Thursday, 2 September 2021

குறுங்கதைகள்-குடை






அன்று கடும் மழை பொழிந்தது. குடை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். குடையை விரித்தவுடன் அது எப்போதும் இருப்பதை விட பெரிதாக விரிந்தது. சிறிது நேரத்தில் அதன் கைப்பிடி நீளமானது. குடை இன்னும் மேலே போய் பெரிதாகிவிட்டிருந்தது. சிறிது நேரத்தில் வானத்தை மறைக்கும் அளவுக்குப் பெரிதாகிவிட்டது. நான் அதைப் பிடித்துக் கொண்டு நடக்க முடியாததால் அதே இடத்தில் நின்றுவிட்டேன். எல்லோரும் என்னைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டார்கள். நல்லவேளையாக நீங்கள் குடையை விரித்து இந்த மழையிலிருந்து எங்களைக் காக்க வந்தீர்கள். இல்லை என்றால் எங்கள்பாடு திண்டாட்டம்தான் என்றனர். ஒருவர் வந்து புராணத்தில் கண்ணன் கோவர்த்தனகிரியைத் தூக்கி மழையிலிருந்து மக்களைக் காப்பாற்றிய பிறகு நீங்கள்தான் காத்திருக்கிறீர்கள் என்றார். மற்றொருவர் வந்து குடையைப் பிடிக்கச் சிரமமாக இருக்கிறதா என்று கேட்டார். இல்லை என்றேன். உண்மையில் கைகளில் இருப்பது குடை போலவே இல்லை. ஏதோ ஒரு குச்சியைப் பிடித்திருப்பது போல் தோன்றியது. மழை நிற்க சில காலம் ஆனது. அது வரை குடை பிடித்துக் கொண்டே நின்றேன். எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் வந்து தான் குடையைப் பிடித்துக் கொண்டு நின்று கொள்வதாகவும் நான் நகர்ந்து போகலாம் என்றும் சொன்னார். மற்றொருவர் வந்து வேண்டாம் வேறு யார் பிடித்தாலும் ஒரு வேளை குடை சிறுத்துவிடலாம் என பயமுறுத்தினார். மழை நின்ற பின் குடையை மடக்கிவிடலாம் என நினைத்தேன். ஆனால் கடும் வெயிலாக இருந்தது. அங்கிருந்தவர்கள் என்னைத் தடுத்தார்கள். இந்த வெயிலுக்கும் குடை தேவை என்றார்கள். நான் நின்ற இடத்தில் மண் மூடத் தொடங்கியது. என்னை பாதி அளவு மண் மூடிவிட்டது. எல்லோரும் மண்ணை அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். அதன் பின் அந்த வேலைச் சலித்து பின்வாங்கினார்கள். சிறிது காலத்திற்குப் பின் அவர்கள் அருகில் வருவதேயில்லை. என்னை மண் முழுமையாக மூடிவிட்டது. மண்ணில் புதைந்த குடை விரிந்தே இருந்தது.


No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...