதிர்காலம் முறிவுகொள்ளும் நிகழ்புள்ளியை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் அதன் விழிப்பில் நிறுவனங்கள் மாற்றமுறவேண்டும் என்றீர்கள். ஆனால், '68-நிகழ்வுக்குப் பிறகு நீங்கள் உங்கள் அணுகுமுறையை  சற்று மாற்றிக் கொண்டீர்கள்: ''சிறுபான்மை உலகமயமாவது'' வெளியாக மட்டுமேயாகும்போது, நாடோடிச் சிந்தனை எப்பொழுதும் காலத்தில் தன்னெழுச்சியான எதிர்-வழமையாதல் என்ற வடிவத்தை எடுக்கிறது என்பதாக. இந்தக் காலந்தவறியதின் உலகமயத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

டெல்யூஜ்: அதாவது, உருவாகுதலுக்கும் வரலாறுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டிற்கான சாத்தியத்தைக் குறித்து மிகஅதிகமான விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறேன். ''வரலாறற்ற மூட்டத்தில்'' இருந்து எப்பொழுதுமாக விடுபடுவதை விட வேறெதுவும் முக்கியமில்லை என்று நீட்ஷே கூறியிருக்கிறார். இது நித்தியத்துவத்தையும் வரலாறையும்  அல்லது சிந்தனையையும் செயல்பாட்டையும் எதிர்ப்பதல்ல:நிகழ்வுகள் நடக்கும் வழிமுறைகள் பற்றியும், நிகழ்வுகள் அதற்குள்ளாகவே உருவாகுதலைப் பற்றியும்  நீட்ஷே பேசுகிறார். வரலாறு எதை உள்வாங்குகிறது என்றால் குறிப்பான சூழல்நிலையில் நிகழும் நிகழ்வுகள் எப்படி வழமையாக்கப்படுகிறது என்ற வழிமுறைகளைத்தான்; அந்த நிகழ்வின் உருவாகுதல் என்பது வரலாற்றின் நோக்கெல்லைக்கு அப்பாலுள்ளது. வரலாறு பரிசோதனைக்குரியதல்ல, அது உத்தேசமாக வரலாற்றிற்கு அப்பால் உள்ள சிலவற்றை சாத்தியமாக்கும் எதிர்மறையான முன்நிபந்தனைகளின் தொகுதி. வரலாறு இல்லாமல் இப்பரிசோதனை நிர்ணயமற்றது, எந்தவொரு முன்நிபந்தனையும் இல்லாதது, ஆனால் பரிசோதிப்பதே வரலாறு அல்ல. க்ளியோ, பெகை தங்களது சிறந்த தத்துவ நூலில் வரலாற்றின் நிகழ்வுகளை இரு வகையாகப் பார்ப்பதைச் சுட்டியிருக்கிறார்கள். ஒன்று, நிகழ்வின் போக்கைப் பின்தொடர்வது, வரலாற்றில் அது எப்படி நடந்திருக்கும் என்று சேகரிப்பது அதன் தயாரிப்பு எப்படிப்பட்டது அது எப்படி வரலாற்றில் மட்கிப் போகிறது என்று பார்க்கும் பார்வை ஒன்று. மற்றொன்று, நிகழ்விற்குள் திரும்பப் போய், உருவாகுதலில் பாத்திரமேற்பது போல் பாவித்து, அதற்குள்ளேயே அத்தருணத்திலேயே இளமையாகவும் முதுமையாகவும் வளர்ந்து, அதன் கூறுகள் அல்லது ஒருமைகளில் செல்வது. உருவாகுதல் வரலாற்றின் பகுதி அல்ல, வரலாறு தருவது முன்நிபந்தனைகளின் தொகுதியை மட்டுமே, இருந்தபோதிலும் தற்பொழுது, ஒருவர் ''உருவாகுதல்'' என்பதிலிருந்து விலகிச்செல்ல வேண்டும், அதாவது, புதிய ஏதோ ஒன்றை படைக்க. இதைத்தான் நீட்ஷே காலந்தவறுதல் என்றார். மே 68 என்பது உருவாகுதலின் தெளிந்த நிலையைக் காட்டும் ஓர் ஆர்ப்பாட்டம், ஒரு வெடிப்பு. இந்தக் காலகட்டத்தில் புரட்சியின் பயங்கரங்களைப் பற்றி கண்டிப்பது ஒரு பாணியாகிவிட்டது. அது புதிதல்ல. இன்று ஸ்டாலின் பற்றிய எதிர்வினை போலத்தான் க்ராம்வெல் மீதான எதிர்வினையாக ஆங்கில வீறுணர்வுவாதம் இருந்தது. புரட்சிகள் தீமையான விளைவுகளைத் தருபவை என்று கூறுகிறார்கள். ஆனால் வரலாற்றில் புரட்சிகள் மாறியிருப்பதையும் மக்கள் புரட்சிகள் காரணமாக உருவாகியிருப்பதையும் தொடர்ந்து இரு வேறு கருத்துகளாகப் பார்க்காமல் அவர்கள் குழப்பிக் கொள்கிறார்கள். இவை இரு வகையான மக்களைப் பற்றியதாக உள்ளன. மனிதர்களின் ஒரே நம்பிக்கை என்பது புரட்சிகர உருவாகுதலில் உள்ளது: அவர்களின் அவமானத்தைத் துடைத்தெறியும் ஒரே வழி அல்லது சகிக்க முடியாத ஒன்றுக்கு மறுமொழி கொடுப்பது.

நெக்ரி:நீங்கள் எழுதிய 'ஆயிரம் பீடபூமிகள்' நூல் மாபெரும் தத்துவ நூலாக நான் கருதுகிறேன். அதே நேரத்தில் அது தீராத சிக்கல்களின் அட்டவணையாகவும் எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக அரசியல் தத்துவத்துறையில் அப்படி இருக்கிறது. அதில் வரும் இருமை முரண் சொற்களான- செயலும் திட்டமும், ஒருமையும் தன்னிலையும், தொகுப்பும் நிறுவனமும், போக்கின் கூறுகளும் உபகரணங்களும்/உத்திகளும் நுண்மையும் விரிவும் போன்றவை-கோட்பாட்டக்கம் செய்யும் ஆச்சரியமான விருப்பத்தினாலும் தீவிரமான நினைவூட்டல்களின் பிரகடனங்களாலும் இவை எல்லாம் எப்போதுமே திறந்திருக்கும் என்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து இவை மீண்டும் திறக்கப்படுகின்றனஅதற்கு எதிராக எனக்கு எதுவும் இல்லை அதற்கு ஆதரவாகத்தான் உள்ளது...ஆனால் சில சமயங்களில் எனக்கு அவல ஒலியைக் கேட்பது போல் தோன்றுகிறது, சில புள்ளிகளில் ''போர் எந்திரம்'' எங்கு செல்கிறது என்பது தெளிவாக இல்லை.

டெல்யூஜ்: நீங்கள் சொல்வது என்னுள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நானும் ஃபிலிக்ஸ் கட்டாரியும் இன்னும் மார்க்சியர்களாக இருக்கிறோம் என நினைக்கிறேன், நாங்கள் இருவருமே இரு வேறு வழிகளில்எந்த ஒரு தத்துவமும் முதலாளித்துவம் பற்றியும் அதன் வளர்ச்சிப் பற்றியும் ஆய்வு செய்யவேண்டும் என்று நாங்கள் நினைப்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். எங்களுக்கு மார்க்ஸிடம் ஆர்வமூட்டக்கூடியதாக இருப்பது என்னவென்றால் அவருடைய ஆய்வில் முதலாளித்துவம் ஓர் உள்ளுறைந்த அமைப்பாகவும் அது தொடர்ந்து தனது எல்லைகளை மீறி வருவதையும் மீண்டும் விரிவான வடிவத்தில் அவற்றைத் தாண்டி வருவதையும், ஏனெனில் அதன் அடிப்படை எல்லையே மூலதனம்தான் என்பதுமே'ஆயிரம் பீடபூமிகள' பல திசைகளில் சென்றாலும் அவற்றில் மூன்று முக்கியமாக உள்ளது: முதலாவது, எந்த ஒரு சமூகமும் அதன் போக்குகளின் கூறுகளால் விளக்கம் பெறுவதைப் போல அதன் முரண்பாடுகளால் விளக்கம் அடைவதில்லை. அது எல்லா இடங்களிலும் பரவுகிறது, போக்குகளின் கூறுகள் வடிவம் பெறும் ஒரு தருணத்தையோ மற்றொரு தருணத்தையோ பின் தொடர்வதும் பார்க்க முயற்சிப்பதும் பெரும் ஆர்வத்தைத் தருவதாக உள்ளது. இப்போது ஐரோப்பாவை பாருங்கள். மேற்கத்திய அரசியல்வாதிகள் அதனைக் கட்டமைக்க பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள், தொழில்நுட்பவாதிகள் ஒழுங்கான ஆட்சியையும் விதிகளையும் அமைக்க பெரும் முயற்சி செய்திருக்கிறார்கள், இருந்தாலும் இளைஞர்கள், பெண்களின் எழுச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது சாத்தியப்பட்டதற்கு எளிமையான காரணம் சில தடைகள் நீக்கப்பட்டிருக்கின்றன (''தொழில்நுட்பமயமாக இயலாத'' விளைவுகளினால்) இந்த ஐரோப்பா தொடங்கப்படுவதற்கு முன்பே முழுவதுமாகக் கிழக்கிலிருந்து வந்த இயக்கங்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று ஒருவர் கருதினால் அது நகைப்புக்குரிய ஒன்றாகக் கவனிக்கப்படவேண்டும். இவை முதன்மையான போக்கின் கூறுகள். ஆயிரம் பீடபூமிகளில் மற்றொரு திசை உள்ளது. அது போக்கின் கூறுகளை ஆய்வது மட்டும் அல்ல, அவற்றின் முரண்பாடுகளை ஆய்வது. வர்க்கங்களைப் பற்றியதல்ல சிறுபான்மைகளைப் பற்றியது. பிறகு இறுதியாக, மூன்றாவது திசை, ''போர் எந்திரங்களின்'' குணாம்சங்களைக் கண்டறிவது பற்றியது, அது போரைப் பற்றியதல்ல ஆனால் சில வகையான ஆக்கிரமிப்பை, எடுத்தாள்வதை, காலவெளி அல்லது புதிய காலவெளியை: புரட்சிகர இயக்கங்கள் (அரேபிய உலகில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு எப்படி தனது காலவெளியைக் கண்டுபிடித்தது பற்றி மக்கள் அதிகமாகக் கண்டு கொள்வதில்லை) கண்டுபிடிப்பது பற்றியது. அத்துடன் கலை இயக்கங்கள் கூட அந்தப் பொருளில் போர் எந்திரங்கள்தான்.

நீங்கள் இவை அனைத்திலும் ஓர் அவலம் அல்லது துக்க ஒலி கேட்பதாகச் சொல்கிறீர்கள். அது ஏனென்று என்னால் சிந்திக்க முடிகிறது. பிரைமோ லெவி 'மனிதனாக இருப்பதில் அவமானம்' என்று நாஜி சித்திரவதை முகாம்கள் பற்றி விளக்கி எழுதிய எல்லா பத்திகளும் என்னை ஆட்படுத்தின. சிலர் நம்மை நம்பவைப்பது போல நாஜிசத்திற்கு நாம் அனைவருமே பொறுப்பு என்பதாக அது இல்லை, மாறாக நாம் அனைவருமே அதன் கறையைக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான். அதிலிருந்து தப்பியவர்கள் கூட உயிர் வாழ்வதற்காகவே அவற்றுடன் சமரசம் செய்யவேண்டியிருந்தது. நாஜிக்களாக மாறுவதிலுள்ள அவமானம், அதிலிருந்து விலக இயலாதது, அதை எப்படித் தடுப்பது என்று அறியாமல் இருந்தது, அதனுடன் சமரசம் செய்தது, இவை எல்லாமே பிரமோ லெவி, எதை ''சாம்பல் பகுதிகள்'' என்று அழைத்தாரோ அவை.. மனிதனாக இருப்பதில் அவமானம் அடையவேண்டிய மிக அற்பமான தருணங்களும் உள்ளன: வக்கிரமான சிந்தனை வரும் முகத்தில், அமைச்சர்களின் பேச்சை பொழுதுபோக்காகக் கேட்கும் பொழுதுகளில் ''கிளுகிளுப்பான மக்கள்'' பேசும் அவதூறுகளில். இதுதான் தத்துவத்திற்கு பெரும் ஆற்றலைத் தரும் ஊக்கமாக உள்ளது, அதுதான் தத்துவத்தை அரசியலாக உருவாக்குகிறது. முதலாளித்துவத்தில் ஒரே ஓர் அம்சம்தான் சர்வதேசத்திற்கும் உரியது, அது சந்தை. சர்வதேச அரசு இல்லை, ஏனெனில் சர்வதேச சந்தையில் அரசுகள்தான் மையங்களாக வியாபார பீடங்களாக உள்ளன என்பதுதான் முக்கிய காரணம். ஆனால் சந்தை என்பது சர்வதேசமயமாக்காது, அது ஒருபடித்தானதாக்குகிறது. அது சொத்தையும் துயரத்தையும் பயக்கும் அசாதாரணமான பொறி. மனித உரிமைகளுக்கு உரிய கவனம் தரப்படுவதை முற்போக்கு முதலாளித்துவத்தின் ''ஆனந்தங்கள்' என்று புகழ்வதற்கு நாம் தள்ளப்படக்கூடாது. அந்தக் கவனமும் முதலாளித்துவத்தின் ஓர் உள்ளார்ந்த அம்சம்தான். எந்த ஒரு ஜனநாயக அரசும் மையத்திலிருந்து அதன் ஒரு பகுதிவரை மனித துயரத்தை உண்டாக்குவதிலிருந்து விலகிச் செல்லும் சமரசத்தில் இல்லை. எது அதிகமான அவமானம் என்றால் நம்முள்ளேயே கூட உருவாகுதல்களைக் கையாள்வதற்கான வழிகள் இல்லை அல்லது அதை விட கூடுதலாக அவற்றைத் தூண்டுவதற்கான வழிகளும்கூட நம்மிடம் இல்லை. எப்படி ஒவ்வொரு குழுவும் மாற்றம் பெறும் அது எப்படி வரலாற்றுக்குள் வீழ்ந்து போகும் என்பது தொடர்ந்த 'கவனம்' பெற்றுள்ளது. பாட்டாளிகளைச் சுற்றி அவர்கள் விழிப்புணர்வின் நிலையை அடைவதற்கு எந்த ஒரு பிம்பமும் இனி இல்லை.

நெக்ரிஎப்படி சிறுபான்மை உருவாகுதல் என்பது ஆற்றல் கொண்டதாக இருக்கும்? எப்படி எதிர்ப்பு என்பது எழுச்சியாக உருவாகும்? உங்களைப் படிக்கும் போது அந்தக் கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியவில்லை, ஆனாலும் அந்தக் கேள்விகளைக் கோட்பாட்டு ரீதியாகவும் அனுபவரீதியாகவும் மறுவடிவமாக உங்களின் நூல்கள் உத்வேகத்தையும் சக்தியையும் எனக்கு எப்போதும் அளித்தன. மேலும் கற்பனையைப் பற்றி அல்லது ஸ்பினோஜாவில் இருந்தப் பொதுக் கருத்துகள் பற்றி நான் படித்த போதும் மூன்றாம் உலக நாடுகளில் எடுக்கப்படும் புரட்சிகர திரைப்படங்களில் கால-பிம்பம் பற்றிய விளக்கத்தைத் தொடர்ந்த போதும் மற்றும் பிம்பத்திலிருந்து கட்டுக்கதை வரையான பாதையையும் அரசியல் நடைமுறைகளையும் உங்களுடன் உள்வாங்கிய போதும் நான் இந்தக் கேள்விகளுக்கான பதிலை ஏறக்குறைய கண்டுபிடித்துவிட்டேன்...அல்லது நான் தவறாகப் புரிந்துகொள்கிறேனா? பிறகு ஒடுக்கப்பட்டவர்கள் செயலூக்கம் பெறுவதற்காகக் காட்டும் எதிர்ப்புக்கு வழி இருக்கிறதா, சகிக்கமுடியாதது என்று சொல்லப்படுவது தீர்மானகரமாக நீக்கப்படுமா? ஒருமையின் திரள்களும் அணுக்களும் ஒருங்கிணைந்து நாமெல்லாம் முன்வந்து அதிகாரம் ஒழுங்கமைக்கப்படுவதற்கான வழி ஏதாவது இருக்கிறதா அல்லது நீதியியல் முரண்பாடு நிறுவும் அதிகாரம் விளக்குவதாக ஒழுங்கமைக்கப்படும் அதிகாரத்தை நாம் ஏற்கவேண்டியதாக இருக்குமா?

டெல்யூஜ்: சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையிலுள்ள வேறுபாடு அளவு சார்ந்தது அல்ல. ஒரு சிறுபான்மை, பெரும்பான்மையை விடப் பெரியதாக இருக்கலாம். பெரும்பான்மையை எப்படி விளக்கலாம் என்றால் அது உறுதியான மாதிரி: உதாரணமாக ஒரு சராசரி ஐரோப்பிய நகரம்சார் ஆண்...ஆனால் ஒரு சிறுபான்மைக்கு மாதிரி என்று எதுவும் இல்லை, அது ஒரு உருவாகுதல், அது ஒரு செயல்முறை. பெரும்பான்மை என்று யாரும் இல்லை என்று ஒருவர் சொல்லலாம். ஒவ்வொருவரும் ஒரு வழியிலோ மற்றொன்றிலோ,  சிறுபான்மை உருவாகுதலில் பீடிக்கப்படுவார்கள் அவர்கள் அதைப் பின்தொடர்ந்தால் அவர்களைப் திசை அறியாத பாதைகளுக்கு இட்டுச் செல்லும். சிறுபான்மை தனக்கான மாதிரிகளை உருவாக்கும் போது அது பெரும்பான்மை ஆக விரும்புகிறது, பெரும்பான்மை ஆகவேண்டியிருக்கிறது, வாழவும் அல்லது வளரவும் (உதாரணமாக ஓர் அரசைக் கொண்டிருக்க அங்கீகாரம் பெற அதன் உரிமைகளை நிலைநாட்ட). ஆனால் அதன் அதிகாரம் அது படைப்பைக் கையாள்வதிலிருந்து வருகிறது, அது ஓரளவுக்கு மாதிரிக்கு உரியதாகிறது, ஆனால் அதன் மீது சார்ந்திருப்பதில்லை. ஒரு மக்கள் திரள் என்பது எப்போதுமே படைக்கப்பட்ட சிறுபான்மை, அது பெரும்பான்மையை ஈட்டும் போதும் அப்படியே இருக்கும், ஒரே சமயத்தில் இரண்டுமாகவும் அது இருக்கும் ஏனெனில் ஒரே தளத்தில் இரண்டுமே வாழ்ந்திருப்பதில்லை. மகா கலைஞர்கள் (பிரபலமான கலைஞர்கள் அல்லாமல்) ஒரு மக்கள் திரளை நிலைநிறுத்துபவர்களாவும் அப்படி அமைக்கையில் அவர்கள் ''மக்கள் திரள் இன்மையை' கண்டறிபவர்களாகவும் இருக்கிறார்கள். மல்லார்மே, ரிம்பாட், க்ளீ, பெர்க் போன்றவர்கள். திரைப்படத்தில் ஸ்ட்ராப் போன்றவர்கள். கலைஞர்கள் ஒரு மக்கள் திரளை நிலைநிறுத்த மட்டுமே முடியும், அவர்களது செயல்களின் அடித்தளம்வரை செல்லவேண்டிய தேவைவரும்., அவர்களை உருவாக்குவது அவர்களது வேலை அல்ல, அவர்களால் முடியவும் முடியாது. கலை என்பது எதிர்ப்பு: அது மரணத்தை, அடிமைத்தனத்தை, முறைகேட்டை, அவமானத்தை எதிர்க்கிறது. ஆனால் ஒரு மக்கள் திரள் கலை பற்றி கவலைப்பட முடியாது. எப்படிப்பட்ட அல்லல்களுக்கு இடையில் எப்படி ஒரு மக்கள் திரள் படைக்கப்படுகிறது? ஒரு மக்கள் திரள் படைக்கப்பட்டால் அது அதன் மூலத்திலிருந்துதான் படைக்கப்படுகிறது, ஆனால் தொலைவில் அது கலையுடன் ஓர் இணைப்பைக் கொள்கிறது (லுவரில் கூட பெரும் அல்லல் இருப்பதாக கேரல் கூறுகிறார்) அல்லது அது அதன் குறையை நிறைவாக்க கலையுடன் இணைகிறது. கற்பனாவாதம் சரியான கருத்தல்ல. அது ஒரு மக்கள் திரளும் கலையும் பகிர்ந்து கொள்ளும் பெரும்பாலான ''பட்டியலிடப்படல்''. நாம் பெர்க்ஸனின் பட்டியலிடப்படும் கருத்தை எடுத்துக் கொண்டு அதற்கு அரசியல் பொருளைத் தரவேண்டும்.

நெக்ரி:நீங்கள் பூக்கோ பற்றிய நூலிலும் என்ஐஏ தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியிலும் மூன்று வகையான அதிகாரங்களைப் பற்றி கோடிட்டு காட்டுகிறீர்கள்: இறையாண்மை அதிகாரம், ஒழுங்குறுதலின் அதிகாரம், மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக மேலாண்மையை நோக்கிச் செலுத்தப்படும் "தொடர்புறுதலின்"கட்டுப்பாடு. மூன்றாவது சூழல் என்பது ஆதிக்கத்தின் துல்லியமான வடிவம், கற்பனையையும் பேச்சையும் கூட கட்டுப்படுத்தும்,  ஆனால் மற்றொரு பக்கம், எந்த ஒரு மனிதனும், எந்து ஒரு சிறுபான்மையும், எந்த ஓர் ஒற்றைத்துவமும், முன்பு எப்போதும் இருந்ததை விட ஆற்றலுடன் வெளிப்படுத்துவதும் அதன் காரணமாக பெருமளவு சுதந்திரத்தை மீட்டெடுப்பதும் நடக்கிறது. மார்க்சிய கற்பனாவாதமான 'க்ரண்ட்ரைஸி'ன் கம்யுனிசம் சுதந்திர தனிநபர்களுக்கான நேர்எதிர் நிறுவனத்தின் வடிவத்தை எடுக்கிறது. அதைச் சாத்தியப்படுத்தும் ஒரு தொழில்நுட்பத்தால் அது கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் கூட கம்யுனிசம் சாத்தியமான வாய்ப்பா? தொடர்புறும் சமூகத்தில் அது எப்போதும் இருப்பதை விட குறைந்த கற்பனாவாதமாக உள்ளதா?

டெல்யூஜ்: நாம் நிச்சயமாக ''கட்டுப்படுத்தப்படும்'' சமூகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறோம், ஆனால் அவை ஒழுங்குறுத்தல் சார்ந்ததாக இனியும் இல்லை. பூக்கோ எப்போதும் ஒழுங்குறுத்தல் சமூகங்கள் பற்றிய கோட்பாட்டாளராகப் பார்க்கப்படுகிறார். மற்றும் அந்தச் சமூகங்களின் முதன்மை தொழில்நுட்பம் என்பது அடைத்து வைத்தல் (மருத்துவமனைகளிலும் சிறைகளிலும் மட்டும் அல்ல, பள்ளிகளில், தொழிற்சாலைகளில், படைகளில் கூட). ஆனால் அவர்தான் முதன் முதலாக ஒழுங்குறுத்தல் சமூகங்களிலிருந்து நாம் விலகிச் செல்கிறோம் என்பதைச் சொன்னவர். நாம் அவற்றை விட்டு வந்துவிட்டோம். நாம் கட்டுப்படுத்தப்படும் சமூகங்களுக்குச் செல்கிறோம். இவற்றில் மக்கள் அடைத்து வைக்கப்படுவது இல்லை. ஆனால் தொடர் கட்டுப்பாடு மூலமாகவும் உடனடி தொடர்புறுத்தல் மூலமாகவும் செயல்படுகின்றன. பர்ரோஸ்தான் இதை முதலில் சொன்னார். மக்கள் தொடர்ந்து சிறைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்: அந்த நிறுவனங்கள் குலைந்து கொண்டிருக்கின்றன. அவை தோற்கும் போராட்டத்தில் இருப்பதால் குலைந்து கொண்டிருக்கின்றன. புதிய வகையான தண்டனைகள், கல்வி, நலச் சேவைகள் மறைமுகமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. திறந்த மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கே வரும் நலச் சேவைகள் போன்றவை இப்போது வந்திருக்கின்றன. கல்வி மூடப்பட்ட இடமாக இருந்தது மிகவும் குறைந்து வருகிறது, உழைக்கும் இடத்திலிருந்து வேறுபட்டதாக அதுவும் ஒரு மூடப்பட்ட இடமாக இருப்பதும் ஆனால் இரண்டுமே மறைந்துகொண்டிருப்பதும் உழைப்பாளி-பள்ளிக் குழந்தைகளுக்கு மற்றும் அரசு அலுவலர்-மாணவர்களுக்கு அஞ்சத்தக்க தொடர் பயிற்சிகளை அளிப்பவையாகவும் தொடர் கண்காணிப்பைக் கொண்டவையாக மாறிக் கொண்டிருப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் இதை கல்வி சீர்திருத்தமாகச் சொன்னாலும் அது பள்ளியின் சீர்குலைவுதான். கட்டுபாடுள்ள அமைப்பில் எதுவுமே அதிக காலத்திற்குத் தனியாக விடப்படுவதில்லை. இத்தாலியில் பகுதி நேர வேலையை வீட்டிலேயே நடத்திக் கொள்ளலாம் என்பது பற்றி நீங்களே நீண்ட காலத்திற்கு முன் பரிந்துரைத்திருந்தீர்கள். அதன் பின் அது பரவியது(புதிய வடிவங்களில் உற்பத்திப் பொருள் பரவலாக்கப்படுவதும் பங்கிடப்படுவதும் நடந்தது). ஒவ்வொரு சமூகமும் ஒரு வகையான எந்திரத்தை எதிர்கொள்வது பற்றி பார்க்கமுடியும். எளிமையான இயக்கம் உள்ள எந்திரங்களை இறையாண்மை சமூகங்களும், வெப்ப இயக்கம் உள்ள எந்திரங்களை ஒழுங்குறுத்தல் சமூகங்களும், தொடர்புகட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் கணினி எந்திரங்களை கட்டுப்படுத்தும் சமூகங்களும் எதிர்கொண்டதைப் பார்க்க முடியும். ஆனால் எந்திரங்கள் எதையும் விளக்குவதில்லை, ஒழுங்கமைக்கப்படும் தொகுப்பு வரிசையின் ஓர் உறுப்பாக இருக்கும் எந்திரங்களை ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது. எதிர்வரும் முடிவற்ற கட்டுப்பாடுள்ள திறந்த சமூகங்களோடு ஒப்பிடும் போது கடுமையான அடைத்து வைக்கப்பட்ட மூடிய சமூகங்கள் மகிழ்வான கடந்தகாலமாகப் பார்க்கப்பட்டன. ''தொடர்புறுத்தலின் சர்வதேசமயம்'' பற்றிய தேடல் நம்மை நடுங்க வைக்கிறது. கட்டுபடுத்தப்படும் சமூகங்கள் முழுவதுமாக உருவாவதற்கு முன்பே குற்றத்தின் வடிவங்களும் அல்லது எதிர்ப்புகளும் (இரண்டும் வேறுவேறானவை) தோற்றமெடுப்பதும் உண்மை. உதாரணமாக, கணினி களவுகளும் வைரஸ்களும் வேலை நிறுத்தங்கள் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட 'நாசவேலைகளையும்" (எந்திரங்களின் ''அடைப்புகள்'') ஒத்திருந்தன. கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தொடர்புறு சமூகங்கள் தடைகளுக்கான வடிவங்களுக்குக் கொண்டுசென்று அதனால் கம்யுனிசம் மீண்டும் வர பாதை திறக்கப்படும் என்பது ''சுதந்திரமான தனிநபர்களின் நேர்எதிர் நிறுவனங்கள்'' என்று அறியப்படுமா என்று கேட்கிறீர்கள். இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. அது சிறுபான்மையினர் வெளிப்படையாகப் பேசுவதற்கு எதுவும் செய்யப் போவதில்லை. பேச்சும் தொடர்புறுத்தலும் ஒருவேளை சிதைந்திருக்கலாம். தற்செயலாக அல்லாமல் இயல்பாகவே அவர்கள் பணத்தால் ஊடுருவப்பட்டிருக்கிறார்கள். நாம் பேச்சைக் கடத்தவேண்டும். தொடர்புறுத்தலைவிட படைப்பாக்கம் என்பது எப்போதுமே வேறுபட்டது. தொடர்புறுத்தமுடியாத இடைவெளிகளையும், தடுப்பான்களையும் உருவாக்கிக் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பவேண்டும்.

நெக்ரி:உங்களின் மற்ற நூல்களைவிட பூக்கோ பற்றிய நூலிலும் மடிப்புகள் நூலிலும் தன்னிலையாக்கத்தின் சிக்கல் குறித்து ஆழமாக ஆய்வு செய்யப்பட்டிருப்பது போல் தெரிகிறது. உள்ளுக்கும் புறத்துக்கும் இடையிலான இடையறாத இயக்கம்தான் தன்னிலை. இந்தத் தன்னிலை என்ற கருத்தியலின் அரசியல் விளைவுகள் என்ன? இந்தத் தன்னிலை வெளிப்புறத்தில் குடியுரிமையாகச் சுருக்கப்படாவிட்டால், அது குடியுரிமையைக் கட்டாயமாகவும் உயிர்ப்புடனும் முதலீடு செய்யமுடியுமா? அது ஒரு புதிய தீவிரவாத செயல்முறையியலை உருவாக்க சாத்தியமாகுமா? உலகத்திற்கு ஒரு ரட்சிப்பைத் தருவதாகவோ புரட்சிகர அமைப்பாகவோ ஆகுமா? நிகழ்வின் உன்னதங்கள் மற்றும் தன்னிலையின் அரசியல் எதை வரலாற்றுக்குள் எடுத்துச் செல்லும்? ஆற்றலுடையதாய் இருந்தாலும் எந்த ஓர் அடிப்படை இல்லாவிட்டாலும் கூட அது மொத்தத்துவமாகது நாம் எப்படி ஸ்பினோஜா சொல்வது போல் முழுமையான ஓர் இனத்தை உண்டாக்குவது?

டெல்யூஜ்: தன்னிலையாக்கம் எனும் செயல்பாட்டின் மூலம் தனிநபர்களும் குழுக்களும் தன்னிலைகளாக பல வழிகளில் நிலைபெறுவதைப் பார்ப்பது நிச்சயமாகப் பொருளாம்சம் மிக்கது. அந்தச் செயல்பாடுகளில் எது முக்கியமாக இருக்கிறது என்றால் அறிவின் நிறுவன வடிவத்தையும் அதிகாரத்தின் ஓங்கிய வடிவங்களையும் புறக்கணித்து அவர்கள் எந்த அளவு வடிவமைக்கப்படுகிறார்கள் என்பதே. அதிகாரத்தின் புதிய வடிவங்களை அவர்கள் தோற்றுவித்தாலும் அல்லது அறிவின் புதிய வடிவங்களில் இணைந்தாலும் அதுவும் முக்கியமானதே. ஒரு தருணத்தில் உண்மையாக தன்னெழுச்சியான கலக இயல்பைக் கொண்டிருந்தாலும் கூட. ''தன்னிலை'' என்பதோடு எதுவும் தொடர்புடையதில்லை. அதாவது கடமைகள், அதிகாரம், அறிவு என்பதில் முதலீடு செய்யப்படுவதாக இல்லை. ஒருவர் தன்னிலையாக்கச் செயல்பாட்டிற்கு பதிலாக, புதியவகை நிகழ்வுகள்பற்றி சரிநிகராகவும் நன்றாகவும் பேசலாம்: நிகழ்வுகள் அவற்றை உருவாக்கும் சூழ்நிலைகளை அல்லது அவற்றை கொண்டுசெலுத்தும் நிலமைகளை விவரிக்காமல் விளக்கப்படமுடியாது. ஒரு தருணத்தில் அவை தோற்றம் பெறும். அந்தத் தருணம்தான் முக்கியமானது அந்த வாய்ப்பை நாம் கைப்பற்றவேண்டும். அல்லது நாம் எளிமையாக மூளையைப் பற்றிப் பேசலாம்: மூளை உள்ளும் புறமும் நடக்கும் இரு வழி தொடர் இயக்கத்தின் இடையில் உள்ள எல்லை, அதாவது இரண்டுக்கும் இடையிலுள்ள ஒரு சவ்வு. அல்லது அது அறிவியலுக்குரியது. ஒருவர் ஏன் இந்த வழியில் அல்லது மற்றொரு வழியில் சிந்திக்கிறார் என்பதைக் கண்டறிவது, புதிய மூளைப் பாதைகளை தெளிவது, புதிய சிந்தனைகளைக் கண்டுபிடிப்பது போன்றவை நுண்ணிய அறுவை சிகிச்சை மூலம் கூட விளக்கப்பட முடியாததுதான். தன்னிலையாக்கம், நிகழ்வுகள் மற்றும் மூளைகள் என்பவை எல்லாமே ஓரளவில் ஒன்றுதான் என்றே நான் நினைக்கிறேன். என்ன நாம் உலகின் மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம், நாம் இந்த உலகத்தை இழந்துவிட்டோம், நம்மிடமிருந்து இந்த உலகம் பறிக்கப்பட்டுவிட்டது. நாம் உலகத்தை நம்பினால் எத்தனை தெளிவற்றதாக இருந்தாலும் அதைப் படியச் செய்வோம், அது கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்லும், எத்தனை சிறியதான பரப்பும் கொள்ளளவும் இருந்தாலும் புதிய காலவெளிகளைக் கண்டுபிடிப்போம். இதைத்தான் நீங்கள் ரட்சிப்பு என்கிறீர்கள். நம்முடைய ஒவ்வொரு இயக்கத்தை வைத்தும் நாம் கட்டுப்பாட்டுக்கு எதிராக இருக்கும் திறன் பெற்றிருக்கிறோமா அல்லது அதற்கு அடிபணிந்துவிட்டோமா என்பதை அளக்கமுடியும். அதற்கு நமக்கு படைப்பும் ஒரு மக்கள் திரளும் வேண்டும்.

***********



[1]மே-68 இயக்கம் என்பது பிரான்சில் நிகழ்ந்த கம்யுனிஸ்ட் புரட்சிமாணவர்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவுஜீகிள் கம்யுனிஸ்டுகள்தலைமையில் நிகழ்ந்த புரட்சி அதில் பங்குபெறாத அறிவுஜீகளே இல்லைகுறிப்பாக சார்த்தர் முதல் அல்தூஸர் வரைஎல்லோரும்கம்யுனிஸ்டுகளாக மார்க்சியர்களாக இருந்தவர்கள்அப்பொழுது பூக்கோகத்தாரி தெல்யுஸ் இன்னும் பலர் அதில் பங்கு பெற்றனர்.. அந்தப்புரட்சி இறுதியில் கம்யுனிஸ்டுகளின் சமசரத்தால் தோல்வியடைந்ததுஅதன்பின் இந்த அறிவு ஜீவிகள் புரட்சிவிடுதலைமாற்றம்,நிறுவனம்கட்சிஇயக்கம் ஆகிய அனைத்திலும் நம்பிக்கை இழந்தனர்இவர்கள் அனைவரது கோட்பாடுகளும் இத்துயரத்தின்எதிர்விளைவாக உருவானதே.

 http://www.generation-online.org/p/fpdeleuze3.htm

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...