அந்த மலைப்பாதையில் அவள் நடந்துகொண்டிருந்தாள். அவள் எதிரே வந்தவன் அவளை உற்றுப் பார்த்துவிட்டுப் போனான். அவள் தன் இறந்து போன மனைவி போலவே இருந்தது அவனுக்கு ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தந்தது. தன் மனைவி தன்னைப் பொருட்படுத்தாமல் நடந்து செல்வது போல் அவனுக்குத் தோன்றியது. அவளைக் கொன்றது போல இவளையும் கொல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் அவளைப் பின் தொடர்ந்தான். எதிரே ஒரு வயதானவர் வந்து கொண்டிருந்தார். அவள் தான் கொலை செய்த தன் மகள் போல் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார். அந்தப் பெண்ணை நிறுத்தி அவளைத் தன் மகள் போல் இருப்பதாகக் கூறி தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அவள் மறுத்துவிட்டு நடந்தாள். அந்த வயதானவர் சிறிது தூரம் திரும்பிச் சென்று விட்டு மீண்டும் அவளைப் பின் தொடர்ந்தார். எதிரில் ஒருவன் வந்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியுற்று நின்றுவிட்டான். அந்தப் பெண்ணைப் பின்தொடரும் இருவரையும் பார்த்து அந்தப் பெண்ணைப் பின்தொடரவேண்டாம் என்று எச்சரித்தான். அவளைத் தன் அறிந்திருப்பதாகக் கூறி அவர்களுடன் நடந்தான். அவள் ஒரு பிசாசு என்றும் அதனால் பின்தொடரவேண்டாம் எனத் தடுத்தான். அந்த மலைப்பாதையில் இறுதியில் உள்ள மலை உச்சிக்குக் கொண்டு சென்று தள்ளிவிட்டுவிட்டு அவள் காணாமல் சென்றுவிடுவாள் என்றான். அவர்கள் இருவரால் அதை நம்பமுடியவில்லை. அவர்கள் அவன் சொன்னதை நம்பாமல் அவளைப் பின்தொடரப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். மலை உச்சி வந்தது. அவள் திரும்பி அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தாள். அவர்கள் இருவரும் அவள் அருகே போனார்கள். அவள் உடனே மலை உச்சியிலிருந்து குதித்துவிட்டாள். அவர்கள் இருவரும் வேறு வழி தெரியாமல் அவளைக் காப்பாற்ற எண்ணி அங்கிருந்து குதித்தார்கள். சில நாட்களுக்குப் பின் அவள் மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தாள்.
Friday, 30 July 2021
Thursday, 29 July 2021
குறுங்கதைகள்-மஞ்சள் பூ
உலகம்
முழுக்க ஓர் அறிவிப்பு வருகிறது. துர்நாற்றம் வீசும் ஒரு பூ மலர இருக்கிறது. அது மலர்ந்தால்
உலகம் அழிந்துவிடும். எனவே அந்தப் பூவின் மொட்டு இருக்கும் செடிகளை உடனடியாக அழிக்கவேண்டும்
என்று கூறப்படுகிறது. மஞ்சள் நிற பூவான அந்தப் பூவின் மொட்டு என நினைத்து உலகத்தின்
அத்தனை மஞ்சள் நிற பூச்செடிகளும் அழிக்கப்பட்டன. எந்தப் பூ மலர்ந்தாலும் அதன் வாசத்தைச்
சோதித்தனர். மலரின் வாசத்திற்கு முன் வீச்சமே நினைவுக்கு வந்தது. மஞ்சள் பூ மலர்வதற்கு
முன் வெள்ளை மொட்டாக இருக்கலாம் என வதந்தி பரவியது. உடனே வெள்ளைப் பூச்செடிகள் அழிக்கப்பட்டன.
மஞ்சள மட்டுமல்ல அந்தப் பூ சிவப்பு நிறத்திலும் மலர்வதாகச் சொல்லப்பட்டது. உடனடியாக
சிவப்பு பூச்செடிகளும் அழிக்கப்பட்டன. அவ்வப்போது ஊதா நிறம் பற்றி சந்தேகம் எழுந்தது.
அவையும் அழிக்கப்பட்டன. காடெல்லாம் தீயாய் மாறியது. வீடுகளைச் சுற்றி அனலாய் எழுந்தது.
மலைகளில் அந்தப் பூக்கள் மலரலாம் என்றார்கள். மலைக்காடுகள் முழுக்க அழிக்கப்பட்டன.
இனி பூச்செடிகளே இருக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பூக்களற்ற உலகத்தை
எட்டுவது மிகவும் எளிது என்றார்கள். பூக்கள் பற்றி கருத்து தகவல்களும் அவற்றின் மீதான ஆர்வத்தைக்
கிளப்பிவிடும் என அஞ்சினார்கள். அவையும் அழிக்கப்பட்டன. பூக்களையும் அவற்றின் வாசனையையும்
அறியாத ஓர் பரம்பரையை உருவாக்கிவிடும் பெருமிதம் கொண்டார்கள். பூக்களைக் கண்டால் அழி
என்பதே உலக வாசகமானது. பூக்களைப் போல் இருப்பவர்களும் மலர்களை நினைவுபடுத்துகிறார்கள்
என குறை சொல்லப்பட்டது. பூக்களைப் போன்றவர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. பூக்கள் போன்றவர்களாக
எண்ணி ஒடுக்குபவர்களும் ஆபத்தானவர்கள் என்றார்கள். அவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
அந்த அழிவை எண்ணியே இருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. காடுகளை அழிக்க ஆட்கள்
இல்லை. செடிகளை அழிப்பவர்களின் எண்ணிக்கை அருகியது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூச்செடிகள்
முளைத்தன. மஞ்சள் பூ மலர்ந்தது.
Wednesday, 28 July 2021
குறுங்கதைகள்-பேச்சு
பள்ளி விடுமுறை என்பதால் காட்டுக்குள் இருக்கும் குன்றைப் பார்க்கக் கிளம்பினான். தன்னுடன் படிக்கும் யாரையும் அங்குக் கூட்டிச் செல்லக்கூடாது என்பதுதான் அவனது திட்டம். புதர் மண்டிய அந்தக் குன்றில் ஏறினான். அது அதிக உயரமில்லை. அதன் உச்சிக்கு வந்துவிட்டான். அந்தக் குன்றின் மேலே ஒரு துளை இருந்தது. அதற்குள் என்ன இருக்கும் என எட்டிப் பார்த்தான். அங்கே பாம்பு மனிதர்கள் ஏதோ சடங்கைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியிலிருந்து அவனால் கண்களை விலக்கவே முடியவில்லை. எவ்வளவு நேரம் கடந்தது எனத் தெரியாமல் அவன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது பாம்புப் பெண் ஒருத்தி இவனைப் பார்த்துவிட்டாள். இவன் அதிர்ந்து போனான். அவளுடைய பார்வை இவனுக்குள் ஊடுருவியது. அச்சத்தில் அந்த இடத்தை விட்டுத் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான். வீடு வந்து சேர்ந்த பின்னும் அந்தக் கண்கள் அவனைப் பின் தொடர்ந்தன. மகனின் அச்ச முகம் கண்டு பெற்றோர் விசாரித்த போது அவனால் பேச முடியவில்லை. பெற்றோர் பல மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று காட்டியும் அவனைப் பேச வைக்க முடியவில்லை. முயற்சிகளைக் கைவிட்டு பேச்சுத் திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பள்ளியில் சேர்த்தார்கள். எப்படியோ படித்து ஏதோ ஒரு வேலைக்குப் போனான். ஆனால் அந்தக் கண்களை மீண்டும் பார்க்கவேண்டும் என்பது மட்டும் அவனுக்குள் ஆழமாக வளர்ந்திருந்தது. ஒரு விடுமுறை நாளில் மீண்டும் அந்தக் குன்றைக் காணச் சென்றான். அதே துளை வழி பார்த்த போது அதே சடங்கு நடந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் இவனைப் பார்த்துவிட்டாள். இவனுக்கு அச்சமாக இல்லை. இவன் சிரித்தான். அவள் இவனைத் துளை வழியாக உள்ளே இழுத்துக் கொண்டாள். இவன் அம்மா என்று அலறினான்.
Tuesday, 27 July 2021
குறுங்கதைகள்-ஓசையின் நயம்
இளம் வயதில் அவளுக்கு ஒரு கர்வம் இருந்தது. தன் குரலைக் கேட்பவர்கள் தன்னிடம் ஆட்படுவார்கள் என்று இறுமாப்பு அடைந்தாள். அவள் குரல் ஒலித்தால் உலகத்தின் அடுத்த பக்கத்திற்குக் கேட்கும். அவ்வளவு பெரிய குரல். அந்த ஓங்கி ஒலிக்கும் குரல் பால் பேதமின்றி இருந்தது. ஆணாகவும் இல்லை. பெண்ணாகவும் இல்லை. வேறு எந்தப் பாலைச் சார்ந்தும் இல்லை. அத்தகைய பெருங்குரலில் அவள் ஒரு முறை பிரகடனம் செய்தாள். தான் விரும்பியவரை விரும்பியவாறு மணம் புரியப் போவதாகச் சொன்னாள். பல இளம் ஆண்கள் பெரும் அச்சம் கொண்டனர். அந்தக் குரலில் தாங்கள் ஒழித்துக் கட்டப்படுவோம் என அஞ்சினர். அவளும் ஒருவரைத் தேர்ந்தெடுத்தாள். அவனை மணம் புரிந்தபின் அவன் செவித்திறன் இல்லாதவன் எனத் தெரிந்துகொண்டாள். அதைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. ஓர் இரவு அவன் உறங்கும் போது அவள் பெருங்குரலெடுத்து அவன் பெயரை அவன் காதுகளில் ஒலித்தாள். அப்போதுதான் உறக்கம் கலைந்த அவன் உலகத்தின் ஒலிகள் மெல்லியதாகக் கேட்பதை உணரத் தொடங்கினான். அவள் மீண்டும் பெருங்குரலெடுத்து அவனை அழைத்தாள். இவ்வளவு இனிமையான மென்மையான குரலை அதுவரை தான் கேட்கவில்லையே என நினைத்து புளங்காகிதம் அடைந்தான். அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பது மட்டுமே இனி தன் வாழ்நாள் முழுக்கச் செய்யவேண்டும் என நினைத்தான். அப்போது பெரும் இடியோசை முழங்கியது. அவள் காதைப் பொத்திக் கொண்டாள். உலகத்தின் இடி கூட இவ்வளவு மெல்லியதாக இனிமையானதாக ஒலிப்பது அவனுக்கு அருமையாக இருப்பதாகச் சொன்னான். தன் குரலால் எந்தப் பயனும் இல்லை என முதல் முறையாக உணர்ந்தாள் அவள்.
Monday, 26 July 2021
குறுங்கதைகள்-9ஆம் எண்
பிரபஞ்சத்தை ஆட்டிப் படைப்பது 9 என்ற எண்தான். இந்த எண்ணிலிருந்துதான் மற்ற எண்கள் தொடர்பை வளர்க்கின்றன. இவள் பிறந்த எண்ணும் 9தான். 9ஆம் எண் எல்லாமுமாகவும் சூனியமாகவும் ஒரே சமயத்தில் இருக்கிறது எனச் சொல்லலாம். இவளும் தன்னை அப்படியே எண்ணிக் கொள்கிறாள். எல்லாமுமாகவும் எதுவுமே இல்லாமலும். இவள் வேண்டி விரும்பியவை எல்லாமும் கூட எல்லாமுமாகவும் எதுவுமே இல்லாமலும் ஆகிவிட்டன. எல்லாவற்றையும் பெற இவள் முனையவில்லை. எதையும் பெறாமல் இருக்கவும் முனைந்திருக்கிறாள். ஆனால் இதில் 9ஆம் எண்ணின் தாக்கம் இருப்பதுதான் இவளயும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு முறை 9ஆம் எண்ணைக் கொண்டு பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை அழித்துவிட முயற்சித்தாள். அதில் பாதி பலன்தான் கிடைத்தது. அது ஒரு சோதனை முயற்சிதான் என அதைக் கைவிட்டு பிரபஞ்சம் போன்ற மற்றொரு அமைப்பை உருவாக்க முனைந்திருக்கிறாள். அதிலும் 9ஆம் எண்தான் ஆட்சி செலுத்துகிறது. ஆனால் முற்றிலும் புதிய அமைப்பாக அது உருவாகி வருகிறது. ஒரே ஒரு குறை என்னவெனில் 9ஆம் எண்ணைச் சார்ந்தவர்கள் மட்டுமே அங்குச் செல்ல முடியும். மற்றவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள். அங்குப் போகும் கலமும் 9ஆம் எண் போலவே இருந்தது. இவள் பயணித்தது தலைமைக் கலனில்தான். ஒரு முறை அதில் பயணித்துக் கொண்டிருக்கையில் எதிர் முகாமைச் சேர்ந்த பூஜ்யம் எண் கொண்டவர்களின் கலன் மோதிவிட்டது. அதில் 9லிருந்த சுழியும் வாலும் பிரிந்துவிட்டன. அதனால் பாதி கலன் அந்த பூஜ்யக்காரர்களின் பிரபஞ்சத்தையும் மீதிக் கலன் ஒன்றாம் எண்ணுள்ள பிரபஞ்சத்தையும் போய்ச் சேர்ந்துவிட்டன. இவள் அண்டத்தில் கரைந்து 9ஆம் எண்ணை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறாள்.
Sunday, 25 July 2021
குறுங்கதைகள்-பெட்டிக்குள் படம்
பெட்டிக்குள் இருந்த படத்தைப் பார்த்தவுடன் அது அன்று சரிந்த எரி நட்சத்திரம் போட்டுவிட்டுப் போன படம் என்று புரிந்தது. இது விழுந்தவுடன் திறந்து பார்த்திருந்தால் அதில் பெறுபவரின் பெயர் இருந்திருக்கும். இப்போது படத்தை வைத்துத்தான் இது யாருக்குப் போய்ச் சேரவேண்டும் எனப் புரிந்துகொள்ள முடியும். படத்தில் ஒரு கிணறு, ஒரு வேர், ஒரு கண் இருந்தன. கிணற்றில் நீரை எடுத்து வேருக்குவிடும் கண்ணோட்டம் உள்ளவருக்கு உரிய படமாக இருக்கலாம். அல்லது கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போது வேரை மிதிக்காமல் இருக்கும் விழிப்பான கண் உள்ளவருக்கு உரியதாக இருக்கலாம். இந்தப் படத்திற்கு உரிய வாசகத்தைச் சொல்பவருக்கு உரியதாகக் கூட இருக்கலாம். இந்தப் பகுதியில் கிணறு இருக்கும் பகுத்திக்குச் சென்றுவிட்டால் அநேகமாக உரியவர்கள் வந்து இந்தப் படத்தைப் பெற்றுச் செல்வார்கள். சிறிது தூரம் தேடிய போது ஒரு பாழடைந்த கிணறு தென்பட்டது. கிணறைச் சுற்றி வந்தபோது புதர் மண்டிக் கிடந்தது. தண்ணீர் தாகம் எடுத்தது. கிணற்றில் இறங்கிச் செல்ல படிகள் இருந்தன. இறங்கும் போது ஒரு பாம்பு ஒரு வேரைச் சுற்றி அமர்ந்திருந்தது. அரவம் வந்தவுடன் ஓடி மறைந்தது. அந்த வேர் மண்ணில் புதைந்தும் புதையாமல் இருந்ததால் கையால் இழுக்க முடிந்தது. அது பெயர்ந்து வந்தவுடன் அந்த இடத்தில் மின்னிய வைரங்கள் கண்ணைக் கூசச் செய்தன.
Saturday, 24 July 2021
குறுங்கதைகள்-மொட்டு
மஹாராணிக்குக் காலையில் எழுந்த போதே தன் சோலையில் பூத்திருந்த அந்த மொட்டைப் பறிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஒரு வாரமாக தன் தோட்டத்தில் இருந்த செடியில் அந்த பூச்செடி மொட்டுவிட்டிருந்தது. அதன் நிறம் இது வரை அவள் கண்டதில்லை. அது அவளை ஈர்த்துக் கொண்டே இருந்து. அதைப் பற்றி அவள் பல கனவுகள் கண்டாள். அந்த மொட்டை அவள் தின்றுவிடுவது போலவும் இரவில் அவளைப் போன்ற மற்றொரு பெண்ணாக அவளிடமிருந்தே பிரித்து விடுவது போலவும் பலப்பல கனவுகள் வந்தன. அவள் சிறுமியாக இருந்த போது கண்ட கனவும் அவளுக்குள் சட்டென்று நினவுக்கு வந்தது. அவள் அதிர்ச்சி அடைந்தாள். அதில் அவள் ஒரு செடியின் மொட்டைக் கசக்கிவிடுகிறாள். அதில் குடி கொண்டிருந்த இது வரைக் கண்டிராத விலங்கின் குட்டி அடிமுடி காண முடியாத வகையில் பெரிதாகி அவள் முன் நின்று அச்சுறுத்தியது. அவள் அலறி ஓட அது ஒரே பாய்ச்சலில் அவளைத் தூக்கி தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அவள் பெரியவளானவுடன் இது போன்ற ஒரு மொட்டைக் கசக்காமல் இருந்தால் விட்டுவிடுவதாகக் கூறியது. அவள் நடுங்கி சம்மதித்து கண் திறந்தாள். இப்போது அந்த மொட்டைக் கசக்கவேண்டும் என்ற பேரார்வம் அவளுள் எழுந்தது. சோலைக்குப் போனாள். அங்கு ஓர் ஆடு அந்த மொட்டைத் தின்று கொண்டிருந்தது. இவளைக் கண்டவுடன் இவளைப் போன்றே அச்சு அசலான பெண்ணாக மாறியது. இவள் அருகே வந்தது. இவளைத் தொட்டது. உடனே மஹாராணி ஒரு மொட்டாக மாறினாள். அதை அந்தச் செடியில் செருகிவிட்டு அரண்மனையை நோக்கி ஆட்டிலிருந்து பெண்ணாக மாறிய மஹாராணி நடந்து சென்றாள்.
Friday, 23 July 2021
குறுங்கதைகள்-அவன் பெயர் முருகன்
முதல் முறை அவனைப் பார்த்தபோது கண்ணைக் கொட்டக் கொட்ட விழித்து லேசாகச் சிரித்தான். அதன் பின் அவனை நெடுநாள் காணவில்லை. பிறிதொரு முறை மயில்களை ஓட்டி வந்தான். அவனிடம் மயில்கள் மயங்கித் திரிந்தன. ஒன்றின் மீது ஏறி அமர்ந்தான். அவனை ஏற்றிக் கொண்டு அது பறந்துபோனது. யார் இவன், எதற்காக என் கண்ணில் அடிக்கடி தென்படுகிறான் என நினைத்தேன். அதற்குப் பிறகு அவனை மறந்தும் போய்விட்டிருந்தேன். அது அமாவாசை இரவு. சட்டென்று கண் விழித்துக் கொண்டது. எழுந்து வெளியே வந்தேன். அவன் தூரத்தில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் செல்லவேண்டும் போல் இருந்தது. அவன் சிரித்தான். எனக்குப் பல நாட்களாகச் சேர்த்து வைத்திருந்த அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அவன் அமைதியாகப் பார்த்து அழவேண்டாம், நான் வந்துவிட்டேன் அல்லவா என்றான். அவனை ஊடுருவிப் பார்த்தேன். அவன் லேசாகப் பின்னோக்கி நகர்ந்து வானத்தைச் சுட்டினான். அங்கு பாதி நிலவு சிரித்துக் கொண்டிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த நிலவு எப்போது வந்தது..சட்டென்று அமாவாசை இரவில் நிலவு எப்படி முளைக்கும் என திகைப்பாக இருந்தது. நிலவொளியில் அவனைத் தேடினால் அவனைக் காணவில்லை. அவன் நின்ற இடத்தில் சென்று பார்த்த போது ஒரு மயில் தோகை கிடந்தது. அதைத் திருப்பிப் பார்த்தேன். முருகன் என எழுதியிருந்தது.
Thursday, 22 July 2021
குறுங்கதைகள்-பறத்தல் பற்றிய நினைவு
அன்று பறக்க எண்ணியிருந்தேன். அவன் அருகே இருந்ததால் பறக்கவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தான். அவனிடம் பறத்தலில் உள்ள எல்லா நன்மைகளையும் கூறியிருந்தேன். பறத்தலின் பரவசம் ஏனோ அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் பறத்தல் மூலம் பல அண்டங்களைத் தாண்டிச் செல்லமுடியுமா என்பதை மீண்டும் மீண்டும் அவன் உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தான். ஒரு முறை பெயர் தெரியாத ஓர் அண்டத்தைப் பற்றிக் கூறி அங்குப் போகவேண்டும் என்றான். இருவரும் பறந்து கிளம்பினோம். அந்த அண்டத்தைச் சென்றடைய சிறிது காலம் பிடித்தது. அங்குச் சென்று சேர்ந்தவுடன் அவன் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. அங்கு நீர் இல்லை, மரம், செடி, கொடி இல்லை. அங்கிருக்கும் கற்களைக் கையில் வைத்திருந்தால் நீராகிவிடும். அதைப் பருகலாம். மணலை மரம் போல் வடித்து மூச்சுக்காற்றை ஊதினால் மரம் உருவாகிவிடும். கற்களைக் கோர்த்துத் தேவையானவற்றைச் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த வேலை அவனுக்குச் சலிப்பளித்தது. வேறிடம் தேடலாம் என்றான். இம்முறை போனது தலைகீழ் பூமி. நீர் இருந்தது. தொட்டால் மறைந்தது. மரம், செடி, கொடிகளும் அப்படியே. இது அவனைப் பெரும் அலைச்சலுக்கு ஆட்படுத்தியது. ஏதாவது செய்தாக வேண்டும் என்றான். மீண்டும் புதிய இடம். நடுவில் பொய்கை. சுற்றி நிலம். அந்த இடம் ஓரளவு பிடித்திருந்தது. அந்த நீரைப் பருகியவுடன் பறக்கும் நினைவு காணாமல் போனது.
குறுங்கதைகள்-பாதரசக் குதிரை
அந்தப் பலைவனத்தின் நடுவில் ஒரு பெரிய கண் இருந்தது. அந்தக் கண்ணின் மையத்தில் நீலமாய் ஒரு திரவம். அடர்த்தியாய், பளபளப்புடன் நெளிந்தது. மணல் அதில் ஒட்டவில்லை. லேசாகக் காற்று அடித்தால் வளையம் போல் நெகிழ்ந்தது; சேர்ந்தது. தூரத்திலிருந்து பார்த்தால் நீரோடை போலவும் அது தெரிந்தது. பெரும் தண்ணீர் தாகத்துடன் நடந்து கொண்டிருந்த குதிரை அந்த நீல திரவத்தைக் கண்டதும் வேகமாக ஓடிவந்தது. அந்தத் திரவத்தைப் பருகியது. அதன் அடர்த்தியையும் மீறி குதிரையால் அதைப் பருக முடிந்தது. முழு திரவத்தையும் பருகிவிட்ட குதிரை கொஞ்சம் தடுமாறியது. சிறிது நேரத்தில் வெள்ளை குதிரையின் நிறம் நீலமாகத் தொடங்கியது. அந்தத் திரவத்தின் நிறம் அதன் உடலில் வந்திருந்தது. அதே போன்ற பளபளப்புடன். குதிரை இப்போது நெளியத் தொடங்கியது. காற்றின் திசைக்கேற்ப அதன் அசைவுகள் இருந்தன. நீளமானது. சுருங்கியது. உயரம் குறைந்தது; கூடியது. குதிரை அந்தத் திரவத்தின் அடர்த்தியைப் பெற்றது. பாலைவன மணலில் நீலக் குதிரை நடந்தது. அந்தப் பெரிய கண்ணைச் சுற்றி சுற்றி வந்தது. மையத்தில் நின்றது. குதிரை உருகத் தொடங்கியது. மீண்டும் நீல திரவம் கண்ணின் மையத்தில் வளைந்து நெளிந்தது.
(ஓவியம் என்னுடையது)
Wednesday, 21 July 2021
குறுங்கதைகள்-சுவர் கவியும்
சுவர்கள்
சூழ்ந்த அந்த அறையிலிருந்து வெளியே வர இவளிடம் இருப்பது ஓர் ஆணி மட்டுமே. அதைக் கொண்டு
அந்தச் சுவர்களைத் துளையிட முனைந்தாள். சுவர்களுக்கு அப்பால் நாய், பூனை, மனிதர்களின்
குரல்கள் கேட்ட வண்ணம் இருந்தன. அந்தக் குரல்களைச் சென்றடைய இந்த ஆணி போதுமா என நினைத்தாள்.
இருந்தாலும் முயற்சியைக் கைவிடவில்லை. ஒரு முறை ஓங்கிக் குத்தியதில் சுவரில் துளை விழுந்தது.
மீண்டும் துளையைப் பெரிதாக்கப் பார்த்த போது அவளே நுழையும் அளவுக்குத் துளைப் பெரிதாகிவிட்டது.
அதில் வெளிவந்தால் மீண்டும் சுவர்கள் கவிந்துவிட்டன. மீண்டும் துளையிட முயற்சி. மீண்டும் ஒரு பெரிய துளை. வெளிவந்தால் மீண்டும்
சுவர்கள் கவிவது என தொடர்ந்தது. ஆனால் குரல்கள் நிற்காமல் கேட்டன. அருகிலும் தொலைவிலும்
ஒலித்துக் கொண்டே இருந்தன. இவளுடைய முயற்சியை அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் இரைச்சலுக்கு
இடையில் இவளுடைய ஒலி அமிழ்ந்து போய்விட்டிருக்கலாம். இவளும் விடாமல் முயற்சி செய்து
ஒரு சுவர் அருகில் வந்தாள். அந்தத் துளை சிறியதாக இருந்தது. ஒரு பூனை எட்டிப் பார்த்தது.
இவளைப் பார்த்துக் கத்தியது. இவள் கை நீட்ட இவளிடம் வந்துவிட்டது. இவள் மடியில் படுத்துக்
கொண்டது. தூங்கிப் போனது. இனி துளையிட சக்தியில்லாமல் இவளும் தூங்கிப் போனாள். எழுந்து
பார்த்த போது பூனை இறந்துவிட்டிருந்தது. துளைகள் மறைந்துவிட்டிருந்தன. சுவர்கள் கவியத்தொடங்கியிருந்தன.
Monday, 12 July 2021
திருநீலசதிர் : அர்விந்த் அப்பாதுரையின் நாவல் குறித்த மதிப்புரை
திருநீலசதிர்-நீலம் என்பது கடலைக் குறிக்கிறது. சதிர்-அதில் நடக்கும் பல்வேறு சாகசங்களைக் குறிக்கிறது.
இலங்கை தமிழ் அகதிகள் மற்றும் பிற நாட்டு பயணிகள் கள்ளத் தோணியில் இலங்கையிலிருந்து ஐரோப்பா வரைப் பயணிப்பது குறித்தது இந்த நாவல்.
இரு நண்பர்கள் இந்தப் பயணத்தில் அனுபவிப்பதை ஒரு நண்பனின் பார்வையில் பதிவு செய்கிறது நாவல்.
ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
மற்றொருவர் பிரான்சைச் சார்ந்த செய்தியாளர்.
இலங்கை தமிழர்களின் சிக்கலை மூன்றாவது நபரின் பார்வையிலிருந்து அறிவது போல் எழுதப்பட்டிருக்கும் நாவல்.
இலங்கையில் போர் முடிவுற்ற பின் இருக்கும் பதற்றமான சூழ்நிலை குறித்து நாவல் பதிவு செய்கிறது.
விடுதலைப் புலிகள் இன்னும் இயங்குவது போன்ற மாயையில் இலங்கைத் தமிழர்கள் வாழ்வது குறித்து நுட்பமாகப் பதிவு செய்கிறது நாவல்.
விடுதலைப் புலிகளின் தலைமை இனி இயங்கவில்லை என்பதை ஏற்க முடியாமல் அதே போன்ற ஒரு நடைமுறைக்குள் வாழ்வதில் இருக்கும் பாதுகாப்பைத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் வீறுகொண்டு எழும் என்ற நம்பிக்கையையும் மட்டுமே தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாவல் காட்டுகிறது.
ஐரோப்பா மட்டுமே விடிவு தரும் உலகம் என்பது இலங்கைத் தமிழர்களின் எண்ணமாக இருப்பதை இந்த நாவல் பிரதிபலிக்கிறது.
ஒரு பெரிய படகு போல் இருக்கும் சரியான தொழில் நுட்ப வசதியில்லாத சிறிய தோணியில் 40 பேர் இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் சாகசத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் இறந்துபோகிறார்கள்.
குறிப்பாக, 20 பேர் கொள்ளையர்களால் கொல்லப்படுகிறார்கள். மேலும் சிலர் கடல் பயணச் சிரமத்தைத் தாங்க இயலாமல் இறக்கிறார்கள்.
மீதி இருப்பவர்கள் ஐரோப்பிய கரையை அடைகிறார்கள்.
இந்த நாவல் மொபி டிக் நாவலை ஒத்து இருப்பது போல் தோன்றியது.
மொபி டிக் குறித்து டெல்யூஜ் கட்டாரி தங்களது ஆயிரம் பீடபூமிகள் நூலில் எல்லைநீக்கம், எல்லையாக்கம் பற்றிய சிந்தனையைக் கூறுகையில் விளக்குகிறார்கள்.
அதனை உருவாக்கம் becoming என்ற தத்துவம் குறித்து விளக்குவதில் விரிவாக mobi dick நாவல் குறித்துப் பேசுகிறார்கள்.
இந்த நாவலில் கடற் பயணம் மரணத்துடனான நெருங்கிய பரிமாற்றமாக இருக்கிறது.
மரணமாக உருவாகுதல் என்பது போல் சொல்லலாம். becoming death.
வாழ்ந்திருந்தால் அதிசயம். இறப்பைத்தான் பயணம் முழுக்க அந்தப் பாத்திரங்கள் வாழ்ந்து செல்கின்றன.
வாழ்தல் அசாதாரணமாகவும் இறத்தல் சாதாரணமாகவும் மாறிவிட்ட பயணம் அது.
மொபி டிக்காக உருவாகிவிட்டால் ஒரு புதிய வாழ்நிலை சாத்தியம். இங்கு மரணமாக உருவாகிவிட்டால் வாழ்வே சாத்தியம் இல்லை.
ஏன் இனப்பிரச்சினை வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான அதிகாரப் போராக இருக்கிறது?
இனம் என்பது ஓர் அடையாளம். அடையாளம் என்பது பன்மைத்துவம் கொண்டது. மொழி அடையாளம், இட அடையாளம், பாரம்பரிய அடையாளம் இப்படி பல அடையாளங்கள் ஒன்றிணைந்து இன அடையாளம் வருகிறது. ஒரு கூட்டுத் தொகுப்பாக இருக்கிறது. assemblage. agencyment.
இந்தப் பன்மைத்துவம் ஒருங்கிணைக்கும் கருவியாக இருக்கிறது.
இன அடையாளத்திற்கான பிரச்னை என்பது இனத்திற்கான அதிகாரம் குறித்த பிரச்னையாகவே பொதுவாக மாறிவிடுகிறது.
இட எல்லையாக குறுக்கப்படுவதும், சிறுபான்மை/பெரும்பான்மை என்ற எண்ணிக்கை சார்ந்து பார்க்கப்படுவதும் நம்பிக்கையின் அடிப்படையில் பிரிக்கப்படுவதும் அதிகாரத்திற்கான வேட்கையை ஏற்படுத்தும் காரணிகளாகின்றன.
எந்த ஓர் இனப்பிரச்னை என்றாலும் எல்லை வரையறுப்பு இதில் முதன்மை பெறுகிறது.
தமிழ்/மற்றவை, தமிழ் அல்லாத பிற இனம் கொண்டிருக்கும் அதிகாரம் இனப்பிரச்னையின் அடிப்படையாகிறது.
தமிழ் என்ற எல்லை வரையறுப்பு இடம் சார்ந்ததாக, இடம் சார்ந்த அதிகாரமாக பொருளாகிறது.
இனப்பிரச்னையின் விளைவாக டெல்யூஜ், கட்டாரி குறிப்பிடுவது நாடோடி வாழ்வு. nomadism.
இடம் சார்ந்த அடையாளம் மறுக்கப்படுகையில் நாடோடி வாழ்வு மட்டுமே எஞ்சுகிறது.
அதைத்தான் இந்த நாவல் இந்தப் பயணத்தில் காட்ட நினைக்கிறது.
ஈழம் என்ற இனத்தின் எல்லை கொடுத்திருக்கவேண்டிய பலம் அல்லது இன்பம் ஐரோப்பாவுக்கு மாற்றப்படுகிறது.
ஈழத்தின் எல்லையை ஐரோப்பாவுக்குள் வைத்துப் பார்த்து இனத்தின் பாதுகாப்பை, அதிகாரத்தைப் பெறுவதற்கான சொர்க்கம் போல் ஓர் மாற்று இடமாகக் கற்பனை செய்யப்படுகிறது.
நாடோடிகளுக்கான அதிகாரத் தேடலாக இனப்பிரச்னை மாற்றப்படுகிறது.
இந்த நாவலில் பயணிப்பவர்கள் நாடோடி வாழ்வின் சிக்கலுக்குள் ஆட்பட்டவர்கள்.
ஐரோப்பா நிலைத்த வாழ்வைத் தரும் என்ற கற்பனையில் இருப்பவர்கள்.
ஈழத்தில் கிடைத்திருக்க வேண்டிய வாழ்வு ஐரோப்பாவில் கிடைப்பதாக இடமாறப்பட்ட வாழ்வாக இருப்பதை இந்த நாவல் காட்டுகிறது.
ஈழத்தில் தமிழாக இந்துவாக இருப்பது எகிப்து அருகில் இஸ்லாமியம் சார்ந்ததாகவும் இத்தாலிக்கு அருகில் கிறித்துவம் சார்ந்ததாகவும் பெயர் மாற்றம் பெறும் படகின் நிலை போல்தான் நாடோடி வாழ்வின் நிலையும் இருக்கும் உண்மைதான் நாவலில் வெளிப்படுகிறது.
இனப்பிரச்னை என்பது போர் எந்திரம்.
அதிகாரத்தின் பரவலுக்கான எந்திரம்.
அரசு உருவாக்கத்திற்கான எந்திரம்.
நாவலில் கழுகின் காலில் ஒளிப்பதிவு கருவி கட்டிவிட்டு ட்ரோன் போல் பாவிக்கப்படுகிறது.
நீர்மூழ்கிக் கப்பல்கள் இனப்போராளிகளிடம் இருக்கின்றன.
விமான நிலையம் அதிகாரத்தின் பெருமையாக குறிப்பிடப்படுகிறது.
இனப்பிரச்னை போர் எந்திரமாக இருப்பதற்கு மற்றொரு உதாரணம் பலியிடல் சடங்குகள் நடப்பது.
விடுதலைப் புலிகளின் தலைமையே பலியிடப்பட்டப் பின்னும் போர் தொடர்ந்திருப்பதாக நாவல் காட்டுகிறது.
இனப்பிரச்னை போர் எந்திரம் என்பதால்தான் இந்த வகையிலான பொருள் இதில் உருவாகிறது.
போர் எந்திரம் உருவாக்கும் அதிகாரத்திற்கான அரசுக்கான தீர்வு குறித்த பயணம் தொடரும் என்பதாக இந்த நீல சதிரைப் பொருள் கொள்ளலாம்.
(உயிர் எழுத்து, ஜூலை 2021 இதழில் வெளிவந்த மதிப்புரை)
பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
அவனுக்கு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசையாக இருந்தது. அவன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் யாருக்கும் நீண்ட ...