Wednesday, 30 July 2025

மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு

 



(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை)


எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இலக்கியப் படைப்பாக்கங்கள் வழி நனவுநிலையைப் பின்தொடர்வது அதனைக் குறித்த விளக்கத்தைக் கண்டறிய உதவும். மனிதர்களின் பல செயல்களிலும், கருத்துகளிலும், சிந்தனைகளிலும் கண்டுபிடிப்புகளிலும் கூட நனவுநிலை வெளிப்படலாம். ஆனால் இலக்கியப் படைப்பாக்கங்கள் வழி வெளிப்படும் போது நனவுநிலையை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக உள்ளது. காரணம் மொழியின் விளக்கத்தால் அது வெளிப்படுகிறது என்பதாலாகும். நனவுநிலை என்பது என்ன என்ற கேள்வி இன்று இயற்பியலாளர்களால், உயிரியல் ஆய்வாளர்களால், வேதியியல் அறிஞர்களால் எழுப்பப்படும் ஒன்றாக உள்ளது. நனவுநிலையைக் குறித்து இன்று பல வகையான விளக்கங்கள் தோன்றியிருந்தாலும் அறிவியல் பூர்வமான விளக்கமாக மருத்துவத் துறையோ பிற துறைகளோ ஏற்கும் அளவுக்கான வரையறைகள் இன்னும் சொல்லப்படவில்லை. ஆனால் நனவுநிலைதான் எல்லா உளவியல் நகர்வுகளுக்கும் பின்னணியில் இருக்கிறது என்பதை எல்லாத் துறைகளும் ஏற்கின்றன. அத்தகைய நனவுநிலை எங்கிருக்கிறது, எப்படிச் செயல்படுகிறது ஏன் அதை வரையறுக்க முடியவில்லை என்பது குறித்து குழப்பமே மிஞ்சியிருக்கிறது. இந்தக் கட்டுரையில் மா.அரங்கநாதன் அவர்களின் படைப்பாக்கங்களில் வெளிப்படும் நனவுநிலையின் அம்சங்களைப் பின்தொடரலாம். அதன் மூலம் நனவுநிலையின் உள்ளார்ந்த அமைப்பை அறிய முனையலாம்.

நனவுநிலை குறித்து சதர்லேண்டின் உளவியல் அகராதி சொல்லும் விளக்கத்தைக் காணலாம்:

உணர்தல்கள், சிந்தனைகள், உணர்வுகள், விழிப்புணர்வு. நனவுநிலையை அறிந்திருப்பது போன்ற அறிவுக்கூர்மையற்ற சில சொற்களாலன்றி நனவுநிலை என்ற சொல்லை விளக்குவது சாத்தியமற்றது. நனவுநிலையை சுயவிழிப்புணர்வுடன் சிலர் குழப்பிக் கொள்கிறார்கள்—நனவுடன் இருப்பது என்பது புற உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதாகும். நனவுநிலை என்பது ஆர்வமூட்டும் மழுப்புகின்ற தோற்றப்பாடாகும். எனவே அது என்னவென்றும் அது என்ன செய்கிறது என்றும் அல்லது அது எப்படி உருக்கொண்டது என்றும் சொல்வது சாத்தியமற்றது. அதைப் பற்றி வாசிப்பதற்குத் தரமான எதுவும் எழுதப்படவில்லை (1989)[1].

நனவுநிலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருபவரும் அதைப் பற்றிப் பல நூல்களை எழுதியவருமான டேவிட் சால்மர்ஸ் நனவுநிலை என்பதை நனவுநிலையின் அனுபவங்கள் மூலம் அதை அறிவது என்கிறார்: ‘உணரும் போதும், சிந்திக்கும் போதும் செயல்படும் போதும் அந்த வினைகளுக்கான காரணத்தையும் தகவல்களையும் ஆய்ந்தறியும் முறைமை ஒன்று தொடர்கிறது. இந்த முறைமை அறியாத இருளில் எப்போதும் இருப்பதில்லை. அந்த முறைமை ஓர் உள்ளார்ந்த அம்சத்தைக் கொண்டிருக்கிறது. அது அறிவார்ந்த முகமை என்று அழைக்கக்கூடிய வகையில் ஓர் உணர்தலைத் தருகிறது. இந்த உள்ளார்ந்த அறிவு முகமைதான் நனவுநிலை அனுபவம்’[2] (விழிப்புணர்வு கொண்ட மனம், 4).

நனவுநிலை என்று சொல்லப்படுவது விழிப்புணர்வு, உள்ளார்ந்த உணர்தல், புலன் கடந்த அறிவு, உள்ளுணர்வு உள்ளிட்ட அனைத்தையும் குறிப்பதாகவே இங்குக் கொள்ளப்படுகிறது.

படைப்பாக்கமும் நனவுநிலையும்

படைப்பாக்கமும் நனவுநிலையும் வேறு வேறாக இதுவரைக் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. படைப்பு என்பது சொல்லால் ஆனது மட்டும் இல்லை. அது நனவுநிலையின் பிரதிநிதி. நனவுநிலையின் அறிகுறிகளாக இருப்பவைச் சொற்கள். அவை நினைவிலிருந்து உருவாகி வருகின்றன. பெரும்பாலும் கடந்தகாலத்தை அவைச் சார்ந்திருக்கின்றன. நினைவுக் கிடங்கு என்பதுதான் நனவுநிலையால் செயல்படுத்தப்படுகிறது. அந்த நினைவுக் கிடங்கும் மொழியாகவே இருக்கிறது. அதாவது மொழியை வேறு வகையில் சேமித்து அதிலிருந்து மொழியைப் பயன்படுத்த முடியாது. அதனால் நனவுநிலையானது நனவிலியையும் உள்ளிணைத்தது. அதனால்தான் அது மொழி போல் உள்ளது. அந்த வகையாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மொழியானது படைப்பாக மாறும் இடத்தில் புறவய சக்திகளின் தாக்கம் உருவாகிறது. புறச் சக்திகளும் மொழிதலாகவும் கதையாடலாகவும் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதில் தான் சமூகத்தின் அனைத்துக் கூறுகளும் உள்ளன.

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ரோஜர் பென்ரோஸ் அறிவியலில் மனித நனவுநிலை குறித்து பல ஊகங்களையும் வர்ணனைகளையும் அளித்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை நனவுநிலை என்பது அண்டத்தின் ஒரு பகுதி. மனித நனவுநிலையையும் அதன் விளைவான மனித அறிவுநிலையையும் விளக்கும் இயற்பியல், உயிரியல் அல்லது கணக்கியல் கோட்பாடு இன்னும் உருவாகவில்லை. மேலும் அவர் நனவுநிலையின் விளக்கமாகச் சொல்வது: நம் ‘மனதில்’ (அதாவது நனவுநிலையில்) ஒரு பருப்பொருளற்ற ‘ஒன்றைக்’ கொண்டிருக்கிறோம். அது ஒருபுறம் புற பருப்பொளால் ஆன புற உலகால் தூண்டப்படுகிறது. மறுபுறம் அதனால் தாக்கமுறுகிறது…ஒரு விரிவான கட்டுப்படுத்தும் அமைப்புடன் இயையும் செயல்படாத உறுப்பு. அது தானாக ‘எதுவும்’ செய்வதில்லை…மாறாக, தெய்வீக அல்லது மறைபொருள் சார்ந்த ஏதோ ஓர் தோற்றப்பாடு. அது கருத்தாக்கம் சார்ந்ததாகவும் இருக்கலாம். அது மனிதகுலத்திற்கு இன்னும் தெளிவாகத் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.’[3] 

நனவுநிலை என்பது ஒரு மாயாஜாலம் போன்ற வித்தையைக் காட்டுவதான பண்பைத்தான் கொண்டிருக்கிறது. மனித மூளை எந்த ஒரு புலன் அனுபவத்தையும் எப்படி அனுபவிக்கிறது? அதன் விளைவு ஏன் குறிப்பிட்ட ஒரு வகையில் இருக்கிறது? அதன் பின்னணி எந்த உடலியல் அமைப்பிலிருந்து உருவாகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இன்னும் அறிவியல் தேடி அடையவில்லை. அந்த விடைகள்தான் படைப்பாக்கத்தில் செயல்படும் நனவுநிலையைக் குறித்த முழுமையான விளக்கமாக இருக்கும். தத்துவம் நனவுநிலையைத் தெய்வீக அனுபவத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறது. அல்லது அதன் விளைவுகளைக் கோட்பாடுகளாக்குகிறது.

அறிவு அல்லது மனம் என்ற இயக்கம் உடலின் உள்ளிலும் புறத்திலும் செயல்படுவதாகவும். மனித புலனுணர்வு மூலம் அதன் தடயங்கள் வெளிப்படுவதாகவும் புறத்தில் செயல்படும் அரூபமான கட்புலனாகா தோற்றப்படாகவும் உள்ளிலும் புறத்திலும் புலனுணர்வுகளின் தூண்டல்களை இணைக்கும் புள்ளியாகவும் கருதப்படுவதுதான் நனவுநிலை எனலாம். இத்தகைய நனவுநிலையின் செயல்பாடுகளை மா.அரங்கநாதன் அவர்களின் இலக்கிய படைப்புகள் வழி பின் தொடரும் போது அதனைப் பற்றி இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

கதைகளின் கட்டுடைப்பு

மா.அரங்கநாதன் எழுதிய சிறுகதைகளில் சில தமிழவன், ஜமாலன் போன்ற ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸின் கதை சொல்லும் உத்தியுடன் ஒத்துப் போவது போல் இருக்கிறது. அத்தகைய கதைகளைக் கட்டுடைப்பு செய்து வாசிப்பது அவற்றின் பொருளாம்சத்தை அறிய பெரிதும் துணை புரியும். மேலும் நனவுநிலை எப்படி இந்தக் கதைகளில் வெளிப்படுகிறது என்பதையும் இதன் மூலம் அறிய முடியும்.

’செட்டி வளாகம்’

மா.அரங்கநாதன் எழுதிய ‘செட்டி வளாகம்’ ஒரு குறிப்பிடத்தக்கக் கதை. இந்தக் கதையில் ஒரு மருத்துவருக்கும் ஒரு நோயாளிக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் கதை தொடர்கிறது. மருத்துவர் (முத்து)கறுப்பன், முருகக் கடவுள் மீது அபிமானம் கொண்டவர். மயில் போன்ற பறவைகள் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் பல மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன. அவருடைய குடும்பத்தில் பிணக்கு இருக்கிறது. இறுதியில் மருத்துவர் விமான விபத்தில் இறந்துபோகிறார். இந்தக் கதையைக் கொண்டு செலுத்தும் அம்சங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் கொள்ளலாம்:

-மருத்துவர்(கறுப்பன்)

-நோயாளி(அகத்தியலிங்கம்-ஜோதிடம் தெரிந்தவர்)

-மயில் அல்லது பறவை-விமானம்

.......

(முத்து)கறுப்பன் மருத்துவர்.

கறுப்பனின் தந்தை லண்டனில் படிக்கும்போது ஆங்கிலப் பெண்ணை மணக்கிறார்.

திருமணத்திற்கு பறவை காரணம்

பறவை வைத்திருந்த பெண் ஆபத்திலிருந்த தந்தையைக் காப்பாற்றி மணந்துகொள்கிறாள்.

மருத்துவரின் அறைக்கு மயில் வருகிறது

முருகக்கடவுளின் வாகனம் மயில்.

சீன சோதிடத்தில் நோயாளி எடுத்த சீட்டிலும் பறவை வருகிறது.

மருத்துவரின் மனைவியும் மகனும் சொத்தின் மீது ஆசை வைத்திருக்கிறார்கள்.

மருத்துவர்/சித்தர்/கடவுளின் தூதர்

பறவை/மயில்/விமானம்

பறவையால் திருமணம்

(விமானத்தால்)பறவையால் மரணம்

...

போன்ற அமைப்புகளை இந்தக் கதை கொண்டிருக்கிறது.

முருகக் கடவுளின் அற்புதம் போன்ற ஒரு மருத்துவர் பறவையின் அனுகூலத்தால் பயத்தை, இன்ன பிற எதிர்மறைகளை எதிர்கொள்கிறார். சித்தரின் அனுபவம் போன்று பறவையுடனான உறவை மருத்துவர் பாத்திரமான கறுப்பன் பாத்திரம் கருதுகிறது. நோயாளியான அகத்தியலிங்கம் மருத்துவர் கறுப்பனின் அச்சம் குறித்து கவனத்தில் கொண்டுவரும் பாத்திரம். மரணத்தை எதிர்கொண்டு மருத்துவரிடம் வருகிறது. மருத்துவரின் மரணம் குறித்த செய்தி தன்னிடம் வந்தது போல் புரிந்துகொள்கிறது.

முதலில் இந்தக் கதை போர்ஹேஸின் கதை போன்ற கட்டமைப்பை எப்படிக் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம். இதில் இரு புள்ளிகள் நகர்கின்றன. ஒன்றையொன்று வெட்டுகின்றன. ஆனால் அந்த வெட்டும் புள்ளியில் வாசகர்கள் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்ந்து வந்துவிட்டதை அறியாத வகையில் ஒரு மாயாஜாலம் கதைக்குள் நிகழ்கிறது. மருத்துவரைப் பார்க்க வரும் நோயாளி மரணத்தை ஒத்திப் போட முடிகிறது. ஆனால் நோயாளிக்கு மரணத்தை ஒத்திப்போட்ட மருத்துவர் மரணமடைகிறார். இந்த இரு கதைகளும் மரணம் என்ற புள்ளியில் சந்திக்கின்றன. நோயாளியின் கதையாக வாசிக்கப்படும் கதை மருத்துவரின் கதையாக உருமாறிவிடுகிறது. நோயாளிXமருத்துவர் என்ற இரட்டை எதிர்மை காலம்Xகாலன் என்ற இரட்டை எதிர்மையாக மாறிவிடுகிறது.  

நோயாளி இங்கு ஒரு பாத்திரம் என்பதை விட முன்னுணர்தலை அறிவிக்கும் ஒலி என்று கொள்ளலாம். ஏனெனில் மருத்துவரின் குடும்பம் ஒரு பறவையால் காப்பாற்றப்படுகிறது. அந்தப் பறவையால் மரணமும் அடையும் என்பதைச் சொல்ல வரும் பாத்திரமாகிறது நோயாளி பாத்திரம். எனவே நோயாளியின் பாத்திரம் படைப்பின் நனவுநிலையாக ஒரு மருத்துவரின் வாழ்வைத் தொடர்கிறது. இயல் வாழ்வில் பறவையின் நேசம் பெற்றவர்கள் அதே பறவையால் (விமானத்தால்) உயிரிழந்த சம்பவங்களைக் கொண்டு இந்தக் கதை இயல் உலகின் நனவுநிலையையும் கதையின் நனவுநிலையையும் இணைக்கிறது. கதையில் நிகழும் மரணமும் இயல் வாழ்வின் மரணமும் நனவுநிலை மூலம் இணைக்கப்பட்டு வாசகரிடம் கடத்தப்படுகிறது.  

...

ஜேம்ஸ்டீனும் செண்பகராமன்புதூர்க்காரரும்

மா.அரங்கநாதன் எழுதிய கதைகளில் மற்றொர் அழுத்தமான கதை இது. இதிலும் இரண்டு தளங்கள் உள்ளன. ஒன்று புனைவு. மற்றொன்று உண்மை. இரண்டு தளங்களிலும் கதை நிகழ்கிறது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து உருவான இந்தப் பிரதியை வாசிக்கையில் இந்தப் பிளவை அறிவது கதையின் பொருளாம்சத்தை அறிவதாக அமைகிறது.

இந்தக் கதையில் இருக்கும் அம்சங்களைக் கீழ்க்கண்டவாறு குறித்துக்கொள்ளலாம்:

-செண்பகராமன்புதூரிலிருந்து அமெரிக்காச் சென்ற முத்துக்கறுப்பன்

-ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் டீன்

-கடிதம் எழுதும் ஹாஃப்மேன்

-செண்பகராமன்புதூரில் கடிதங்களைப் பெறும் ஆண்டிப்பிள்ளை

...

உண்மைச் சம்பவம், ஜேம்ஸ் டீன் கார் விபத்தில் மரணம் அடைந்தது

புனைவு, முத்துக்கறுப்பனும் விபத்தில் மரணம் அடைவது

உண்மை: ஜேம்ஸ் டீன் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்

புனைவு: முத்துக்கறுப்பனும் இதையே சொன்னது

உண்மை:ஜேம்ஸ் டீன் வானவெளியில் கலப்பதை விரும்பியவர்

புனைவு:முத்துக்கறுப்பனும் அதையே சொன்னது

இந்தக் கதையில் உண்மையும் புனைவும் இணையும் புள்ளி, ஜேம்ஸ் டீன் கார் விபத்தில் மரணம் அடையும் இடத்தில்தான். அது உண்மையில் நடந்த சம்பவம். ஆனால் புனைவுக்குள் அந்த மரணம் வெறும் சம்பவமாக நடக்கவில்லை. முத்துக்கறுப்பன் பாத்திரத்தின் விருப்பத்தின் பேரில் நடந்தது போல் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஜேம்ஸ் டீன் நட்சத்திரங்களுடன் கலக்கவேண்டிய ஒரு நபர் என்பதால் இனி நடிக்கவேண்டியதில்லை என்ற முத்துக்கறுப்பனின் விருப்பம் புனைவாக மாறி உண்மையின் சம்பவத்தை எழுதியிருக்கிறது. ஜேம்ஸ் டீன் மரணமடைய விருப்பப்பட்ட செண்பகராமன் புதூர்க்காரரான முத்துக்கறுப்பன் அதற்குத் தண்டனையாக அதே போன்று அகால மரணமடைந்துவிடுகிறார். ஜேம்ஸ் டீனின் மரணம் முத்துக்கறுப்பனுக்குத் தான் வாங்கிய கடனை நினைவுக்குக் கொண்டுவருகிறது. மரணத்திற்கு முன் கடனைத் தீர்த்தல் என்பதாக முத்துக்கறுப்பன் பாத்திரம் அதை நினைவில் கொண்டுவருகிறது. ஜேம்ஸ் டீன் என்ற உண்மை நடிகருடன் எந்தத் தொடர்பும் இல்லாத முத்துக்கறுப்பன் என்ற பாத்திரத்தை இணைத்து வாசகர்கள் தெரிந்து வைத்திருக்கும் ஜேம்ஸ் டீனின் மரணம் என்ற உண்மையுடன் புனைவு கலக்கப்பட்டிருக்கிறது. முத்துக்கறுப்பன் பாத்திரம் மூலம் மறைந்திருந்த, மெய்நிகரான நனவுநிலை எழுச்சி பெற்று உண்மையான மரணத்துடன் கதையின் மரணத்தை இணைத்துவிடுகிறது. ஜேம்ஸ்டீன் விபத்தில் மரணமடைவார் என்று முன்னுணர்ந்து சொன்ன படைப்பின் நனவுநிலை கதைக்குள் புகும் போது முத்துக்கறுப்பனுக்கும் அதே போன்ற மரணத்தைச் சம்பவிக்கச் செய்து அதை இயல்பாக்க முயல்கிறது. 

நனவுநிலையும் அப்பாலை அனுபவங்களும்

நனவுநிலையின் அப்பாலை அனுபவங்களாக உள்ளுணர்வு, தொலைபார்வை, தொலை நுகர்வு, முன்னுணர்வு உள்ளிட்ட புலனுணர்வு மீறிய பண்புகளைக் குறிக்கலாம். அதில் குறிப்பாக உள்ளுணர்வு எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருப்பது.

மயிலாப்பூர் என்ற சிறுகதையை எழுத்தாளர் மா.அரங்கநாதன் 1987ல் எழுதியிருக்கிறார். இந்தக் கதை ஒரு பேரழிவிற்குப் பிறகான ஒரு நகரத்தைச் சித்தரிக்கிறது. இந்தக் கதையில் இரு பாத்திரங்கள் மட்டுமே வருகின்றன. அவருடைய எல்லாச் சிறுகதைகளிலும் இடம்பெறும் முத்துக்கறுப்பன் பாத்திரத்துடன் காயத்ரி என்ற பெண் பாத்திரமும் மட்டுமே இந்தக் கதையில் இடம்பெறுகிறார்கள். சென்னையின் மயிலாப்பூரையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் வர்ணிக்கிறது கதை. இந்தக் கதையை வாசிக்கக் கதைக்குள் இருக்கும் தகவல்களைத் தவிர கதைக்கு வெளியே இருக்கும் தகவல்களையும் உள்ளிணைக்க வேண்டியிருக்கிறது.

ஏனெனில் எழுத்தாளர் மா.அரங்கநாதன் முன்னுணர்வு கொண்டவர். நடக்கப் போகும் சில இயற்கை பேரழிவுகளைப் பற்றி அவருக்கு முன் கூட்டியே தெரிந்திருக்கிறது. கதையின் முதல் வரி இப்படித் தொடங்குகிறது: ‘ஒரு மின்வெட்டுப் போல்தான் அது வந்து போயிற்று.’ இந்த வரியில் ‘அது’ என்ற ஒரு சொல்தான் முழு கதையையும் நடத்திச் செல்கிறது. அந்த இடத்தில் எல்லாமே அழிந்து போய்விட்டதற்கான சாட்சியங்களாக உள்ளன. கட்டடங்கள், பூங்காக்கள், விடுதிகள் எல்லாமே அழிந்து தூசு படிந்து உள்ளதை வர்ணிக்கிறது கதை.

1987ல் மயிலாப்பூரில் கோயில், குளம், கடைகள், போக்குவரத்து நெரிசல் என்று எல்லாமுமாக இருந்திருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் அவை எல்லாமே காணாமல் போய்விட்டன. மனிதர்களே இல்லாத இடம் எப்படியிருக்குமோ அப்படிக் கதைக்குள் மயிலாப்பூர் இருக்கிறது. எப்போதுமே நெரிசலான மயிலாப்பூரில் பேரழிவுக்குப் பிறகு எப்படி இருக்குமோ அதை அப்படியே காட்டுகிறது கதை

எப்போதோ தமிழகத்தில் இப்படிப்பட்ட ஒரு பேரழிவு தாக்கப் போவதை முன்கூட்டியே கணித்து எழுதப்பட்ட கதை இது. 1987ல் இந்தக் கதையின் பொருள் ஒரு பேரழிவு வரப் போவதைக் குறித்துப் பேசுகிறது என்பதாக இருக்கும். இந்தக் கதை வெறும் ஒரு கற்பனையைப் பேசிவிட்டுச் சென்றுவிட்டதாகக் கருதப்படும் ஆனால் அது முன்னுணர்வாக எப்போது மாறியிருக்கிறது என்றால் 2004ல் சுனாமி வந்த போது இந்தக் கதையின் பொருள் மாறுகிறது

எழுத்தாளர் மா.அரங்கநாதன் ஜோசியம் பார்ப்பதில் வல்லவர். ஆனால் அவருக்கு ஜோசியம் பார்ப்பதில் இருந்தத் திறமையை விட முன்னுணர்வின் திறன் மிக அதிகமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளுக்கு முன் இது போன்ற ஒரு சுனாமி வரவிருப்பதற்கான காட்சி வடிவத்தை ஒரு கதை காட்டியிருக்கிறது முன்னுணர்வு குறித்து அறிய மனித நனவுநிலை பற்றிய விளக்கங்கள் அவசியமாகின்றன.

எர்வின் ஷ்ராடிங்கரின் ஒரு குறிப்பிடத்தக்க விளக்கம் இங்கு நினைவுகூரத்தக்கது. “நனவுநிலை என்பது ஒருமையாக வெளிப்படும் உடனடி அனுபவம் என்பதே சாத்தியம், அதன் பன்மைத்துவம் மறைந்திருப்பதாகும்; பன்மைத்துவம் ஒரு மறைவினால் ஒருமைத்துவத்தில் பல அம்சங்களாக வெளிப்படும் ஒன்றாகும்,’ என்கிறார் ஷ்ராடிங்கர்.[4]

நனவுநிலையில் பன்மைத்துவம் என்று ஷ்ராடிங்கர் கூறுவதில் முன்னுணர்தலும் ஒன்றாக உள்ளது. அதன் மூலம் நடக்கப் போவதை முன் கூட்டியே காட்சி வடிவங்களாகத் தெரிவது சிலருக்குள் இருக்கும் திறன். அந்த வகையான திறனை வைத்து எழுத்தாளர் மா.அரங்கநாதன் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.

நனவுநிலை பற்றிப் பேசுகையில் மனித மூளையின் எதிர் வினைகள் குறித்து ஆராய வேண்டியிருக்கிறது. ஏனெனில் மனித மூளைதான் பல புலனுணர்வுகளைத் திறனாய்ந்து கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. ஆனால் மூளையின் செயல்பாடு உடலுக்குள் மட்டுமே இருப்பதாகக் கருத முடியுமா என்ற கேள்வி எழுகிறது

உடலுக்குப் புறத்திலும் அறிவின் செயல்பாடு நடப்பதாகப் பல அறிவியலாளர்களும் தத்துவவியலாளர்களும் கருதுகிறார்கள். மயிலாப்பூர் கதையில் என்னாகிறது என்றால் இயக்கம் நின்று போன மாநகரக் காட்சி பருப்பொருளில் கலந்திருப்பதாகிறது. அங்கு இயக்கத்தில் இருப்பவை கரப்பான் பூச்சிகளே. அது அழிவுக்கும் முன்பும் பின்பும் இருப்பவை. இதிலிருந்து ஒரு பொறி எழுத்தின் ஆன்மாவுக்கு வந்து சேர்கிறது. இந்தக் கதை எழுதுவதற்கான பொறியாகவே அது இருக்கிறது. பல்லாயிரமாக இருந்தப் பூச்சிகள் பேரழிவுக்குப் பின் எண்ணிக்கையில் குறைந்து அங்கும் இங்கும் நகர்கின்றன. பேரழிவு வரவிருப்பதை அறிவித்திருப்பவை போல் அவற்றின் பெருக்கமும் சுருக்கமும் இருந்திருக்கிறது. கதையில் அதைப் பற்றிய குறிப்பும் பல இடங்களில் வருகிறது

பேரலையின் எழுச்சியில் நிலத்துக்கு அடியில் ஓடிக்கொண்டிருந்த நீரும் பொங்கி வெளியே வந்திருக்கிறது. அதில் இருந்த கரப்பான் பூச்சிகள் தரைக்கு வந்திருக்கின்றன. இது பேரழிவைக் குறிக்கும் குறிப்பைப் புரிந்துகொள்ள உதவுவதாக உள்ளது. ஏனெனில் புறத்தில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத துகள்கள் உடலில் இருக்கும் மூளையுடன் கொள்ளும் தொடர்பு விசித்திரமானதாக அறிய முடியாததாக இதுவரை இருந்து வந்துள்ளது.

     புறத்தின் தூண்டல் மூலம் மூளை எந்த ஒரு கட்டளையையும் பிறப்பிக்கிறது என்றாலும் புறத்தில் இருக்கும் பருப்பொருள் நனவுநிலையை முழுமையாக்குகிறது. எனவே பருப்பொருளில் நிலவும் இதுவரை பெயரிடப்படாத இயக்கம், விசை அல்லது பரிமாற்றம் மனித நனவுநிலையை நடத்திச் செல்கிறது என்று ஆண்டி கிளார்க்கும் டேவிட் சால்மர்ஸும் கூறுகிறார்கள்[5].

கரப்பான் பூச்சிகள், கடலின் அமைப்பு, கடற்காற்று போன்ற பல வகையான பொருள்கள் கதையில் ஒரு விநோதமான இயக்கத்தைக் கொண்டிருக்கின்றன. பேரழிவுக்கு முந்தைய நிலையையும் பிந்தைய நிலையையும் பதிவு செய்பவையாக அவை உள்ளன இந்தக் கதைக்குள் எங்குமே மயிலாப்பூர் என்ற இடத்தின் பெயர் வரவில்லை. அதே போல் பேரழிவு நிகழ்ந்த காலமும் வரவில்லை. மற்றொன்றைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. அதாவது நனவுநிலை என்பது ஒவ்வொரு கணமும் மறைந்து தோன்றுவது. ஹென்றி பெர்க்சன், ‘நனவுநிலை உடனடியாகக் கடந்து போனதிலும் வரக்கூடிய எதிர்காலத்திலும் பரவி நிற்பது. கடந்ததில் சாய்ந்து கொண்டு வருவதில் வளைந்திருப்பது என்கிறார்.[6]

மயிலாப்பூர் என்ற இடத்தில் பேரழிவு நடக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக வந்த ஒரு தகவல் 1987 என்ற காலத்தைக் காட்டுவதாகக் கொண்டால் 2004ல் அது நடந்தது என்ற காலத்தில் அது உண்மையாகிறது. அதாவது கடந்ததில் சாய்ந்துகொண்டு வருவதில் வளைந்து ஓர் உண்மைத் தகவலை எழுத்தாளரின் நனவுநிலை பெற்றிருக்கிறது. அந்தத் தகவலைப் பெற்ற நேரம் என்பதைத்தான் ‘சமயம்’ (Duration) என்று ஹென்றி பெர்க்சன் குறிப்பிடுகிறார்[7].

எர்வின் ஷ்ராடிங்கர் சொல்லும் ஒரு கருத்தை நினைவுகூரலாம்: ‘எல்லா நரம்புத் தூண்டல்களும் விழிப்புணர்வுடன் நடப்பதில்லை. அவற்றில் பல அகத் தூண்டல்களாகவும் புறத்தூண்டல்களாகவும் உள்ளன. உடலியல் ரீதியான முக்கியத்துவத்தையும் காலத்துடனான விளைவுகளையும் அகத்தில் நடந்தாலும் அது புறச் சூழல்களை மாற்றும்படியும் இருக்கும்…ஏதோ ஓர் உயிரியல் ரீதியான அனுபவம் மீண்டும் நடைபெறவே நடைபெறாது.[8] அப்படிப்பட்ட அனுபவம்தான் இந்தக் கதைக்குள் நிகழ்ந்திருக்கிறது. நனவுநிலையின் காலவெளியைக் காட்டிய முன்னுணர்வு மயிலாப்பூர் என்ற கதையாக நின்று நிலைக்கும்.

முடிவாக, மா.அரங்கநாதனின் கதைகள் பலவற்றில் இது போன்ற நனவுநிலையின் ஊடாட்டம் கொண்ட கதைகள் உள்ளன. அவற்றைக் கட்டுடைத்து நனவுநிலையின் பரிமாணத்தை வெளிக் கொண்டுவந்தால் எழுத்தாக்கம் கொண்டிருக்கும் தூண்டுதல் பற்றியும் அதன் அடிப்படைக் குறித்தும் அறிய முடியும். ஏனெனில் நனவுநிலை முன்னுணர்தல், தொலைபார்வை, டெலிபதி போன்ற பலவற்றின் மூலம் வெளிப்படுகிறது. அதனால் இந்தத் திறன் கொண்ட எழுத்து ஆளுமையான மா.அரங்கநாதனின் படைப்புகளில் நனவுநிலையைப் பின் தொடர்வதன் மூலம் அறிவியலின் விளக்கங்களை அறிவதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன.

…………..

பயன்பட்ட நூல்கள்

முதன்மை ஆதாரம்:

மா.அரங்கநாதன் படைப்புகள், நற்றிணை பதிப்பகம், சென்னை, 2016.

இரண்டாம் நிலை ஆதாரம்:

ஜமாலன், யதார்த்த மாயை அல்லது மாயையின் யதார்த்தம்:அரங்கநாதன் படைப்புகள்-ஒரு வாசிப்பு, சிற்றேடு கட்டுரைத் தொகுப்பு, பெங்களூர், 2017.

மூன்றாம் நிலை ஆதாரங்கள்:

Books

1. Bergson, Henri. Time and Freewill, (tr) F.L .Pogson, George Allen & Unwin Ltd. London, 1910.

2 Bergson, Henri.  Mind and Energy – Lectures and Essays, trans, H.Wildon Carr,Henry Holt and Company, New York,, 1920,

3.Chalmers, David. The Conscious Mind, Oxford University Press, 1996.

4.Deleuze, Gilles, Difference and Repetition, (trans) Paul Patton, Columbia University Press, New York, 1994.

5..Penrose, Roger. The Emperor’s New Mind Oxford University Press, 1990.

6.Schrodinger, Erwin. What is Life and Mind and Matter. Cambridge University Press, 1944.

7.Sutherland, Norman Stuart. The Interanational Dictionary of Psychology, Continuum, 1989.

 

Journals

Clark, Andy, and David Chalmers. “The Extended Mind.” Analysis, vol. 58, no. 1, 1998, pp. 7–19. JSTOR, http://www.jstor.org/stable/3328150. Accessed 11 Nov. 2024.

 

 

 

 

 



[1] The having of perceptions, thoughts, and feelings; awareness. The term is impossible to define except in terms that are unintelligible without a grasp of what consciousness means. Many fall into the trap of confusing consciousness with self-consciousness—to be conscious it is only necessary to be aware of the external world. Consciousness is a fascinating but elusive phenomenon: it is impossible to specify what it is, what it does, or why it evolved. Nothing worth reading has been written about it. (Sutherland 1989)

[2] When we perceive, think, and act, there is a whir of causation and information processing, but this processing does not usually go on in the dark. There is also an internal aspect; there is something it feels like to be a cognitive agent. This internal aspect is conscious experience. Chalmers 4

 

[3] It appears that we have, in 'mind' (or, rather, in 'consciousness'), a nonmaterial 'thing' that is, on the one hand, evoked by the material world and, on the other, can influence it… consciousness is merely a passive concomitant of the possession of a sufficiently elaborate control system and does not, in itself, actually 'do' anything… Alternatively, perhaps there is some divine or mysterious purpose for the phenomenon of consciousness possibly an ideological one not yet revealed to us- Penrose. Emperors New Mind, 213.

 

 

[4] The only possible alternative is simply to keep to the immediate experience that consciousness is a singular of which the plural is unknown; that there is only one thing and that what seems to be a plurality is merely a series of different aspects of this one thing, produced by a deception- Schrodinger, Mind and Matter,89.

[5] We see that extended cognition is a core cognitive process, not an add-on extra  -Clark & Chlamers, The Extended Mind, 12.

[6] It spans in immediate past and imminent future. Leaning on the past bending on the future- Bergson,H.,Mind-Energy – Lectures and Essays, trans, H.Wildon Carr, 1920, Henry Holt and Company, New York, P.9

 

[7] Duration is the form which the succession of our conscious states assumes when our ego lets itself live, when it refrains from separating its present state from its former state.-Bergson, Time and Free Will, p.100.

[8] Not every nervous process, nay by no means every cerebral process, is accompanied by consciousness. Many of them are not, even though physiologically and biologically they are very much like the 'conscious' ones, both in frequently consisting of afferent impulses followed by efferent ones, and in their biological significance of regulating and timing reactions partly inside the system, partly towards a changing environment.. Many of them are not, even though physiologically and biologically they are very much like the 'conscious' ones, both in frequently consisting of afferent impulses followed by efferent ones, and in their biological significance of regulating and timing reactions partly inside the system, partly towards a changing environment. Schordinger, Erwin. What is life?, p.95.

மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு

  (தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...