Wednesday 6 September 2017

அகமொழிதலின் வகைமை றஜீபனின் "மெல்ல நகும்" கவிதைத் தொகுப்பை முன்வைத்து...



பொதுவாக அகம் சார்ந்த இலக்கியங்கள் குறித்தும் அவற்றில் உள்ளார்ந்திருக்கும் மொழி குறித்தும் தனி ஆய்வு தேவைப்படுகிறது. அதற்கான ஒரு சிறு முயற்சியே இந்தக் கட்டுரை...

றஜீபனின் கவிதைகளை மொழியின் ஒரு வகைமையாகக் கொண்டுவிடலாம். அந்த வகைமையைப் பற்றிய விளக்கத்தை அடுத்துக் காணலாம். இவை போன்ற கவிதைகளும் இலக்கணக் கோட்பாடுகளும் பொதுவான சமூக மொழிதலான அகம் சார்ந்த உணர்வுகளை ஒரு குறிப்பிட்ட மொழியியல் குறிப்புகளுக்குள் அடைத்துவிடுகின்றன. அதற்கான பாரம்பரியத்தைக் கலாச்சாரத்திலும் இலக்கியத்திலும் தேட வேண்டியிருக்கிறது.

இந்தக் கவிதைகளை நான்கு மொழிதல் வகைமைகளாகப் பிரிக்கலாம்.
1.பாவனை
2.மௌனம்
3.பதற்றம்
4.நீதி
.....
1.பாவனை
கவிதைசொல்லியின் வர்ணிப்பாக இடம்பெறுவது. இதில் வரும் பாவனைகள் கலாச்சாரத்தின் உணர்வுகளுக்குள் பயிற்றுவிக்கப்பட்டவையாக இருக்கின்றன. ஆண்-பெண் என்ற பிளவை ஏற்கும் கலாச்சார மொழியின் பயிற்றுவிப்பு அது. ஜுடித் பட்லர் என்ற பெண்ணியலாளர், ஆண்மை அல்லது பெண்மை அல்லது எல்லா பாலுமைகளும் ஒரு நிகழ்த்துதல் என்கிறார். பிறப்பிலிருந்து தொடங்கும் இந்த நிகழ்த்துதலில் தேவைப்படும் உணர்ச்சிசார் குறிப்புகள்தான் பாவனைகள்.
அவை இலக்கியத்தில் பயில வேண்டிய இடங்களை இலக்கணமாக தொல்காப்பியம் உருவாக்கித் தந்திருக்கிறது. முகக்குறிப்புகள், அகக்குறிப்புகள் என்று அவை பட்டியலிடப்படுகின்றன. இந்த இலக்கண வரிசையை ஏற்று தொடர் சங்கிலியாக அவைப் படைக்கப்பட்டு உள்வாங்கப்பட்டு வாழப்பட்டு மீண்டும் அதே வட்டத்தில் பயணிக்கின்றன. அந்த இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களாக வளர்ந்தவை பின் அந்த இலக்கணத்தை மீறினாலும் இலக்கணத்தின் மொழியாடலை உள்ளீர்த்து புதிய சொல்லாடல்களை உற்பத்தி செய்தன. அது போன்ற இலக்கியங்களில் ஒன்று இந்தக் கவிதைத் தொகுப்பு.
இந்த அகத்தின் பாற்பட்ட வகைமை சார்ந்த இலக்கியங்களை மொழிதலில் ஒரு பிரிவாகப் பார்க்கையில் கலாச்சார மொழியில் ஒருபடித்தான பரிமாற்றம் ஏன் உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக விழி என்றால் அதற்கான மொழியாக கலாச்சாரமும் இலக்கணமும் சேர்ந்து தமிழில் விளக்கத்தை வர்ணனையை கதையாடலைப் பெருக்கி இருக்கின்றன. அந்த உட்பொருளிலிருந்து தாக்கமுறாமல் தவிர்ப்பது இந்த உள்ளடக்கத்தைப் பேசும் எந்த இலக்கியத்தாலும் இயலாது.
இந்தக் கவிதைத் தொகுப்பு கலாச்சாரத்தின் பின்னணியை ஏற்பதோடு திருக்குறளின் காமத்துப்பால் வர்ணிப்பை ஒரு சாதகமான ஊன்றுகோலாக எடுத்துக் கொள்கிறது. நோக்குதல், நகுதல் என்ற பாவனைகளின் சார்பை திருக்குறளை அடியொற்றி இந்தக் கவிதைத் தொகுப்பு கொண்டுவிடுகிறது. திருக்குறளின் மொழிதல் இந்தக் கவிதைத் தொகுப்புக்கு சாட்சியாகிறது. அல்லது திருக்குறளில் கட்டப்பட்ட உணர்சித்திரம் இந்தக் கவிதைத் தொகுப்புக்குள்ளும் மடைமாற்றமாகியிருக்கிறது.
2.மௌனம்
பெண் மொழியாக இதுவரைக் கட்டமைக்கப்பட்டது. அல்லது ஆண் மைய விளக்கத்தில் உள்ளது பெண் மொழி எனும் மௌனம். ஆண் மைய மொழியின் அறியாமையாக இருக்கும் மௌனம். இதற்குள் நிகழும் சொல்லாடல் அகம் சார்ந்த இலக்கியங்களின் அடிப்படையை ஆட்டுவிக்கிறது. மௌனத்தின் வியாபித்தல் பற்றி ஏற்படும் கற்பனையைக் கொண்டு கவிதைக்கான மொழி கட்டப்படுகிறது. மௌனத்திற்கான பல வகையான அர்த்தங்கள் பொருட்கள் மீண்டும் மீண்டும் கலாச்சாரத்தின் பல முனைகளைக் கொண்டு சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சேகரத்தை இந்தக் கவிதை இலக்கியமும் மற்றொரு முறை விளக்கிக் காட்டுகிறது.
ஒலியற்ற ஓசையற்ற மொழியான மௌனத்தில் இரைச்சலான பொருள் ஓலமிடுகிறது. பெரும்பாலும் இது போன்ற கவிதைகளில் அது ஆண் மைய அதிகாரத்தின் அல்லது ஆண் மையச் சொல்லாக்கத்தின் ஓலமாக இருக்கிறது. அதற்குள் ஊடாடுவது பெண்மை என்ற பாலினம் பற்றிய கற்பிதம். அல்லது ஆண் உருவாக்கும் பெண் என்ற கற்பிதம். மௌனத்தை சங்கேதப்படுத்துவதன் மூலம் பெண்மையை கட்டுடைத்துவிட்டதாக இந்த இலக்கியங்கள் உவகை கொண்டுவிடுகின்றன.
மௌனம் ஆண் மொழிக்குள் பெண் மொழியை தலைகீழாக்குகிறது. நினைவுகள், மறதிகள் என்ற காலம் சார்ந்த மொழியும், உறவில் இருக்கும் இருவர் கண்ட இடங்கள் என்று காலவெளி சார்ந்த பதிவுகள் மூலம் மௌனம் இலக்கியத்திற்குள் இடம்பெறுகிறது. மௌனம் என்பது பேசாமை அல்ல. பேச்சிருந்த கணங்களின் பதிவுறல். பேச்சு நிகழவேண்டிய தருணத்தின் காட்சி. பேச்சு நிகழ்ந்துவிட்டதாகக் கொள்ளப்படும் நிறைவு.
மௌனத்தின் மற்றொரு பங்கு தான்/பிற என்ற இருமையை வலியுறுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. தான் என்பதன் மொழிதல்கள் ஒலிகளாகவும் பிறன்மையின் மொழிதல்கள் எல்லாம் மௌனமாகவும் இலக்கியத்தில் நிலவுகின்றன. பிறன்மையின் மொழிதல்கள் தானின் மொழிதல்களாக இருக்கவேண்டியதைத்தான் மௌனம் உறுதிபடுத்துகிறது.
3.பதற்றம்
விருப்பும் விருப்பின் நிமித்தமும் ஏற்கப்படாமல் போகும் பட்சத்தில் உருவாகும் பதற்றம் என்பது மொழியின் ஓர் அதிர்வு. அந்த அதிர்வைத்தான் இந்த வகையான இலக்கியங்கள் உள்ளிணைத்திருக்கின்றன. பதற்றத்தின் சாயல் தேவைக்கும் விருப்புக்கும் இடையில் ஊடாடுவது. விருப்பு அல்லது வேட்கை அல்லது ஆவல் அல்லது விழைவு எல்லாமே தேவை கருதி உருவாகுபவை. தேவையின் தன்மை அல்லது பண்பு உதாசீனப்படுத்தப்படுகையில் நிறைவடையாதிருத்தலில் பதற்றம் ஏற்படுகிறது.
நிறைவு/நிறைவின்மை என்ற அச்சில் சுழல்ந்து வெளிப்படும் கீற்றாக பதற்றம் இருக்கிறது. வேட்கையின் நிறைவின்மைக்குள் அதிர்ந்திருப்பது பதற்றம். அதனால் பதற்றத்தின் நிழல் அகச்சார்பு இலக்கியத்திற்குள் எப்போதும் நெருக்கடியுடன் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பதற்றத்தின் கூறாக எல்லை மீறும் உணர்ச்சிக்கும் அழுத்தப்பட்ட ஆசைக்கும் இடையில் ஊடாடும் சொல்லடலாக இருக்கிறது. பதற்றத்தில் வேர்பிடித்திருப்பது பாதுகாப்பின்மை. உயிர்சார் பாதுகாப்பின்மை. உறவுசார் பாதுகாப்பின்மை.
மொழியின் இழைகளில் அகத்தின் உணர்வுகளை அடுக்குகையில் நேர்மறையான பாதுகாப்பு, நேசம், பற்று, களிப்பு என்ற கூறுகளும் பாதுகாப்பின்மை, வெறுப்பு, பற்றின்மை, துயரம் என்ற எதிர்மறை கூறுகளும் சேர்த்தே இயங்குகின்றன. அவற்றில் இந்த வகையான இலக்கியங்கள் எதிர்மறையான கூறுகளை முன்வைத்து நேர்மறையான கூறுகளுக்காக ஏங்குகின்றன. அதில் ஆற்றலுடன் இயங்கி நிற்பது பதற்றமாகும்.
4.நீதி
களவு, கற்பு, காமம் போன்ற வாழ்வியல் பண்புகளைத் தொல்காப்பியம் வரையறுக்கையில் அடிப்படைக் கோடு ஒன்றை வரைகிறது. அந்தக் கோட்டினை அடியொற்றிய இலக்கியங்களாக அவை பரிணமிக்கவேண்டியுள்ளது. அந்தக் கோடு நீதியின் பாற்பட்டதாக உள்ளது. நீதி என்றால் ஒரு விதியின் பாற்பட்ட உணர்ச்சிகளை வரையறுத்தலாக உள்ளது. இயல்பைக் குறித்த சட்டத்தில் இந்த நீதியின் பங்கு மிகை நவிற்சியைத் தவிர்த்தலாக இருக்கிறது.
நீதியின் பாற்பட்ட மொழி அகத்திற்கு உரிய பொருளை முன்வைக்கிறது. அதில் நேசத்தின் தோல்வி துறவின் பாற்படுவதாக உருவாகும் பொருளும் இறுதியாகிறது. அந்த எல்லையில் விளிம்பில் நின்று கொண்டு வேட்கையை விருப்பை, களிப்பை, ஆவலை விரிக்கவேண்டியதாகிறது. அதைத்தான் இந்த வகையான இலக்கியங்கள் செய்கின்றன. அகம் என்ற பரப்பில் நீதியின் பாற்பட்டதாகத் திருப்தி அடைந்துவிடும் உணர்ச்சிகள் மேலோங்குகின்றன. அவற்றுக்குள் இருக்கும் பரிமாற்றம் இலக்கியத்தை நகர்த்துகின்றன.
உடற்கூறின் வர்ணனைகளாகட்டும் உயிரியல்பின் நிகழ்வாகட்டும் இந்த இலக்கியங்களுக்குள் இலக்கணத்தின் நியதி நீதியாக பரிபாலனம் ஆகிறது. எல்லைமீறினால் தண்டித்துக்கொள்ளுதலும், நிறைவின்மையில் ஏக்கத்தின் புலம்புதலும் என நீதி எப்போதும் கண்காணிப்பாக இருக்கிறது. நீதிக்கு முன் நடத்தப்படும் இயக்கங்களாக அக இலக்கியங்கள் இருக்கின்றன. இந்த இலக்கியத்திலும் நீதியின் வாசகங்களாக சுயத்தை நோகல் போன்ற பயன்பாடுகள் உள்ளன.
நீதி என்பது மீறப்படாத சுயக்கட்டுப்பாடு. அதனுள் இயங்கும் விதிகள் கட்டற்ற கனவை புனையத் தூண்டினாலும் நீதியின் நிழலில் அது அமிழ்ந்து போகும். அகம் சார்ந்த இலக்கியங்கள் இந்த நீதியின் பாற்பட்டே பொருளைச் சேகரிக்கின்றன உற்பத்தி செய்கின்றன. நீதியைத் தாண்டிய அல்லது மரபைத் தாண்டிய இலக்கியங்களில் அகம் என்ற உணர்ச்சி பற்றிய கேள்வி எழுகிறது. அதன் அனுபவத்தைப் பிரித்துப் பார்க்கும் சிந்தனை தூண்டப்படுகிறது.

றஜீபனின் கவிதைத் தொகுப்பில் மொழியின் செயற்பாடுகள் நிகழ்த்தும் வினை பற்றிய மதிப்புகளைக் காணமுடிந்தது. இந்தக் கவிதைத் தொகுப்பு போன்ற பொருளில் வரும் பல இலக்கியங்களிலும் இது போன்ற மொழி வினையுள்ளது. அதன் அடிப்படையை பின்னணியைப் புரிந்துகொள்வதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தின் அடியில் இயங்கும் நனவிலியைக் கட்டமைக்க முடியும்.



1 comment:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...