Sunday 2 February 2020

சைக்கோ-திரைப்படம் குறித்து....





நீண்ட நாட்களுக்குப் பின் திரையரங்கத்திற்கு சென்று பார்த்த படம்.
வழக்கம் போல் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம் தான்.
ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் தண்டனைக் கொடுத்ததற்காக மாணவன் கொலை செய்து பழி வாங்குகிறான்.

சுய இன்பத்தைக் கண்டித்ததற்காக ஆசிரியரை எட்டாண்டுகள் சிறையில் வைத்திருக்கிறான். அவரைக் கொலை செய்யாமல் அவருக்குப் பதிலாக 14 இளம் பெண்களைக் கொலை செய்கிறான். கொல்லப்பட்ட இளம்பெண்கள் எல்லோருமே அவனுடைய ஆசிரியரைப் போலத்தான் கருதிக் கொள்கிறான். கதையின் நாயகியை அவனால் கொல்ல முடியவில்லை. கதையின் நாயகன் சரியான நேரத்தில் வந்து அவளைக் காப்பாற்றிவிடுகிறான். சிறையில் பல ஆண்டுகள் வைத்திருந்த ஆசிரியரைக் கொன்று தப்பிக்கிறான் கொலைகாரன். அவனைக் குழந்தை என்கிறாள் கதையின் நாயகி. அவன் குழந்தைப் பருவத்தில் அடைந்த காயத்திற்கு மருந்திட்டு அவனைக் காப்பாற்றி இருக்கவேண்டும் என்கிறாள்.
நேரடியான கதை. தொடக்கத்திலேயே கதை என்ன சொல்ல வருகிறது எப்படி முடியப் போகிறது என்பதைக் கூறிவிடுகிறது. கதையின் நாயகன் நாயகியைக் காப்பாற்றிவிடப் போகிறான் என்ற ஆசுவாசத்திற்குப் பின் எதற்காகக் கொலைகள் நடக்கின்ற என்ற கேள்வி எழுகிறது.
இந்தப் படத்தை ஹாலிவுட்டின் மிகவும் பெயர்பெற்ற துப்பறியும் திரைப்படங்களை எடுத்த ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கிற்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் இயக்குநர். அவரும் சைக்கோ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார். அந்தப் படம்தான் ‘சிகப்பு ரோஜாக்கள், ‘மூடுபனி’ போன்ற திரைப்படங்களை எடுக்க ஆதாரமாக இருந்திருக்கிறது. ஆனால் அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் ஒரே ஒற்றுமை தொடர் கொலைகள். அதுவும் இளம்பெண்களின் கொலைகள். இளம் வில்லன் இளம் பெண்களைக் கொல்வதற்குக் காரணம் பாலியல் அழுத்தம் என்பதாகவே முதலில் புரியும். ஆனால் காரணம் அதுவல்ல என்பது தொடர்ந்து பார்க்கும் போது தெரிகிறது.
மாணவப் பருவத்தில் சுய இன்பம் அனுபவித்ததற்காக, வில்லனுக்கு கிறித்துவ ஆசிரியைத் தினம் 60 பிரம்படிகள் என்று தண்டனைக் கொடுக்கிறார். அவன் அதன் பின் முரட்டுத் தனமாக மாறுகிறான் என்பதற்காக சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். அப்போது ஒரு காவலர் அவனைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வளர்ந்த பின் அவரைக் கொன்று அவருடைய சீருடையை சிறையில் இட்டு வைத்திருக்கிறான். ஆசிரியையும் சிறையில் வைத்துவிடுகிறான்.
பெண்கள் ஒழுக்கத்தை வற்புறுத்துபவர்களாகவும், ஆசிரியைகளாகவும் மட்டுமே வில்லனுக்குத் தெரிகிறது. பல மாணவர்களுக்கு முன் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை சிறையில் வைத்துவிட்டு அவருக்குப் பதிலாக அவரையே கொல்வது போல் பல பெண்களைக் கொல்கிறான் வில்லன். சிகரெட் பிடிக்கும் ஆசிரியை ஒழுக்க சீலியாக முன் வைக்கப்படுவதைக் கேள்வி கேட்க முடியாமல் தண்டனை வழங்குவதுதான் மனப்பிறழ்வு. சைக்கோத்தனம். நன்மைக்குள் ஒளிந்திருக்கும் தீமையைக் கொல்லல்தான் சைக்கோத்தனம்.ஆனால் இதில் மாணவனை ஒழுங்குப் பாதைக்குக் கொண்டு வர எண்ணும் ஆசிரியரின் நடவடிக்கை நன்மை சார்ந்தது. அதை ஏற்க முடியாமல் கொல்லும் மாணவனின் செயல் தீமை சார்ந்தது. இது பொதுபுத்தியில் இருப்பது. ஆனால் மாணவனிம் குற்றம் முழுமையான தீமையைக் கொண்டு வந்திருக்குமா என்றால் இல்லை. நாயகி கேள்வி கேட்பது போல அது பெரும் குற்றம் ஆகாது. இருந்தாலும் நன்மைக்கும் தீமைக்கும் வரையறை செய்திருக்கும் பாலியல் விதிகள் கிறித்தவ மதத்தின் அடிப்படைகளாக விளங்கியிருக்கின்றன. பாலியல் வரலாறு குறித்து எழுதிய ஃபூக்கோவும் விக்டோரியன் காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பாலியல் விதிகளில் சுய இன்பம் காணுதல் இருபால் உறவு என்ற நிறுவனமயத்திலிருந்து விலக்கப்பட்டதாக இருப்பதை விளக்குகிறார். கிறித்தவ மதத்தில் ஊறிய ஆசிரியை மாணவ சமூகத்திலிருந்து வில்லனை விலக்கி வைப்பது பெரும் தீமையை மாணவனின் மனதில் உருவாக்கிவிடுகிறது. ஆசிரியையைச் சிறையில் வைத்து சமூகத்திலிருந்து விலக்கி வைக்கிறான்.  மேரி மாதாவிடம் தன் குற்றங்களுக்காச் சடங்கு நடத்தி மன்னிப்பு கோருகிறான்.
இந்தப் பொருள் சைக்கோ திரைப்படத்தில் ஓர் அடுக்கு. மற்றொர் அடுக்கு பௌத்த மதத்தின் பொருள். வில்லனின் பெயர் அங்குலிமால். பௌத்தரின் சீடரான அங்குலிமாலா மாணவர் பருவத்தில் சிறந்த கல்வியாளராக இருந்த போது சிலரின் பொறாமையால் அவரது ஆசிரியர் அவரை ஆயிரம் சுண்டு விரல்களைக் கொண்டு வருமாறு கூறி துரத்திவிடுகிறார். அவர் அவற்றைப் பெற பலரையும் கொலை செய்து சுண்டு விரல்களை எடுத்துக் கொள்கிறார். புத்தரின் வரவால் மனம் திருந்தி சீடராக மாறுகிறார். இந்தக் கதையிலும் வில்லன் நாயகனின் உதவியாளருடைய சுண்டுவிரலை எடுத்துக் கொள்கிறான்.  மேலும் கதையின் நாயகனின் பெயர் கௌதம்.  நாயகனிடம் தான் தோல்வி அடைந்துவிட்டதாகக் கதறுகிறான். ஆனால் இயக்குநர் மிஸ்கின் புத்தராகக் கற்பனை செய்திருப்பது நாயகியைத்தான் என்கிறார்.
நன்மையை முன் வைக்கும் நாயகனுக்கு அதற்கான பணி செய்வது மட்டுமே கொடுக்கப்பட்ட பாத்திரம். ஒரு facilitator. அவ்வளவுதான்.  நன்மையின் உலகம் பெரியது. அது குருட்டுத் தனமாகவும் நன்மையைச் செய்யும். அதற்கு ஒளி தேவை இல்லை. தீமையின் உலகம் சிறியது. இருளானது. குருட்டுத்தனமானது என்று நம்பப்பட்டது. அதில் ஒளியாக வரக்கூடியது தாயின் அன்பும் கருணையும் அரவணைப்பும். வெறும் வெற்று  உடல் ஒழுக்கத்தை வற்புறுத்தும் பெண்களிடம் இதைக் காணமுடியாது. நன்மையின் உலகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் மட்டுமே நல்லவர்களாகிவிட முடியாது. நன்மைக்குள் தீமையின் பங்கையும் உள்ளிணைக்கவேண்டும். அதனைக் காணத்தான் கண்கள் வேண்டும்.  அதனால்தான் நாயகி தாயின் அன்பை நல்குவதாகக் கண்ட பின் தற்கொலை செய்துகொள்கிறான் வில்லன். தீமை விலகியது நன்மையாக மாறியது. பெண்களைக் கொல்பவன் சைக்கோ என்பதாக சுருங்கிய பொருளைக் கொள்ளாமல் விரிந்த பொருளில் எடுக்கப்பட்டத் திரைப்படம்.
நாயகனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கம் கறுப்புக் கண்ணாடி பத்திரிகையாளர் தமிழ்வாணனின் கண்ணாடியை ஒத்திருக்கிறது. துப்பறிவதற்கான கண்களாக தமிழ் வரலாற்றில் இருந்ததால் அந்தக் கண்ணாடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது. வானொலியில் பேசுவதன் மூலம் சில செய்திகளைக் குறிப்பிட்ட சிலர் புரிந்துகொள்ள-இங்கு கதையின் நாயகன் புரிந்துகொள்ள, முன்வைப்பது மிகவும் அரிதாக நடப்பது அதனை நாயகி பயன்படுத்துவது போல் காட்டியிருப்பது நுண்ணுணர்வைச் சார்ந்தது. நித்யா மேனன் முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடித்தாலும் அவரை முன்னாள் முதல்வரின் வேடத்தில் ஒரு படத்தில் நடிப்பதை நினைவு கூறத்தக்க வகையில் விலக்கப்பட்டச் சொற்களைச் சொல்ல வைப்பது அதீத திமிரைக் காட்டுவது என்பதாகவும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இறுதி காலத்தில் சக்கர நாற்காலியில் பயணித்ததைப் போல பயணிக்க வைப்பதும் ஏன் இந்த ஒப்புமை என்பது போன்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் அவருக்கு கமலாதாஸ் என்ற பெயரிட்டிருப்பதும் கூட. ஆசிரியையாக நடித்த ப்ரிதம் சக்கரவர்த்திதான் படத்தின் திறப்புச் சாவி. அற்புதமான நடிப்பு.
  இயக்குநரின் முந்தைய படங்கள் காவல்துறையின் மீது நம்பிக்கை வைக்கக் கோருவது போன்ற முயற்சிகளாக இருந்தன. இந்தப் படம் காவல்துறை செயல்படுவது மிகுந்த சிரமமானது என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
#mysskin
#Psycho



மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...