Saturday 15 February 2020

பாரசைட்: கொரியப் படமும் தமிழ் நினைவுகளும்



சமீபத்தில் ஆஸ்கர் வென்ற கொரிய படமான பாரசைட் ஆங்கில சப்டைட்டில் இல்லாமலேயே புரிந்துகொள்ள ஏதுவாக, தமிழில் குறிப்பாக, சென்னையின் கலாச்சாரத்தைப் பகிர்வது போலவே இருக்கிறது. சென்னையின் வறுமை, சென்னையில் ஓடிய மழை வெள்ளத்தின் பாதிப்பு, சென்னையின் சுயநலம், சென்னையின் அசுத்தம் என பலவற்றை கொரிய மொழியில் பார்த்தது போல் இருந்தது.

இந்தப் படம் ஒரே ஒரு புலனுணர்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது போல் இருக்கிறது. நுகர்தல் என்ற ஒரு புலனுணர்வுதான் இதில் கதையின் பல முடிச்சுகளை உருவாக்கவும் நீக்கவும் செய்கிறது. வாசனை, நாற்றம் என்ற நல்-அல் நுகர்தலின் முக்கியத்துவத்தைப் படம் பூதாகரமாக்கியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆண்டான்-அடிமை என்ற முதலாளித்துவ சிந்தனையை அப்பட்டமாகக் காட்டிய படமாகவும் இருக்கிறது.

ஒரு முதலாளியின் வீட்டில் ஒட்டுண்ணிகளாக வாழ வருபவர்கள் வாழ்நாள் முழுக்க ஒட்டுண்ணிகளாக இருந்துவிடுவார்கள் எனும் எச்சரிக்கையைக் கொடுக்கிறது படம். முதலாளியின் மகளுக்கு ஆசிரியர் வேடம் பூண்டு வரும் இளைஞன் அங்கு தன் தங்கையை முதலாளியின் மகனுக்கு ஓவிய ஆசிரியராகவும், தாயை வீட்டை நிர்வகிப்பவராகவும், தந்தையை ஓட்டுநராகவும் தான் அறியாத அந்நியர்களைப் போல் அந்த வீட்டில் வேலைகளுக்குச் சேர்த்துவிடுகிறான். ஏற்கனவே அந்த வேலைகளில் இருந்தவர்களை ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கி துரத்தி அடிக்கிறது இந்தக் குடும்பம். அங்கு ஏற்கனவே வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த பெண், தன் கணவரை அதே வீட்டின் பங்கரில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கிறாள். இதை இந்தக் குடும்பம் அறிந்து கொள்ள நேர்கிறது. அப்போது இரு குடும்பங்களுக்கும் இடையில் ஒட்டுண்ணிகளாக யார் இருப்பது என்ற போராட்டத்தில் வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த பெண்ணும் இந்த இளைஞனின் தங்கையும் கொல்லப்படுகிறார்கள்.

முதலாளியின் மகனுடைய பிறந்தநாளின் போது இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் சண்டையில் இளைஞனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. பங்கரில் ஒளிந்திருந்து வெளியே வந்து தன் மகளைக் கொன்ற அந்தப் பெண்ணின் கணவரையும் முதலாளியையும் கொன்றுவிட்டு அதே வீட்டின் பங்கரில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்கிறார் அந்த இளைஞனின் தந்தை. அந்த இளைஞனும் அவனது தாயும் அவரைத் தேடுகிறார்கள். அப்போது அந்த பங்கரின் அடியிலிருந்து அவர் விளக்கை அணைத்துப் போடும் முறைமையிலிருந்து சாரணரின் மொழியாக அது இருப்பதைப் புரிந்துகொண்டு அவரை மீட்கப் போராடப் போவதாக உறுதி அளிக்கிறான் இளைஞன்.

முதலாளியின் வீடு சொர்க்கம். இந்த இளைஞனின் இருப்பிடம் நரகத்திற்கும் கீழானது. சிறுவனான முதலாளியின் மகன் தன்னுடைய ஓவிய ஆசிரியை, ஓட்டுநர், வீட்டை நிர்வகிக்கும் இளைஞனின் தாய், இளைஞன் எல்லோர் மீதும் ஒரு குறிப்பிட்ட நாற்றம் அடிப்பதாகக் கூறுகிறான். அது என்ன நாற்றம் என்றால் சப்-வேக்களில் வாழும் மக்கள் மீது வீசும் நாற்றம் என்கிறார் முதலாளி. அதைப் பொறுக்க முடியவில்லை என்றும் கூறுகிறார். வண்டி ஓட்டும் போது முதலாளி அந்த நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் நெளிவதைக் கவனிக்கும் ஓட்டுநர் ஆத்திரமும் கோபமும் அடைகிறார். அப்போதே முதலாளியைக் கொல்லும் ஆவேசமும் அவருக்குள் உதிக்கிறது. ஆனால் அதைச் செயல்படுத்தும் துணிவும் மனநிலையும் அவருக்கு இல்லை.
மகளைக் கொன்றுவிட்ட பின் அந்த இடத்தில் ஏற்பட்ட சண்டையின் காரணத்தை அறிந்து இளைஞனின் குடும்பத்தைக் காவலர்களிடம் முதலாளி ஒப்படைத்துவிடுவார் என்ற பயத்திலும் தன் மனைவியும் மகனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசையிலும் நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் முகம் சுளித்துக் கொண்டிருந்த ஆத்திரத்திலும் முதலாளியை ஓட்டுநர் கொன்றுவிடுகிறார்.
ஆண்டான்-அடிமை என்பதன் விரிவாக்கமாக முதலாளி-ஒட்டுண்ணி என்பதாக ஒரு தளத்தைப் படம் உருவாக்குகிறது. அடுத்த தளம் நாற்றம் என்ற புலனுணர்வு பற்றியதாக இருக்கிறது. கீழானவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மீது வீசும் நாற்றம் என்ற புலனுணர்வின் அரசியல் குறித்து இந்தப் படம் எடுத்த பார்வை நுட்பமானது. மேலும் இந்த நாற்றம் பற்றி நம் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து உயர்சாதி மக்கள் இப்போது கூட இது போன்ற எண்ணத்தை வைத்திருக்கிறார்கள் என்பதும் எண்ணிப் பார்க்கத்தக்கது.

நேரடியான படம். எந்தச் சிக்கலான முடிச்சுகளையும் கேள்விகளையும் வைக்கவில்லை. பொருளாதாரத்தில் கீழான மக்களின் அறம் சார்ந்த தேடல்களைக் காட்சிப்படுத்தி இருக்கிறது. மழை வெள்ளத்தில் கழிவு நீர் கால்வாய் நீரில் நீந்தி மீளும் குடும்பம் மீது என்ன வாசம் இருக்கும்? இது போன்ற பல குடும்பங்களை தினம் தினம் நாம் சந்திக்க முடிகிறது. ஆனால் இது போல் அவர்களை வைத்திருக்கும் இந்த ஏற்றத்தாழ்வான பொருளாதாரம் குறித்த குற்றவுணர்வு இல்லாதச் சமூகமாகத்தான் கொரியாவும் தமிழகமும் (மட்டுமல்லாமல் எந்த ஒரு முதாலளித்துவ சமூகமும்) இருக்கிறது என்பது படத்தின் வேராக இருப்பதை ஒப்புநோக்க முடிகிறது.

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...