Monday 24 February 2020

டெல்லி தருணங்கள்


இண்டிகோ விமானத்தில் டெல்லிக்குப் பயணம். எனக்கு நடு இருக்கைதான். ஆனால் பக்கத்தில் அமர வந்தவர்கள் இண்டிகோ விமானத்தின் பணியாளர்கள். அவர்கள் எனக்கு ஜன்னலோர இருக்கையைக் கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்துகொண்டார்கள். இண்டிகோ விமானத்தில் ஜன்னலோர இருக்கைக்குத் தனியாக நூறு ரூபாய்க் கொடுக்கவேண்டும். டெல்லி சென்றடைந்தவுடன் குளிர் கொஞ்சம் அதிகம் இருந்தது. நான் கொண்டு சென்ற பை வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகிவிட்டன. அதன்பின் டாக்ஸி பிடித்து ஒய்.டபிள்யு.சி.ஏ சென்றடைந்துவிட்டேன். இரவு அங்கேயே உணவு.

டெல்யூஜ் கருத்தரங்கம் முதலில் அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெறும் என்று சொல்லி அதன் அருகில் இருக்கும் ஒய்.டபுள்யு.சி.ஏ விடுதியில் தங்கச் சொன்னார்கள். கடைசி நிமிடத்தில் கருத்தரங்க இடம் தொழில் வளர்ச்சி மையம், வசந்த் கஞ்சுக்கு மாற்றப்பட்டதால் ஒரு மினி பேருந்தில் தினமும் அழைத்துச் சென்று கொண்டு வந்து விட்டார்கள். அதனால் காலையில் 7 மணிக்கே எல்லோரும் அருகில் இருக்கும் ஓர் இடத்தில் கூட வேண்டியிருந்தது. பங்கேற்பாளர்கள் 20 பேர் ஜன்தர் மன்தர் வாசலில் கூடிவிடுவோம். பேருந்து வரும், எங்களை அழைத்துச் செல்லும். குடியரசுத் தலைவர் மாளிகை, பல நாடுகளின் தூதரகங்கள் என்று கடந்து 18 கி.மீ பயணம். 8.30 மணிக்குக் கொண்டு சேர்த்துவிடுவார்கள். 9 மணிக்கு கருத்தரங்கம் தொடங்கிவிடும். முதல் ஒரு மணி நேரம் வெளிநாட்டுப் பேராசிரியர்களின் கட்டுரைகள் அதன் பிறகு கலந்துரையாடல் அதன் பின் தேநீர் இடைவேளை. அதன் பின் 11 மணிக்கு பங்கேற்பாளர்களின் கட்டுரை வாசிப்பு. அது ஒரு மணிக்கு முடியும். அதன் பின் உணவு இடைவேளை. மூன்று நாட்கள் இப்படித்தான் கழிந்தது.

இரண்டாவது நாள் தோழிகளுடன் சில இடங்களைப் பார்க்கக் கிளம்பினோம். ஜன்தர் மன்தர், கன்னாட் ப்ளேஸ், பாலிகா பஜார் எல்லாம் பார்த்துவிட்டு இந்தியா கேட் வந்தோம். அங்கேயும் பார்த்து படங்களை எடுத்துக் கொண்டு விடுதி திரும்ப 8 மணி ஆகிவிட்டது.

இறுதிநாள் மதிய இடைவேளையின் போது பேராசிரியர் கென்னத் சூரினுக்கு உடல்நலம் கெட்டது. அவருக்குத் தொடர் வாந்தி பேதி ஆகிவிட்டது. அவர் பலவீனமாகிவிட்டார். அப்படியே படியில் அமர்ந்துவிட்டார். அவருடைய மனைவி அவருக்கு மாற்று உடைகளை எடுத்து வரப் போய்விட்டார். எலுமிச்சை ஜூஸ் கொடுத்தோம். இருந்தாலும் அவருக்குப் பிரச்னை தீரவில்லை. என்னிடம் எலக்ட்ரால் என்ற நீர்ச்சத்தைக் கூட்டும் ஒரு தூள் இருந்தது. அதைப் போட்டுக் கொடுத்தேன். அதன் பின் அவரைத் தூக்கி தங்கும் அறைக்கு அனுப்பிவிட்டோம். அவருடைய நிலைமை எனக்குப் பெரும் துக்கத்தைத் தந்தது.

பொதுவாக வெளிநாட்டிலிருந்து வரும் பேராசிரியர்கள் மினரல் நீரை மட்டுமே குடிப்பார்கள். அது அவர்களுக்குக் கட்டுப்பாட்டுடன் வழங்கப்படுகிறது. அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் அதைக் கேட்க முடியாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களில் ஒருவர் உடல்நலம் கெட்டு பாதிக்கப்படுவார் என்று நான் கனவு கண்டதால் எங்கள் விடுதியில் கொடுத்த மினரல் நீரை எடுத்துப் போய் பேராசிரியர் டேனிடம் காலையிலேயே கொடுத்துவிட்டேன். மதியம் பேராசிரியர் சூரினுக்கு உடல்நலம் கெட்டுவிட்டது. அதன் பின் உடல்நலம் தேறிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். ட்ரம்பைக் குறித்து விமர்சித்ததால் முகநூலில் அவர் எழுத மூன்று வாரங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நான் அவருடைய நலம் பற்றி விசாரித்ததற்குப் பதிலளிக்க முடியாமல் இருக்கிறார் என அவருடைய மனைவி தெரிவித்தார். அமெரிக்காவில் இருக்கும் பேராசிரியர் அவர்.

மதுரையிலிருந்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கார்த்திக் வந்தார். அவர் டெல்யூஜ் குறித்து காட்டிய ஆர்வம் உற்சாகம் தந்தது. அஸ்ஸாம் தேஜ்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் அன்பரசன் வந்திருந்தார். டெல்லியில் தமிழில் பேச ஆட்கள் கிடைத்தது நல்ல அனுபவமாக இருந்தது.

கருத்தரங்கம் முடிந்து ஞாயிறு ஏர் இந்திய விமானத்தில் மதியம் புறப்பட்டு மாலை வந்துவிட்டேன். அம்மா, அப்பாவின் மரணத்திற்குப் பின் செல்லும் பயணம் இது. கிளம்புவதற்கு முன் உற்சாகம் இன்றி பெரும் துக்கமாக இருந்தது. அங்கு சென்ற பின் அமைதியாக இருந்தது. வரும் போது வானிலை மைய அதிகாரி புவியரசன் விமானத்தில் உடன் பயணம் செய்தார். மேலும் ஒரு வயதான அம்மையார் தனியாக டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தார். அவருக்கு உதவியது இதமாக இருந்தது.



No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...