Sunday 23 February 2020

டெல்லி-டெல்யூஜ் கருத்தரங்கம்







டெல்யூஜ் கருத்தரங்கம் இந்த முறை பெரும் நெருக்கடிகளைத் தாண்டி டெல்லியில் நடந்தது. இதை நடத்த ஜாமியா பல்கலைக்கழகம் முன்வந்தது எதிர்பாராத உதவி போல் இருந்தது. தொழில் வளர்ச்சி மையம் கருத்தரங்கை நடத்துவதற்கான இடத்தை அளித்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜாமிய பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால் இந்தக் கருத்தரங்கத்திற்கான நிதி உதவியை அரசிடமிருந்து பெற முடியாமல் போய்விட்டது. அதனால் வெளிநாட்டு பேராசிரியர்கள் அவர்கள் செலவிலேயே வந்து போகவேண்டியிருந்தது. அதனால் சிலர் வராமல் இருந்துவிட்டார்கள். எப்போதும் இந்தக் கருத்தரங்கத்திற்கு வரும் பேராசிரியர்கள் டேனியல் ஸ்மித், கென்னத் சூரின், ஆன் சுவங்யா, ஜாஃப் ப்ராட்லி, அலக்ஸ் டீக் க்வாங் லீ, ஜெனல் வாட்சன் டாட்சியா ஹைகாகி ஆகியோரைத் தவிர அமெரிக்காவிலிருந்து லியோனர்ட் லாலர், ஸ்லோவினியாவிலிருந்து ஈவா பஹாவேக், தைவானிலிருந்து செபஸ்டியன் ஹைசியல் ஹூ லியு, ஜப்பானிலிருந்து தோஷியா உய்னோ ஆகியோர் வந்திருந்து பல கட்டுரைகளை வழங்கினார்கள். முதல் இரண்டு நாட்கள் வெளிநாட்டுப் பேராசிரியர்களுடன் நம் நாட்டு பேராசிரியர்கள் இருவரும் கட்டுரைகளைக் கொடுத்து அவற்றை விளக்கி அவற்றுக்குப் பிறகான சிந்தனைகள் குறித்து அலசும் முகாம் நடக்கும். சென்னையில் மட்டுமே என்னால் முகாமில் கலந்துகொள்ள முடிந்தது. மும்பையிலும் கலந்து கொள்ள இயலவில்லை. இங்கும் கலந்துகொள்ள இயலவில்லை.

கருத்தரங்கத்தில் பல பங்கேற்பாளர்களின் கட்டுரைகள் இடம்பெறும். ஒரே சமயத்தில் நான்கு பங்கேற்பாளர்கள் வெவ்வேறு அரங்கங்களில் கட்டுரைகள் வாசிப்பார்கள். அந்த அரங்கங்களில் வெளிநாட்டுப் பேராசிரியர் ஒருவர் தலைமை வகிப்பார். ஓர் அரங்கத்தில் நான்கு கட்டுரையாளர்கள் கட்டுரை வாசிக்க நேரம் ஒதுக்கப்படும். அவர்கள் வாசித்த பின் அது குறித்த கலந்துரையாடல் நடக்கும். வெளிநாட்டுப் பேராசிரியர்களும் அந்தக் கட்டுரைகளைக் கேட்டு கருத்துரைப்பார்கள்.
இந்த முறை என் கட்டுரை ‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திராவிட கட்சிகள் எதிர்கொள்வது’ பற்றியது. என் அரங்கத்திற்கும் தென்கொரிய பேராசிரியரும் மார்க்ஸிய ஆய்வாளருமான அலெக்ஸ் டீக் க்வாங் லீ தலைமை வகித்தார். நான் கட்டுரையை வாசிக்கவில்லை. பவர் பாயிண்ட் ஸ்லைட்கள் போட்டு அவற்றை விளக்கிச் சொல்லிவிட்டேன். வந்திருந்த அனைவருக்கும் முதலில் நாம் சொல்லும் விஷயம் புரியவேண்டும். அடுத்து வெளிநாட்டுப் பேராசிரியர்கள் அதனை உள்வாங்கிக் கருத்துச் சொல்லவேண்டும். இதனால் நான் இப்படிச் செய்தேன். என் கட்டுரை எதைக் குறித்தது என திராவிட அரசியல் புரியாதவர்களுக்கும் போய்ச் சேர்ந்தது. பேராசிரியர் அலெக்ஸ் அருமையாக இருந்ததாகச் சொன்னது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. பேராசிரியர் டேனியல் ஸ்மித் என் கட்டுரையைக் கேட்பதற்காகவே வந்திருந்தது பெருமையாக இருந்தது. அவரும் என் கட்டுரையைப் பாராட்டினார். மேலும் அதனை வளர்த்தெடுப்பதற்கான சில கருத்துகளைச் சொன்னார்.

தேநீர் இடைவேளையும் மதிய உணவு இடைவேளையும் சாப்பிடுவதை விட அந்தப் பேராசிரியர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் பங்கேற்பாளர்கள், நாட்டின் பிற கல்லூரிகள் பல்கலைக் கழகங்களிலிருந்து வந்திருப்போருடன் பேசுவதற்கான நேரமாக எப்போதும் இருக்கும். இந்த முறையும் பல பேராசிரியர்களுடன் பேச முடிந்தது. பேராசிரியர் அலெக்ஸ் என் பங்கேற்பு குறித்து முகநூலில் பகிர்ந்ததில் என் கட்டுரை சிறப்பாக இருந்ததாக பதிவிட்டது பெரும் உற்சாகத்தைத் தந்தது. மேலும் அவர் பாராசைட் குறித்து நான் எழுதியிருப்பதை ஆங்கிலத்தில் தருமாறு கேட்டிருக்கிறார். அவர் மற்றும் மற்றொரு பேராசிரியருடன் என்னுடைய கருத்தையும் இணைத்து ஒரு கட்டுரை எழுதி ஒரு சர்வதேச இதழில் பிரசுரிக்கக் கேட்டிருக்கிறார்.

இந்தக் கருத்தரங்கத்தில் நான்கு கட்டுரைகள் குறித்து முக்கியமாகச் சொல்லவேண்டியிருக்கிறது. முதலாவது பேராசிரியர் டேனியல் ஸ்மித் ’காலத்தின் தூய வடிவமும் பொய்மையின் சக்தியும்: காலம் மற்றும் உண்மை குறித்து டெல்யூஜின் கருத்தை முன்வைத்து’ ஒரு கட்டுரையை வாசித்தார். இதில் காலம் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது என்று டெல்யூஜ் கூறிய கருத்தை ‘தத்துவம் என்றால் என்ன?’ என்ற நூலிலிருந்து எடுத்து மறுவிளக்கம் தந்திருக்கிறார்.

அடுத்து கருத்தரங்கத்தை நடத்தும் ‘டெல்யூஜ் இந்தியா குழுமத்தின்’ துணை அமைப்பாளரும் சண்டிகர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான மீனு குப்தா எழுதிய, ’கனடாவின் வைஷேஷிகா சூத்திரத்தை டெல்யூஜின் அடிப்படையில்  வாசித்தல்’ என்ற கட்டுரையில் அணு, இயக்கம், மனித அறிவின் தன்மை, ஆத்மா இவற்றை டெல்யூஜின் உறுப்புகளற்ற உடல் மற்றும் பெர்க்சனின் கோட்பாடுகளைக் கொண்டு வாசிப்பதற்கான சாத்தியங்களைக் காட்டியிருந்தார்.

அடுத்து பிரெஞ்சு பேராசிரியர் ஆன் சுவங்யா எழுதிய ‘சூழலியலுக்குத் திரும்பிய மீமெய்யியல்’ என்ற கட்டுரை. இதில் மீவாழ்வியல் என்பது உணர்நிலைக்கான இயங்குதளமாகிவிடுகிறது என்றும் வெறும் சங்கேதங்களாக மாற்றப்பட்டு கண்காணிக்கப்படுகின்ற மனித இருப்பு வடிவங்கள் பதிவுறுத்தும் இடங்களாக இருப்பவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்றும் விளக்கினார்.

அடுத்து ஒரு பங்கேற்பாளர் பெர்க்சனின் கோட்பாட்டை நாராயண குருவின் தத்துவங்களில் பொருத்தி ஒரு கட்டுரை வாசித்தார்.
இந்த நான்கு கட்டுரைகளும் எனக்கு ஒன்றை உணர்த்தின. சென்ற முறை கருத்தரங்கத்தில் நான் ‘உள்ளுணர்வு தொடர்புறுத்தத்தின் ஒரு செயல்பாடு’ என்ற கட்டுரையை வாசித்தேன். அதில் உள்ளுணர்வு எப்படி விழிப்படைகிறது அதன் செயல்பாடு குறித்து எப்படி பெர்க்சனும் டெல்யூஜும் விளக்குகிறார்கள் என்று சுட்டிக்காட்டி இருந்தேன். இந்தக் கட்டுரையை பேராசிரியர் டேனியல் ஸ்மித் மற்றும் பேராசிரியர் ஆன் சுவங்யாவுக்கும் அனுப்பி அவர்களுடைய கருத்துகளைப் பெற்றிருந்தேன். மேலும் பேராசிரியர் மீனு குப்தாவும் என் கட்டுரையை அனுப்பப் பெரிதும் கேட்டுக் கொண்டார் என்பதற்காக அவருக்கும் அனுப்பியிருந்தேன். இந்தக் கருத்தரங்கங்களில் எல்லோருடைய கட்டுரைச் சுருக்கத்தையும் ஒரு சிறு கையேடாக வெளியிடுவார்கள். அதில் இடம்பெற்றிருந்த என் கட்டுரையின் சுருக்கத்தைப் பலர் படித்திருக்கலாம். இதில் நான் உள்ளுணர்வு என்பது ஒரு கணத்தில் நிகழ்வது அதற்கும் நேரத்திற்கும் தொடர்பில்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். மேலும் உள்ளுணர்வு மூலம் தொடர்புறுத்தம் சாத்தியப்பட்டால் கண்காணிப்பு இயந்திரங்கள் செயல் இழந்து போகும் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இதை வாசித்த பேராசிரியர்கள் அதில் அவர்கள் எனக்குச் சொன்ன கருத்துகளைக் கொண்டு நேரம் குறித்த கட்டுரையாகவும் இடம் அல்லது வெளி குறித்த கட்டுரையாகவும் அடுத்த கட்ட கட்டுரைகளை இந்தக் கருத்தரங்கத்தில் சமர்ப்பித்தார்கள். இந்தியாவைச் சேர்ந்த இருவர் அதனை இந்திய தத்துவத்தில் அடையாளம் காணக்கூடிய இடங்களைச் சுட்டிக்காட்டி கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

எனக்கு இரு பெரும் பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது. உள்ளுணர்வு குறித்து நான் வெறும் ஒரு செயல்பாட்டு வடிவத்தைச் சமர்பித்ததால் அதன் வளர்ச்சி குறித்து தத்துவ நிலையிலும் அறிவியல் நிலையிலும் அடுத்த கட்டத்தைக் கண்டடைந்து எழுத வேண்டியிருக்கிறது. அடுத்து இதனை அணுகுவதற்கான பொருத்தமான முறையான தத்துவ, அறிவியல் முறைமைகளைப் பயின்று அதனை வெளிபடுத்துவது. என் கட்டுரை இந்த வகையில் அடுத்த கட்ட வளர்ச்சியைக் கண்டது என்பதால் மட்டுமல்ல நம் மனித இனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியே உள்ளுணர்வு சார்ந்த இயக்கமாக மட்டுமே இருக்கப் போகிறது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக இந்தக் கருத்தரங்கத்தில் நான்கு கட்டுரைகள் வாசிக்கப்பட்டது நிம்மதியைத் தந்தது.  


No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...